செவ்வாய், 19 நவம்பர், 2024

​எ.போ.கதை : பொக்கிஷம் : பரதேசி வந்தான் - தி. ஜானகிராமன்

 கதைக்குள் நுழைவதற்கு முன்...

இரண்டு மூன்று நாட்களுக்கு முன் பாரதி பாஸ்கர் மேடைப்பேச்சு ஒன்றை என் சகோதரர் குடும்பக் குழுவில் பகிர்ந்தார்.  அதில் பாரதி பாஸ்கர்  தி. ஜாவின் இந்தக் கதையைப் பற்றி சிலாகித்திருந்தார்.

அதைப் பற்றி எங்கள் மாமா - எங்கள் பிளாக் ஆசிரியர்களில் ஒருவர் - KGY- குழுவில் பதில் சொன்னபோது கதையின் வீர்யமான பகுதியை பாரதி பாஸ்கர் சரியாக ப்ரசண்ட் செய்யவில்லை என்றார்.  மேலும் KGY,  தி. ஜாவின் மிக அற்புதமான கதைகளில் இது ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார்.  அவர். தி, ஜானகிராமனின் பரம ரசிகர்.

திலகவதி ஐ பி எஸ் 'முத்துக்கள் பத்து என்று சில புத்தகங்கங்களை பதிப்பித்திருந்தார்.  சிறிய புத்தகங்கள்.  அதில் அந்தக் கால புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை பகிர்ந்திருந்தார்.  அதில் இதுவும் ஒன்று.  என்னிடம் அவரது இந்தப் புத்தகங்கள் நான்கைந்து இருக்கின்றன. 

அதிலிருந்து இதை எடுத்து இன்றைய பொக்கிஷம் பகுதியில் பகிர்கிறேன்.

இப்போது, இதில், 

கடந்த சனிக்கிழமை நான் படிச்ச கதை பகுதியின் பின்னூட்டத்தில் ஜீவி ஸார் சில கருத்துகளை சொல்லி இருந்தார்.  அதற்கு நானும் பதில் அளித்திருந்தேன்.  திருமதி கீதா ரெங்கனும் சில கருத்துகளை சொல்லி இருந்தார்.  ஏனோ ஜீவி சார் அந்த உரையாடலில் மேற்கொண்டு பங்குபெறாமல் ஒதுங்கி விட்டார்.

இப்போது நான் சொல்ல வருவது,

இந்தக் கதையைப் படித்து இதை ஒரு சிலாகிப்பாக, ரசிக்கும் இடங்களையோ, இந்த இடம் இப்படி வந்திருக்க வேண்டாம் என்பதற்காகவோ அலசி எனக்கு மெயிலில் அனுப்புங்கள்.  அதை நான் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் மெயின் பகுதியாகவோ, அல்லது 'நான் படிச்ச கதை'யோடு இணைப்பாகவோ பகிர்கிறேன்...  தயவு செய்து அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

=======================================================================


பரதேசி வந்தான்

தி. ஜானகிராமன் 

வக்கீல் அண்ணா பந்தியை ஒரு நோட்டம் விட்டார்.

அடியேன் அவருக்கு நேர்த் தம்பி அல்ல. ஒன்று விட்ட தம்பிகூட அல்ல. அவருடைய மேதா விலாசத்தைக் கண்டு உலகமே அவரை, 'அண்ணா அண்ணா!" என்று வாய்நிறைய அழைத்தது. அந்த மாதிரித் தம்பிதான் நான். ஒரே தெரு, எதிர்த்த வீடு-இந்த உறவைத் தவிர வேறொன்றும் இல்லை. அதே காரணத்தால் உலகத்தாரைவிட நான் மிக மிக நெருங்கிய தம்பி. கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று ஓடும் தம்பி, ஈஸன் ஹோவர் போட்டி போடுவதிலிருந்து இளம் வித்வான் கச்சேரி வரையில் அவருடைய அபிப்பிராயத்தை எல்லோருக்கும் முன்னால் முதல் முதலாக, அந்தரங்கத்தில் கேட்கும் அபிமானத் தம்பி.

அண்ணா பந்தியைச் சாரி சாரியாக நோட்டம் விட்டார். ஜூனியர் பாப்பா பந்துலு, பூதகணங்களாகச் சேவைக்குக் காத்துக் கிடக்கும் அண்டை வீட்டு இளைஞர்கள், எதிர்த்த வீட்டு நான், இரண்டு குமாஸ்தாக்கள்-எல்லோரும் செய்த சாப்பாடு ஏற்பாடு சரியாக இருக்கிறதா என்று அந்த ராஜாளி நோட்டம் ஆராய்ந்து கொண்டி ருந்தது. அவர் திருப்தி அடைய வேண்டுமே என்று எல்லோருக்கும் கவலைதான். ஜூனியர் பாப்பா, வேற்றுத் தெருவுக்குள் கால் வைத்துவிட்ட நாயைப்போல ஒண்டி ஒடுங்கி நடந்து கொண்டிருந்தார். அண்ணாவின் பார்வை கம்பீரமாக ஒவ்வொரு நபரையும் அவருடைய அந்தஸ்தையும் எடை போட்டு, 'சரி,ம், சரி' என்று ஆமோதம் செய்து கொண்டு வந்தது.

அண்ணா கோர்ட்டில் வக்கீல். வாழ்க்கையில் நீதிபதி.

கொலையும் பறியும் புரிந்துவிட்டு, குற்றுயிரும் குலை உயிருமாகச் சட்டத்தின் வாயில் மாட்டிக்கொண்டு இழுத்துக் கொண்டிருந்தவர்களை வெளியே பிடுங்கி எறிந்து அபயம் தந்திருக்கிறார். தீவட்டிக் கொள்ளையோ, கொலை பாதகமோ-எதுவாயிருந்தால் என்ன? அண்ணா திவலை பறக்க, நீர்வீழ்ச்சியைப் போல வாதாடும்போது நீதிபதியின் தனித் தன்மை, நடுநிலைமை எல்லாம் அமுங்கி ஆற்றோடு போய்விடும். இப்பேர்ப்பட்ட அண்ணா, வாழ்க்கையில் நீதிபதி . வாழ்க்கையில் எந்தத் தப்பையும்- குற்றம் கிடக்கட்டும் - தவற்றைக்கூட - சின்னத் தப்பைக்கூட லேசில் விடமாட்டார்.  சாணக்கிய சாகசம் செய்து வேரை எற்றி,நீறாக்கி, வெற்றி அடைந்த பின்புதான் அமைதி காணுவார்.

அண்ணாவின் பிள்ளைக்கு முதல் நாளைக்கு முதல் நாள் கல்யாணம் ஆகிவிட்டது. மறுநாள் இரவு எல்லோரும் திரும்பி விட்டார்கள். மூன்றாம் நாள் காலையில் கிருகப் பிரவேசம் மணப் பெண்ணை அழைத்தாகி விட்டது. கோலாகலமாகத்தான் எல்லாம் நடந்தது. ஒரே பிள்ளை!

சாப்பாட்டுக்கு இலை போட்டாய்விட்டது. நூற்றைம்பது இலை போடக் கூடிய கூடத்தில் நெருக்கி இன்னும் ஐம்பது இலை விழுந்திருக்கிறது. கொல்லைக் கட்டு, அடுக்களை, கொல்லை நடை வாசல் நடை எங்கே பார்த்தாலும் இலை போட்டிருக்கிறது. கூடத்துப் பந்தி 'பொறுக்கான்' பந்தி. இருநூறு இலையும் அண்ணாவின் அபிப்பிராயத்தில் 'முதல்' வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஜூனியர் பந்துலுவும் நானும் பார்த்துத்தான் உட்கார்த்தி வைத்திருக்கிறோம்.

அண்ணா கம்பீரமாகப் பார்க்கிறார்.வாழ்க்கையில் நீதிபதி அவர். சின்னத் தவறு நடந்தாலும் தவறுதான். துளி அபஸ்வரம் பேசினாலும் அபஸ்வரந்தானே- அண்ணாவும் வெறும் வக்கீல் அல்ல;பெரிய சங்கீத ரசிகர். ரசிகர் என்பதைவிடச் சங்கீத 'க்ரிடிக்' (விமரிசகர்) என்று சொல்வது பொருத்தம். கர்நாடக சங்கீதத்தில் ஊறித் திளைத்து நீந்தியவர். வேங்கமடமகி, சார்ங்க தேவர் எல்லாம் அவருக்குத் தலைகீழ்ப் பாடம். தமிழ்ப் பண்களையெல்லாம் துருவித் துருவிக் கேட்டிருக்கிறார். மாகாணத்தின் எட்டு மூலையிலும் எங்கே சங்கீத சர்ச்சை நடந்தாலும் அண்ணா அங்கே இருப்பார். தலையின் முன். வழுக்கை பளபளக்க, ஒரு ராகத்தை - பேச்சில்தான் - விளக்கிக் கொண்டிருந்த மகாநாட்டில் பிரமாதமாக ஒரு அண்ணாவின் தலையை ஒருவர் கார்ட்டூனாக வரைந்திருந்தார். அது பெரிதாகி அண்ணாவின் ஆபீஸில் தொங்குகிறது.

அண்ணாவுக்கு யார் பாடினாலும் பிடிக்காது. அவருடைய லக்ஷ்ய சங்கீதத்தின் வாசற்படியைக்கூடத் தற்கால சங்கீத வித்வான் யாரும் மிதிக்கவில்லை என்பது அவர் கருத்து.  அவருடைய சொந்த ஊரான பூக்கால் குளத்தில் ஒரு பெண் நன்றாகப் பாடும். அதன் பாட்டைத் தான் அவர் திருப்தியோடு கேட்பார். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு வாக்கேயக்காரரின் பேரனுடைய சிஷ்யனின் பெண் வயிற்றுப் பேத்தி அந்தப் பெண். அவள் இப்போது கல்யாணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி ஹைதராபாத்தில் குடியும் குடித்தனமுமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். கிருகப்பிரவேச வைபவத்திற்கு, மாலையில் அவள்தான் கச்சேரி செய்யப்போகிறாள்.

ஹைதராபாத்திலிருந்து அதற்காகத்தான் அவள் வந்திருக்கிறாள்.. அபஸ்வரம் என்ற வார்த்தையிலிருந்து எங்கெங்கோ போய்விட்டது. அபஸ்வரம் என்ன, அவச்சொல்கூட அண்ணா காதில் விழக்கூடாது. கல்யாணத்திற்கு முன், கிருகப்பிரவேசத்திற்காகப் பந்தல் போட்டுக் கொண்டிருந்தான். காலை எட்டுமணி; குமாஸ்தாக்கள் இன்னும் வரவில்லை. பிச்சைக்காரன் ஒருவன் வந்து சேர்ந்தான். அந்த நிழலே அண்ணா வீட்டு வாசலில் விழக்கூடாது.  

ஆள் புதிது. துந்தனத்தை மீட்டிக்கொண்டு சுருதியோடு இழைந்து கவ்விய குரலில் பாடிக்கொண்டு வந்தான்.

"காஞ்சிமா புரியில் வாழும் காமகோடி வாவா, வாங்க்ஷையுடன் வந்தெனக்கு வரமருள வாவா, தற்பரம் அளிக்கும் திவ்ய கற்பகமே வாவா"

"ஏய்! மறுபடியும் பாடு."

"காஞ்சிமாபுரியில்.வாங்க்ஷையுடன் வந்தெனக்கு"

"என்னது?"

"வாங்க்ஷையுடன்."

"வாஞ்சையில்லை?"

"இல்லீங்க."

"?"

“எங்க குருநாதன் அப்படித்தான் சொல்லிக் கொடுத்தாரு"

"யாரு உங்க குருநாதன்?"

"முருகப் பண்டாரம்."

"எங்கே இருக்கார் அவர் இப்போ?"

"சமாதி ஆயிட்டாருங்க."

"போனாப் போறார். நீ இனிமே வாஞ்சைன்னு சொல்லு."

“அவரு வாங்க்ஷைன்னு தானே சொல்லுவாரு."

"அப்ப உனக்கு அரிசி கிடைக்காது."

"வேணாமே."

"நீ வேணும்னுதான் கேட்டுப் பாரேன்-கிடைக்கிறதா பார்ப் போம்."

''நீ வேணும்னுதான் என்னைச் சொல்லச் சொல்லிப்பாரேன்.  நான் சொல்கிறேனா, பார்ப்போம்."

"சீ, சீ, நாயே! போ! பதில் பேசாதே!"

"நானா இப்போ வள்ளு வள்ளுனு உளுவறேன்?"

"போடான்னா!"

“அட போய்யா, பிச்சைக்கு வந்த இடத்திலே சண்டைக்குல்ல நிக்கறே! கச்சை கட்டிக்கிட்டு” என்று பந்தல்காரன் இடைமறித்தான்.

"போய்யா.போ..ஏங்க அந்த ஆளோட வம்பு? தக்கு பிக்குன்னு ஏதாவது உளறுவான். நமக்கு என்னாத்துக்குங்க?”

"குருநாதன் சொல்லிவிட்டானாம், அவன் சொல்ல மாட்டானாம்!"

"ஆமாய்யா! சொல்லத்தான் மாட்டேன். சொல்லு, மனுசன் உண்டாக்கினதுதான். காக்காய்க்குக் கிளின்னு பேர் வச்சு நானூறு பேர் அளைச்சா கிளிதான். ஆமாம்."

"நீ இப்பப் போகமாட்டே? போய்யா அப்புறம் தெரியுமா?" அப்போது தான் நானும் வந்து சேர்ந்தேன்.

"ஏதோ, தெரியாத பயல்."

"யாரு, அவனா? நீன்னா தெரியாத பயல்! பாயின்ட் பாயின்டாப் பேசறான்! தெரியாத பயலாம். பிடிவாதக்காரப் பயன்னா அவன்!"

"தொலையறான் அண்ணா; விடுங்கோ."

அண்ணா வாழ்க்கை, வார்த்தை எல்லாவற்றிலும் நீதிபதி; ஆமாம்.

அண்ணா பந்தியைப் பார்த்துக்கொண்டே வந்தார். திடீரென்று முகம் இருண்டது. புருவத்தைச் சுளித்தார் மூக்கின் இதழ் விரிந்தன.

“ஏய், பஞ்சாமி!"

“அண்ணா."

"வா, இப்படி"

ஓடினேன்.

“யாரது?”

"யாரது?"

"எங்கே?"

"அதோ பார்!"

கூடத்தில் நடைநிலைக்கு எட்டிய தாழ்வாரத்தில் போட்டிருந்த பந்தியில் ஒரு பரதேசி உட்கார்ந்திருந்தான். நடுப் பருவத்தைக் கடந்து கிழத்தனத்தில் கால் வைத்த பருவம். எலும்பும் தோலுமான உடல். அளவுக்கு மிஞ்சிய நரை. கன்னம் முழுவதையும் மறைத்த தாடி. ஒழுங்கில்லாத குரங்குத் தாடி பல பல பட்டினிகளால் வயதை மீறிய மூப்புத் தோற்றம். கண்ட தண்ணீரில் நனைத்து நனைத்துப் பழுப்பேறிய, மடித்துப் போன, ஒட்டுகள் போட்ட வேட்டி: பக்கத்தில் அதே பழுப்பு நிறத்தில் ஒரு மூட்டை; இவ்வளவு காபந்துக்களுக்கிடையே, ராகு வந்து அமுதத்திற்கு அமர்ந்ததுபோல அமர்ந்துவிட்டான். அமுத சுரபியை ஏந்தி வரும் மால் பூண்ட மோகினி வேடந்தான் மயங்கிவிட்டது; அண்ணா கூட ஏமாந்து விடுவாரா.என்ன?

"எப்படிடா வந்தான் அவன்?" என்று இரைச்சல் போட்டார். மௌனத்தைத் தவிர வேறு விடை எதைச் சொல்ல?

"அழகா இருக்கடா நிர்வாகம்! கிளப்புடா அந்தக் கழுதையை!”

"உட்கார்ந்துவிட்டானே, அண்ணா”  என்று மெதுவாகச் சொன்னேன்.

"அப்படியா, மன்னிக்கணும்!” என்று ஒரே ஓட்டமாக ஓடினார். அந்த இலைக்கு முன் நின்றார். இருநூறு முகங்களும் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தன.

“ஏய், எழுந்திர்றா;"

அவன் வாய் பேசாமல் அவரை நிமிர்ந்து பார்த்தான். வாயில் போட்ட கறி உள்ளே செல்லாமல் அந்தரத்தில் நிற்க, எச்சிலான கை இலையில் இருக்க, அவரை மௌனமாகப் பார்த்தான்.

"எழுந்திருடா.,"

மீண்டும் அதே தீனமான பார்வை.

"எழுந்திருடான்னா!"

"பசிக்கிறது, எச்சில் பண்ணிவிட்டேன்,"

அவ்வளவுதான்.

அப்படியே தலைமயிரை ஒரு லாவு லாவினார் அண்ணா. உடும்புப் பிடி!

"எழுந்திர்றாங்கறேன். பதில் சொல்லிண்டா உட்கார்ந்திருக்கே!" பிடித்த பிடியில், பரதேசியின் கை தானாகவே பக்கத்திலிருந்த மூட்டையை அணைத்துக்கொள்ள, காலும் தானாகவே எழுந்து விட்டது. இடது கையால் அப்படியே தர தரவென்று அவனைத் தள்ளிக்கொண்டு, நடையைக் கடந்து, வாசல் திண்ணையைக் கடந்து, ஆளோடியைக் கடந்து, படியில் இறங்கி, பந்தலுக்கு வெளியே ஒரு தள்ளுத் தள்ளினார் அண்ணா.  தலை அவிழ்ந்து அலங்கோலமாகக் குப்புற விழுந்தான் அவன்.

"அப்பா, அம்மா, பாவி!" என்று முனகிக்கொண்டே எழுந்தான். திரும்பி அவரைப் பார்த்தான். முகம் கொதித்தது. பசியின் எரிச்சல் கண்ணில் எரிந்தது. கைக்கு எட்டி வாய்க்குக் கூடத் துளி எட்டி, பசியைக் கிளப்பிவிட்டு முழுவதும் கிட்டாமல் போனதன் எரிச்சல் முகத்தில் எரிந்தது.  ஆற்றாமையும் கோபமும் தொண்டையை அடைக்க, பசியால் மூச்சு வேகமாக, சின்னச் சின்னதாகச் தொண்டையில் ஏறி இறங்கி, வயிறு குழைய, ஒரே கத்தாகக் கத்தினான் அவன்.

“ஓய் வக்கீலே, நீர் நன்னா இருப்பீரா? இலையில் உட்காந்து எச்சில் பண்ணினவனைக் கிளப்பி, யமதூதன் மாதிரி தள்ளிண்டு வந்தீரே!"

"ஏய்,போறயா, நொறுக்கி விடட்டுமா?"

கண் கனல் கக்க, சாணக்கியனைப்போல, விரிந்த குரலில் ஓர் இரைச்சல் போட்டான் அவன்.

"போறேன், இதோ போறேன். ஆனால் திரும்பி வருவேன். அடுத்த மாசம் இதே தேதிக்கு உம்ம வீட்டிலேயே சாப்பிட வரேன். நீர் அழுதுகொண்டு போடற சாப்பாட்டுக்கு வரேன். பார்த்துக்கும்!”

விறு விறுவென்று நடந்தான்.

எனக்குச் சொரேர் என்றது. என்னமோ சொல்லி விட்டானே! அண்ணா ரெளத்ரம் பொங்கச் சீறினார்,

"ஏய், போய் அந்தப் பயலை இழுத்துண்டு வாடா. சும்மா விட்டு விடுகிறதா அந்தப் பயலை?”

"அண்ணா, உள்ளே போங்களேன். சகதியிலே கல்லைத் தூக்கி எறியலாமா?" என்று அவரை இறுக அணைத்து உள்ளே தள்ளிக்கொண்டு 
போனேன். என் பிடியை மீற முடியாமல் அண்ணா மெதுவாக உள்ளே சென்றார்.

என்ன அவச்சொல்! ஆபாசமான வார்த்தைகள் மங்களமான வைபவத்தில்! கேட்கவொண்ணாத கொடூர அவச் சொல்! ருசிக்க முடியாத அவச்சொல்! உதட்டில் வைத்துப் பருகும் பாலில் மேலேயிருந்து ஒரு துளி நஞ்சு விழுந்து, வாய்க்குள் போய்விட்டது போல் என் கண் இருண்டது; உள்ளம் இருண்டது. எப்படிப் பேசினான் இந்த வார்த்தைகளை! பாவி! இனிய நாதம் பொழியும் தந்தியை அறுத்து அவ ஓசையை எழுப்பிவிட்டான். என் மனம் படபட என்று பறந்தது.

"எலே, உம் மூஞ்சி ஏண்டா அசடு வழியறது.. முட்டாள்!"

மாலையில் கச்சேரி நடந்தது. பூக்கால் குளத்துப் பர்வதம்பாடினாள். இனிய ஞானம். நல்ல ஞானம். ஆனால் மூன்று குழந்தைகளுக்குத் தாயார் என்பதைக் குரல் காட்டிக்கொண்டே வந்து, பாட்டைக்கூட மூன்றாம் தரமான பாட்டாக அடித்துவிட்டது. அண்ணா முன்னால் உட்கார்ந்து கைமேல் கையில் தாளம் போட்டு, விரலை எண்ணி, சிரக்கம்பம் செய்துகொண்டிருந்தார். இரண்டு மணி நேரம் ஆவதற்குள் இரண்டாயிரம் ஆஹாகாரம் வந்துவிட்டது. ஆட்டுகிற ஆட்டலில் தலை ஒடிந்து விழுந்து விடும்போல் இருந்தது. அண்ணாவின் கற்பனை பயங்கரமானதுதான்.

மணமகனும் மணமகளும் ஒரு சோபாவில் உட்கார்ந்து கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தார்கள். நடுவில் மணமகன் எழுந்து கொல்லை நடைப்பக்கம் சென்றான்.

பத்து நிமிஷத்திற்கெல்லாம் அண்ணாவின் சம்சாரம் பரபர வென்று என்னைக் கூப்பிட்டாள்.

“ஏய் பஞ்சு, அண்ணாவைக் கூப்பிடு."

அண்ணாவும் நானும் உள்ளே போனோம். அடுக்களையில் கல்யாணப் பையன் பிரக்ஞை தவறிப் படுத்துக்கிடந்தான். கொல்லையில் போனவன் ஒரு முறை வாந்தி எடுத்தானாம். பிறகு, “தலை கிறுகிறு என்கிறது" என்று முனகினானாம். அடுக்களையில் வந்து மடேர் என்று விழுந்தானாம். மூர்ச்சை போட்டுவிட்டது. ஸ்திரீகள் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அண்ணாவின் தமக்கை விசிறிக் கொண்டிருந் தாள்.

"குழந்தே, குழந்தே!" என்று அண்ணா அழைத்தார்.

"விஸ்வநாதா, விஸ்வநாதா!" என்று நான் அழைத்தேன்.

நல்ல மூர்ச்சை. பதில் வரவில்லை. "பஞ்சு, நான் என்னடா செய்வேன்?” என்று உட்கார்ந்தவாறே என்னை நிமிர்ந்து பார்த்தார்

அண்ணா. திகில் படர்ந்த அந்தப் பார்வையை அந்த முகத்திலேயே நான் பார்த்ததில்லை.

"ஒண்ணுமில்லேண்ணா! இதோ போய் டாக்டரை அழைச்
சுண்டு வரேன். கவலைப் படாதிங்கோ" என்ற சொல்லிவிட்டு ஓடினேன்.

டாக்டர் வந்தார். அரை மணி தட்டிக் கொட்டிப் பார்த்தார். ஊசி
போட்டார். மருந்து எழுதிக் கொடுத்தார் மூர்ச்சை தெளியவில்லை.  
பெரிய டாக்டரை அவரேபோய் அழைத்து வந்தார். கோமா சோமா என்று ஏதோ வைத்திய பாஷையில் பேசிக்கொண்டார்கள்.

என்னத்தைச் சொல்கிறது! மூர்ச்சை தெளியும் வழியாக இல்லை. ஒரே பேத்தல், பிதற்றல். ஏழெட்டு நாள் கண்திறக்கவில்லை. உள்ளூர் டாக்டர்கள், மந்திரவாதிகள் எல்லோரும் பார்த்தார்கள். திருச்சியி லிருந்து இரண்டு டாக்டர்கள், பிறகு ராஸிலிருந்து ஐந்தாறு டாக்டர்கள்! கடைசியாகக் கல்கத்தாவிலிருந்து விமானத்தில் ஒரு நிபுணர் வந்தார். கையைப் பார்த்தார். “இன்னும் நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குப் பிறகுதான் சொல்ல வேண்டும்; பிறகு மூர்ச்சை தெளிந்தால் கொடுங்கள்" என்று ஒரு மருந்தை எழுதிக் கொடுத்துவிட்டு ஆயிரம் ரூபாய் பீஸையும் வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

அவ்வளவு பெரிய டாக்டர் சொல்வது வீணாகவா போய்விடும்?  மூன்றாம் நாள் காலையில் எல்லாம் அடங்கிவிட்டது.

எல்லாம் மாயாஜாலம்போல் இருந்தது எனக்கு. எவ்வளவு வேகம்! அண்ணாவின் ஒரே பிள்ளை! ஒரே இன்பக் கனவு! அவருடைய ஜகமே அவன்தான்-அது அழிந்து விட்டது!

அண்ணா தேம்பினார். திடீரென்று நினைத்துக் கொண்டு வாய்விட்டு அழுவார். அழாத நேரத்தில் சூன்யத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். திடீரென்று புன் சிரிப்புச் சிரிப்பார்; பேய் சிரிக்கிறாற் போல் இருந்தது எனக்கு! குலை நடுங்கிற்று!

"என்னடா பஞ்சாமி, என்ன சிரிக்கிறேனென்று பார்க்கிறாயா? நாளைக்குத் தேதி ஐந்து, அதனால்தான் சிரிக்கிறேன்."

நான் பதில் சொல்லவில்லை. 'சோகத்தில் சிரிக்கிறார். அழுகிறார், புலம்புகிறார். இஷ்டப்படி பேசட்டும்' என்று விட்டுவிட்டேன். பிரமையடைந்து, நிதானமிழந்து ஆடிக் கொண்டிருந்த சித்தத்தில் என்ன என்ன தோன்றுகிறதோ? மோகம் சோகத்தின் இரட்டை

“நாளைக்குத் தேதி ஐந்துடா. நாளைக்குத்தான் பன்னிரண்டாம் நாள் என் உயிர் போய். போன ஐந்தாம் தேதி கிருகப் பிரவேசம். அந்தப் பரதேசிப்பய எவ்வளவு கணக்காக ஆணியடித்தாற்போலச் சொன்னான், பார்"

எனக்கு ஞாபகப்படுத்தத் தேவையில்லை. பரதேசியின் நினைவாகத்தான் இருந்தேன்.

மறுநாள் பன்னிரண்டாம் நாள் காலையில் ஈமக்கடன்கள் தொடங்குகிற சமயம். காலை எட்டு மணி இருக்கும்; வாசலில் வந்து நின்றான் அவன். சவம் உயிர் பெற்று வந்ததுபோல் வந்து நின்றான்.

வெளுத்துப்போன தாடி, மீசை, எலும்பும் தோலுமான உடல்

பழுப்பேறிய நைந்து போன துணி, கையில் மூட்டை; கல்யாணத்தன்று
வந்த அதே வேஷந்தான்.  

எனக்கு ஒரேயடியாகப் பற்றிக்கொண்டு வந்தது. நெஞ்சு கோபத்தில் விம்மிற்று. ஒரே பிடியாகக் கழுத்தைப் பிடித்து அமுக்கித் திருகிப் போட்டுவிடலாமா என்று, கை நெஞ்சு எல்லாம் துடித்தன. ஆனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. உள் மனம் நடுங்கிச் செத்தது. இவ்வளவு ஆத்திரமும் முடவனின் கோபமாகப் புகைந்து அணை வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

அண்ணா அவனைக் கண்டதும் தேம்பித் தேம்பி அழுதார்.

"ஸார், வருத்தப்படாதீர்கள். நான் புண்ணில் கோல் இடுவதற்காக வரவில்லை. வாக்குத் தவறக்கூடாது என்று வந்தேன்" என்ற பரதேசி சொன்னான்.

அண்ணா சிறிது நேரம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். பெரிய முயற்சி செய்து பல்லைக் கடித்து, உதட்டைக் கடித்து, கண்ணைத் துடைத்து, துக்கத்தை அடக்கிக் கொண்டார். பரதேசி தலை குனிந்து நின்று கொண்டிருந்தான், ஐந்து நிமிஷம் ஆயிற்று.

“ஓய் உம்முடைய வாக்குப் பலித்துவிட்டது!" என்றார் அண்ணா.

“என் வாக்காவது பலிப்பதாவது! நடப்பது நடந்து தான் தீரும்."

"நீர்தானே ஐயா சாபமிட்டீர்?"

“என் பசி சாபமிட்டது. ஆனால் இது நடப்பதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை. தெரியாமல் இருந்ததை நான் சொல்லியிருக்கலாம்."

"எப்படி?"

"எங்கும் இருக்கிறது நாதம் கேட்கவா முடிகிறது? கை தட்டியோ, ஏதாவது செய்தோதானே அதைக் கேட்க முடிகிறது! அது மாதிரிதான்.

"உமக்கு வருங்காலம் தெரியுமா?"

"தெரியாது என்னமோ வாயில் வந்ததைச் சொன்னேன்."

“ம்-நீர் பெரிய அறிவாளியாக இருப்பீர்போல் இருக்கிறதே. ஏன் இப்படிச் சோற்றுக்கு அலைகிறீர்?”

"அறிவு இருந்தால் வக்கீல் தொழில்தான் செய்ய வேண்டுமா, என்ன? அறிவு இருந்தால் பிச்சை எடுக்காமல், சோற்றுக்கு அலையாமல்
இருந்துவிட முடியுமா?"

"நீர் சொல்வது எனக்குப் புரியவில்லை."

“எப்படிப் புரியும்? பந்தியில் அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க உமக்குத் தைரியம் இல்லை. தெம்பு இல்லை. உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. இந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு உம்மிடம் இல்லை. சிமின்டில், வலுவில்லாதது போல் தோன்றுகிறது. நீரைக் கலந்தால் அப்புறம் சம்மட்டி போட்டுத்தான் உடைக்கவேண்டும். உம்முடைய கல்நெஞ்சம் வெறும் வலுவில்லாத கல்நெஞ்சம் துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால், அது கம்பீரமாக நிற்கும். அத்தர் கலந்தாற்போலப் பரிமளிக்கும். உண்மையான வலு, உம் நெஞ்சுக்கு இல்லை. இருந்திருந்தால் பட்டப்பகலில் இரட்டைக் கொலை செய்த பாண்டிக்கு நீர் வக்காலத்து வாங்கியிருப்பீரா? அவன் கொலை செய்தது உலகறிந்த விஷயம். நீர் சரமாரியாக வாதாடி, அவனுக்கு நீதியளிக்காமல் காப்பாற்றினீர். உம்முடைய அகங்காரத்திற்கு நான் சொன்ன வலுவில்லை. இருந்தால் மோட்டார், ஆயிரம் வேலி, வைரக்கடுக்கன், இந்தப் பரதேசி, தரித்திரம் எல்லாவற்றையும் சேர்த்து உட்கார வைத்துக் காது நிறைய, கண் நிறைய, உள்ளம் நிறைய ஆனந்தமடைந்திருப்பீர். மோட்டார், வைரம், இதற்கப்பால் உம் அகங்காரத்திற்குக் கண் தெரியவில்லை."

அண்ணா சூன்யத்தைப் பார்த்துக்கொண்டு தேம்பினார். சற்றுக் கழித்து, “ஓய் காலதேவரே, உட்கார்ந்து பேசுமேன்.கால் வலிக்கவில்லையா?" என்று வேண்டினார்.

காலதேவன் வயிறு குழைய, கண் குழைய, விலா எலும்புகளின் தோல் விம்ம, "ஈசுவரா!" என்று பசியின் வடிவாக உட்கார்ந்து கொண்டான்.

*********************

42 கருத்துகள்:

  1. சனிக்கிழமைகளில் வழக்கமாக பகிரும் கதைகளோடு இந்தக் கதைக்கான கருத்துக்களும் சேர்ந்து வருவது அவ்வளவு சிலாக்கியப்படாது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இதே பகுதியில். அடுத்த செவ்வாய் என்றால் ஒரு தொடர்ச்சி போல இருக்கும் செளகரியம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீராம், கதைக்கான கருத்துகள் இங்க சொல்லலாம் தானே? அல்லது உங்களுக்கு மெயிலில் அனுப்பணுமா? அந்த இடம் புரியலை.

    சனிக்கிழமை இதையும் போட்டீங்கனா பாசிட்டிவ் செய்திகள் நான் படிச்ச கதை என்று பதிவு கூடிடுமோன்னும் தோன்றுகிறது

    சரி அப்புறமாதான் வர முடியும் வேலைப் பளு வாசித்துவிட்டு பின்னர் வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ...  எப்பவும் சொல்லும் கருத்துகளை இங்கு சொல்லாவிட்டால் பதிவு சுவாரஷ்யப் படாதே...   உங்கள் ஸ்பெஷல் அலசல்களை அப்படி சொல்லலாம் என்று நினைத்தேன். 

      அதை வேண்டுமானால் டிராப் செய்து விடலாம்!!! இங்கு இன்று ஒன்றும் அபிப்ராயமே இலலாவிட்டால் போர் அடித்து விடும்!

      நீக்கு
  4. என்றைக்கு என்றாலும் KGY ஸாரின் கருத்து தொடக்கத்துடன் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டுப்பார்ப்போம்.  இன்றே அவர் கமெண்ட்டை போட்டு விடலாம்.

      நீக்கு
  5. வாங்ஷையுடன்... லிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது.... பரதேசியை இலையிலிருந்து விரட்டுவது, கச்சேரி சோபிக்காத்து, கடைசியில் வக்கீலின் மனம் நெகிழ்வது வரை மிக அருமையான கதையைப் படித்த திருப்தி.

    ஒருவரை இலையை விட்டு எழுப்பச் சொல்லும் அளவு மனம் கனத்திருக்குமானால், படித்த படிப்பின் பயன் என்ன? ஜீரணிக்க முடியாத பகுதி இது. வாசலில் வந்த யாசகம் கேட்பவரிடம் ஒரு வார்த்தைக்காகச் சண்டை போடும்போதும், அதற்கு அவன் பதில் சொல்லும்போதும் தெளியாத மனம் தனக்கு இழப்பு வந்ததும் தெளிந்துவிட்டதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று கண்டிருக்கிறேன்.  ஆனால் திருந்தி பார்த்ததில்லை.  

      பேரிழப்பு அவரை விம்ம வைத்து விட்டது. வேரோடிந்து வீழ்ந்து போனார்.

      நீக்கு
  6. வாழ்க்கையில் இந்த மாதிரி தவறுகள் நம்மை மீறி நிகழ்ந்துவிடுகிறது. சூழ்நிலையின் காரணமாகவோ இல்லை விதிவசத்தாலோ. பிறகு நினைத்து வருந்தி என்ன பயன்? நடந்தது நடந்ததுதானே. நம் கர்ம வினை என்றே ஏற்றுக்கொள்ளணும் (அதுதான் அந்தத் தவறை நம்மையும் அறியாமல், உணராமல் செய்ய வைத்தது என்று)

    இதைப் படிக்கும்போதே கடம்பூரில் போளி விற்பவர் நாதசுர வித்துவான் திறமையில் இசையில் மயங்கி அவர் ரசிகராகி, தன் ஊரில் அவர் கச்சேரி வைக்கப் பாடுபட்டு மனைவியின் தாலிக்கொடியை இழந்து... பிறகு கச்சேரி முடிந்ததும் அந்த வித்வானே இவரிடம் அதை மீட்டுத் தருவதாக முடியும் அந்தக் கதையும் மனதில் வந்துபோகிறது. அவ்கு பாசிடிவ் குணம். இங்கு படித்தவனிடம் நெகடிவ் குணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நினைப்பது தந்தை அப்படி நடந்ததினால் தனயனுக்கு அந்த கதி நேரவில்லை.  ஏற்கெனவே விதித்திருந்தது பரதேசி வாயால் வெளிப்பட்டது.

      போளி விற்பவர் கதை மூலைக்கு மூலை பகிரப்பட்டு, எல்லோரும் ஏதோ அதை தாங்களே எழுதியது போல பகிர்ந்து கொண்டிருந்தார்கள். 

      ரிஷபன் சாரிடம் கேட்டு அதன் ஒரிஜினல் படைப்பாளி பெயர் வாங்கி ஆங்காங்கே சொல்லி வந்தேன்.

      நீக்கு
    2. //தந்தை அப்படி நடந்ததினால் தனயனுக்கு// அந்த அர்த்தம் வரும் மாதிரியா நான் எழுதியிருக்கிறேன்? தவறு ஒருவர் செய்து அதற்கு தண்டனை இன்னொருவருக்கா? விதி வசத்தால் மகன் இறக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது. அவ்ளோதான்.

      பொதுவா நான் கண்டிருப்பது, தன்னுடைய தவறு ஏதிலிகளைப் பாதித்தது என்றால் இந்த ஜென்மத்திலேயே அதற்கான தண்டனையை அனுபவிக்கும்படி நேரிடும்.

      நீக்கு
  7. இந்தக் கதையை இப்படி எழுதியிருக்கலாம் என்று எண்ணுவதே கதாசிரியருக்குச் செய்யும் அவமானம் என நான் நினைக்கிறேன். அது கதாசிரியரின் திறமையைக் குறைக்கும் முயற்சி. இவ்வளவு அதீத கோபம் வருமா, லாஜிக் இல்லாமல்... அதாவது தன்னுணர்வு இல்லாமல்... என்றால்.... வரும் வரும் வரும் என்பதுதான் என் பதில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ஆம். அதீத கோபங்களை நானும் கண்டிருக்கிறேன்.

      இந்த அளவு இல்லாவிடினும் ஓரளவுக்கு நானும் கோபப்பட்டு பின்னர் வருந்தி இருக்கிறேன்.
      ஆனால் பந்தியிலிருந்து எழுப்பும் பாவம் ஒரு நாளும் கைவராது.  ஒருவேளை அதற்கு நான் கோடீஸ்வரனாக இருக்க வேண்டுமோ என்னவோ!  

      நீக்கு
    2. கோபம் என்பது மிக மிகையான உணர்ச்சி. அந்தச் சமயத்தில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதே கணிக்க முடியாது. கோபத்தில் தன் குழந்தைகளைக் கொன்றவர்களைப் பற்றிப் படிக்கிறோம். மனைவி/கணவனை அரிவாளால் வெட்டியதைப் படிக்கிறோம்.

      பரமாச்சார்யார் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வைப் படித்திருப்பீர்கள். மந்திரம் ஒழுங்காகச் சொல்லாமல் முணுமுணுத்துவிட்டு சர்க்கரைப் பொங்கல் இன்னும் கேட்கிறாயா என்று ஒருவர் அவமானப்படுத்த, அந்த அவமானம் தாங்காமல் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு, இனி ஆயுளுக்கும் சர்க்கரைப்பொங்கல் சாப்பிடுவதில்லை என்று வைராக்யம் கைக்கொண்டு சில நாட்களிலேயே இறந்த ஒருவர் பற்றிய (திருவிடைமருதூர்?) சம்பவம் அது.

      நீக்கு
    3. தெய்வாடனையின் கோபம் அதன் இரு பாகன்களைக் கொன்றது. கோபம் வடிந்து அது துடிக்கும் துடிப்பு...

      நீக்கு
  8. சின்ன வயதிலேயே என் பையனிடம் நான் சொல்வது, கோபம்... பாபம்.. பழி... கோபம் அதீதமாக இருந்தால் பாபம் செய்ய வைக்கும். அதன் மூலம் பழி வந்து சேரும். அதீத கோபம் இருப்பவன் என்ன நல்ல குணமுடையவனாக இருந்தாலும், அது, விருந்தினருக்கு அறுசுவை உணவை இலையில் படைத்து இலையின் ஓரத்தில் க்க்காவையும் வைப்பதற்குச் சம்ம் என்று சொல்லுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். 

      அதென்னவோ இறைவன் படைப்பில் எதெது ஆகாதோ அததெல்லாம்தான் கைவரும்.  ,வடிகட்டி நல்லதை தெரிவு செய்யும் மனத்திண்மை எல்லோரிடமும் இருப்பதில்லை.

      நீக்கு
  9. //
    என்ன அவச்சொல்! ஆபாசமான வார்த்தைகள் மங்களமான வைபவத்தில்! கேட்கவொண்ணாத கொடூர அவச் சொல்! ருசிக்க முடியாத அவச்சொல்! உதட்டில் வைத்துப் பருகும் பாலில் மேலேயிருந்து ஒரு துளி நஞ்சு விழுந்து, வாய்க்குள் போய்விட்டது போல் என் கண் இருண்டது; உள்ளம் இருண்டது. எப்படிப் பேசினான் இந்த வார்த்தைகளை! பாவி! இனிய நாதம் பொழியும் தந்தியை அறுத்து அவ ஓசையை எழுப்பிவிட்டான். என் மனம் படபட என்று பறந்தது.// நெஞ்சைத் தொட்ட வரிகள்.

    பதிலளிநீக்கு
  10. // சிமின்டில், வலுவில்லாதது போல் தோன்றுகிறது. நீரைக் கலந்தால் அப்புறம் சம்மட்டி போட்டுத்தான் உடைக்கவேண்டும். உம்முடைய கல்நெஞ்சம் வெறும் வலுவில்லாத கல்நெஞ்சம் துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால், அது கம்பீரமாக நிற்கும்.// இதுவும்.

    பதிலளிநீக்கு
  11. கதையை ஒருமுறை தான் வாசித்தேன். கதையைப் படிக்கும்போது பந்தியில் இருந்து எழுப்பிவிட்ட நிகழ்வு நடைபெறும்போது
    நான் படிச்ச கதை (JC)
    இடலாக்குடி ராசா - நாஞ்சில் நாடன்

    மண் திணி ஞாலத்து

    உண்டி கொடுத்தோர்

    உயிர் கொடுத்தோரே

    (மணிமேகலை - காதை வரி)​ நினைவில் வந்தது.


    அதே போல் கடைசிப்பகுதியில்

    கூழாங்கற்கள்
    கதையாசிரியர்: அன்பழகன்ஜி​ ​பாபா நினைவில் வந்தார்.





    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. சிறப்பான கதை...

    வேறொன்றும் எழுதுவதற்கு சூழ்நிலை இதமாக இல்லை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  13. ​"இன்று தி ஜா ரா வின் ஒரு கதை…..பாயசம். ஒரு பெரிய மனிதர், சிறிய மனசு. திடகாத்திர உடம்பு, வன்மம் நிறைந்த உள்ளம், தொலைக்காட்சி தொடர்களில் வருவது போன்று ஒரு பழி வாங்கும் எண்ணம் உள்ளவர் செய்யும் ஒரு சின்னப் பையன் செயல். ஒரு பெரிய கதையின் தோற்றுவாயாக ஒரு நாள் காட்சி தான் இந்தக் கதை." நா ப க வில் நான் எழுதியது.

    அதன் தொடரோ இந்த பரதேசி? என்று தோன்றும் வகையில் அதே போல் அகங்காரம் பிடித்த மனிதர் வக்கீல் அண்ணா செய்யும் ஒரு வெறிச்செயல் தான் பந்தியில் இருந்தவரை புறம் தள்ளியது. பாயசம் பாத்திரத்தை கமழ்த்திய சசாமிநாது தண்டிக்கப்படவில்லை. ஆனால் அண்ணா தண்டிக்கப்பட்டார்.
    இதனை பெரிய தண்டனை அவசியமா? என்பதற்கும் விடை பரதேசியின் வாக்குகளிலேயே வந்து விடுகிறது. செயலும் அவனே,
    செய்விப்பவனும் அவனே.
    பரதேசி என்பதற்கு பதில் சாமியார் என்று இருந்திருக்கலாம். பரதேசி எனும்போது பிச்சை எடுத்து உண்பவர்களை தான் நினைக்க தோன்றுகிறது.

    Jayakumar​​

    பதிலளிநீக்கு
  14. ஒரு நிகழ்வை, கதாபாத்திரத்தை இவ்வளவு அழகாக, கதையாக யதார்த்தமாகச் சொல்ல முடியும் என்பது தி ஜா வின் வெற்றி எனலாமோ!
    கதையைப் பற்றிச் சொல்லும் முன் இதில் முதல் வரியிலேயே அண்ணா என்றும் அதுவும் உறவு எதுவும் இல்லாத எனும் போது அப்படியே எங்கள் ஊர் நினைவு வந்தது. ஊரில் இருந்தவரை எல்லோரையும் அக்கா, அண்ணா, மன்னி, ஊருக்கே பொதுவான சித்தப்பா, மாஸ்டர், அத்திம்பேர் போன்ற மாமன் மச்சான் உறவுகள்... என்று விளித்தது மற்றும் (அதனால்தான் இங்கும் கூட எல்லோரையும் அண்ணா, அக்கானே கூப்பிட வருகிறது)
    ஒரு வீட்டில் விசேஷம் என்றால் எதிர்வீடு பக்கத்து வீடு எல்லோரும் உதவச் செல்வது, உரிமையுடன் திட்டுவது, பயப்படுவது என்று இக்கதையில் வரும் நிகழ்வுகள் பல நினைவுகளை எழுப்பியது. என் பாட்டி ஊருக்கே உபதேசம் செய்வார்....யாரேனும் உடை சரியா போட்டுக்கலைனா ஒழுங்கா மேலாக்க போடு என்றும், தெருவில் நின்று பேசினால் என்ன இங்க நடுத்தெருவுல என்று சொல்லி வேலையைப் பார்க்கச் சொல்வது ஊரே அவருக்குப் பயந்தது, மரியாதை கொடுத்தது எல்லாம்....
    ஊரை ஒழுங்காக இருக்கச் சொல்பவர்களுக்குத், ஊரைத் திட்டுபவர்களுக்குத் தன் வீட்டிலும் அந்த ஒழுங்கு இருக்க வேண்டும் என்ற ஒரு சின்ன பயம் கலந்த எச்சரிக்கை உணர்வும் பொறுப்பும் இருக்கும் என்பதும் என் அனுபவம். அதனால்தான் ஊருக்குச் சொல்வதால், வீட்டில் எங்களுக்கும் அதீதமான கட்டுப்பாடுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. //கூடத்துப் பந்தி 'பொறுக்கான்' பந்தி. இருநூறு இலையும் அண்ணாவின் அபிப்பிராயத்தில் 'முதல்' வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஜூனியர் பந்துலுவும் நானும் பார்த்துத்தான் உட்கார்த்தி வைத்திருக்கிறோம்.//
    சாப்பிடும் இடத்தில் கூட ஏற்றத் தாழ்வுகள்! இப்போதைய காலகட்டத்தில் வீடுகள், மண்டபங்கள் என்றால் அதிகம் இல்லை என்றாலும் கூட,

    பரதேசி போன்றவர்கள் வந்தால் இருக்கிறதுதான். யோசித்தால் இதையும் அழகாகச் செய்யலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. //அண்ணாவுக்கு யார் பாடினாலும் பிடிக்காது. அவருடைய லக்ஷ்ய சங்கீதத்தின் வாசற்படியைக்கூடத் தற்கால சங்கீத வித்வான் யாரும் மிதிக்கவில்லை என்பது அவர் கருத்து.//
    அந்தக் கதாபாத்திரத்தின் ஒருவித மனோபாவம் தெரிகிறது. Height of Ego
    // ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு வாக்கேயக்காரரின் பேரனுடைய சிஷ்யனின் பெண் வயிற்றுப் பேத்தி அந்தப் பெண். //
    தலை சுற்றுகிறது!!! ஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. //அபஸ்வரம் என்ற வார்த்தையிலிருந்து எங்கெங்கோ போய்விட்டது. //

    இதை ரசித்தேன்...இதில் இன்னொன்றும் எனக்குப் பட்டது கதையும் கொஞ்சம் நகர்ந்து போய் மீண்டும் பிடிக்கு வருகிறது! என்பதாகவும்!!.

    //பிச்சைக்காரன் ஒருவன் வந்து சேர்ந்தான். அந்த நிழலே அண்ணா வீட்டு வாசலில் விழக்கூடாது. //

    இதுவும் அந்த கேரக்டரின் மனோபாவம் ஈகோவின் உச்சத்தைச் சொல்கிறது.

    //மனுசன் உண்டாக்கினதுதான். காக்காய்க்குக் கிளின்னு பேர் வச்சு நானூறு பேர் அளைச்சா கிளிதான். //

    சூப்பர்!! இதில் மறைபொருள் இருக்கே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. //பாயின்ட் பாயின்டாப் பேசறான்! தெரியாத பயலாம். பிடிவாதக்காரப் பயன்னா அவன்!//

    ஹாஹாஹா பிடிவாதக்காரப் பயன்!!!! அண்ணாவால் அவன் பேச்சை ஏற்க முடியுமா? ஈகோயிஸ்டிக் ஆச்சே.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. //"பசிக்கிறது, எச்சில் பண்ணிவிட்டேன்,"//

    அண்ணா அவனை எழுப்பிய இடம் மனதை என்னவோ செய்துவிட்டது.

    மூன்று குழந்தைகளுக்குத் தாயான அப்பெண் பாடும் போது குரல் தரம் தாழ்ந்திருந்தாலும் கூட அண்ணா தாளம் போட்டு ரசித்த வரியை வாசிக்கறப்ப....

    மனதில் இதுதான் பெஸ்ட் என்று பதிந்துவிட்டால் வேறொன்று நன்றாக இருந்தாலும் ஏற்காதே அதே சமயம் அந்த பெஸ்டின் தரம் தாழ்ந்தாலும் கூட மனம் ஏற்காது ஒரு சிலரை இப்படிப் பார்க்கலாம்......எல்லாம் அந்த மனசின் வேலை!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. பரதேசி திட்டி/சாபம் விட்டுப் போறப்பவே கதையில் அந்தப் பையன் முடிவு தெரிந்துவிட்டது.

    கதையில் ஆசிரியர் இந்த இடத்தை எப்படிச் சொல்லப் போகிறார் என்று, பொதுவாகச் சாபம் பலித்துவிட்டது என்று சொல்வதுண்டே அப்படி ஆசிரியரும் சொல்லிவிடுவாரோ என்று நினைத்தால் வாவ்!!

    //“என் வாக்காவது பலிப்பதாவது! நடப்பது நடந்து தான் தீரும்."

    "நீர்தானே ஐயா சாபமிட்டீர்?"

    “என் பசி சாபமிட்டது. ஆனால் இது நடப்பதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை. தெரியாமல் இருந்ததை நான் சொல்லியிருக்கலாம்."//

    கதையில் என்னை மிக மிகக் கவர்ந்த வரிகள்.
    யெஸ், இந்த சாபம் என்பதெல்லாம் நம் மனம் நமக்குச் சிலது நடக்கும் போது பொருத்திப் பார்த்து சமாதானம் அடைந்து கொள்வது.

    நடப்பது நடக்கத்தான் செய்யும். அதை மனம் ஏற்றுக் கொண்டுவிட்டால் இப்படிப் பொருத்திப் பார்க்கும் போது ஏற்படும் மனச் சோர்வையும் கலக்கத்தையும் குழப்பத்தையும் தவிர்க்கலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இந்தக் கதையை வாசிச்சப்ப இக்கதையை ஏற்கனவே வாசித்திருக்கிறோமோ என்ற எண்ணம் வந்தது. இதே போல ஒரு கதை, தி ஜா வின் கதைதான் வாசித்த நினைவு.

    யோசிச்சு யோசிச்சுப் பார்த்தப்ப டக்கென்று நினைவு வந்தது,
    நம் ஜெ கே அண்ணா இங்கு நான் படிச்ச கதையில் பகிர்ந்திருந்தது.

    ஆனா கதையின் தலைப்பு மறந்துவிட்டதே!!!

    அதிலும் கிட்டத் தட்ட இப்படியான ஒரு நாள் நிகழ்வுதான், பெரிய ஆள், ஆனால் மனசு ரொம்ப சின்னது மோசம்...குறுகியது...அதனால் அவர் செய்வது என்று போகும் அந்தக் கதை.

    பார்க்கிறேன் அந்தக் கதையின் தலைப்பு என்ன என்று....

    கீதா

    பதிலளிநீக்கு
  22. KGY சொல்கிறார்...
    " கதை பற்றிச் சொல்வதற்கு முன் தி.ஜா பற்றி நான் நினைப்பதைச் சொல்லிவிட வேண்டும்.

    அவர் எழுத்தில் அவரது தீட்சண்யமான பார்வை ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படும். எங்கோ எப்போதோ நாம் பார்த்த நபர் அல்லது பேச்சு அல்லது நிகழ்ச்சியை பளீரென்று நம் நினைவிலிருந்து பெயர்த்து மனக் காட்சிப் படுத்துவதாக இருப்பது தனிச்சிறப்பு. இதற்கு ஒரே ஒரு விதிவிலக்காக நான் பார்ப்பது அவர் " மாற்றான் மனைவியை " ஒருவர் தான் மதிப்பதன் உச்சகட்ட வெளிப்பாடாக உடலுறவு இருக்கிறது என்று அரசல் புரசலாக அல்லது உணர்ச்சி மயமாக எழுதுவதை என் மனம் ஏற்பதில்லை.‌ கெட்டி அவலைச் சற்றே ஊற வைத்து, பால் தெளித்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு, தேங்காய்த் துருவல் - சர்க்கரை சேர்த்துச் சாப்பிடும்போது இடையில் ஒரு கல் நம் வாயில் சிக்கினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்ச்சி எனக்கு அவருடைய இந்த வகையான சில சித்தரிப்புகளை பார்க்கும்போது ஏற்படும். ஆனால் அதிலும் ஒரு நளினம், நேர்த்தி, புத்திசாலித்தனம், கண்ணியம் காணப்பட்டது என்பது அவருடைய மேதமையின் வெளிப்பாடு.

    பரதேசி வந்தான் சிறுகதையைப் பொறுத்தமட்டில், அதன் ஒவ்வொரு சொல்லும் மிகச் சரியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒருவருக்கு மிக ஆழமான மனமாற்றம் எப்பொழுது ஏற்படுகிறது என்பது அவர் அந்த ஏதோ ஒரு கணத்தில் அனுபவிக்கும் உணர்ச்சியின் உச்சகட்டம் வந்து விட்டதா என்பதைப் பொறுத்ததாக இருக்கும். பலமுறை நாம் கவனிக்காத ஒரு சொல் அல்லது செயல் ஏதோ ஒரு கணத்தில் நம்மை முற்றுமாக மாற்றிப் போடுவதை நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா ?

    ஜானகிராமன் கதைகளில் நம்ப முடியாத சில சம்பவங்கள் அவ்வப்போது வரும். உதாரணமாக இரும்பைப் பொன்னாக மாற்றி ஒரு அவசர அவசிய செலவுக்கு பயன்படுத்தியதாக மோகமுள் நாவலில் வரும். அதையே கூட நம்ப வேண்டும் என்று நமக்கு ஒரு ஆசை மனதில் எழும். இதுதான் ஜானகிராமன் அவர்களின் வெற்றி - தனித்தன்மை.

    நம் அபிமான‌ நெ.1 பற்றி மிகையில்லாமல் சொல்வது சிரம சாத்தியமான காரியம் . அதைச் செய்ய முயன்று இருக்கிறேன் என்று சொல்வதே உண்மை."
    "

    பதிலளிநீக்கு
  23. https://engalblog.blogspot.com/2022/12/7-3500-jc.html

    இதோ கிடைத்துவிட்டது சுட்டி. பாயஸம். அக்கதை ரொம்ப யதார்த்தம்.

    இன்றைய கதையில் பரதேசி வந்தானில் கடைசியில் பரதேசியின் டயலாக் கொஞ்சம் லெங்க்தி என்று தோன்றியது.

    பார்க்கப் போனால் அந்தப் பெரிய மனிதர் அண்ணா தான் பரதேசி!!!

    ஆணவம் அதனால் விளையும் கோபம் கோபத்தினால் வரும் வார்த்தைகள் அதுவும் மற்றவரைப் புண்படுத்தும் வார்த்தைகள் மனிதனுக்கு இல்லாமல் இருந்தால் நல்லது.

    கோபம் இயல்பான ஒன்று. ஆனால் அதைக் கட்டுப்படுத்தினால் நல்லது இல்லையே தலைக்கு ஏறும் போது வார்த்தைகள் வெடிக்கும்! உறவுகளே கூட முறியும். தன் நிலையை உணராத வரையில் ஆணவமும் கோபமும் விலகாது.

    கெட்ட பின்னும் கூட அதை உணராதவர் பலரைப் பார்க்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. கதாப்பாத்திரங்களின் படைப்பும் அதன் மூலம் தி ஜா சொல்லியிருப்பதும் மிக அழகு. கண் முன்னே விரியும் காட்சிகள்.

    க்தை எழுத நினைக்கும் என்னைப் போன்றவர்கள் கற்க நிறைய கிடைக்கும்.

    கதையை ரசித்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. தந்தையின் தாய் வழியில் சித்தி ஒருவர் நேற்றைக்கு முன் தினம் சிவ கதி எய்தி விட்டார்..

    அவரது பெயர் புனிதா என்றாலும் நிஜமான அன்னபூரணி..

    யாரொருவரும் சாப்பிடாமல் தப்பிக்க முடியாது அவரிடமிருந்து..

    அந்தப் புண்ணியவதியின் மூன்றாம் நாள் சடங்குகளில் கலந்து கொண்டு விட்டு இப்போது தான் திரும்பினேன்..

    புண்ணியம் செய்தாருக்குப் பூவுண்டு நீருண்டு - என்கின்றார் திருமூலர்...

    இங்கே நேற்றைக்கு முன் தினம் நல்ல மழை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் தந்தையின் வழி உறவின் இழப்பு மனதிற்கு வருத்தத்தை தருகிறது. அவரின் உறவுகளுக்கு அந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் தரட்டும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  26. தஞ்சைக்கு அருகிலுள்ள பண்ணை இல்லத்தில் சின்னம்மாவின் காரியங்களை நிறைவேற்றி விட்டு,

    அவ்வூரில்
    ஏழைக் குடும்பங்களில் நிகழ்கின்ற திருமணங்களில் கல்யாண விருந்து நம்முடையது என்று சொல்லியிருக்கின்றார் - சித்தப்பா..

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வு அருமையாக உள்ளது. இலையில் சாப்பிட அமர்ந்தவரை எழுப்பிய இடம் மனதை பதற வைத்தது. அதுபோல எழுந்த அவர் பசியின் பரிதவிப்பில் சொல்லும் வார்த்தைகள் கதைக்கருவின் உயிர்நாடி.

    கதையில் பல இடங்களில் தலைசிறந்த எழுத்தாளரின் அந்த எழுத்துக்களின் சாராம்சங்கள் மனதை கவருகின்றன. இறுதியில் முடிவு எதிர்பார்த்ததெனினும், அந்த பரதேசி வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகள் சாட்டை கொண்டு அடித்த சவுக்கடிகள். உணவில் கை வைத்தவரை அவமதித்த அந்த வக்கீலின் மனதிற்கு இறைவன் பரதேசியின் நாவு மூலமாக தரும் தண்டனைகள். கதையை ரசித்தேன்.

    கதையை பற்றிய இன்றைய கருத்துரைகளின் அலசல்களும் அருமை. இதைப் போலவேயுள்ள பல கதைகளை சனிதோறும் நா. ப. கதையாக படிக்கத் தந்த சகோதரர்களுக்கும் என் பணிவான நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!