வாசகர்கள் கேள்விகளுக்கு
" ஜீவி யின் பதில்கள் "
நெல்லைத் தமிழன்:
1. கேள்வி: வாழ்க்கையைப் பற்றிய விசால அறிவு வருவது எந்த வயதில்?
பதில்: எந்த வயதில் சேமிப்பாக வங்கிக் கணக்கில் மிக அதிகத் தொகை இருக்கிறதோ, அந்த வயதில்.
வி.அறிவு வேறே. ப.மனப்பான்மை வேறே.
2. கேள்வி: ஒன்றைக் கண்டுபிடித்து உபயோகிப்பவனா, இல்லை அதனை மார்க்கெட் செய்து விற்று கல்லாக் கட்டுபவனா. இதில் யார் புத்திசாலி?
பதில்: மார்க்கெட்டுக்கு வருவதையெல்லாம் வாங்காதவன் தான் அதிபுத்திசாலி.
3. கேள்வி: வாழ்க்கையில் நம்மைப் பற்றி நம் கடமையோடு பிணைந்திருப்பவர் களைப் பற்றிச் சிந்தித்து அதற்காக வாழ்வது நம் கடமையா, இல்லை மற்றவர்கள் பற்றிச் சிந்தித்து அவர்களுக்கு வாழ்ந்து நம் கடமையை விட்டு விடுவது நல்ல வாழ்க்கையா?
பதில்: நம் கடமையோடு பிணைந்திருப்பவர்களுக் கு வாழ்வதைத் தான் கடமையாக நீங்கள் நினைக்கும் பொழுது கேள்வியில் இந்தக் குழப்பம். ஏன்? மற்றவர்கள் பற்றி சிந்தித்து என்றால் அந்த மற்றவர்கள் யார்?யார்? அது தெரியாததால் அவர்களுக்காக வாழ்வதும் கடமையா என்று சொல்ல முடியவில்லை.
மேற்கண்ட இரண்டு Categories -யையும் ஒன்றிணைக்க முடியுமா என்றும் தெரியவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல முடியும். சென்ற தலைமுறைகளில் பலர், இதுவும் நம் கடமை என்று கருதிய தங்கள் சொந்த பந்தங்களாலேயே வளர்க்கப்பட்டு ஆளாகியிருக்கிறார்கள் என்பதனையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இதை நினைத்தாலே எனக்கு சிவாஜி கணேசன் நடித்த பழனி, தெய்வப்பிறவி போன்ற படங்கள் நினைவுக்கு வந்து மனதை உருக்கும்.
4. கேள்வி: அப்பா, அம்மா தம்தம் கடமையைச் செய்தாலும் குழந்தைகள் மனதில் அம்மா அதிக இடம் பிடிப்பதன் காரணம் என்ன?
பதில்: அப்பா, அம்மாவின் பெத்த பாசத்தை கடமை என்று கட்டம் கட்டினால்?..
அந்த அம்மா கூட எதுக்கெடுத்தாலும் 'ஒங்க அப்பா சொன்னாங்கப்பா' என்பாங்க.. (ஓரு தடவை கூட தன் புருஷன் என்ற தனக்கேயான உரிமை தலைகாட்டாது).. அயலார் கிட்டே கூட 'அவங்க அப்பா' தான்!
5. கேள்வி: சாகா வரம் பெற்ற இலக்கியம், நாவல், கவிதை என்று ஒன்று இருக்குமா?
பதில்: இருந்தவையெல்லாம் காலப்பெருவெளி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலும் அவற்றில் பல அனுபவிதவர்களின் மனதில் வாழ்கின்றன.
6. கேள்வி: வாழ்க்கையில் பணத்தை விட முக்கியமாகக் கருதும் விஷயங்கள் என்ன, என்ன? இது ஆளாளுக்கு வேறுபடுமா?
பதில்: உடல் நலன் தான் அதி முக்கியம்.. அதை பணத்தின் உதவியால் சீராக வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள் அதி புத்திசாலிகள்.
7. கேள்வி: நம் அம்மாவின் செய்முறை என்று செய்முறைகளைக் குறித்து வைத்துக் கொள்வது முக்கியமா? இல்லை உணவில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? காசை விட்டெறிந்தால் விதவித உணவு என்று கருதுவது காலத்திற்கேற்ற எண்ணமா?
பதில்: அம்மாவா? கல்யாணம் ஆனவங்களுக்கு அதுவும் தாமும் அப்பா - அம்மா ஆனவர்களுக்கு இன்னும் என்ன அம்மா, ஆட்டுக்குட்டிலாம்?.. வளர்ந்து தலையெடுத்தவர்கள் தலைமை தாங்கத் தாங்க அவர்களும் தாத்தா - பாட்டி ஆக..ஆக...
8. கேள்வி: தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இலவச உணவு சாப்பிட்டது தவிர தமிழகத்திற்காக கடந்த பத்து வருடங்களில் என்ன என்ன செய்திருக்கிறார்கள்?
பதில்: நாங்க வாடகை வீட்லே இருக்கறவங்க.. இந்த மாதிரி சமாச்சாரங்களை ஓனர்கிட்டே கேட்டுக்கங்க..
இதுக்கெலாம்தான் இங்கே இடம், இதுக்கெலாம் இல்லேன்னு நீ ள நீளமா ரூல்ஸ் வைச்சிருப்பாங்க. என்ன, அவிங்கதான் கேக்கச் சொன்னாங்களா? சரியாப் போச்சு.. வாடகை கொடுக்கறது பத்தாதாமா?..
இப்படி அண்டை அசல்லே கருத்து வேறுபாடு கொள்ளணுமா?.. 40/40 மார்க் வாங்கி பக்காவா பாஸ் பண்ணினவங்கன்னு சொல்லிடுங்க.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
9. கேள்வி: தொலைக்காட்சிகளில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள், பத்திரிகைகளில் தீபாவளி சிறப்பு மலர் ஒற்றுமை வேற்றுமைகள் என்ன?
பதில்: தொலக்காட்சிகளில் என்றால் தனிச்செலவு கிடயாது. பத்தோடு பதினொன்றாகப் பார்த்து வைக்கலாம். வெவ்வேறு சானல்களுக்குத் தாவித் தாவி வெவ்வேறு தீபாவளி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்,
பத்திரிகைகளில் என்றால், அதுக்காக தனியா துட்டு அழணும்.. (இப்போலாம் 200/-க்கு குறைஞ்சு எதுவும் இல்லே போல இருக்கு!) பக்கம் பக்கமா புரட்டலாம். எல்லாருடைய டேஸ்டுக்கும் ஏதோ ஒண்ணு இருக்கற மாதிரி பத்திரிகைக்காரங்க பார்த்துப்பாங்க! 'டே! டே! கசக்கிடாதே.. அம்மன் படம் அழகா இருக்கு! ப்ரேம் போட்டு வைச்சிக்கலாம்' என்று இந்தத் தலைமுறைகளோடு போராடலாம்! நம்மை மாதிரியே மலர் வாங்கிய மற்றவங்களோடு பகிர்கிற பண்டமாற் றில் ரூ.200/- முதலீட்டில் ரூ.2000/- வரை படித்து விட்டு படித்த விஷயத்தை வைத்து மற்ற நண்ப, நண்பிகளிடம் அரட்டை அடிக்கலாம்! மத்யமர்லே மதர்ப்பா உலா வரலாம்.. முக நூல்லே முகமில்லாமல் முகங்காட்டலாம். பதிவுலகில் கெத்தாக கொடி நாட்டலாம்.. .
அதுக்குள்ளே, உன்னைக் கண்டு நானாட, என்னைக் கண்டு நீயாடன்னு தீபாவளி பழசாகி, கார்த்திகை விளக்கு வைக்கிறதெல்லாம் புதுசாயிடும்! அப்போ கூட யார் விட்டாங்க?.. சரசரன்னு சரவிளக்குகள் படம் பிடித்துப் போடறவங்க எத்தனை இருக்காங்க.. எல்லாமே இந்த குட்டியூண்டு மன சந்தோஷத்துக்கு தாங்க..
டாக்டர் கார்த்திகேயனைத் தெரியுமா, உங்களுக்கு?.. அவர் உடல் நலனை எப்படியெல்லாம் பேணிக் காக்கலாம் என்பது பற்றி நிறைய சொல்லியிருக்காருங்க.. எங்கேயானும் அவரைப் பார்த்தா தவற விட்டுடாதீங்க.. மன சந்தோஷம் உத்தரவாதம்!
10. கேள்வி: முத்திரைகள் செய்வதின் மூலம் பல நோய்களை குண்மாக்க முடியும் என்கிறார்களே, முயன்றதுண்டா?
பதில்: முக நூல், யூ ட்யூப்களில் பார்த்துப் படித்ததுண்டு. எதுவும் என்னில் செயல்வடிவம் கொண்டதில்லை. கொஞ்சம் டைம் கொடுங்க.. அல்லாத்துக்கும் டாகடர் கார்த்திகேயன் தாங்க.. பார்த்து அல்லது கேட்டுச் சொல்றேன். அதுசரி, பரத நாட்டியமணிகளுக்கு அவர்கள் அறிந்திராமலேயே பல உடல்நல நனமைகள் கிடைத்திருக்குமோ? ஹி..ஹி..
11. கேள்வி: யார் வீரன்? யார் தீரன்? யார் சூரன்? இவைகளுக்கு பெண்பால் சொல் என்னென்ன?
பதில்: வீரன், தீரன், சூரன் -- எல்லாமே தொன்ம காலச் சொற்கள். இல்லேனா இந்த தலைப்பு பஞ்ச கால சினிமா தலைப்புகள்..
வீராங்கனை, தீர மகள், சூர மகள் என்றெல்லாம் பெண்பால் சொற்கள் கொள்லலாம். வீராங்கனை மாதிரி ஏன் தீராங்கனை, சூராங்கனை இல்லை? தெரிலைங்க.. பொழுது போகாதவங்க ஆய்வு செய்யலாம். செஞ்சா டாக்டர் பட்டம் நிச்சயம்..
எ பி பதில்கள் :
கே. சக்ரபாணி சென்னை 28:
1. விறகு அடுப்பு. கரிஅடுப்பு (கும்முட்டி) மண்ணென்னை திரிஸ்டவ் மண்ணென்னை பம்ப்ஸ்டவ் இவைகளில் சமையல் செய்வதை பார்த்திருக்கிறீர்களா? நீங்கள். உபயோகித்த அனுபவம் ஏதேனும் உண்டா?
# பார்க்கிறதென்ன ? இவை அனைத்தையும் நான் பயன்படுத்தி இருக்கிறேன். அது மட்டுமா ? " ஐயோ காஸ் சிலிண்டர் விலை 27 ரூபாயாமே ! நமக்கு எதுக்கு இந்த லக்ஸரி - மாதம் எட்டே ரூபாயில் அடுப்பு எரிகிறது " என்று மறுத்திருக்கிறேன். அன்று பிளந்த பச்சை சவுக்கு விறகில் 'சிலாம்பு' எடுத்து அடுப்பு மூட்டியிருக்கிறேன். Pre WW II ஆசாமி நான் !!
& அம்மா எல்லா அடுப்புகளிலும் சமையல் செய்து பார்த்திருக்கிறேன். நான் திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ் எல்லாவற்றிலும் சமையல் செய்துள்ளேன். விறகு அடுப்பு, கரி அடுப்பு இவைகளைப் பற்ற வைக்கும் technic எனக்குத் தெரியாது! ஆனால் கடைக்குச் சென்று விறகு வாங்கி வருவது, அடுப்புக் கரி வாங்கி வருவது எல்லாம் உண்டு. அம்மாவுக்கு முதல் பம்ப் ஸ்டவ் நான்தான் (1972) வாங்கிக் கொடுத்தேன்.
# ஒற்றை மாட்டு வண்டியில் பயணம், இரட்டை மாட்டு வண்டி பூட்டிக்கொண்டு சுமார் 20 கிமீ பயணம், சோனிக் குதிரை வாடகை வண்டியில் முன் பக்கம் அமர்ந்து ஓடும் குதிரை காலில் உராயும் அனுபவம் -- அனைத்தும் எமக்கு உண்டு.
& நாகையில் அடிக்கடி குதிரை வண்டிப் பயணம் செய்தது உண்டு.
3. அரிச்சந்திரன் பொய்யே பேசாமல் தப்பித்ததற்கு அவரது மனைவியாரின் பங்கு மகத்தானது. அரிச்சந்திரன் சாப்பிடும்போது உணவு பரிமாறிவிட்டு
'ஏங்க சாப்பாடு எப்படி இருக்கு' என்று. ஒருநாளும் கேட்டிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். சரியா?
# காசி ராஜனின் செல்வ மகள் ராணி சந்திரமதி. சமையலறைப் பக்கமே போயிருக்க மாட்டார் ! "சுவாமி ! இந்த உணவு மிகச் சுவையாக இருக்கிறது சாப்பிட்டுப் பாருங்கள்" என்று கூடச் சொல்லியிருக்க மாட்டார். காரணம் அவர்கள் எல்லாம் கணவர் சாப்பிட்ட தங்கத் தட்டில் அவருக்குப் பின் சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள்.
& அரிச்சந்திரன், சந்திரமதி இடையே ஒரு கற்பனை உரையாடல் :
ச : " சுவாமி நான் செய்த இட்டலி எப்படி இருக்கிறது? "
அரி : " உன் மூஞ்சியாட்டம் இருக்கு !"
ச : " நல்லா இல்லியா ?"
அரி : " உன் மூஞ்சி நல்லா இல்லை என்று நான் என்றாவது சொல்லியிருக்கேனா? "
= = = = = = = = =
KGG பக்கம்.
kgs நினைவுகள்.
இந்தப் பகுதியில் நான் பகிரும் kgs சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் எல்லாமே kgs அவர்களின் மகன் குமார் எனக்கு அனுப்பிய படங்கள்.
kgs அவர்களின் மிகச் சிறிய வயது ஃபோட்டோ எது என்று ஆராய்ந்தேன்.
கீழே உள்ள படத்தில் இருப்பது kgs அவர்களின் 12 (?) வயது படம்!
வலது புற ஓரத்தில் இருப்பவர் kgs. கடலூரில் ரெட்டி சத்திரத் தெரு வீட்டில் எடுக்கப்பட்ட படம். ஆண்டு அநேகமாக 1955/56 ஆக இருக்கலாம். படத்தில் உள்ள மற்றவர்கள் முறையே (இ to வ) பெரிய அண்ணன், இரண்டாவது அண்ணனின் நண்பர் கண்ணன், இரண்டாவது அண்ணன் மற்றும் kgs.
கடலூர் வீட்டில் குடியிருந்த காலத்தில் எனக்கு ஐந்து வயதுக்குக் கீழே! அதனால் அந்த வீட்டின் அமைப்பு அங்கே நிகழ்ந்த சில சம்பவங்கள் மட்டும் மங்கலாக நினைவில் உள்ளது.
அந்த வீட்டின் முற்றப் பகுதியில் ஒருநாள் kgs ஓடி வந்து லாங் ஜம்ப் செய்ததில் அவருடைய ஒரு பக்க மேல் வரிசைப் பல்லில் ஒன்று பாதி உடைந்து, இரத்தம் கொட்டியது எனக்கு நினைவு உள்ளது. அந்தப் பாதிப் பல்லுடனேயே பல நாட்கள் சமாளித்து வந்தார். 70 வயதுக்குப் பிறகுதான் பல் செட் மாட்டிக்கொண்டார்.
கடலூர் காலத்தில் எனக்கு நினைவில் உள்ள சில விஷயங்கள் :
கெடிலம் ஆறு.
பாடலீஸ்வரர் கோவில்.
சின்ன அண்ணன் படித்த கோழிமுட்டை பள்ளிக்கூடம்,
சின்ன அண்ணன் அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழாவில் பாடி நடித்த பாடல்.
சின்ன அண்ணன் - வாசலில் சுவாமி ஊர்வலம் வந்தபோது காட்டிய கற்பூரத் தட்டை - தன்னுடைய தொப்புள் பகுதியில் ("டேய் கௌதமா - இது சூடாக இதமாக இருக்கும் தெரியுமா?" என்று கேட்டபடி) வைத்துக் கொண்டுவிட்டு அலறியது. அந்த (தீச்சு)வடு அவருடைய கடைசி காலம் வரை அப்படியே இருந்தது.
ஜெயகுமார் என்று என்னுடைய சம வயது பையன் ஒருவனுடன் நான் ஓடிப் பிடித்து விளையாடியது. மேலே படத்தில் உள்ள கண்ணன் என்பவரின் தம்பி (என்று ஞாபகம்) - சத்யநாராயணா என்ற சம வயது பையனுடன் நான் விளையாடிய விளையாட்டுகள்.
அப்பாவின் பெரியம்மா (அப்பாவின் அம்மாவுக்கு அக்கா) - குப்பியம்மாள் என்னும் குப்பிப் பாட்டி. அவர் என்னை எப்போதுமே 'பட்டுப் பாப்பா' என்று அழைப்பார்! அந்தக் குப்பிப் பாட்டியின் மரணம்தான் நான் முதன் முதலில் பார்த்த நெருங்கிய சொந்தத்தின் மரணம்.
தங்கை பிறந்த போது - " இதோ உன்னுடைய தங்கை - பாரு" என்று சொல்லியபடி அக்கா என்னிடம் சொன்னபோது பார்த்த தங்கையின் சிவந்த கால்களும், ரோஜா நிற பாதங்களும் மட்டும் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளது!
= = = = = = = = = =
ஜீவியின் பதில்கள் அருமை.
பதிலளிநீக்குசொந்தபந்தங்களாலேயே வளர்க்கப்பட்டு.... அது ஒரு வசந்தகாலம். கூட்டுக்குடும்பம்... சொந்தக்கார்ர்கள் ஒற்றுமையாக இருந்த காலம். அவர் பையன் இவர்கள் வீட்டில் வளர்வது, எந்த ஊர் சென்றாலும் சொந்தக்கார்ர்கள் வீட்டில் தங்குவது, தன் மகனுக்கும் மற்றவர் மகனுக்கும் வேறுபாடு கருதாத்து, உறவுக்குள்ளேயே பெண் எடுத்துப் பெண் கொடுப்பது.... என்றெல்லாம் பழக்கங்கள் இருந்த காலம்.
பிறகு வந்த காலத்தில் பணமேபிரதானமாகப் போய்விட்டது.
நன்றி, நெல்லை. உங்கள் பதில் பார்த்து என் கண்கள் கலங்கி விட்டன. தனிப்பட்ட சொந்த நினைவுகள் வந்தது தான் காரணம்.
நீக்குகடமையோடு பிணைந்திருப்பவர்கள்..... சமூக சேவை செய்யப்போகிறவர்கள், தங்கள் திறமையை வெளிக்காட்ட (இலக்கியமோ, நடிப்போ பாட்டோ இல்லை வேறெதுவோ) வெளியில் செல்பவர்கள், குடும்பத்தைக் கவனியாது விடுவதைப் பார்க்கிறோமே... சமீபத்தில் கவிஞர் விக்ரமாதித்யன் பற்றிய செய்தி பார்த்தோமே
பதிலளிநீக்கு//ஜெயகுமார் என்று என்னுடைய சம வயது பையன் ஒருவனுடன் நான் ஓடிப் பிடித்து விளையாடியது.//
பதிலளிநீக்குஇது நான் அல்ல. ஹி ஹி. என்னுடைய அன்றைய இருப்பிடம் கெடிலம் மறுகரையில் இருந்த புதுப்பாளையத்தில் ஸ்ரீனிவாச பிள்ளை தெருவில் இருந்தது.
கேள்விகளும் பதில்களும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. குழப்பம் தான் மிஞ்சியது. குறிப்பாக எம் பி க்கள் பற்றிய பதில்.
அந்தக்கால kgs அண்ணா அனுதாபியோ. அந்த கட்சி உறுப்பினர் போல் தோளில் துண்டு போட்டிருக்கிறாரே.
பதிலளிநீக்குJayakumar