திங்கள், 11 டிசம்பர், 2023

"திங்க"க்கிழமை   : வடையா... இது வடையா... ஒரு நாடகமன்றோ நடக்குது...

 நாவு திறக்குமாம் வாழ்வு சிறக்குமாம் வடையும் போண்டாவும் வரும் நேரத்து என்று சங்க காலத்தில் ஒரு புலவர் பாடி வைத்தார். 

ஆனால் என்ன கஷ்டம் என்றால் எழுதி வைத்த ஓலையிலேயே, முக்கு கடையில்  வாங்கிய வடையைப் பிழிந்து எண்ணெய் எடுத்து விட்டதால்,   பாடல் எண்ணெய் பெற்று ஓடல் ஆகி,  இலக்கியத்தில் இடம்பெறும் வாய்ப்பை எண்ணெய்ப் பிசுக்கில் இழந்தது. 

டிஸம்பர் மாதம் நான்காம் தேதி.  திங்கட்கிழமை.  ஆம்,  அதுவும் ஒரு திங்கற கிழமை.  வெளியிலோ விடாத மழை.   ஜன்னலைத் திறந்தால் காற்று 'உய்ங்' என்று வீசுகிறது.

பார்க்க தொலைகாட்சி இல்லை.  பொழுது போக்க கணினி இல்லை.  சோலாரின் உதவியால் போடமுடியும்.  ஆனால் சிக்கனத்துக்காக போடவில்லை!  அதே சோலார் உதவியுடன் Full charge ல் வைத்திருந்தும் மொபைலிலோ டவர் இல்லை.  எனவே அதனாலும் பொழுதுபோக்கும் உபயோகம் இல்லை.

செவிக்கும் உணவில்லை.  கண்களுக்கும் வேலை இல்லை.  சோம்பேறி பொழுதுகள்...  அடுத்து என்ன...  நீங்களே சொல்லுங்கள்.  பாஸிடம் 'கடலை மாவு இருக்கிறதா?'  என்று உசாவினேன்.  'இல்லை'யென்று பாங்குடனே பகர்ந்தார் பாஸ்.  'சரி 'ஆச்சி ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸா'வது வாங்கி வைத்திருக்கிறாரா?' என்று வினவினேன். 'எல்லாத்துக்கும் நான்தான் போகணும்..  எதுவும் வாங்கி வைக்க மாட்டீங்க..  இப்போ வக்கணையா கேட்பீங்க'  என்று சினத்துடனே பதில் வந்தது.

சற்றுநேரம் மௌனம்.  என் கையில் நரசிம்மாவின் தேவரகஸ்யம் இருந்தது.  கண்கள் கதையின் வரிகளை மேய்ந்தாலும் நாக்கு என்னவோ வடையின் மீதே கவனமாக இருந்தது.  இருங்கள் இதை கவிதை வடிவமாக்குவோம்..

கண்கள் 
கதையின் வரிகளை 
மேய்ந்தாலும் 
நாக்குக்கு  என்னவோ 
வடையின் மீதே 
கவனம்  க இருந்தது

ஜன்னல் வழியே வெளியே வெறித்தேன்.  வானம் சட்டென மின்னல் வெட்டியது.  சட்டென மூளையிலும் ஒரு மின்னல் அடித்தது.  சில நாட்களுக்கு முன்னர் பார்த்த ரீல்ஸ் குறிப்பு ஒன்று நினைவுக்கு வந்தது.  பாஸ் பக்கம் திரும்பினேன்.

"உருளைக்கிழங்கு இருக்கிறதா?"

"இருக்கு..  இப்போ பொடிமாஸ் செய்யணுமா, ரோஸ்ட் செய்யணுமா?"

"அரிசி மாவு இருக்கா?"

"இருக்கு.."  குழப்பத்துடன் பாஸ்,

"வெங்காயம், கொத்துமல்லி, பச்சை மிளகாய் இருக்குல்ல?"

"ம்ம்ம்..."

அவ்வளவுதாங்க..  ரீல்ஸில் பார்த்ததைச் சொன்னேன்.  கொஞ்ச நேரத்தில் ரெடி செய்து விட்டார்.  

உருளைக் கிழங்கை நன்றாக ஏகப்பட்ட விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொண்டார்.  (நான் சொன்னபடி..  நான் சொன்னது ரீல்ஸில் பார்த்தபடி)

தோலை உரித்து நன்றாக கட்டி இல்லாமல் மசித்துக் கொண்டார்.  (நான் சொன்னபடி..  நான் சொன்னது ரீல்ஸில் பார்த்தபடி)


அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டு, இரண்டு பச்சை மிளகாய், பொடியாய் நறுக்கிய கொத்துமல்லி, மிளகு, உப்பு தேவையான அளவு  போட்டு நன்றாகப் பிசைந்து வைத்தார்.   (நான் சொன்னபடி..  நான் சொன்னது ரீல்ஸில் பார்த்தபடி)


ஐம்பது கிராம் அரிசி மாவு எடுத்து பிசைந்து வைத்த மாவில் கலந்து மறுபடி நன்றாய்ப் பிசைந்து வைத்தார்.   (நான் சொன்னபடி..  நான் சொன்னது ரீல்ஸில் பார்த்தபடி)

ஸோ சிம்பிள்ங்க...   ஸோ ஈஸிங்க...

இப்போது பிசைந்து வைத்த மாவை கொஞ்சம் கையில் எடுத்து உருட்டி, உள்ளங்கையில் தட்டி, நடுவில் துளை போட்டு எண்ணெயில் பொறித்து எடுத்தார்.  (நான் சொன்னபடி..  நான் சொன்னது ரீல்ஸில் பார்த்தபடி)


ஸோ சிம்பிள்ங்க...   ஸோ ஈஸிங்க...


அழகழகான வடைகள் தாயார்..  சே...  தயார்.  மேலே மொறுமொறு என்றும், உள்ளே மெதுவாகவும் என்ன அழகான மெதுவடைகள்..  


புயல் காரணமாக மின்சாரம் இல்லை.  மின்சாரமின்மை காரணமாக மிக்ஸி இயக்க முடியவில்லை.  மிக்ஸி இயக்க முடியாததால் சட்னி எதுவும் தயார் செய்ய முடியவில்லை.  

அதனால் என்ன..  சுவையான சூடான, மொறுமொறு வடைகள் தயார்.  சாப்பிட்டு மகிழ்ந்தேன்.  மகன்கள் டயட்டில் இருந்ததால் குரங்கு அப்பம் பங்கு பிரிக்கும் கதை ஏதுமின்றி மெஜாரிட்டியில் திளைத்தேன்!

51 கருத்துகள்:

 1. உளுந்து செய்யவேண்டிய வேலையை இங்கு உருளைக்கிழங்கு செய்திருக்கிறதா? வடை ரொம்ப நன்றாகவே வந்திருக்கிறது.

  இங்கும் உருளைக் கிழங்கு போண்டா பண்ணித் தரவா என்று ஹஸ்பன்ட் கேட்டதற்கு, எதற்கு வீணா எடை கூட்டிக்கொள்ளணும் என நினைத்து வேண்டாம் என்றுவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உருளைப்பருப்பு அல்லது உளுந்து கிழங்கு!  வலிய வந்த போண்டாவை மறுதளித்த மாவீரர்!

   நீக்கு
 2. சென்னை மழை, கரண்ட் இல்லை, உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு...

  எப்படி உணவு சமாளித்தீர்கள் என்பதை வைத்தே ஆறு திங்கட்கிழமை பதிவுகள் எழுதிவிடலாமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது எப்பவும் போல சமையல் என்பதால் போர் அடித்து விடும்!

   நீக்கு
 3. பொழுது போயிருக்காது...புத்தகம் கையில்... பக்கத்தில் நொறுக்குத் தீனிக்காக பாஸை என்னவெல்லாம் பண்ணவைத்தீர்களோ..... வடை ரொம்ப அழகாக இருக்கிறது. தேங்காய் சட்னி இருந்தால் சுகம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாஸ் அவ்வளவு சீக்கிரம் எதையும் பண்ணி விட மாட்டார். நானோ மகனோ துணைக்குச் செல்ல வேண்டும்! வேறு பெரிய நொ. தீ எதுவும் இல்லை!

   நீக்கு
 4. ​கிழங்கு வடை அபாரம். வடா பாவ் வடை. காக்கைக்கு கொடுத்தீர்களா? மழையில் எப்படி வரும் என்கிறீர்களா? சரி தான்.

  அது சரி நாவு எப்படி திறக்கும்? வாய் தான் திறக்கும்.

  (நான் சொன்னபடி.. நான் சொன்னது ரீல்ஸில் பார்த்தபடி) . புயல் என்றால் சொல்வதை ஆமோதிப்பார் பாஸ்.. மறுப்பே வராதது ஆச்சர்யம்.

  வடை என்றால் பாட்டியும் கேட்பார் "எனக்கு இரண்டு."
  Jayakumar​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மழைக்கு நடுவே காலை நேரம் ஓரிரு வழக்கமான காக்கைகள் வந்து இறக்கைகளை சிலிர்த்தபடி குரல் கொடுத்து, ஆகாரம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு விட்டு பறந்து விட்டன.  இது மாலை நேரம்.  எந்த காக்கை வரும் - என்னைத்தவிர!

   நீக்கு
  2. நாவு திறக்கிறது என்றால் சுவை நரம்புகள் எக்ஸ்டரா டைம் வேலை பார்க்கின்றன என்று பொருள்!

   நீக்கு
 5. வடை பார்ப்பதற்கே அசத்துகிறது. சுவையும் அப்படியே இருக்குமென்று நம்ப வைக்கிறது அதன் தோற்றம்! உருளைக்கிழங்கின் அளவை எழுத மறந்து விட்டீர்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மனோ  அக்கா...  சுவை பிரமாதம்.  அளவு என்பது கண்ணளவு, கையளவு, சுவையளவுதான்.  அன்று மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு அரை கிலோ உருளைக்கிழங்கு என்றால் இரண்டு பெரிய வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் கொஞ்சம் கொத்து மல்லி.  ஐம்பது கிராம் அரிசி மாவு..  ஆனால் எல்லாமே கண் திட்டம், சுவை விருப்பம்தான்!

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.(என்னை நினைவிருக்கும் என நம்புகிறேன்.:))) )

  திங்களில் அருமையான, அதைவிட அழகான வடை பகிர்வு. உ. கியின் ஒத்துழைக்கும் பயன்பாடு, அதன் தன்மை வியக்க வைக்கிறது. செய்முறைகள், படங்கள் அனைத்தும் தங்கள் திறமையை பறைசாற்றுகின்றன. கூடவே தாங்கள் பெற்ற எழுத்தும் தங்களுக்கு ஒரு வரமாகியுள்ளதில், அவை பிரகாசமடைகின்றன. ரசித்து படித்தேன்.வடைக்கும் மேலாக தங்களது நல்ல சுவையான எழுத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி, கேள்விப்பட்ட மாதிரி இருக்கே.

   நீக்கு
  2. ரொம்ம வருடங்கள் கழித்து வந்ததனால் இறைவனிடம் கோரிக்கை/கட்டளை வைக்க மறந்துவிட்டாரா? வடை வேறு சுவையில்லைனு சொல்ற மாதிரி இருக்கே

   நீக்கு
  3. வணக்கம் சகோதரி

   நலமாக இருக்கிறீர்களா? தங்களை நினைக்காத நாளில்லை எனலாம். என் வலையுலக வரவிற்கு தாங்கள் நல்வரவு கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

   நலமா?

   /ரொம்ம வருடங்கள் கழித்து வந்ததனால் இறைவனிடம் கோரிக்கை/கட்டளை வைக்க மறந்துவிட்டாரா?/

   ஹா ஹா ஹா. அப்படியே கோரிக்கை வைத்தாலும், இப்படி தினமுமா என கடவுளை விட நாம்தான் அதிகமாக கடுப்பாகிறோமே என்றுதான்....இன்று கடவுளை அந்த ஒரு கணம் மறந்து விட்டேன். (ஹா ஹா ஹா. சும்மா விளையாட்டுக்கு சொல்கிறேன்.மற்றபடி கடவுளை... . நம்மில் உட்கடந்து பரமாத்மாவாக இருப்பவரை ஒரு நாளில் நொடி யேனும் மறக்க இயலுமா? )

   வடை சுவையாக இல்லையென்று எங்கே கூறினேன். இதைதான் தமிழில் கொ. போடுவது எனச் சொல்கிறோமோ...? ஹா ஹா ஹா. என் கருத்தை கண்டவுடன் உடன் வந்து பதில் கருத்து தந்ததற்கு மகிழ்ச்சி சகோதரரே. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  5. வணக்கம் , வாழ்க வளமுடன் கமலா ஹரிஹரன்.
   நலமாக இருக்கிறேன்.

   //தங்களை நினைக்காத நாளில்லை எனலாம். என் வலையுலக வரவிற்கு தாங்கள் நல்வரவு கூறியது மகிழ்ச்சியளிக்கிறது.//
   நாங்களும் உங்களை தினம் நினைத்தோம், உங்களை இன்னும் காணவில்லையே என்று தேடினோம்.
   மகன் ஊருக்கு போய் விட்டார்களா? குழந்தைகள் எல்லோரும் நலம் தானே? இனி உங்கள் வரவு தினம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  6. வணக்கம் சகோதரி

   /நாங்களும் உங்களை தினம் நினைத்தோம், உங்களை இன்னும் காணவில்லையே என்று தேடினோம்./

   நீங்களனைவரும் என் வரவை நினைத்து எதிர்நோக்கி பார்த்திருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் அனைவரின் அன்பிற்கும் மிக்க நன்றி. என் மகன் இந்த மாத இறுதியில் அவர்கள் ஊருக்கு புறப்படுகிறார். அதன் பின தினமும் தவறாமல் வர முயற்சிக்கிறேன். அதன் விபரங்கள் குறித்து இன்று என் பதிவாக என் வலைத்தளத்தில் எழுதி குறிப்பிட்டிருக்கிறேன். படித்து கருத்துக்கள் அளிக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  7. வாங்க கமலா அக்கா..  நாங்கள் உங்களை தினமும் நினைத்தோம்.  நீங்கள்தான்......  

   நானும் செல்வாண்ணாவும்  தேடினோம்.  நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஆப்சென்ட் ஆகி விடுகிறீர்கள்.

   உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.  நல்வரவாகுக.

   நீக்கு
  8. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே.

   நானும் உங்களனைவரையும் நினைத்தபடிதான் இருந்தேன். ஆனால், சமய சூழ்நிலைகள் முன்பு போல் தினமும் வலையுலகத்திற்கு வர இயலாமல் செய்து விட்டது. எங்கள் மகன் ஊரிலிருந்து வருவதால் அதிகமாக வலையுலக பயணம் மேற்கொள்ள இயலாது என என் பதிவிலும், சகோதரி கோமதி அரசு அவர்களின் பதிவிலும் நான் குறிப்பிட்டிருந்ததாக நினைவு. அதனால்தான் தொடர்ந்து வர இயலவில்லை.

   மற்றபடி எ. பியின் பதிவுகளை பார்த்த போது. தாங்களும், துரை செல்வராஜ் சகோதரரும் நெல்லைத் தமிழர் சகோதரரும் என்னைத் தேடியதை படித்தேன். உங்களனைவரின் அன்பிற்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். அன்பான உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. வெஜிடபிள் கட்லெட்டிற்கும் உருளைக் கிழங்கு வடைக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் கூறுக.

  கட்லெட்டில் அரிசிமாவு சேர்ப்பதில்லை. இந்த வடையில் உண்டு.

  கட்லெட்டிற்கு காரம் கொடுப்பது காரப்பொடியும, மசாலாப் பொடியும். வடைக்கு பச்சை மிளகாய் மட்டுமே.

  கட்லெட்டில் அசைவ கட்லெட்டுகளும் உண்டு. வடை சுத்த சைவம்.

  கட்லெட் உடையாமல் இருக்க மைதா கரைசலில் முக்கி மொறுமொறுப்புக்கு ரொட்டி தூளில் புரட்டி சுடவேண்டும். உருளை வடையில் அரிசி மாவு எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்.

  கட்லெட்டை எண்ணெய் குறைவாக நான் ஸ்டிக் தவாவிலும் சுட்டு எடுக்கலாம். உருளை வடையானாலும் எண்ணையில் பொறித்து எடுக்க வேண்டும்.

  கட்லெட்டிற்கு சாஸ் என்ற துணை தேவை. சட்னி இல்லையென்றாலும் உருளை வடையை அப்படியே சாப்பிடலாம்.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏழாவது வித்தியாசம், வடை ஆறு என்றாலும் குளிர், மழை, பேச்சு என்றிருந்துவிட்டால் போன வேகம் தெரியாது. கட்லெட் இரண்டுக்குமேல் உள்ளே போகாது. ஒருவேளை நாம் மனதளவில் கறுப்பு நிறத்தைவிட பளிச் என்ற நிறத்தை விரும்புவதால் இருக்குமோ?

   நீக்கு
  2. ஆறு வித்தியாச அலசல் நன்றாயிருக்கிறது.  ஆனாலும் எனக்கு நெல்லை சொல்லி இருபிப்பது போல கட்லெட் என்றால் ஒன்று அல்லது இரண்டுதான்.  வடை என்றால் கூட!

   நீக்கு
 9. எங்கள் வீட்டிலும் எல்லோரும் மழை காலத்தில் வடை, பஜ்ஜி, பக்கோடா கேட்பார்கள். உங்கள் மகன்கள் டயட் என்று அருமையான வடையை கோட்டை விட்டு விடார்களே! பார்க்கும் போதே மொறு மொறு என்று நன்றாக இருக்கிறது. உங்கள் பக்குவபடியே (ரீல்ஸில் பார்த்தபடி) சொன்னதை செய்து விட்டார். அறிவாளி படத்தில் வரும் நகைச்சுவை முத்துலட்சுமி , தங்கவேலு போல நீங்கள் சொன்னதை சொல்லி பார்த்து கொண்டேன்.
  (நீங்கள் கேட்கும் பொருட்களை எடுத்து பாஸ் செய்ததை)

  அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்யாண வயது வந்துவிட்டாலே பசங்க டயட்டில் இருந்து எடை குறைக்க முயல்வது சகஜம்தானே. கல்யாணம் ஆனபிறகு விட்டதைப் பிடித்துக்கொண்டால் ஆயிற்று.

   நீக்கு
  2. அதுவும் சரிதான். இருந்தாலும் அம்மா மனது மகன்கள் சுவையான வடையை சாப்பிடவில்லையே என்று இருக்குமே!

   நீக்கு
  3. உண்மை சகோதரி. இந்த அம்மா பாசத்தினால்தான் நானும் தவித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரர் ஸ்ரீராம் அவர் களின் பாஸுக்கும் கண்டிப்பாக அந்த தவிப்பு இருந்திருக்கும்.

   நீக்கு
  4. ஆமாம், ஸ்ரீராமின் பாஸுக்கு அந்த எண்ணம், தவிப்பு எப்படி இல்லாமல் இருக்கும், இருக்கும். ஸ்ரீராமுக்கும் இருக்கும் .

   நீக்கு
  5. ஹா..  ஹா..  ஹா..  தங்கவேலு ஜோக் சற்றே வித்தியாசமானது.   அதான் எனக்கு தெரியுமே என்றே கவிழ்ப்பார். 

   நீக்கு
  6. தந்தை மனம் தவித்திருக்க, தாயின் மனம் கனிந்திருக்க கவலைகள் எனக்கேதடா என்று பாடவேண்டியதுதான்!

   நீக்கு
  7. இந்த உ.கிக்குள் ஸ்டஃப் செய்து பட்டீஸும், ஆலு டிக்காவும் பண்ணலாம்.

   நீக்கு
 10. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 11. அழகாக இருக்கிறது வடைகள். ஆனால் வாடை வரவில்லை அபுதாபிக்கு....

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  இன்றைய தலைப்பு நன்றாக உள்ளது. இதை அப்போதே சொல்லத் தவறி விட்டேன். அழகான உ. கி. வடையுந்தான். (இல்லையெனில் சகோதரர் நெ. தமிழர் தலைப்பு மட்டுந்தானா என கேள்வி கேட்பார்:)))).) . உ. கி. வடை செய்முறை, படங்கள் என அனைத்தும் அருமை. மழை, கரண்ட் இல்லாமை போன்ற நெருக்கடியில் நல்ல மாற்று உபாயம். தங்கள் சொல்படி கேட்டு இந்தப் பக்குவத்தை சிறப்பாக செய்து அளித்த தங்கள் பாஸுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நானும் ஒர் நாள் இதைப் போன்று செய்து பார்க்கிறேன். நன்றி.

  உ. கி என்பதால் எண்ணெய் அதிகம் குடிக்காமல் வந்ததா என்பதை தெரிவிக்கவும். .

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.. என்னடா... இன்னும் பதிவு விமர்சனம் வரவில்லையே என்று காத்திருந்தேன். நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 13. இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சல்..

  விரிவான கருத்துகள் எழுதுதற்கு இயல வில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.

   தங்களுக்கு உடல் நல மில்லை என்பது வருத்தமான செய்தி. காய்ச்சலுக்கு தகுந்த மருந்து எடுத்துக் கொண்டீர்களா ? எனக்கும் சென்ற இரு வாரங்களாக விடாமல், ஜலதோஷம் காய்ச்சல் என அவதிபட்டேன். இப்போதுதான் நலமாகி வருகிறேன். இன்றுதான் வலையுலகிற்கு திரும்ப வந்துள்ளேன். தங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும். விரைவில் காய்ச்சல் குணமாகி நலம் பெற்றிட இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. சித்த மருந்துகள் தான் எப்போதும்..

   மிகவும் களைப்பாக இருக்கின்றது..

   வேறொன்றும் இல்லை..

   நீக்கு
 14. மழைக்கு உருளைக்கிழங்கு வடை சூப்பராக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 15. ஆஹா...ஶ்ரீராம் உகி வடை...சூப்பராக வந்திருக்கு.....

  நானும் குளிருக்கு இதேதான் ஞாயிறு செய்தேன்....டக்குனு செய்ய இந்த வடை இது கை கொடுக்கும் கை வடை....அதான் மிக்சி கிரைண்டர் வேண்டாத வடை..கை வடை!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 16. //'சரி 'ஆச்சி ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸா'வது வாங்கி வைத்திருக்கிறாரா?'// grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr //ஆச்சி? உங்க வீட்டில் இனிமேல் வடை/பஜ்ஜி கொடுத்தால் யோசிக்கணும் சாப்பிட! :(

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!