சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விக்கு ..
பதில் : இதை எழுதியவர், குமுதம் ஆசிரியர்கள் குழுவில் ஒருவரான, ஜ ரா சுந்தரேசன் (அப்புசாமி - சீதாப்பாட்டி புகழ் பாக்கியம் ராமசாமி)
தகவல் : வேதா கோபாலன் ( facebook பதிவு)
= = = = = = = = = = = = = =
கேள்வி பதில்கள்:
ஜெயக்குமார் சந்திரசேகரன்:
அத்திவரதர் மரத்தால் செய்யப்பட்டவர். மரம் நீரில் மிதக்கும், வரதர் சிலை மிதக்காமல் இருக்க என்ன செய்கிறார்கள்?
# அத்தி மரம் அடர்த்தி மிக்கது. அது போக சிலை ஒரு பெட்டியில் வைக்கப் படுவதாகவும் சில கல் அமைப்புகள் உடன் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது.
& அத்தி மரம் நீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது என்றும், அதனால் நீரில் கொஞ்ச நாட்கள் ஊறினால், நீரில் மிதக்கும் தன்மை போய், நீரில் மூழ்கிவிடும் என்றும் சொல்கிறார்கள். தற்கால sponge போன்ற அமைப்பாக இருக்குமோ?
பானுமதி வெங்கடேஸ்வரன்:
பிரபலங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது, அவர்களோடு புகைப்படம் அல்லது செல்ஃபி எடுத்துக் கொள்வது போன்றவற்றை செய்திருக்கிறீர்களா?
# சில கர்நாடக இசை வித்வான்களுடன் படம் எடுத்துக் கொண்டதுண்டு.
& selfie காலம் வந்தபிறகு, எந்த பிரபலத்தையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கால் வாய்ப்பாடு, அரை வாய்ப்பாடு, முக்கால் வாய்ப்பாடுகள் தெரியுமா?
# தெரியும். அரைக்கால் உட்பட.
& ஹி ஹி - எனக்கு ஒன்றாம் வாய்ப்பாடு தவிர - மற்ற எல்லா வாய்ப்பாடுமே கால் வாசிதான் ஒழுங்காக சொல்லத் தெரியும். அதனால் கணக்கு வகுப்புகளில் ஆசிரியரிடம் 'அறை' வாங்கி, 'கால்' கடுக்க பெஞ்சு மேலே நின்னு 'முக்கால்'வாசி நாட்கள் அழுதிருக்கிறேன்! (ஒருமுறை ஏழாம் வாய்ப்பாடு ஒப்பிக்கும்போது, ஏழஞ்சு நாப்பத்தஞ்சு என்று சொன்னேன். கணக்கு ஆசிரியர் தண்டபாணி, 'என்னது? ஏழஞ்சு நாப்பத்தஞ்சா ! உன் அப்பா ஜெ மு சாமி கடையில இப்படி எண்ணி பணத்தைக் கொடுத்தார்னா ஜெ மு சாமி முதலாளி சீக்கிரமே தலையில துண்டைப் போட்டுகிட்டுப் போகவேண்டியதுதான்' என்றார்!)
நெல்லைத்தமிழன் :
1. புயல் மழை போன்று இயற்கை பாதிப்புகளால் ஏழைகள் பாதிக்கப்பட்டால் அரசு உதவலாம். ஆனால் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து ஆற்றின் அல்லது மலையின் ஓரத்தில் வீடுகளைக் கட்டிக்கொண்டு, அவை முழுவதுமாக இடிந்தால் நாம் ஏன் பரிதாபப்படவேண்டும்?
# இதை இரண்டு வகையாகப் பார்க்கலாம். தெரியாமல் ஏமாந்து தவறான இடத்தில் அல்லது தவறான வகையில் வீடு கட்டிக் கொண்டு அதில் குடி இருப்பவர்களின் பிரச்சினை. இரண்டாவது என்னதான் நடக்கும் பார்த்து விடலாமே என்ற தைரியத்தில் அப்படி இருப்பவர்கள். இதற்கு மேலாக யாரோ ஒருவர் குற்றம் செய்திருந்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டுள்ள அரசாங்கம் அதை செய்யவில்லை. அப்படி இருக்கும்போது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெரும் இடர் வந்தால் அரசு தரப்பில் செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கத்தான் செய்யும்.
2. உணவு எதனால் ஒவ்வொரு இடத்திற்கும் வேறுபாடு அடைகிறது? திருநெல்வேலியில் சொதி, மற்ற இடங்களில் இல்லை. பாலக்காட்டில் உள்ள எரிசேரி போன்றவை மற்ற இடங்களில் இல்லை. என்ன காரணமாக இருக்கும்?
# ஆதிகாலத்தில் அந்தந்த இடத்தில் கிடைக்கும் பொருள்கள்,, அந்த ஊர் தண்ணீரின் ருசி , அங்கு பின்பற்றப்பட்டு வரும் வசதிகள் இவற்றைப் பொறுத்து உணவின் ருசியும் செயல் முறையும் மாறுபடும்.
3. சைவ உணவு சாப்பிடுபவர்கள் சாத்வீகமானவர்கள், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அப்படி அல்ல என்ற பொது எண்ணம் சரியா?
# உணவிலும் சாத்வீக, ராஜச ,தமஸ் என்று மூன்று பிரிவுகள் இருப்பதாக நாம் பாரம்பரியமாக நம்பி வருகிறோம். அந்தந்த உணவு அந்தந்த குணத்தை வளர்க்கிறது என்று சொல்வார்கள். சன்னியாசிகள் இச்சையைத் தூண்டும் பொருள்கள் என்று சிலவற்றை ஒதுக்கி வைப்பது இல்லையா ? அது மாதிரி.
4. தமிழகத்தில் பூரி, சப்பாத்தி போன்றவை 70-80 ஆண்டுகளுக்கு முன்பு கிடையாது. பிரியாணி 30 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. இப்படி உணவு மாற்றம் அடைந்திருக்கும்போது எதை வைத்து தமிழக பாரம்பர்ய உணவு இட்லி தோசை என்று சொல்கின்றனர்?
# காலம் காலமாக உண்ணப் பட்டு வரும் உண்டிகள் பாரம்பரியமானவை என்று சொல்வது தவறு இல்லையே. இன்னும் 50 ஆண்டுகள் போனால் பிரியாணி, பிட்ஸா கூட தமிழ்நாட்டின் பாரம்பரியம் ஆகிவிடும்.
5. திரையுலகிற்கு வரும்வரை சாதாரணமாக சீட்டிப் பாவாடை உடுத்திக்கொண்டு வேலை பார்த்த பெண்கள், நடிகை ஆனதும் ஆப்பிள் ஜூஸ், விலையுயர்ந்த கார் என்று உருமாறிவிடுவதேன்?
# ஆப்பிள் ஜூஸ் , ஆடியோ கார் , ரேவ் பார்ட்டி இதெல்லாம் தான் முன்னுக்கு வந்தாகி விட்டது என்பதை உணர்த்தும் அடையாளங்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
& எல்லோருமே 'ஞான ஒளி' பட சிவாஜி கணேசன் மாதிரி, பெரிய செல்வந்தர் ஆனபோதும் கூழ் குடிப்பார்களா என்ன!
= = = = = =
படமும் பதமும் :
பானுமதி வெங்கடேஸ்வரன் :
நம்மூர் பல்லாங்குழி, இங்கு(கனடாவில்) ஒரு மாலில்.
- - - - - - - - - - - -
நெல்லைததமிழன் :
அட... மரத்தின் வேர் பகுதி மேலே இருக்கிறதே என்று தோன்றுகிறதா? காட்சிப் பிழை இல்லை. மரம் சரிந்துவிட்டது. ஆனால் வேர்ப்பகுதி முழுமையாக வெளியே வரவில்லை. அதனால் சரிந்த மரத்தை வெட்டியெடுத்திருக்கிறார்கள். இது திருமாலிருஞ்சோலையில், நூபுர கங்கை செல்லும் வழியில் எடுத்த படம்.
மதுரை புறநகர்ப்பகுதியில் ஒரு கடையின் அருகே இந்த ஆட்டைக் கட்டிவைத்திருந்தார்கள். அளவில் ரொம்பப் பெரிதாக இருந்தது. அதனால் படம் எடுத்தேன். நேர்ந்துகொண்டு கட்டிவைத்திருக்கிறார்களா இல்லை விற்பதற்கா என்று தெரியவில்லை.
பக்ரீத் போன்ற பண்டிகைகள் வரும் சமயத்தில் பெங்களூரில் மார்க்கெட் செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான ஆடுகளைக் கட்டிவைத்திருப்பார்கள், கூடவே நிறைய புல்லும் போட்டிருப்பார்கள். ஆடுகளோ, தங்கள் மீது கருணையுடன் உணவு கொடுக்கிறார்கள் என்று நினைக்குமா இல்லை தங்கள் எடையை ஏற்றுவதற்காக இப்படிச் செய்கிறார்கள், அடுத்து கொலைக்களத்துக்குத்தான் என்று நினைக்குமா? எனக்கு அவைகளின் குரலைக் கேட்டாலே மனது என்னவோ செய்யும்.
= = = = = = = = = =
KGG பக்கம்.
ஊஞ்சல் !
எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் ஊஞ்சலை நான் முதன்முதலில் பார்த்தது எப்போது என்று யோசித்துப் பார்த்தேன்.
கிட்டத்தட்ட ஐந்து வயது சமயம். நாகையில் பக்கத்து வீட்டுப் பணக்காரர் ஒருவரின் பெண்ணுக்கு கல்யாணம். வாசலில் தெருவின் முக்கால் பகுதி நீளத்திற்கு கல்யாணப் பந்தல் போட்டிருந்தார்கள்.
அம்மா, 'மாப்பிள்ளை காசி யாத்திரை முடித்தவுடன், ஊஞ்சல் போடுவார்கள்' என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
நானும், மற்ற குடித்தன சிறுவர்களும் (ஆமாம், சிறுமிகளும்தான்!) அது என்ன நிகழ்வு என்று காண ஆவலுடன் காத்திருந்தோம்.
காசி யாத்திரை முடிந்ததும், கல்யாணப் பந்தலில் உறுதியான ஓர் இடத்தில், ஊஞ்சல் அமைத்தார்கள். அதில் மாப்பிள்ளையும் பெண்ணும் அமர்ந்து மிக மிக மெதுவாக அசைக்கப்பட்டார்கள். பாடல்கள், கலர் சாதங்கள் கொண்டு தலையை சுற்றிப் போடுதல் எல்லாம் நடந்தது.
அதன் பிறகு எங்கள் கிராமத்திற்கு சென்றிருந்த சமயம், சித்தப்பா வீட்டில் ஊஞ்சல் பார்த்த ஞாபகம். சித்தப்பா அதில் உட்கார்ந்து மெதுவாக ஆடியபடி, வெற்றிலை போட்டுக்கொண்டார் என்று நினைவு. நான் மிகவும் சிறியவனாக இருந்ததால், ஊஞ்சல் எல்லாம் பெரியவங்க சமாச்சாரம் எனக்கு அது வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன்.
ஐந்தாம் வகுப்புப் படித்தபோது நாகையில் நாங்கள் குடிபுகுந்த வீட்டில், ஏற்கெனவே குடியிருந்தவர்கள் முதல் போர்ஷனில் இருந்தனர். அவர்கள்தான் வீட்டு ஓனர் என்று ஞாபகம். வீட்டு நுழைவு வாசல் அருகிலேயே பெரிய ஊஞ்சல். அநேகமாக ஆறடி நீளம் இரண்டரை அடி அகலம் இருந்திருக்கலாம். நாலு பக்கங்களிலும் கனமான இரும்புச் சங்கிலிகளுடன், உறுதியான ஊஞ்சல்.
அந்த வீட்டில் (Rolling mill) வேலைக்குச் செல்லும் சேதுராமன், அவரின் அம்மா, சேதுராமனின் மனைவி, மற்றும் அவர்களின் குழந்தைகள். கப்பு என்னும் கற்பகம், ருக்கு என்னும் ருக்குமணி (இருவரும் என்னை விட மிகவும் பெரியவர்கள்) இருந்தனர். ஊஞ்சல் பக்கம், அவர்களுடைய அப்பாவோ, மற்ற குடித்தனங்களை சேர்ந்த வயது வந்த ஆண்களோ வீட்டில் இருந்தால், அந்தப் பெண்கள் வீட்டின் உள் அறையிலிருந்து வெளியே வரமாட்டார்கள். மீதி மூன்று பையன்களும் என்னை விட வயதில் சிறியவர்கள். சங்கர், ரவி, சேகர். சங்கர் நான்காம் வகுப்பு. ரவி & சேகர் பள்ளிப் பருவம் வராத பாலகர்கள். பெரும்பாலும் வீட்டிற்குள் ஆடைகள் இன்றி காணப்படுவார்கள்.
விடுமுறை நாட்களில், எனக்கும் சங்கருக்கும், ஊஞ்சல் பலகையில் ஆடுவதற்கு விருப்பம் அதிகம். ஆனால் ஊஞ்சலில் கஷ்டப்பட்டு ஏறி உட்கார்ந்தாலும், ஊஞ்சலை உந்தி ஆட்டுவதற்கு எங்கள் கால்களுக்கு நீளம் போதாது!
பெரிய அண்ணன் அப்போது பாலிடெக்னிக் சின்ன அண்ணன் எட்டாம் வகுப்பு. அவர்கள் இருவரும் ஊஞ்சல் பக்கம் வரமாட்டார்கள். சிறிய அண்ணன் பெரும்பாலும் தெரு தோழர்களுடன் விளையாட வீதிக்கோ அல்லது அவர்களின் வீட்டுக்கோ சென்றுவிடுவார். தெரு முனையில்தான் பாம்பே கண்ணன் (அண்ணனின் நண்பர்) வீடு. தெருவில் சமய வயது பையன்கள் எல்லோருமே அண்ணனுக்கு நண்பர்கள்.
வீட்டிற்குள் ஆண் நண்பர்கள் யாரும் வருவதற்கு தடை உத்தரவு - ஊஞ்சல் வீட்டில் இரண்டு பெரிய பெண்கள் இருந்ததால். எப்பொழுதாவது ருக்குவின் தோழி இந்திரா, அவளுடைய தங்கை சந்திராவை அழைத்துக்கொண்டு ருக்குவை காண வருவதுண்டு.
கோடை விடுமுறை நாட்களில், ஷங்கரின் அத்தை பையன் ஜக்கு ஊரிலிருந்து, இவர்கள் வீட்டிற்கு வந்து தங்குவான். ஜக்குவிற்கு என்னுடைய சிறிய அண்ணனின் வயது.
அந்த நாட்கள், எனக்கும், ஷங்கருக்கும் பொன்னான வாய்ப்பு.
ஊஞ்சலில் அந்த ஜக்கு, ஷங்கர், நான், ரவி, சேகர் எல்லோரையும் வைத்து நன்றாக வீசி ஊஞ்சல் ஆட்டுவான். ரவி & சேகர் எப்போதுமே ஊஞ்சல் பலகையில் பின் பக்கம் பார்த்து அமர்ந்து, பின் பக்க சங்கிலியை இறுகப் பிடித்துக்கொண்டு இருப்பார்கள்.
இந்திரா & சந்திரா வந்தால், சந்திராவை ஊஞ்சலில் என் பக்கத்தில் உட்காரவைத்துவிட்டு, இந்திரா ருக்குவுடன் அரட்டை அடிக்க ரூமுக்குப் போய்விடுவாள்.
இப்போது ஊஞ்சலில் 5 + 1 பேர். ஷங்கர், kgg, சந்திரா, ரவி, சேகர், + ஜக்கு.
சும்மா ஊஞ்சல் ஆடியிருக்கலாம் அல்லவா? அங்கேதான் வந்தது ஜக்குவின் வில்லத்தனம்.
ஊஞ்சல்தான் பஸ். ஷங்கர் கண்டக்டர். சேகர் & ரவி permanent பயணிகள், நானும் சந்திராவும் பயணிகள். ஜக்கு டிரைவர்.
ஜக்கு ஊஞ்சலை கீழே இறங்கி வீசி ஆட்டிவிட்டு ஜம்ப் செய்து ஊஞ்சலில் உட்கார்வான். ஊஞ்சல் ஆடும்போது சங்கர் என்னிடம் எங்கே போகவேண்டும் என்று கேட்பான். நான் 'திருவாரூர்' என்று சொல்வேன். உடனே அவன் என்னிடமிருந்து கற்பனையாக காசு வாங்கிக்கொண்டு கையில் உள்ள ஒரு சினிமா நோட்டீஸிலிருந்து ஒரு பகுதியைக் கிழித்து இந்தா டிக்கெட் என்று கொடுப்பான்.
சந்திரா, 'சிக்கல்' (ஊர்) ஒரு டிக்கெட் வாங்கிக்கொள்வாள். சந்திராவின் அக்கா இந்திரா- தில்லானா மோகனாம்பாள் (போல நினைத்து ) நாட்டியம் ஆடுவார். நவராத்திரி சீசனில், ஒன்று விட்டு ஒருநாள் - இரண்டு மூன்று நாட்களாவது இந்திராவும் ருக்குவும் ' சாதூரியம் பேசாதடி; என் சலங்கைக்கு பதில் சொல்லடி' பாட்டுக்கு நாட்டியம் ஆடுவார்கள். ("ஆனாலும் நீ இந்திராவுக்கு ஆட்டத்தை கடைசியில் விட்டுக்கொடுத்திருக்கக் கூடாதுடி ருக்கு" என்று சொல்வார் கப்பு!) எனக்கு அந்த நாட்களிலிருந்தே நாட்டியம் பார்ப்பதில் சுவாரஸ்யம் கிடையாது!
நாகை, அந்தணப்பேட்டை, சிக்கல் (சிக்கில்), கீவலூர் (கீழ்வேளூர்), கூத்தூர், அடியக்கமங்கலம், திருவாரூர் என்பது ரயில் நிலையங்களின் வரிசை.
ஆனால் பாருங்க - ஜக்கு ஓட்டுகின்ற பஸ் முதல் நிறுத்தமே நான் கேட்கின்ற ஊர்தான். ஐந்து தடவை ஊஞ்சல் ஆடியபிறகு, 'திருவாரூர் வந்துடுச்சு இறங்கிக்க' என்று சொல்லி இறக்கி விட்டுவிடுவான். சந்திரா வாங்கும் டிக்கெட் எந்த ஊரோ அது பத்து நிமிடங்கள் ஊஞ்சல் ஆடியபிறகுதான் வரும். சந்திராவிற்குப் பக்கத்தில் உட்கார்ந்து உற்சாகமாக பஸ் ஓட்டுவான் ஜக்கு.
அப்புறம் மீண்டும் திருவாரூர் நிறுத்தத்தில் ஊஞ்சல் நிற்கும் வரை நான் தூண் அருகே நின்று காத்திருப்பேன்.
மீண்டும் பஸ் ஓடத் தொடங்கியதும் நான், அமெரிக்கா, லண்டன் என்று எந்த ஊருக்கு டிக்கெட் வாங்கினாலும், சந்திரா பயணம் செய்கின்ற அந்தணப்பேட்டை / சிக்கில் ஊர்கள்தான் போய்ச் சேர அதிக நேரம் ஆகும்!
ஆறாம் வகுப்புப் படிக்கும் போது வேறு வீடு மாற்றி வந்துவிட்டதால் ஐந்து வீச்சில் அமெரிக்கா செல்லும் பஸ் பயணம் அதோடு போயிற்று!
அதன் பின் எவ்வளவோ ஊஞ்சல் அனுபவங்கள் இருந்தபோதிலும் நினைவில் வருவது அந்த ஐந்தாம் வகுப்பு ஊஞ்சல்தான்!
= = = = = = = = = = =
2026 ஆம் ஆண்டு உங்கள் எல்லோருக்கும், மிகவும் நல்ல ஆண்டாக, நினைத்தவை எல்லாவற்றையும் அடையும் ஆண்டாக அமைய, எங்கள் வாழ்த்துகள் !
ஊஞ்சல் பல எண்ணங்களை மனதுக்குக் கொண்டுவருகிறது என்றாலும் மிகச் சிறு வயதில் பெரியப்பாவின் பிரபந்த வகுப்புக்குப் போகாமல் ஊஞ்சலின் கீழே (அப்போ கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்துக்கொண்டு) தூங்கியது நினைவுக்கு வருது
பதிலளிநீக்குஊஞ்சலின் கீழே தூக்கமா! ஊஞ்சலில் உட்காருபவர்கள்
நீக்குமுதல் உதை நம் மீதுதானே விழும்!
புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி கேஜிஜி!
பதிலளிநீக்குஎபியில் பூக்கவிருக்கும் புத்தாண்டில் பலப்பல புதுமைகளைப் படைக்க எபி ஆசிரியர் குழுவிற்கும் எங்களின் கனிந்த வாழ்த்துக்கள்!..
அட! புதன் கிழமைகளில் இந்தப் பக்கம் எட்டிப் பார்த்திருக்கிறீர்கள்! நன்றி, நன்றி!
நீக்குவீட்டிற்கு ஊஞ்சல் ஒரு அலாதி அழகு தரும். சின்ன வயதில் கிராமத்திற்குச் சென்றபொழுது ஊஞ்சல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு,ஜெயலலிதாமாதிரி 'ஒரு நாள் யாரோ, என்னப் பாடல் சொல்லித் தந்தாரோ.." என்று பாட முயல, என் அண்ணா, பின்னாலிலிருந்து ஊஞ்சலை வேகமாக உதைக்க, கீழே விழாமல் தப்பித்தேன்.
பதிலளிநீக்கு:))) நல்ல அனுபவம்!!
நீக்குநெல்லை பகிர்ந்திருந்த படத்தில் வேரோடு விழுந்திருந்த மரம் மனதை என்னவோ செய்தது. ஆடு அப்படி ஒன்றும் பெரிதாக தெரியவில்லையே?
பதிலளிநீக்குஎனக்கும் மனதை ஏதோ செய்தது. மரம் நம்மைவிட வயதானதாக இருக்கும்
நீக்குஆடு ரொம்ப பெரியது. படத்துல அந்த இம்பேக்ட் வரலை
புத்தாண்டில் எ.பி.யில் என்னென்ன புதுமைகள் செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள்?
பதிலளிநீக்குஅடுத்த புதன் கேள்வியா?
நீக்குபிரபலங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது, அவர்களோடு புகைப்படம் அல்லது செல்ஃபி எடுத்துக் கொள்வது போன்றவற்றை செய்திருக்கிறீர்களா?//
பதிலளிநீக்குஇதுவரை அப்படியான வாய்ப்புகள் இல்லை என்றே நினைக்கிறேன். அப்படியே ஒரு வேளை பார்க்கவோ சந்திக்கவோ நேர்ந்தாலும் இயல்பாக அமைந்தால் ஓகே. நானாகச் சென்று கேட்கத் தோன்றாது.
கீதா
ஆம்.
நீக்குமுன்னொரு காலத்தில் குமுதம் அலுவலகத்தில் நான் நுழைந்த பொழுது
பதிலளிநீக்குமுன் பக்க ஹாலில் டேபிள் சேர் போட்டு ஒருவர் அமர்ந்திருந்தார். பார்த்தவுடனேயே அவர் ஜராசு என்று தெரிந்து விட்டது. என் மனத்திற்கு பிடித்த எழுத்தாளரைப் பார்த்த சந்தோஷத்தில் பரவசமாகி பவ்யமாக வணக்கம் சொன்னேன். எதிர் நாற்காலியில் அமரச் சொன்னார். என் சந்தோஷத்தை அடக்க முடியாமல் "உங்கள் கதைகள் என்றால் எனக்கு வெல்லக்கட்டி.. மிகவும் பிடிக்கும்" என்றேன். அவர் படக்கென்று "அப்படி உங்களுக்குப் பிடித்த கதை ஒன்றின் பெயரைச் சொல்லுங்களேன்.." என்றார், புன்னகைத்தவாறே. நானும் கொஞ்சம் கூடத் தயங்காமல் 'பாசாங்கு' குறு நாவல் ஸார்.." என்றேன். இந்த உடனடி பதிலை அவர் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. சட்டென்று டேபிளின் குறுக்காக கை நீட்டி என் விரல்களைப் பற்றிக் கொண்டு "அப்படியா.." என்று முகம் மலர்ந்தார். நான் சொன்ன பதிலை மிகவும் ரசித்து அனுபவித்தார் என்பதோடு அவர் எதிர்பார்த்தேயிராத ஒரு பதிலாக அது இருந்தது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
எதற்கு இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் அத்தனை பேரும் அப்புசாமி தொடரை ஆஹா ஓஹோ என்று ஒருமித்த பாராட்டாய்ப் புகழ்ந்து கொண்டிருக்க ஒரு எழுத்தாளரின் உள் மனசு தான் ரசித்து எழுதிய கதையொன்றை தானும் ரசித்துப் பாராட்டிய ஒருவனைக் கண்டு கொண்ட சந்தோஷம் இது!
எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் இயல்பான தனிப்பட்ட மகிழ்ச்சி இது!
நீங்களும் ஜ.ரா.சுந்தரேசன் அவர்கள் எழுதிய 'பாசாங்கு' குறு நாவல் எங்கேயும் கிடைத்தால் தவறாது வாசித்துப் பாருங்கள்!
தகவல்களுக்கு நன்றி.
நீக்கு//2026 ஆம் ஆண்டு உங்கள் எல்லோருக்கும், மிகவும் நல்ல ஆண்டாக, நினைத்தவை எல்லாவற்றையும் அடையும் ஆண்டாக அமைய// ததாஸ்து! ஓம்! ஆமென்! அமீன்!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஊஞ்சல், பல நினைவுகளைக் கொண்டு வருகிறது. கூடத்தில் ஊஞ்சல் வீட்டிற்கே ஒரு அழகைத் தரும்.
பதிலளிநீக்குதோட்டத்தில் ஊஞ்சல் இருந்தால் அது ஒரு அழகு...பச்சைக்கு நடுவே புத்தகத்துடன், பிடித்த இசையுடன் இயற்கையின் ஒலிகளுடன் ஆஹா!!!. பால்கனியில் இருந்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டே கனவு காணலாம்! யோசிக்கலாம்....
தோட்டத்தில் சின்ன ஊஞ்சல் என்றால் குழந்தைகளாய் ஆடி ஆடிக் குதூகலிக்கலாம்!
கீதா
ஆஹா, ஆஹா!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி .
நீக்குபிரபலங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது, அவர்களோடு புகைப்படம் அல்லது செல்ஃபி எடுத்துக் கொள்வது போன்றவற்றை செய்திருக்கிறீர்களா?//
பதிலளிநீக்குஇப்போது நினைவுக்கு வருகிறது. மகன் இங்குஇருந்த போது, சென்னையில்நாங்கள் இருந்ததால், மகனும் நானும் சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரிக்குச் சென்றோம். நாரதகானசபா....(நானும் மகனும் நிறைய கச்சேரிகளுக்குச் சேர்ந்து சென்றதுண்டு. பொக்கிஷமான நினைவுகள்!)
அப்போது டிக்கெட் எடுத்தும் சீட் இல்லை. மேடையில் அமரலாம் என்றார்கள். ஆஹா!!!! எனவே சஞ்சய் சுப்ரமணியத்தின் அருகில் என்றால் மிக அருகில் - பக்க வாத்தியக்காரர்கள் அமர்ந்திருந்த இடம் அருகில்....அமர்ந்தோம். நேருக்கு நேர் முகம் சந்திக்கும் அளவில்.
அசாத்தியமான கச்சேரி. நானும் மகனும் அனுபவித்து, இருவரும் ஒருவருக்கொருவர் சைகையால் பேசிக் கொண்டும் நோட்ஸ் எடுத்துக் கொண்டும் இருந்ததை சஞ்சையும் கவனித்தார். எங்களைப் பார்த்துப் புன்முறுவலும் செய்தார். ஆனால், ஏனோ கச்சேரி முடிந்ததும் ஃபோட்டோவோ ஆட்டோகிராஃபோ கேட்கத் தோன்றவில்லை. அப்படியான எண்ணமும் வந்ததில்லை.
கீதா
தகவல்களுக்கு நன்றி.
நீக்குநானும் சில கச்சேரிகள் நாரத கான சபா மேடையில் உட்கார்ந்து கேட்டது உண்டு.
நீக்குஅது ஒரு தனி சுகம் இல்லையா கௌ அண்ணா!!?
நீக்குகீதா
ஓ! கவிதை ஜராசு அவர்கள் எழுதியதா....அவரை நகைச்சுவை எழுத்தாளர் என்பது தெரியும் ஆனால் கவிதையிலும் அசத்தியிருக்கிறாரே!
பதிலளிநீக்குகீதா
அதே, அதே!
நீக்குதிரையுலகிற்கு வரும்வரை சாதாரணமாக சீட்டிப் பாவாடை உடுத்திக்கொண்டு வேலை பார்த்த பெண்கள், நடிகை ஆனதும் ஆப்பிள் ஜூஸ், விலையுயர்ந்த கார் என்று உருமாறிவிடுவதேன்?//
பதிலளிநீக்குஹாஹாஹா....அதாச்சும் அவங்க வாழ்க்கைத் தரம் அதாவது பொருளாதார ரீதியாக.... உயர்வதைச் சொல்லலாம்..இது சினிமா என்றில்லை இப்போதைய சானல்களிலும் டீவி ஷோக்களிலும்...பாடகர்கள, நடிகைகள் ஆனதும்...
என் மனதில் எழும் கேள்வி ஒன்றே ஒன்று....முதலில் நுழையும் போது, modest ஆக உடை அணிந்தவர்கள் இப்போது பிரபலமானதும் ஏன் கவர்ச்சியாக உடை அணிகிறார்கள்? சமீபத்தில் பிரபலமடைந்தவர்கள்...ஒரு வேளை மீடியா வெளிச்சத்திற்கு வந்தால் இப்படித்தான் அணிய வேண்டும் என்று இருக்கிறதா? பெற்றோரும் அதை அனுமதிக்கிறார்களே அவர்களும் கூட வந்து அவர்களோடு மேடையில் தோன்றி....அவங்களும் பிரபலமானவங்கதான்.....
கீதா
நியாயமான சந்தேகம்!
நீக்குநெல்லை உங்கள் கேள்வி திரை உலகம் என்றில்லை எல்லாருக்குமே பொருந்துமே!
நீக்குநாமளே கூட முன்ன எல்லாம் என்ன உடை அணிந்தோம்? இப்ப என்ன அணிகிறோம், உணவு சொல்லுங்க. முன்ன ஹோட்டல் போவீங்களா? இப்ப போகிறோம். வீட்டில் உள்ள சாமான்கள்....நாம் உபயோகிக்கும் பொருட்கள், கணினி, ஐபேட்...மொபைல்...இப்படி..ஆரம்பகாலத்தில் நாம் வாங்கிய மொபைலுக்கும் இப்ப வாங்கும் மொபைலுக்குமே மதிப்பீடு பார்க்கலாம்.
அலுவலகத்தில் முதலில் சேரும் போது பேருந்தில் அப்புறம் இரண்டு சக்கரம் அப்புறம் நான்கு சக்கரம்...அப்புறம் அதிலும் விலை கூடுதல் என்ற ரீதியில் உயர்வது போன்றுதான்...
கீதா