18.3.26

நாய் பூனை இவற்றை வளர்ப்பதன் காரணம் என்ன?

 

கேள்வி பதில்கள் :

கேள்வி கேட்டிருப்பவர் : ஜெயகுமார் சந்திரசேகரன்:

 வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள் என்று பாகுபடுத்துகிறோம். மற்ற பெரியவர்களை ஆச்சார்யர் என்று கூறுகிறோம் இவர்கள் ஆழ்வார்கள், இவர்கள் ஆச்சார்யர்கள் என்று பாகு படுத்தியது யார்?

ஆச்சார்யர்களுக்கும் ஆழ்வார்களும் என்ன வித்தியாசம்? 

அதே போன்று சைவத்தில் 63 நாயன்மார்களை வகைப்படுத்தியவர் யார்? 

வைணவம் போற்றிய சைவ ஆச்சார்யர்கள் உண்டோ? உண்டெனில் யார்?

பதில் அளித்திருப்பவர் : நெல்லைத்தமிழன் :

ஆழ்வார்கள் என்பவர்கள் வைணவக் கருத்துக்களை உள்ளடக்கிய திவ்யப் பிரபந்தம் என்ற தமிழ் மறையை இயற்றியவர்கள். திருமாலின் பெருமைகளில் ஆழ்ந்து அவர்கள் பால் பாசுரங்கள் இயற்றியதால் ‘ஆழ்வார்கள்’ என்று சொல்லப்பட்டனர். திராவிட வேதம் என்று சொல்லப்படுகிற நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில், பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது. கேட்காத கேள்வி: அந்த திராவிட வேதத்தில் அடையாளம் காட்டப்படும் வைணவ கோயில்களையே திவ்யதேசம் என்று அழைக்கின்றனர். திருப்பாற்கடல், பரமபதம் ஆகிய இரண்டைத் தவிர மற்ற 106 திவ்யதேசங்களும் இந்த நிலவுலகில் இருக்கின்றன. ஆக மொத்தம் 108 வைணவ திவ்யதேசங்கள்.

ஆழ்வார் பதின்மர் என்பர். பன்னிருவர் அல்லவா என்ற கேள்வி எழும். பெரியாழ்வாரின் புதல்வியான ஆண்டாளையும், நம்மாழ்வாரையே தன் தெய்வமாக ஏற்றுக்கொள்ட மதுரகவியாழ்வாரையும் பதின்மர் லிஸ்டில் சேர்க்கவில்லை. மதுரகவி ஆழ்வார், வேறு யாரைப்பற்றியும் பாடாமல், நம்மாழ்வாரைப் பற்றி மாத்திரம் பத்து பாசுரங்களால் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பதிகத்தைப் பாடினார். ஆனால் ஆண்டாள், திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடியிருக்கிறார். இருந்தும் அவரை ஆழ்வார்கள் லிஸ்டில் சேர்க்காததற்குக் காரணம், அவர், பூமியிலிருந்து தோன்றியவர், தாயாரின் அவதாரம் என்பதால், ஆழ்வார்களைவிட ஒரு படி உயர்ந்திருக்கிறார். 

ஆச்சார்யார்கள் என்பவர்கள், வேதம் மற்றும் திராவிட வேதம் (திவ்யப்பிரபந்தம்) இவற்றை அடிப்படையாக வைத்து, பரந்துபட்ட மனிதர்களிடம் வைணவத்தை வளர்த்தவர்கள். இராமானுசர் காலம் வரை ‘ஓராண் வழி சம்ப்ரதாயம்’ இருந்த தால், அதாவது வைணவ உலகத்துக்குத் தலைமையாக ஒருவரே இருந்து, அவர் மூலமாகவே வைணவக் கருத்துக்கள் ‘தலைவர்’ என்ற ஸ்தானத்திலிருந்து பரப்பப்பட்டன.  நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, ஆளவந்தார், இராமானுஜர்… என்று ஆச்சார்யர்கள் பட்டியல் நீளும். 

சைவ சமயத்தில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘திருத்தொண்டர் தொகை’ என்ற நூல்தான் 60 நாயன்மார்கள் என்று வகைப்படுத்துகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, சோழ மன்னர் காலத்தில் (இரண்டாம் குலோத்துங்கச் சோழன்) வாழ்ந்த சேக்கிழார் (அரசனுக்கு அமைச்சராக இருந்தவர்) பெரிய புராணம் என்ற நூலை இயற்றினார். இதில்தான் அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாறு கூறப்படுகிறது. 

வைணவம் போற்றிய சைவ ஆச்சார்யார்கள் உண்டா என்ற கேள்விக்கு நேரிடையான பதில், இல்லை என்பதே. இரண்டும் இரண்டு வெவ்வேறு பாதை. ஆழ்வார்களில், திருமங்கையாழ்வார் கையில் வேல் உண்டு (திருவாலியில் காணலாம்). இந்த வேல், திருஞானசம்பந்தர் அவருக்கு அளித்தது (வாதில் தோற்று, பரிசாகக் கொடுத்தது என்பர்).  சமீப நூற்றாண்டில், இந்த வேறுபாடு சிறிது சிறிதாக மறைகிறது. (முழுவதுமாக அல்ல. இன்றும் வைணவர்கள் திரிதண்டி சந்நியாசிகளை மாத்திரமே விழுந்து தொழுவர். அதாவது வைணவ ஆச்சார்யர்கள் முக்கோலை ஏந்தியிருப்பர்.  அத்வைத சந்நியாசிகள் ஒற்றைக்கோலை ஏந்தியிருப்பர்). அதனால்தான் தற்போதுள்ள அஹோபிலமடம் ஜீயர், காஞ்சி காமகோடி பீட பரமாச்சார்யரைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசும் காணொளி போன்றவற்றைக் காண இயலும்.

இந்த வேல் திருஞானசம்பந்தர் கொடுத்தது. 


அலங்காரங்கள் களைந்த நிலையில் திருமங்கையாழ்வார். 

= = = = = = = = = =

ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி. 

கேட்டிருப்பவர் : நெல்லைத்தமிழன். 

1) புதன் கேள்விகள் – யாருக்கு?

ஜிவி சாரிடம்- வாழ்வை பலியாக்கி, உயிரை உருக்கி நாவல் எழுதுகிறேன், கவிதைகள் எழுதிகிறேன் என்றெல்லாம் எழுத்தாளர்கள் சொல்கிறார்களே. அவ்வளவு கஷ்டமான விஷயமா நாவல்கள் எழுதுவது? அல்லது இவை ஓவர் பில்டப்பா?

ஜீவி பதில் : 

வா.பலியாக்கி
உ.உருக்கி ....
என்றெல்லாம் எந்த எழுத்தாளரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை.. 
கதைகள் எழுதுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. அதுவும் பிறர் பாராட்டும் படி எழுதுவதற்கு நிறைய பயிற்சியும் பொறுமையும் வேண்டும். பரவலாக வாசகர் அறியப்பட பிரபல பத்திரிகைகள் தயவு வேண்டும். இது லேசில் கிடைக்காத ஒன்று. சொல்லப் போனால் பிழைப்பு நடத்த-- அதுவும் ஒரு குடும்பத்தைக் கட்டிக்கொண்டு--
இந்தக் காலத்திற்கு இது ஒரு முழு நேரத் தொழிலே அல்ல. 

பொதுவாக ஒருவரின் ஆத்ம திருப்தி அல்லது புகழுக்கான ஏக்கமும் தான் பின்புல சக்தியாக இருந்து அவர்களை எழுதத்  தூண்டியிருக்கிறது.  லவலேசமும் பரவசமடையும்
வருமானம் இல்லாத இந்த எழுத்து துறையில் தங்கள் பொன்னான நேரத்தை அர்ப்பணித்துக் கொண்டு ... இது தான் 'வாழ்வை பலியாக்கி, உயிரை உருக்கி'க்கு அர்த்தமாகவும் இருக்கலாம்..

ஓ! முக நூல் பக்கம் போனால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.. எத்தனை எழுத்தாளர்கள்! எத்தனை புத்தக வெளியீடுகள்!
எழுத்தையே நம்பி அதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் எஸ்.ரா. போன்ற தற்காலத்து  எழுத்தாளர்களை நினைத்தால்...
கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது!..

2) அப்பாத்துரை சாரிடம்-நீங்கள் சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்தவர் என்று தெரியும். அந்த உயரத்தை எட்டியது முழுமையும் உங்களுடைய திறமையினால்தான் என்று நம்புகிறீர்களா அல்லது இறைவனின் சித்தம் அல்லது பூர்வ ஜென்ம வினை என்பதை உணர்ந்தேன் என்று நினைக்கிறீர்களா? எதிர்பாராத சில கதவுகள் திறந்து உங்கள் வாழ்க்கை மேம்பட உதவியிருக்கின்றனவா?

அப்பாதுரை பதில் :

உயர்ந்தேனா? :-)

பூர்வ ஜன்ம வினையில் எனக்கு நம்பிக்கையில்லை. (கலியுகத்தில் கை மேல் பலன் என்று நன்கு கண்டறிந்ததால் இருக்கலாம்)
கதவுகள் திறந்ததும் பல படுகுழிகள் மூடியதும் இறைவன் செயல். உயரத்தை (அது என்னானு தெரியலே) எட்டியது என் திறமையினால் என்று நினைத்தேன், நினைக்கிறேன்..
இறைவனின் கைச்சுவடு என் முதுகில் இருப்பதை உணரக் காலம் பிடித்தது. யார் என்னை உந்தித்தள்ளியது என்பதில் இப்போது கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.  சில அனுபவங்களை எனக்குள் வைப்பதே உசிதம்.

3) கீதா சாம்பசிவம் மேடத்திடம்:  நீங்கள் கற்றுக்கொண்ட யோகா மற்றும் தியானம் எந்த அளவு உங்கள் வாழ்க்கைக்கு உதவியிருக்கிறது இப்போது உதவுகிறது?

கீதா சாம்பசிவம் பதில் :

ஆசனப் பயிற்சி மனதை ஒரு முகப்படுத்தி ஆன்மிக மேம்பாட்டிற்கு நம்மைப் பண்படுத்திக்கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை. உண்மையான யோகம் செய்வதற்கு ஏற்ற மனோ நிலையையும் தரும்.    நான் ஆசனப் பயிற்சி செய்து கொண்டிருந்தவரை எல்லா வீட்டு வேலைகளையும் நானே செய்தேன்.  பிராணாயாமம் போன்றவற்றால் இரவில் நன்கு தூங்கினேன். காலையில் மணி அடிச்சாப்போல் நான்கரைக்கு விழிப்பு வந்துடும். உடல் லேசாவதோடு மனமும் லேசாகி எதையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை வரும். 2001 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்கள் தொடர்ந்து யோகாசனப் பயிற்சி மேற்கொண்டிருக்கேன். அப்போல்லாம் சர்க்கரை நோயே இல்லை. உடலில் சோர்வோ, சோம்பலோ இருந்ததில்லை. கணினியில் எழுதுவதோடு ஒரு சிலருக்கு கணினி மூலம் சில வேலைகளையும் செய்து கொடுத்துச் சம்பாத்தியமும் வந்து கொண்டிருந்தது. 2015 ஆம் ஆண்டில் டிசம்பரில் கல்கத்தா, புரி, போன்ற இடங்களுக்குச் சென்று வந்தப்புறமாகக் கொஞ்சம் மனச்சோர்வு ஏற்பட்டுக் கால்களில் வலியும் அதிகமாக ஆகவே மெல்ல  மெல்ல ஆசனப் பயிற்சி குறைந்து விட்டது. 2020/21 ஆம் ஆண்டுகளில் வந்த   கால் பிரச்னையில் பாதம் வீங்கி நடக்க முடியாமல் ஆன பின்னர் யோகாசனம் என்றால் என்ன என்னும்படிக்குச் சுத்தமாக நின்றே போனது. ஆகவே நான் இதைப் பற்றி எழுதும் அளவுக்கு அத்தனை தகுதியானவள் இல்லை. :( நெல்லை மன்னிக்கணும்.  நெல்லையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போனதுக்கு மன்னிக்கவும்.

கீதா ரங்கன் அக்காவிடம்-1. நமக்கு நல்லது நடப்பதற்குக் காரணம் இந்த வாழ்வில் நாம் செய்யும் நல்ல செயல்களா இல்லை முற்பிறவியில் செய்தவற்றின் காரணமாகத்தான் என்று நினைக்கிறீர்களா?

2. நாய் பூனை இவற்றை வளர்ப்பதன் காரணம் என்ன? உயிர்களிடத்தின் மேல் உள்ள அன்பா? இல்லை அவைகளையும் விளையாட்டுப் பொருள்களில் ஒன்றாகக் கருதும் மனநிலையா?

கீதா ரெங்கன் பதில் :

நெல்லை அண்ணே! கீதா ரங்கன் அக்காவா??? யாருங்க அது? தேடுகிறேன்... கீதா ரங்கன் அக்கா என்று இங்கு யாரும் இல்லாததால் யாரிடம் கேட்டிருக்கீங்கன்னு  தெரியாம யோசிச்சு தவிர்க்க நினைச்சேன் ஆனா, அந்த 'அக்கா'வை எடுத்துட்டா என் பெயரும் அடிபடுதேன்னு....சரி,  அண்ணே, இம்புக்குக் கஷ்டப்பட்டுக் கேட்டிருக்கிறதுக்கு மரியாதை கொடுக்கணும் இல்லையா! அதனால நீங்க கேட்ட அந்த அக்கா இங்க இருந்தா வந்து பதில் சொல்லிக்கட்டும்... இப்ப இதுக்கு என் பதில்....

என் நம்பிக்கை, தத்துவம் வேறாச்சே எனவே இக்கேள்வி எனக்குச் சரிவராதே! எனவே முதல் கேள்விக்கான பதில் Sorry.

2. என் தனிப்பட்டக் கருத்து அன்பு. இதற்கான என் விளக்கமான பதில் உங்களுக்கு ஒத்துவராது என்பதால் விளக்கமாகக் கொடுக்கவில்லை!!!! ஹாஹாஹாஹா

= = = = = = = = = = =

நெல்லையின் அவசரக் கேள்விகள்  - எங்கள் பதில்கள் :

விரைவில் எடுத்துக்கொள்ளவேண்டிய கேள்விகள்...
நெல்லை: 

 1.  இந்த சாஹித்ய அகாடமி, ஞானபீடம் போன்றவை யாருக்குக் கொடுக்கப்படுகின்றன? பழத் தட்டுடன் போய்ப் பார்த்தால் இந்த விருதுகளைக் கொடுத்துவிடுவார்களா? இல்லை உண்மையாகவே ஏதாவது எழுதியிருக்கணுமா?

# ஞான பீட விருதுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை.  அது ஒரு பிரைவேட் அறக்கட்டளை.  நேரடியாக தமிழ்- தமிழ் இலக்கியம் பற்றி அறியாத காரணத்தால் ஒரு (இரகசியமான) குழுவின் சிபாரிசின் அடிப்படையில் விருது தரப் படுகிறது.  அது அகிலனுக்குத் தரப்பட்ட போதே விவாதங்கள் எழுந்தன. அதைப் பெற சிலர் பல சூழ்ச்சிகளைச் செய்வதாகச் சொல்லப்படுவதுண்டு.

  2.  சிறந்த நடிப்புக்காக எம்ஜிஆருக்கு 'பாரத்' விருதளித்தபோது விருதுக்குத் தேர்வு செய்த குழுவினர், எந்த திரைப்படத்தையும் பார்த்ததில்லையாமே? அதுவரை தாயக்கட்டை மாத்திரம்தான் விளையாடத் தெரிந்திருந்ததாம் அந்தக் குழுவினருக்கு. நடிகர்கள் பெயரைப் போட்டு, தாயக்கட்டை போட்டுத்தான் விருதுக்குத் தேர்ந்தெடுத்தார்களாமே. இது பற்றி உங்களுக்குத் தெரியுமா?   

# பாரத் விருதின் பின்புலத்தில் பலத்த அரசியல் நோக்கங்கள் உண்டு.  தான் பெரிய நடிகர் அல்ல என்று எம்.ஜி.ஆர் அவர்களே சொல்வதுண்டாம்.

3. அரசியல்வாதிகள் அவர்களுக்குள்ளேயே கொடுத்துக்கொண்டது போக, எப்பவாச்சும் பாரத ரத்னா பிறருக்கும் கொடுக்கிறார்களே. அது சாதனையை அடிப்படையாக வைத்தா இல்லை முகநூலில் ஃபாலோயர்ஸ்களை அடிப்படையாக வைத்தா?

# ஆரம்ப காலத்தில் பாரத் ரத்னா விருது மிகுந்த கவனத்துடன் அளிக்கப் பட்டு வந்தது.  காலக்கிரமத்தில் அதிலும் உள்நோக்கங்கள் ஊடே புகுந்து விட்டன.  ஒரு காலத்தில் நோபல் பரிசைப் பெற்றவர்களது பெயர்களை மனப்பாடமாக அறிந்திருந்தோமில்லையா ?

4.  பிறரை, அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகளைக் குறை சொல்வது மிகச் சுலபம். ஆனால் தானே அரசியலுக்கு வந்தால் சந்தி சிரித்துவிடும் என்பதுதான் ரஜினி அவர்கள் அரசியலுக்குள் நுழையாமல், சாக்குப் போக்குச் சொல்லித் தப்பித்ததன் காரணமா?  

# ரஜினி அரசியலை விலக்கியது தோல்வி குறித்த அச்சம், + உடல் நிலை காரணமாக.

 5.  உங்களிடம், அடுத்த  'ஞானபீட விருதுக்கு யாரையாவது தேர்ந்தெடுங்கள்' என்று சொல்லி பொறுப்பைக் கொடுத்தால், யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஓரிரண்டு பெயர்களையாவது சொல்ல இயலுமா?

# தி.ஜானகிராமன், சோ ராமசுவாமி, இலங்கை ஜெயராஜ்,  சர்வப்ரியானந்தா.

= = = = = = = = = = = =

படமும் பதமும் :

1) திருமதி வேதா கோபாலன் (அனுப்பியது அல்ல - அவருடைய facebook பதிவிலிருந்து எடுக்கப்பட்ட படமும், பதமும் :


வேதா கோபாலன் :

Facebook பதிவு        ( 03-03-2026) 

படம் சுட்டி விளக்குக :

பஞ்சாபில் ஒரு விவசாயக் குடும்பத்திடம் இந்தப் பழைய.. இல்லை.. ப…ழை….ய டிராக்டர் இருந்தது. வயது நூறு. இத்தாலியிலிருந்து வாங்கியதாம். நன்றாய்ப் பயன்படுத்திய பிறகு ரிட்டயராகிவிட்டது.

அது பாட்டுக்கு ஒரு ஓரமாய் அவர்கள் வீட்டில் கிடந்திருக்கு. நீங்களால் என்ன செய்திருப்பீர்கள்? வாசலில் வரும் பழைய இரும்பு வாங்குபவரிடம் போட்டிருப்பீர்கள்(போம்). இவர்கள் வீட்டில் அப்படிச் செய்யவில்லை என்பதுதான் விசேஷம்.

சோஷல் மீடியாவில் எதைப் படம் எடுத்துப் போடலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த (அதன் உரிமையாளரின்) கொள்பேரன் இந்த டிராக்டரை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட நிமிடம் சுக்கிர தசை ஆரம்பித்துவிட்டது. (முதலில் டிராக்டரின் படத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.. அப்புறமா விஷயத்தைச் சொல்கிறேன்)

அந்தக் கம்பெனிக்காரர்கள் அவரைத் தொடர்பு கொண்டு.. “தம்பி தம்பி.. இது எங்க கம்பனியோட முதல் ட்ராக்டர்.. இதோட நினைவு கூட எங்ககிட்ட மிச்சம் இல்ல தம்பி. வெக்க வெக்கமாயிடுச்சு.. உலகத்திலேயே இந்த வகை டிராக்டரில் ஒன்றே ஒன்று கன்றே கன்று .. நல்லா இல்லையோ? சரி ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ன்னு இது ஒன்றுதான் இப்ப மிச்சம் இருக்கு... இத்தனை நாள் எங்க கம்பெனியில் இதோட போட்டோ மட்டும் தான் நியாபகார்த்தமாக இருந்தது. இதை எங்களுக்குத் தருவீர்களா?” என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர்கள் தருவதாகச் சொன்ன விலை எவ்ளோ தெரியுமா? ஒன்றரைக் கோ..டி.

தந்தார்கள்

வென்றார்கள்

சென்றார்கள்.

எனில் ஒரு கிலோவின் விலை எவ்வளவு இருக்கும் என்று ஊகித்து கொள்ளுங்கள்.

(இ.அ.நீ : உங்கள் வீட்டில் பழைய பொருட்கள் ஏதாவது இருந்தால் அவசரப்பட்டுத் தூக்கிப் போட்டுடாதீங்க. போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் போடுங்க. என்னிடம் மூன்றாம் கிளாஸில் உபயோகித்த ஒற்றை ஷூ, மாமனாரின் தாத்தாவுடைய மூக்குக் கண்ணாடி உள்பட 72 பொருட்கள். உள்ளன.)

இ அ நீ என்றால் என்னவென்று கேட்க மாட்டீர்கள். என் நட்பு வட்டத்தில் அனைவரும் என்னைவிட பு,சா ..கள்.

= = = = = = = = =

நெல்லைத்தமிழன் :


இது ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தின் புங்கனூர் குள்ள மாடுகள். இவை அதிகபட்சம் 3 அடி உயரம் வரை வளரும். எடையும் 100-200 கிலோக்குள்தான் இருக்கும். ஆனால் இந்த வகைப் பசுக்கள் 2-3 லிட்டர் பால் கறக்கும். சமீபத்தில் திருப்பதி செல்லும் வழியில் ஒரு ரெஸ்டாரண்டில் பேருந்து நின்றாபோது அங்கிருந்த இத்தகைய மாடு ஒன்றுடன் எடுத்துக்கொண்ட படம் இது.


இந்தப் படத்தை மாத்திரம் பகிர்ந்துகொண்டால், உயரம் தெரியாது என்பதால் இதற்கு முந்தைய படத்தையும் பகிர்ந்தேன். 

==================================

ஸ்ரீராம் 


குப்பைக்கு நடுவே கண்ணைக் கவர்ந்த காட்சி.
நாய்க்குடை என்று சொல்வோம். ஆனால் அதற்காக மழைக்கோ வெயிலுக்கோ நாயால் இதன் அடியில் தஞ்சம் அடைய முடியாது! பின் ஏன் அந்தப் பெயர்?
காளான் என்றும் சொல்வார்கள். அதற்காக சமைத்துச் சாப்பிடவும் முடியாது!!

= = = = = = = = = = = == = = = = = = = = = = = = = = = = =


சிவபெருமான கிருபை வேண்டும்! வேறென்ன வேண்டும்?


வெறும் அரசியல் தலைவர் மட்டும் அல்லவே அண்ணாதுரை? கலைஞரும் அல்லவா?

முதன்முறையாக அவர் பாகவதரைச் சந்தித்த போது, "எங்கே ஒரு பாட்டு பாடுங்கள்" என்றார் வினயத்துடன்.

“சிவபெருமான கிருபை வேண்டும்!
வேறென்ன வேண்டும்?
சிவபெருமான் கிருபை வேண்டும்!"

என்று வழக்கமான புன்னகையுடன் ஆரம்பித்தார் பாகவதர்.

"யாருக்கு?"என்று திடுக்கிட்டுக் கேட்டார் அண்ணாதுரை.

"உங்களுக்குத்தான்!" என்றார் பாகவதர், அவருடைய ஆட்சேபம் புரிந்தும் புரியாதவர்போல்.

''எனக்கு அவருடைய கிருபை வேண்டாம்; அது உங்களுக்கே இருக்கட்டும்!" என்றார் அண்ணாதுரை. மென் சிரிப்புடன்.

பின்னால் ஆஸ்திகர்களையும் ஓரளவாவது கவர வேண்டும் என்பதற்காக 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று அவர் தம் கொள்கையைச் சற்றே மாற்றிக்கொண்டு விட்டாலும் அதற்கு முன்னால் அவர் திரு ஈ.வே.ரா.வின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி நாஸ்திகராயிருந்ததுதான் நமக்கெல்லாம் தெரியுமே? அதனால் அவர் அப்போது 'சிவபெருமான் கிருபை'யை விரும்பவுமில்லை! வேண்டவு மில்லை.  இதைப் புரிந்து கொண்ட பாகவதர், அத்துடன் அந்தப் பாடலை விட்டுவிட்டு,

“ மெஞ்ஞானத் தங்கமிது, மேலான தங்கமிது, 
அஞ்ஞானத் தங்கமெல்லாம் என் தங்கமே, 
அநித்திய தங்கமடி, ஞானத் தங்கமே!"

என்று ஆனந்தமாகப் பாட ஆரம்பித்தார்; அண்ணாதுரையும் அதைப் பரவசத்துடன் கேட்டு அனுபவித்தார்.

பாட்டு முடிந்தது; "வேதநாயகனைப் பிடிக்கா விட்டாலும் வேதாந்தத்தைப் பிடிக்கும் போலிருக்கிறதே உங்களுக்கு?" என்றார் பாகவதர்.

'அதையும் பிடிக்காதுதான்! ஆனால் வயதானவர்களுக்குமட்டுமல்ல, வயதாகாதவர்களுக்கும் இந்தக் காலத்தில் வேதாந்தம் ஒரு சுவையான பொழுது போக்காயிருக்கிறது. அந்த வகையில் அது எனக்கும் பிடிக்கிறது. ஆனால் பிறரை ஏமாற்றுவதற்காகச்சிலர் அதைப்பயன்படுத்துகிறார்கள். நான் அதை அவ்வாறு பயன்படுத்துவதில்லை" என்றார் அண்ணாதுரை.

இதற்குப் பின் திரு அண்ணாதுரை வந்தால் அவர் சிலவற்றைப் கேட்காமலே வேதாந்தப்பாடல்கள் பாகவதர் பாடுவதும், அவற்றைக் கேட்டு அனுபவித்து விட்டு அவர் போவதும் வழக்கமாயிற்று.

இப்படியாக இவர்கள் நட்பு முதிர முதிர, 'பாகவதருக்கென்றே ஒரு கதை எழுதி, அவரை வைத்துப்​ படம் எடுத்தால் என்ன?' என்ற ஓர் எண்ணம் அண்ணா துரையின் உள்ளத்தில் உதயமாயிற்று. அதைச் செயல்படுத்த அவர் உடனே பாகவதருக்குரிய கதையை அவரிடம் படித்துக் காட்டி, "இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்" என்றார்.

"மன்னிக்க வேண்டும்" என்றார் பாகவதர்.

"எதற்காக?"

"இந்தப்படத்தில் 
நான் நடிக்கமுடியாமல் இருப்பதற்காக." 

''உங்கள் கதைக்கு ஏற்ற கதாநாயகன் நான் அல்ல."

''உங்களுக்கென்றே நான் இந்தக் கதையை எழுதியிருக்கும்போது நீங்கள் அவ்வாறு சொல்லக் காரணம்?”

"தெரிந்தோ தெரியாமலோ, நடிக்கும் படங்களில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் நான் தெய்வ பக்தி உள்ளவனாக இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் கதாநாயகனுக்கோ அந்த பக்தி இல்லை. அவனை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் கதையில் நான் எப்படி நடிப்பேன்? நடிப்புக்காகத் தெய்வ நிந்தனை செய்யக்கூட என்மனம் துணியவில்லையே!”

''உங்கள் கொள்கை அதுவானால், அதில் நீங்கள்​ உறுதியோடு இருப்பது உண்மையானால், அதற்கு நான் தலைவணங்குகிறேன்!" என்றார் அண்ணாதுரை, தமக்கே உரிய பெருந்தன்மையுடன்.

"கொள்கை எதுவாயிருந்தாலும் பிறருடைய விருப்பத்துக்கு விரோதமாக அவற்றைத் திணிக்க விரும்பாத உங்கள் பெருங்குணம் என்னை வெகுவாகக் கவருகிறது" என்று அவரை மனமுவந்து பாராட்டினார் பாகதவர்.

"நீங்கள் மட்டும் அதற்குச் சளைத்தவரா, என்ன? பக்திப் பாடல்கள் என்னுடைய கொள்கைக்கு உடன்பாடு இல்லை என்பதற்காக நீங்கள் வேதாந்தப் பாடல்கள் பாடி என்னை மகிழ்விக்க வில்லையா?" என்றார் அண்ணாதுரை.

“அதற்காகப் பக்திக் கதை எழுதி, அதில் நீங்கள் என்னை நடிக்கச் சொல்லமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்!''என்றார் பாகவதர் சிரித்துக் கொண்டே.

"அது நடக்காத காரியம்; நானும் கொள்கைப் பிடிப்பில் உங்களுக்குப் பின் வாங்கியவனல்ல" என்று அண்ணாதுரை சிரித்துக்கொண்டே எழுந்து நடந்தார்.

'அது என்ன கதை?' என்று தெரிந்து கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களல்லவா?

அதுவே 'சொர்க்க வாசல்'.

பாகவதருக்குப் பதிலாக அதில் நடித்தவர் யார்?

அவரே திரு கே.ஆர்.ராமசாமி.

-எம் கே டி பாகவதர் - விந்தன்.

=======================================================================================

தடுக்க முடியாது; தள்ளி போடலாம்!

'அல்சீமர்' என்னும் மறதி நோய் குறித்து கூறும், நியூராலஜிஸ்ட் டாக்டர் மாணிக்கவாசகம்:
"எல்லா மறதியும், அல்சீமர் என்று சொல்ல முடியாது. ஞாபக மறதி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். வைட்டமின், 'பி12' குறைபாடு, முக்கிய காரணம்.
எனவே, இந்த வைட்டமின் குறைபாட்டால் ஞாபக மறதி ஏற்படலாம். தொடர்ந்து இந்தக் குறைபாடு இருக்கும்போது, 30, 40 வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடும். வைட்டமின், 'பி12' டெஸ்ட் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.
அடுத்தது, தைராய்டு பிரச்னை காரணமாக ஒருவருக்கு ஞாபக மறதி ஏற்படலாம். அதனால், தைராய்டு பரிசோதனையும் நல்லது. அல்சீமர்ஸ் என்பது பரம்பரை நோய். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி யாருக்கேனும் அல்சீமர்ஸ் இருந்தால், அவர்களுக்கு அல்சீமர் வரலாம்.
அல்சீமர் நோய் உள்ளோர், அன்றாட வேலைகளை செய்து முடிக்க சிரமப்படுவர், கடினமாக உணர்வர்.
அதாவது, பழக்கப்பட்ட இடத்திற்கு வாகனம் ஓட்டிச் செல்வதில் சிரமம்; நிதி நிலைகளை சமாளிப்பதில் சிரமம்; விருப்பமான விளையாட்டின் விதிமுறைகளை நினைவுபடுத்திக் கொள்ள இயலாமை போன்றவை.
தேதி மற்றும் பருவ காலங்கள் குறித்த நினைவுகளை இழந்துவிடலாம். சில சமயங்களில் எங்கே இருக்கிறோம் அல்லது எவ்வாறு சென்றோம் என்பதையும் மறந்து போகலாம்.
அதேபோல், உரையாடலின் போது அவர்கள், இடையில் நிறுத்திவிடுவர் மற்றும் மேற்கொண்டு எவ்வாறு தொடர்வது என்று அறியாமல் இருப்பர் அல்லது சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பர். சரியான வார்த்தையைக் கண்டறிய சிரமப்படுவதுடன், பொருட்களை தவறான பெயர் சொல்லி அழைப்பர்.
ஆரம்ப அறிகுறியால் அல்சீமரை கண்டறிந்தாலும், மருந்து, மாத்திரையால் தள்ளிப் போடலாமே தவிர, முழுமையாகக் குணப்படுத்த முடியாது. எனவே, திட்டமிட்டே சில விஷயங்களை பின்பற்றினால், அல்சீமர்ஸ் வராமல் தடுக்க முடியும்.
புதிய மொழிகளை கற்றால், மூளையின் செயல்திறன் மேம்படும். எப்போதும் வலது கையால் செய்வதை, இடது கையால் செய்ய முயற்சிக்கலாம். உதாரணமாக, வலது கையில் எழுதினால், இடது கையால் எழுத முயற்சி செய்யலாம். தினமும் ஒரே பாதையில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்பவராக இருந்தால், மாற்றுப் பாதையில் சென்று வரலாம்.
சுடோகு, குறுக்கெழுத்துப் போட்டிகளில் கவனத்தை செலுத்தலாம். அதிகமான புத்தகங்கள் வாசிப்பதால், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். இதனால், ஞாபக மறதி வருவது தடுக்கப்படும்.
மேலும், அதிகமாக பழங்கள் மற்றும் வால்நட்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுப்பதால், மூளையின் செயல்திறனை மேம்படுத்தி, ஞாபக மறதியை தள்ளிப் போடலாம்.
தினமலரிலிருந்து... 2017

===========================================================================


=========================================================================================


KGG பக்கம் : அடுத்த வாரம். 

= = = = = = = = = =

59 கருத்துகள்:

  1. இன்றைக்கு நல்ல வியாழன் பதிவைப் படித்ததுபோல (பல்சுவை) இருந்தது. பாராட்டுகள்.

    கேள்வி பதிலில், கீதா ரங்கன் சொன்னதை ரசிக்க இயலவில்லை. கேள்விக்கான பதிலாக அமையவில்லை. ஏன் நாய் பூனை வளர்ப்பது பிடித்திருக்கிறது ஒருவருக்கு? வினைப்பயன் என்பது உண்டா என்ற கேள்விகளுக்கு யாரும் பதிலளிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்கள் பதில் அளிக்கவும்

      நீக்கு
    2. நெல்லை மிக்க நன்றி.

      அவை எனக்கான கேள்விகள் இல்லை

      கீதா

      நீக்கு
    3. நாய் பூனை வளர்ப்பது ஏன் பிடித்திருக்கிறது என்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது!  அதில் ஏதும் மறக்க முடியாத அனுபவம் உண்டா?  உங்கள் வளர்ப்பு பற்றி சொல்லுங்கள் என்று கேட்டாலும் சொல்லலாம்.  இந்தக் கேள்வியில் ஒரு மறைமுக எதிர்ப்பு இருப்பது போல எனக்குத் தோன்றியது!!!

      நீக்கு
    4. நெல்லை, இதற்கான என் தனிப்பட்டக் கருத்துகள் பல விதங்களிலும் எபியிலும் அவ்வப்போது வந்திருக்கின்றன. நீங்கள் அடிக்கடி சொல்வீங்க அப்ப பதில் கொடுத்திருக்கிறேன். அப்போது அதற்கான உங்கள் பதில்கள் கருத்துகள் என் கருத்திற்கு வேறுபட்டதாக இருந்ததால் விளக்கமாக இங்கு சொல்லவில்லை குறிப்பாக, நாய் பூனை கேள்விக்கு.

      கீதா

      நீக்கு
    5. நாயை வீட்டில் வளர்ப்பது ஒரு தனிப்பட்ட விருப்பம். பெரும்பாலானோர் அன்பிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் வளர்க்கின்றனர். நாய்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியைத் தரும். இருப்பினும், அடுக்குமாடி குடியிருப்புகளில் நாய்களை வளர்ப்பதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கலாம். நாய் வளர்ப்புக்குப் போதிய நேரமும், சரியான பயிற்சியும், இடவசதியும் இருப்பது அவசியம். மற்றபடி சாஸ்திரம் இப்படி சொல்வதாக எதுவும் நான் கேள்விப்பட்டதில்லை.  

      நாய் வளர்க்கும் இல்லங்களில் வேண்டுமானால் பூஜையறை, சமையலறையக்குள் அதை வரவிடாமல் பழக்கலாம், நிறைய இடங்களில் அப்படிதான் செய்கிறார்கள்.

      நீக்கு
  2. இரண்டு தினங்களுக்கு முன்புதான் பேசிக்கொண்டிருந்தேன், எங்கள் பூர்வீக வீட்டில் இருந்த அழகிய ஓலைச்சுவடிப் புத்தகங்களை என் அப்பா, வீட்டை விற்கும்போது கடாசிவிட்டார் என. எனக்கு அதில் அவ்வளவு ஆர்வம் இருந்தது தனக்குத் தெரியாது என்றார்.

    பஞ்சாப் விவசாயி டிராக்டர் பதிவு சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓலைச் சுவடிகள் விஷயம் வருத்தம்தான்

      நீக்கு
  3. நல்ல இலக்கியம், நூல்கள் எழுத முயல்கிறவர்களில் ஒருவரான ஜெயமோகன் அவர்களின் ஆதங்கம் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

    வைரமுத்துக்கி ஞானபூட விருது என்றவுடன், எப்படி சரோஜாதேவியை, பிடி சாமியை விட்டுவிட்டார்கள், ஒரு காலத்தில் தமிழ் இளம் தலைமுறைகள் விழுந்து விழுந்து வாசித்தார்களே என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வைரமுத்துக்கி ஞானபூட விருது// ரொம்ப கோபமா இருக்கீங்க போலிருக்கு! முத்துக்கி பூட.... ! :))))

      நீக்கு
  4. எழுத்தாளர்கள் பற்றிய ஜீவி சாரின் பதில் மன நிறைவு.

    தமிழகத்தில் எழுத்தினால் கஞ்சி குடிக்கக்கூட இயலாது என்பது நிலைமை. இருந்தாலும் எழுத்தின்மீதான ஆர்வத்தில் எத்தனை எத்தனைபேர் எழுதுவதைக் கண்டிருக்கிறோம்?

    விமர்சனங்கள் இருக்கலாம். இருந்தாலும் புதுமைப்பித்தன், மணிக்கொடி கால எழுத்தாளர்கள் எனப் பலர் எழுத்தை வேள்வியாக எண்ணி, உருகியிருக்கிறார்கள் (அழிந்திருக்கிறார்கள் எனச் சொல்ல மனமில்லை).

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம். வித்தியாசமான புதன். சிறப்பு.

    பதிலளிநீக்கு
  6. மற்றவற்றிர்கு பிறகு வருகிறேன். பலரின் பதில்கள் அருமை. அதைப்பற்றி எழுதுகிறேன்.

    நேற்று நடைப்பயிற்சியின்போது, தரை ஈரத்தால் விழுந்து மூக்கையும் இரண்டு கால் முட்டிகளையும் உடைத்துக்கொண்டேன். அதிலும் வலதுகால் நடக்க மிகச் சிரம்மாக இருப்பதால் இன்று நடைப்பயிற்சி எப்படி ஓடும் எனத் தெரியலை. யோகா, ஜிம் முடியாது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருத்துவரிடம் போனீர்களா? உடனே கவனித்து விடுங்கள்.
      முதல் நாளில் அவ்வளவு வலிக்காது அடுத்த நாள் தான் அதிகமாக வலிக்கும். கவனமாக நடைப்பறிற்சி செய்யுங்கள்.

      நீக்கு
    2. விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்.

      நீக்கு
    3. அச்சச்சோ... Take care நெல்லை.

      நீக்கு
  7. ஆழ்வார்களில் ஒருவர் முதலில் சிவ பக்தராக இருந்து பின்னர் வைணவம் பக்கம் திரும்பியவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். சிவ பக்தராக இருந்த பொழுதும் அவர் பாடல்கள் எழுதியிருக்கிறார். சிவ வாக்கியரா? தெரிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபற்றி எழுதுகிறேன். சிவ வாக்கியராக இருந்து திருமழிசை ஆழ்வாரானவர். அவரது பாசுரங்கள் மிகவும் பெரிய த்த்துவங்களை உள்ளடக்கியது. விரிவாக எழுதுவேன்.

      நீக்கு
  8. அல்சீமர் மறதி நோயைப் பற்றிப் படித்திருக்கிறேன்.

    சோடியக் குறைபாட்டுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டான்னு தெரியலை.

    என் நெருங்கிய உறவினருக்கு இந்த நோய் இருக்கிறது.சில விஷயங்களைப் பற்றி ஒருவரிடமே பலமுறை, ஒரே நாளில் சொல்வது, புதிய விஷயங்கள் நினைவில் இல்லாத்து, பலரை மறந்துவிடுவது என நோயின் தாக்கத்தைக் காண்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மனைவிக்கு சோடியம் குறைபாடு இருந்தது.

      நீக்கு
    2. சோடியம் குறைபாட்டின் விளைவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

      நீக்கு
  9. இறைவனின் கைச்சுவடு முதுகில்... அப்பாதுரையின் வரி சிறப்பு. இதனைப் பலரால் உணர முடியும்.

    வாழ்க்கையில் உயர்ந்தது... என்பதற்கு என் விளக்கம், சிறு வயதில் நாம் இப்படி உயர்வோமா என நினைத்ததற்கும் மேலான உயரத்தை நாம் அடைவது.

    பதிலளிநீக்கு
  10. காளான்களில் பல உண்ணத் தகுந்தவை. நாய்க்குடை என அலட்சியமாக்க் கடந்தவற்றைப் பற்றி, புதிதாக தூய சவேரியார் மேநிலைப்பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த இளைஞர், 79 காலகட்டத்திலேயே இதைப்பற்றி செயல் முறை விளக்கத்துடன் புரிய வைத்தது நினைவுக்கு வருது. அவர்தான், உண்ணும் காளான்கள் வளர்ப்பது பெரிய தொழிலாக மாறும் என்றெல்லாம் சொன்னார். அப்போ பெரிய புரிதலில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! அப்படியா! எனக்கு காளான் வாடை பிடிக்காது. அதனால் காளான் பிடிக்காது.

      நீக்கு
    2. நான் மிகச் சமீப வருடம் வரை, காளான் நான் வெஜ் என்றே நினைத்திருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன், பெண் என்னென்னவோ ஆர்டர் செய்ததில் இதனை இலவசமாக அனுப்பியிருக்கிறார்கள். நான் ரொம்ப டென்ஷனாயிட்டேன். இப்போவும் பசங்கள்ட சொல்வது, உங்க ஊருக்கு வரேன், என்னை எக்காரணம் கொண்டும் பாஸ்தா பீஸ்தாலாம் சாப்பிடச் சொல்லக்கூடாது. உங்களுக்கு உணவு விஷயத்தில் என்னால் தொந்தரவு கிடையாது, மோர் சாதம், உருளை ரோஸ்ட் அல்லது கேரட் வதக்கலே போதும்னு சொல்லியிருக்கேன். சாத்த்தை விட்டுவிட்டேன், இருந்தாலும் அந்தூர்ல என்ன கிடைக்குமோ அது.

      நீக்கு
    3. எனக்கும் காளான் என்றால் ஒருவித வெறுப்பு, அருவருப்பு (மன்னிக்கவும்) இருந்தது. மிகச் சமீபத்தில் தான் அதை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன் - அதுவும் எப்போதாவது.

      நீக்கு
  11. வைணவம் போற்றிய சைவ ஆச்சார்யர்கள் உண்டா என்றால் ஆதி சங்கரரே வைணவத்தையும் போற்றியவர்தானே? இப்போதும் கூட காஞ்சி மடத்திலிருந்து வெளிவரும் அறிக்கைகளை 'நாராயண ஸ்மிருதி' என்றுதான் சொல்வார்கள். மஹா பெரியவரைப் பற்றி எனக்குத் தெரியாது. ஜெயேந்திர சுவாமிகள் தன் உரையை முடிக்கும் பொழுது 'நாராயணா' என்று கூறிதான் முடிப்பார்.
    எனக்கு தெரிந்தது அல்லது தெரியும் என்று நினைத்துக் கொண்டதை எழுதியிருக்கிறேன். தவறு இருந்தால் குறிப்பிட்டால் திருத்திக் கொள்ள தயார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துதான் என் கருத்தும்.

      நீக்கு
    2. அதற்கு அப்படி அர்த்தமல்ல பா வெ மேடம்.

      நாராயணன் மூல தெய்வம். அவரின் கீழ், மூன்று காரியங்களுக்கான மூன்று தெய்வங்கள் பிரம்மா விஷ்ணு சிவன். வைணவம் திருமால் தவிர வேறு தெய்வம் இல்லை என்ற கொள்கையுடையது (அந்நிய தேவதையை வணங்கக்கூடாது என்பது கட்டளை). வேத்த்தை மூலமாக்க் கொண்ட சைவத்தில் (ஸ்மார்த்தர்கள், ஏகதண்டிகள்), நாராயணனும் உண்டு. அதனால் சிவன் கோயில்களில் விஷ்ணு ஶ்ரீதேவி சந்நிதிகள் உண்டு. விஷ்ணு கோயில்களில் அப்படி இருக்காது (விதிவிலக்கா காண்பது பிற்காலத்தில் வந்தவை)

      ஏகதண்டி சந்நியாசிகள் நாராயண நாராயண என்றுதான் முடிப்பர். ஆனாலும் அவர்களின் ஆதர்ச தெய்வம் சிவன்.

      நீக்கு
    3. இந்து மத நம்பிக்கையின்படி, சிவன் மற்றும் நாராயணன் (விஷ்ணு) இருவருமே முதன்மைத் தெய்வங்களாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் இது அவர்கள் பின்பற்றும் பிரிவுகளைப் பொறுத்து மாறுபடும்.

      சைவ சமயம்: சிவனை பரம்பொருளாகவும், முதன்மைத் தெய்வமாகவும், பிரபஞ்சத்தின் படைப்பு, காப்பு, அழிப்பு ஆகியவற்றுக்குக் காரணமானவராகவும் கருதுகிறது.
      வைணவ சமயம்: நாராயணனை (விஷ்ணு) பரம்பொருளாகவும், முழுமுதற் கடவுளாகவும், பிரபஞ்சத்தைப் படைத்து காப்பவராகவும் கருதுகிறது.

      இந்து மதத்தின் உயரிய தத்துவமான அத்வைதத்தில், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வேறுபாடு இல்லை. இருவரும் ஒரே பரப்பிரம்மத்தின் வெவ்வேறு வடிவங்களாகவே பார்க்கப்படுகிறார்கள் (சிவனும் விஷ்ணுவும் ஒன்றே).

      எனவே, தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் சமயப் பிரிவின் (சைவம் அல்லது வைணவம்) அடிப்படையில், ஒருவர் சிவனை முதன்மைத் தெய்வமாகவும், மற்றொருவர் நாராயணனை முதன்மைத் தெய்வமாகவும் வணங்குகிறார்கள்.

      நீக்கு
  12. பதினைந்து வருடங்கள் யோகா செய்தும், பிறகு காலத்தின் வண்மையால் யோகா செய்ய முடியாமல், உடல் நிலைப் பிரச்சனைகள் வந்தது சோகம். வாழ்க்கையில் எதையும் தவிர்க்க முடியாது போலிருக்கு.

    இறைவன் எனக்கு என்னென்ன அதிர்ச்சிகளைச் சந்திக்க வைக்கப் போகிறானோ?

    கீதா சாம்பசிவம் மேடம் பதில் அனுபவ அறிவைக் கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. வித்தியாசமான கேள்வி பதில் பகுதி சிறப்பு..

    பதிலளிநீக்கு
  14. ஜெயமோகன் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதிலும் லாபியிங் வராது என்று உத்த்ரவாதமளிக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கட்டத்தில் தகுதியானவர்கள் கிடைக்காது. ஏனோ தானோவெனக் கொடுக்கப்படலாம், இப்போ கண்டவர்களுக்கெல்லாம் ஈவெரா விருது, கருணாநிதி விருதுலாம் திமுக முப்பெரும் விழா கொண்டாடும்போது வழங்கப்படுவது போல.யாருக்கு பரிசு கொடுத்தாலும் விமர்சனம் வரும். அதை கவனத்தில் கொள்ள முடியாது.

      நீக்கு
  15. நாய் பூனை இவற்றை வீட்டி வளர்க்கக் கூடாது என்பதே சான்றோர் வாக்கு...
    நாய் பூனை இவற்றைத் தொட்டுவிட்டால் குளிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம்... நாயின் ஊளையும் பூனையின் அலறலும் அபசகுனங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி.

      நீக்கு
    2. // நாய் பூனை இவற்றை வீட்டி வளர்க்கக் கூடாது என்பதே சான்றோர் வாக்கு... //

      எந்த சான்றோர் எப்போது எங்கே சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பம் செலவாண்ணா..  பாரதத்தில் பாண்டவர்கள் ஸ்வர்க்கம் சென்றபோது, வேதம் ஒரு நாய் வடிவில்தான் அவர்கள் பின்னால் சென்றது என்று படித்திருக்கிறேன்.  இப்போதைய உபன்யாசகர்கள் எதையாவது பேசுகிறார்கள்.  உதாரணமாக முகுந்த் ஸ்ரீதர் (?) ராமரும் சீதையும் பார்த்துக் கொண்டபோது ராமருக்கு 6 வயது என்று சொன்னதாக ஞாபகம்!

      நீக்கு
    3. ஸ்ரீராம்.. இராமருக்கு 7, சீதாவுக்கு 6 அல்லது 11,6. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் உட்டாலக்கடி

      நீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. இன்றைய கேள்வி - பதில்கள் சிறப்பு.

    பழைய ட்ராக்டர் - ஆஹா... இப்படியான பழைய பொருட்களுக்கும் மதிப்புண்டு. இப்படியான இன்னும் சில கதைகள் வடக்கில் உண்டு.

    பல்சுவைப் பகிர்வாக இருந்தது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  18. ​@ நெல்லை உங்களுடைய பதில் பொதுவானதாக உள்ளதே தவிர நேரடி பதிலை தர வில்லை. உங்களுக்கு பெயர் சூட்டியவர் யார் என்று உங்களுக்கு தெரியும். அது போன்று ஆழ்வார் என்று பெயர் சூட்டியவர் யார் என்பது தெரியவில்லை. மேலும் பூதம், பேய், பெரிய, நம்ம என்றெல்லாம் விபரீதமான பெயர்களை தேர்ந்தெடுத்தது யார்? நாதமுனிகளா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
  19. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. மனிதனின் முதல் தோழன் நாய் என்பார் எங்கள் ஆசிரியர்...
    அத்தகைய நாயை வீட்டில் வைத்து வளர்க்கக் கூடாது..

    ஏனெனின் அது யமதர்மன் வரவை அறியக்கூடியது
    என்பார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை வளர்க்காவிட்டால் யமதர்மன் வராமல் போய்விடுவானா என்ன! 

      கோபித்துக் கொள்ள வேண்டாம்.  யமதர்மன் எப்படியும் வந்தே தீர்வான்.  நம் கண்ணுக்குத் தெரியாத யமன் அதன் கண்ணுக்குத் தெரிந்தால் விசேஷம்தானே!

      நீக்கு
  21. நெல்லை, அந்தக் குட்டி மாடுகள் படங்கள் சூப்பர்.

    இவை அங்கு நிறைய பார்க்கலாம். குண்டூர் பகுதிகளிலும் பால் கறப்பதைப் பார்த்திருக்கிறேன்.

    இந்தப் படத்துல நீங்க ஒல்லியா இருக்கீங்களே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. நெல்லையின் கேள்விகளுக்கு கீதாக்காவின் பதில், அப்பாதுரை அவர்களின் பதில் நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. வைணவம் போற்றிய சைவ ஆச்சார்யார்கள் உண்டா என்ற கேள்விக்கு நேரிடையான பதில், இல்லை என்பதே. //

    நெல்லை, இராமானுஜரை மறந்துட்டீங்களா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ!!! ராமானுஜர் வைணவம் தழுவி ஆச்சாரியார் ஆனார்....வைணவம் போற்றிய சைவ ஆச்சார்யார்கள் என்பதுக்குப் பொருந்துமா தெரியலை..

      கீதா

      நீக்கு
  24. நெல்லையின் கேள்விக்கு ஜீவி அண்ணாவின் பதில் நலலருக்கு....யதார்த்தம்.

    நிஜமாகவே எழுத்தை மட்டுமே நம்பி இருப்பவர்களை ஆச்சரியமாகவும் வியப்பாகவும் பார்க்கிறேன். எஸ் ரா அவர்களின் மனைவியின் முழு ஆதரவு இல்லை எனில்?

    கீதா

    பதிலளிநீக்கு
  25. வேதா கோபாலன் அவர்களின் பக்கம் அற்புதமான சுவாரசியமான எழுத்து. ரொம்ப ரசித்தும் சிரித்தும் வாசித்தேன்.

    Old is Gold!!! அந்த ட்ராக்டர்!

    எங்க வீட்டுல இருந்த காஃபி கொட்டை அரைக்கும் மெஷின் இருக்கான்னு கேட்டு சென்னைக்கு ஒரு கால்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ஸ்‌ரீராம், காளான், கொஞ்சம் வெள்ளைச் செம்பருத்தி போல இருக்கு இல்லையா? கவர்ச்சி. ரொம்ப அழகா இருக்கு படங்கள்!

    நான் கூட எங்கள் மாமியார் வீட்டில் தென்னையின் அடியில் முளைத்த வித்தியாசமான பெரிய காளானைப் படம் பிடித்து எங்கள் தளத்தில் பகிர்ந்திருந்தேன்.

    நாய்க்குடை என்பதற்குக் காரணம் பொதுவாக இம்மாதிரியான காளான்கள் நாய் உச்சா அடிக்கும் பகுதியில் வளர்வதால் என்று எங்கோ வாசித்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!