சோழ அரசர்களுக்கு பல இடங்களில் அரண்மனைகள் இருந்தன. காஞ்சி பொன் மாளிகை துஞ்சிய தேவர் என்று ராஜராஜ சோழனின் தந்தை சுந்தரச் சோழனைச் சொல்லுவதால், காஞ்சீபுரத்தில் சோழ அரண்மனை இருந்தது என்பது தெரியும். அதுபோல தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ராஜராஜ சோழன் ஆண்டபோது அங்கும் ஒரு அரண்மனை இருந்தது. பழையாறை அப்போது மிகப் பெரிய இடம் (இப்போது பல்வேறு சிறிய சிறிய ஊர்களாகச் சிதைந்து போயிருக்கிறது அந்தச் சோழர்களின் தலைநகரம்). அங்கு பெரிய அரண்மனை இருந்தது. அதனைச் சுற்றி பல்வேறு படைப்பிரிவினரின் குடியிருப்புகளும் இருந்தன. பழையாறையில் நான்கு பெரிய சிவன் கோயில்கள் அமைந்திருந்தன. சாளுக்கியச் சோழர்கள் மற்றும் அதற்கு முந்தைய சோழ அரசர்களைப் பற்றிப் படிக்கும்போது அவர்கள் நந்திபுர விண்ணகரத்தில் இருந்த அரண்மனையில் சில முடிவுகள் எடுத்தார்கள் என்று படித்தேன்.
பழையாறையில் அமைந்திருந்த அரண்மனை முற்றிலும் பாண்டியனால் அழிக்கப்பட்டு, தற்போது மாளிகை மேடு எனப்படும் இடமாக வயல்களின் நடுவே காணப்படுகிறது. பழையாறை நகரும், பட்டீச்வரம், திருச்சத்திமுற்றம் (நாராய் நாராய் செங்கால் நாராய் பாடல் நினைவுக்கு வருகிறதா), ஆரியப் படையூர், புதுப் படையூர், பம்பைப் படையூர், மணப்படையூர், தாராசுரம் என்று இன்னும் பல சிற்றூர்களாகப் பிரிந்துகிடக்கிறது. பழையாறைக்குத் தெற்கில் முடிகொண்டான் ஆறும், வடக்கில் திருமலைராயன் ஆறும் ஓடுகிறது. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால், அதன் கரையில் அமைந்த நகரம் பழையாறை எனப் பெயர் பெற்றது.
பழையாறைப் பகுதியில் வரும் நாதன் கோயில் எனப்படும் நந்திபுரம் பல்லவர் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற இடம். அங்கு ஒரு வைணவக் கோயில் உள்ளது. அதைப் பற்றிக் குறிப்பிட இந்த இடம் சரியானது என்று தோன்றுகிறது.
ராஜேந்திரச்
சோழனைப் பற்றிச் சொல்வதற்கு முன்பாக, பல்லவ குலத்தின் ஒரு அரசனைப் பற்றிச்
சொல்லவேண்டியிருக்கிறது.
நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்) ஸ்ரீ ஜெகன்னாதப் பெருமாள் (21ம் திவ்யதேசம்).
கோவில் ராஜகோபுரத்தின் அடிப்பாகத்தில் இருக்கும் சோழ மன்னர் சுந்தரச் சோழர், அநிருத்த பிரம்மராயரின் சிற்பங்கள்.
இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் கட்டப்பட்டது. ஊரும்
நந்திபுரம் என்று அழைக்கப்பட்டது. அவனுக்கும் (இரு
தேவியரோடு), குந்தவை நாச்சியாருக்கும் கோயிலில் சிலை உள்ளது.
குந்தவை நாச்சியார், ராஜராஜ சோழனின் மூத்த சகோதரி. கோவிலுக்கு நிவந்தங்கள் வழங்கியிருக்கலாம். ஆனால் யார் இந்த பல்லவ மன்னன் நந்தி வர்மன்? அவனுடைய மனைவி கம்போடியாவைச் சேர்ந்த காம்போஜ வல்லியா? யார் ரேவா தேவி?
இவர் நந்திவர்ம பல்லவனாக இருக்கலாம் (காஞ்சி பரமேச்வர விண்ணகரத்தில் உள்ள சிற்பம்)
சிம்ம விஷ்ணு பல்லவனின் மகன் மகேந்திரவர்மன். அவனுடைய மகன் நரசிம்மவர்ம பல்லவன். இந்த இருவரையும் பற்றி, கல்கியின் புண்ணியத்தினால் நாம் அறிவோம் (சிவகாமியின் சபதம், ஆயனர், நாகநந்தி). மாமல்லன் (நரசிம்மவர்ம பல்லவன்) சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் மற்றும் அதற்குப் பிறகு வந்த பரமேஸ்வர வர்மன் ஆகிய இருவரும் ஆளுக்கு ஓரிரண்டு ஆண்டுகளே ஆண்டனர். அதற்குப் பின், இரண்டாவது நரசிம்மவர்மன் (ராஜசிம்மன் என்று அழைப்பர்) சுமார் 35 ஆண்டுகளும், அதற்குப் பிறகு இரண்டாம் பரமேஸ்வர வர்மன், ஆறு ஆண்டுகளும் ஆட்சி செய்தனர். 731ம் ஆண்டில், வாரிசு இல்லாத இரண்டாம் பரமேஸ்வர வர்ம பல்லவன் இறக்கவும், பல்லவ தேசத்திற்குத் தகுந்த அரசன் வேண்டுமே என்று அமைச்சர்களும் தண்டநாயகர்களும், உறவின் வழியிலாவது ஏதேனும் வாரிசு இருக்கிறதா என்று தேட, அவர்கள் போய்ச்சேர்ந்த இடம் காம்போஜம் என்று சொல்லப்படும் இன்றைய கம்போடியா மற்றும் வியட்நாம். கல்கி புகழ் (ஹாஹா) மகேந்திரவர்மனுடைய தந்தையார் சிம்மவிஷ்ணு சுமார் 35 ஆண்டுகாலம் பல்லவ சாம்ராஜ்யத்தின் அதிபதியாக ஆட்சி செய்தார். அவர் ஆட்சியில் அமர்ந்ததால், அவருடைய தம்பி பீமவர்மன், வேறு தேசத்தை நோக்கிச் சென்று, பிறகு அவன் வழிவந்த ஹரிவர்மா காம்போஜத்தை ஆண்டுகொண்டிருந்தான். அமைச்சர்கள், பல்லவ அரசுக்கு அரசனாக அவனுடைய மகனை அனுப்பித்தரவேண்டும் என்று கேட்க, மற்ற மூவரும் முன்வராதபோது, கடைசி இளவரசன் முன்வந்தான். 12 வயதான அந்தப் பாலகனையே இரண்டாம் நந்திவர்ம பல்லவனாக முடிசூட்டினர். சிறு வயதில் பட்டமேற்றுக்கொண்டதால்தான், 731லிருந்து 796வரை, சுமார் 65 ஆண்டுகள் அரசனாக இருந்தான் (அப்படி இருக்காது என்று நினைக்கிறேன். 77 வயது வரை உயிர் வாழ்ந்திருப்பான். இவனுடைய மகன் தந்திவர்மன் 777லிருந்து சுமார் 50 ஆண்டுகள் அரசனாக இருந்தான். அல்லது அரியணை ஏறுவதற்கு முன்பு 15 வருடங்கள் இளவரசனாக இருந்திருப்பான்)
இந்த இரண்டாம் நந்திவர்ம பல்லவன், காஞ்சி கைலாச நாதர் கோயிலையும், நந்திபுர விண்ணகரத்தையும் கட்டினான் என்று கொள்ளலாம். திருமங்கையாழ்வார், இவனுடைய மற்றும் இவனுடைய மகன் தந்திவர்மன் காலத்தவர். அதனால்தான் தன்னுடைய திவ்யப்பிரபந்த பாசுரங்களில் இந்த இருவரையும் பற்றி நிறையக் குறிப்பிட்டுள்ளார். (அதுக்கெல்லாம் போனோம்னா, ராஜேந்திர சோழன் சப்ஜெக்டுக்கு வருவதற்கே ஒரு சில வாரங்கள் ஆகிவிடும். இருந்தாலும் ஒரு பாசுரமாவது குறிப்பிடாவிட்டால் தவறாகிவிடும்)
காம்போஜத்தை தன்னுடைய பிறந்த நாடாகக் கொண்டிருந்ததால், இவனுடைய மனைவியரில் ஒருவர் காம்போஜத்தைச் சேர்ந்தவர்.
எதனால் திருமங்கையாழ்வாரை, 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சொல்கின்றனர்? இவர் தனது பெரிய திருமொழி பாசுரங்களில், பரமேச்வர விண்ணகரத்தைப் பற்றிப் பாடியுள்ளார். இதுபோல நந்திபுர விண்ணகரத்தையும் பத்துப் பாசுரங்களால் பாடியுள்ளார். அதனால், இவர், இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்துக்குப் பிற்பட்டவர் அல்லது அந்தக் காலத்தில் வாழ்ந்தவர் என்று கொள்ள இயலும்.
தன்னுடைய பெரிய திருமொழி, 2ம் பத்து, 9ம் திருமொழியில் பத்து பாசுரங்களிலும் பரமேச்வர விண்ணகரத்தைப் பற்றிப் பாடும்போது அதில் பல்லவ மன்னனைக் குறிப்பிடுகிறார்.
சொல்லு, வன் சொல் பொருள் தானவையாய்ச்*
சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய்*
நல்லரன் நாரணன் நான்முகனுக்கு *
இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி*
பல்லவன், வில்லவன் என்று உலகில்*
பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன்* மல்லையர் கோன் பணிந்த*
பரமேச்சுர விண்ணகரமதுவே.
பொருள்: சொல்லும் வேதமும், இவற்றின் பொருளும் தானேயாகி இருப்பவனும், ஐம்புலன்களும் தானேயாகி இருப்பவனும் (ஐம்புலன்கள்-சுவை, தொடுதல், சப்தம், வாசனை, ரூபம்), சிவனுக்கும் பிரமனுக்கும் உள்ளுறைபனவாக இருப்பவனும் ஆகிய நாராயணனுக்கு இருப்பிடமாகிய, அழகிய தடாகங்கள் சூழ்ந்த காஞ்சீபுரத்தில், பல்லவன், வில்லவன் என்று உலகில் பலவித பெயர்களாலே, பல அரசர்களால் வணங்கப்படும் பாதத்தை உடையவனும், திருக்கடல்மல்லைக்குத் தலைவனுமான பல்லவன் வணங்கியது இந்தப் பரமேச்வரவிண்ணகரம்
பார்மன்னு பல்லவர்-கோன் பணிந்த, பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த, படைத்திறல் பல்லவர்கோன் பணிந்த என்று ஒவ்வொரு பாசுரத்திலும் பல்லவ மன்னனின் வீரத்தைக் குறிப்பிடுகிறார், தன்னுடைய பாசுரங்களில்.
பெரிய திருமொழி, 5ம் பத்து, 10ம் திருமொழியில் பத்து பாசுரங்களிலும் நந்திபுர விண்ணகரத்தைப் பாடுகிறார்.
தீதறுநிலத்தொடு எரிகாலினொடு*
நீர்க்கெழுவிசும்பும் அவையாய்*
மாசறுமனத்தினொடு உறக்கமொடிறக்கை*
அவையாய பெருமான்*
தாய்செறஉளைந்து தயிருண்டு குடமாடு*
தடமார்வர் தகைசேர்*
நாதன்உறைகின்றநகர்*
நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே .
பொருள்: ஐம்புலன்களாகவும், குற்றமற்ற மனத்தோடு, உறக்கம், கனவு, இறப்பு ஆகியவைகளுக்குக் காரணகர்த்தாவாக இருக்கும் பெருமான் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம். அதனை மனமே நீ அடைவாயாக
இவற்றைப் பற்றிப் பாடியிருப்பதால், திருமங்கை மன்னன், அவர்கள் காலத்திலோ இல்லை அவர்கள் காலத்திற்குப் பிறகோ வாழ்ந்திருக்கவேண்டும். இப்படித்தான் இலக்கியங்களை வைத்து அரசர்கள் காலத்தை அறுதியிடுகிறார்கள்.
இந்த வாரம் ராஜேந்திர சோழனைப் பற்றி எழுத இடம் இல்லை. இனி கங்கைகொண்ட சோழபுரத்தின் படங்கள்.
முகப்புக் கதவைத் தாண்டி நுழைந்ததும் தெரியும் பெரிய மண்டபம்.
கோயிலில் மூலஸ்தானம் (கர்பக்கிரஹம்), அதற்கு
முன் நடு மண்டபம், அதற்கு முன் ‘முன்மண்டபம்’ நீண்ட செவ்வக
வடிவத்தில் அமைந்துள்ளது. மேலே
காட்டியுள்ளது அந்தச் செவ்வக மண்டபம்.
கர்பக்ரஹத்திற்குச் செல்லும் நுழைவாயிலுக்கு முன்பு, முன் மண்டபத்தின் கடைசியில் இருக்கும் துவாரபாலகர்கள். இதற்கு அருகே மேல் மண்டபம் செல்லப் படிக்கட்டுகள் இருக்கின்றன, தஞ்சைப் பெரிய கோயிலில் இருப்பது போலவே.
நுழைவாயிலின் இரு புறமும் (கர்பக்கிரஹத்துக்கு முன் உள்ள நடு மண்டபத்திற்குச் செல்லும் வழி) இந்த மாதிரி பெரிய ஓட்டை இருக்கிறது. ஒருவேளை பக்தர்கள் (பொதுமக்கள்) அதனைத் தாண்டிச் செல்லக்கூடாது என்பதற்காக ஒரு மூங்கில் தடுப்பை வைப்பதற்காக இதனைச் செய்திருக்கிறார்கள் என்று தோன்றியது. கல்லில் எவ்வளவு தூரம் ஓட்டை போட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
நடு மண்டபத்தில் உள்ள சிற்பத் தொகுதிகள்.
கர்பக்ரஹத்துக்கு
எதிரே சுவரில் சிற்பத் தொகுதி மற்றும்
துவாரபாலர்
கர்பக்ரஹத்துக்கு முன் உள்ள துவாரபாலகர்கள். மிகப் பெரிய உருவம்.
நடுமண்டபத்தில் உள்ள சிற்பத் தொகுதிகள்.
சிவபெருமான் திருமணக் காட்சி மற்றும் பல தொகுதிச் சிற்பங்கள் வெளியில் தனித்தனியாகச் செதுக்கப்பட்டு பிறகு கர்பக்கிரஹத்துக்கு முன் உள்ள மண்டபத்தில் பதிக்கப்பட்டிருக்கவேண்டும்.
கருவறைக்கு வெளியே இருபுறமும். (நடுமண்டபம்)
கங்கைகொண்ட சோழீச்வரர் மூலவர். இந்தப் பதிவில் கொடுத்துள்ள சில படங்கள் மூலவரையும் சேர்த்து, இணையத்திலிருந்து எடுத்தது. அர்ச்சகரோ இல்லை கோயில் அதிகாரிகளோ சம்மதம் தெரிவித்தால் தவிர சன்னிதானத்துக்குள் படங்கள் எடுப்பதில்லை.
சிவலிங்கம் உயரம் 13 அடிகள். சுற்றளவு 33 அடிகள். மூலாஸ்தானத்தில்
சந்திரகாந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளதால், வெயில்
காலத்தில் மூலஸ்தானம் மிகவும் குளிர்ச்சியாகவும், குளிர்
காலத்தில் சிறிது வெப்பமாகவும் இருக்கும் என்று அர்ச்சகர்கள் சொல்கின்றனர்.
முன் மண்டபத்தில் உள்ள உற்சவ சிலைகள்.
முன்மண்டபத்தில் இருக்கும் பல்வேறு சிலைகள். வராஹி, கணபதி முதலான தெய்வ மூர்த்தங்கள். இவைகளின் மீது மஞ்சள் பூசப்பட்டு இருந்தாலும், தினமும் ஆராதிக்கப்படும் மூர்த்தங்கள் இல்லை என்று தோன்றுகிறது. காரணம் ஒன்றுக்கு மேற்பட்ட விநாயகர் மற்றும் மூர்த்தங்கள்.
வட்டவடிவக் கல்லில் நவகிரஹங்கள் செதுக்கப்பட்டுள்ளன
முன் மண்டபத்தில் உள்ள தூண்களின் சிற்பங்கள் விசேஷமாக இல்லை.
என்னப்பா எனக்கு வந்த சோதனை. அழகான நந்தி நானிருக்க, எனக்குப் பின்னால் இன்னொரு பெரிய நந்தியா? ஒருவேளை பக்தர்கள் தங்கள் குறைகளை என் காதில் ரகசியமாகச் சொன்னால் நான் தலைவர் சிவனிடம் சொல்வேன் என்று நம்புகிறார்களே. பெரிய நந்தி இருந்தால் அதன் காதுகளை எப்படி எட்டுவது என்று கைக்கு அடக்கமாக என்னை பிற்காலத்தில் வைத்திருப்பார்களோ? என்னால் திரும்ப முடியாததால் பெரிய நந்தி எந்தக் காலத்தில் வைக்கப்பட்டது என்று சொல்லத் தெரியவில்லையே.
நிறைய படங்களை இன்று பார்த்தாகிவிட்டதா? அடுத்த வாரம் தொடர்வோமா?
(தொடரும்)
/அமைச்சர்கள், பல்லவ அரசுக்கு அரசனாக அவனுடைய மகனை அனுப்பித்தரவேண்டும் என்று கேட்க, மற்ற மூவரும் முன்வராதபோது, கடைசி இளவரசன் முன்வந்தான்/
பதிலளிநீக்குஅதிசயமாய் உள்ளதே! வலிய வந்த சீதேவியை உதாசீனப்படுத்தியது போல், பல்லவ சாம்ராஜ்ய அரியணையை யாரேனும் மறுப்பாரோ?
வாங்க சூர்யா சார். இருக்கும் தெரிந்த இடத்தை விட்டுவிட்டு கண் காணாத தேசத்துக்கு ஏன் செல்ல வேண்டும்? என எண்ணியிருந்திருப்பார்கள். அங்கு புதிதாக என்ன அரசியல் புதைகுழிகள் இருக்கலாம் எனத் தெரியாதில்லையா? ஆண்கள் என்ன பெண்களா? எந்த புதிய இடத்திலும் சென்று வாழ்ந்துவிட முடியும் என்ற தைரியமும் நம்பிக்கையும் கொண்டிருப்பதற்கு?
நீக்குசோழ அரசர்களின் அரண்மனைகள் எப்படி இருந்திருக்கும் என்று பார்க்க ஆசை. சினிமாவில் வருவது போல் இருந்திருக்குமா?!!!!! ஆங்காங்கே திரைச்சீலைகள் தொங்கிக் கொண்டு!! இல்லை சாதாரணமாக இருந்திருக்குமா?
பதிலளிநீக்குஆனா நெல்லை, நீங்க முன்ன போட்ட படங்களை வைத்துப் பார்க்கும் போது, கொஞ்சம் புரிகிறது என்றாலும்...
கீதா
வாங்க கீதா ரங்கன். முஸ்லீம் அரசர்கள் அரண்மனையில் ஒவ்வொரு அறையும் திரைச் சீலைகளால் பிரிக்கப்பட்டிருந்தது. அறைகளுக்கு கதவுகள் பெரும்பாலும் இல்லை என்பதை அவர்களது அரண்மனையைப் பார்த்தாலே தெரியும். (கோல்கொண்டா, ஆக்ரா கோட்டை மற்றும் பல. இது வழிவழியாக வரும் முறை என நினைக்கிறேன்)
நீக்கு/இந்த இரண்டாம் நந்திவர்ம பல்லவன், காஞ்சி கைலாச நாதர் கோயிலையும், நந்திபுர விண்ணகரத்தையும் கட்டினான்/
பதிலளிநீக்குகாஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் இதற்கு முன்னமே இருந்ததா? இரண்டாம் நந்திவர்ம பல்லவர் சைவத்தையும் வைணவத்தையும் சமமாகக் கருதினார் போலும்.
நீங்க காஞ்சி கைலாசநாதர் கோயில் பற்றிக் கேட்கறீங்க என நினைக்கிறேன். ந்ந்திபுர விண்ணகரம் வைணவம், கைலாசநாதர் கோயில் சிவனுக்கானது.
நீக்குகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலைப் பற்றி என்றால் அது வேறு கதை. மிகப் பெரிய அளவிலாலான கோயில், புராதானப் பெருமை மிக்கது. ஆனால் ஆழ்வார்களால் பாடப் பெறாதது. இந்தப் பெருமாளை மங்களாசாசனம் செய்தவர் தூப்புல் வேதாந்த தேசிகர். ஆச்சார்யர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த கோயில் இது.
அவர் தலைநகர் காஞ்சி. சிவனுக்குக் கைலாசநாதர் கோவிலைத் தலைநகரிலேயே கட்டினார். விஷ்ணு கோவிலையும் அங்கேயே கட்டாமல் (வரதராஜப் பெருமாள் கோவில் இருந்ததால்??) தூரத்தில் நந்திபுரத்தில் கட்டினாரே என்றுதான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
நீக்குஏன் முந்தைய கேள்வி என்றால், வெங்கட்ஜி போட்ட பதிவுகளில் ராமர் சீதை வாழ்ந்த இடம் கனக்பவன் என்று போட்டிருந்த இடம் ஒரு அந்தாக்கால பெரிய வீடு போலதான் இருந்தது. ஒரு வேளை அது தற்போதைய தோற்றமோ என்னவோ?
பதிலளிநீக்குகீதா
வடபுலத்தில்்புராதான இடங்களில் உள்ளவை எல்லாமே 100-200 ஆண்டுகளில் கட்டப்பெற்றவை. அந்த இடங்களுக்குத்தான் மதிப்பு. என் யாத்திரையை எப்போ எழுப் போகிறேனோ. அதில் சீதை திருமணம் நடந்த இடம், ஜனகரின் அரண்மனை எல்லாப் படங்களும் வரும், ஆனால் தற்காலத் தோற்றத்தில்.
நீக்குபடங்கள் வெகு அழகு. எப்படித்தான் கல்லில் இவ்வளவு கனகச்சிதமாக வட்ட வடிவில் துளை போட்டார்களோ?
பதிலளிநீக்குநேற்றைக்கு வேறு ஒரு கோயிலைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். நான் செல்லாத கோயில். அதுபற்றியும் இந்தத் தொடரில் வரும். நம் முன்னோர்கள் மிகுந்த நாகரீகமும் கலாச்சாரமும் திறமையும் நிறைந்தவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இதிஹாசங்கள் அவற்றில் சொல்லப்படுபவை உண்மை, அதீதமல்ல எனப் புரிய வைப்பவை.
நீக்கு(நாராய் நாராய் செங்கால் நாராய் பாடல் நினைவுக்கு வருகிறதா)//
பதிலளிநீக்குயெஸ்ஸு. பழையாறை பெயர்க்காரணம் மட்டும் தெரிந்த தகவல்.
அனிருத்தர், சுந்தரச் சோழர் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. சுந்தர சோழர் கால் முட்டி போட்டு அமர்ந்திருக்கும் சிற்பமோ?
கீதா
சுந்ச் சோழர் சிற்பத்தில் பெரிதாக இருப்பது. அனிருத்தர் இராஜராஜன் காலத்திலும் இருந்தவர் என்பதால் அப்போது வயது குறைந்தவராக இருந்திருக்க வேண்டும்.
நீக்குஅரசன், மனைவியர், குந்தவை சிற்பங்கள் கோயில்களில் அந்தந்தக் கோயிலுகளுக்கு உரிய அரச, தேவியர் சிற்பங்கள் இருப்பது நமக்கு நிறைய தகவல்களைத் தெரிந்து கோள்ள உதவுகின்றன....ஆனால் ஏன் தெய்வமாக வழிபாடு?
பதிலளிநீக்குகீதா
வழிபாடு இல்லை. மரியாதை நிமித்தம் உடை அணிவித்திருக்கிறார்கள். பிரபந்தப் பாசுரம் ஒன்றில்,
நீக்குதிருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேன் என்ற பொருளில் வரிகள் உண்டு.
யம்மாடியோவ் அந்த ஓட்டை வழியா எப்படிப் போயிருப்பாங்க அவங்க என்று தோன்றுகிறது இப்ப விடுங்க...அவங்களே எப்படிப் போயிருப்பாங்க? மூச்சு முட்டியிருக்காதோ?
பதிலளிநீக்குகீதா
ஹல்லோ... நான் சரியா எழுதலைனு நினைக்கிறேன். இரண்டு பக்க கல் தூண்களில் இந்த ஓட்டை, மூங்கிலைக் குறுக்காகச் சொருக.. அதைத் தாண்டிச் செல்ல முடியாதபடி. ஓட்டையை ரொம்பவே க்ளோசப்பில் கொடுத்திருக்கிறேன்.
நீக்குமுதல்ல நடுமண்டபத்துக்கு நீங்களும் இந்த ஓட்டை வழியாவா போனீங்க!! என்று கேட்க நினைத்து அப்புறம் சைடில் படிக்கட்டுகள் என்று சொல்லியிருப்பதை வைத்து புரிந்து கொண்டேன்....ஹாஹாஹா
பதிலளிநீக்குநடுமண்டப சிற்பத் தொகுதிகள் பிரமாதமாக இருக்கின்றன. கர்பக்கிரகத்துக்கு எதிரே உள்ளவை....துவாரபாலகர் எல்லாம் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. எப்படி இம்புட்டுச் சின்ன சின்னதா செஞ்சு தொகுத்து வைச்சிருக்காங்கன்னு!
அத்தனையும் அழகு
மண்டபத்ட் தூண்கள் படம் சூப்பர். இப்படியான படங்கள் இடங்கள் மனதைக் கவரும்.
என்னால் திரும்ப முடியாததால் பெரிய நந்தி எந்தக் காலத்தில் வைக்கப்பட்டது என்று சொல்லத் தெரியவில்லையே.///
ஹாஹாஹா சிரித்துவிட்ட்டேன்!! உள் அர்த்தம் புரிந்து.
எல்லாம் ரசித்தேன் நெல்லை
கீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்.
நீக்கு//இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் கட்டப்பட்டது. ஊரும் நந்திபுரம் என்று அழைக்கப்பட்டது. அவனுக்கும் (இரு தேவியரோடு), குந்தவை நாச்சியாருக்கும் கோயிலில் சிலை உள்ளது.//
பதிலளிநீக்குபடங்கள் தகவல்கள் அருமை.
//குந்தவை நாச்சியார், ராஜராஜ சோழனின் மூத்த சகோதரி. கோவிலுக்கு நிவந்தங்கள் வழங்கியிருக்கலாம். ஆனால் யார் இந்த பல்லவ மன்னன் நந்தி வர்மன்? அவனுடைய மனைவி கம்போடியாவைச் சேர்ந்த காம்போஜ வல்லியா? யார் ரேவா தேவி?//
மன்னர்கள் காம்போஜ நாட்டுக்கு போனதாக வரலாறுகள் சொல்கிறது
அங்கு மனந்து வந்து இருக்கலாம். நந்திபுரத்து நாயகி கதையில் இன்பவல்லி என்ற கதாபாத்திரம் வரும்.
நந்திபுரத்து நாயகி என்ற நாவலில் உங்கள் கேள்விக்கு விடை இருக்குமோ! விக்கிரமன் அவர்கள் எழுதிய கதை கிடைத்தால் படித்து பாருங்கள்.
அமேசான் கிண்டில் மூன்று பாகமும் இருக்கிறது.
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா. சில தலங்களுக்கு பூர்வஜென்ம புண்ணியம் இருந்தால்தான் செல்ல இயலும். திருச்செந்தூர் அதில் ஒன்று எனப் படித்தேன்.
நீக்குதஞ்சை கோயிலை விட நளினம் மிக்கது
பதிலளிநீக்குகங்கை கொண்ட சோழபுரம்...
தூண்களின் பொலிவு கவர்கின்றது...
பதிலளிநீக்குமஞ்சள் பிள்ளையார்கள் அழகு...
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். நலமா? ப்ரார்த்தனைக்கு நன்றி.
நீக்குபழையாறையை மீறி தஞ்சை எழுந்தது..
பதிலளிநீக்குதஞ்சையை மீறி கங்கை கொண்ட சோழபுரம்
எழுந்தது....
பிற்காலச் சோழர்களால்
தற்காத்துக் கொள்ள இயல வில்லை...
கூடுதலான நாதன் கோயில்
பதிலளிநீக்குசெய்திகளும் அருமை..
நெல்லை அவர்களது பதிவு
சிறப்பு...
நந்திபுர விண்ணகரம் அரண்மனை விவரங்கள் படிக்க வேண்டும் காலை நேர வேலைகள் பின்னர் வருகிறேன் அருமையான பதிவை படிக்க.
பதிலளிநீக்குதிருச்சத்திமுற்றம் கோயில் நன்றாக இருக்கும் சக்தி முற்ற புலவர் பாடலை பகிர்ந்து கொண்டது அருமை.
// பின்னர் வருகிறேன் அருமையான பதிவை படிக்க. //
நீக்குஆமாம். விவரமாகவும், தெளிவாகவும் மிகவும் சுவாரஸ்யமாகக் கொடுக்கிறார்.
// பொன் மாளிகை துஞ்சிய தேவர்//
பதிலளிநீக்குஆதித்த கரிகாலன் தன் தந்தைக்காக கட்டிய மாளிகை. ஆடம்பர மாளிகை. ஆதித்தன் கொலையானதும்தான் சுந்தரச்சோழர் அங்கு வந்துதான் தன் இறுதி நாட்களை துயரத்துடன் கழித்தார் என்று படித்திருக்கிறேன்.
பாதுகாப்பு காரணங்கள் என்றாலும் ஆதித்தனை காஞ்சியில் வைத்து தன் தந்தை தாயையே பார்க்க முடியாமல் வைத்த விதி.. ஆதித்தன் அதற்கெல்லாம் எப்படி Feel ஆகி இருப்பான்!
பதிலளிநீக்குமுன்னரே சொன்னபடி ஆரியப்படையார்களுக்கும், பம்பைப்படையூர்களுக்கும் நடந்த சண்டை, உள் கலகம்தான் நரசிம்மாவின் 'நவகண்டநாயகி' நாவல். அதை ஒரு வியாழன் பதிவிலும் கொடுத்திருந்தேன்.
பதிலளிநீக்குகும்பகோணம் சென்றபோது இந்த சிற்றூர்கள், மாளிகைமேடு, நாதன் கோவில் எல்லாம் மிஸ் ஆனது. மறுபடி செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்..........டே இருக்கிறேன்! "யோசிக்கக் கூடாது, சட்டென புறப்பட்டு விடவேண்டும்" என்று நீங்கள் சொல்வீர்கள்!
பதிலளிநீக்குவாழ்க்கையில் ஒரு நாள் இந்த இடங்களுக்குச் சென்று பாருங்கள். உங்கள் ரசனைக்கு என்று ஒரு நாள் ஒதுக்குங்கள் கும்பகோணம் பயணத்தில். வாழ்க்கை அலைகள் என்றுமே ஓயாது ஶ்ரீராம். அக்கடா என இனி இருக்கலாம் என்பது வாழ்க்கைச் சுழலில் கிடைக்காது.
நீக்குந்ந்திபுரவிண்ணகரம், பழையாறை வடதளி, திருச்சத்திமுற்றம், பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை, பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வர்ர் கோயில், திருவலஞ்சுழி என காலைப் பொழுது ஓடும்.
// ஆனால் யார் இந்த பல்லவ மன்னன் நந்தி வர்மன்? அவனுடைய மனைவி கம்போடியாவைச் சேர்ந்த காம்போஜ வல்லியா? யார் ரேவா தேவி?//
பதிலளிநீக்குஉங்கள் இந்தக் கேள்விகளுக்கு விடை நீங்களே கீழே கொடுத்திருக்கிறீர்கள் என்றாலும், கதை வடிவில் அந்த வரலாறு நரசிம்மாவின் 'அத்திமலை தேவனி'ல் இருக்கிறது. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தகம் அது என்பேன்.
இரண்டுமுறை அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டியும் நான் மதியம் 12 மணிக்கு மேல் சென்றதால் உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. ஒருமுறை ஒழுங்காக சென்றுவர வேண்டும். எவ்வளவு திட்டங்கள் வைத்திருக்கிறேன் பாருங்கள்...!
பதிலளிநீக்குஅந்த ஓட்டைக் கல் அவ்வளவு க்ளோஸப்பில் இல்லாமல் சற்று தூரத்தில் வைத்தும் ஒரு ஸ்நாப் எடுத்து பகிர்ந்திருக்கலாம். எந்த இடத்தில எப்படி அமைந்திருக்கிறது என்று தெரிந்திருக்கும்.
பதிலளிநீக்குகீழிருந்து நான்காவது படம்.. அந்த மண்டபம்.. அதுபோல நிறைய பார்த்திருக்கிறேன். அந்த தூண் நிறைந்த மண்டபங்கள் அந்தக் காலத்தில் எதற்கு உபயோகப்பட்டிருக்கும்!
பதிலளிநீக்குஉற்சவரை வாகனத்துடன் அங்கு வைத்து பூசைகள் செய்ய, பக்தர்கள் பாராயணம் செய்ய, அவர்களுக்கு உணவளிக்க, ஆன்மீகப் பாடங்கள் நடத்த எனப் பலப்பல உபயோகங்கள் ஶ்ரீராம்.
நீக்குசிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள். தஞ்சாவூர் - கும்பகோணம் அருகே நிறையவே பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு. பல வருடங்கள் தில்லியில் இருந்ததால் பார்க்க வேண்டிய இடங்கள் பார்க்க முடியாமலேயே இருந்திருக்கிறேன். இனிமேலாவது இங்கேயெல்லாம் சென்று வர வேண்டும் என்ற எண்ணம் உண்டு. வார நாட்களில் செல்ல முடியாவிட்டாலும், சனி - ஞாயிறுகளை இப்படியான இடங்கள் செல்வதற்கென ஒதுக்கி விட வேண்டும் என்று நினைப்பேன். ஆனாலும் எல்லா வாரமும் இப்படிச் செல்ல முடிவதில்லை.
பதிலளிநீக்கு