வியாழன், 7 நவம்பர், 2024

குயில் பாடும் கும்பகோணம் கோவில் கண்டேன்...

 "பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுதகலசம்

தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றதென்பது தொன்நம்பிக்கை. கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர் என அழைக்கப்படுகிறார். இவ்வரலாற்றைக் கும்பகோணத் தலபுராணம் கூறுகிறது. பிரளய காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் ஏற்பட்டது. அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாயிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல், முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு, அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாக விளங்குகின்றன"

 குடந்தையிலேயே பெரிய கோவிலான இங்கு   அது மூடப்படும் நேரம், அதாவது மதியம் பன்னிரண்டரை மணிக்குதான் சென்றோம்.  குலதெய்வம்  கோவிலிலும், திருச்சேறை கோவிலிலுமே நேரம் சென்றிருந்தது. சொல்லப்பட்டிருக்கும் கோவிலின் பெருமைகளில் பலவற்றைக் காண முடியவில்லை.  உள்ளே நுழையும்போதே அங்கு அமர்ந்திருந்த - அலுவலக ஊழியர் போல இருந்தவர் - "சீக்கிரம் ஓடுங்க..   சன்னதி சாத்தப் போறாங்க...  ஸ்வாமியை பார்க்க முடியாது என்றாலும் அம்பாளை பார்க்க முடியும்" என்று எங்களை ஓடவிட்டார்.  ஒத்துழைக்காத முழங்கால்களுடன் வேகமாக சப்பாணி நடைபோட்டு விரைந்தேன்.  

எங்கள் அதிருஷ்டம்..  ஸ்வாமி எங்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டுதான் கதவு சாத்தச் செய்தார்.  பதினாறு கால் மண்டபம், கல் நாதஸ்வரம் பெரிய தூண்கள் என்று ரசிக்க முடியாமல் மணல் மற்றும் அமிரதத்தால் ஆன லிங்கேஸ்வரரை வணங்கி தாயாரிடம் ஓடிவந்தோம்.  அங்கும் சந்நிதி மூடிக் கொண்டே இருக்க, அன்னையை பார்க்க வைத்த அருளாளரிடம் 'முகம் தெரியவில்லை..  ஆராதனை காட்டுவீர்களா?' என்று கேட்டேன்.  'முடிந்து விட்டது' என்று கூறியவர் எங்களை உள்ளே படியேறச்செய்து மிக அருகில் அம்மையை தரிசிக்க வைத்தார்.  பாக்கியம்.

பிரளயத்தில் மிதந்து வந்த அமுத கலசம் மூக்கின் வழியே வழிந்த அமிர்தம் ஆங்காங்கே வழிந்து பல்வேறு இடங்களில் லிங்க வடிவங்களாயின.  குடமூக்கு என்று அதனாலேயே பெயர்பெற்ற இந்த ஸ்தலத்தில் இந்தக் கோவிலுக்கும், சாரங்கபாணி கோவிலுக்கும் நடுவே பொற்றாமரைக் குளம் இடம் பெற்றிருக்கிறது.

ஒரு சமயம் பொற்றாமரைக்குளம் யாருக்கு சொந்தம் என்று சைவர்களுக்கு, வைணவர்களுக்கும் வாக்குவாதம் வந்ததாம்.  தீர்ப்பு சொல்ல ராகவேந்த்திரரின் குரு விஜயேந்திரர் வந்தார்.  அவர் லிங்க உருவங்களை எடுத்து குளத்தில் போடச் சொன்னார்.  கொஞ்ச நேரத்தில் அவை யாவும் ஆஞ்சநேயர் ப்ரதிமைகளாக, குளம், வைணவர்களுக்கு சொந்தம் என தீர்ப்பாயிற்றாம்.  இதைத் தொடர்ந்து விஜயேந்திரர் குடந்தையில் நிறைய இடங்களில் ஆஞ்சநேயர் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார்.

காக்கையால் தள்ளி விடப்பட்ட கும்பத்திலிருந்து வழிந்த அமிர்தம் இரண்டு இடங்களில் தெறித்து அதுதான் மகாமகக்குளம் என்றும் பொற்றாமரைக் குளம் என்று ஆனது என்றும் கூறுவர்.  

கோவிலின் காலம் ஏழாம் நூற்றாண்டு எனவும், பின்னர் சோழர்களால் 9 ம் நூற்றாண்டிலும், அப்புறம் பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசாலும் புனருத்தாரணம் செய்யப்பட்டது என்று சொல்வார்கள்.  30, 183 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது கோவில்.

கோவிலின் பிரம்மாண்டமான, அழகான கோபுரத்தைப் பார்க்க முடியாமல் பச்சை திரை கட்டி புனருத்தாரணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கோவில் சுற்று முடித்து பனிரெண்டரைக்கு கோவில் நடை சாத்தப்பட, மங்களா யானையின் அருகில் வந்தோம்.

மங்களா பாகனுடன் குறும்பு செய்து விளையாடுவாள் என்று காணொளிகள் சில பார்த்திருக்கிறேன்.  ஆனால் இப்போது பாகன் அமைதியாக அருகில் அமர்ந்து தோழருடன் பேசிக்கொண்டிருக்க, மங்களா இடைவிடாது ஆடிக் கொண்டே வசூலை கவனித்துக் கொண்டிருந்தாள்.  அதில் கவனித்த சில விஷயங்கள் பற்றி அடுத்த வாரம்!

​"இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என அழைக்கப்படுகிறார். உலகிற்கு ஆதிகாரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியதால் ஆதிகும்பேசுவரர் என்றும், நிறைந்த அமுதத்திலிருந்து உதித்ததால் அமுதேசர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்றும் காட்டுகின்றார். சிவபெருமான் வேடர் உருவத்தில் தோன்றி அமுத கும்பத்தை அம்பால் எய்தபோது கிராதமூர்த்தி என்ற (வேடர்) பெயரைப் பெற்றார். மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு, இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

இத்தலத்து இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேசுவரி, மந்திரபீட நலத்தள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறார். தம்மை அன்போடு தொழுவார்க்குத் திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்றும், சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால மந்திரபீட நலத்தள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்வதால் நோயறுக்கும் பரை என்றப் பெயரும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார். இறைவன் திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திரபீடேசுவரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து, இந்தியாவிலுள்ள சக்திபீடங்களுக்கும் முதன்மையான சக்திபீடமாகி, 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருள்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள், 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள்​"

அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த அம்பாளை அருகே சென்று தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.  

கோவில் விவரங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.




உள்ளே செல்லும் குறுகிய வழி....  தூரத்தில் தெரியும் சன்னதிக்கு  இடப்புறம் திரும்பி சற்றே நாலைந்து படிகள் மேலேற வேண்டும்.  அங்குதான் ஒருவர் எங்களை அவசரப்படுத்தினார்.  அடுத்த படம் அங்கே உள்ளே செல்லும் பிரகாரம்.

 


மூடப்பட்டுக் கொண்டிருந்த ஸ்வாமி சன்னதி...  சூரியனின் கிரணங்கள் நீல நிறமாய் உள்ளே கோடு போட்டுக் கொண்டிருந்தன. 

மேலே இரண்டாவதாக இருக்கும் படமும் கீழே முதலில் உள்ள படமும்...   ஏற்கெனவே உள்ளே  கொண்டு செல்லக் கூடாது என்று அறிவிப்புகளும் ஆட்களும் சொல்லிக் கொண்டிருக்க உள்ப்ரகாரத்தில் இதை அவசரமாக எடுத்ததில் இப்படி தெரிகிறது!  நீல நிற அறிவிப்புப் பலகை சொல்வது "
அங்கு உள்ள மேடை மேல் கால் வைத்து நிற்கக் கூடாது.  அது விஜயேந்திர குரு நின்ற, அமர்ந்த இடம்"


'சிவசிவ' என்று ஒளிரும் தங்க கோபுரம் கண்ணில் படாமல் மூடி வைத்திருக்கிறார்கள்.  குறைதான்!

வெளியிலிருந்து ஒரு க்ளிக்.  அருகே இருந்த பித்தளைக் கடையில் கருடன் பித்தளை சிலை ஒன்று கேட்டோம்.  சுண்டு விறல் அளவு உள்ள கருடன் விலை 800 ரூபாய் என்றார்கள்.  பின்வாங்கி விட்டோம்!


முதலாவது படத்தில் சிறிய தங்க நிற தேர் ஒன்று.  இரண்டாவது படம் விஜயேந்திரர் அமர்ந்திருந்த இடம்.

முதல் படம் உள்ளிருந்து வெளி கோபுரம்.  இரண்டாவது படம், யானையைத் தாண்டி உள்ளே ஸ்வாமி சன்னதி செல்லும் வழி. 

=============================================================================================

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

-  அமெரிக்காவில் 'தி நியூயார்க் டைம்ஸ்' என்ற நாளிதழ் வெளியாகி வருகிறது. பிரபல நாளிதழான இதில் குறுக்கெழுத்து புதிர் போட்டி குறித்த பகுதியும் வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளியான குறுக்கெழுத்து புதிர் பகுதியில், 'தென்னிந்திய சினிமாவின் நடிகை கிருஷ்ணன்' என கேள்வி இருந்தது. இதில் த்ரிஷா என்ற வார்த்தை பதிலாக குறிப்பிடப்பட்டிருந்தது.

-  சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களான கிறிஸ் வேணுகோபால் மற்றும் திவ்யா ஸ்ரீதர் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். 'பத்தரைமாற்று' என்கிற நெடுந்தொடரில் ஒன்றாக நடித்த போது கிறிஸ் வேணுகோபாலுக்கும் திவ்யாவுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில் கிறிஸ் வேணுகோபாலின் வயதான தோற்றத்தை வைத்து இந்த வயதில் இவருக்கு திருமணம் தேவையா என பலரும் நெகட்டிவ் ஆக கமெண்டுகள் செய்து வந்தனர்.  இதற்கு பதிலடி கொடுத்துள்ள திவ்யா, 'நாங்கள் திருமணம் செய்தால் கமெண்டுகள் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு மோசமாக வரும் என எதிர்பார்க்கவில்லை. பலர் அவரது வயதை 60 என்கின்றனர். உண்மையில் அவருக்கு வயது 49 தான். எனக்கு 40 அப்படியே அவர் வயது 60 என்றாலும் அவருடன் 40 வயதுள்ள நான் சேர்ந்து வாழ்வதில் என்ன பிரச்னை இருக்கிறது. நாங்கள் செக்ஸுக்காக திருமணம் செய்யவில்லை' என பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் வசிக்கும் ஆகாஷ் சர்மா என்பவர் அவரது தூரத்து உறவினரான பதினேழு வயது சிறுவனிடம் ரூ.70,000 கடன் வாங்கி, அதை திருப்பித் தராததோடு, அவனுடைய தொலைபேசி அழைப்புகளையும் தவிர்த்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன்(?) கூலிப்படை ஆட்கள் மூலம் ஆகாஷ் சர்மாவை கொல்வதற்கு ஏற்பாடு செய்து, தீபாவளி அன்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, அவருடன் வந்த நபர் ஆகாஷ் சர்மாவை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இடையில் வந்த அவருடைய சகோதரர் மகனும் குண்டபடிபட்டு இறந்து விட்டார். 

இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பைவிட 17% கூடுதலாக மழை பெய்துள்ளது  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: குளிர் காலத்தில் முதியோர் மற்றும் இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால் நடுங்கும் குளிரில் அவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என அரசு பொதுவா டாக்டர் ஃபரூக் அப்துல்லா கூறியிருக்கிறார்.

ஜெய்பூர்: ரத்தம்போர் புலிகள் சரணாலயத்தில் கடந்த ஒராண்டு மட்டும் 25 புலிகள்(மொத்தம் இருந்தது 75 புலிகள்) காணாமல் போயிருக்கிறதாம்.

பெங்களூர்: நெலமங்கலவில் இருந்து தசனபுரா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிய, பேருந்து தடுமாறியது, உடனே ஒட்டுனர் இருக்கையில் அமர்ந்து, பேருந்தை நிறுத்தி, பயணிகளை காப்பாற்றி இருக்கிறார் அந்த பேருந்தின் நடத்துனர் ஓபலேஷ். 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் இ-மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல். ராயபுரம் போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்ததும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, ஃப்ளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க தவறியதால் தனது வருங்கால கணவருடனான நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்வதாக ஒரு பெண் ரெடிட் தளத்தில் இட்ட பதிவு நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
================================================================================================

சிலிகான் ஷெல்ப் தளத்திலிருந்து RV எழுத்து...


ஒரு காலத்தில் நா.பா.வுக்கு இருந்த புகழை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இதை வெறும் ரசனை வேறுபாடாக என்னால் ஒதுக்கிவிட முடியவில்லை. சாஹித்ய அகடமி விருது தமிழில் பல குப்பைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் அது முக்கிய அங்கீகாரம், அதுவும் அவரது சமுதாய வீதி நாவலுக்குக் கிடைத்தது. இன்றும் அவரை ரசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று ஐம்பது வயதுக்கு மேற்பட்ட யாருக்காவது அரவிந்தன் என்றோ பூரணி என்றோ பேர் இருந்தால் அவர்கள் பெற்றோர் நா.பா.வின் எழுத்தை ரசித்திருப்பார்கள்.

என் கண்ணில் நா.பா. சாரமே இல்லாத அம்புலிமாமா புனைவுகளைத்தான் எழுதி இருக்கிறார். அதுவும் எல்லாக் கதைகளிலும் அதே  கார்ட்போர்ட் கட்அவுட் தட்டையான பாத்திரங்கள்தான் குறிஞ்சி மலரின் அரவிந்தன், பூரணி பாத்திரங்கள்தான் ஏறக்குறைய அவரது எல்லா நாவல்களிலும் வேறு வேறு பேர்களில் உலவுகிறார்கள். முக்கால்வாசி புனைவுகளில் ஒரே கதைதான். சமூக அவலங்களைக் கண்டு பொங்கும் லட்சியவாதி நாயகன். அவன் காந்தி மாதிரி பொக்கைவாயனாக இருந்துவிடக் கூடாது, அழகாக இருக்க வேண்டியது அவசியம். பாகவதர் கிராப் வைத்திருந்தால் இன்னும் விசேஷம். நாயகி முதல் பார்வையிலேயே விழுந்து விட வேண்டும். Optional ஆக நாயகன் கொஞ்சம் செருக்கோடு நடந்து கொள்வான். நாயகிக்கு இந்தச் செருக்கு எல்லாம் கிடையாது,  நாயகனின் காலில் விழுந்து கிடப்பதே அவள் வாழ்வின் நோக்கம். கையைப் பிசைந்து கொள்ளும் நம்பியார் மாதிரி சில வில்லன்கள். இந்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்திருக்கிறார்.

அதே நேரத்தில் நா.பா. இலக்கிய தாகம் உள்ளவர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தீபம் பத்திரிகையில் நல்ல எழுத்து வர வேண்டும் என்று போராடி இருக்கிறார். மணிபல்லவம் போன்ற நாவல்களை அவர் என்ன கனவு கண்டு எழுதினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தக் கனவு எப்படி முடிந்திருக்கிறது, இலக்கியம் அறிந்த ஒருவரால், லட்சியவாதியால் அம்புலிமாமா கதைகளைத்தான் எழுத முடிந்தது என்பது வாழ்க்கையின் நகைமுரண்தான்.

அவரது புனைவுகளில் எனக்கு சிறு வயதில் பிடித்திருந்தது சத்திய வெள்ளம். இன்று படித்தால் எப்படி உணர்வேனோ தெரியாது. "சிறுகதை" தொகுப்புகளில் எனக்கு அன்றும் இன்றும் பிடித்தது மூவரை வென்றான். படிக்க வேண்டும் என்று விரும்பித் தேடியது ஆத்மாவின் ராகங்கள். புத்தகம் ப்ராஜெக்ட் மதுரை தளத்தில் கிடைக்கிறது.

எனக்கு விடுதலைப் போராட்டம் பிரமிப்பூட்டும் நிகழ்வு. ஆயிரக்கணக்கானவர்களாவது லட்சியவாதிகளாக மாறினார்கள், சொத்து சுகம் எல்லாவற்றையும் விட்டு சிறை சென்றார்கள். அப்படி உதற முடியாதவர்களும் இந்தத் தியாகிகள் மீது மரியாதை வைத்திருந்தார்கள். அதை விவரிக்கும் எந்த அபுனைவும் புனைவும் என்னைக் கவர்கின்றன. படிக்கப் படிக்க நேருவும் படேலும் போஸும் ராஜாஜியும் காமராஜும் கோகலேயும் உன்னதத் தலைவர்கள்தான், ஆனால் காந்தி வாராது வந்த மாமணி என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

நா.பா. அந்த விழுமியங்களை, வழிகாட்டுதலை முழுமையாக ஏற்றுக் கொண்டவர். அவர் எழுதிய சுதந்திரப் போராட்ட நாவல் எப்படி இருக்கும், படித்துப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஒரு ஆசை. அதே நேரத்தில் நா.பா. இதையும் சலிப்பு தட்டும் விதத்தில் எழுதி இருந்தால் என்ன செய்வது என்ற பயம். அதனால் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்.

நாவல் 1930-இல் ஆரம்பிக்கிறது. மதுரையில் கல்லூரி செல்வதை நிறுத்திவிட்ட மாணவன் ராஜாராமன். நாட்டு விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற பெருவேட்கை உள்ளவன். அவனைப் போலவே நாலைந்து பேர். அவன் அடிக்கடி செல்லும் வாசகசாலைக்குப் பின்னால் ஒரு தாசி வீடு. அடுத்தது நா.பா. நாவல்களில் என்ன நடக்கும்? தாசி வீட்டுப் பெண் மதுரம்  ராஜாராமனைப் பார்த்து - இல்லை இல்லை அவன் பாதங்களைப் பார்த்து - காதல் வயப்படுகிறாள். ராஜாராமனும் அவன் தோழர்களும் சிறை செல்ல, வாசகசாலையை நடத்த, சிறை சென்றவர்களின் குடும்பத்தை நடத்த பண உதவி செய்கிறாள். ஆரம்பத் தயக்கங்களுக்குப் பிறகு ராஜாராமனுக்கும் காதல். ராஜாராமன் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ள மதுரம் ராஜாராமனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாள். சோகம் வேண்டுமே, அதனால் திருமணத்துக்கு முன்பே மதுரம் இறந்து விட, ராஜாராமன் காந்திராமனாக மாறி தேசசேவையில் தன் வாழ்வைக் கழிக்கிறான்.

என் ஆழ்மன் சாய்வினாலோ (unconscious bias) என்னவோ, எனக்கு நாவல் பிடித்திருக்கிறது. எனக்கு நாவலின் கவர்ச்சி என்பது புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கும் இந்த மாதிரி காங்கிரசின் இரண்டாம் மூன்றாம் நிலைத் தலைவர்களின் name dropping-தான். சத்தியமூர்த்திமதுரை வைத்தியநாத ஐயர்ஜார்ஜ் ஜோசஃப்டி.எஸ்.எஸ். ராஜன்காமராஜ் எல்லாரும் சிறு பாத்திரங்களாக வருகிறார்கள்.

அன்றைய வரலாற்று, அரசியல் நிகழ்வுகள் பின்புலமாக இருக்கின்றன. உப்பு சத்தியாகிரகம், 1942 சத்தியாகிரகம், விடுதலை என்று பலவும் வருகின்றன. சத்தியமூர்த்திக்கு 1937-இல் மந்திரி பதவி தரப்படாதது, ராஜாஜி-காமராஜ் கோஷ்டி சண்டைகள என்று பலவற்றில் நா.பா.வுக்கு ராஜாஜி மேல் இருந்த அதிருப்தி மெலிதாக வெளிப்படுகிறது.

என்னை எப்போதும் வசீகரிப்பது காங்கிரசின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பிரமுகர்களே. மதுரை வைத்தியநாத ஐயரும்,  ஜார்ஜ் ஜோசஃபும் என்ன எதிர்பார்த்து போராடினார்கள்? இவர்கள் ராஜாஜி, நேரு, படேல் போன்று காந்திக்கு அணுக்கமானவர்கள் அல்ல, செல்வாக்கு உள்ளூரில் மட்டும்தான். சரி இவர்களுக்காவது ஓரளவு வசதியான குடும்பப் பின்னணி இருந்தது, உள்ளூரில் செல்வாக்காவது இருந்தது. காமராஜ் போன்ற எளிய குடும்பத்தவர் என்ன நினைத்துக் கொண்டு விடுதலைப் போராட்டத்தில் குதித்தார்? ம.பொ.சி. சிறையில் இறந்திருக்க வேண்டியவர், குடிசையில் வசித்தவர், குடும்பப் பிரச்சினைகள் ஆயிரம் இருந்திருக்கும், எதற்காகப் போராடினார்? மட்டப்பாறை வெங்கடராம  ஐயரை இன்று மட்டப்பாறை கிராமத்தில் கூட யாருக்கும் நினைவிருக்காது. எதற்காகப் போராடினார்?

நாவலைப் படிக்கும்போது இந்த எண்ணம்தான் அடிமனதில் ஓடிக் கொண்டே இருந்தது. என் ஆழ்மனச் சாய்வாகவே இருந்துவிட்டுப் போகட்டும், அந்தப் பேர்களைப் படிப்பதற்காகவாவது நாவலைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

====================================================================================

உன்மீதான 
என் அபிப்ராயங்கள் 
மாறிக்கொண்டே இருக்கின்றன 
அன்று நீ தோழன்.
பிறகு காதலன் 
இப்போது கணவன் 
பேசாமல் 
தோழனாகவே 
இருந்திருக்கலாம் நீ...



என்னுடைய 
பரமபத விளையாட்டில் 
ஏணிகளைவிட 
பாம்புகளே அதிகம் 
இருக்கின்றன

================================================================================================

Life-Saving Embrace

The 1967 “Kiss of Life” photo shows linemen Randall Champion and J.D. Thompson atop a utility pole. After 4,000 volts stopped Champion’s heart, Thompson administered mouth-to-mouth resuscitation, saving his life. Drs. Peter Safar and James Elam developed this technique in the 1950s.   The need for effective emergency care had inspired them. Both Peter and James received numerous awards and honors for their contributions to medicine and emergency care. Their pioneering work revolutionized first aid, especially during cardiac arrests. This dramatic image displays the critical moment of survival and the profound impact of innovative medical techniques.


==============================================================================================

பொக்கிஷம்  :-    








.

8 கருத்துகள்:

  1. நெல்லை கனவில் வந்து நான் எழுதும் முறையில் கோயில் உலா கட்டுரை படங்களுடன் வெளியிட சொன்னாரா? அதே நடை, அதே முறை.

    நியூஸ் ரூம் செய்திகள் இல்லாமல் தவிக்கிறது.

    தோழன் காதலன் கணவன்
    மூவரும் ஒருவர் ஆனபின்
    சமயத்திற்கேற்ப
    தோழனாய்
    காதலனாய்
    கணவனாய்
    வரிப்பதே உத்தமம்.

    வாழ்க்கை என்ற பரமபத விளையாட்டில் நீங்கள் எப்போது சறுக்கினீர்கள்? இதுவரையிலும் முன்னேறி வந்த்துள்ளீர்கள் அல்லவா? பின் ஏன் இந்த சலிப்பு?

    பொக்கிஷம் பழையபடி.

    RV யாருங்க?
    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  3. அன்னை மங்களாம்பிகா உடனாகிய அமுத கும்பேசர் திருவடிகள் போற்றி... போற்றி...

    பதிலளிநீக்கு
  4. மாயிலை - மாவிலை, சதுர கிலோ மீட்டர்... சதுர மீட்டர். விக்கி தவறா தட்டச்சு தவறான்னு தெரியலை

    பதிலளிநீக்கு
  5. சிலிகான். ஷெல்ஃப்.... இறைவன் நம் எல்லோருக்கும் ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறான். அதை எப்படி வாழ்வது என்பதை நாமே முடிவு செய்கிறோம். வீட்டுச் சிந்தனையற்ற, குடும்ப உறுப்பினர்களும் சமுதாயத்தின் அங்கமே எனக் கொண்டு, நாட்டிற்காகப் போராடுவதும், போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் முன்னேற்றுவதில் அக்கறையுடன் இருப்பதும், தன் கொள்கைக்காக மற்றவர்களின் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் தான் செய்வதே சரி என்று இருப்பதும், தன் அபரிமிதமான மக்கள் சக்தியி நம்பிக்கையை வைத்துக்கொண்டு தனக்குச் சரி என்று தோன்றியதைச் செய்வதும், deserving personsஐ இருட்டடிப்பு செய்வதும்...... என்று பலவற்றையும் அந்த அந்த ஆத்மா செய்கின்றது. அதன் விளைவுகளுக்கு சகய்கைகளுக்கு அந்த ஆத்மாவே பொறுப்பு. அது சரி... செத்தபின் சிலைவைத்து மாலை போடுவதில் என்ன பிரயோசனமிருக்கிறது?

    பதிலளிநீக்கு
  6. எந்த விமர்சகரும், தான் நம்பும் கருத்து பிரதிபலித்தால் பாராட்டுவதும், தன் மன ஓட்டத்திற்குத் தகுந்தவாறு விமர்சனம் செய்வதும் எப்போதுமே நடப்பதுதான். ஆர் வி அதற்கு விதிவிலக்கல்ல

    பதிலளிநீக்கு
  7. கும்பேசுவர்ர் கோயில் பொம்மைக் கடைகளில் விலை கேட்டீர்களா? சென்னை பெங்களூர் போன்ற பெருநகரங்களில் எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. திருச்சேறை கோயில் பிரசாதம் எப்போதுமே நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!