ஞாயிறு, 10 டிசம்பர், 2023

நான் பயணம் செய்த இடங்களின் படங்கள் தொகுதி:: நெல்லைத்தமிழன்

 

ஷவனதுர்கா மலை   பகுதி 1  

என்னுடைய மச்சினன் trekkingல் ஆர்வம் கொண்டவன். கடந்த ஐந்து வருடங்களாக body healthல் மிகவும் அக்கறை செலுத்தி ஓரளவு நல்லா fit ஆகத் தன்னை வைத்துக்கொண்டிருக்கிறான், என்னைவிட 11 வருடங்கள் சின்னவன். Trekkingக்கு என்னையும் அவ்வப்போது கூப்பிடுவான். திருப்பதி மலைக்கு பல முறை நடந்து சென்றிருக்கிறேன். பசங்களோடயும் ஒரு தடவை நடந்திருக்கிறேன். பெண் கொஞ்சம் கஷ்டப்பட்டாள். கடைசியாக 2018/19ல் திருப்பதிக்கு என் பையனுடன் ஏறிச் சென்றேன். அப்போது பாதி வழியில் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஐயையோபையனைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டோமே, ஏதேனும் எனக்குப் பிரச்சனைனா என்னாகும் என்று பயம் வந்தது. அந்தத் தடவை மலை ஏறிச் சென்றுவிட்டேன். அதன் பிறகு நடந்து செல்லும் வழக்கத்தை நிறுத்திவிட்டேன். ஆனால் எனக்கு இந்த மாதிரி விஷயத்தில் கொஞ்சம் தைரியம் (அசட்டுத் தைரியமோ?) உண்டு.

பெங்களூரிலிருந்து சுமார் 60 கிமீ தள்ளி இருக்கும் சிவன துர்கா மலைக்குச் செல்வோம். கீழேயிருந்து மலை உச்சி வரை ஏறிச் சென்றுவிட்டுத் திரும்புவோம் என்று அவன் சொன்னதும், நான் சரி..அதற்கென்ன வருகிறேன்ஆனால் பாதியில் கஷ்டமாக இருந்தால் நான் நின்றுவிடுவேன். நீ மாத்திரம் உச்சி வரை சென்றுவிட்டு திரும்பி வரணும் என்று சொன்னேன். கேட்டுக்கொண்டிருந்த என் பையன், அப்பா அப்படியெல்லாம் பாதியில் நின்றுவிட மாட்டார், கஷ்டப்பட்டாவது உச்சி வரை ஏறிவிடுவார், he has will power என்றான்.

ஒரு back bag மற்றும் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொண்டேன். Trekking shoe போட்டுக்கொண்டு காலை 6 மணிக்கெல்லாம் தயாராகிவிட்டேன். எண்ணெய் இருக்கும் உணவு, நடப்பதற்கு முன்பு எடுத்துக்கொண்டால், மலை ஏறுவது கஷ்டம். அதனால் தண்ணீர் மாத்திரம் குடித்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். காலை 7 மணிக்கு எங்கள் வளாகத்திலிருந்து கிளம்பி,  இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக காரில் பயணித்து சிவனதுர்கா மலையடிவாரத்தை 9 மணிக்கு அடைந்தோம். மலையடிவாரத்திற்கு அரை மணிக்கு முன்பே காட்டுப் பகுதி ஆரம்பித்துவிடுகிறது. ஆங்காங்கே, வனவிலங்குகள் குறுக்கே வரும் இடம், பார்த்து மெதுவாகச் செல்லவும் என்ற எச்சரிக்கை பதாகைகளை நிறையப் பார்க்க முடிந்தது. ஆஹாயானைகளையோ, எருதுகளையோ இல்லை புலி, கரடிகளையோ பார்க்க வாய்ப்பு இருக்கிறது போலிருக்கு என்று ஆர்வத்துடன் இருந்தேன். மூன்று கீரிகளை மாத்திரமே பார்த்தேன். சரி..நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டேன்.

 

காட்டுப் பகுதியில் நல்ல தார்ச்சாலை….

இதோ சிவன துர்கா மலை. இதன் கீழ்ப்பகுதிக்குச் சென்று அங்கிருந்து மலை உச்சிக்கு ஏறவேண்டும்.

கீழே ஒரு பெரிய பதாகையில், சவனதுர்கா, மலை ஏறுபவர்களின் சொர்க்கம் என்று போட்டிருந்தார்கள். மலையைப் பார்த்தால், இதில் எப்படி ஏறப்போகிறோம் என்று தோன்றியது.

மலையின் கீழ்ப்பகுதியில் (சிறிய கிராமம்) அழகிய பெரிய நரசிம்மர் ஆலயம் இருந்தது. நாங்கள் சிவனதுர்கா பகுதியை அடைந்து காரை நிறுத்திவிட்டு, கோவில் அருகில் வரும்போதே மணி 9 ½ . கோவில் திறந்திருக்கவில்லை. முதலில் வந்த வேலையைப் பார்ப்போம், இப்போதே வெயில் வர ஆரம்பித்துவிட்டதால், மலை ஏறிக் கீழே வந்த பிறகு பெருமாளைச் சேவிப்போம் என்று நினைத்து, மலை அடிவாரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

பிடிமானம் இல்லாத வெறும் பாறை. ஆங்காங்கே சுண்ணாம்பினால் அம்புக்குறிகள் போட்டிருந்தார்கள், நமக்கு போகும் பாதை எது என்று தெரிவதற்காக. மற்ற இடங்களில் ஏற முயற்சிக்க வேண்டாம், ஏறுவது கடினம், சறுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்திருந்தனர்.

கொஞ்சம் சொரசொரப்பான மலைப்பகுதி. ஸ்போர்ட்ஸ் ஷூதான் அணிந்திருந்தேன். கொஞ்சம் அழுத்தமாகக் காலை வைத்து ஏறவேண்டும்.  

இந்த ஷவனதுர்கா (பெயர் சிவனதுர்கா, சவனதுர்கா, ஷவனதுர்கா என்றெல்லாம் சொல்கின்றனர்), ஆசியாவின் மிகப்பெரிய ஒற்றைக்கல்லினால் ஆனது என்கிறார்கள். கடல் மட்ட த்திற்கு மேல் 1200 மீட்டர்களுக்கு மேல் உயரமானது. தக்காணப் பீடபூமியின் ஒரு பகுதி என்கிறார்கள். அர்காவதி ஆறு இதன் ஒரு பகுதி வழியாகப் பாய்கிறது.

மலையடிவாரத்தில் ஷவண்டி வீரபத்ரேஷ்வர ஸ்வாமி கோவில் இருக்கிறது. இதற்கு கர்னாடகப் பகுதியில் ஏராளமான பக்தர்கள் உண்டு. இது தவிர நான் முன்பு சொன்ன நரசிம்மஸ்வாமி ஆலயமும் உண்டு. இவ்விரண்டு கோவில்களும் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றனவாம்.

இந்த ஷவனதுர்கா மலை, இரண்டு மலைகளினால் (குன்று/பெரும் பாறை). ஒன்றை கறுப்பு மலை என்றும் இன்னொன்றை வெள்ளை மலை என்றும் சொல்கின்றனர். ஹொய்சாள Bபல்லாள அரசர் காலத்தில் இந்த மலையைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. அப்போது இதனை ஷவண்டி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 1790ல், ஆங்கிலேய கவர்னர் காரன்வாலிஸ் இந்தப் பகுதியை திப்புசுல்தானிடமிருந்து கைப்பற்றினான். அப்போது இந்த மலையை சாவினதுர்கா, அதாவது இறப்பிற்கான கோட்டை (Fort of death) என்று குறிப்பிட்டிருக்கிறான். அதன் காரணம், மலை உச்சியை அடைய பாதை இல்லாத தும், முழுவதுமாக மூங்கில் மற்றும் பல மரங்களால் இந்தப் பகுதி சூழ்ந்திருந்தும் ஆகும்.

பாதை சரிவாகவும், ஆங்காங்கே உடைந்த பாறைப் பகுதியாகவும் இருக்கும். கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் ஏறணும்.

அரை மணி நேரம் நடந்த பிறகு, தூரத்தில் மேலிருந்து கீழே இறங்கி வருகின்ற கூட்டத்தைப் பார்த்தோம்பரவாயில்லையே.. பாதி தூரம் நடந்துவிட்டோம் என்று நினைத்தேன்.

மலைப்பகுதியில் ஏற ஆரம்பித்து ¾ மணி நேரம் ஆனதும், வெயில் சூடு அதிகமாவதற்குள் ஓரிரு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வோம் என்று நாங்கள் இருவரும் மலைப்பகுதில் அமர்ந்து ஒரு சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

சில இடங்களில் கொஞ்சதூரம் பாறை சமதளமாகவும், கொஞ்ச தூரம் மெதுவாக உயர்ந்தும் இருந்தது. அங்கெல்லாம் ஏறுவது சிரமமாக இல்லை. இருந்தாலும் பல இடங்களில் ரொம்பவே மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும் ஏறவேண்டியிருந்தது.

மலையின் ஒரு பகுதியில் கீழே Reservoir எனப்படும் நீர்ப்பகுதி தெரிகிறதா? மலையேற்றத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்வதன் ஒரு காரணம், இதைச் சாக்கிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்தான். இந்த இடத்தை அடையும்போது, சுமார் ஒரு மணி நேரம் மலையில் ஏறியிருந்தோம்

மேலிருந்து கீழே சிலர் இறங்கிவந்துகொண்டிருந்தார்கள். இன்னும் நிறைய நடக்கணும் என்று எங்களுக்குச் சொன்னார்கள்வழியில் சிறிய கட்டுமானம் இருக்கும் இடத்தைப் பார்த்தோம். இது முன்பிருந்த கோட்டையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம்.

இரண்டாவது படத்தில், ஆறும் நீர்த்தேக்கத்தை நோக்கி அது செல்வதும் தெரியும். நாங்கள் சென்றபோது மழை இல்லை. மழை பெய்தால் (அல்லது பாதி ஏறும்போது மழை பெய்ய ஆரம்பித்தால்) ஏறுவது மிகக் கடினம். கீழேயே தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த இடத்தை அடையும்போதே எனக்கு மலை ஏறினது போதும் என்று தோன்றியது. இன்னும் எவ்வளவு ஏறணுமோ, இப்போதே வெயில் இருக்கிறதே என்று நினைத்தேன். பத்து நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.

1 ¾ மணி நேரம் நடந்த பிறகு ஒரு பழங்காலக் கட்டிடத்தைப் பார்த்தோம். ஏறும் வழியில் ஆங்காங்கிருக்கும் பெரிய குழிகளில் தேங்கியிருக்கும் மழை நீர்.


கட்டிடத்தின் வெளிப்பகுதியில் மக்கள் தாங்கள் பெயரைப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பக்கத்திலேயே ஆழமான நீர்நிலை. இது சுனை அல்ல. பாறைப் பிளவில்/பெரிய குழியில் மழை நீர் தேங்கியிருக்கிறது. இந்த மாதிரி இடங்களில் நீர் அருகிலேயே நான் செல்வதில்லை. வழுக்கலாம், ஆழம் தெரியாது என்ற காரணங்களால்.

இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் ஏறினால் போதும் மலை உச்சி வந்துவிடும் என்றார்கள். ஆனால் கொஞ்சம் steep ஆகவும் செடி கொடிகள் சூழ்ந்தும் இருந்தது.

ஏறி அங்கு என்ன பார்த்தோம் என்பதையும், திரும்ப கீழிறங்கி வந்ததையும் அடுத்த வாரம் பார்க்கலாமா?

(தொடரும்) 

 

21 கருத்துகள்:

  1. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. படங்கள் வாசிக்க த் துணையாக இருந்தன. கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரமா? தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரூ கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரம். அங்கும் மரங்கள் நிறைய எட்டப்படுவதாலும், கான்கிரீட் காடுகளாலும் குளிர் ரொம்பவே குறைந்து, பெப்ருவரி-மே மாதம் வெயில் காலமாக மாறிக்கொண்டிருக்கிறது ஜீவி சார்

      நீக்கு
    2. பெங்களூர் கடல் மட்டத்திலிருந்து 900 மீ (3000 அடி) உயரம். விக்கிப்பீடியா சொல்கிறது.

      நீக்கு
  3. படங்கள் அருமையாக வந்திருக்கின்றன. மிடில் ஷாட்டில் பாறைகளின் பிரம்மாண்டம் நன்றாக புலப்படுகிறது.

    இன்றைய பதிவைக் கண்டதும் மதுரை யானைமலை ஒத்தக்கடை நரசிம்மர் கோயில் நினைவில் வந்தது.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்... ஒத்தக்கடை நரசிம்மர் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். அதன் பிற்பகுதியில் தெரியும் மலை இப்படித்தான் தோற்றமளிக்கும். நான் அடுத்த முறை செல்லும்போது அங்கிருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கும் ஜோதிஷ்குடி என்ற ஊருக்குச் செல்லவிருக்கிறேன். அங்கு வைணவ குரு ஒருவரின் பிருந்தாவனம் உள்ளது.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. ஷவனதுர்கா மலை பதிவும், படங்களும் மிக அருமை.
    அடிவாரத்தில் உள்ள வீரபத்ரேஷ்வர ஸ்வாமி கோவில், நரசிம்மர் கோவில் படங்கள் அருமை.
    வெயிலுக்கு முன் மலை ஏறி விட வேண்டும். வெயில் வந்து விட்டால் மலையேறுவது கஷ்டம் களைத்து போய் விடுவோம்.
    நீங்கள் ஏறும் போது சிலர் இறங்கி கொண்டு இருந்தார்கள் என்று சொன்னீர்கள் அல்லவா , அதுதான் சரியான நேரம். இளம் வெயிலில் இறங்கி விட வேண்டும்.

    மலையில் உள்ள நீர் நிலை அழகாய் இருக்கிறது. மலை மேல் எடுத்த படங்கள் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... இளம் வெயிலில் இறங்கிவிடவேண்டும் என்று சொன்னது சரிதான். பெங்களூரில் அவ்வளவாக வெயில் தாக்கம் நவம்பரில் கிடையாது என்றாலும், சூட்டில் பாறை சுட ஆரம்பித்தால் மாட்டிக்கொண்டுவிடுவோம்.

      ஆங்காங்கே பாட்டில் தண்ணீர் மற்றும் ஸ்நாக்ஸ் விற்றுக்கொண்டிருந்தார்கள். அதனைப் படங்களெடுக்க மறந்துவிட்டேன்.

      நீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  7. காலையில் ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி , நரசிம்மர் ஸ்வாமி தரிசனம்..

    படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் நன்றாக இருக்கின்றன.

    மலையும் பாதையும் அழகாக இருக்கிறது.

    ஆகாயம், நீர்நிலை வண்ணத்தில் கவர்கிறது.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் வழக்கம் போல அழகு.
    சுவாரஸ்யமான ஆரம்பம் தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!