29.10.25

சென்னையில், இந்த இடத்தை நான் பார்த்ததே இல்லை என்று எந்த இடத்தை சொல்லுவீர்கள்?

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

தனித்தன்மை மற்றும் காபி அடிப்பதை பற்றிய என்னுடைய சென்ற வார கேள்வியின் தொடர்ச்சி: ஆண்களைப் போல பெண்கள் இப்படி மற்றவர்களின் பாணியை பின்பற்றுவது போல தெரியவில்லையே?  பெண்களுக்கு ஒரிஜினாலிட்டி அதிகமா?

# நல்லது கெட்டது சரி தப்பு என்று வரும்போது ஆண் பெண் என்று வித்தியாசம் மனிதர்களுக்குள்ளே இருப்பதாகத் தெரியவில்லை.

என்றாலும் ஒரு சில செயல்களை ஆண்கள் செய்ய மாட்டார்கள் ஒரு சில செயல்களை பெண்கள் செய்ய மாட்டார்கள் என்பதும் உண்மைதான்.  1950 களில் ஒரு பெண் சைக்கிள் விடுவதை நான் அதிசயத்தோடு பார்த்திருக்கிறேன்.   ஆந்திராவில் பெண்கள் சுருட்டு பிடிப்பார்கள் என்று கேட்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். பெண்கள் மது அருந்த மாட்டார்கள் என்று திடமாக நம்பி இருக்கிறேன். இதெல்லாம் பொய்யாக போய்க்கொண்டிருக்கிறது என்பது மிகவும் சோகமான செய்தி.‌ 

ஒரிஜினாலிட்டி என்று வரும் போது அது ஆண் பெண் என்ற வித்தியாசம் பார்த்து வருவதில்லை என்பது என் எண்ணம்.

இப்போதைக்கு திரைப்பட இயக்கம்,  சிறந்த எழுத்தாளுமை  போன்ற பலவற்றிலும் பெண்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருக்கிறது.  ஆனால் இது இப்படியே இருந்து விடும் என்று நிச்சயமாக சொல்வதற்கில்லை.‌

& ஹா..  ஹா..  ஹா...  இந்தக் கேள்வியே எதையோ வலியுறுத்த விரும்புவது போலிருக்கிறதே....!

= = = = = = = = = =

எங்கள் கேள்விகள் : 

1) பழைய தமிழ் சினிமா பாடல்களில், இன்றும் கூட உங்களைக் கவர்ந்த பாடல்கள் என்னென்ன? ஏன்? 

2) இந்த பிரபல ஹோட்டலின் எந்த ஊர் கிளையிலும் நான் இதுவரை எதுவும் சாப்பிட்டதில்லை என்று எந்த ஹோட்டலை சொல்லுவீர்கள்? 

3) சென்னையில், இந்த இடத்தை நான் பார்த்ததே இல்லை என்று எந்த இடத்தை சொல்லுவீர்கள்? 

4) இந்தியாவில் நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த சுற்றுலா தளம் அல்லது முக்கிய இடம் எது? 

5) இந்தியாவில் நீங்க பார்க்க விரும்பி, ஆனால் இதுவரை பார்க்காத இடம் எது? 

= = = = = = = = = = = = =

படமும், பதமும் 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

கனடாவில் யாராவது இறந்து விட்டால், இறந்தவர் உடலை வீட்டிற்கு கொண்டு வர அனுமதி கிடையாதாம். இடுகாட்டில் புதைக்கவோ,எரிக்கவோ ஸ்லாட்  கிடைக்கும் வரை(தோடா!) அந்த உடலை வைப்பதற்கும் பிரத்யேக விடுதிகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் படத்தில் இருப்பது. 

அப்படிப்பட்ட விடுதிகளை பராமரிப்பவர்கள் ஏதோ ஒரு நாள் உறவினர்களும், நண்பர்களும் வந்து இறுதி மரியாதை செய்ய ஏற்பாடு செய்வார்களாம். அப்போது அவரவர் மத நம்பிக்கையின்படி உடை அணிவித்து, திருநீரோ, திருமண்ணோ இட்டுத் தருவார்களாம்.

மரணித்த எல்லா உடல்களுமே எம்பாம்பிங் செய்யப்படுவது கட்டாயமாம்.

- - - - - - - - - - - -

நெல்லைத்தமிழன் : 


பஹ்ரைன் என்பது ஒரு தீவு என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது கத்தார் நாட்டிலிருந்து வெகு அருகில் உள்ளது (20 நிமிட விமானப் பயணம்).  பஹ்ரைனில் பல இடங்களில் இருக்கும் கடல், ஏரி மாதிரித்தான் தோற்றமளிக்கும். அலைகளே இருக்காது. கடலிலும் சட்னு நடந்தே ரொம்ப தூரம் போய்விட முடியும். பயமும் கிடையாது. அரசு இதனால் பல இடங்களில் கடலின் போக்கை சிறிது மாற்றி, பல நிலங்களை மீட்டெடுத்திருக்கிறார்கள்.  நான் அந்த தேசத்துக்குச் சென்ற காலம் 1995. சுமார் 22 வருடங்கள் அங்கு இருந்தேன். அப்போது பல இடங்களை மீட்டெடுத்ததை நான் பார்த்திருக்கிறேன்.


உண்மையில் பஹ்ரைன் என்பது பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய தேசம். காலப்போக்கில் இந்த நில மீட்டெடுப்புகளினால் பல தீவுகள் ஒன்று சேர்ந்துவிட்டன. பல தீவுகளுக்கும் பலப் பல இடங்களில் பாலங்கள் போட்டு, எல்லாவற்றையும் சுலபமாக இணைத்திருக்கிறார்கள்.


அதற்காக கடற்கரை இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். நிறைய மணலுடன் கூடிய பெரிய கடற்கரைகள் அங்கு உண்டு. நம்ம மெரீனா போல இல்லாமல், மனுஷன் நிம்மதியாக நடக்கவோ இல்லை உட்கார்ந்திருக்கவோ முடியும். 


அப்படீன்னா கடல்ல குளிப்பதில் பயமே இருக்காதா? கடலின் நீர் அதன் போக்கை மாற்றிக்கொண்டிருக்கும் (ஒரு நாளில்). அதனால் சட் என்று தண்ணீர் மட்டம் உயர ஆரம்பிக்கும், அதுபோல நீரின் வேகமும் அதிகமாகும். நாங்கள் அப்படி ஒரு கடற்பகுதியில் 100 மீட்டருக்கும் அதிகமான தொலைவில் இடுப்புக்குக் ஒரு அடி கீழே வரை இருக்கும் கடல் நீரில் விளையாடிக்கொண்டிருந்தோம் (கூடைப்பந்து). சட் என்று எனக்கு தண்ணீர் உயரம் அதிகமாவதும் வேகமாவதும் தெரிந்தது. பந்து என்னைத் தாண்டி விழுந்ததைப் பற்றிக் கவலைப்படாமல் எல்லோரையும் எச்சரிக்கை செய்து கரையேறிவிட்டோம்.  இந்தப் படத்தில் எச்சரிக்கை போர்ட் வைத்திருப்பது தெரிகிறதா?
= = = = = = = = = = = = =
KGG பக்கம் : 

மருந்துகள், மாத்திரைகள் . 

நான் சாதாரணமாக சிறிய உடல் உபாதைகளுக்கு ஹாஸ்பிடல், டாக்டர் மருந்து மாத்திரை என்றெல்லாம் போவது இல்லை. 

'ஜலதோஷத்துக்கு சாப்பாடு போடு; ஜுரத்திற்கு பட்டினி போடு' என்று ஒரு பொன்மொழி (?) உண்டு. 

அதாவது ஜலதோஷம் வந்தால் சூடாக உணவு, சூடான பானங்கள் என்று சாப்பிடவேண்டும். நிறைய ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஜுரம் வந்தால், லங்கணம் பரம ஔஷதம் என்று பட்டினி போட்டு, சரி செய்துகொள்ள வேண்டுமாம்! 

அப்போ ஜலதோஷம், மூக்கு அடைப்பு, மார்ச்சளி ஜுரம் எல்லாம் ஒன்றாக வந்தால் என்ன செய்வது? அதுதான் ஆச்சு எனக்கு! இரண்டு வாரங்களுக்கு முன்பு, இவை யாவும் ஒன்றாக வந்து சேர்ந்தது! 

Dolo 650 க்கு அடங்கவில்லை. விட்டுவிட்டு ஜுரம். மார்ச்சளியால் wheezing நிலை. கர் கர் என்று மூச்சுவிடும் நிலை. பையன் என்னுடைய நிலை தெரிய வந்ததும், உடனடியாக கிளம்பு ஹாஸ்பிடல் - போவோம் என்று அழைத்துக்கொண்டு சென்றான். 

அருகில் உள்ள மனிப்பால் ஹாஸ்பிடல் சென்று, டாக்டரைப் பார்த்து, 5 நாட்களுக்கு அவர் எழுதிக்கொடுத்த மருந்து மாத்திரைகளை (அவரும் மற்ற மருந்துகளோடு Dolo 650 எழுதிக் கொடுத்தார் என்பது வேறு விஷயம்.) வாங்கி, சாப்பிட்டு, ஒருவாறாக உடல் நலம் தேறி வருகிறேன். 

ஆனால், இன்னமும் சுவாச தொந்தரவு, ஜீரண மண்டல அச்சுறுத்தல்கள் கொஞ்சம் தொடர்கின்றன. நடந்தால் மூச்சு வாங்குகிறது. கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓய்வு என்று தினமும் சமாளித்து வருகின்றேன். 

என்னுடைய அனுபவத்தில், நம் மூலம்  டாக்டருக்கு மற்றும் மருந்து மாத்திரைகளுக்கு கொஞ்சம் செலவழிக்க வேண்டும் என்று இருந்தால், அந்த அளவுக்கு செலவு செய்யும் வரை, வியாதிகள் தொடரும். குறிப்பிட்ட அளவு செலவு செய்தவுடன், எல்லா வியாதிகளும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி மறையும்! 

பார்ப்போம் இந்த சீசனில் எனக்கு என்ன செலவு எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று! 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். 

= = = = = = = = = = = = 

55 கருத்துகள்:

  1. எழுதுவதில் ஆண் பெண் வித்தியாசம் ஒரு மித் என்பது என் எண்ணம். நிறைய படிப்பவர்களிடம் பிறர் எழுத்துக்களின் தாக்கம் இருக்கும். பரந்துபட்ட படிப்பு இல்லாதவர்கள் தங்களிடம் ஒரிஜினாலிட்டி இருக்கு என்று சொல்லிக்கொள்ளலாம். இதற்கு விதிவிலக்குகள் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை....  ஆண்-பெண் எழுத்தில் வித்தியாசம் என்பது கிடை....யா..... து...தா..  ன்...   கொஞ்சம் இருங்கள்....    ஒன்றிரண்டு கண்டுபிடிக்க முடியுமோ....

      நீக்கு
    2. நான் சொல்ல வந்தது எழுதும் முறை, நடை போன்றவற்றை அல்ல. பசங்க பெண்கள் இயல்புபோல, தீம், உரையாடல்கள் போன்றவற்றில் வித்தியாசம் இருக்கும்.

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. நாம் வளர்ந்த காலத்தில் கேட்ட பாடல்கள் பழைய பாடல்கள் என்ற கேட்டகரியில் வரும். பல திரைப்படப் பாடல்கள் அந்த அந்த காலகட்டத்தில் நம்மோடு ஒரு வித்த்தில் தொடர்பு உடையதால் அதைக் கேட்கும்போது அந்த காலகட்டத்திற்கு நம் மனது சென்றுவிடும் அல்லது நினைவுத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என ஒன்றைச் சொல்லிவிட முடியாது. நேரம் கிடைத்தால் இன்று இதுபற்றி எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அதனால் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என ஒன்றைச் சொல்லிவிட முடியாது //

      சபாபதே....  சமயங்களில் கொஞ்ச நாளைக்கு முன்னால் சொன்ன லிஸ்ட் இன்று மாறுவதும் உண்டு!

      நீக்கு
    2. என்னுடைய all time favorite பாடல்: " இரவும் நிலவும் வளரட்டுமே "

      நீக்கு
  3. வட சென்னை மற்றும் பல புராதானக் கோயில்களை (திருவள்ளுவர் கோயில் பல்வேறு கோயில்கள், வைணவத் தலங்கள் தவிர) நான் தரிசிக்கும் வேளை வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ம்ம்..... குறிப்பாக ஏதும் காரணம் உண்டா?

      நீக்கு
    2. அப்போது அவற்றில் ஆர்வம் வரவில்லை. இன்னும் கபாலீஸ்வர்ர் கோயிலுக்குள் செல்லும் வேளை வரவில்லை, அந்த மாட வீதிகளில் பலப்பலமுறைகள் சுற்றித் திரிந்த போதிலும். பல நேரங்களில் என் உடை இதற்குக் காரணமாக அமைந்துவிடுவதுண்டு (ஷார்ட்ஸ் டி ஷர்ட்). இதன் காரணமாக, வைணவக் கோயில்களில் நுழையும் வாய்ப்பு மனைவிக்குப் போய்விடுவதால், அவள் கைப்பையில் எதற்கும் இருக்கட்டும் என என் வேஷ்டி ஒன்றைக் கொண்டுவருவதும் நடந்திருக்கிறது.

      கொடைக்கானல் பூம்பாறைக்கு வேலப்பர் கோயிலில் வேஷ்டி இல்லாமல் நுழைய முடியாது. அதனால்அங்கிருந்த கடை ஒன்றில் வேஷ்டி வாங்கிய அனுபவமும் உண்டு. சமீப மாதங்களில்தான் பேன்ட் போடும் வழக்கம் கொஞ்சம் வர ஆரம்பித்திருக்கிறது.

      நீக்கு
    3. சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. இந்தியாவில் இன்னும் பார்க்காத, பார்க்க மிகவும் விரும்பும் இடங்கள் அனேகம். பலவற்றிர்க்குச் செல்ல உள்ளத்தில் ஆசை இருந்தாலும் சாத்தியமில்லை (சார்தாம் போன்று)

    பார்த்த இடங்களில் மனதைக் கவர்ந்தது இந்த ஒரு இடம் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி அனேகம் உள்ளன. இப்போ மனதில் சட் என்று தோன்றுவது சிக்கிமில் பனிமலைப் பகுதியில் முழங்காலளவு பனியில் நடந்தது

    பதிலளிநீக்கு
  5. எம்பாமிங் என்றதும் ஜெயல்லிதா மனதுக்கு வருகிறார். கனடா செய்தி மனதில் கலவரத்தை ஏற்படுத்துகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அபப்டியொரு நிலை நினைத்துப் பார்க்கவே சிரமமாக உள்ளது.  இருந்தாலும் செலவு;  இறந்தாலும் செலவு என்று!

      எனது கிறித்தவ நண்பர் குடும்பத்தில் கல்லறையில் ஒரு இடம் வாங்கி வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் காலம் முடியும்போது அங்கேயே ஒன்று மேல் ஒன்றாக புதைத்து வருகிறார்கள்.

      நீக்கு
    2. இந்துக்களுக்கும், கிறித்துவ முஸ்லீம்களுக்கும் புதைக்கும் நம்பிக்கை வேறு. இறைவன் ஒரு நாள் எல்லோரையும் எழுப்பி தீர்ப்பு வழங்கும்வரை கல்லறை வாசம் என்பது அவர்களின் மத நம்பிக்கை. இந்துக்களுக்கு அது முன்னோர்களின் நினைவுச்சின்னம். பல இந்துப் பிரிவினர்களுக்கு எரித்து மறந்துவிடவேண்டியது.

      முஸ்லீம்கள், கல்லறையில் இறந்தவர்கள் அவர்கள் செய்த தவறுகளினால் ஒடுக்கி சிரம்ப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பிரார்த்தனையும், நினைவு நாட்களில் அங்கு உணவுப் பொருள்களை எடுத்துச் சென்று சுற்றி அமர்ந்து உண்பது, இறந்தவர்களுன் தாகத்துக்கு குளிர்பானங்களை தலைகீழாக குத்திவைப்பது என்றெல்லாம் செய்கிறார்கள்.

      நீக்கு
    3. இதுவரை அறிந்திராத தகவல்கள்! நன்றி.

      நீக்கு
    4. ஸ்ரீராம், எனக்கும் யம்மாடியோவ் இறந்த பின்னும் செலவா என்று தோன்றியது முதலில். அதன் பின் யோசிச்சப்ப கூடவே கூடவே இன்னொன்றும் தோன்றியது. இங்கும் இறந்த பின் சில செலவுகள் இருக்கின்றனவே. அதுவே ஒரு சில லட்சங்களைத் தொடும்தானே. embalming ஒன்றுதான் எக்ஸ்ட்ராவோ?

      ஆனால் தேதி கிடைப்பதுதான் அதுவரை வைத்திருக்க ஆகும் செலவுகள் கூடுதல்தான்.

      இப்ப இங்குமே கூட ஒரு வேளை உறவினர்கள் அதுவும் நெருங்கிய உறவினர் வர தாமதமானால் மார்ச்சுவரியில் வைக்கும் வசதி இருக்காமே.

      கீதா

      நீக்கு
    5. எம்பாமிங் - எனக்கும் ஜெ ஜெ நினைவுக்கு வந்தார்.

      கீதா

      நீக்கு
    6. //இருந்தாலும் செலவு; இறந்தாலும் செலவு என்று!// இது எனக்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. என் அப்பா போனபோது, காரியத்துக்கு வந்த அபரகாரியங்கள் செய்பவர் சொன்னது இது. அந்த ஊரில் ஒரு வயதானவர், எப்போதும் கட்டிலிலேயே படுத்திருப்பாராம். உணவும் கட்டிலில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அங்கேயே படுத்துவிடுவாராம். யாரையும் கட்டில் அருகில் அனுமதிக்கமாட்டாராம் (வீட்டார் ஒருவரையும்). அவர் இறந்தபோது, அவரது உடலை கட்டிலைவிட்டு எடுத்தபோது, மெத்தையின் போர்வையை எடுத்தபோது 5 லட்ச ரூபாய் கட்டு கட்டாக வைத்திருந்தாராம், அவரது இறுதிக் காரியங்களுக்காகவோ எதற்கோ. இது எப்படி இருக்கு?

      நீக்கு
    7. //அதுவும் நெருங்கிய உறவினர் வர தாமதமானால் மார்ச்சுவரியில் வைக்கும்// இந்துக்களின் சாஸ்திர சம்பிரதாயப் பிரகாராம், இறந்த உடலை, அடுத்த சாயங்காலத்துக்குள் காரியத்தை முடித்துவிடவேண்டும். ஆனால் மாறிய காலம், எங்கோ இருக்கும் பசங்களுக்காக காத்திருந்து பிறகு காரியங்கள் செய்வது போல ஆகிவிட்டது.

      நீக்கு
  6. கேஜிஜிக்கு மட்டுமல்ல, பலருக்கும் அவர்்சொன்ன பிரச்சனைகள், இருமல் போன்றவை உள்ளன. ஒருவேளை மருத்துவருக்கு தத்தம் செய்யும்வரை தொடருமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீர்பால் கதை நினைவுக்கு வருகிறது.  எனினும் இங்கு சென்னையிலும் அப்படிதான் இருக்கிறது.  அதுவும் குறிப்பாக நேற்றிரவு செம ஜில்...  செம குளிர்...

      நீக்கு
  7. கௌதம் ஜி அவர்களின் பக்கத்தில் அருமையான தகவல்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாற்பது ஆண்டுகளுக்கு முன் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவேற்காடு தரிசித்து இருக்கின்றேன்...

      திருவான்மியூர் மற்றும் சில தலங்களைத் தரிசிக்க ஆவல்..

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  8. தற்போதய சென்னையை ரசிப்பதற்கு இல்லை...

    பதிலளிநீக்கு
  9. எழுதுவதில் ஆண் எழுத்து பெண் எழுத்து என்று வித்தியாசம்? என்று நாம் நினைத்தாலும் எழுதும் விதத்தில், கருவில் வித்தியாசங்கள் இருக்கலாம். பெண் எழுத்தாளர்கள் (ஒரு சிலரைத் தவிர) பெரும்பாலும் ஒரு சின்ன வட்டத்திற்குள்ளேயே எழுதுவதாக ஒரு பொது அபிப்ராயம் உண்டு.

    ஓர் ஆணினால் பெண்களின் உணர்வுகளைச் சரியாக எழுத முடியுமா என்ற கேள்வியும் வந்ததுண்டு. அதில் பாலகுமாரன் தனி என்ற கருத்தும் உண்டு அவர் பெண்களின் உணர்வுகளைத்தான் அதிகம் சொன்னார் என்று. நிறைய வாசகர்கள் அவர் பெண் எழுத்தாளர் என்றே நினைச்சாங்களாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலகுமாரன் என்ற பெயரைப் பார்த்துமா அவரை பெண் என்று நினைத்தார்கள்!

      நீக்கு
    2. //பாலகுமாரன் என்ற பெயரைப் பார்த்துமா// பலர் பெண் பெயரில் ஒளிந்து எழுதுவது போல, பெண், ஆணின் பெயரில் ஒளிந்து எழுதுகிறாரோ என்று நினைத்திருக்கலாம்

      நீக்கு
  10. பானுக்காவின் படமும் செய்தியும் ஆ! என்று சொல்ல வைத்தது. இறந்த பின்னும் செலவா? யம்மாடியோவ்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பழையபாடல்களில் எதைச் சொல்ல? நிறைய இருக்கின்றன. காலம் கடந்தும் ரசிக்கக் கூடிய பாடல்களும் உள்ளன. ஒரு சில அன்று பிடித்தவை பின்னர் கேட்கப் பிடிக்காமலும் போகலாம். குறிப்பாகச் சில சோகப் பாடல்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நெல்லை பகிர்ந்திருக்கும் படங்கள் சூப்பர். கடல் அழகா இருக்கு அமைதியாக இருக்கு.

    அபாயப் பகுதியைத் தாண்டி போனீங்களா நெல்லை? தண்ணீர் கூடியதுன்னு சொன்னதால் கேட்கறேன்.

    எப்படியோ கரைக்கு வந்துட்டீங்களே எல்லாரும்.

    எதனால் திடீரென்று தண்ணீர் கூடுகிறது? மழையாக இருந்தால் எதிர்பார்க்கலாம். ஆனால் மற்றபடி?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடல் அல்லவா? நீரோட்டத்தின் திசை, நேரத்தைப் பொறுத்து மாறுபடும். இதை நீங்கள் பல இடங்களில் கண்டிருக்கலாம்.

      நீக்கு
  13. சென்னையில் என்றால்? சென்னையின் எல்லைக்குள்ளா இல்லை கொஞ்சம் வெளியிலா!!!! ஹிஹிஹிஹி...

    சென்னையில் கிட்டத்தட்ட எல்லாமும் பார்த்தாயிற்று. மகாபலிபுரம் மட்டும் மீண்டும் ஒரு முறைசென்றால் நன்றாக இருக்கும் இப்ப புகைப்படங்கள் எடுக்க முடியுமே அதனால்!!! முன்பு ஏதோ எடுத்தவை இருக்கின்றன பார்க்க வேண்டும்.

    எனக்குச் சென்னையை விட இந்தியாவில் பார்க்க விரும்பும் இடங்கள் நிறைய...என் லிஸ்ட் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பெரிது. குறிப்பாக இமயமலைப் பகுதியைச் சுற்ற வேண்டும் என்ற ஆசை உண்டு. அது போல மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை.இங்கு கர்நாடகா உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. எனக்கும் ஜல்பு, பல்பு வைத்துக் கொண்டிருக்கிறது. இருமலும். ஜூரம் இல்லை. நானும் இம்முறை மாத்திரை எதுவும் சாப்பிடவில்லை இதுவரை. ஆவிபிடித்தல், gargling என்று. சளியால் காது அடைத்திருந்தது இப்ப அது க்ளியர் ஆகிவிட்டது தொண்டையும் பெட்டர்.

    இன்னும் கொஞ்சம் சளி அதுவும் வெளியில் வந்துவிட்டால் சரியாகிடும். சூடு தண்ணிதான் எப்பவும், மிளகு ரசம், இவை பலன் அளிக்கின்றன. கூடவே கஷாயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்.

      நீக்கு
    2. கௌ அண்ணா உங்களுக்கு இப்ப உடலநலம் ஓகேவா...மூச்சுத் திணறலும் சரியாகி நடைப் பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவீர்கள்.

      கீதா

      நீக்கு
  15. கனடா செய்தி இங்கும் தலைநகர் ப்ளாட் வாழ்க்கையில் இதே நிலைதான்.

    பாடல்கள் பலதும் உண்டு.

    இமயமலை சாரல் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. ஓரளவுக்கு தென் இந்தியா, கர்நாடகா பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய புதன் பகுதி நன்றாக உள்ளது. எழுதுவதில் ஆண், பெண் வித்தியாசங்கள் இருப்பது உண்மைதான். அவரவர் மனோ பாவங்களைப் பொறுத்து எழுத்துகள் உருவாகும் என நினைக்கிறேன். பெயரை வைத்தும் பெண்ணா, ஆணா என ஆரம்பங்களில் கண்டு கொள்ள முடியாது போகும். நான் முதலில் பிரபல எழுத்தாளர் "புஷ்பா தங்கதுரை" அவர்களுக்கு அப்படி குழம்பியிருக்கிறேன்

    சென்னையில் பதினைந்து வருடங்கள் தங்கியும் பல இடங்களை பார்க்க முடியாமல் போயிருக்கிறது..

    பழைய பாடல்கள் பலதும் இன்றும் அதன் பொருளினால், நினைவில் நிற்பவை.

    படமும் பதமும் மனதை கவர்ந்து. கடலில் நீர் மட்டம் உயர்வது போல், வாய்க்கால், மற்றும் ஆற்றிலும் உணர முடியும். நெல்லைத்தமிழரின் சூட்சும உணர்விற்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் முதலில் பிரபல எழுத்தாளர் "புஷ்பா தங்கதுரை" அவர்களுக்கு// ஒரு பெண் இப்படி பச்சை பச்சையாக எழுதுவாளா என்றுகூட கமலா ஹரிஹரன் மேடம் யோசிக்கவில்லையே... ஓ.. அப்போ சின்னப் பெண்ணா?

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    சகோதரர் கௌதமன் அவர்களது பக்கம் உண்மை. இன்று என் நிலையும் கடந்த பத்து நாட்களாக இதேதான். ஜலதோஷம் என்றுதான் நிவர்த்தியாகுமென தெரியாது திணறி வருகிறேன். கைவசம் மருந்துகள் அவ்வப்போது குணமாக்குகிறதே தவிர, மீண்டும், மீண்டும் ஜலதோஷம் ஒருநாள் விட்டு வரும் கார்ப்பரேஷன் வாட்டர் மாதிரி, காலை நேரம் முழுவதும் கொட்டித் தீர்க்கிறது. இந்த குளிர்காலம் வரை இந்த நிலையோ என்னவோ தெரியவில்லை.

    தற்போது தங்களுக்கு எப்படி உள்ளது கௌதமன் சகோதரரே. ? விரைவில் உங்களுக்கும் பூரண குணமாக வேண்டிக் கொள்கிறேன். "ஜலதோஷத்திற்கு தான் இப்படி அனைவரையும் பற்றி பீடித்துக் கொண்டிருப்பது ஒரு தோஷமாக தோன்றவில்லை போலும். :)) நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருடம் மிகக் குளிர்காலம் இருக்கப்போகிறது என்று பல ஜோசியர்கள் சொல்லியுள்ளார்கள். (ஒருவேளை கம்பளி கம்பெனி கமிஷனா இல்லை நிஜமாகவே கோள்களின் நிலையா என்று தெரியவில்லை)

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. கேள்வியும் பதிலும் நன்றாக இருக்கிறது

    உங்கள் கேள்விகளுக்கு பதில் எப்படி சொல்வது பிடித்த பாடல்கள் நிறைய இருக்கிறது
    ஓட்டல்கள் அந்த நேரம் பசியாற்ற வயிற்றை கெடுக்காமல் இருத்தல் நலம் என்று பார்ப்போம் அவ்வளவுதான்

    சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கே !
    இந்தியாவில் நம்மால் எல்லாம் போக முடியுமா என்று நினைத்த கைலாயம் அழைத்து சென்றார் என் கணவர் அது மகிழ்ச்சி அளித்தது மானசரோவர் ஏரி அங்கு உள்ள அமைதி ஏரியின் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்.
    நைனிடால் உத்தரகாண்டில் பார்க்க விரும்பினோம் சுற்றுலா அழைத்து செல்பவர் அப்போது அதை மட்டும் கைவிட்டார் அது என் கணவருக்கு கொஞ்சம் வருத்தம்


    பதிலளிநீக்கு
  20. படமும் பதமும் பகிர்ந்த படங்களும் செய்திகளும் அருமை. ஹலோவின் சமயத்தில் பானுமதி பகிந்து இருக்கிறார் இறந்தவர்குக்கு மரியாதை செய்யும் காலம் .
    காசியில் இறந்தவர்களின் சாம்பலை (அஸ்தி) கரைக்க முடியாவர்கள் அனுப்பி வைத்தால் அதை பத்திரப்படுத்தி லாக்கரில் வைத்து இருப்பார்காளாம் எப்போது வசதியோ அப்போது கரைத்து கொள்ளலாம் என்று நகரத்தார் சத்திரத்தில் சொன்னார்கள் .

    பதிலளிநீக்கு
  21. கெளதமன் சார் சொன்னது போல நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் தான்.
    ஆனால் சில நோய்களுக்கு மருத்துவமனை போய்தான் ஆக வேண்டும்.
    நீங்கள் நலமாக இருங்கள் மழை, குளிர்காலம் அதற்கேற்ற உணவு, வெந்நீர் குடித்தல், சுக்கு, இஞ்சி , வெற்றிலை, துளசி , ஓமவல்லி கசாயம் மிளகு சேர்த்து இடை இடையே குடிக்கலாம்
    மூச்சு பயிற்சி செய்யலாம்
    விரைவில் நலம்பெற பிராரத்தனைகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!