செவ்வாய், 26 நவம்பர், 2024

பொக்கிஷம் : உயிர் நோன்பு - பிலஹரி 1/

 

முன்பு ஒருமுறை பிலஹரி எழுதிய கதை ஒன்றைப் பகிர்ந்திருக்கிறேன் என்று ஞாபகம்.  இணையத்தில் பிலஹரி கதைகள் கிடைப்பதில்லை.  எனக்குத் தெரிந்து எந்தப் பதிப்பகமும் பிலஹரி கதைகளை பதிப்பித்திருப்பதாகவும்  தெரியவில்லை.  

மஹரிஷிதான் சேலத்துக்கு காரர் என்று நினைவு.  இவர் பற்றிய எந்த விவரமும் எனக்குத் தெரியவில்லை.  இணையத்தில் தேடினால் கீழ்க்கண்ட படம் மட்டும் கிடைத்தது!  இது நம் இந்த பிலஹரி இல்லை என்று நினைக்கிறேன்!


ஜீவி ஸாருக்கு கட்டாயம் தெரிந்திருக்கும் என்று 'பூவனம்' வலைத்தளத்திலும் தேடிப்பார்த்து ஏமாந்தேன்.

பிலஹரி.  

அருமையான ராகத்தின் அழகான பெயர்.  அந்தப் பெயரில் பல்வேறு கதைகள் எழுதி இருப்பவர் பற்றிய விவரங்கள் தெரியாதிருப்பது சோகம்.  அநேகமாக நான் பகிரும் இந்தக் கதை சொல்வனத்திலோ, அழியாச்சுடரிலோ இருக்காது என்று நம்புகிறேன்!  சென்று Search செய்துவிட்டு வந்தேன்!

எனவே நண்பர்களே...   பிலஹரி எழுதிய 'உயிர் நோன்பு என்னும் குறுநாவலை ஐந்து வாரங்களுக்குள் - அல்லது அதற்கும் குறைவான வாரங்களில் -  சுருக்கித் தருகிறேன்.  எவ்வளவு வாரம் வரும் என்று நான் இன்னும் பிரிக்காததால் அதை மட்டும் சும்மா விட்டு தொடர்கிறேன்.

மக்கிப்போன விகடன் பைண்டிங்கிலிருந்து இதை எடுத்துக் போகுகிறேன்.  சில இடங்களில் எழுத்துப்பிழை இருக்கலாம்.  சில வார்த்தைகள், எழுத்துகள் விடுபட்டிருக்கலாம்.  குறுநாவலை இப்படி எழுத்தாக மாற்றிய பிறகு முடிந்தவரை பிழை திருத்தி இருக்கிறேன்.  மீறித் தெரிந்தால். சொன்னால் திருத்தி விடுகிறேன்.

*************************************************************************************************************************



மாடி அறை ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த ஜானகியின் பார்வை. இடையேயுள்ள இரும்புக் கம்பிகளினூடே புகுந்து, குறுகிய தெருவைக் கடந்து, எதிர் வரிசையிலுள்ள எண்ணற்ற இல்லங்களின் மொட்டை மாடிகளை விழுங்கி, மேலுயர்த்து, அகண்ட வானப் பிரதேசத்தில்-எங்கோ சூன்யத்தில் - லயித்திருக்கிறது. மூட்டம் போட்டிருந்த அவ்வானத்தில் எப் பேரொளியின் தரிசனத்திற்காக ஏங் கிக் கொண்டிருக்கிருளோ, அவளுக்குத்தான் வெளிச்சம்.

நாளைத் திருமணத்திற்காக இரண்டு நாட்கள் முன்பே வந்து முகாம்​ போட்டு  விட்ட ஒன்றிரண்டு உறவினர்களும் அவர்களுடைய குழந்தைச் செல்வங்களும் எழுப்பிய ஒலியும் கூக்குரலும் அவள் சிந்தனைபைக் கலைக்கவில்லை.  வாசற் பக்கத்திலுள்ள பந்தலில் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களின் நாரையும் பட்டையையும் உரித்தபடி கும்மாளமிட்டுக் கொண்டிருந்த தெருச் சிறுவர்களின் சந்தடியும் அப் பெண்ணின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இல்லை.  தன்னை மறந்து. தான் இருக்கும் நிலையை மறந்து, தன் இல்லத்தைச் சுற்றிச் சுழி போட்டு ஓடும் உற்சாகத்தை உணர மாட்டாதவளாய் சமாதி நிலையில் வீற்றிருக்கிறாள் ஜானகி.

வானிலே சின்னஞ் சிறு கரும்புள்ளி ஒன்று அவள் பார்வையில் சிக்குகிறது. தனக்குள் சிரித்துக் கொள்கிறாள். காரணமற்ற, அர்த்தமற்ற சிரிப்பு.

"என்னவாக இருக்கும் அது? சிட்டுக்குருவியோ, இல்லேன்னா கழுகோ? ஒருவேளை கருடனாக இருந்தால்.."  என்று யோசித்தவள், தன்னுடைய கன்னங்களில் கைகளினால் மாறி மாறித் தட்டிக் கொள்கிறாள். அதாவது வணங்குகிறாளாம் ! கருட தரிசனத்தைக் கண்டதும் சும்மா இருக்கக் கூடாது என்று அவளுக்கா தெரியாது ?

'உம்!..குருவியோ, காக்காவோ- எதுவாத்தான் இருக்கட்டுமே. கொடுத்து வைத்த ஜீவன். நினைத்த இடத்துக்குப் போறதும், நினைத்த இடத்துக்கு வர்றதும், நினைச்சபோது பறக்கறதும்... உம்... பின்னே என்னைப் போலவா இருக்கணும் ?.. இந்தத் தெருவே, இந்த வீடே, இந்த மாடியே கதின்னு அடைபட்டு இருக்கேனே! உலகம் அதைப் பற்றிக் கவலைப் படறதோ? இல்லே, உலகத்தைப்பற்றி அதுதான் கவலைப் படறதோ? அதே நானும்தான் - உலக்கை கணக்கா உலகத்தைப்பற்றி நான் கவலைப்படாமல் இருக்கச்சே, அதுவும் என்னைப் பற்றி எண்ணாமல் தானே இருக்கணும்?  "பைத்தியக்காரி'ன்னு என்னை ஏன் அழைக்கணுமாம்?..  ரோசம் கெட்ட உலகம்! .. இந்த மானம் - இவ்வளவு பெரிய மானம் - தொபுகடீர்னு, அப்பளம் அப்பளமா நொறுங்கி விழணும். இந்த ஒலகமே அழிஞ்சு போகணும்!.. அப்போதான் இந்த ஜனங்க ளுக்குப் புத்தி வரும்!"

"ஜானகி!.. இங்கேயாம்மா இருக்கே?'என்ற ஒரு குரல், அவளுடைய சிந்தனையைக் கலைக்கிறது. கரைபுரண்டோடும் தன் எண்ண ஓட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தபடியே திரும்பிப் பார்க்கிறாள் ஜானகி. அவள் தந்தை வெங்கடேசன், கையில் துணிப்பொட்டலத்துடன் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்.

"கீழேயெல்லாம் தேடிப்பாத்துட்டு இங்கே வரேம்மா!..  என்ன பண்ணிண்டிருக்கே?'' என்றபடியே பொட்டலத்தை அவிழ்க்கிறார் அவர்.

பதில் பேசாமல், அப் பொட்டலம் பிரிபடுவதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஜானகி.

''ஜானா!.. இதோ பார்த்தியா?. உனக்குப் பிடிக்கிறதா சொல்லு!"

அவர் கையில் விலை உயர்ந்த சில்க் புடவை ஒன்று காற்றில் அசைந்தாடுகிறது. வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஜானகி.

"என்னம்மா இது?.. நான் பாட்டுக்குச் சொல்லிண்டே இருக்கேன்!. நீ பொம்மையா இருக்கியே அம்மா!" என்று அவர் வேதனை பொங்கக் கேட்கவும், அவள் உடல் ஒரு முறை சிலிர்க்கிறது. அர்த்தமற்ற பார்வையில் இப்போதுதான் ஏதோ ஒரு ஒளி பிறக்கிறது.

"என்னப்பா?.. என்ன சொன்னே? என்ன சொல்றே?.." என்று பச்சைக் குழந்தை மாதிரி கேட்கிறாள்.

பெருமூச்செறிகிறார் பெற்றவர்.

"இதோ பாரு!.. இந்தப் புடலை உனக்குப் பிடிச்சிருக்கா சொல்லு!”

"புடவையா?.. எனக்கா?.. ஏதுக்கு இப்போ?"

"என்ன கேள்வி இது, ஜானா? நாளைக்குக் கல்யாணம் இல்லியா?..  உனக்கு வாங்கின புடவை நன்றாக இல்லைன்னு அம்மாகிட்டே சொன்னியாமே!.. அதுக்காகத்தான் அதைக் கொடுத்துட்டு...." 

ஜானகி இடைமறிக்கிறாள்.

"நான் சொன்னேனா ?.. எப்போ சொன்னேன்?.. என்ன சொன்னேன்? அம்மா கிட்டேயா?.. சுத்த புளுகுணியா இருக்காளே இந்த அம்மா!"

முகத்தைச் சுளிக்கிறார் வெங்கடே சன்.  இப்போது பேசுவதை, மறு விநாடியே மறுத்தோ மறந்தோ பேசும் பெண்ணிடம் வாதாடலாமா? சமர்த்துப் பிறவியாயிருந்தால் சத்தம் போ டலாம்; சண்டை பிடிக்கலாம். அசட்டு ஆத்மாவிடம் அடங்கித்தானே போக வேண்டும்?

''சரி ஜானா! நீ சொல்லல்லேம்மா! நான்தான் வாய் பிசகா-தவறுதலாசொல்லிட்டேன்.  இந்தப் புடவை உனக்குப் பிடிச்சிருக்கா சொல்லேன்!" என்று இறைஞ்சுகிறார் வெங்கடேசன்.

"அப்பா! எனக்கு ஒரு சந்தேகம்!" என்று மறுபடியும் ஏதோ ஆரம்பிக்கிறாள் அவள். பெற்றவர் பேசாமல் இருக்கிறார்

"அதுசரி!.. இப்போ எனக்கு ஏதுக் குப் புடவை? நானா கல்யாணம் பண்ணிக்கப் போறேன்?" என்று கேட்டு விட்டுச் சிரிக்கிறாள் பெண்.

''ஜானா!'" குரல் நடுங்க அழைக்கிறார் வெங்கடேசன்.

"என் தங்கை தானே கல்யாணப் பொண்ணு ! அவதான் பட்டுப் புடவை கட்டிண்டு, நகை நட்டெல்லாம் போட் டுண்டு மினுமினுக்கணும்! எனக்கு என்ன புதுப் புடவை வேண்டியிருக்காம் இப்போ?'

"ஜானா!'' என்று அலறிய வண் ணம், அவள் கைகளை ஆதுரத்துடன் பற்றுகிறார் தந்தை. துள்ளுகிறது. அவர் உடல்

''ஜானா!.. ஜானா! அப்படியெல் லாம் பேசாதேம்மா!.. போன ஜென் மத்திலே யாருக்கு என்ன தீமை செஞ்சேனோ, இந்தப் பிறவியிலே இப்படி அவதிப் படறேன். மூத்த பெண் இருக்கச்சே, இளைய பெண்ணுக்குக் கல்யாணம் பண்ற கொடுமை இருக்கே, இந்த துர்ப்பாக்கியம் என் ஜென்ம விரோதிக்குக்கூட வரக்கூடாது அம்மா, வரக்கூடாது ! நீ வருத்தப்படாதே, கண்ணு! உனக்கும் விடிவு வராம போகாது!''- நெஞ்சிலே உறைந்திருந்த தாபம்,வார்த்தைகளின் வெம்மையிலே உருகி, தொண்டையிலே நீந்தி, வாய் வழி யே வெளியே கொட்டுகையில்,  அப் பெரியவரின் குரல் கர கரக் கிறது; கண்கள் ஜொலிக்கின்றன.

ஜானா சிரிக்கிறாள்; திடீரென்று சிரிக்கிறாள். இத்தனை நேரம் எப்படியோ இருந்தவளா என்று எண்ணும்படிச் சிரிக்கிறாள். தந்தையின் கண்ணீ ரைத் தன் கரததால் துடைக்கிறாள்.

" ஐயை யே!.. அப்பாவைப் பாரு அப்பாவை ! விளையாட்டுக்கு நான் ஏதோ சொன்னால், அதைப் போய் நிஜம்னு நம்பிண்டு, இப்படிப் பச்சைக் குழந்தை மாதிரி கண்ணீர் விடறியே !  என் தங்கைக்குக் கல்யாணம்னா என்ன! தங்கையின் கல்யாணத்திலே எனக்கு மட்டும் இல்லியா? புடவை நெம்பர் ஒன்!''

கலகல வென்று வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, உள்ளே ஓடி விடுகிறாள் ஜானகி.

"ஜானா!.. ஜானா!..''

கீழே கூடத்தில் அம்மா அலறும் குரல், மேலே மொட்டை மாடியில் அளகக் கூண்டின் மீது மல்லாந்து படுத்திருந்த ஜானகியின் செவிகளைத் துளைக்கிறது. பழைய பாணியில் கட்டப்பட் டுள்ள பெரிய புகைக் கூண்டு அது.

'சேச்சே! இந்த அம்மாவும் அப்பாவும் சுத்த மோசம்!..  ஏதோ! தனக்கு இப்போது தீங்கோ துரோகமோ செய்வதாக எண்ணிக் கொண்டு சம்பந்திகளுக்குப் பயந்து பயந்து செய்வதுபோல் அல்லவா, நொடிக் கொருதரம் "ஜானா!..ஜானா!'' என்று உயிரை எடுக்கிறார்கள். அப்படி என்ன அவளுக்கு இப்போது குறை வந்து விட்டது? அப்பாவும் அம்மாவும் அப்படிப் பிரமாதமான கொடுமை செய்துவிட வில்லையே. இதை ஏன் அவர்கள் உணர மறுக்கிறார்கள்? ஒருவேளை உணர்ந்தும், ஊருக்காக வேஷம் போட்டுத் தொலைக்கிறார்களோ? ஐயோ பாவம், அப்பாவைப் பற்றி அப்படி எண்ணலாமா? அம்மாவைப் பற்றியும் தான் அப்படிச் சொல்லலாமா?

தன்னால் உணர முடியாத எந்த சங்கடம் அவர்கள் வயிற்றில் புரளுகிறதோ, யார் கண்டது? ஆனால், ஒன்று மாத்திரம் உறுதி. அக்காவுக்குத் திருமணமானவுடன் தான் தங்கைக் குக் கல்யாணம் ஆக வேண்டும் என்பது என்ன நியதி ? சுத்த மூளை கெட்டதனமாக இருக்கிறதே. ஆமாம் மூத்த பிள்ளையான ராமனா முதலில் அயோத்தியை ஆண்டான் ? இளையவனான தம்பிதானே - அவன் பெயர் லட்சுமணனோ பரதனோ யாருக்கு நினைவு இருக்கிறது-பதினாலு வருஷம் செங்கோலைப் பிடித்தான்? அப்படித்தானே போன வருஷம் கோடி வீட்டிலே காலட்சேபம் செய்த பாகவதர் சொன்னார்? அவளும் தானே மொட்டை மாடி அறையிலிருந்து கொண்டே அந்த ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொண்டிருந்தாள் ? பாகவதர் - சுவாமி கதையைச் சொல்பவர் பொய் பேசுவாரா ? நாக்கு வெந்து விடாதா? அதுமட்டும் நியாயம் போலிருக்கிறது. சுவாமி என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம். அதை வேறு யாராவது பண்ணினால் ... !

".. என்னடி பண்றே இங்கே?" என்று கேட்ட வண்ணம், பூதாகாரமான உடலைச் சுமந்தபடியே, மாடியேறி வந்து விடுகிறாள் தாயார். அவள் கையில் பெரிய எவர்சில்வர் பாத்திரம் ஒன்று. அதில் ஏராள பட்சண வகைகள். மறுநாள் கல்யாணத் திற்குச் செய்யப்பட்டவை.

அம்மாவைப் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரிக்கிறாள் அருமைப் பெண்

''ஏண்டி சிரிக்கறே இப்போ?"

"பைத்தியம் சிரிக்காமல் என்ன பண்ணுமாம்?"

பெற்ற வயிறு பாளம் பாளமாக வெடிக்கிறது. தாயின் தலை குனிகிறது. நா புரளவில்லை. மனம் துடிக் கிறது.

"அசடு! அசடு!.. உன்னை யாரும்மா இப்போ அப்படிச் சொன்னது? எழுந்திருந்து இப்படி வா! ராத்திரி மாப் பிள்ளை அழைப்பு ஆச்சே !. இதோ சித்தே நேரத்திலே மாப்பிள்ளை விட்டாரெல்லாம் வந்து விடமாட்டார்களா? முகத்தை அலமபிண்டு, தலையை வாரி, நல்ல புடவை கட்டிண்டு 'ஜம்'முனு இருக்காம, இப்படி - இங்கே வந்து - ஆகாயத்தைப் பார்த்துண்டிருக்கியே! இந்தா பட்சணம். உனக்குத்தான் கொண்டு வந்தேன். சாப்பிட்டுப் பார்த்து நன்னா இருக்கான்னு சொல்லு, பார்ப்போம்!"

கைதட்டிச் சிரிக்கிருள் பெண்.

"பலே!..பலே!.. பட்சணம் ருசி பார்த்துச் சொல்லவாவது நான் இருக்கேனே!" என்றபடியே பாத்திரத்தை வாங்கிக் கொள்கிறாள்.

"சரிம்மா!.. நீ கீழேபோ. நான் அஞ்சு நிமிஷத்திலே வந்துடறேன் !! என்று ஜானகி கூறியதும் தாயார் கீழே போகிறாள்.

அடுத்த ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் - சரியாக ஐந்தே நிமிஷத்திற் கெல்லாம் - ஜானா கீழே வந்தபோது அந்தப் பெரிய பாத்திரம் காலியாகத் தான் இருக்கிறது!

*
[ அடுத்த வாரம்...]


19 கருத்துகள்:

  1. பிலஹரியின் இயற்பெயர் டி. இராமன்.
    பெரம்பூரில் டி. இராமன் அவர்கள் குடியிருந்த பொழுது முன் போர்ஷன் வீட்டில் ஜடாதரன் என்று இலக்கிய ரசிகரும் எழுத்தார்வமும் கொண்ட ஒருவர் குடியிருந்தார். இவர்கள் இருவரும் பத்திரிகை கதைகள், இலக்கியம் என்று நிறைய பேசுவதுண்டு. ஒரு நாள் பிலஹரி ஒரு கதையை எழுதிக்கொண்டு போய் ஜடாதரனிடம் காட்டுகிறார். இதை ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பலாமா, சொல்லுங்ககள் என்று கேட்கிறார். படித்துப் பார்த்து விட்டு "ஓய்! கதை நல்லா இருக்குய்யா.. நிச்சயம் பிரசுரமாகும். அனுப்பி வையும்" எங்கிறார் ஜடாதரன். உடனே "ஏன்யா.. இந்த ராமன்ங்கற பேர்ல்யா அனுப்பப் போறீர்? வேறெதாவது நல்ல புனைப்பெயரில் அனுப்பும்யா" என்கிறார், "அதையும் நீங்களே சொல்லிடுங்க.." என்கிறார் இராமன்.
    கொஞ்சம் யோசித்து விட்டு, ஒரு துண்டுக் காகிதம் எடுத்து 'பிலஹரி'
    என்று எழுதிக் கொடுக்கிறார் ஜடாதரன்.

    பிலஹரி என்ற பெயரில் இராமன் எழுதிய முதல் கதை அடுத்த சில வாரங்களிலேயே ஆனந்தவிகடனில் பிரசுரமாகிறது. இது தான் பிலஹரி என்ற புனைப்பெயர் பிறந்த வரலாறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே.. இவர் பற்றிய விவரம் ஏன் உங்கள் தளத்தில் இல்லை? அங்கு இல்லாமல் இருக்காது என்று முதலில் அங்கு தேடிவிட்டுதான் இணையத்துக்குப் போனேன். சரியாய் தேடவில்லையோ...

      இவர் பற்றி அறிவது சரி, ஜடாதரன் விவரம் ஆச்சர்யம்.

      நீக்கு
    2. ஜீவி அண்ணாவுக்குப் பத்திரிகை உலகின் தொடர்பும் எழுத்தாளர்களின் நட்பும் அதனால் கிடைத்த அனுபவங்கள் எல்லாமே சுவாரசியமானவை,.

      இதே தான் அந்த பிடிஎஃப் லும் இருக்கிறது. ஸ்ரீராம் கீழே சுட்டி இருக்கு.

      கீதா

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீராம்! ஆஹா இன்று பிலஹரி அவர்களின் கதையா? முன்பு நீங்கள் இங்கு ப்...பூ என்ற கதையைப் பகிர்ந்த நினைவு. ஆனால் பதிவு போட்ட அன்று நான் வாசிக்கவில்லை அக்கதையை பின்னர் தான் வாசித்தேன்.

    ஆனால் நினைவு இருக்கிறது. அது போல பிலஹரி, அப்பாவுக்குப் பிடித்த எழுத்தாளர் என்றும் அவரைப் பற்றி அவருக்குத் தெரியும் என்றும் சொல்லியிருந்த நினைவு. ஆனால் வேறு தகவல்கள் இல்லை என்றும்.

    நானும் தேடிப் பார்த்தேன் அப்போவே ஆனால் எதுவும் சிக்கவில்லை.

    மலையாள உலகிலும் பிலஹரி என்ற எழுத்தாளர் கவிதை எல்லாம் எழுதுவதாகத் தெரிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அப்பா பிலஹரி பற்றி பேசியதில்லை. அந்தப் பெயரினால் எனக்குண்டான முதல் கவர்ச்சி..

      பிலஹரி ராகத்தில் எனக்குப் பிடித்த பாலமுரளி பாடலொன்று உண்டு...

      உன்னால் முடியும் தம்பி படத்தில் ரமேஷ் அரவிந்த் அறிமுகமாகும் போது பிலஹரிதான் பாடுவார்...

      நீக்கு
    2. மீக்கும் இந்தப் பெயரும் ராகமும் ரொம்பப் பிடிக்கும். பிலஹரி மார்த்தாண்டபிள்ளையை மறக்க முடியுமா?

      அருமையான பாடல் அது.

      கீதா

      நீக்கு
  4. அந்தப் பழைய பதிவுக்கு நான் கருத்து போட்டேனா என்று தெரியவில்லை பார்க்கிறேன்.

    அந்தக் கதை அருமையான ஒரு கதை பிச்சை எடுக்கும் ஒரு சிறுவன், பணக்காரச் சிறுவன் இருவரின் உரையாடல்கள் பணக்காரச் சிறுவன் அந்த ஏழைச் சிறுவனுக்கு தன் வீட்டு விசேஷத்தின் உணவைத் தட்டில் வைத்துக் கொடுத்தல் ஆனால் சிறுவனின் பெயர் பிச்சை என்று அறிந்ததும் அந்த ஏழைச் சிறுவன் உணவைப் பெற்றுக் கொள்ளாமல் நகர்ந்துவிடுவதான ஒரு அருமையான கதை..மனதைத் தொட்டக் கதை அது....இருங்க அந்தப் பதிவு போய் பார்த்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் நீங்கள் சொன்னவுடனேதான் அந்த கதையின் தலைப்பும் அதன் பிறகும் கூட நீங்கள் சொன்ன உடனே தான் என்ன கதை என்பதும் நினைவுக்கு வருகிறது. நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு.

      நீக்கு
  5. விகடனில் பிலஹரி ஒரு ஏழை குமாஸ்தாவின் கதையை எழுதி அது முத்திரை கதையாகவோ தொடராகவோ பிரசுரமாகியிருந்தது. கதையின் பெயர் 'நெஞ்சே, நீ வாழ்க' என்று நினைவு. அந்தக் கதை ஆலயம் என்ற பெயரில் திரைப்படமாக வந்தது. திருமலை-- மஹாலிங்கம் என்ற இரட்டை இயக்குனர்கள் டைரக்ஷனில் நாகேஷ் நடித்த படம் இது. இந்தப் படத்தைப் பார்த்த ரசனையில் படத்தைப் பாரட்டி எழுதி நான் குமுதத்திற்கு அனுப்பப் போக குமுதம் அதை
    முக்கியத்துவம் கொடுத்து வண்ணத்தில் நடுப்பக்கத்தில் பிரசுரம்
    செய்திருந்தது. இதெல்லாம் பெரிய விஷயமில்லை. அந்த நடுப்பக்க
    குமுதம் பிரசுர அழகைப் பார்த்து விட்டு, திருமலை--மஹாலிங்கம்
    இருவரும் கையெழுத்திட்டு தங்களின் முதல் இயக்க படத்திற்கு விளம்பரமாக தங்கள் பாராட்டு அமைந்தது என்று நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தைப் பார்த்து என் கண்கள் கலங்கி விட்டன. அதனால் பிலஹரி, ஆலயம் படம், திருமலை-- மஹாலிங்கம் பெயர்கள் எல்லாம் நன்றாக நினைவில் பதிந்து விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... எவ்வளவு நினைவுகள் ஜீவி ஸார்... அந்தப் பொக்கிஷம் எல்லாம் இருந்தால் வெளியிடலாமே...

      விகடனில் வந்த கதை படமாக விமர்சனம் குமுதத்தில்... அருமை.

      திருமலை மகாலிங்கம் அதைப் படித்து, கையெழுத்திட்டதோடு சிரமம் எடுத்து குமுதம் அலுவலகத்தில் உங்கள் முகவரி வாங்கி அனுப்பி..

      க்ரேட்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      ஜீவி சகோதரரின் பத்திரிக்கை அனுபவங்கள், அவருடன் நட்புடன் பழகிய, சிறந்த எழுத்தாளர்களின் நினைவுகள் எல்லாமே அறியும் போது மனதுக்குள் ஒரு பெருமை நமக்குள்ளும் வருகிறது. அவருடைய பத்திரிக்கை அனுபவங்களுக்கும், நினைவுத் திறன்களுக்கும், நல்ல எழுத்துக்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  6. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீராம், அப்பா வுக்குத் தெரியும் என்ற விவரம் ஸாரி அது கீதாக்கா சொல்லியிருக்காங்க கருத்தில் அந்தப் பதிவில்

    கீதாக்கா சொல்லியிருக்காங்க அதை நீங்கன்னு நினைச்சுட்டேன்....அங்கு வாசித்த நினைவு இருந்தது. ஆனால் பதிவு வந்த அன்று இல்லை இப்ப அங்கு போய் பார்த்துவிட்டேன். கீதாக்கா கருத்தில் சொல்லியிருக்காங்க.

    கூடவே நான் ஒரு சுவாரசியமான ஒரு பிடி எஃப் எடுத்து வைத்திருந்தேன். அதுவும் நினைவுக்கு வந்தது. நம்ம தளத்துல சில்லு சில்லாய் ல வாசித்ததில் ரசித்தவை என்பதில் பதிவு எழுதலாம் என்ற நோக்கில்....ஹிஹிஹி....அதெங்க எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கு

    பூவை எஸ் ஆறுமுகம் தொகுத்த ஒரு புத்தகம். அதாவது எழுத்தாளர்களின் புனைபெயர்கள் எப்படி வந்தன முதல் கதை என்ன என்ற விவரங்கள் அதில் பிலஹரி குறித்த விவரமும் பிலஹரியே குறிப்பிட்டவை அதில் இருக்கின்றன. tamilvu லருந்து டக்கென்று நினைவு வந்து இதோ அந்த பிடிஃப் சுட்டி தரேன்

    https://www.tamilvu.org/library/nationalized/pdf/60-arumugam.poovai.s/punaipeyarummuthalkathaiyum.pdf

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கதையை வாசித்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைக்கும் பொக்கிஷ கதை பகிர்வு என்ற பதிவு வந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. எத்தனைக் கதைகளை நாம் இது போல் படிக்காமல் விட்டிருப்போம். (உண்மையில் அவைகள் எண்ணிலடங்காதது.) நல்லதொரு அறிமுகப் பகுதி.

    எழுத்தாளர் பிலஹரி எழுதிய கதைகளை நானும் எங்கோ, என்றோ படித்திருப்பதாக நினைவு. ஆனால், எதுவென்று குறிப்பிடத் தெரியவில்லை. அந்தப் பெயரை பார்த்தவுடன் மனதில் எழுவது இந்த நினைவுகள்.

    இன்றைய கதையையும் படித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!