புதன், 27 நவம்பர், 2024

நடிகைகளை நேரில் பார்த்தது உண்டா?

 

எ பி பதில்கள் 

நெல்லைத்தமிழன் : 

ஒருத்தருக்கு விவாகரத்து ஆவதை பலவித வீடியோக்கள் அனுமானங்களோடு போட்டு அதில் காசு பார்க்கும் ஊடகங்கள் அவர்கள் சொந்தக் குடும்பத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் பகிரங்கப்படுத்தி  வாசகர்களை மகிழ்விக்க முன்வருமா?

காசு பார்க்கிறார்கள் என்று ஆனதுக்கப்புறம் எதுக்கு ட்ராக் மாற்ற வேண்டும் ? காண்பவர்களை திருப்திப் படுத்துவதல்ல - காசு பண்ணுவதே நோக்கம்.

& பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வீடியோ என்றால் வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல பலர் பார்ப்பார்கள். அதைப் பற்றி நாலு பேரிடம் வம்பு பேசுவார்கள். நான் கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி பற்றி ஒரு வீடியோ எடுத்து அதைப் பொதுவில் பகிர்ந்தால் அதில் யாருக்கு என்ன ஈர்ப்பு வரும்? கூ கோ யார் என்றே தெரியாதவர்கள் அதைப் பார்க்க எந்த ஆர்வமும் காட்டமாட்டார்கள்! 

நம் தமிழக காவல்துறை கஸ்தூரி போன்றவர்களை, சவுக்கு சங்கர் போன்றவர்களை மாத்திரம் விரட்டிப் பிடிப்பதில் சூரர்களா? மற்ற முக்கியமான பிரச்சனைகளில் குற்றவாளிகளை அவர்களால் பிடிக்க முடியவில்லையே! 

காவல்துறையால் எல்லாம் முடியும்; கண்டுக்காமலும் இருக்க முடியும். எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய பலமான காரணங்கள் இருக்கும்.‌

& மேலிடத்திலிருந்து என்ன உத்தரவு வருகிறது என்பதைப் பொருத்த விஷயம் இது. 

ஸ்விக்கி போன்றவற்றின் மூலமாக ஆர்டர் செய்யும்போது, யார் தயாரிக்கிறார்கள், எங்கு தயாரிக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்ப்பீர்களா?  ஒரு தடவை சென்னையில் ஸ்விக்கி டெலிவரி ஆட்கள் கியூவில் நின்ற ஒரு சிறிய பெட்டிக்கடை போன்ற ரெஸ்டாரண்டின் நிலையைப் பார்த்ததும் இதைக் கேட்கத் தோன்றியது. 

நான் அதிகம் ஆர்டர் செய்வதில்லை. எனவே இதெல்லாம் சரி பார்க்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. வழக்கமாக அடையார் ஆனந்த பவன் பட்சணம் தவிர பெரிதாக வேறு எதுவும் ஆர்டர் செய்வதில்லை.

& swiggy app  ல பார்க்கும்போதே - எது, எந்தக் கடையிலிருந்து வேண்டும் என்கிற ஆப்ஷன் இருக்கின்றதே! நான் ஏற்கெனவே சென்று பார்த்த கடைகளை மட்டுமே செலக்ட் செய்வேன். 

 



இந்த டாக்டர்கள், ஹெல்த் ஆலோசகர்கள் சொல்கிறார்களே என்று தினமும் 10,000 ஸ்டெப்ஸ், யோகா இதெல்லாம் பண்ணறோமே.. அதனால் நிஜமாகவே பயன் உண்டா இல்லை இந்த யூ டியூபர்ஸ் எல்லோரும் டுபாகூர்களா?

நான் வழக்கமாக கொஞ்சம் மூச்சுப் பயிற்சி தினசரி சுமார் மூன்று கிலோ மீட்டர் நடை என்று பயிற்சி செய்து வருகிறேன். இதனால் என் மூச்சுப் பிரச்சினைகள் ஒரு  கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்கிறேன்.

& நடைப் பயிற்சியால் நிறைய நன்மைகள் உண்டு. நான் தினமும் காலையில் 2 கி மீ நடக்கின்றேன். 

நான் திருமணம் ஆனபிறகு செய்த தவறு... என் அம்மா செய்த உணவுகளை மாத்திரமே (அந்த காம்பினேஷனோடு) மனைவியைச் செய்யச் சொன்னது. பொதுவாக அவள் புதிதாகச் செய்யும் செய்ய முயற்சிக்கும் எதையுமே நான் சாப்பிட்டதில்லை. (அவள் பசங்களுக்காக ஏதேதோ செய்வாள்..எதையும் நான் சாப்பிட்டதில்லை, பாவ் பாஜி, புலாவ் உட்பட). மெதுவாக 25 வருடங்களுக்குப் பிறகுதான் ஒரு சில சாப்பிட ஆரம்பித்து, அடப்பாவீ.. இத்தனை வருடமா எனக்குப் பண்ணித் தந்ததில்லையே என்று கேட்டிருக்கிறேன்... அதுபோல நீங்கள் ஏதாவது தவறு செய்திருக்கிறீர்களா?

இல்லை.

& மனைவி செய்து தரும் எல்லாவற்றையும் கேள்வி கேட்காமல் அப்படியே சாப்பிட்டுவிடுவேன். நன்றாகவும்  இருக்கும்; பிரச்சனையும் ஒன்றும் வராது! 

ஒருவர் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால், அதிகாரத்தில் இல்லையென்றால், அவர்களைப் பற்றி கன்னா பின்னா என்று சொந்த வாழ்க்கையை விமர்சிப்பது நியாயமா? இந்த அட்டைக்கத்தி வீரர்களால் ஏன் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் தங்கள் தைரியத்தைக் காண்பிக்க இயலவில்லை?

அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்ப்பதில் இந்தக் காலத்தில் பெரிய ஆபத்துக்கள் இருக்கின்றன. உதாரணமாக கஞ்சா கேஸ் ஜாதியை இழித்துப் பேசியதாக குற்றப் பத்திரிகை போன்றவை.

அது மட்டுமின்றி எதிர்க் கட்சிகளை விமர்சித்தால் ஊக்கப் பணம், உதவி, பாதுகாப்பு எல்லாம் கிடைப்பதாகவும் சொல்கிறார்கள்!

கேள்வி : 

நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துபவர்களெல்லாம் நாம் இப்படி வயதாகி வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்களா இல்லை சாபம் கொடுக்கிறார்களா?

நூறாண்டு இருப்பது அதிசயத்திலும் அதிசயமாக இருந்த காலத்தில் நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துகிற பழக்கம் வந்தது.

& அதனால்தான் வாலி அன்றே எழுதினார் " நூறாண்டு காலம் வாழ்க; நோய் நொடியில்லாமல் வளர்க! " என்று. 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

திருமணமாகி எந்த வருடத்தில் விவாகரத்து செய்யலாம்? திருமணமாகி ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள் டைவர்ஸ் செய்தால் இவ்வளவு சீக்கிரமாகவா? என்கிறோம், இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டால்  இத்தனை வருடங்களுக்கு பிறகா? என்கிறோம். 

பி.கு.: விவாகரத்து செய்யக்கூடாது என்னும்  நழுவல் பதில்  வேண்டாம்.

# விரும்பி ஏற்றுக் கொண்டவருடன் பொறுமைகாட்டி, விட்டுக் கொடுத்து, புரியவைத்து வாழும் மனப்பாங்கு இல்லையானால் கூடிய விரைவில் விலகிக் கொள்வதே நல்லது.

& விவாகரத்து என்ற ஒன்றை ஏனோ என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அப்படி நினைக்கின்ற தம்பதியினர் விவாகமே செய்துகொல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது லிவிங் டுகெதர் மாதிரி லிவிங் அபார்ட் என்று கோர்ட் தலையீடு இல்லாமல் பிரிந்து வாழலாம். ( என் வீட்டில் தற்போது வேலை செய்யும் பெண்மணி - அவருடைய கணவருடன் பல வருடங்களாக பேசுவது இல்லை என்று கூறினார். ஆனால் பெண்ணுக்கு சீர் செனத்தி  எல்லாம் செய்து, அடிக்கடி அவருடைய பெண்ணைப் போய்ப் பார்த்துவிட்டு வருகிறார்! )

கே. சக்ரபாணி சென்னை 28: 

1.  சில  வருடங்களுக்கு முன்  சென்னை  தி. நகரில்  கல்யாண் ஜூவல்லரி   திறப்பு விழாவுக்கு   உலக அழகி. ஐஸ்வர்யா ராய்  அவர்கள்  வந்த போது  அவர்களை  நேரில்  பார்க்கும்  பாக்கியம்   கிடைத்தது.   இதேபோல்  தாங்கள்  உலக  அழகிகள். யாரையேனும். நேரில்  பார்க்கும்  பாக்கியம்  கிடைத்ததா.  குறைந்தது. அனுஷ்கா   தமன்னா வையேனும்   நேரில்   பார்க்கும்   அதிர்ஷ்டம். கிடைத்ததா? 

# நீங்கள் கேட்ட பின்புதான் தெரிந்தது - நான் எந்த  "அழகி" அல்லது எந்த  நடிகையையும் பார்த்ததே இல்லை என்பது.‌

& நடிகைகளை நேரில் பார்ப்பது அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நானும் தி நகரில், ஒருமுறை (1975 - 76 என்று நினைவு ) கேரளா ஜுவெல்லர்ஸ் கடையில் நகை வாங்க வந்திருந்த கே ஆர் விஜயாவை எதேச்சையாக தி நகருக்கு ஷாப்பிங் செய்யச் சென்றிருந்தபோது பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் அவருக்குப் புன்னகை அரசி என்ற பட்டம் இருந்தது என்று நினைக்கிறேன். நான் பார்த்த மற்ற நடிகைகள் என்று யோசித்துப் பார்த்தால் .. 

பழம்பெரும் நடிகை எஸ் டி சுப்புலக்ஷ்மி (நாகை பெருமாள் கோவிலில் நடந்த ஒரு சங்கீத உபன்யாசம் நிகழ்ச்சியை அவர் வழங்கினார்!)

மனோரமா - (பட்டிக்காடா பட்டணமா படத்தின் நூறாவது நாள் விழா என்று ஞாபகம் - நாங்கள் குடியிருந்த புரசவாக்கம் வீட்டின் மாடிப் பகுதியிலிருந்து பார்த்தால் அதன் கீழ்ப் பகுதியில் - நடந்தபோது, மனோரமா, சிவாஜி, எம் ஆர் ஆர் வாசு ஆகியோர் வந்திருந்தனர். (ஜயலலிதா வரவில்லை) 

வைஜயந்திமாலா (தி நகரில் ஏதோ ஒரு நடன நிகழ்வு - லெக்சர் & டெமோ நிகழ்ச்சி அவர் தொகுத்து வழங்கினார். (' இவதான் வைஜயந்திமாலாவா?' என்று ஒரு மூன்று வயது சிறுமி சப்தமாக கேட்க, அந்தச் சிறுமியை 'உஷ் ஷ் ஷ் ' என்று அடக்கிய ஒரு பாட்டி, 'இந்த வயதான காலத்தில் இப்படி குதித்து லெக்சர் / டெமோ செய்கிறாரே' என்று வியந்து பாராட்டினார்! )

(மீரா படத்தின் கதாநாயகி) எம் எஸ் சுப்புலக்ஷ்மி ( மியூசிக் அகாடமி நிகழ்ச்சிகளில் மற்றும் நண்பரின் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்) 

மகாநதி ஷோபனா (அவர் செய்த இசைக் கச்சேரி ஒன்றில். நன்றாகப் பாடினார் ) 

2. முன்பெல்லாம்   வீட்டில்   துக்கசம்பவம்  நிகழ்ந்தால் தான்   ஆண்கள்   தாடி வைத்துக்கொள்வார்கள். பெண்கள்  சற்று   தலை விரி கோலத்தில் இருப்பார்கள்.  ஆனால். இப்போது   அதுவே  ஃபேஷனாக  ஆகிவிட்டதே.  ஐயகோ. 

# உங்களுக்கு ஆட்சேபம் என்பதால் பெண்கள் தாடி வைக்க இயலாது! சரி ஆண்களாவது தலைவிரி கோலமாக இருக்கலாம்னு பார்த்தா சொட்டைதான் விஷம் மாதிரிப் பரவுகிறது.

& காலம் மாறும்போது கோலங்களும் மாறத்தான் செய்யும். என்னுடைய அப்பா அவருடைய காலத்தில் பாண்ட் அணிந்ததே இல்லை. வேட்டி சட்டை மட்டுமே! நாம் இப்போது அப்படி இருக்க முடியுமா? 

3.  நாகரீகம்  என்ற பெயரில்  இப்போது எல்லாம்  பெரும்பாலான  வீடுகளில்  ஹாலில் விலை உயர்ந்த பெரிய  பெரிய. சோபாக்களை  போட்டு   இடத்தை  அடைத்துவிடுகிறார்கள். அதில் நன்றாக சாய்ந்து  உட்காரவும் முடியாது  காலும். கீழே தரையில் வைக்கமுடியாது. உட்கார்ந்தாலும்   எழுந்திருக்க  முடியாது. என்ன  நாகரீகமோ!

நான் பார்த்தவரை சோபா அசௌகரியம் அல்ல. ஆனால் அநியாய விலை.

& என் வீட்டில் உள்ள 3 seater சோபாவில் மிகவும் சௌகரியமாக உட்காரலாம் - கால்களைக் கூட நீட்டி பின்னால் சாய்ந்து நிம்மதியாக உட்காரலாம். 

= = = = = = = = = =

KGG பக்கம் : 

kgs நினைவுகள். 

kgs வேலை பார்க்க ஆரம்பித்த நாட்களிலிருந்தே பிசினஸ் ஆர்வம் உண்டு. செலவுகள் போக, ஒரு கேபிட்டல் investment செய்யும் அளவுக்கு பணம் சேர்த்து, பிறகு ஏதேனும் ஒரு தொழில் தொடங்கி - அந்த தொழிலில் தன் திறமையைக்  காட்டி, வாழ்க்கையில் முன்னேறவேண்டும், பலருக்கும் வேலை வாய்ப்பு தருகின்ற தொழிலதிபர் ஆகவேண்டும் என்பது அவருடைய லட்சியமாக இருந்தது. 

கறவை மாடுகள் வாங்கி, பால்பண்ணை வைப்பது, தேனீ வளர்ப்பு, export business என்று பல யோசனைகளை மனதில் வைத்திருந்தார். 

அருவங்காடு தொழிற்சாலையில் வேலை பார்த்த நாட்களில் அவருடைய நண்பர்களிடமிருந்து, நண்பர்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருட்கள் வாங்க, பணம் வசூல் செய்துகொண்டு, நாகைக்கு வருவார். அந்தக் காலத்தில், பலருக்கும் imported பொருட்கள் (foreign goods) மீது, அவற்றின் தரம் காரணமாக ஒரு ஈர்ப்பு உண்டு. 

நண்பர்கள் கொடுக்கின்ற பணத்தை வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு வேண்டிய பொருட்களின் பட்டியலோடு நாகை வருவார். 

அவருடைய விடுமுறை தினங்கள் முடிந்து, ஊர் திரும்புவதற்கு ஓரிரு தினங்கள் முன்பாக, ஒரு ஞாயிற்றுக் கிழமையில், என்னையும் அழைத்துக்கொண்டு  -  அப்போது நான் JTS படித்துக் கொண்டிருந்த காலம் -  நாகூர் செல்வார். அந்தக் காலத்தில் நாகையிலிருந்து நாகூர் செல்ல, டிக்கெட் கட்டணம் 18 பைசாதான். நாகூரில்  எந்தெந்த (கள்ளக் கடத்தல்) பொருட்கள் எங்கெங்கு கிடைக்கும் என்பது அவருக்கு அத்துப்படி. சில கடை வியாபாரிகள், இவர் அடிக்கடி வருவதால், இவருக்குப் பரிச்சயமானவர்களாக ஆகிவிட்டனர். 

kgs தன்னுடைய பட்டியல்படி பொருட்களை பேரம் பேசி வாங்குவார். அவர் வாங்கும் பொருட்கள் என்னென்ன என்று சிலசமயங்கள் பார்த்திருக்கிறேன். 

Billi Carbure ball point pens. 

Hero pens. 

Singapore stationery items like pencils eraser etc.

Shaving blades. 

Shirting clothes. 

Wristwatch. 

Scent bottles. 

யார் யார் என்னென்ன பொருட்கள் கேட்டார்களோ அதன்படி வாங்கிக் கொள்வார். பிறகு தனக்குத் தேவையான சில பொருட்களையும் வாங்கிக்கொள்வார். எனக்கு ஒரு Billi Carbure ballpoint pen நிச்சயம் உண்டு! 

இந்தப்  பொருட்களை ஏன் வாங்குகிறார், இவற்றால் என்ன பயன் அவருக்கு என்று அவரிடம் கேட்டேன். 

அவர் அப்போது சொன்னது: " நண்பர்கள் ஆசைப்படும் பொருட்கள் - அதுவும் foreign பொருட்கள், என்னென்ன எங்கு, எந்த விலையில் கிடைக்கும், என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. மேலும் சிறிய பொருட்களுக்காக அவர்கள் அங்கிருந்து பயணச் செலவு செய்துகொண்டு வந்து வாங்கிச் செல்வது அவர்களுக்குக் கட்டுப்படியாகாது. நான் அவர்களுக்காக வந்து, தரமான பொருட்களை வாங்கி, அவர்களுக்குக் கொண்டுபோய் கொடுக்கிறேன். இந்த வியாபாரத்தில், அவர்களின் பொருட்களுக்கு நான் வைக்கின்ற சிறிய லாபம், என்னுடைய அருவங்காடு - நாகை - அருவங்காடு பயணச் செலவுகளை சரிக்கட்டிவிடும். ஆக, நானும் நஷ்டப்படவில்லை, அவர்களும் நஷ்டப்படவில்லை; எனக்கும் லாபம், அவர்களுக்கும் லாபம். " 

அவருடைய தியரி சரிதானே! 

= = = = = = =

18 கருத்துகள்:

  1. KGS அவர்களின் யோசனையும் வெளிநாட்டுப் பொருட்கள் வாங்கியதும் வியப்புதான். நானும் நாகப்பட்டினத்தில் 1990ல் மீன் எண்ணெய் கேப்சூல் பாக்கெட் (வெளிநாட்டுப் பொருள்) வாங்கியிருக்கிறேன். உபயோகித்தேனா என்பது நினைவுல் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. நேரில் பார்க்கும் பாக்கியம் என்ற வார்த்தைதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. பார்க்கும்போது, நேரில் பார்க்கிறோமே என்ற ஆச்சர்யம் மனதில் தோன்றுவது இயற்கை.

    சென்னையில் என் விமானத்தில் ஏற கடைசியாகப் புறப்பட்டபோது, என் அருகில் காவஸ்கர் உட்கார்ந்திருந்தார். ஃபுஜைராவில் அசாருதீன் தலைமையில் வந்திருந்த கிரிக்கெட்டர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டான் (93ல்). ஒருமுறை மும்பைக்கு பிசினெஸ் வகுப்பில் பயணித்தபோது டிஎம்எஸ்ஸும் அவர் பையனும் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது அவரிடம் பேசுவோம் என்று தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. TMS மகன் பெயர் நினைவில் இருக்கிறதா?  TMS செல்வகுமார்.  ஏனோ அவர் TMS அளவு பிரகாசிக்கவில்லை. 

      ஹிந்தியில் கிஷோர் குமார் மகனாவது பல இனிமையான பாடல்களை கொடுத்திருக்கிறார். (அமித் குமார்)

      நீக்கு
    2. அவர்கள் மும்பையில் கச்சேரிக்குப் போய்க்கொண்டிருந்தார்கள் போலிருக்கு. செல்வகுமார் அவர்கள்தாம் பாடிக்கொண்டே இருந்தார் கொஞ்சம் சன்னமான குரலில். டிஎம்எஸ்ஸிடம் பேசியிருக்கலாம், தயக்கம்.

      நீக்கு
  3. விவாகரத்து செய்தால் ஜீவனாம்சம் கொடுக்கும் பணத்துக்கு வரி கிடையாதாம். இது பணத்தைச் சேமிக்க ஒரு வழியாம். கணவன் அடையும் நட்டத்தினால் மனைவியின் சொத்து கோகாமலிருக்கவும் இது ஒரு வழியாம் (ராமராஜன், தனுஷ் இவர்கள் இதற்கு உதாரணமாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவாகரத்து எனும் சொல்லே அதிர்ச்சியாக பார்க்கப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படம் ஜீவனாம்சம்.  அந்தப் படத்தில் அது ஒரு அதிர்ச்சியாக காட்டப்படும்/ பார்க்கப்படும்.  அப்படியும் ஒரு காலம் இருந்தது!

      நீக்கு
    2. நீங்க வேற... டீக்கடைக்குச் சென்று அங்கு காபி சாப்பிட்டார் என்பதே அனாச்சாரமாக, ஊருக்கு ஒரு டீக்கடை ஒதுக்குப்புறமாக இருந்தபோது பார்க்கப்பட்டது. டீ காபி கெட்ட வழக்கங்கள் எனச் சொல்லி வளர்க்கப்பட்ட குடும்பம். கல்லூரிக் காலத்தில் சிகரெட் பிடிப்பவன் அருகில் நடந்து செல்வதே குற்றம் என்ற மனப்பான்மை. PG முடிக்கும் காலம்வரை பெரும்பாலும் பிற பெண்களிடம் பேசியதே இல்லை.சென்னைக்கு வந்த புதிதில் ஒரு பெண் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டபோது திடுக்கிட்டேன்.

      இப்போ கெட்ட வழக்கம் என்று ஒன்று கிடையாது (சமூகப் பார்வையில்), நிர்வாணமாகத் திரிவதைத் தவிர, என நினைக்கிறேன். அது ஒண்ணுதான் இந்தியாவிற்குள் இன்னும் வரவில்லை.

      நீக்கு
  4. நானும் சில வெளி நாட்டு பொருட்களை இப்படி தெரிந்தவர்களிடம் வாங்கி இருக்கிறேன். red leaf பால் பாயிண்ட் பென், ஹீரோ பேனா, டெரிலின் சட்டை துணி, சிடிசன் வாட்ச் (1970இல் 140ரூ) என்று பல பொருட்கள். வாட்ச் 18 வருடம் உழைத்தது. கடைசியாக இப்படி கள்ள சந்தையில் வாங்கியது செல் போன். 90 களில். 2400ரூ சீனா உற்பத்தி, வருடம் 1997 என்று நினைவு. அன்று BSNL மாத்திரம் தான் இருந்தது.


    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. பிறரது குடும்ப விடயங்களை அறிந்து கொள்வதில் இன்றைய சமுகத்தினருக்கு ஒருவகை மகிழ்ச்சிதான் போலும்...

    ஐஸ்வர்யா ராயை நேரில் பார்த்தது பாக்கியமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர், மேக்கப்போடு வந்திருப்பார். அதனால் பாக்கியம் என எழுதியிருக்கிறார். ஒரு வேளை மேக்கப் போடாமல் வந்திருந்தால், பயங்கரம் என எழுதியிருப்பாரோ?

      நீக்கு
  6. தமிழ் யுட்யூப் சானல்களில் மத்தவங்களை பற்றி அதுவும் பிரபலங்களின் வீட்டு விஷயங்களைத் தனிப்பட்ட விஷயங்களை அசிங்கமாகப் பேசுவது காசு பார்க்க மட்டுமே. ஆனா அதைப் பார்க்க ஒரு கும்பல் இருக்கு பாருங்க அவங்களைத்தான் சொல்லணும். ஜஸ்ட் நியூஸ் அதாவது தளங்களில் இருக்கும் இன்றைய செய்திகள் என்னன்னு பார்க்கப் போனாலே உடனே அடுத்தாப்ல இந்த மாதிரி வீடியோக்கள் நமக்கு ஹைலைட் ஆகி வந்துவிடுகின்றன.

    மக்கள் நாம முட்டாளாக இருக்கும் வரை இவர்களுக்குக் கொண்டாட்டம்தான்

    சுந்தர் பிச்சைதான் இதுக்கு ஒரு முடிவு கட்டணும். பிரபலங்கள் கேஸ் போடணும் அப்ப இவங்க அடங்குவாங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  7. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  8. முதல் கேள்விக்கான பதில்கள் நன்று.

    நெல்லையின் இரண்டாவது கேள்வி - ஹாஹாஹா கேள்விக்கான பதிலும் உங்களுக்குத் தெரியுமே நெல்லை! அதான் ஆசிரியர்களும் பதிலில் சொல்லிட்டாங்களே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீன்னா, பணம் கிடைக்கிறது, அது என் குடும்பத்தின் பசியைப் போக்கும் என்று சொல்லி ஒருவன் தவறு செய்தால், அது நியாயமாகிவிடாது?

      நீக்கு
  9. தாங்கள் பார்த்த நடிகைகளின்
    பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறதே. தங்களை ஊக்கு
    விக்கவே இந்த கேள்வியை
    கேட்டேன்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!