ஞாயிறு, 17 டிசம்பர், 2023

நான் பயணம் செய்த இடங்களின் படங்கள் தொகுதி:: நெல்லைத்தமிழன்

 

ஷவனதுர்கா மலை   இறுதிப் பகுதி    

சென்ற நவம்பரில் பெங்களூரில் இருந்து சுமார் 60 கிமீ தூரத்தில் உள்ள ஷவன துர்கா மலையேற்றம் சென்றதைப் பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சி இது.

ஒன்றே முக்கால் மணி நேரம் மலையில் ஏறியிருக்கிறேன். இன்னும் பத்து நிமிடங்கள் ஏறினால் மலை உச்சியை அடையலாம் என்று சொன்னார்கள். சரிஅதையும்தான் ஏறிப்பார்த்துவிடுவோமே என்று தோன்றியது.

பாறைகள் வளர்ந்த புற்கள் என்று ஒழுங்காக இல்லாத பகுதி அது. கொஞ்சம் கஷ்டப்பட்டு ஜாக்கிரதையாக ஏறவேண்டியிருந்தது.

கொஞ்சம் கடினமான பகுதி அது. அதிலும் கடைசி 10 மீட்டர் உயரம் ஏற கொஞ்சம் கஷ்டமாக இருந்த து. மலை உச்சியில் நந்தி ஒன்று இருக்கிறதுமலை உச்சியிலிருந்து கீழே தெரியும் இடங்களின் அழகைப் புகைப்படங்களாக எடுத்துக்கொண்டேன். கீழிருந்து மலை உச்சிக்கு ஏறுவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. மலை உச்சியில் சுமார் 20 பேர்கள் இருந்தார்கள்.



மலை உச்சியில் இருக்கும் நந்தி சிலைநாங்கள் ஏறிய மலையின் இன்னொரு பகுதி. அந்த வழியாக ஏறமுடியாது.


மலை உச்சியில் பத்து நிமிடங்கள் இளைப்பாறினோம். சிலபல படங்கள் எடுத்துக்கொண்டு பிறகு இறங்க ஆரம்பித்தோம். இறங்கும்போது நேரம் 12:15.

படிகள் இல்லாத மலைப் பகுதியில் ஏறுவதை விட இறங்குவது மிகவும் கடினம். ஈர்ப்பு விசையை நோக்கி நாம் நகருவதால், நம்மை வேகமாக கீழே இறங்கவைக்கும், சறுக்கி விழ நிறைய வாய்ப்பு.


இந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தூரம் இறங்குவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். உட்கார்ந்துகொண்டே சிறிது சிறிதாகக் கீழே இறங்கினேன். நின்று கொண்டு இறங்கினால் ரொம்பவே கீழே வேகமாக இழுத்துவிடும் என்பதால். இந்தப் பகுதிதான் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் கடினமான பகுதி.



மலையின் வீச்சு
வழியில் பார்த்த ஒற்றைக் கல்.

மலையின் கீழ்ப்பகுதியை 1 ¾ மணி நேரத்தில் வந்து அடைந்துவிட்டோம். யானை போன்ற மலையின் தோற்றம்.

கடைசி இருநூறு மீட்டர் தூரம் எனக்கு இறங்குவதற்குக் கஷ்டமாக இருந்தது. பாதையின் கஷ்டமல்ல. என் எனர்ஜி முழுவதுமே போய்விட்டதுபோல இருந்தது. அதனால் மிக மெதுவாகவே இறங்கினேன். வெயிலோ மிகவும் அதிகம். மதியம் சுமார் 2 மணி.

கீழே இறங்கியதும், அங்கிருந்த இளநீர் கடையில் (40 ரூபாய்) இரண்டு இளநீர் வாங்கிக் குடித்தேன். பத்து நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். பிறகுதான் உயிர் வந்தது போல உணர்ந்தேன்அந்த ஊருக்கு 40 ரூபாய் இளநீருக்கு அதிகம் என்றாலும், ¾ லிட்டர் தண்ணீர் ஒவ்வொரு இளநீரிலும்.

இந்த ஷவன துர்காவில் ஏறுவதற்கு நாங்கள் அங்கு அதிகாலை 5 மணிக்கே போய்ச் சேர்ந்திருக்கவேண்டும். அப்போதுதான் கஷ்டமில்லாமல் ஏறி இறங்கியிருக்கலாம். இந்த மலைக்கு நாங்கள் நவம்பரில் சென்றிருந்தபோதும் (சென்ற வருடம்) மதிய நேரம் என்பதாலும் குன்றுப் பகுதி என்பதாலும் வெயில் அதிகமாக உறைத்தது.

தினமும் நான் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதாலும், அன்று குன்றுப் பகுதியில் நிறைய ஏறவேண்டியிருக்கும், அதனால் அங்கேயே நடந்துகொள்ளலாம் என்று நினைத்து காலையில் நடக்காமலிருந்தேன். ஆனால் சிக்னல் மலைப்பகுதியில் இல்லாததால், நான் நடந்ததையெல்லாம் கூகுள் ஃபிட் கணக்கில் கொள்ளவில்லை போலிருக்கிறது. குறைந்த அளவு ஸ்டெப்ஸ் காண்பித்ததால், வீட்டிற்கு வந்த பிறகு வளாகத்திலேயே மீதியும் நடந்தேன்.

இவ்வாறாக ஷனவதுர்கா மலையேற்றம் நன்றாக நடந்தது. அதிகாலை என்றால் மலையேற்றம் நன்றாக இருந்திருக்கும். திருப்பதி மலையேற்றம் கடினமாக இருந்தாலும், இறுதியில் நாம் பெருமாளை தரிசனம் செய்வதால், மலையேற்றம் கஷ்டமானதாக மனதில் இருக்காது. ஆனால் ஷவனதுர்கா மலையேற்றத்தின் முடிவில் பழமையான கோயில் அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் எதையும் காணாததால், இந்த மலையேற்றம், நானும் மலை ஏறினேன் என்பதைத் தவிர வேறு திருப்தியை எனக்குத் தரவில்லை.

மீண்டும் இன்னொரு பயணம் பற்றி விரைவில் எழுதுகிறேன்.

= = = = = = =


 

26 கருத்துகள்:

  1. படங்கள் பெரிது பண்ணி பார்க்கும்போதுதான் மலையின் பிரம்மாண்டம் தெரிகிறது. பனோரமா வியூவில் நதியையும் இணைத்து எடுக்கப்பட்ட படங்கள் மிக அழகாக வந்திருக்கின்றன. நன்று. பாராட்டுகள்.

    கட்டுரையும் படமும் சேர்ந்து படிப்பவரும் பார்ப்பவரும் சேர்ந்து செல்வது போல் இருப்பது சிறப்பு.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்.

      தூரத்திலிருந்து சிறியதாகத் தெரிந்த குன்று, ஏற ஏற தூரம் அதிகமாகத் தோன்றியது.

      ஆங்காங்கே தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தார்கள். கீழா 20 ரூபாய் தண்ணீர் பாட்டில், மேலே செல்லும்போது ஐம்பது ரூபாயாகிவிட்டது.

      நீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. கடைசி படம் அருமை. கூர்ந்து கவனித்தீர்களானால் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்தில் படுத்திருப்பது போல் தெரிகிறது. முகம், கண், வாய், கழுத்து, வயறு, கால், தொடை என்று ஒவ்வொரு அங்கமும் செதுக்கியது போல் இருக்கிறது.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நீங்கள் சொல்லியிருப்பதற்குப் பிறகு மறுபடி பார்த்ததில் எனக்கும் அப்படி தெரிகிறது.

      நீக்கு
    2. ஆஹா... எனக்கு யானை காலை மடக்கி உட்கார்ந்திருப்பது போலத் தெரிந்தது.

      நீக்கு
    3. தோள் கண்டார் தோளே கண்டார்!.. என்றதைப் போலத்தான்..

      நீக்கு
  4. மலைக் காட்சிகள் புகைப்படங்கள் மிக அழகு. மேலே ஒரே ஒரு நந்தியை வைத்த புண்ணியவான் யார்? அல்லது நந்திக்கு முன்னே இருந்த சிவருமான் இருந்த மலையின் பகுதிகளை உடைத்து ஆட்டையைப் போட்டு விட்டார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். நல்ல பாயின்ட். அடுத்த மலையின் சிவன் கோவில் இருந்ததா இல்லை ந்ந்தி பார்த்துக்கொண்டிருக்கும் திசையில் தூரமாக சிவன் கோவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. கேட்டிருக்கலாம். கன்னடர்களில் பெரும்பான்மை சிவ பக்தர்கள். தெருவுக்கு ஒரு ஆஞ்சநேயர், சிவன் கோவில் இல்லாமலிராது,

      நீக்கு
  5. படங்கள் எல்லாமே மிகவும் அழகு! மிகவும் பிரம்மாண்டமாக பிரமிக்க வைக்கிறது. யானை சாவாதனமாக படுத்திருப்பது போன்ற தோற்றம்! மதுரை மலையை ஞாபகப்படுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதம் மேடம். எனக்குமே மதுரை மலை (அதாவது நாகமலை) நினைவுக்கு வந்தது (உங்களுக்கு ஒத்தக்கடை நரசிம்மர் கோவில் பின்புறம் உள்ள மலை நினைவுக்கு வந்திருக்கலாம்). நான் நாகமலையில் படித்தபோது அந்த மலைமீது ஒரு நாள் ஏறியிருக்கிறேன்.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. ஷவன துர்கா மலையேற்ற படங்கள் எல்லாம் மிக அருமை.
    மலையேற்றம் எவ்வளவு கடினமாக இருந்து இருக்கும் என்று பார்த்தாலே தெரிகிறது.
    கடைசி படம் யானை படுத்து இருப்பது போலவும், ஜெயக்குமார் சார் சொன்னது போல அனுமன் முகமாகவும் தெரிகிறது.
    வானமும், மரமும், வெண்மேகமும், மலையும் பார்க்க பார்க்க அழகு.
    ஒற்றை கல் தொலமாமிருகத்தின்(டைனோசர்) முட்டை போலவும் , இரண்டாக பிளந்த கல்(5வது படம்) அதிலிருந்து தொல்மா மிருகம் வெளி வந்தது போலவும் இருக்கிறது.

    நிறைய வட்டபாறைகளும், பிளவு பட்ட பாறைகளும் அப்படி ஒரு நினைப்பை தருகிறது.

    ஷவனதுர்கா மலைமேல் நந்தி மண்டபம் நந்தி இருப்பது எங்கோ தூரத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு போல!

    ஷவனதுர்கா மழை அழகாய் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கற்பனை ரசிக்க வைத்தது கோமதி அரசு மேடம். தொலமாமிருகம் - ஆஹா... ஆனால் நான் மலையேற்றத்தினை ரசித்தேன். முதல் முறை பெங்களூரில் ட்ரெக்கிங் செல்வதால்.

      நீக்கு
    2. ஷவனதுர்கா மலை அழகாய் இருக்கிறது.

      நீக்கு
  8. ஷவன துர்கா மலையின் படங்கள் எல்லாம் மிக அழகு.. அருமை.

    மலையேற்றம் இவ்வளவு கடினமா?.. படங்களைப் பார்க்கும் போதே மயக்கம் வருகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏறுவது கொஞ்சம் ஓகே. இறங்குவது கொஞ்சம் சிரமம். இதுக்கே இப்படி என்றால், சபரிமலைக்குச் செல்லும் யாத்திரீகர்கள்...

      நீக்கு
  9. /// ஷவனதுர்கா மலை மேல் நந்தி மண்டபம்..///

    நந்தியம் பெருமான் - எங்கோ தூரத்தில் இருக்கும் சிவபெருமானை எதிர் நோக்கிக் கொண்டு இருக்கின்றார் போல!..

    அழகு தரிசனம்...

    பதிலளிநீக்கு
  10. நெல்லை போன வார ஞாயிறு பதிவும் வாசித்தேன். என் லிஸ்டில் உள்ள இடம். போகும் வாய்ப்பு கிடைக்கலை.

    படங்கள் அட்டகாசம். எப்பவுமே மலைப்பகுதியில் இறங்கும் போது உட்கார்ந்து இறங்குவது நல்லது. இல்லைனா சறுக்கி விடும். ..இன்னும் வரேன். இப்போது நேரம் அதுவும் சனி ஞாயிரில் மிகவும் சிரமமாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு இந்த மாதிரி பயணம் மிகவும் பிடிக்குமே கீதா ரங்கன். ஆனால் அதுக்கு நல்ல துணை (நண்பர்கள்/உறவினர்கள்) வேண்டும்

      நீக்கு
  11. படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது
    எடுத்த கோணங்கள் மிகச் சிறப்பாக உள்ளது.
    பயண தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!