28.3.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் + நான் படிச்ச கதை

 

                      நாலாயிர திவ்யப் பிரபந்தம் வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் பகுதி 13 

பெருமாளிடம் அபசாரப்பட்டுவிட்டோமே என்று திருக்கச்சி நம்பிகளுக்கு பெரும் வருத்தம் வந்துவிட்டது என்று சென்ற வாரம் முடித்திருந்தேன்.  இதை ஏன் அபசாரம் என்று நினைத்தார்?  வைணவ சமயத்தில் பெருமாளிடம் சரணாகதி அடைவது என்று உண்டு. இதனை பிரபத்தி அல்லது பரநியாசம் என்று சொல்வர். இது மிக முக்கியமான ஒரு சடங்கு. அவரவர் ஆச்சார்யரிடம் சென்று இதனைச் செய்யச் சொல்லி விண்ணப்பம் செய்துகொள்வர்.  பரநியாசம் ஆகிவிட்டால், கோயிலில் தங்கள் பெயருக்கு அல்லது தங்களைச் சேர்ந்தவர்களுக்காக அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்வது, தங்களுக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்வது என்பதெல்லாம் கூடாது என்று சொல்வர். அவனுக்குத் தெரியும் நமக்கு என்ன செய்யவேண்டும் என்று, நாம் அவனைச் சரணாகதி அடைந்துவிட்டோம், பிறகு என்ன வேண்டுதல் என்பது இதன் அர்த்தம். 

பெருமாளிடம் அபசாரப்பட்டுவிட்டோமே என்ற வருத்தத்தால், திருக்கச்சி நம்பி, நேரே திருமலைக்குச் சென்று திருவேங்கடமுடையானுக்குத் ஆலவட்டக் கைங்கர்யம் செய்வோம் என்று நினைத்து திருமலைக்குச் சென்றார். பெருமாளை வணங்கும்போது, திருவேங்கடமுடையான், வேங்கடமலையே குளிர் சூழ்ந்து இருப்பதால், தனக்கு ஆலவட்டக் கைங்கர்யம் (விசிறி வீசுதல்) வேண்டாம், அக்னியில் தோன்றிய காஞ்சீபுரம் தேவப்பெருமாளுக்கே அந்தக் கைங்கர்யம் செய்யும் என்று சொல்லிவிட்டார். 

அப்போதும் திருக்கச்சி நம்பிக்கு காஞ்சீபுரம் செல்லும் எண்ணம் தோன்றவில்லை. நேரே திருவரங்கம் சென்றார். (நடந்துதான்). ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்ய விரும்புவதாகத் தெரிவிக்க, அவனோ, நானே காவிரி நடுவுபாட்டு இருக்கிறேன், எனக்கு விசிறி வீசுதல் தேவையில்லை, அத்திகிரி அருளாளனுக்கே இந்தத் தொண்டைச் செய்யும் என்று சொல்லிவிட்டான். திருக்கச்சி நம்பிக்கு அப்போதும் அத்திகிரிக்குச் செல்லும் மனம் இல்லை. அதனால் ஆளவந்தார் கோஷ்டியில் சேர்ந்துகொண்டார்.   

ஆளவந்தாருக்குக் கைங்கர்யங்கள் செய்துகொண்டிருக்கும்போது, அத்திகிரி பேரருளாளன், ஆளவந்தாரின் கனவில் தோன்றி, திருக்கச்சி நம்பியை காஞ்சீபுரத்திற்கே அனுப்பி வைக்குமாறு நியமித்தார். பெருமாளின் ஆணைப்படி, திருக்கச்சி நம்பி மீண்டும் காஞ்சீபுரத்திற்கு வந்து தன்னுடைய ஆலவட்டக் கைங்கர்யத்தைத் தொடர்ந்தார். 

இவருடைய வரலாற்றில் ஏழரை நாட்டுச் சனி பற்றிய ஒரு தகவல் வருகிறது. 

ஒரு நாள், பேரருளாளனுக்கு அவர் கைங்கர்யம் செய்துகொண்டிருந்தபோது (அத்திகிரி அருளாளன், பேரருளாளன், தேவப்பெருமாள், வரதராஜர் ஆகிய அனைத்துப் பெயர்களும் காஞ்சியில் இருக்கும் தேவப்பெருமாளைக் குறிக்கிறது. குழப்பம் வேண்டாம்), பெருமாள், திருக்கச்சி நம்பியிடம், சனியின் சம்பந்தம் வருவதால், ஏழரை ஆண்டுகள் பிரிவு நேரப்போகிறது, சகித்துக்கொள்ள வேண்டும் என்று கூற, அதற்கு திருக்கச்சி நம்பி, தான் பிரிவைத் தாங்க இயலாது, அதனால் சகித்துக்கொள்ள மாட்டேன் என்று கூறினார். ஏழரை மாதங்களாவது என்று கேட்க, அதற்கும் முடியாது என்று நம்பி பதில் கூறினார். சரி, ஏழரை வாரங்களாவது என்று கேட்க, உம்முடைய பிரிவைத் தாங்க இயலாது என்று திருக்கச்சி நம்பி கூற, இப்பிறவியில் தொடங்கப்பட்ட வினைகளை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும் (அதாவது ப்ராரப்த கர்மா) அதனால் ஏழரை நாழிகையாவது சனியின் ஆதிக்கத்தை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று பெருமாள் பதில் கூறினார். 

ஒரு நாள் தேவப்பெருமாளின் ரத்ன ஹாரம் காணாமல் போய்விட்ட து. ஆலய நிர்வாகிகளும் ஊர் மக்களும் அதனை அர்ச்சகர்தான் எடுத்திருக்கவேண்டும்  என்று எண்ணி, அர்ச்சகரைக் கேட்க, அவரோ, தனக்கு ஒன்றும் தெரியாது, எப்போதும் பெருமாள் சன்னிதியில் திருக்கச்சி நம்பிதான் இருப்பார், அவரைக் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார். ஊராரும் திருக்கச்சி நம்பி மீது பழி சுமத்தி அவரைக் காவலில் வைத்து அரசாங்கத்திற்குச் சொல்லி அனுப்பினர். இது நடந்து ஏழரை நாழிகை ஆனபிறகு, பெருமாளின் புஷ்பக் குவியலில் (திருமார்பில் இருந்த) அந்த ரத்ன ஹாரம் கிடைக்க, ஊராரும் திருக்கச்சி நம்பியிடம் மன்னிப்பு கேட்டு அவரை விடுவித்தனர். திருக்கச்சி நம்பிக்கு தான் ஏழரை ஆண்டுகள் கஷ்டப்படாமல் தேவப்பெருமாள் ஏழரை நாழிகைதானே துன்பப்படவைத்தான் என்று எண்ணி சந்தோஷமே அடைந்தார். 

தேவப்பெருமாளைப் பற்றி அவர் வடமொழியில் தேவராஜ அஷ்டகம் என்ற ஸ்லோகத்தை எழுதியுள்ளார். அதில் ஒரு ஸ்லோகத்தைப் பார்ப்போம். 

ஸமஸ்தப்ராணி ஸந்த்ராணப்ரவீண கருணோல்ப³ண ।

விளஸந்து கடாக்ஷாஸ்தே மய்யஸ்மிந் ஜக³தாம் பதே ॥ 2  

பொருள்: எல்லா பிராணிகளையும் காப்பதில் திறமை உள்ளவனே! அளவில்லாத கருணை உள்ளவனே! உலகத்திற்கு ஸ்வாமியே! உனது பார்வை என்னிடம் மலரட்டும். 

இப்போது ஒருவாறாக திருக்கச்சி நம்பியைப்பற்றி நாம் அறிந்து-கொண்டிருப்போம். இராமானுஜரின் வாழ்வில் இவர் வரும்போது நமக்கு ஓரளவு அறிமுகமாயிருக்கும். 

தை3வீ ஹ்யேஶா கு3ணமயீ ம ம மாயா து3ரத்யயா |

மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயாமேதாம் தரந்தி தே || 

இது கீதையின் 7வது அத்யாயத்தில் 14வது ஸ்லோகம். 

இதில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் குறிப்பிடுவது, பிறப்பு இறப்பு மீண்டும் பிறப்பு என்ற மாயச் சுழல், இந்த ப்ரக்ருதி என்னுடைய குணங்களின் ரூபமாக என்னால் உருவாக்கப்பட்டது. இந்த தெய்வீக மாயா சக்தியை யாரும் வெல்ல முடியாது (யாரும் கடக்க இயலாது). ஆனால் என்னைச் சரணடைந்தவர்கள் இதனை  எளிதில் கடக்க முடியும். 

இந்தப் பொருளை ஒத்த திருவாய்மொழிப் பாசுரத்தை இன்று பார்ப்போமா? மூன்றாம் பத்தில் இரண்டாம் திருவாய்மொழியான முந்நீர் ஞாலம்என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களில் நான்காவது பாசுரம் இது. 

கொல்லா மாக்கோல்* கொலை செய்து பாரதப்போர்,*

எல்லாச் சேனையும்* இருநிலத்து அவித்த எந்தாய்,*

பொல்லா ஆக்கையின்* புணர்வினை அறுக்கலறா,*

சொல்லாய் யான் உன்னைச்* சார்வதோர் சூழ்ச்சியே 

பொருள்: கொல்வதற்கான ஒரு கருவியும் இல்லாமல், குதிரையை நடத்துவதற்கான சாட்டையை மாத்திரமே உபயோகித்து பாரத யுத்தத்தில் பூமிக்குச் சுமையாக இருந்த எல்லாப் படைகளையும் இந்தப் பெரிய உலகில் அழித்த ஸ்வாமியே! நம் துன்பங்களுக்குக் காரணமான சரீர சம்பந்த த்தை அறுக்க நினைத்தாலும் அது அறுபடாது. இதில் அகப்பட்ட நான், உன்னை அடைவதற்கு ஒரு உபாயத்தைச் சொல்லி அருள். 

மா-குதிரை, கோல்-குதிரையை நட த்தும் சாட்டை, புணர்வு சம்பந்தம், ஓர் சூழ்ச்சி-ஓர் உபாயம், அவித்த-அழித்த

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்,  வரதராஜ ஸ்வாமி

அத்திவரதர் எழுந்தருளியிருக்கும் அமிர்தசரஸ் 

தொடர்வோம்...

===============================================================================

நான் படிச்ச கதை

உடுக்கை விரல் 2/2

கதையாசிரியர்: என்.ஸ்ரீராம்

 

பிறப்பு 1972. சொந்த ஊர் தாராபுரம். தற்போது வசிப்பது சென்னை.

மேலும் விவரங்கள் அறிய

ஸ்ரீராம்

கதை விகடனில் வெளி வந்த ஒன்று.

கதையின் சுட்டி

இங்கு ============>உடுக்கை-விரல்

 முன் கதை சுருக்கம்.

கதை கிராமியக்கலையான உடுக்கை கூத்து ஆடுபவர்களைப் பற்றியது. கதையின் மாந்தர் மூன்று பேர். யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. கதை சொல்பவர் இளைய மகன். 

வெகுதான்ய வருடத்தின் கொடூரப் பஞ்சம். கிணறுகள், நெல் காயப்போடுவதுபோல வறண்டுவிட்டன. குடியானவர்கள் ஆடு-மாடுகளை விற்றுக்கொண்டிருந்தனர்.

பனத்தம்பட்டி போய்விட்டு வந்த அய்யா, திண்ணையில் ஆயாசமாக அமர்ந்தார். தோள் துண்டில் முடிந்திருந்த நிலயாவரைக் காய்களை முறத்தில் கொட்டினார். நான் தண்ணீர் செம்பை நீட்டினேன். நிலவடியில் நின்றிருந்த அண்ணன் கேட்டான்…

”பெரிய எசமாங்க என்ன சொன்னாங்க?”

” ‘சனங்க பஞ்சத்துல இருக்கும்போது கூத்து எதுக்கு?’னு கேட்கிறாரு.”

அய்யா மேற்கொண்டு பேசவில்லை. நான்காம் சாமத்தில் என்னையும் அண்ணனையும் எழுப்பினார். உடுக்கைகளையும் கூத்து உடைகளையும் மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டினார். தென்கிழக்குத் திசை நோக்கிய பயணம். நாங்கள் சண்முக நதியை அடைந்தோம்.

இருள் சூழ்ந்ததும் பழநிமலை இருக்கும் திசையைக் காட்டி அய்யா சொன்னார்…

”நான் பாலகனா இருக்கும்போது, ஒரு பஞ்சக் காலத்துல எங்க அய்யா என்னை இங்கதான் கூட்டிவந்தாரு. அந்த ஆண்டவன் எங்களைக் கைவிடலை. அதுபோல இப்ப நான் உங்களைக் கூட்டிவந்திருக்கேன்.”

அய்யா, வெண்கல உடுக்கையை எடுத்து வெறி மூண்டவர்போல இசைக்க ஆரம்பித்தார்.

‘பம்… பம்… பம்…’

சிறிது நேரத்துக்குப் பின் உடுக்கடியை நிறுத்திவிட்டு, திடீரென எழுந்தார்.

”மழை பெய்யவேண்டி, இப்ப நான் அண்ணமார்சாமி உடுக்கடிக் கூத்துக்கட்டப்போறேன். மழை எறங்கினா, ஊர் திரும்புறோம். இல்லையின்னா பசி மயக்கத்துல செத்து இப்படியே மயானத்துக்குப் போறோம்.”

அய்யா உடுக்கடித்து, பாடி, வட்டமாக ஆடினார். அண்ணன் உடுக்கடித்து, பின்பாட்டு பாடினான். அண்ணமார்சாமி கதை தொடங்கிவிட்டது. மணலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த எனக்கு, இது வீண்வேலை என்றே தோன்றியது. என் கனவு எல்லாம் பொள்ளாச்சி சென்று மகாலிங்கம் பஸ் கம்பெனியில் கரிப்புகை பஸ் ஓட்ட வேண்டும். அதேபோல் பிரிட்டிஷ் துரைக்கு ஜீப் ஓட்ட வேண்டும் என்பதுதான். ஆனால், அய்யாவோ உடுக்கடிக் கூத்துக்கு என்னை வாரிசாக உருவாக்க எவ்வளவோ பிரியப்பட்டார். நான் உதாசீனப்படுத்திவிட்டேன்.

நேரம் செல்லச் செல்ல அய்யாவின் உடுக்கடியும் பாடலின் தொனியும் மூர்க்கமாக மாறின. அப்போது உச்சி வானில் இருந்து பளீரென ஒரு மின்னல். நிலம் அதிர்வதுபோல ஓர் இடி. ஜலமூலையில் இருந்து தனித்த கருமுகில் கூட்டம் மேலேறி வந்துகொண்டிருந்தது.

உடுக்கை இசைத்துப் பாட ஆரம்பித்தார் அய்யா. கூத்தில், பொன்னரும் சங்கரும் தலையூர் காளியுடன் சண்டையிட முடிவுசெய்தனர்.

பொன்னர் சங்கர் அருக்காணி. கொங்கு தெய்வங்கள்.

அந்தச் சமயத்தில், நீர்த்துறை மேட்டில் இருந்து தீவட்டிகள் கீழ் இறங்கி வந்துகொண்டிருந்தன. பயந்து ஓடிய இருவரும் ஊருக்குள் சென்று, ஆட்களைத் திரட்டி வருகிறார்கள் என்பது எனக்குப் புரிந்துபோயிற்று.

தீவட்டி ஆட்கள் மணற்பரப்புக்கு வந்து, எங்களைச் சூழ்ந்து நின்றார்கள்.

ஆட்கள் வல்லயத்தையும் குத்தீட்டியையும் நீட்டித் தயாரானார்கள். நான் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தேன். அந்த நேரம், கூத்தைத் திடீரென நிறுத்தினார் அய்யா.

”சாமீ… நாங்க உடுக்கடிக் கூத்துக்காரங்க. மேக்கே பூளவாடி பக்கம் இருந்து வர்றோமுங்க. மழை பெய்யணும், மக்கப் பஞ்சம் தீரணுமுன்னு என்னோட தெய்வத்து மேல நம்பிக்கை வெச்சு இன்னிக்கு நாங்க கூத்துக்கட்டறோமுங்க. எங்க கூத்து பொய்க்காம மழை எறங்குச்சுன்னா, நாங்க மனுஷங்கதான்னு எங்களை வுட்டுருங்க. மழை எறங்கலீன்னா இலுப்பப் பேயுனு நெனைச்சு, இந்த ஆத்தங்கரையிலேயே தீவட்டியால கொளுத்திக் கொன்னுருங்க.”

தீவட்டி ஆட்கள் ஆயுதங்களை மணலில் ஊன்றிவிட்டு, அதே இடத்தில் உட்கார்ந்து கூத்தைக் கவனித்தனர். நேரம் செல்லச் செல்ல அய்யாவின் உடுக்கடியும் பாடலின் தொனியும் மூர்க்கமாக மாறின. அப்போது உச்சி வானில் இருந்து பளீரென ஒரு மின்னல். நிலம் அதிர்வதுபோல ஓர் இடி. ஜலமூலையில் இருந்து தனித்த கருமுகில் கூட்டம் மேலேறி வந்துகொண்டிருந்தது.

அடுக்கடுக்காகக் கிளர்ந்து வந்த கருமுகில் கூட்டங்கள் விரைந்து உச்சி வானை மூடின. மின்னலும் இடியும் நிற்கவில்லை. கூத்தில் பொன்னரும் சங்கரும் போர்க்களம் புறப்படும் நேரம்… சடசடவென மழை இறங்கிற்று. கல்மாரிபோல கனமானத் துளி.

தீவட்டிகள் அணைந்து விட்டன. அய்யா, கூத்தை நிறுத்தவில்லை. பூசாரியும் ஊர்த் தலைவரும் தீவட்டி ஆட்களோடு வந்து அய்யாவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர். அதன் பின் எங்களை அவர்களின் கல்துறை கிராமத்துக்கே கூட்டிப் போனார்கள். வயிறார உணவு கொடுத்து ஊர் சாவடியில் தங்கவைத்தனர்.

தொடர்ந்து வாசியுங்கள்.

உடுக்கை விரல் 2/2 

மறுநாள் மழை ஓய்ந்து, ஏறுவெயில் வந்துவிட்டது. தலைவாசலில் இரட்டைச் சாரட்டுக் குதிரைவண்டி ஒன்று வந்து நிற்பதைக் கண்டோம். அதன் பின்னே நூற்றுக்கும் மேற்பட்ட காளைமாட்டு சவாரி வண்டிகள் வந்து நிற்கத் தொடங்கின. இரட்டைச் சாட்டுக் குதிரை வண்டியில் இருந்து இறங்கிய இளைஞர், பட்டு அங்கவஸ்திரம் அணிந்து, ராஜபரம்பரைத் தோற்றத்தில் இருந்தார். இந்த ஊர்த் தலைவரும் பூசாரியும் வந்த பின்பு பேசினார்.

”நான் தாராபுரத்துக்கு வடக்கே செங்காட்டூர் பட்டக்காரர். எங்க பக்கத்திலும் மழை இல்லை… கடும் பஞ்சம். பண்டம்பாடிகளுக்கும் தீனி இல்லை. விக்கிறதுக்கும் மனசு இல்லை. என்ன பண்றதுங்கிற குழப்பத்துல, எதுக்கும் ஒருமுறை பழநி முருகன்கிட்ட வந்து வேண்டினா வழி கிடைக்குமுன்னு வண்டி கட்டிக்கிட்டு வந்தோம். சாமி கும்பிட்டுட்டு வடக்கே வரும்போது இங்க மட்டும் மழை பெஞ்சிருக்கு. தெக்க போகும்போது இங்க மழை இல்லையே என்னன்னு கேட்கலாமுன்னு வந்தோம்.”

ஊர்த் தலைவர் எங்கள் மூவரையும் கூப்பிட்டு முன்னே நிறுத்தினார். நேற்று இரவு சண்முக நதிக்கரையில் நடந்தவற்றை விவரித்தார். பட்டக்காரர், அய்யாவின் கைகளைப் பற்றிக்கொண்டு கேட்டார்.

”நீங்க எங்க மேல இரக்கப்பட்டு எங்க ஊருக்கும் வரணும்; இதே மாதிரி கூத்துகட்டணும்; எங்க பஞ்சத்தையும் போக்கணும்.”

இரட்டைச் சாட்டுக் குதிரைவண்டி செங்காட்டூர் அரண்மனை வீட்டின் முன்பு வந்து நின்றபோது, பெண்கள் விளக்குமாடத்தில் அந்திவிளக்கு ஏற்றிக்கொண்டிருந்தனர். இரவு ஆகாரத்துக்குப் பின்னர், வேலையாட்கள் வந்து அரண்மனையின் பின்கட்டு நடையைத் திறந்து எங்களைத் தோட்டத்துக்குள் கூட்டிப்போயினர். தென்னந்தோப்பு நடுவில் இருந்த வீட்டில் தங்கவைத்தனர். மயில்-மாணிக்கக் கொடி பந்தல் இட்ட முற்றம். வீடு எங்கும் முதிர்ந்த நெல் வாசனை. அய்யா, மறுநாளே அண்ணமார்சாமி கூத்துக்கான ஏற்பாட்டைச் செய்தார். கூத்து உடை அணிந்து உடுக்கையின் இடது பக்க நரம்பைச் சரிபார்த்துக்கொண்டிருந்த அய்யாவிடம் சென்று நான் கேட்டேன்.

”நானும் பின்பாட்டு பாடுறேன்.”

அய்யா, என்னை நிமிர்ந்து பார்த்தார். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு பேசினார்.

”அண்ணமார்சாமிகள் பாண்டவர்களோட மறுபிறப்பா பூலோகத்துல பொறந்திருக்காங்கன்னு ஐதீகம். அவுங்க, உசுரோடு தெய்வமாகி தேவலோகம் போனவங்க. அவுங்க வரலாற்றை நாம ஆம்பள வேஷம், பொம்பள வேஷம்னு மாறி மாறி ஆடிப் பாடிக் கூத்துக்கட்டுறோம். பார்க்கிற சனத்துக்கு நாம கூத்துக்காரங்களா தெரியக் கூடாது; கதைத் தெய்வங்களா தெரியணும்… கையெடுத்துக் கும்பிடணும்.”

அய்யா, குனிந்து கால் சலங்கைகளை அணிந்தபடியே மறுபடியும் பேசினார்.

”நான் உடுக்கடிச்சுப் பாடினா மழை எறங்கும்கிறது என் நம்பிக்கை. அதுபோல உனக்கு எப்ப நம்பிக்கை வருதோ, அப்ப

நீ கூத்துக்கட்ட வா.”

அய்யா, கால் சலங்கை குலுங்க அரங்கக் களத்தை நோக்கிப் போய்விட்டார். அன்று இரவு அய்யா ஆடியது ஆக்ரோஷமான கூத்து. சங்கரிடம் தலையூர் காளி படையினர் பயந்து ஓடும்போது மழை இறங்கிவிட்டது. காற்று அடங்கிப் பெய்த மழையில் ஊர் முழுவதும் பெருவெள்ளம். இருளில் நனைந்தபடியே தென்னந்தோப்பு வீட்டுக்கு வந்ததும், அய்யா அவருடைய வெண்கல உடுக்கையை அண்ணனிடம் கொடுத்துச் சொன்னார்.

”அண்ணமார்சாமி என்னைக் கைவிடலை. அந்தச் சத்தியவாக்கைத் தொடர்ந்து சோதிக்கவும் கூடாது. இனி நீதான் என் வாரிசு.”

அந்த மழைக்காலம் தேவைக்கு அதிகமாகவே மழையைக் கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து காலங்கள் செழித்தன. ஆண்டுகள் ஓடின. அதன் பின்பு அய்யா ஒருபோதும் உடுக்கையைத் தொடவே இல்லை. நாங்கள் பட்டக்காரர் தென்னந்தோப்பு வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிக்கொண்டோம். அண்ணன் புகழ்பெற்ற உடுக்கடிக் கூத்துக்காரனாக வளர்ந்துவிட்டான். அண்ணமார் உடுக்கடிக் கூத்தின்போது ‘படிவிளையாண்டு’ படுகளம் வீழ்பவர்களை எழுப்ப, அண்ணனை விட்டால் வேறு கூத்துக்காரர்கள் இல்லை என்ற நிலை. அண்ணனும் என்னை பின்பாட்டு பாட, பெண் வேஷம் கட்ட அனுமதிக்கவில்லை. கூத்துக்குச் செல்லும்போது உடுக்கைகளையும் கூத்து உடைகளையும் கால் சலங்கைகளையும் சுமந்து செல்லும் ஓர் எடுபிடியாகவே வைத்திருந்தான். நானும் வேறு வழி இல்லாமல் அதைப் பிரியமுடன் ஏற்றுக்கொண்டேன்.

அந்தச் சமயத்தில் அண்ணனுக்கு ஸ்த்ரீபார்ட் நாடகக்காரி உதயராணி பழக்கம் ஆனாள். கூத்து முடிந்து 27-ம் நாள் சடங்கான தவசு கம்பத்தை நீரில் விட்டு, காணிக்கை பெற்றதும், அண்ணன் தவறாமல் குண்டடத்தில் உள்ள உதயராணி வீட்டுக்குச் சென்று வந்தான். நான் அண்ணன் கிளம்பும் வரை அவள் வீட்டு வெளித் திண்ணையில் அவமானமும் வருத்தமும் மேலிட உட்கார்ந்துகிடந்தேன். கழுதைகள் கத்திக்கொண்டு திரியும் வீதியில் செல்வோர் எல்லாம், என்னைப் பார்த்துக் காறித் துப்புவதுபோல இருக்கும். அய்யாவுக்கு இது தெரிந்திருந்தாலும், அண்ணனைக் கண்டிக்கும் திராணி இல்லாதவராக இருந்தார்.

அந்த வருடத்தில்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. வெள்ளைக்காரத் துரையின் குடும்பத்தினர் பிரிட்டிஷ் தேசத்தில் இருந்து கப்பலில் வந்து இறங்கியிருந்தனர். கீழை நாட்டின் சடங்கு, சம்பிரதாயக் கூத்துக்களைப் பார்க்க ஆர்வம்கொண்டிருந்த துரைசாணி அம்மாவுக்காக, பட்டக்காரர் அண்ணமார்சாமி கூத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அண்ணன் மூன்று இரவுகளில் கதையை முடிப்பதாகத் திட்டம்போட்டு கூத்தை ஆரம்பித்தான்.

மூன்றாம் நாள் படுகளம் விழச்செய்து எழுப்பும் கூத்து. ஒரு கூத்தாடிக்குக் கடினமான தருணம் அது. அரங்கக் களத்தின் நாற்புறமும் கல்விளக்குத் தீபங்கள் சுடர்விட்டன. ஊர் வண்ணார்கள் தீப்பந்தம் பிடித்து நின்றனர். துரையும் துரைசாணி அம்மாவும் பட்டக்காரர் குடும்பத்தினரும் முன்வரிசையில் அமர்ந்து கூத்தைக் கவனித்தனர். சுற்றுவெளி ஊர்களில் இருந்து எல்லாம் சனங்கள் மாட்டுவண்டி கட்டிக்கொண்டு வந்து குவிந்துவிட்டனர்.

அண்ணன் முதலில் தலையூர் காளியாக உருவம் மாறி, மாயவர் அம்பு விட்டு சங்கரை வீழ்த்துவதை வேகமான தாளகதியில் உடுக்கடித்துப் பாடி, ஆடினார். கூட்டத்துக்குள் இருந்து ஆண் பார்வையாளர்கள் இருவர் சங்கர் அருளாடியாகி அரங்கக் களத்துக்கு ஓடிவந்தனர். இறப்புத்தன்மையுடன் செத்தவர்போல மூர்ச்சையாகி விழுந்தனர். படுகளம் விழுந்தவர்களை மேற்காகத் தலை வைத்து, கிழக்காகக் கால் நீட்டி மரணமுற்றவர்களைப் படுக்கவைப்பதுபோல படுக்கவைத்து, வெள்ளைத் துணியால் மூடினர்.

அண்ணன் அடுத்ததாக சங்கரின் மரணம் அறிந்த சாம்புகன் அழுதுபுலம்பும் கதைப்பாடலை உக்கிரத் தாளத்தில் உடுக்கடித்துப் பாடி ஆடினான். மூன்று ஆண் பார்வையாளர்கள், சாம்புகன் அருளாடியாகி படுகளம் விழுந்தனர். அண்ணன் கடைசியாக பொன்னர், தலையூர் காளியைப் போரிட்டுக் கொன்று, வாளில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் பாடலை, உடுக்கடித்துப் பாடி ஆடினான். ஐந்து ஆண் பார்வையாளர்கள் பொன்னர் அருளாடியாகி படுகளம் விழுந்தனர். துரைசாணி அம்மா எழுந்து வந்து படுகளம் விழுந்தவர்களின் நெஞ்சில் கை வைத்துப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவராகக் கத்தினார்.

”ரியலி… ஆல் ஆர் டெட்.”

”நோ… நோ…”

துரை எழுந்து வந்து சமாதானப்படுத்தி, கூட்டிப்போய் அமரவைத்தார்.

அண்ணன் பெண் வேடதாரியாக மாறி, தங்காயி பாத்திரம் ஏற்று, படுகளம் விழுந்தவர்களைச் சுற்றியவாறு உடுக்கடித்து அழுது புலம்பிப் பாடினான். பாடலின் முடிவில் பெண் பார்வையாளர்களில் ஒருத்தி அருள் பெற்று, அரங்கக் களத்துக்கு வந்து உடலை முறுக்கி நிற்கவேண்டும். அடுத்து பெரியகாண்டி, செல்லாண்டி, மகாமுனி, கருப்பணர், கன்னிமார் என, தெய்வங்களும் அருள்பெற்று வந்தால்தான், படுகளம் விழுந்தவர்களை எழுப்ப முடியும்.

பெண் பார்வையாளர்களின் மத்தியில் சலனமே இல்லை. அண்ணன் தொடர்ந்து முயற்சித்தான். நேரம் கடந்தது. வடமேற்குத் திசையில் பளீரென மின்னல். திடுமென

ஓர் இடி. கருக்கல்கள் திட்டுத் திட்டாகத் தேங்கி மேல் எழுந்து வந்தன. பட்டக்காரர் பதற்றமாகி அண்ணனிடம் ஓடிவந்தார்.

”எங்க முப்பாட்டன் காலத்துல இது மாதிரி திடீர்னு மழை எறங்கி, பெருவெள்ளம் எடுத்து படுகளம் விழுந்தவர்களை, எழுப்புறதுக்குள்ள அடிச்சுட்டுப்போயிருச்சாம். அந்த அபகீர்த்தி எனக்கும் வந்துர வேணாம்.”

அண்ணனுக்கு கண்கள் சிவந்துவிட்டன. அதிர்வுடன் உடுக்கடித்தான். வெறிகொண்டு பாடி ஆடினான். பெண் பார்வையாளர்கள் எவரும் அருளாடியாக மாறவில்லை. உச்சிவானம் முழுவதும் முகில்கள் நிறைந்துவிட்டன. மழை இறங்கும் முன்னர் உண்டாகும் சிறு புழுக்கம். துரைசாணி அம்மா பயந்து அழத் தொடங்கினார்.

”ப்ளீஸ் சேவ் தெம்… அட் எனி காஸ்ட்.”

நான் தென்னந்தோப்பு வீட்டுக்கு ஓடி, அய்யாவிடம் நடந்ததைச் சொன்னேன்.

”பொம்பள சகவாசம்… பெண் தெய்வம் எப்படி வரும்? என்னை இப்ப அங்க வந்து அவமானப்படச் சொல்றியா?”

அய்யா வர மறுத்துவிட்டார். நான் திரும்பவும் அரங்கக் களத்துக்கு ஓடிவந்தேன். சுழன்று அடிக்கும் வாடைக்காற்றுக்கு கல்விளக்குத் தீபங்களும் தீப்பந்தங்களும் அணையத் தொடங்கின. அருகில் மண்வாசம். அந்தக் கணம், நான் ஓர் உத்வேகத்தில் பட்டக்காரர் முன்னர் போய் நின்றேன்.

”படுகளம் விழுந்தவங்களை நான் எழுப்பறேன்…”

பார்வையாளர்கள் முகத்தில் ஏளனக் குறி. பட்டக்காரர், அண்ணனிடம் இருந்து வெண்கல உடுக்கையைப் பிடுங்கி என்னிடம் கொடுத்தார்.

‘பம்… பம்… பம்…’

என் நாவில் இருந்து தங்காயி புலம்பலுக்கான பாடல் பிறந்தது.

”கல்லான கோட்டையெல்லாம் நாம் சிற்றுலைப் பட்டினத்தில், கலையாதோ என்றிருந்தேன். அண்ணா… கலையா மழை பொழிய கணத்திலே கலைந்துவிழக் கண்டேன்…” – பாடலின் முடிவில் பெண் பார்வையாளர்களுக்குள் இருந்து அடுத்தடுத்து அருளாடிகள் எழுந்து, குதித்தபடி அரங்கக் களத்துக்கு வந்தனர். கூட்டம் கரகோஷமிட்டது. பட்டக்காரர் முகத்தில் புன்னகை. மழை இன்னும் இறங்கவில்லை. நான் துரிதமாகச் செயல்பட்டு, பெரியகாண்டியாக மாறிய அருளாடியிடம் படுகளம் விழுந்தவர்களை எழுப்பித் தர உத்தரவு வாங்கினேன். விரைந்து கிணற்றடி பூஜையை முடித்தேன். 

பொன்னர் – சங்கர் வீரவரலாற்று படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்வு!

படுகளம் விழுந்தவர்களுக்கான உயிர் எழுப்பும் பாடலைப் பாடினேன்.

”நீங்க பட்ட படுகளத்து வாசலிலே… எழுப்ப வரம் வாங்கி வந்தேன்/ செத்தவர்கள் எல்லார்க்கும் செம்பூசி சிறு சூடு வாங்கி வந்தேன்…”

நான் அருளாடிகளுடன் படுகளம் விழுந்தவர்களை ஒன்பது சுற்று சுற்றினேன். தங்காயி அருளாடி தானாகக் கதறினாள்.

”அண்ணா… அண்ணா… எழுந்திருங்க அண்ணா…”

உடனே சிவமந்திரத் தீர்த்தத்தை எடுத்து படுகளம் விழுந்தவர்கள் மீது தெளித்தாள். தீர்த்தம் பட்டதும் படுகளம் விழுந்தவர்கள் ஒவ்வொருவராகத் துள்ளி எழுந்தனர். துரைசாணி அம்மா கத்திக்கொண்டு என்னிடம் ஓடிவந்தார்.

”மிராக்கிள்… மிராக்கிள்…”

என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். பட்டக்காரர் மற்றும் பார்வையாளர்கள் கண்களில் நீர் திரண்டிருந்தது. மழை இறங்கிவிட்டது. நான் அண்ணனைத் தேடினேன். அங்கு எங்குமே அண்ணனைக் காணவில்லை. மறுநாள் பகலில் துரையும் துரைசாணி அம்மாவும் என்னைத் தேடி தென்னந்தோப்பு வீட்டுக்கு வந்தனர். தங்க ஆபரணம் ஒன்றை பரிசாக, கழுத்தில் சூட்டினர். நான் அதை அவர்களிடம் திருப்பித் தந்துவிட்டுச் சொன்னேன்…

”உங்க ஜீப்பை ஓட்டிப் பழகணும்” – இருவரும் சிரித்தனர். மூன்று நாட்களில் எனக்கு ஜீப் ஓட்டப் பழக்கிவிட்டனர். அந்த வார இறுதியில், நான் அண்ணனைத் தேடி உதயராணி வீட்டுக்குப் போனேன். கதவைத் திறந்த உதயராணி, அண்ணனைத் திட்டினாள்.

”பெரிய கூத்தனாம்… போ. இனி உன் எடுபிடிகிட்ட பின்பாட்டு பாடு.”

குதிரைவண்டி பிடித்து வீடு வரும் வரை அண்ணன் என்னிடம் எதுவும் பேசவில்லை. அன்று இரவு நடுநிசியில் ஏதோ அரவம் கேட்டு நான் விழித்தேன். கட்டில் காலடியின் அண்ணன் நின்றிருந்தான். அடுத்த கணம் என் வலது கைவிரல்களைக் கட்டில் சட்டத்தில் வைத்து அழுத்தி வீச்சரிவாளால் வெட்டினான். துண்டான ஐந்து விரல்களும் தரையில் விழுந்து சிதறின. ரத்தம் கொட்டியது. எனக்கு உயிர்போகும் வலி. எழுந்து கதறினேன். அய்யாவும் தூக்கம் கலைந்து எழுந்து ஓடிவந்தார். வீச்சரிவாளுடன் ஆவேசம் அடங்காமல் நிற்கும் அண்ணனைப் பார்த்ததும் சத்தமிட்டார்.

”சண்டாளா… படுகளம் எழுப்புற புள்ளையைப் பாழாக்கிட்டியே!”

அய்யா வெளியேறி, தென்னந்தோப்பின் இடையே அரண்மனையை நோக்கி ஓடினார். வீச்சரிவாளை வீசிவிட்டு அண்ணனும் பின்னே ஓடினான். நான் வலியில் துடித்தபடியே யோசித்தேன். என் நிலை கண்டால் பட்டக்காரர் நிச்சயம் அண்ணனின் வலது கைவிரல்களைத் துண்டித்துவிடுவார். நானும் வீட்டைவிட்டு வெளியேறி, தெற்கு பார்த்து ஓட ஆரம்பித்தேன். அய்யா மழை வேண்டி முன்பு கூத்துக்கட்டிய சண்முக நதி மணல்திட்டு வந்து உட்கார்ந்தேன். கைவிரல்களில் வலி, பசி, சலிப்பு, கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. அப்படியே மயங்கிச் சரிந்தேன்.

நான் கண் விழித்தபோது கீற்றுக் கொட்டைகையினுள் மூங்கில் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு இருந்தேன். கைவிரல்களுக்கு பச்சிலை கட்டப்பட்டு இருந்தது. வலி குறைந்து இருந்தது. நான் எழுந்து நடைப்பக்கம் வந்தேன். வாசல் கொழுமிச்சைமர நிழலில் குறத்திப் பெண் ஒருத்தி கூடை முறம் பின்னிக்கொண்டிருந்தாள். அழகான யுவதி. என்னைக் கண்டதும் கன்னக்குழி விழச் சிரித்தபடியே பேசினாள்.

”நாங்க மூங்கில சீவும்போது விரல்ல கத்தி பட்டா வேலாம்பட்டையும் வெட்டுக் கட்டாந்தழையும்தான் வெச்சுக் கட்டுவோம். சீக்கிரத்திலேயே புண் ஆறிடும். உங்களுக்கும் அதைத்தான் வெச்சுக் கட்டியிருக்கேன்.”

ஒரு மாதத்தில் கைவிரல் புண் ஆறிவிட்டது. ஆனால், மொன்னையான விரல்களைப் பார்க்கும்போதெல்லாம் எதிர்காலம் சூனியமானதுபோல தவித்தேன்.

அன்று வீதி வெறிச்சிட்ட மதியம். அரப்பு தேய்த்துக் குளித்த ஈரத்தலையுடன் என் அருகில் வந்து அமர்ந்த குறத்திப் பெண், எனது வலது கை மொன்னை விரல்களை வாஞ்சையாகத் தடவிக்கொடுத்தபடியே பேசினாள்.

”நீங்க பழையபடி உடுக்கக் கூத்துக் கட்டினா… உங்க கவலை எல்லாம் தீர்ந்துரும்.”

நான் குறத்திப் பெண்ணைப் புரியாமல் பார்த்தேன். அவள் மடியில் இருந்து சில மூங்கில் குச்சிகளை வெளியே எடுத்தாள். அவற்றை என் மொன்னை விரல்களில் ஒவ்வொன்றாக மோதிரத்தைப்போல மாட்டிவிட்டாள். அவை கைவிரல்போலவே இருந்தன; அசைந்தன.

இது வெறும் மூங்கில் குச்சி இல்லை. உடுக்கை விரல். நீங்க சாகுற காலம் வரைக்கும் உடுக்கடிக்கலாம்.

அதன் பின்னர், காலம் என்னை மாபெரும் உடுக்கடிக் கூத்துக் கலைஞனாக மாற்றியது. வானொலி மூலம் புகழ் பெற்றேன். வயோதிகம் ஆகி, கூத்துக் கட்டுவதை நிறுத்திய பின்பும் பட்டக்காரர் எனக்கு ஆதரவு கொடுத்துவந்தார். கடந்த பௌர்ணமிக்கு முன்தினம் பட்டக்காரர் இறந்துபோனார். அவரின் 16-ம் நாள் காரியம் முடிந்த நண்பகலில், அமெரிக்காவில் இருந்து வந்திருந்த பட்டக்காரரின் பேத்தி அரண்மனையையும், தோட்டத்தோடு தென்னந்தோப்பு வீட்டையும் விற்க விலை பேசினாள். அந்திமக் காலத்தில் நான் மீண்டும் தெற்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கினேன்.

எழுந்து நிற்கும் நாகப்பாம்புபோல எனக்குத் தெரிந்தது. வடக்கு முகமாகப் பாய்ந்து வரும் சண்முக நதியின் நற்றாற்று மணல்திட்டில், நான் தென்கிழக்குத் திசை நோக்கி சம்மணமிட்டு அமர்ந்து இருந்தேன். 

”முருகா… அறுபடை நாதா… நான் ஆடுற கடைசிக் கூத்து இது. இருவத்தி ஆறு நாளு நடத்துற கூத்தை, இன்னிக்கு ஒரு ராத்திரியிலேயே உன்னைச் சாட்சியா வெச்சு ஆடப்போறேன். நான் உண்மையான கூத்துக்காரனா இருந்தா, மழை எறங்கணும்; கார்வெள்ளம் எடுக்கணும்;

என்னை அடிச்சுட்டுப் போயி உன்னோடு சேர்க்கணும்…”

குமிழியிட்டு ஓடும் ஆற்று நீர்ப்பெருக்கின் சலசலப்பைத் தவிர, நிசப்தம். மனித அரவம் அற்ற பீதியூட்டும் இருள்.

நான் இடது கையில் பிடித்திருந்த வெண்கல உடுக்கையைச் சரிப்படுத்தினேன். வலது ஆள்காட்டி விரலை உடுக்கையில் இறக்கினேன்.

‘பம்… பம்… பம்…’

அடுத்த கணம், ஆகாயத்தில் இருந்து கண்களைப் பறிப்பதுபோல் ஒளிப்பிழம்பு. எரிநட்சத்திரம் அறுந்து கீழே இறங்கியது. எதிர்க்கரையில் உள்ள ஒற்றை இலுப்பைமரத்தின் பட்டுப்போன கிளையில், பொந்தணையும் குருட்டு ஆந்தைகள் அலறிக் குரல் இட்டன. தலைக்கு மேலாக வாவற்பட்சிகள் வட்டமிட்டபடி கத்தின.

எனக்கு விரல்கள் நடுங்கின. ஏதோ அபசகுனம்போல் பட்டது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் உடுக்கை இசைத்தேன்.

‘பம்… பம்… பம்…’

பாறை இடுக்குகள் எதிரொலித்தன. நான் அண்ணமார்சாமி உடுக்கடிக் கூத்தை ஆரம்பித்தேன்.

‘ஆட்டக் களத்திலே / ஆடும் கலைஞனுக்கும் /பார்க்கும் மக்களுக்கும் / குத்தம் குறை வராமே/ தீட்டு தடங்கல் வராமே / காத்துக் கருப்பு அண்டாமே/கனதிடமாக் காத்து நின்று / கூத்து நடக்க வேணுமப்போ…’

என் உடுக்கடி, வேகம் கொண்டது. அடுத்து, கூத்தின் கதைத் தெய்வங்களை கண் முன்னே எழச் செய்ய வேண்டும். பாடல் வரிகள் மனசுக்குள்ளேயே இருந்தன. நாக்கு உச்சரிக்க மறுத்தது. பாடல்கள் வெளிப்படாத அவஸ்தை. நான் எழுந்து கத்தினேன்.

”அய்யோ… சின்னண்ணா… பெரியண்ணா… அருக்காணி… தங்காயீ… பெரியகாண்டித்தாயீ… இது என்ன சோதனை?”

அப்போது என் இடது கையில் இருந்த வெண்கல உடுக்கை நழுவி, மணலில் விழுந்து புதைந்தது. நடுங்கும் வலது கைவிரல்களை நான் பார்த்தபடியே நின்றேன். அந்த உடுக்கை விரல்கள், என்னை நிர்மானுஷ்ய வெளியில் நிற்பதுபோல உணரச் செய்தன.

அமாவாசை தினம். இருளின் அடர்வு கூடி வந்தது. நான் மணலில் கிடந்த உடுக்கையை எடுத்து மறுபடியும் இசைக்கத் தொடங்கினேன். அண்ணமார்சாமி கதைப் பாடல் பிரவாகமாகப் பிறந்தது. ஒரு நிலையில் வானில் முகில் ஏறி கனமழை பொழிந்தது. சண்முக நதியில் கரைகொள்ளாத பெருவெள்ளம். மணல்திட்டு முழுகியது. என் கழுத்துமட்டத்துக்கு நீர் ஏறும் வரை நான் உடுக்கை இசைப்பதையும் பாடுவதையும் நிறுத்தவில்லை. வெள்ளம், என்னைத் தூக்கிற்று; அடித்து இழுத்துச் சென்றது. நான் உடுக்கையை மட்டும் விடவில்லை. என் உடம்பு சிலிர்த்தது.

நடந்தது எல்லாம் வெறும் பிரமை. இயலாமையும் கோபமும் ஏற்பட்டன. சுற்றும் முற்றும் பார்த்தேன். கீழ்வானம் சிவந்து இருந்தது. நான் கீழே குனிந்து வெண்கல உடுக்கையை எடுத்தேன். உடுக்கை விரல்களையும் கழற்றினேன். இரண்டையும் ஒருசேர ஓடும் தண்ணீரில் வீசி எறிந்தேன். அவை தண்ணீரில் மிதந்து போவதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பின்னர் பழநிமலையைக் குறிவைத்து நடந்தேன். படிக்கட்டில் ஏறி ஓர் இடத்தில் அமர்ந்தேன். என் முன்னாலும் நாணயங்கள் விழுந்தன. ஓர் உடுக்கடிக் கூத்து மகா கலைஞன் வீற்றிருக்கிறான் என உரக்கக் கத்த வேண்டும்போல தோன்றியது!

– ஆகஸ்ட் 2015

என்னுரை

கதைசொல்லிகளுக்கே உள்ள நடை. அடுத்து என்ன என்று ஆர்வத்தை தூண்டும் நடை. திருப்பங்கள் இருந்தாலும் கடைசியில் செயற்கை விரல்களையும் எறிந்துவிடுவது தான் மனதை வருடுகிறது. பையோனிக்ஸ் பற்றி தமிழர் அன்றே அறிந்திருந்தனர் என்று புரளி பேசலாம்.

புராண ஏகலைவனுக்கு கட்டைவிரல் மட்டும் தான் வெட்டப்பட்டது, கதையில் உள்ள ஏகலைவனுக்கு 5 விரல்களும் வெட்டப்பட்டன!

 இரண்டு கருத்துக்கள்.

‘யாருடைய சாயலும் இல்லாமல் அதேநேரத்தில் பிற்காலப் படைப்பிலக்கியங்களில் எல்லோரும் சென்ற பாதை வழியாகவும் நடந்து, அதைக் கடந்து தனக்கெனப் புதிய பாட்டையை வடிவமைத்துக்கொண்டுவிட்டார் ஸ்ரீராம். 37 சிறுகதைகள், 13 குறுநாவல்கள் ஒரு நாவல் என விரியும்’

கிராமத்து வெளிசார்ந்த வாழ்க்கையைப் பதிவாக்கியுள்ள என். ஸ்ரீராமின் கதைகள், இனவரைவியல் தன்மையுடன் மண்ணுக்கு நெருக்கமானவை. இவரின் கதைகள், எளிய மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்கிற பிரச்சினைகள் ஏன், இப்படி எல்லாவற்றையும் சிதைக்கின்றன என்ற கேள்வியை வாசிப்பின் வழியாக எழுப்புகின்றன. மதிப்பீடுகள் சிதலமாகியுள்ள கிராமத்துச் சூழலில், மனித இருப்புக் குறித்துக் கதைக்கிற ஸ்ரீராம், பெரும்பாலான புனைகதைகளில் முக்கியமான திருப்பங்களைப் பற்றி விளக்கிடாமல் மௌனம் சாதிக்கிறார். எழுத்துபோலவே மௌனமும் வலிமையானது என்ற நிலையில் வாசகன் பிரதிக்குள் தொடர்ந்து பயணிக்கவேண்டியுள்ளது. மரபான கதைசொல்லலில் இருந்து விலகிநின்று சித்தரிக்கிற இத்தகைய சம்பவங்கள்தான் இவரின் தனித்துவம்.  ‘இது பின் நவீனத்துவம் என்று கூறலாமா?

  

38 கருத்துகள்:

  1. பரநியாசம் ஆகிவிட்டால், கோயிலில் தங்கள் பெயருக்கு அல்லது தங்களைச் சேர்ந்தவர்களுக்காக அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்வது, தங்களுக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்வது என்பதெல்லாம் கூடாது என்று சொல்வர்.//

    ஆமாம் ....ஆனால் பெரும்பான்மை பின்பற்றுவது இல்லை நெல்லை. சமீபத்தில் கூட கண்டேன்.

    என் தனிப்பட்டக் கருத்து, இதை எல்லோருமே பின்பற்றலாம் என்பது.

    நம் வீட்டில் அர்ச்சனை செய்யும் வழக்கம் இல்லை....(வீட்டில் நடக்கும் அர்ச்சனையை சொல்லலை ஹிஹிஹிஹி) பள்ளி படிக்கும் காலம் தொட்டே இந்த இரண்டும் இல்லாமல் போய்விட்டன. அர்ச்சனை செய்வதும். வேண்டுதலும். சரணாகதி தத்துவம் பற்றித் தெரிந்து கொண்ட போது....10ஆப்பு........இதெல்லாம் எதற்கு என்ற எண்ணம் என்னவோ அப்பொழுதே வந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த தத்துவம் இது. complete/whole trust in the Almighty!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். வீட்டில் அர்ச்சனை செய்வதில்லையா இல்லை வாங்குவதில்லையா?

      நீக்கு
  2. திருக்கச்சி நம்பி மற்றும் நிகழ்வுகள் உணர்வுபூர்வமான பகுதி.

    ஸ்லோகம் பாசுரம் விளக்கம் சூப்பர் நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  4. கதை மிகவும் உணர்வுபூர்வமான ஒன்றவைத்த கதை.

    இப்படி உடுக்கை அடித்தால் மழை பெய்யுமா என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்டு, கதையில் கதாபாத்திரம் அய்யா சொல்லும் அக்கருத்து
    கதையின் அடிநாதம், "நம்பிக்கை"

    இந்த நம்பிக்கையில் ஒரு சிறு நூலிழை அறுந்தாலும் நினைப்பது நடக்காது என்பது மனம்சார்ந்த விஷயங்களிலும் சொல்லப்படும் ஒன்று. Alpha mind power.

    இதைத்தான் தத்துவத்திலும் சொல்லப்படுகிறது....நெல்லையின் இன்றைய பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் அந்த வரிகளை இங்கு எடுத்தாளலாம் கதைக்குப் பொருத்தமான பகுதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் தத்துவத்திலும் சொல்லப்படுகிறது அல்லது இதைத்தான் தத்துவத்திலும் சொல்கிறார்கள்! நம்பிக்கை - சரணாகதி.

      கீதா

      நீக்கு
  5. திருக்கச்சி நம்பியின் பக்தியைப் பார்க்கும்போது வியக்கத் தோன்றுகிறது. இப்படியும் ஒரு பக்தியா..

    தியாகராஜரின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன

    "தெலியலேது ராமா பக்தி மார்க்கமு..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிட்டோ ஸ்ரீராம்....

      தியாகராரஜரும் இப்படியான பக்தியைக் கொண்டிருந்தவர்தானே.

      கீதா

      நீக்கு
    2. வாங்க ஶ்ரீராம். இது போன்று பல நிகழ்வுகள் என்னை மிகவும் வியக்க வைக்கின்றன. இப்படியெல்லாம் நடந்திருக்குமா இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்களா என்று.

      அதில் ஆயிரத்திலொரு பங்கைக்கூட என்னிடம் காணோமே என நினைக்கிறேன்.

      நீக்கு
    3. ஜஸ்ட் நானூறு வருடங்களுக்கு முன்பு. திருவிக எழுதுகிறார், சென்னையில் பெண் யோகி பறந்து வந்து அவர் வீட்டு மாடியில் இறங்கியதாக. நூறு வருடங்களுக்குள் இது நிகழ்ந்தது.

      நீக்கு
  6. ஒட்டு விரல்கள் பற்றி நான் சொல்ல நினைத்ததை ஜெ கே அண்ணாவும் என் உரையில் சொல்லிவிட்டார்.

    ஆசிரியர் நிறைய ஆராய்ச்சிகள் செய்து கதையை எழுதியிருக்கிறார். உழைப்பு அபரிதமான உழைப்பு. அதனால்தான் கதை தொய்வில்லாமல் மிக நன்றாக வந்துள்ளது.

    முடிவு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், அதுவும் யதார்த்தம்தான். இப்ப இப்படி எல்லாம் உடுக்கை அடித்துக் கூத்துக்கட்டுபவர்கள் அரிதாகிவிட்டனர். அதாவது சும்மா நாட்டுப்புறக் கலைக்காக ஆடுவதைச் சொல்ல வில்லை. அந்த நம்பிக்கையுடன்....

    நான் 5 ஆம் வகுப்பு படிச்சப்ப, வள்ளியூர்ல கோடை வந்தால் கொடை விழா எடுப்பாங்க! மழை வேண்டி. ஆனால் மழை வந்துச்சான்னு கேட்டீங்கனா இல்லை என்பேன். ஒரு வேளை இந்த நம்பிக்கை 100% இல்லாமல் இருந்ததால் இருக்கலாம்.

    எல்லாவற்றின் அடிநாதமும் முழு நம்பிக்கை. அதில் எந்தவிதக் கலப்படமோ இல்லை ஒரு சிறு துளி கூட சந்தேகமோ இல்லாத நம்பிக்கை.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    நல்ல அருமையான பக்தி தொடர்பதிவு. திருக்கச்சி நம்பியின் பரிபூரணமான சரணாகதி பக்தியை அறிந்து கொண்டேன். படிக்கும் போது மெய் சிலிர்கின்றது. எத்தனை மகானுபாவர்கள் இந்த பூமியில் பிறந்து இறைவனோடு ஒன்றி, பேசி செயல்பட்டு நமக்கும் உபதேசித்திருக்கிறார்கள். இன்னமும் நம்மை பிணைத்திருக்கும் பற்றுகள் அத்தனையையும் விட நேரமென்று ஒன்று வரவில்லையே என்ற குற்ற உணர்வு வருகிறது. (அது எந்தப்பிறவியில் வருமென்பதே "அவனல்லவா" முடிவு செய்ய வேண்டும்.)

    சரணாகதி தத்துவம் அருமை. கீதையின் பொருளும், பாசுரத்தின் பொருளும் மனதிற்கு இதம் தருபவையாக இருக்கிறது. காஞ்சிவரதரை தரிசித்துக் கொண்டேன். 🙏. தங்களின் பக்தி மார்க்கத்தில் பணிவுடன் கட்டுண்டு தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீஙகள் (geethar) என்ன சொல்ல நினைத்தீர்கள்?.. நீங்கள் சொல்ல நினைத்ததையே ஜெ.கே. அண்ணாவும் அப்படி என்ன சொல்லி விட்டார்?
      ஒண்ணுமே புரியவில்லையே!

      நீக்கு
    2. எந்தப் பிறவியில் வரும் என்பதை அவன் எப்படி முடிவு செய்ய இயலும்? அது நம்முடைய வினைகளின், முயற்சிகளின் கையில்ல்லவா இருக்கிறது கமலா ஹரிஹரன் மேடம்.

      நீக்கு
  8. /அக்னியில் தோன்றிய காஞ்சீபுரம் தேவப்பெருமாளுக்கே /
    வரதராஜப் பெருமாள் அக்னியில் தோன்றினாரா? அந்த செய்தியை சற்றே விளக்குங்களேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரம்மா காஞ்சீபுரத்தில் செய்த யாகத்தில் அக்னியிலிருந்து தோன்றியவர் தேவப்பெருமாள். அதனால்தான் மூலவர் உடும்பர மரத்தால் (அத்தி) செய்யப்பட்டிருந்தாராம். பின்னமடைந்ததன் காரணமாக தற்போதைய மூலவர் கல்லால் ஆனவர் உருவானார். அத்தி வரதரை, அமிர்தசரஸ் குளத்தில் ஆழ்த்தி, நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து பூஜிக்கும் வழக்கம் உண்டானது. காஞ்சியில் ஒவ்வொரு வைணவ திவ்யதேசத்திற்கும் (12) ஒவ்வொரு வரலாறு உண்டு.

      நீக்கு
  9. நியாசம் என்றால் விடுவது, பர என்றால் அன்நியமானவை. பரநியாசம் என்றால் அன்னியமான மற்றவைகளை விடுவது, அதாவது திருமாலிடம் சரணாகதி அடைந்தவர்கள் மற்ற தெய்வங்களை அன்னியமாக கருதி விட்டுவிட வேண்டும் என்று புரிந்து கொண்டிருந்தேன். பரநியாசம் பெற்றுக் கொண்டவர்கள் தன், பெயரிலோ, மற்றவர்களுக்காகவோ கோவிலில் அர்ச்ச்னை செய்யக்கூடாது, சுவாமியிடம்(பெருமாளிடம்) வேண்டிக்கொள்ளக் கொள்ளக் கூடாது என்பது புதிய செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். எல்லாவற்றையும் அவன் பொறுப்பில் விட்டபிறகு வேண்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை அல்லவா?

      நீக்கு
  10. /நமக்கு என்ன செய்யவேண்டும் என்று, நாம் அவனைச் சரணாகதி அடைந்துவிட்டோம், பிறகு என்ன வேண்டுதல் என்பது இதன் அர்த்தம். /
    மாணிக்க வாசகர் கூட இந்தக் கருத்து அடங்கிய பாடலைத் தன் நீத்தல் விண்ணப்பத்தில் படியுள்ளார். பகவானுக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டுமென்று?
    வேண்டத்தக்கது அறிவோய் நீ!
    வேண்ட முழுதும் தருவோய் நீ!
    வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ!
    வேண்டி என்னைப்பணி கொண்டாய்!
    வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்,
    வேண்டும் பரிசொன்று உண்டு என்னில், அதுவும் உந்தன் விருப்பன்றே!

    பதிலளிநீக்கு
  11. காஞ்சி வரதராஜ பெருமாளை தேவப்பெருமாள் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே? தேவப் பெருமாள் என்றும் அழைக்கலாமா? தாயார் பெருந்தேவி இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரதராஜர், பேர்ருளாளன், தேவப்பெருமாள் எனப் பல திருநாமங்கள். பெருந்தேவித் தாயார். இவர்தான் சுவாமி வேதாந்த தேசிகர் இன்னொருவருக்காக ஶ்ரீஸ்துதி பாடியபோது கூரையைப் பிய்த்துக்கொண்டு பொற்குவியல் வழங்கியவர். ரொம்ப காரியசித்தி அளிக்கும் கருணைக்கடல்.

      நீக்கு
  12. /எப்போதும் பெருமாள் சன்னிதியில் திருக்கச்சி நம்பிதான் இருப்பார், அவரைக் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார்./
    கர்ப்பக்ருஹத்திற்குள் பட்டாச்சார்யார்களைத் தவிர பிறர் இருப்பது அந்தக் காலத்தில் அனுமதிக்கப்பட்டதா? இல்லை, திருக்கச்சி நம்பி முக மண்டபத்தில்தான் இருப்பாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்கச்சி நம்பி, பெருமாளுக்கு திரு ஆலவட்டக் கைங்கர்யம் செய்துவந்தார் (விசிறி வீசுவது). அதனால் அவர் சந்நிதானத்தில் பெரும்பாலும் இருப்பார்.

      நீக்கு
  13. ஸ்வாமி படத்திற்கு இடதுபக்கம் இருக்கும் மண்டபத்தின் purpose என்ன? மிகவும் உயரமாக உள்ளதே!

    பதிலளிநீக்கு
  14. மிகவும் சிறப்பாக எழுதப் பட்டிருக்கும் கதை. கதையை நகர்த்தியிருக்கும் விதம், உரையாடல்கள் எல்லாமே நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்க்கையை திறம்பட எடுத்தியம்புகிறது.

    பதிலளிநீக்கு
  15. 'கதைசொல்லிகளுக்கே உள்ள நடை' -- கதைசொல்லிகளா? ஏதோ பல்லி இனம் மாதிரி அவ்வளவு அலட்ட்சியமா சொல்றீங்க? அப்படீனா என்ன ஸார்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைசொல்லி... இந்தப் பத்த்தை கிரா உபயோகப்படுத்தினார். நாட்டுப்புறக் கதை சொல்லி. நாவல், கதைகள் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள். அதன் கிராமத்திய சொல் வடிவம் கதைசொல்லி. ரைட்டர் என்றால் கௌரவமா இருப்பதுபோல இருக்கா ஜீவி சார்?

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. //அவனுக்குத் தெரியும் நமக்கு என்ன செய்யவேண்டும் என்று, நாம் அவனைச் சரணாகதி அடைந்துவிட்டோம், பிறகு என்ன வேண்டுதல் என்பது இதன் அர்த்தம். //

    இந்த வார்த்தைகளை படித்தவுடன் திருவாசக பாடல் நினைவுக்கு வந்தது அதை சூரியா அவர்கள் சொல்லி விட்டார்கள்.

    ஆமாம், இறைவனுக்கு தெரியும் எப்போது எதை நமக்கு தர வேண்டும் என்று. அவன் எது தந்தாலும் அது அவன் சித்தம் என்ற மனநிலைக்கு நாம் வந்து ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அடையவேண்டும்.

    சரணாகதி அடைந்து விட்டால் அவன் பார்த்துக் கொள்வான்.
    இதை கிராமத்து எளிய மக்கள் எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான், படைத்தவனுக்கு தெரியும் நமக்கு எதை கொடுக்கனும் கொடுக்க கூடாது என்று கடந்து சென்று விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  18. //திருக்கச்சி நம்பிக்கு தான் ஏழரை ஆண்டுகள் கஷ்டப்படாமல் தேவப்பெருமாள் ஏழரை நாழிகைதானே துன்பப்படவைத்தான் என்று எண்ணி சந்தோஷமே அடைந்தார். //

    திருக்கச்சி நம்பியின் வரலாறு படிக்கும் போது இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும். ஏழரை ஆண்டு துன்பத்தை ஏழரை நாழிகை அனுபவிக்க வைத்து விட்டாரே!

    மிக அருமையாக சொன்னீர்கள் திருக்கச்சி நம்பி வரலாற்றை.

    இறைவன் மேல் பக்தி செய்து கொண்டே நம்பிக்கை இல்லாமல் வாழ்பவர்களுக்கு இவர் வரலாறு தைரியம் அளிக்கும் . இறைவனிடம் சரணாகதி அடைந்தவர்களை காப்பது அவன் கடன்.

    பதிலளிநீக்கு
  19. தேவராஜ அஷ்டகம் ஸ்லோகம் சொல்லி அதன் பொருள் விளக்கம் கீதையின் 7வது அத்யாயத்தில் 14வது ஸ்லோகம். , மற்றும் திருவாய் மொழி பகிர்வு அதன் பொருள்விளக்கம் சொன்னது அருமை.
    பிறவி பெருங்கடலை கடப்பதற்கு இறைவன் தூணை மிகவும் அவசியம்.

    காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் படங்கள் அருமை. வரதராஜ ஸ்வாமி தரிசனம் கிடைத்தது இன்று நன்றி.
    பதிவை அருமையாக எழுதி இருக்கிறீர்கள், வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  20. //”மழை பெய்யவேண்டி, இப்ப நான் அண்ணமார்சாமி உடுக்கடிக் கூத்துக்கட்டப்போறேன். மழை எறங்கினா, ஊர் திரும்புறோம். இல்லையின்னா பசி மயக்கத்துல செத்து இப்படியே மயானத்துக்குப் போறோம்.”//
    அய்யாவின் நம்பிக்கை மழையை கொண்டு வந்து விட்டது. படிக்கும் போது மெய் சிலிர்க்கிறது. விழியோரம் நீர் கசிகிறது.

    பதிலளிநீக்கு
  21. //”அண்ணமார்சாமிகள் பாண்டவர்களோட மறுபிறப்பா பூலோகத்துல பொறந்திருக்காங்கன்னு ஐதீகம். அவுங்க, உசுரோடு தெய்வமாகி தேவலோகம் போனவங்க. அவுங்க வரலாற்றை நாம ஆம்பள வேஷம், பொம்பள வேஷம்னு மாறி மாறி ஆடிப் பாடிக் கூத்துக்கட்டுறோம். பார்க்கிற சனத்துக்கு நாம கூத்துக்காரங்களா தெரியக் கூடாது; கதைத் தெய்வங்களா தெரியணும்… கையெடுத்துக் கும்பிடணும்.”//

    உண்மையாக நம்பிக்கையோடு கூத்துக் கட்டும் போது பார்வையாளர்கள் கையெடுத்துக் கும்பிடுவார்கள் தான். வெறும் நடிப்பு என்று தெரிந்தால் சும்மா பொழுது போக்காய் பார்த்து விட்டு போவார்கள்.

    பதிலளிநீக்கு
  22. சினிமாவில் சாமி வேஷம் போடுபவர்கள் எல்லாம் விரதம் இருந்து அந்த வேஷம் போட்டோம் என்பார்கள்.
    அண்ணன் விரதம் பங்கம் செய்து விட்டு , அவர் போகும் வீட்டு பெண் கேலி செய்தாள் என்று தம்பியின் விரலை வெட்டியது நியாமே இல்லை.

    குறத்தி பெண் உதவியால் செயற்கை விரல் பெற்று உடுக்கை அடித்து மழை பெய்ய வைத்து அவர் சொன்னது போல

    ”//முருகா… அறுபடை நாதா… நான் ஆடுற கடைசிக் கூத்து இது. இருவத்தி ஆறு நாளு நடத்துற கூத்தை, இன்னிக்கு ஒரு ராத்திரியிலேயே உன்னைச் சாட்சியா வெச்சு ஆடப்போறேன். நான் உண்மையான கூத்துக்காரனா இருந்தா, மழை எறங்கணும்; கார்வெள்ளம் எடுக்கணும்;

    என்னை அடிச்சுட்டுப் போயி உன்னோடு சேர்க்கணும்…”//

    முருகன் அவரை தன் பக்கத்தில்ழைத்து கொள்ளாமல் அவரை யாசகம் பெற வைத்து விட்டாரே ! இதுவும் அவர் சித்தம் தான் போல.

    கதை பகிர்வுக்கு சந்திர சேகரன் சாருக்கு நன்றி



    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    நமக்கு என்ன தர வேண்டும் என்பதை அவனே அறிவான்.... அதனால் நமக்கு என்று எதையும் கேட்கத் தேவையில்லை - உண்மை.

    தொடரட்டும் வாரம் ஒரு பாசுரம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!