சனி, 9 நவம்பர், 2024

சிறு குழந்தைகளின் ஆரோக்கியம் + திறமை, செ நு வழக்கறிஞர் மற்றும் நான் படிச்ச கதை

 

எச்சரிக்கை : குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள். 

மதுரை : திண்டுக்கல் குட்டத்துப்பட்டியைச் சேர்ந்த 8 மாத பெண் குழந்தையின் நுரையீரல் இடதுபக்க மூச்சுகுழாயில் சிக்கிய விளையாடும் 'ரிமோட்' காரின் 'எல்.இ.டி., லைட்டை' மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர்.  

இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சலுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அக்., 28 மதுரை அரசு மருத்துவமனைக்கு இக்குழந்தை அனுப்பப்பட்டது. எக்ஸ்ரே பதிவில் குழந்தையின் இடதுபக்க நுரையீரலின் மூச்சுகுழாயில் ஊசிபோன்ற பொருள் இருப்பது தெரிந்ததால் சிறிய 'பிராங்கோஸ்கோப்பி' கருவி மூலம் அப்பொருள் அகற்றப்பட்டது என்றார் நுரையீரல் பிரிவு துறைத்தலைவர் பிரபாகரன்.

அவர் கூறியதாவது:  குழந்தையின் மூச்சுகுழாய் சிறிதாக இருக்கும். மயக்க மருந்துடன் 'பிராங்கோஸ்கோப்பி' கருவியை உள்ளே செலுத்துவது சிக்கலாக இருந்தது. எனவே பிரத்யேக முகக்கவச முறையில் மயக்கமருந்து கொடுக்கப்பட்டது. 

நடை பழக ஆரம்பிக்கும் குழந்தைகள்தான் ஏதாவது பொருளை எடுத்து வாயில் இடுவர். இந்த குழந்தை 8 மாதமே ஆனது என்றாலும் நுரையீரலில் அந்த பொருள் சிக்கி 2 முதல் 3 வாரங்கள் ஆகியிருக்கலாம். நல்லவேளையாக நுரையீரலுடன் ஒட்டாத நிலையில் இருந்ததால் கருவி மூலம் அப்பொருளை அகற்ற முடிந்தது. பொருளை வெளியே எடுத்தபின்பே விளையாடும் 'ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்.இ.டி. லைட்' என உறுதியானது என்றார்.  

இந்த சிகிச்சைக்கு உதவிய நுரையீரல் பிரிவு உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார், குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருப்பசாமி, ஸ்ரீனிவாசகுமார், மயக்க மருந்து நிபுணர்கள் சிவக்குமார், பிரமோத் ஆகியோரை டீன் அருள் சுந்தரேஷ் குமார் பாராட்டினார்.  டீன் கூறுகையில், ''சிறு குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை வாயில் இட்டு விழுங்கி விடுவர். அவை வயிற்றிலோ அல்லது நுரையீரல் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ளவோ வாய்ப்பு உள்ளதால் சிறு பொருட்களை விளையாட தரக்கூடாது. இருமல் மற்றும் மூச்சு திணறல் தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்,'' என்றார்.

= = = = = = = = 
ஆதிரையின்  அதிசய திறமை : 

தாரமங்கலம்: சேலம், சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்த கார்த்திக், 26. இவரது மனைவி ஈஸ்வரி, 26. இவர் குழந்தைப்பேறுக்கு, தாரமங்கலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்து, ஆதிரை என பெயர் சூட்டினர்.

குழந்தைக்கு, மூன்று மாதம் முடிந்ததும் பல்வேறு நாடுகளின் தேசியக்கொடிகளை காட்டி, ஈஸ்வரி பயிற்சி அளித்து வந்தார். தொடர் பயிற்சியால் நான்காவது மாதத்தில், 32 நாடுகளின் கொடியை, ஆதிரை சரியாக தொட்டு காட்டினார்.

32 தேசியக்கொடிகளை சரியாக காட்டி அசத்தல் உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை

இந்நிகழ்வை வீடியோவாக பதிவு செய்த ஈஸ்வரி, கடந்த அக்., 7ல், 'நோபல்' உலக சாதனை புத்தகத்துக்கு அனுப்பினார். இதை ஆராய்ந்து, 22ல் நோபல் உலக சாதனை புத்தகத்தில், ஆதிரையின் பதிவு இடம்பிடித்தது.


மேலும் ஆதிரைக்கு நோபல் உலக சாதனை சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டன. அதை, ஈஸ்வரி, அவரது குடும்பத்தினருடன் சென்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோரிடம் காட்டி மகிழ்ந்தார்.

= = = = = = = ======================================================================================

செயற்கை நுண்ணறிவு வழக்கறிஞர் : 

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பகத்தில் ஏ.ஐ., வழக்கறிஞர் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட் ஏ.ஐ.,யின் அறிவுத்திறனை பரிசோதிக்கும் வகையில் அதனுடன் கலந்துரையாடினார்.

அப்போது, ''இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா?'' என சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

அதற்கு வழக்கறிஞர் உடையுடன் கண்ணாடியுடன் காணப்பட்ட அந்த செயற்கை நுண்ணறிவு வழக்கறிஞர் அளித்த பதில்: "ஆம், இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. ஆனால், இது சுப்ரீம் கோர்ட்டால் தீர்மானிக்கப்பட்ட அரிதான வழக்குகளுக்கு மட்டுமே வழங்கப்படும். மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு மட்டுமே அத்தகைய தண்டனை வழங்கப்படுகிறது"  எனக்கூறி தலைமை நீதிபதியை ஆச்சர்யப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் சந்திரசூட் உடன், புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள சஞ்சீவ் கண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

=================

================================================================


நான் படிச்ச கதை

ஜீவி 


சகுனியின் சிரம்



இதிகாசங்கள் நம்முள் ஏற்படுத்தியிருக்கும் உள்ளக் கிளர்ச்சிகள் ஏராளம்.  அதுவும் நம் பாரத நாட்டு இதிகாசம் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு தனி பாசமே அவற்றின் மேல் நமக்குண்டு. 

துவாபர யுகத்து மகாபாரத நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட இந்தக் கதையை வாசித்த பொழுது அப்படியான உணர்வு தான் எனக்குள்ளும் ஏற்பட்டது.  உடனே இந்தக் கதையை நம் எபி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்ட பொழுது,  கதை கொஞ்சம் நீளமாக இருக்கிறதே என்ற குறுக்கு யோசனை ஒன்று. 

இருந்தாலென்ன, மகாபாரத நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட கதை என்றால் நீளத்தை ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள் என்ற ஞானோதயம் எல்லா எதிர்மறை எண்ணங்களையும்  வென்றது.

பகவான் கிருஷ்ணரையும்   சகுனியையும் எதிர் எதிர் நிறுத்தி சுவையான கதை ஒன்றைப் படைத்திருக்கிறார் ஆசிரியர் தேவகாந்தன்..  இவர் ஈழ நாட்டு தமிழர் என்பதால் ஓரிரு இடங்களில் ஈழத்தமிழ் உச்சரிப்பு வார்த்தைகள் குறுக்கிட்டாலும் வாசிப்பு சுகத்தில் அவையெல்லாம் பெருத்த எதிர்பாடாக இல்லை.  ஏனென்றால் இந்த சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் தாண்டிய மகத்தான ப்ரேமை மகாபாரத வாசிப்பில் நமக்குண்டு.

சொல்லப்போனால் காந்தாரி தான் இந்தக் கற்பனை கதையின் நாயகி.    கிருஷ்ணர், சகுனியைத் தாண்டி காந்தாரியின் சொந்த அபிலாஷைகளின் மேல் கட்டப்பட்டதாய் கதை நீள்கிறது.  மகாபாரத்தின் நீளமான சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கிடையே அந்தப் பெண்ணிற்கென்று தனிப்பட்ட ஆசை அபிலாஷைகள் இருக்காதா, என்ன? -- என்ற எழுத்தாளரின் கற்பனையின் விளைவு இந்தக் கதையாய் உருவம் கொண்டிருக்கிறது.

தன் கணவன் கண் பார்வையற்றவன் என்ற உண்மை அறியாதவளாகவே காந்தாரத்து இளவரசியான காந்தாரி திருதராஷ்டிரனுக்கு நிச்சயக்கப்பட்ட மணப்பெண்ணாய்   அஸ்தினாபுரத்து அரண்மனையில் நுழைகிறாள்.  மத்திய கூடத்தில் தன் தங்கையின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே தயக்கமாக இருக்கிறது சகுனிக்கு. இதற்கு அப்புறம் நடப்பவை தான் இக்கதையின் ஜீவனான பகுதிகள். 

காந்தாரியின் நெருக்கமான தோழி சுகர்மாவை மறக்காமல் கதை நிகழ்வின் முக்கிய பாத்திரப் படைப்பாய் ஆசிரியர் உலாவ விட்டிருக்கிறார். அர்ஜுனன்பீஷ்மர்,  சத்தியவதிபாண்டுசஞ்சயன்துரியோதனன்யுதிர்ஷ்டிரன்,  பாஞ்சாலி,  துச்சாதனன் எல்லோரும் வாசிப்பின்  குறுக்கே வந்து போகிறார்கள்.  திருதராஷ்டிரன் இல்லாமல் காந்தாரியா?... ஆக, திருதராஷ்டிரனும் உண்டு.  இந்திர பிரஸ்தத்து அரக்கு மாளிகை பற்றிய பிரஸ்தாபமும் உண்டு.

நம் அருமை நண்பர் நெல்லைத்தமிழரின் நீண்ட யாத்திரை தொடரில் சமீபத்தில் குருஷேத்திர தலத்தின் படங்களையும் ஸ்ரீ கிருஷ்ணரின் கீதோபதேச காட்சிகளையும் பார்த்தோமல்லவா?   அந்த வாசிப்பின் நினைவுகளும் ஒருவிதத்தில் என்னில் இக்கதையைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் பங்கு வகித்தது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

எழுத்தாள அன்பர்  தேவகாந்தனின்  இந்தக் கதைக்கான சுட்டி  இதோ.  வாசித்து மகிழுங்கள்.


சிறுகதைகள்.காமிற்கு நன்றி.
= = = = = = = = =

15 கருத்துகள்:

  1. ​ஆசிரியர் தேவகாந்தனின் புனைவை நா ப கதையாக ஜீவி சார் அறிமுகப்படுத்தி விமரிசித்திருக்கிறார். நன்றி.

    "சகுனியின் சிரம்" என்ற தலைப்பு சொல்லப்படும் கதைக்கு (சரித்திரத்திற்கு?) ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருக்கிறது. சகுனியின் திட்டம், அல்லது சகுனியின் மூளை, அல்லது சகுனியின் சூழ்ச்சி போன்ற தலைப்புக்கள் பொருந்தலாம்.

    ஆசிரியருக்கு ஜெய மோகனின் எழுத்து நடை பிடிக்கும் என்று தோன்றுகிறது, அவரைப்போலவே வெண்முரசில் அவர் எழுதியது போலவே வாசகர்களின் பொறுமையை சோதிக்கும் நடை. ஆகவே சென்னை வாசிகள் கேட்பது போன்று "இப்ப நீ இன்னா சொல்றே?" என்று கேட்கத் தூண்டுகிறது.

    பல ஆண்டுகளாக படிப்படிப்படியாக தீட்டப்பட்டு செயல்
    ​படுத்திய சகுனி இல்லையேல் மஹாபாரதம் இல்லை என்பதில் ஐயம் இல்லை. இதைத்தான் கதையும் சொல்கிறது.

    ஈழத்தமிழர் பலரும் மஹாபாரத கதையை எழ்ப்போருக்கு ஒப்பிட்டு எழுதியுள்ளனர், ஜே கேயின் "கதை சொல்லாத கதை!" என்ற கதையும் அப்படியானது தான்.

    மேலும் கருத்துக்கள் அவ்வப்போது இடப்படும்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா, சிரம் என்பது சரிதான் அவரது மொழியில். அதைக் கதையிலும் இரு இடங்களில் சொல்கிறார் அதாவது சகுனியின் எண்ணங்களை மூலையை துரியோதனனிடம் இறக்கி வைத்தான் சகுனி என்பதால் சிரம்...என்பதை அந்த அர்த்தத்தில் தான் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

      //துரியனின் உடம்பில் சகுனியின் சிரமேறி நின்று செய்த தீவினையாகவே அவனால் கொள்ளக்கூடியதாகயிருந்தது. //

      //சகுனியின் சிரம் துரியனின் தோளில் இருக்கும்வரை அது அவசியமாகிறது. துரியன் சகுனி தலையால் யோசிப்பவன்.//

      அதாவது துரியோதனின் தலைக்குள் சகுனியின் தலை இருந்ததாக...

      கீதா

      நீக்கு
    2. ஜெயக்குமார் ஸார்,
      சகுனியின் சிரம் என்பது இடவாகுபெயராய் சகுனியின் மூளைத் திறனைக் குறிக்கிறது என்று சகோ. தி.கீதா சொல்வது உங்களுக்கு உடன்பாடாக இருக்கிறதா?
      இந்த சிறுகதையின் நாயகி காந்தாரி தான்.
      திருதனுக்கு கண்பார்வை இல்லை என்பதை அவளுக்குத் தெரிவிக்காமல் சகுனி திருமணத்திற்காக எல்லா ஏற்பாடுகளுக்கும் சம்மதம் தெரிவித்ததோடு அல்லாமல் அஸ்தினாபுர மாளிகைக்கு திருமண நிச்சயதார்த்ததிற்கு அவளையும் அழைந்து வந்து விடுகிறான். அதைத் தொடர்ந்து காந்தாரி என்ன செய்கிறாள் என்பது தான் கதையின் கரு.
      காந்தாரியை நோக்கில் அவள் பார்வையில் இதுவரை யாரும் எழுதிடாத வகையில் தேவகாந்தன் கதையை நடத்திச் சென்றிருக்கிறார். இன்னொரு தடவை வாசித்துப் பார்த்தீர்கள் என்றால் தெளிவு காண்பீர்கள்.
      ஜெமோவின் நடை வேறே. இவரின் நடையும் இவர் கதை சொன்ன விவரிப்பும் வேறே தான்.
      தங்கள் வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி.

      நிச்சயமாய்

      நீக்கு
  2. ஆதிரைக்கு பாராட்டுக்கள்
    அன்பு முத்தங்கள்

    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  3. பாசிட்டிவ் செய்திகளில் முதல், மூன்றாவது நான்காவது செய்திகளில் இடம்பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நான் படிச்ச கதை மஹாபாரதக் கதையை ஒட்டியது என்பதால் ஈர்க்கிறது வாசித்துவிட்டு வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

    சிறு குழந்தைகளை எப்போதும் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்தும். 8 மாத பெண்குழந்தை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள். நன்றிகளும் கூட.

    சிறந்த நினைவாற்றலுடன் பிறந்திருக்கும் சிறு குழந்தை ஆதிரைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    மற்ற செய்திகளில் அனைவரையும் பாராட்டுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 8 மாத பெண் குழந்தையை என வந்திருக்க வேண்டும். தட்டச்சு பிழை... மன்னிக்கவும்.

      நீக்கு
  6. மஹாபாரதக் கதையில் சகுனி பற்றி வரும் பகுதி அறிந்ததே. அவன் எண்ண ஓட்டங்கள் பற்றி இப்படியானதை வாசித்திருக்கிறேன். எங்கு ஆசிரியர் அவர் ஓட்டத்தைக் கலந்து வேறொரு வெர்ஷனை தருகிறார் பார்க்கிறேன்.

    வேலைகளுக்கு நடுவில் வாசிப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கைக்குழந்தையை காப்பாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டுகள். விளையாட்டுப் பொருட்களால் வரும் தீமைகள் இச் சம்பவம் கைக் குழந்தைகள் உள்ளோர் கவனிக்க வேண்டியது.

    ஆதிரைக்கும் அவரின் அம்மாவுக்கும் வாழ்த்துகள்.

    கதைப் பகிர்வுக்கு நன்றி சென்று படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. மஹாபாரதத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மாந்தர்கள்தான். அதனாலேயே போருக்குக் காரணகர்த்தாக்களில் சகுனி முதல் accused!!!! என்றாலும் இவர்களும் உண்டுதான். பொறாமை அதனால் விளையும் வன்மம் என்று. பழிவாங்கும் எண்ணம் காந்தாரத்திலிருந்து வந்தவர்களுக்கும் அவர்களினால் திருதிராஷ்டனின் மனதில் ஏற்கனவே இருந்ததும் தூண்டிவிடப்பட்டதுதானே.

    மஹாபாரதக் கதை நிறைய உளவியல் கருத்துகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் கொண்ட ஒன்று.

    ஆசிரியர் கதையில் புதியதாய் எதுவும் சொல்லியிருப்பது போல் தெரியவில்லை.
    நம்மில் பலரது மனதிலும், சிந்தனைகளிலும், மஹாபாரத கதாபாத்திரங்களை ஆராய்வதிலும் தோன்றுவதைத்தான் சொல்லியிருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனக்காக நிச்சயத்திற்கும் கணவன் கண்பார்வையற்றவன் என்பது தெரியாமலேயே காந்தாரி அஸ்டினாபுரத்திற்கு அழைத்து வரப்படுகிறாள்.
      அஸ்தினாபுரத்திற்கு வந்து அவள் தெரிந்து கொண்டது இன்னொன்று.
      திருதனுக்குக்கு பதில் அவன் சார்பாக பாண்டு தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறான் என்பது தான் அவள் வேதனையைக்
      கூட்டிய ஒன்று.
      ஆக, இரண்டு விதத்தில் ஏமாற்றப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் மன நிலையில் உளவியல் ரீதியாக அவள் என்ன செய்வாள் என்று பாருங்கள். காந்தாரி சுய தண்டனையாய் என் கணவனின் நிலையே இப்படி இருக்கும் பொழுது இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வை எனக்கு வேண்டாம் என்று தன் கண்ணைக் கட்டிக் கொள்கிறாள். மஹாபாரதத்தின் சிறப்பே, ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரவர் பார்வையில் எடுக்கும் நடவடிக்கைககள் சரி என்றே நமக்குத் தோன்றும், இதுவே அதன் சிறப்பு. தங்கள் வருகைக்கும் தவறாமல் வாசித்து பின்னூட்டமிட்டதிற்கும் நன்றி, சகோ.
      கதை நன்றாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே என் அபிப்ராயம்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும் நன்றாக உள்ளது. சகோதரர் ஜீவி அவர்களின் முன்னுரை கதையின் சிறப்புக்களை முன் வைக்கிறது. நல்லதொரு முன்னுரைக்கு சகோதரருக்கு நன்றி.

    கதையில் ஆசிரியரின் எழுத்தின் நடைகளும் நன்றாக உள்ளது. கிருஷ்ணரின் மன உளைச்சல்களும், சகுனியின் மன தி(ட்) டங்களும் விவரிக்கப்பட்ட இடங்கள் அருமை.

    மஹாபாரதத்தில், "சகுனி" யும், இராமாயணத்தில் "கூனி" யும் இல்லாவிடில் இந்த இதிகாசங்கள் நமக்கேது.? அதன் விளைவால் சமயங்களில் பக்குவமுறும் இல்லை, பக்குவமடையாத, மனித மனங்களை தனது கடிவாளத்தில் அடக்கி வைத்திருக்கும் இறைவனின் லீலையை என்ன சொல்ல..?

    வஞ்சத்தை இதிகாசங்களில் இவ்விருவரும் வளர்த்து நீரூற்றியதால்தான், பாவ, புண்ணிய கணக்குகளை பகவான் அறுவடை செய்து நமக்களிக்க முடிந்தது. இவ்விதம் வஞ்சத்தை விளைப்பவர்களை உண்டாக்கியவரும் அவர்தானே..! அவரும் அவரின் அந்த அறுவடை காலங்கள் எப்போதென அறிந்திருப்பாரே..! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

    நல்லதொரு கதைப்பகிர்வை தந்த ஜீவி சகோதருக்கும், முதல் கருத்துரையில் பின்னுமொரு "ஏகலைவன்" கதையை வித்தியாசமான கோணத்தில் படிக்கத் தந்த ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. தங்களது பின்னூட்டம் கருத்தாழம் மிக்கது, சகோதரி.
    நீங்கள் சொல்கிறபடியே இராமாயணத்தில் கூனியும் மஹாபாரதத்தில் சகுனியும் இல்லாவிடில் இந்த இதிகாசங்களே இல்லை தான்.
    அழகான கருத்துச் செறிவுள்ள பின்னூட்டத்தை இட்டு, கதையின் சிறப்பைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, சகோ.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!