வியாழன், 21 நவம்பர், 2024

"காயினெல்லாம் வேஸ்ட்.. ஐம்பது ரூபாய் நோட்டு கொடுங்க"

என்ன சொன்னேன்?  யானை மங்களா அருகே வந்தோம் என்று நிறுத்தி இருந்தேன் அல்லவா?  உள்ளே போகும்போதே யானை ஆசீர்வாதங்களை விற்றுக் கொண்டிருந்ததை பார்த்தேன்.

ஒரு பிரம்மாண்டத்தை அடக்கி அடிமைகொண்ட மதர்ப்பில் மனிதர்கள் பாகனாய், பக்தனாய், பார்வையாளனாய் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.  யானையின் காலிலிருந்து சங்கிலி விடுபட்டால் மக்கள் என்ன செய்வார்கள் என்று எண்ணம் ஓடியது.


ஒரு வடமாநில தம்பதிக்கு நேர்ந்த அனுபவத்தைப் பார்த்தேன்.  சொல்கிறேன்.

முதல் சிலமுறை அவர்கள் காசு கொடுக்கக் கொடுக்க அதை வாங்கி பாகனிடம் சேர்த்து விட்டு ஆசீர்வாதம் தராமல் ஆடி ஆடி அழிச்சாட்டியம் செய்தது மங்களா.

சிலமுறை முயன்றபின் அவர்கள் நொந்துபோய் பாகனிடம் கேட்கவும் பாகன் சொன்னார், "காலில் செருப்பு அணிந்து வந்தால் ஆசீர்வாதம் கிடைக்காது."

அவர்கள் பரவசமாகி செருப்பைக் கழற்றி விட்டு பக்திபூர்வமாய் வந்து காசு கொடுத்தார்கள்.  மறுபடியும் அதே கதை.  யானை வாங்கி வாங்கி வைத்ததே தவிர ஆசீர்வாதம் தரவில்லை.

மறுபடியும் முறையீடு.

பாகனின் அலட்சிய பதில்..."காயினெல்லாம் வேஸ்ட்..  நோட்டு கொடுத்தால்தான்..  ஐம்பது ரூபாய் நோட்டு கொடுங்க"

மற்றவர்கள் எல்லோரும் சளைக்காமல் ஆசி வாங்கி கொண்டிருக்க, தங்கள் இருவருக்கு மட்டும் அது கிடைக்காத வருத்தம் கலந்த அவமானத்தில் அவர் ஐம்பது ரூபாய் நோட்டொன்றைத் தேடினார்.

பக்கம் சென்றேன்.  பதவிசாய் உரைத்தேன் 'பத்து ரூபாய் கொடுங்க போதும்...'

கொடுத்தார், வாங்கினார். மகிழ்ந்தார்.  மறுபடியும் ஒரு பிரச்சினை.  ரூபாயை இவர் கொடுத்து விட்டு, பின்வாங்கி  ஆசீர்வாதத்துக்கு மனைவி தலையைக் காட்டினார்.

நோ ஆசீர்வாதம்.  துதிக்கை நீளவில்லை.  குழம்பிப்போய் என்னைப்  பார்த்தார்.

"ரூவா யார் கொடுக்கறாங்களோ, அவங்களுக்குதான் ஆசீர்வாதம்!  யானை அதற்குதான் பழகி இருக்கிறது"

அதேபோல செய்து வெற்றியடைந்தவர், மூணு சீட்டில் ஓரளவு வென்று ஜகா வாங்கும் கஸ்டமர் போல எஸ்கேப் ஆனார்.  ஏற்கெனவே நிறைய இழந்திருந்தார்.

காணொளியைப் பாருங்கள்..  ஒரு சிறுவன் பொடியன் முன்னால் ஓடி ஓடி மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான்.  ஆடும் யானையின் ஓரக்கண் பார்வை அவன் மீதே இருந்தது.  பாகனின் பார்வை வேறெங்கோ இருந்தது.  ஆர்வக்கோளாறில் அருகில் அருகில் ஓடிய சிறுவனை நல்லவேளை ஒரு நல்லவர் வந்து அதட்டி அந்தப் பக்கம் அனுப்பினார்.

திடீரென்று பாகனே பதறியடித்து எழுந்து முன்னே ஓடியதை பார்த்து அங்கே என்னவென்று பார்வையைத் திருப்பினால், பிறந்து சில நாட்களே ஆகியிருக்கக் கூடிய ஒரு குழந்தையை கைகளுக்குள் பொதிந்தபடி ஆசி வாங்க  ஒரு அசடு, யானைக்கு அருகே, மிக அருகே வந்திருந்தார்.  ரூபாய் குழந்தையின் சின்னஞ்சிறு பிஞ்சுக் கைகளில் இருந்தது.

பாகன் அவரை அதட்டி அந்தப் பக்கம் அனுப்பி வைத்தார் - குழந்தை கையிலிருந்த ரூபாயை வாங்கி கொண்டுதான்!  பாஸ் பத்து ரூபாய்க்கு 'ஆசி' வாங்கி, என்னையும் வாங்கச் சொன்னார்.  நானும் பத்து ரூபாய் கொடுத்து ஆசி வாங்கிக் கொண்டு  அடுத்த கோவிலுக்கு கிளம்பினேன்.

============================================================================================

எம்.ஆர். ராதா பேசுகிறார்!

1971ம் ஆண்டு மே1ந் தேதி, ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் வெறிச்சோடிக் கிடந்த சென்னை தேனாம்பேட்டை போயிஸ் ரோட் வீடு கலியாண வீடுபோல் 'கலகல' வென்று காட்சியளிக்கிறது. வெளியே பல கார்கள் நிற்கின்றன. சில கார்கள் வருவதும் போவதுமாயிருக்கின்றன. ஆணும் பெண்ணுமாக மக்கள் அங்கங்கே சிறு சிறு கூட்டமாக நின்று, மாடியைப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதுமாக இருக்கிறார்கள். மேலேயும் கீழேயுமாகச் சிலர் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து நானும் போகிறேன். ராதாவின் குரல் ஒலிக்கிறது:

"என்னைப் பார்க்கவா இத்தனை பேரு ? நான் என்ன, ராஜாஜியைப் போல, பெரியாரைப் போல, காமராஜைப் போல பெரிய மேதையா ? சாதாரண நடிகன்தானே? என்னைப் பார்க்க ஏன் இப்படி விழுந்தடிச்சிக்கினு வர்றீங்க?... சரி, பார்த்தாச்சா?... போங்க மாலை வேறே கொண்டாந்து இருக்கீங்களா?... ஐயோ, ஐயோ சரிசரி, போடுங்க... போட்டாச்சா?... போயிட்டு வாங்க!''

ராதாவின் குரலா இது, இத்தனை யிருக்கிறதே ... சன்னமா

வியப்பு அடங்கு முன் இன்னொரு குரல் கேட்கிறது: "உங்கள் குரல் முன்னைப் போல்..."

"அஞ்சி வருஷமாப் பேசாம இருந்த குரல் இல்லையா? அப்படித்தான் இருக்கும்; கொஞ்சம் கட்டினாச் சரியாயிடும்!" என்கிறார் ராதா.

மேலே செல்கிறேன். ராதா தம் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். "உங்கள் உறவினர்களோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது; நான் டிஸ்டர்ப் செய்ய வந்துவிட்டேனோ?" என்கிறேன்.

"டிஸ்டர்ப் என்ன, டிஸ்டர்ப்? நான் என்ன, பெரிய ஸயன்டிஸ்ட்டா? விண்வெளி ஆராய்ச்சி சேஞ்சிக்கிட்டு இருக்கேனா? 'சாதாரண ஆக்டர்!' நீங்களெல்லாம் பேசற பேச்சுக்குக் கொஞ்சம் பாலிஷ் கொடுத்து மேடையிலே பேசறவன். அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். ஆக்டர்னா நீங்க ஓவரா நினைச்சிடாதீங்க... ஆ!... தொண்டை கட்டிக்கிச்சி... இப்ப நான் 'ரத்தக் கண்ணீர் ராதா' வாயிட்டேன் ... ஏய், காந்தா!... யார் அங்கே...?"

ராதா சிரிக்கிறார். அப்போது அவர் மகன் வாசு வருகிறார். அவரைப் பார்த்ததும், "வாசு உங்களை விட நன்றாக நடிக்கிறார் என்று சினிமா ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்களே ?" என்கிறார் டாக்டர்.

"அதை நான் ஒத்துக்க முடியாது. டி.வி.எஸ்.ஸை எடுத்துக்குங்க; அவருடைய பையனுங்க அந்த ஸ்தாபனத்தை இப்ப பிரமாதமா முன்னுக்குக் கொண்டாந்திருக்காங்க. அதை வெச்சி ஆதியிலே அதுக்குக் காரணமாயிருந்த டி.வி.எஸ். திறமையிலே குறைஞ்சவருன்னு சொல்லி விட முடியுமா?" என்கிறார் ராதா.

"அது எப்படிச் சொல்ல முடியும்?'' என்கிறேன் நான். சக பத்திரிகையாளர் ஒருவர், "உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா ? அவரை ஒரு படம் எடுத்துக் கொள்கிறேன்", என்கிறார் வினயத்துடன்.

"என் மனைவியை எதுக்குக் கூப்பிடறது ? நான் மட்டும் பார்க்கத் தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லே!" என்று ராதா 'பட்'டென்று பதிலளிக்கிறார்.

"ஜெயில்லே..." என்று நான் மெல்ல ஆரம்பிக்கிறேன். ராதா குறுக்கிட்டுச் சொல்கிறார்:

"எனக்குத் தெரிஞ்ச வரையிலே ரோசமுள்ளவனும் மானமுள்ளவனும் ஜெயில்லே இருக்கான்!... அங்கே வேலை கெடைக்குது, கூலி கிடைக்குது, இட்லிசாம்பார், சாப்பாடு எல்லாம் கெடைக்குது... 'இன்னிக்கு உனக்கு விடுதலைடா'ன்னு ஜெயிலர் சொன்னாக்கூட 'அதுக்குள்ளேயா, இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போறேனே!'ங்கிறான்... அதைப் பத்தியெல்லாம்தான் உங்க கதிர்லே தொடர்ந்து வரப் போவுதே?... அப்போ சொல்றேன்!"

சொன்னபடி அவர், 'கதிரு'க்காக வாரா வாரம் என்னிடம் சொல்லிக் கொண்டு வந்ததைத்தான் நீங்கள் இப்போது புத்தக வடிவில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சென்னை - 30                                                                                                           விந்தன்
15.3.72.

====================================================================================================



ஆசீர்வாதங்களை 
விற்றுக் கொண்டிருந்தது 
ஆனை ஒன்று 

பட்டை போட்ட நெற்றியில் 
துதிக்கையை வைத்து 
வித்தை காட்டியபடி 
இடதும் வலதுமாக 
கால்களை 
மாற்றி மாற்றி வைத்து 
காண்போரைக் 
கவரும் வண்ணம் 

ஆசீர்வாதங்களை 
விற்றுக் கொண்டிருந்தது 
ஆனை ஒன்று 

பிரம்மாண்டத்தை அடக்கி 
அடிமை கொண்ட 
மதர்ப்பில் மனிதன் 
பாகனாய், பக்தனாய் 
பார்வையாளனாய் 
பக்கம் சென்று பழகினான்.

கால் சங்கிலி கணநேரம் 
விடுபட்டால் 
காணாமல் போகும் 
மொத்த கூட்டமும் 

சங்கிலி அறுக்காமல் 
ஆசீர்வாதங்களை 
விற்றுக் கொண்டிருந்தது 
ஆனை ஒன்று 

'காயினெல்லாம் 
கண்ணுல காட்டாதே' 
'பத்து ரூபா காசைப் பார்த்தாலே 
பத்திகிட்டு வருது' 
'மூக்குக்குள்ள மாட்டிகிட்டு 
மூச்சு முட்டுது' 

ஆனாலும் 
திருப்பி எல்லாம் தருவதற்கில்லை 

வாங்கி  பாகனிடம் 
கொடுத்து விடுவதிலும் 
குறைவில்லை!

நோட்டைப் 
பார்த்தால் மட்டும் 
'நோ' சொல்வதே இல்லை 

வாங்கிப் பாகனிடம் 
சேர்த்து விட்டு 
நோட்டு 
கொடுத்தோர் நெற்றியில்,
தலையில் என 
கிடைத்த இடத்தில் 
பட்டும் படாமலும்  
நொட்டென்று 
ஒத்துகிறது 
புறந்துதிக்கையால்!

இன்று 
வழக்கமான அளவா,
இல்லை 
'எக்ஸ்ட்ரா கட்டிங்'கும் சேர்த்தா 
தெரியவில்லை 
டார்கெட் முடிந்தால் 
உள்ளே சென்று 
பக்தர் கூட்டம் பார்க்காமல் 
பதவிசாய் 
ஓய்வெடுக்கலாம் 
அடுத்த ஷிஃப்ட் வரை!

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) 

1800 களில் 26 வயது வாலிபர் எப்படி இருக்கிறார் பாருங்கள்...!


ஆசிரியர் ஸ்ரீ ராஜமய்யர்

* ஸ்ரீ ராஜமய்யர் வத்தலகுண்டில் பிறந்தவர். கதையும் மதுரை ஜில்லாவைப் பற்றியதுதான்.

* விவேகானந்தராலும் பாரதியாரா லும் புகழப்பட்டவர் ஸ்ரீ ராஜ மய்யர்.

* ஸ்ரீ ராஜமய்யர் தமது 26ஆவது வயதிலேயே உயிர் நீத்தார். அதற்குள் இவர் தமிழில் எழுதிய நவீனம் 'கமலாம்பாள் சரித்திரம்' ஒன்றே.

* விவேகானந்தர் தன் அமெரிக்க விஜயத்திற்குப் பின் சென்னையில் துவக்கிய 'பிரபுத்த பாரதா' அல்லது விழித்துக்கொண்ட இந்தியா' என்ற ஆங்கிலப் பத்தி ரிகையின் முதல் ஆசிரியராக ஸ்ரீ விவேகானந்தரால் தேர்ந் தெடுக்கப்பட்ட கெளரவத்தை அடைந்தவர்.

* * ஷெல்லி, பைரன், கீட்ஸ், கம்பன் இவர்களின் கவிதைகளில் ஆழ்ந்த கலைக்கனவு. தன் கலைத் திறமை யால் சிகாகோவையும் லண்டனை யும் ஒரு கை பார்க்க வேண்டும் என்ற பெரிய எண்ணம். தன் புகழ் கடல் தாண்டி பரவவேண்டு மென்ற அவா. இவையே வத்தலகுண்டு ராஜத்தின் இளமை. பி. எல். பரீக்ஷை தேராமல் போகவே ஆசை அவலமானது. ஆளே மாறிப்போனார். கலைக் கனவுகள் வேதாந்த பித்தமாகி' விட்டது. 1893ஆம் ஆண்டில் "விவேக சிந்தாமணி' பத்திரிகை யில் தமது. சித்த நிலையையே 'கமலாம்பாள்' என்ற தொடர் கதையாக அவர் எழுதினார்.

* * அவர் அமைதியாக இறந்த காட்சி ஓர் அற்புதம். இரண்டு நாள் கழித்து பிரபுத்த பாரதததில் வெளியான "வேதாந்தம்', 'ராஜாதிராஜன்' என்னும் கட்டுரைகளுக்காக அவர்மீது ராஜத் துரோகக் குற்றம் சாட்டினார்கள். அரசாங்கம் பிடி வாரண்ட் அனுப்பியது. போலீஸார் வந்தனர். ஆனால் வாரண்டை சாதரா செய்ய ஆள் தான் இல்லை.

இப்பகுதிகள் ஸ்ரீ ஸ்வாமி சுத்தானந்த- பாரதியார் 'கல்கி'யில் எழுதிய "பெரியவாள் கதை "யிலிருந்து எடுக்கப்பட்டவை.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

நியூஸ் ரூம் 


பானுமதி வெங்கடேஸ்வரன் 

=========================





திருவனந்தபுரம்: 'அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது. வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கேரளா ஐகோர்ட் தடை விதித்தது.

-  புதுடில்லி: ஐந்தே ஐந்து பொருட்கள், நாட்டின் பணவீக்கத்தில் பிரச்னை ஏற்படுத்துவதாக, மத்திய நிதித்துறை செயலர் துஹின் காந்த பாண்டே தெரிவித்து உள்ளார்.  தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய ஐந்து பொருட்கள் தான், பணவீக்கப் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. 

-  நொய்டா: நொய்டாவில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, இடது கண்ணில் உள்ள பிரச்னைக்கு, மருத்துவர் தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

-  இறந்தவரின் கண் எங்கே; மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்: எலி மீது பழி போடும் டாக்டர்கள்.  பீஹார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது இடது கண்ணை காணவில்லை என்று உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எல்.ஐ.சி., வெளியிட்ட செய்தியில், 'இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே, முகப்பு பக்கம் ஹிந்தி மொழிக்கு மாறியுள்ளது. தற்போது, அது சரி செய்யப்பட்டு, ஆங்கிலம், ஹிந்தியில் தெரியும் அளவுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.

-  திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் ஹிந்துக்களைத் தவிர, மாற்று மதத்தினரை விருப்ப ஓய்வு பெற அல்லது வேறு துறைகளுக்கு இடமாற்றம் கோரும்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. திருமலையில் இனி ஹிந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குளிர்காலங்களில் புலிகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுவது வழக்கம். அதற்காக பெண் துணையை தேடி, ஆண் புலிகள் நீண்ட துாரம் பயணிக்கும். அந்த வகையில், மஹாராஷ்டிராவை சேர்ந்த ஜானி என்ற ஆண் புலி மஹாராஷ்டிராவில் இருந்து தெலுங்கானா காடுகள் வரை, 300 கி.மீ., துாரத்தை, 30 நாட்களில் கடந்து வந்துள்ளது.

லக்னோ : ''கும்பகர்ணன், ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக துாங்குவார் என ராமாயணத்தில் கூறப்படுவது கட்டுக்கதை. அவர் ஒரு தொழில்நுட்ப நிபுணர். நவீன இயந்திரங்களை வடிவமைக்கும் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டவர்,'' என, உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் பேசியதை எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்து வருகின்றனர்.

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்து செல்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

தெய்வானையை விட வயது அதிகம் உள்ளது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள யானை காந்திமதி. 55 வயதாகும் காந்திமதி தினமும் மாலையில் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.  தற்போது யானை துதிக்கையால் ஆசி தருவதற்கும் பக்தர்களிடம் தேங்காய், பழங்கள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகன் ராமதாஸ் மற்றும் உதவியாளர்கள் யானையை கவனித்து வருகின்றனர்.

-  லண்டன்: ஏலத்தில் இந்திய மதிப்பில் 3.4கோடிக்கு விலை போன திப்பு சுல்தானின் வாள்.

பெங்களூர்: சமீப காலத்தில் சிறுநீர்ப்பை தொற்றால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. உடலமைப்புக்கூற்றின் படி பெண்களுக்குத்தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்புவரை UTI எனப்படும் யூரினரி ட்ராக்ட் இன்ஃபெக்ஷனால் பாதிக்கப்படும் நோயாளி ஒரு மாதத்திற்கு ஒருவர் அல்லது இரண்டு பேர்கள் இருந்த இடத்தில் இப்பொழுது ஒரு வாரத்திற்கு பத்து நோயாளிகள் வருகிறார்களாம். இதற்கு காரணங்களாக போதுமான தண்ணீர் அருந்தாமல் இருப்பது, மாறிவரும் வாழ்க்கை முறை, stress, மற்றும் முறையற்ற உறவுகள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க, சி.பி.ஐ. மற்றும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்கானிப்பு குழுவை மத்திய,மாநில அரசுகள் அமைக்க வேண்டும். பள்ளி,கல்லூரிகளிலிருந்து 100 சதுர மீட்டர் சுற்றளவுக்குள் எழுதுபொருள், மருந்து, உணவுப்பொருள் கடைகளைத் தவிர்த்து வேறு எந்தக் கடைகளையும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செக்கு எண்ணெய், பனை வெல்லம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்கி, ஒரே பிராண்டில் உலகம் முழுவதும் விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

உள்நாட்டு விமானங்களில் பயணித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஞாயிறன்று(17.11.24)முதல் முறையாக ஐந்து லட்சத்தை தாண்டியது. தீபாவளியும், முகூர்த்த தினங்களும் இதன் முக்கிய காரணங்கள்.

தென்காசி அரசு மருத்துவமனையில் ரீல்ஸ் மோகத்தில் பிராங்க் செய்த பீர் முகமது, ஷேக் முகமது என்னும் இரு இளைஞர்களை கைது செய்த போலீசார் பின்னர் பொது இடங்களில் இவ்வாறு நடந்து கொள்வது தவறு என்று எச்சரித்து அவர்களை விடுதலை செய்தனர்.

-  மார்ச் 2025ல் ஹைட்ரஜன் ரயில் பயன்பாட்டுக்கு வரும். அதற்கான பெட்டிகளை தயாரிப்பதில் ICF மும்முரம். ஹைட்ரஜன் ரயில்களால் காற்று மாசுபாடு அடைவது தடுக்கப்படும்.

==================================================================================================

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()(


ஆனந்த சயனமா அபாய சயனமா?



=====================================================================================================

பொக்கிஷம்  :









89 கருத்துகள்:

  1. இன்றைக்கு யானைகளின் துயரம் பற்றி கட்டுரை மற்றும் அதே பொருளில் கவிதை.

    கேரளாவில், மத மாற்றத்தால் வேறு மதங்களில் இருப்பவர்களும், கலாச்சாரத்தை விட முடியாமல் அவர்கள் திருவிழாக்களுக்கு யானைகளை உபயோகிக்கிறார்கள். மிகுந்த சப்தத்துடன் பல யானைகளை ஊர்வலமாக அவர்கள் கூட்டி வந்தது பிரமிக்கும்படியும் யானைகள் கட்டுமீறினால் என்ன நடக்கும் என்ற யோசனையையும் தந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானைகளுக்கு அவை எவ்வளவு வேதனையை கொடுக்கும்?!!

      நீக்கு
  2. எம் ஆர் ராதா... இயல்பானவர். அவருடைய துறையால் அவர் சம்பாதித்தது ஏராளம். திரை, விளையாட்டு போன்றவற்றில் அளவுக்கு மீறிய வருமானம். அந்த வருமானத்தால் நடிக நடிகையர் தங்களை மிகப் பெரியவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம் ஆர் ராதா அப்படி நினைக்கவில்லை என்றே நினைக்கிறேன். விவகாரமானவர், ஆனால் சுவாரஸ்யமானவர். திறமையானவர்.

      நீக்கு
  3. /// திருமலையில் இனி ஹிந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.. ///

    வரவேற்கின்றேன்...

    பதிலளிநீக்கு
  4. திருக்காளத்தியிலும் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்

    பதிலளிநீக்கு
  5. மெக்கா மதீனா தலங்களில் இஸ்லாமியர் அல்லாதோர் நுழையவே முடியாது..

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. நான் ஹிந்து என்பதற்காக வாடகைக்கு இடம் தர மறுத்து விட்டார்கள் ஒரு மிசநரி வளாகத்தில்..

    இது நடந்தது 2005 ல்..

    அப்புறம் என்ன வேண்டிக் கிடக்கின்றது?..

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. / //அரசின் எவ்வளவோ முயற்சிகளின் இடையிலும் நம் நாட்டில் பணவீக்கம் ........... கூறியிருக்கிறார்.. //

      இந்தச் செய்தி இரண்டு தடவைகள் பிரசுரமாகியிருக்கிறது.

      சமீபகாலங்களில் எபியில் எடிட்டிங் என்பது இல்லவே இல்லை என்று சொல்லலாம். ஒரு செய்தி பிரசுரத்திற்காக தயார் ஆனதும் பிழைகள் இருந்தால் திருத்துவதே கிடையாது. பெயருக்கு எடிட்டர் வரிசை மட்டும் ஒன்று உண்டு. //

      கணினி தகராறு செய்ததால் காலை முதல் வரமுடியவில்லை. இப்போது சென்று பார்த்தால் எதுவும் இரண்டு முறை இடம் பெறவில்லை.

      // சமீபகாலங்களில் எபியில் எடிட்டிங் என்பது இல்லவே இல்லை என்று சொல்லலாம் //

      பிளாக்கிங்கை பல்வேறு குடும்ப வேலைகளுக்கு நடுவில் பார்ப்பதால் நேர்ந்திருக்கலாம். இனி கவனமுடன் இருக்கிறேன்.

      // ஒரு செய்தி பிரசுரத்திற்காக தயார் ஆனதும் பிழைகள் இருந்தால் திருத்துவதே கிடையாது. //

      முடிந்த வரை பார்க்கிறேன். எனினும் கண் படிப்பதை, பிழையாய் இருந்தாலும் மூளை அதை சரியாய் படித்து விடுவதால் வரும் வினை. பார்க்கிறேன்.

      //பெயருக்கு எடிட்டர் வரிசை மட்டும் ஒன்று உண்டு.//

      ஏனோ இந்தக் கோபம்!

      நீக்கு
  9. -// அரசின் எவ்வளவோ முயற்சிக்கு இடையிலும் நம் நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதற்கு தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம், மற்றும் வெள்ளி என்னும் ஐந்து பொருட்கள் காரணம் என்று மத்திய நிதித்துறை செயலர் துஹின் காந்தா பாண்டே கூறியிருக்கிறார்.//

    ஒரு பக்கம் அரசின் எவ்வளவோ முயற்சிகள். இருந்தும் இந்த ஐந்து பொருட்கள் தான் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணம் என்று மத்திய நிதித்துறை செயலர் கூறியிருக்கிறார் என்றால்.... எந்தவித்தில் இந்த ஐந்து பொருட்கள் காரணமாக இருக்க முடியும்?

    அடுத்த புதனுக்கான கேள்வி KG ஸார். குறித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Noted,

      எனினும் 

      அந்த நேரத்துக்கு எதையாவது உளறும் அரசு அதிகாரிகளுக்கே அது தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே! 

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. உள்ளே போகும்போதே யானை ஆசீர்வாதங்களை விற்றுக் கொண்டிருந்ததை பார்த்தேன்//

    ஹைஃபைவ்!!! ஸ்ரீராம். ரசித்த வரி! என் கருத்தும் இதே இதை நான் எழுதி வைத்திருக்கிறேன் ஆனா வேறு வார்த்தைகளில் ஆனைக்கு ஜிபே ஃபோன்பே கூட உண்டு தெரியுமோ!? சும்மா மனதில் தோன்றுவதை ஒரு ஃபைல் போட்டு குறிச்சுக்குவேன். (ஹிஹிஹி ஆனா அது இப்ப சும்மா உபயோகிக்காம கிடக்கு...)

    கீதா

    பதிலளிநீக்கு
  12. யானையின் கால்களில் சங்கிலி விடுபட்டால் ---- எல்லை மீறும் போது எல்லா உயிர்களுமே அப்படித்தான் 6, 5 எல்லாமே....தாண்டவம் ஆடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரளவுக்குமேல் நசுக்கப்பட்டால் புழுக்கள் கூட எதிர்க்குமே..

      நீக்கு
  13. மங்களா சூப்பரா ஆடுது, கோபம் வந்தா என்ன செய்யுமோ? தெய்வ ஆனை பண்ணியது போல்?

    என்னதான் பயிற்சி கொடுத்தாலும்...நம்ம குழந்தைகளை எடுத்துக்கலாம்..கடுமையான பயிற்சி, கண்டிப்புடன், அடித்தலுடன்....ஒரு நாள் சோர்வடையும் மனம் பொங்கும். அப்புறம் ஃபீல் பண்ணும்....நான் வேணும்னே பண்ணலைன்னு....
    பல குற்றவாளிகள் சொல்வது இதுதான்.

    அப்படித்தானே தெய்வானையின் ஃபீலிங்க் நீங்க அனுப்பின வீடியோ... பாவம் அந்த ஆனை! பாகனும் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெய்வானை ஒரு பரிதாபம். பொறுமைக்கும் உண்டு எல்லை.

      நீக்கு
  14. ​கேரளத்தில் ஆனைகள் ஆசிர்வாதம் விற்பதில்லை. குருவாயூரில் உள்ள யானைகள் எல்லாம் கோயிலை விட்டு வெகு தூரத்தில் பராமரிக்கப்படுகின்றன. சீவேலி, பூரம், மற்றும் பறையெடுப்பு போன்ற விசேஷங்களுக்கு மாத்திரம் தான் ஆனைகளை உபயோகப்படுத்துவர்.

    ராதா நாடக நடிகர். அதற்கேற்ப குரல். ஆனால் கர்வம் மிக அதிகம் கொண்டவர்.

    கவிதை ஆனை பற்றியதாக இருந்தாலும் சிறப்பு என்று சொல்வதற்கு இல்லை.

    ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம் இணையத்தில் இருந்து இறக்கியிருக்கிறேன். முதல் நாவல் என்பார்கள்.

    //ஆனால் வாரண்டை சாதரா செய்ய ஆள் தான் இல்லை.// புரியவில்லை.

    //திருவனந்தபுரம்: 'அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது. வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கேரளா ஐகோர்ட் தடை விதித்தது.//

    இந்த peta காரணம் இங்குள்ள யானைகள் எல்லாம் பாடுபடுகின்றன. வளர்ப்பு ஆனைகளை காட்டில் விடவும் முடியாது. சரி யானையே வேண்டாம் peta நீயே வளர்த்துக்கொள் என்றால் அதுவும் முடியாது. கேரளா கலாச்சாரத்தையே மாற்ற பார்க்கிறார்கள் இந்த வெளிநாட்டினர். விலங்குகளை பாதுகாக்கிறோம் என்கிறார்கள். . இவர்கள் செய்த மிருகக் கொலைகள் பற்றி கேட்டால் அவை கருணைக் கொலை என்று மழுப்பி விடுவார்கள்.

    பணவீக்கம் பற்றிய செய்தி இருமுறை வந்திருக்கிறது.

    திரை விமரிசனம் என்ற புதிய பகுதியையும் வியாழனில் சேர்த்தாயிற்றா? இனி ஒவ்வொரு வாரமும் இது தொடருமா?

    முகத்தில் அடித்தார்ப்போல் ஜோக்கும் காதல் ஜோக்கும், வாழைப்பூ ஜோக்கும் சிறப்பு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் JKC ஸார்...   கேரளாவில்தான் யானைகள் சுதந்திர போராட்டம் அதிகம்.  கேசவனையு பாடாய் படுத்தி அதற்கு பக்த கேசவன் தியாகி என்று சிலை வைத்தவர்கள்.

      ராதாவுக்கும் என் எஸ் கேவுக்கும் சில பிரத்யேக குணங்கள் உண்டு.  அது பின்னாட்களில் நடிகர் விவேக்கிடமும் இக்கிருந்தது.

      கவிதை சொல்லும் கரு!


      கமலாம்பாள் சரித்திரம்--  பொறுமையாகப் படித்ததும் சொல்லுங்கள்!

      அந்த வரி எனக்கும் புரியவில்லை.  அப்போதைய ஏதோ வார்த்தை போலும் என்று நினைத்தேன்.   

      யானை வளர்ப்பு என்பது புலிவாளைப் பிடித்த கதைதான்.  ஷிவானி, மோகன்லால் போன்ற நடிகர்களும் வீட்டில் யானை வளர்த்தார்கள்.  மொத்தத்தில் யானைகள் பாவம்.

      திரை விமர்சனம் என்பதற்காக அல்ல..  சுவாரஸ்யத்துக்காக....

      நன்றி  JKC ஸார்...

      நீக்கு
    2. குருவாயூர் கேசவன் பற்றிய உங்கள் கணிப்பிலிருந்து மாறுபடுகிறேன். கேசவனைப் பற்றி ஒரு சிறு புத்தகமே வெளியிட்டிருக்கிறார்கள்.

      யானைகள் கேரளத்தில் உபயோகத்தில் வந்தது பற்றி நிறைய எழுதலாம். தற்போது இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

      நீக்கு
  15. வட நாட்டு தம்பதி - ரொம்ப செண்டிமென்டல் போல!!

    பாவம் நேர்மையான யானை மனுஷன் எப்படி எல்லாம் பழக்கறான் பாருங்க இப்படித்தானே குரங்கு, நாய் நு

    நீங்க சொல்லிருந்தீங்கன்னு நினைக்கிறேன் எங்கியோ ஒரு கருத்துல இங்கா வெங்கட்ஜி தளத்திலா ? மறந்து போச்!!!!

    மனுஷனின் சுயநலத்துக்கு கண்டிப்பா அதுங்க ஒரு நாள் பொங்கத்தான் செய்யும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்..தெய்வானை பொங்கியது போல...

      இந்த செய்தியைப் படியுங்கள்.

      https://www.dinamalar.com/weekly/nijakathai/did-god-do-this-/3784011

      நீக்கு
    2. சுட்டி எடுத்துக்கிட்டேன் ஸ்ரீராம் அப்புறம் வாசிக்கறேன்..

      வேலை முடிச்சு கொடுக்கணுமே

      கீதா

      நீக்கு
  16. "ரூவா யார் கொடுக்கறாங்களோ, அவங்களுக்குதான் ஆசீர்வாதம்! யானை அதற்குதான் பழகி இருக்கிறது"//

    சிரித்துவிட்டேன்...இது முந்தைய கருத்தின் முதல் வரி காப்பி செய்யும் போது விட்டுப் போச்சு இதன் தொடர்ச்சிதான் முந்தைய கருத்து

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது உண்மை கீதா..   மேலே தெய்வானை பற்றிய செய்திக்குறிப்பில் சுட்டி கொடுத்துள்ளேன்.  க்ளிக் செய்து படித்துப் பாருங்களேன்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதி எண்ணங்கள் சிறப்பு. யானையை வைத்து இது ஒரு வியாபாரம். நாங்கள் கோவிலுக்குச் சென்றால், நான் இது போல் யானையின் அருகில் சென்று ஆசிர்வாதங்கள் வாங்கத் தயங்குவேன். நீங்கள் சொல்வது போல் ஒரு கட்டுப்பாடுக்குள் இருக்கும் அது தீடிரென தன் மனதை மாற்றிக் கொண்டு விட்டால் என்ன செய்வதென்ற பயம் எனக்கும் உண்டு. ஏன் இதுபோல் யாரும் யோசிப்பதில்லை என்ற எண்ணமும் எனக்குண்டு.

    அதை கடவுளாக கருதி வழிபடும் எண்ணத்தை சிறு வயதிலேயே நம் மனதில் விதைத்து விட்டதால், நானும் "விநாயக பெருமானே" எனக்கூறி ஒரு வணக்கத்தை செலுத்தி விட்டு நகரப் பார்ப்பேன். ஆயினும் அதனை விட்டு நிறைய அடி தூரம் நகர்ந்த பின்னும், "தன்னை மதிக்கவில்லை" என்ற நினைவை அதனை வளர்ப்பவர் தூண்டி விட்டு அது பின்னாடியே வந்து விடுமோ என்ப சிறு பயமும் உண்டு.

    காணொளியில் அந்த சிறுவன் முதற் கொண்டு தைரியமாக அதன் அருகிலேயே வருவதை பார்க்க சற்று வருத்தமாக உள்ளது. மேலும் இது போல் ரூபாய் நோட்டுக்களை தவிர்த்து அது வேறு எதுவும் வாங்காதென்பதும் முன்பே அறிந்ததுதான். ஆனால், இத்தனை ரூபாய் தர வேண்டுமென நிர்பந்திப்பது கொடுமை. முன்பு இருந்த காலங்கள் மாறி வருகிறது.

    கவிதை அருமை.அது என்ன செய்வதென மனதளவில் நொந்து கூறிக் கொள்ளும் இறுதி வரிகளையுடைய கவிதையும் ரசித்தேன் . பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  அதைத் தவிர்த்து நடந்தால், அலட்சியப்படுத்துகிறோம் என்று பின்னாலேயே வந்து விடுமோ என்கிற உங்கள் சிறுவயது பயம் எனக்கும் இருந்ததுண்டு!  அதாவது, திரும்பி நடக்கும்போது நம் விதியால் யானை கட்டறுத்து என் பின்னாலேயே வந்து விடும் என்று...

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. நம் பாராதியாரின் விதி வழி முடிவும் இந்த அச்சுறுத்தலுக்கு ஒரு காரணம்.

      நீக்கு
    3. கரெக்ட்.    பாரதியார் அதனால் இறக்கவில்லை என்றாலும் அந்த சம்பவம் நடந்தது நடந்ததுதானே...

      நீக்கு
  18. விசேங்கள்ல இப்படிச் சொல்வதுண்டு இல்லையா குரு ஆசிர்வாதம்னு சொல்லி நாம பைசா போடுவோம் இல்லையா!!?
    அது போல யானையின் ஆசிர்வாதம் 1001, அவங்கவங்களுக்கு முடிஞ்சதை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிக்கங்க!!!
    அது சரி காட்டுக்குப் போனா ஆசி கொடுக்குமோ? இல்லை சர்க்கஸில்?
    (இதுவும் என் ஃபைலில் ஹிஹிஹி...இங்கு போடுறேன் ஏதோ எழுத நினைச்சு யூஸ் ஆகாம கிடைக்குதே....)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்டுக்குப் போனால் அது தும்பிக்கையை தலையின் மீது வைத்து ஆசி வழங்காது.  காலை!  

      நேற்று பார்த்த ஒரு குறுங்காணொளியில் ஒரு அறிவிலி இளைஞன் கையை உயர்த்திக் காண்பித்தாள் யானை நின்று விடும் என்று ரீல்ஸ் பார்த்து முடிவு செய்து அருகே சென்று கூழாகும் காட்சி கண்டு மனம் நொந்தேன்.

      நீக்கு
    2. கஸ்டம். இது போன்ற காணொளிகளை எப்படி பார்க்கிறீர்கள்.? அன்று முழுவதும் மட்டுமின்றி, பிறகு யானைகளை
      பார்க்கும் போதெல்லாம் அந்த நினைவு வந்து மனது வேதனையாக இருக்காதா?

      நீக்கு
    3. கண்ணில் வந்து மாட்டுகிறதே... யானை என்ற உடன் ஒரு கவர்ச்சி

      நீக்கு
  19. நான் கேரளத்தில் இருந்தவரை கேரளத்து ஆனைங்க இப்படிக் காசுக்கு ஆசி கொடுப்பதில்லை என்றே தோன்றுகிறது. இப்ப எப்படின்னு தெரியலை. நான் போன கோயில்களில்...வேறு கோயில்களில் இப்படி ஆனைகள் ஆசி வழங்கும் வைபவம் உண்டான்னும் தெரியலை.

    நான் இதுவரை இப்படி வாங்கியதில்லை. யானையை ரசித்துவிட்டு வருவேன் அவ்வளவுதான். நோ சென்டிமென்ட்ஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு என்ன தோன்றுமென்றால், யானைகளை வதைப்பதில் கேரளத்துக்குதான் முதலிடம்!

      நீக்கு
  20. எம் ஆர் ராதா - வெகு சுவாரசியம் யதார்த்த பேச்சு. ரசித்தேன். இந்தப் பகுதியை சொல்றேன். மற்றபடி அவரைப் பத்தி தெரியாது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாஜி வரலாறு நூலிலும் படித்தேன்.  வெவ்வேறு துணுக்குகளிலும் படித்திருக்கிறேன்.  அவர் தொழிலில் அவர் ஒரு மேதை.

      நீக்கு
  21. கவிதையை ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம், அதுவும் கடைசி வரிகள்...சிரித்தாலும் கூடவே ஒரு சொல்லத் தெரியாத ஒரு வேதனை..

    இப்படித்தானே மனிதர்களிலும் விளிம்பு நிலையில் இருக்கும் பல குழந்தைகள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்...அல்லது கடத்தப்பட்டும் கூட...இல்லையா

    கீதா

    பதிலளிநீக்கு
  22. இராஜம் ஐய்யர் படம் - கமலாம்பாள் சரித்திரம் - டவுன்லோட் செய்தப்ப பாத்து வியந்தேன் சின்ன வயசா இவர்னு. அப்பாவுக்க்கு வாசிக்க கதைகள் தேடினப்ப ஏதேச்சையாகக் கிடைத்த பிடிஎஃப். உடனே சேமுத்து வைத்துக் கொண்டேன் எனக்கும் தான். இன்னும் வாசிக்கவில்லை. இது சேமித்து பல மாதங்கள் ஆகுது.

    இப்ப பதிவில் இதைப் பார்த்ததும் செக் பண்ணினேன் ஃபோல்டரில் இருக்கிறது, தகவல்களும் பார்த்துக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. அணிவகுப்புகள் நிகழ்ச்சிகள் - கண்டிப்பு, நான் பலமாக ஆதரிக்கிறேன். கூடவே திருச்சூர் பூரம் திருவிழாக்களிலும் பயன்படுத்துவதை தடைவிவித்தால் நல்லது.
    கொட்டுச் சத்தமும், வெடிகளும் அவற்றிற்கு மிகவும் கஷ்டம். பொதுவாக எல்லா விலங்குகளுக்குமே தான். அவற்றின் டெசிபல் நம்மை விட கூடுதல். நமக்கே சத்தத்தைப் பொறுக்க முடியாதப்ப அதுங்களுக்கு? சத்தத்தினால் பாதிப்படைபவர்கள் அதுவும் மன ரீதியாகப் பாதிப்பு அடைபவர்கள் உண்டு அது போலத்தான் இதுங்களூக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப பாவம்.   கேரளாவில் அந்த கெண்டை மேளச்சத்தம்...  இடைவிடாமல் 

      நீக்கு
  24. கண் பற்றிய இரு செய்திகள் - பாவிங்க இப்படியா செய்வாங்க இ க வுக்குப் பதிலா வ கவுக்கு!

    கண்ணுக்குக் கண்ணான கண்ணை இப்படியா சொல்லாம எடுத்துக்குவாங்க?! என்னவெல்லாம் நடக்கிறது

    ஜானிக்கு தெலுங்கானா வர வரைக்கும் காடுகள் இருந்துச்சோ? ஆமாம் பருவகாலங்களில் இப்படி பல மைல் தூரம் கடக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடுப்பான செய்தி, வியப்பான செய்தி!

      நீக்கு
    2. அமெரிக்காவுல ஸ்ரீதேவியின் அம்மாவிற்கு இப்படி தவறான சிகிச்சை செய்ததனால (வலது பக்கத்திற்குப் பதில் இடது பக்கம் என்பது போல) ஸ்ரீதேவிக்கு பத்துக்கோடி ரூபாய் நஷ்ட ஈடா கொடுத்தாங்கன்னு செய்தி வந்ததே.... நம்ம ஊர்ல பத்துப் பைசா கூட கொடுக்கமாட்டாங்க.

      நீக்கு
    3. ஆமாம்.  ஞாபகத்தில் இருக்கு...  அதே சமயம் ஒரு டென்னிஸ்  பாட்மிண்டன் பிளேயருக்குக் கூட ஆபரேஷன் நடந்தது இல்லை?

      நீக்கு
  25. ரஹ்மான் சாய்ராபானு - பிரிவது மிகவும் எதிர்பாராத ஒன்று எனக்குக் கொஞ்சம் ஆச்சரியம் அதிர்ச்சியாக இருந்தது.

    அது அவங்க தனிப்பட்ட விஷயம் அவர்களுக்குள் என்ன பிரச்சனையோ உணர்வுகளோ அது அவங்களுக்குத்தான் தெரியும். ஆனால் சோசியல் மீடியாவில் இப்படி அறிவிக்க வேண்டுமா என்ன? ஒரு வேளை பிரபலங்கள்னா சொல்லணுமோ?

    சோசியல் மீடியாவுல இப்படி ஏதோ ஒரு காரணத்துடன் சொல்வதால் எனக்குத் தோன்றுவது இதுதான் இப்படிப் பிரபலங்கள் பிரியும் போது...

    பிரியறவங்க எல்லாரும் சொல்ற ஒரு டயலாக் "எங்க ரெண்டு பேருக்குள்ள டீப் லவ் இருக்கு ஆனாலும் வருத்தத்துடன் பிரியணுமாக இருக்குன்னு!!!!

    இதுதான் எனக்குப் புரியறதில்லை. அன்பு இருந்தா ஒரே வீட்டுல கூட எதிர்பார்ப்பில்லாத தோழமையோடு இருக்கலாமே? அந்தத் தோழமை உணர்வு கூடவா விட்டுப் போய்டும்?

    நட்பு ரீதியாக? புரிதலோடு? ஒரு வயசுக்கு மேல உடலீர்ப்பு இல்லாதப்ப இந்த நட்புணர்வு கூடவா இருக்காம போய்டும்? இருந்தா சட்டப்படியா பிரியணும்னு இல்லையே...அப்படீனா என்ன எதிர்பார்ப்புகள் யோசிக்க வைக்கிறது.

    எந்த ஒரு உறவிலுமே எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லைனா நல்லது. இரண்டாவது, ரஹ்மானின் மனைவி டீவிக்கு ரொம்ப வந்தது கிடையாது ஆனால் ஏதோ ஒரு நிகழ்ச்சில அவங்களைப் பார்த்தேன் அப்ப அவங்க பேசியதை வைத்துப் பார்க்கறப்ப எப்படி எங்கு இது அறுபடுகிறது? அல்லது நீரு பூத்த நெருப்பு போலவோ?

    இத்தனை வருடங்களுக்குப் பிறகு தோழமை உணர்வோடவேனும் இருக்கலாமே அதான் டீப் லவ்னு வேற சொல்றாங்களே!! டீப் லவ்வில் தோழமை உணர்வு சேராதோ?!!!!!!

    ம்ம் புரியவில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க ரொம்ப யோசிச்சுருக்கீங்க...   அவங்க யோசிக்கலையே....

      நீக்கு
    2. ஹாஹாஹா அதுவும் சரிதான் ஆனா இதெல்லாம் எதுக்கோ!!? எழுதி வைச்சது ஸ்ரீராம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அதைக் கருத்தாக...

      கீதா

      நீக்கு
    3. அதுக்குள்ள அவங்க பிரிவுக்குக் காரணம்லாம் வெளில வந்தாச்சு. அவை, ரகுமானின் மோசமான பக்கங்களை மற்றும் அதீத மத வெறியைக் காண்பிக்குது.

      ஆனால் வாட்சப்காரங்க, ரகுமானின் அடுத்த மனைவி என்று ஒருத்தரைக் கைகாட்டறாங்க. (கிடார் வாசிப்பவரோ இல்லை ஏதோ வாசிப்பவர். அவர் நேற்றுத்தான் அவர் கணவரை விட்டுப் பிரிந்தாராம்). இந்த அக்கப்போரெல்லாம் யூடியூப் ஃபேக்டரிலேர்ந்து வருது.

      நீக்கு
    4. நானும் அதை எல்லாம் பார்த்தேன். அவர் மதவெறி பற்றி வாலி கூட சொல்லி இருந்தார்.

      'காலையில் எழுந்ததும் கைதொழும் தேவதை அம்மா' என்ற பாடலில் 'கைதொழும் தெய்வம் என் அம்மா' என்று எழுதி இருந்தாராம் வாலி.  ரஹ்மான் போன் செய்து அவரைப் பொறுத்தவரை தெய்வம் என்றால் அது ஆண்டவர்தான்   மற்றவர்களை எல்லாம் தெய்வம் என்று சொல்ல முடியாது என்று கூறி வார்த்தையை மாற்றி எழுதி வாங்கினாராம்.

      நீக்கு
  26. எங்கெங்கும் ஆனையடா!!!! ஆனை பற்றிய செய்திகள் இன்று!!! காந்திமதி ஆமாம் வயசாச்சு அதோட ஆரோக்கியம் முக்கியமில்லையா?

    விலை உயரக் காரணம் 5 பொருட்க்கள் செய்தி ரெண்டு முறை வந்திருக்கிறதே

    பிராங்க் செய்ய டிவி க்காரங்களுக்கு மட்டும் அனுமதி உண்டோ?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொன்றாய், ஒவ்வொன்றாய் யானைச் செய்திகள் சேர்ந்து விட்டது!

      நீக்கு
  27. அமரன் காட்சிகளில் இந்த பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ காட்சி பார்த்தேன் உங்கள் வரிகளை டிட்டோ செய்கிறேன். செம நடிப்பு இந்த சாய்பல்லவி. கண்ணுல உணர்ச்சிகளைக் கொட்டுறாங்க!

    நடிப்பு ராட்சசி! சில சீன்ஸ் வைச்சு சொல்லறேன். சி கா வின் சீன் பார்த்தேனே ஒன்று ஒரு டயலாக் ஹஸ்கி வாய்ஸில். ஆனால் டயலாக்குக்குத் தேவையான உணர்ச்சி முகத்தில் இல்லை...சும்மா வாயசைப்பது போல இருந்துச்சு!

    சாய் பல்லவி இந்துரெபேக்காவுடன் பேசி பழகி அவரது உடல் மொழிகளைக் கவனித்ததாகச் சொல்லியிருந்தார். நானும் சில காணொளிகள் பார்த்தேன். ரொம்ப மெச்சூர்டாகப் பேசுகிறார். எனக்குப் பிடித்த இரு விஷயங்கள் அவர் சொல்லியிருந்தது, உடலைக் காட்டித்தான் நடிக்கணும்னு இல்லை கேரக்டர் தான் முக்கியம்னு, அது போல முன்னணி நடிகை ரேசில் நம்பிக்கை இல்லைன்னும் சொல்லியிருந்தது பிடித்திருந்தது.

    சாய்பல்லவி நன்றாகப் பாடுகிறார், ஸ்ரீராம் சுருதி சுத்தமாக மிகவும் நன்றாகப் பாடுகிறார்! அந்தக் காணொளியும் பார்த்தேன் மலையாள சானலில் பேட்டியில்

    ஆன்மீக நாட்டமும் உள்ளவர். நிறைய வாசிக்கிறார். அவர் ஒரு முறை ஃபளைட்டில் சாய்பல்லவி தியானம் செய்ததைப் பார்த்த டைரக்டர் லிங்கு சாமி ஃப்ளைடிலிருந்து இறங்கியதும் சாய்பல்லவி அவரை பார்த்து விசாரித்ததும் அவர் தியானம்ல ஆர்வம் உடையவரான்னு லிங்குசாமி கேட்க சாய்பல்லவி ஆமாம் ஆனால் சரியா அமையமாட்டேங்குதுன்னு சொல்லிட அவருக்கு ஒரு ஆன்மீகப் புத்தகம் விதியை வடிவமைத்தல்னு புத்தகம் வாசிக்கச் சொல்லியிருந்திருக்கிறார். தன்னிடக் கையில் இல்லை கொடுக்க என்று சொல்லி. அடுத்த முறை ஒரு 4 நாள் கழிச்சு அதே ஃப்ளைட்டில் பார்த்தப்ப அந்த புத்தகம் சாய்பல்லவி கையில் இருந்ததாம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /சாய்பல்லவி தியானம் செய்ததைப் பார்த்த // தியானம் செய்தாரா இல்லை ஜொள் ரசிகர்களைத் தவிர்க்க கண்ணை மூடிக்கொண்டாரா? (நானும் பொதுவா ஃப்ளைட்டில் செல்லும்போது...பஹ்ரைன் - துபாய், தியானத்தில் இறங்கிவிடுவேன்.)

      நீக்கு
    2. சாய் பல்லவியைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அளவு நானும் விவரம் அறிந்து வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கும் தெரியும் கீதா!

      நெல்லை..  நீங்கள் சொல்லும் தியானம் நான் வீட்டிலேயே அடிக்கடி செய்கிறேன்!

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் நிஜமாகவே தியானம் செய்வேன். ஆனா பாருங்க.... தியானத்தில் இருந்தால் ஏதோ தெரியும்பாங்க. ஆனா எனக்கு கான்சண்ட்ரேஷனே குறைவு என்பதால் ஆரம்ப நிலையில்தான் இருந்திருப்பேன் போலிருக்கிறது. ஆனால் தியானம் செய்யும் முறை அதன் பல்வேறு படிகள் (7ல் முதல் 3 வரை நான் செய்வேன்) தெரியும்

      நீக்கு
    4. ஹா... ஹா... ஹா... நான் என் தியானம் போல நினைத்து விட்டேன்! நான் உடனடியாக ஆழ்நிலை தியானத்தை அடைந்து விடுவேன்!

      நீக்கு
  28. அபாய சயனம் மாதிரி இருக்கிற்தே..

    பொக்கிஷம் புன்சிரிக்க வைத்தன. வாழைப்பூ மீண்டும் வந்திருக்கு என நினைக்கிறேன்!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...  ரிப்பீட்டா...   

      அவ்வப்போ இப்படி ஆயிடுது.. 

      இத்தனைக்கும் அந்த வாரம் வெளியிட்டதும், கலெக்ஷனுக்கு சென்று அவற்றை அழித்து விடுகிறேன் - முடிந்த வரை!

      நீக்கு
  29. யானை ஆசீர்வாதம் தடை செய்வது நல்லது விலங்குகளுக்கு இது பெரிய துன்பம் என்று சொல்லலாம்.அவற்றை அதன்வழியே வாழ்விட வேண்டும்.

    நியூஸ்ரைம் நிறைவான பல தகவல்களையும் தருகிறது நன்றி .

    ஜோக்ஸ் அனைத்தும் ரசனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  30. அச்சச்சோ யானைக் கதை படிக்க படிக்க பயமாக இருக்குது, மக்களுக்கும் அப்படி என்னதான் ஒரு நம்பிக்கையோ... ஆசீர்வாதம் வாங்குகின்றனர்.
    கதிர்காம முருகன் கோயில் யானையின் வயிற்றுக்குக் கீழாலே, கால்களுக்கு நடுவாலே 3 தடவை உள்ளே போய் வெளியே வந்தார் ஒரு சிங்கள பக்தர்.. எனக்கு தூர நின்று வீடியோ எடுத்தபோதே, அதன் கண்கள் என்னைப் பார்ப்பதுபோல பயமாக இருந்தது.

    நீங்க ஏன் ஸ்ரீராம் அவ்ளோ குட்டியா வீடியோப் போட்டிருக்கிறீங்கள், யானை வீடியோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டி வீடியோ என்றால்?  அளவிலா, நேரத்திலா?  அளவில் என்றால் மொபைல் விடியோவை பதிவேற்றும் இப்படித்தான் வருகிறது.

      கால்களுக்கிடையில் சென்று வருதல்...  யானை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது...  அவரை தேவானையிடம் பிடித்துக் கொடுங்கள்.

      நீக்கு
    2. நேரத்தைச் சொல்லவில்லை, வீடியோவை மக்ஸிமம் சைஸிலா போட்டிருக்கிறீங்கள் இங்கு?, மிகவும் சின்னதாக இருக்கு சைஸ், வீடியோ எடுக்கும்போது ஹொரிசொண்டல் ஆக பிடித்து எடுங்கோ இனிமேல்...

      நீக்கு
  31. யானைப் பாகனுக்கு 50 ரூபா கிடைக்கவிடாமல் பண்ணிட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா... எப்பூடி எல்லாம் உழைக்கிறார்கள் மக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐம்பது ரூபாய் கிடைக்காம பண்ணிட்டேனா...   ஒவ்வொரு நாளும் செம கலெக்ஷன் பார்க்கிறார்கள் பாகன்கள்.

      நீக்கு
  32. யானைக் கதையை பாடல் போல மாற்றி விட்டீங்கள்.. வைரமுத்து அங்கிள் பார்த்தால் கோபிக்கப்போகிறார்... யாரிது எனக்குப் போட்டியாகக் கிளம்பியிருப்பதென ஹா ஹா ஹா... நல்லாயிருக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லாயிருந்தது என்று நீங்கள் ரசித்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

      நீக்கு
  33. 1800... இல் 26 வயசில, எவ்ளோ ஸ்மாட்டாக நீற்றாக இருக்கிறார்...

    இன்று நியூஸ் றூம் நிறைய செய்திகளைத் தாங்கி வந்துள்ளது, நன்று.

    நான் படம் பார்க்கவில்லை, ஆனா நன்றாக இருப்பதாகத்தான் அறிஞ்சேன், நீங்கதான் சரியில்லை என்பதுபோல சொல்லுறீன் க்க ஸ்ரீராம், பொதுவில இப்போதைய எந்தப் படமும் , முழுவதும் பிடித்தமாதிரி அமைவதில்லை,...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொன்று சாய் பல்லவியின் அளகான படங்கள் எவ்ளோ இருக்க, ஏன் இப்படிப்படம் போட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

      நீக்கு
    2. // 1800... இல் 26 வயசில, எவ்ளோ ஸ்மாட்டாக நீற்றாக இருக்கிறார்... //

      :)))

      நான் அமரன் படம் நன்றாயில்லை என்று சொல்லவில்லையே...  ரசிக்க வேண்டிய அளவு ரசித்தேன்.

      நீக்கு
    3. // சாய் பல்லவியின் அளகான படங்கள் எவ்ளோ இருக்க, ஏன் இப்படிப்படம் போட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) //

      படம் பார்க்கும்போது இந்த காட்சியைப் கவனம் வைத்துப் பாருங்கள். இந்தக் காட்சியில் எவ்வளவு அழகு என்று படம் பார்க்கும்போது தெரியும்.

      இந்தக் காட்சியை கஷ்டப்பட்டு தேடிப்பிடித்து வீடியோ க்ளிப்பிலிருந்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டிருக்கிறேன்.

      நீக்கு
  34. யானை மங்களா.. எந்த அளவுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார்கள்! கைக்குழந்தை கையில் ரூபாய் நோட்டுடன்.., திரும்பத் திரும்ப முயன்று ஆசிர்வாதம் வாங்கிய தம்பதியர்.. என மக்களும் ஊக்கம் கொடுக்கிறார்கள். சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் யானை தன் பாகனையும், உறவினரையும் தாக்கியதில் அவர்கள் காலமானது அதிர்ச்சியான சம்பவம். அதைத் தொடர்ந்து அரசு கோயில் யானைகள் ஆசிர்வாதம் அளிப்பதைத் தடை செய்ய உத்திரவிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    யானையைப் பற்றிய கவிதை நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!