25.8.25

"திங்க"க்கிழமை : மிளகு சீரகப்பொடி - ஸ்ரீராம்

இன்று நான் பகிரப்போவது ஆரோக்கியமானது மட்டுமில்லை, எளிமையானதும் கூட.

இட்லியை படுத்தியது போதும் என்று தோன்றியதால் இன்னொரு இட்லி ரெசிப்பி அப்புறம் பகிர்கிறேன்.  போன வாரமே JKC ஸார் ஒரு இட்லி மீம்ஸ் அனுப்பி இருந்தார்.

எனவே வேறு எதுவும் பயங்கரமாய் படுத்தாமல், பயமுறுத்தாமல் ஒரு சாதாரணமான பகிர்வு.  உங்களில் யாருக்காவது இது புதுசு என்றால் கமெண்ட்டில் சொல்லவும். ஆச்சர்யப்பட்டுக் கொள்கிறேன்!

சிறு வயதில் இருபது தேதிக்குமேல் வீட்டில் சில பொருட்கள் தீர்ந்து விடும்.  அப்பா எங்காவது கடன் வாங்கி சமாளித்தால் சில சமயம் மீண்டும் செழிப்பாவோம்.  ஆனால் அவர் அலுவலகத்திலோ, நண்பர்களிடத்திலோ கடன் வாங்கினாரா என்பது எங்களுக்குத் தெரியாது.  நிச்சயம் வாங்கியிருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் அந்த தேதிகளில் காலியாகும் காசு டப்பாவில் மறுபடி கொஞ்சம் காசு கண்ணில் படாதே....!   

அப்பாவுக்கு அந்த வழக்கம் இருந்தது.  பணம் வந்ததும் அம்மா கையால் காசு டப்பாவில் வைத்து விடுவார்.  

சொல்லி இருக்கிறேன்.  

சோதனையாக இருபது தேதிக்கு மேல் காலியாகும் பொருள்களில் சில, காபிப்பொடி, சர்க்கரை, நல்லெண்ணெய் போன்றவை.  

அந்த நேரம் காய்கறி வாங்குவதில் கூட கொஞ்சம் சிக்கனம் கடைப்பிடிக்கப்படும்.  காபியில் வெல்லம் போட்டு சாப்பிடுவோம்.  ஆறு பேர்களுக்கு, மேலும் அடுத்து யாரும் விருந்தினர் வந்தாலும் ஆவின் பால் அரை லிட்டர்தான்.  நபர்களுக்குத் தகுந்தாற்போல தண்ணீர் ஊற்றப்படும்!

அதுபோன்ற சில தினங்களில் இது எங்களுக்கு கைகொடுக்கும்.

எது?

மிளகு சீரகப்பொடி.

பருப்புப்பொடி, தனியாப்பொடி எல்லாம் கூட அம்மா செய்து வைத்திருப்பாள்.  ஆனால் எனக்கு பருப்புப்பொடி அப்பவும் பிடிக்காது, இப்பவும் பிடிக்காது.  தனியாப்பொடி போட்டு சில சமயம் சாதம் பிசைந்து சாப்பிட்டிருக்கிறேன்.  தனியா இல்லை, எல்லோருடனும் சேந்துதான்!!!

புளியோதரைப்பொடி போல ஏதோ ஒன்று அவ்வப்போது பிசைந்து சாப்பிட்ட நினைவு இருக்கிறது. அது என்ன என்று சரியாய் நினைவில்லை.  வறுத்த கடலைப்பருப்பும், நிலக்கடலையும் அதில் கிடைக்கும் என்று நினைவு இருப்பதால் புளியோதரைப்பொடி என்றுதான் நினைவு.  ரெடிமிக்ஸ் வாங்கி வைத்திருந்த ஞாபகம்.

கொஞ்ச நாட்கள் என் தாத்தா கூட அது தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

மிளகு சீரகப்பொடி செய்வது மிக எளிது என்பது உங்களுக்கும் தெரியும்.


மிளகும் சீரகமும் சம அளவு எடுத்து அதில் பெருங்காயம் சேர்த்துக் கொண்டு மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.  அப்போதெல்லாம் அம்மியில் அரைத்து வைத்துக் கொள்வோம்!

உப்பு இப்போது சேர்க்கக் கூடாது.  அப்புறம் அதை கொஞ்ச நாட்களுக்கு வைத்திருக்க முடியாது.  நீர் விட்டுக்கொள்ளும்!  சிலபேர் மிளகு அதிகமாகவும் சீரகம் சற்றே குறைந்த அளவிலும் எடுத்து அரைத்துக் கொள்வார்கள்.  அதெல்லாம் அவரசவர் ருசி. விருப்பம்.  என் நண்பர் இதில் இரண்டு பட்டை மிளகாய் வரமிளகாய் சேர்த்துக் கொள்ளலாமா என்று கேட்டார்!

சூடான வெண்ணிற சாதத்தை தட்டில் போட்டுக்கொண்டு இந்தப் பொடியைத் தூவி, தேவையான அளவு உப்பு போட்டுக்கொண்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் ருசிதான்.  ஆரோக்யமும் கூட.

54 கருத்துகள்:

  1. மிளகு சீரகப் பொடி சாதம்.... அம்மா செய்து போட்டிருக்கிறாள் அபூர்வமாக. இட்லி மி பொடி தவிர வேறு பொடிகள் செய்து ஸ்டோர் செய்து வைத்திருந்தத்தாக நினைவு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  மிளகு சீரகப்பொடி எங்கள் வீட்டில் எப்போதுமே ஸ்டாக்கில் இருக்கும்.  ரசத்தை இறக்கும்போது தூவி இறக்குவது வழக்கம். 

      இப்போதெல்லாம் எப்போதாவதுதான் மிளகு சீரகப்பொடி சாதம்!  ஜீரணத்துக்கு நல்லது.

      நீக்கு
    2. நம்ம ரங்க்ஸுக்குப் பிடிச்சது. அடிக்கடி உண்டு நம்ம வீட்டில்/ கூடவே கத்திரிக்காய் கொத்சுவும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பண்ணறாப்போல் பண்ணுவேன். அங்கே இதைச் சம்பாச் சாதம் என்பார்கள். சம்பாச்சாதமும், கத்திரிக்காய் கொத்சுவும் நடராஜருக்கு நிவேதனம் பண்ணுவார்கள்.

      நீக்கு
    3. சம்பா சாதமும் கத்தரி கொத்சும் நல்லாப் பண்ணுவேன்னு இவங்க ஸ்ரீரங்கத்துல இருந்தபோது சொல்லியிருந்தால் சாப்பிட்டிருக்கலாமே. ஒருவேளை அதனால்தான் சொல்லலையோ?

      நீக்கு
    4. கீதா அக்கா..  உங்கள் சிதம்பரம் கொத்ஸு ரெசிப்பி கேட்டு நானும் செய்திருக்கேன்.  மிளகு சீரகப்பொடி சாதத்தையா சம்பா சாதம் என்பீர்கள்?  நான் இந்த சாதத்துக்கு தொட்டுக்க எதுவும் சேர்த்துக் கொள்வதில்லை.  சில சமயம் டாங்கர் பச்சடி.

      நீக்கு
  2. இரவு நான் சின்ன வயதில் விருப்பப்பட்டு கேட்டு வாங்கிச் சாப்பிடுவது, சுட சாதம் ஜீனி பால் கலந்து. இல்லைனா சுட சாதம் நல்லெண்ணெய் சிறிது உப்பு.

    சிறிய வயதில் எளிய உணவோ இல்லை அபூர்வமான பாயசமோ தந்த திருப்தியை, வித வித உணவுகள் இக்காலத்தில் அளிக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கூட எப்போதாவது இந்த பால் சர்க்கரை சாதம் சாப்பிட்டிருக்கிறேன். சமயங்களில் சூடான சாதத்தில் நெய், வெல்லம்!

      திடீர் ச.பொ

      நீக்கு
    2. இது போல், சுடான சாதத்தில், கொஞ்சம் தேங்காய் பூ துருவி சேர்த்து பொடித்த வெல்லமும், நல்ல பசு நெய்யும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். சூப்பராக இருக்கும். எங்கள் பாட்டி சித்திர குப்தர் விரததன்று உப்பில்லா உணவுக்காக ஒரு பொழுது உணவாக (மதியம் மட்டும்) இதை எடுத்துக் கொள்வார்கள். நானும் அப்போது இதன் ருசிக்காக நான்கைந்து முறை அவர்களுடன் விரதம் இருந்திருக்கிறேன். (சித்திர குப்தர் இதை எந்த கணக்கில சேர்த்துள்ளாரோ..? போய் பார்த்தால்தான் தெரியும்... :))).)

      பி. கு. இது கிட்டத்தட்ட இனிப்பு கொழுக்கட்டை போல் ருசியாக இருக்கும். ஹா ஹா.

      நீக்கு
    3. சித்திரகுப்தருக்கு விரதமா?  பார்றா...   நானும் தேங்காய்ப்பூ தூவியும் வெல்ல சாதம் சாப்பிட்டிருக்கிறேன்.

      நீக்கு
    4. கமலாக்கா அதே அதே!! ஹைஃபைவ் மீண்டும். தேங்காய் துருவிப் போட்டு அது சூப்பரா இருக்கும். எல்லாம் சின்ன வயசுல அனுபவித்து சாப்பிட்டது. இப்ப எங்க? கண்ணால கூடப் பார்க்க மாட்டேன். அப்புறம் கண்ணும் பாதிக்கப்பட்டுவிடுமே!!!!!

      கீதா

      நீக்கு
    5. கீர.. நீங்கள் சாப்பிடவேண்டாம் விருந்தினர்களுக்குக்கூட தடாவா?

      நீக்கு
    6. சித்ரா பௌர்ணமி அன்று சித்ரகுபத விரதம். கோலமே தெற்கு வாசலை அடைச்சுப் போடுவாங்கனு நினைக்கிறேன். மாமியார் இருப்பாங்க. தயிர் சேர்ப்பாங்க. ஆகவே தேங்காய்ப் பால், தயிர்சாதம், உப்பில்லா மாங்காய் தொட்டுண்டு சாப்பிடுவாங்க.

      நீக்கு
    7. ஓஹோ..  சித்ரா பௌர்ணமி அன்றா?  அன்றுதான் எங்கள் அப்பாவின் ஸ்ராத்தம் வரும்.  இதெல்லாம் நான் இப்போதுதான் அறிகிறேன்.

      நீக்கு
    8. வணக்கம் சகோதரி

      மீண்டும், மீண்டும் நாம் இப்படி கைகளை ஹைஃபைவ் சொல்லி தட்டிக் கொள்வோம். :))) (நமக்கு சலிப்புக்கள் ஏதும் வரவில்லை) ஆனால், நாம் இப்போதுள்ள தலைமுறைகளுக்கு இந்த முறையை அறிமுகபடுத்தி, இப்படி சாப்பிடச் சொன்னால், வெறுப்பில்( அது அனேக முறைகள் நான் சொன்னதில்தான் கூட இருக்கலாம்.:)).) நம் முதுகில் ஓர் பலமான அடியை தந்து விடுவார்கள். ஹா ஹா ஹா.

      இதில் சகோதரர் நெ. த சொல்கிற மாதிரி வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு எப்படித் தருவது.?

      நீக்கு
    9. கமலா ஹரிஹரன் மேடம்... நான் சொன்னது, இனிப்புகள்.

      நீக்கு
    10. எனக்கு கொழுக்கட்டைகள் கொடுத்தால் போதும். மூன்று வகை. ட்ரெடிஷனல் கார கொழுக்கட்டை, ட்ரெடிஷனல் தித்திப்பு கொழுக்கட்டை, அம்மிணி கொழுக்கட்டை!

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம், பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய ஜீரா, மிளகு பொடி சாதம் நன்றாக இருக்கும். கூடவே கொஞ்சம் கறிவேப்பிலையையும் காய வைத்து, (இல்லை வறுத்து) பொடித்துக் சேர்த்துக் கொண்டால், வாசனையாக இருக்கும். எங்கள் அம்மா வீட்டில் இருக்கும் போது எங்கள் பாட்டி இப்படித்தான் சில பொடி சாதங்களை செய்து தருவார். தொட்டுக் கொள்ள வீட்டில் தயார் செய்த சுட்ட அப்பளங்கள். அதற்குப் பிண்ணனி நீங்கள் கூறிய காரணங்கள்தாம். ஆனால், அதில் இருந்த ருசிகள் இப்போது தினமும் காய்கறிகளோடு சாப்பிடும் மதிய உணவில் இல்லை எனக் கூறலாம். நல்ல பகிர்வு. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கறிவேப்பிலைபொடியே தனியாக செய்து சாப்பிடுவோம்.  பருப்புப்பொடி, தனியாப்பொடி, கறிவேப்பிலை பொடி எல்லாம் வரிசையாக இருக்கும்.  கடையில் வாங்கிய புளிக்காய்ச்சல் மிக்ஸ் எல்லாம் ஒரு வரிசையில் இருக்க, இந்த மிளகு சீரகப்பொடி மட்டும் தனியாக கீழே இருக்கும்.  ஏனோ அவற்றோடு இது சேர்ந்திருக்காது.  சமைப்பவர்களின் கைவசதிக்காக!  
      தனியாப்பொடியே தனியாக இல்லாமல் சேர்ந்திருக்கும் இது தனியாக இருக்கும்!  ஹிஹிஹி...

      நீக்கு
    2. கமலாக்கா கறிவேப்பிலை - நானும் சொல்லியிருக்கிறேன். ஹைஃபைவ்!!!!!

      கீதா

      நீக்கு
  5. ​ரசப்பொடிக்கும் இந்த பொடிக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம். நல்ல வேளை நான் சாப்பிட்ட ஹார்லிக்ஸ் சாதத்தை சொல்லவில்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   

      ஹார்லிக்ஸ் சாதமா?  நிஜமா, கிண்டலா? 
       
      தெரிந்தா தெரியாமலா? 

      எனக்கு இது போல வேறொரு அனுபவம் உண்டு.  அதற்காகத்தான் கேட்கிறேன்!

      நீக்கு
    2. ​தவறுதலாக பருப்புப்பொடி என்று நினைத்து ஹார்லிக்ஸ் நல்லெண்ணெய் சேர்த்து கடனே என்று சாப்பிட்டேன். இரண்டும் ஹார்லிக்ஸ் பாட்டிலில் இருந்தது தான் காரணம்.

      நீக்கு
    3. ஜெ கெ அண்ணா சிரித்துவிட்டேன்.

      கீதா

      நீக்கு
    4. // ஹார்லிக்ஸ் நல்லெண்ணெய் சேர்த்து /

      அட கஷ்டமே..  பாவம் நீங்க!

      நீக்கு
  6. சிறப்பான செய்முறை
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. சீரகம் சற்று தூக்கலாக, மிளகு அளவாக இருந்தால் மருந்து மாதிரி வாசனை இல்லாமல் நன்றாக இருக்கும்.‌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று வித அளவுகளில் அரைத்து, எது சுகமோ அதில் செட்டிலாகலாம்!  அல்லது மாற்றி மாற்றி சுவைக்கலாம்.

      நீக்கு
  8. ​நம்ம வீட்டில் பாஸ் இப்படிதான் பொங்கல் செய்வார். குக்கரில் புழுங்கல் அரிசி, பயற்றம் பருப்பு (பொன்னி, சீரக சால) சாதத்தை குழைய வேகவைத்து பின்னர் இரும்பு கரண்டியில் நெய், தேங்காய் எண்ணை விட்டு மிளகு, சீரகம், இஞ்சி துருவல் கரூவேப்பிலை தாளித்து கொட்டி கரண்டியால் மசித்து கலக்கி பொங்கல் என்று புதன் தோரூம் செய்வார். No questions tolerated. முந்திரி கிடையாது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் முந்திரியும் போடுவோம்.  பச்சரிசி! 

      போன வாரம் நீங்கள் ஏதோ புதுவிதமாக சொன்னீர்கள்.  எழுதி அனுப்புங்களேன் என்று கேட்டிருந்தேனே..

      நீக்கு
  9. வசதி மிகக் குறைவான இளவயது நண்பன் வீட்டில் ஆறு பேர். மாதக் கடைசியில் வெறும் மிளகாய் வற்றல்+ கடுகு தாளித்து சோற்றில் உப்பிட்டு உண்பார்கள். "வக்ரன்னம்" ("வர் *க* ன்னம்") என்று சொல்வான். அம்மா வெளியூர் அக்கா வீட்டில். இவன்தான் கிச்சன் இன் சார்ஜ். குழந்தைகள் " அன்ன ஹாக்கு கண்ண கண்ணா " என்று கன்னடத்தில் கோஷ்டி கானம் செய்வது வலி தந்த அனுபவம். வீட்டில் ஏதுமில்லை என்றால் எங்கள் வீட்டில் எதுவும் வற்புறுத்தினாலும் சாப்பிட மாட்டான். ரோசக்காரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் இப்படி தங்கள் வறுமையை வெளிச்சம் போடாமல், இருந்து விடுகிறார்கள். எனக்கும் சில நண்பர்கள் இப்படி உண்டு.

      நீக்கு
  10. ஸ்ரீராம் சூப்பர் பொடி போங்க. இது நம்ம வீட்டில் Handy. கை கொடுக்கும் கை! இப்படிச் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இல்லைனா டக்குனு ரசம் செய்யவும், பொங்கலுக்குப் போடவும் என்று...ரொம்பவே உபயோகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அதனால்தான் அது மற்ற பொடிகளுடன் சேராமல் தனித்து நிற்கும். நிற்க வைப்பது! வாங்க கீதா..

      நீக்கு
    2. ஆமாம் தனித்து இருக்கும். அப்படி இருந்தாதான் கை கொடுக்கும் கை!!! மற்றதோடு சேர்த்தால் multi purpose முடியாதே.

      கீதா

      நீக்கு
  11. ஸ்ரீராம் இந்தப் பொடியோடு கொஞ்சம் நெய்யில் தாளித்த கறிவேப்பிலையை கையால் நொறுக்கியோ இல்லை கறிவேப்பிலையை சின்ன சின்னதாக நறுக்கிக் கொண்டு நெய்யில் போட்டு டக்குனு பொரித்து சூடான சாதத்தில் இந்தப் பொடியோடு போட்டுச் சாப்பிட்ட்டுப் பாருங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை அது கவரவில்லை கீதா.. முயற்சித்திருக்கிறேன்.

      நீக்கு
  12. இப்ப வீட்டில் ஐங்காயப்பொடி தீர்ந்து போச்சா செய்து வைத்திருக்கிறேன். மகனுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் வேப்பம் பூ ஆன்லைனில் வாங்கி வைத்து இருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐங்காயப்பொடி மாமியாருக்காக எப்போதுமே வீட்டில் இருக்கும்.  இப்போதெல்லாம் வேப்பம்பூவும், மணத்தக்காளி வத்தலும்  அப்படியே... பழைய வீட்டில் வேப்பம்பூ மொட்டைமாடியில் போர்வை விரிந்திருக்கும்.

      நீக்கு
  13. ஸ்ரீராம் ஐங்காயப்பொடி எபியில் வந்திருக்கோ?

    நான் செய்யும் போது ஃபோட்டோ எடுத்து அனுப்புகிறேன். ரொம்ப நாளாச்சுல்ல நான் எபி க்கு அனுப்பி?

    சமீபகாலங்களின் மனசு எதிலும் லயிப்பதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐங்காயப்பொடி வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.  ஆனால் நிறைய தடவை அதுபற்றி பேசி இருக்கிறோம்.  நீங்கள் அனுப்புவது கொஞ்சம் ஹெவியாக அனுப்புங்களேன்..!

      நீக்கு
    2. சரின்னு சொல்லி ஐந்து கிலோ அங்காயப்பொடி தயாரிப்பது எப்படீன்னு அனுப்பிறப்போறார்.

      நீக்கு
    3. // நீங்கள் அனுப்புவது கொஞ்சம் ஹெவியாக அனுப்புங்களேன்..! //

      // சரின்னு சொல்லி ஐந்து கிலோ அங்காயப்பொடி தயாரிப்பது எப்படீன்னு அனுப்பிறப்போறார். //

      ஹா.. ஹா.. ஹா...

      நீக்கு
  14. நெட்வொர்க் பிரச்சனை தொடங்கிவிட்டது. இன்று . கருத்து போடும் முன் பிரச்சனை.

    பார்க்கிறேன் ஸ்ரீராம். இப்ப ஆரோக்கிய சமையலா போகுதா வித்தியாசமா எதுவும் செய்யாமல் அதான்...

    பார்க்கிறேன் Sannas செய்தால் எடுத்து அனுப்புகிறேன். ஆனால் அதுவும் சிம்பிள்தான். வேறு என்ன என்று யோசிக்கிறேன். முன்பு செய்தது படம் இருக்கா என்று பார்க்கிறேன்.

    நேற்று மகன் chilli paneer செய்தானாம். சொன்னான்.

    ஏர்டெல் நெட் ரொம்ப படுத்தல். குறிப்பாகப் படங்கள் வீடியோக்கள் ஏற்றுவது. புகார் கொடுத்துள்ளோம். செப்டம்பர் 6 ஆம் தேதி வரை டைம் கேட்டிருக்காங்க! அதென்னவோ சென்னை,பெங்களூர், கொல்கத்தாவில் ஏர்டெல் வைஃபை பிரச்சனையாம்.

    ஏர்டெல் ஃபைபர் மாறணுமா என்று தெரியவில்லை.

    Airtel network outage across India, Bengaluru, Chennai and Kolkata worst-hit

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா ஊரிலும், எல்லா நெட்வொர்க்கும் அதே கதைதான் கீதா...  ஃபிராடுகள்.

      நீக்கு
  15. வணக்கம் சார் ...

    மீண்டும் இங்கு ... இந்த பொடி எப்பொழுதும் செய்து வைத்திருப்பேன் ..ஆனால் தனியாக சாதத்தில் கலந்து சாப்பிட்டது இல்லை . வறுவல் ரசம் போன்றவற்றில் மேலே தூவ மட்டுமே இவர் வருவார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனுபிரேம்..  சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்த பொடி கலந்து பிசைந்து சாப்பிட்டுப் பாருங்கள்.  சூப்பராய் இருக்கும்.

      நீக்கு
  16. சாதத்தில் போட்டு சாப்பிட்டது இல்லை. சாப்பிட்டு பார்க்கிறேன்.

    .நாங்கள் இந்தப்பொடியை வறுவலுக்கும், பருப்புக் கறிக்கும் போடுவதுண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!