30.5.26

வாரம் ஒரு பாசுரம் பகுதி 22 - நான் படிச்ச கதை

 

 நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 22

 

இளையாழ்வார்ஆளவந்தாரைத் தான் சந்திப்பதற்கு முன்னமே அவர் பரமபதம் அடைந்துவிட்டதை எண்ணி வருந்தி திருவரங்கனைச் சேவிக்காமல்யே காஞ்சீபுரம் திரும்பி பெரிய நம்பியின் ஆலோசனையின் பேரில் தேவப் பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்தம் கொண்டு தரும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். 

திருக்கச்சி நம்பியின் பெருமைகளை அறிந்திருந்த இளையாழ்வாருக்கு அவர் மீதான பக்தி அதிகரித்தது. அதுபோல திருக்கச்சி நம்பிக்கும் இளையாழ்வார் மீது கருணை உண்டாயிற்று. 

ஒரு நாள் இளையாழ்வார், திருக்கச்சியை தெண்டனிட்டு வணங்கி (சாஷ்டாங்கமாக வணங்கி), என்னுடைய ஆத்மாவை உயிவித்தருளவேண்டும், எனக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். 

பெருமாளின் அடியவர்களுக்கு இடையே குலபேதம் கிடையாது என்றாலும், அடியேன் உங்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வது வைதிக மரியாதைக்கு உகந்த தல்ல (திருக்கச்சி நம்பி வைசிய குலம். இளையாழ்வார் அந்தணர்) என்று ஒத்துக்கொள்ளவில்லை. 

பெரியோர்கள் (ஸ்ரீவைணவர்கள்) அமுது செய்ததில் மீதி இருப்பதை ‘உச்சிஷ்டம்’ என்பர். அதை பொதுவாக தருவதில்லை. அது மிகப் பெரிய பிரசாதம் என்று பெரியோர்கள் கருதுவர். அப்படி திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மிச்சத்தைத் தான் பிரசாதமாக எடுத்துக்கொண்டால், நாமும் அவருடைய அடியார் ஆகலாம் என்ற எண்ணத்தில், மறுநாள் திருக்கச்சி நம்பியினிடத்தில், தம்முடைய திருமாளிகையில் அமுது செய்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். திருக்கச்சி நம்பியும் அதற்கு ஒத்துக்கொண்டார். 

இளையாழ்வார், தன் இருப்பிடத்திற்குச் சென்று தன் மனைவி தஞ்சமாம்பாளிடம், சீக்கிரம் உணவைத் தயாரிக்கச் சொன்னார்.  தாமும் விரைவில் பேர ருளாளனின் திருமஞ்சனக் கைங்கர்யத்தை முடித்துக்கொண்டு, தன் திருமாளிகை திரும்பி, திருவாராதனம் முதலிய கடமைகளை முடித்துவிட்டு, திருக்கச்சி நம்பியைக் கூட்டிக்கொண்டு வர, நம்பி மடத்தை நோக்கி மேற்குப் புறமாகச் சென்றார். அதற்கு முன்பே திருக்கச்சி நம்பி, தன் மடத்திலிருந்து புறப்பட்டு பெருமாளைச் சேவித்துவிட்டு, இளையாழ்வாருடைய திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார். இளையாழ்வாரின் தேவியாரிடம், தளிகை பிரசாதித்தருள வேண்டும் என்று கேட்க, இளையாழ்வாரின் மனைவியும், “உம்மை அழைத்துக்கொண்டு வரவேண்டும் என்று மடத்தை நோக்கிச் சென்றிருக்கிறார். அவர் திரும்ப வரும்வரை காத்திருக்கலாமே’ என்று பதிலளித்தார். 

அதற்கு திருக்கச்சி நம்பி, தான் திரு ஆலவட்டக் கைங்கர்யத்துக்கு உதவச் செல்லவேண்டியிருப்பதால் இப்போதே பிரசாதித்தருள வேண்டும் என்று கேட்டார். உடனே தேவியாரும், அப்படியானால் இங்கே வாரும் என்று வீட்டின் வெளிப்புறத்தில் அமரவைத்து இலையில் உணவளித்தார். திருக்கச்சி நம்பியும் அவசர அவசரமாக உணவினை உண்டு கை அலம்பிக்கொண்டு கோயிலை நோக்கி எழுந்தருளினார். 

இளையாழ்வாரின் தேவியாரும், திருக்கச்சி நம்பி உண்ட (அமுது செய்தருளின என்பதுதான் சரியான வார்த்தை) இலையை அப்புறப்படுத்தி அவர் சாப்பிட்ட இடத்தையும் சுத்தம் செய்து, தாமும் நீராடினார். 

இளையாழ்வாரும், நம்பியை மடத்தில் காணாமல் மீண்டும் தம் மாளிகைக்கு வந்தபோது, தம்முடைய தேவியார் நீராடி நிற்பதைக் கண்டு, இப்படிச் செய்தது ஏன் என்று கேட்டார். தேவியாரும், அவர் திருவாலவட்ட கைங்கர்யத்துக்கு உடனே போகவேண்டும் என்று வேகமாக உணவருந்தினார். அவர் சாத்தாத வைணவர் ஆகையாலே வெளியில் வைத்து உணவளித்தேன். பிறகு அவர் சாப்பிட்ட இலையை எடுத்து இடத்தைச் சுத்தம் செய்தேன். அதனால் நான் நீராட வேண்டியதாக ஆகிவிட்டது என்றார். 

இதைக் கேட்ட இளையாழ்வாருக்கு வருத்தம் உண்டாகிவிட்டது. “யோகத்தால் பகவானை மனதால் தரித்தவர்களின் குலம் முதலியவை ஆராயத் தக்கது அல்ல” என்பதை இவள் அறிந்துகொள்ளவில்லையே என்று வருந்தினார். 

பாரத்வாஜ சம்ஹிதையில்  ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம்  என்ற முக்கியமான வரி வருகிறது. இதன் பொருள், ஆத்மஞானம் பெற்றவர்களுடைய குலம், பிறப்பு, சாதி, ஆசாரம் போன்றவற்றை ஆராயக்கூடாது. பகவத் பக்தியில் சிறந்தவர்கள் சூத்திரர்களாகவோ இல்லை சண்டாளர்களாகவோ இருந்தாலும், அவர்களை ஜாதி கொண்டு பார்ப்பவர்கள் நரகத்தை அடைவார்கள். பரமாத்மாவை உணர்ந்தவர்களுக்கு பிறப்பு தொடர்பான பேதங்கள் இல்லை. 

சாத்தாத வைணவர் – பிறப்பால் அந்தணர் இல்லை. அதனால் அவர்களுக்கு அந்தணர்களுக்கு உரிய தினசரி கடமைகள், பூநூல் போன்றவை இல்லை. ஆனால் அவர்கள் வைணவர்கள், எம்பெருமானின் அடியார்கள். 

இதற்கிடையில் பேரருளாளன் தனக்கு ஒரு முறை சேவை செய்ததை (மழை இரவில் குடை பிடித்து இவர் திருமாளிகை வரை கொண்டுவிட்டது) நினைத்த திருக்கச்சி நம்பி, தாம் அவருக்கு அடிமையாக இருக்க, அவர் நமக்கு சேவை செய்வதா? இது தகுமா? என்று நினைத்து பேரருளாளன் அனுமதி பெற்று திருமலைக்குச் சென்றார். அங்கு சிலர், செங்கழுநீர் ஓடையிலே கிழங்கு பதிக்க, திருவேங்கடமுடையானுக்கு செங்கழுநீர்ப் பூ சூட்டவேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களைக் கேட்க, இப்போதுதான் கிழங்கு பதிக்கிறோம், உடனே பூ எங்காவது வருமா பைத்தியக்காரரே என்று சொல்ல, அவர் தம்முடைய வாக்கையும் மனத்தையும் மலரச் செய்தது போல, இந்தக் கிழங்குகளையும் மலரச் செய்து பயன் கொள்ள வேண்டும் என்று வேண்ட, அந்தக் கணமே அங்கு செங்கழுநீர் மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களைக் கொய்துகொண்டு போய் திருவேங்கடமுடையானுக்குச் சமர்ப்பித்தார். இப்படிச் சில காலம் கங்கர்யங்கள் செய்துகொண்டுவர, திருவேங்கடமுடையான், காஞ்சி பேரருளாளன் அக்நியில் உதித்ததால்  அங்குதான் திருவாலவட்டக் கைங்கர்யம் இன்றியமையாதது அதனால் அங்கே சென்று இந்தக் கைங்கர்யத்தைச் செய்து வாரும் என்று விடைகொடுத்து அனுப்பினான்.   

செங்கழுநீர் பூ 

இனி இன்றைய பாசுரம். உச்சிஷ்டம் என்பதை இந்த வாரத்தில் பார்த்ததால், அதற்கு ஏற்ற பாசுரம் ஒன்று. தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச் செய்த திருமாலையில் வரும் 41வது பாசுரம். 

`வானுளார் அறியலாகா * வானவா!' என்பர் ஆகில்,*

`தேனுலாந் துளப மாலைச் * சென்னியாய்!' என்பர் ஆகில்,*

ஊனமாயினகள் செய்யும் * ஊனகாரகர்களேலும்,*

போனகம் செய்த சேடம் * தருவரேல் புனித மன்றே?                                     

பொருள்: இந்திரன் முதலான தேவர்களும் அறிய முடியாத பரமபதநாதனே என்று அடியார்கள் வாயாரச் சொல்லுவர் ஆகில், தேன் நிறைந்த, தேனைப்போன்ற இனிமையான  துளசி மாலையை கழுத்தில் சூடியவனே என்று போற்றுவர் ஆகில், அவர்கள் பிறப்பால் தாழ்ந்தவர்களாகவோ இல்லை குற்றச் செயல்கள் செய்பவர்களாகவோ இருந்தாலும், அவர்கள் உண்ட உணவின் மீதியை நமக்குத் தந்து நாம் அதை ஏற்றால், அது நம்மைப் புனிதமாக்கும். 

விளக்கம்:  வானுளார்-இந்திரன் மற்ற வானுலகத்தவர்.  துளப மாலை -துளசி மாலை, ஊனமாயினகள்-குறைபாடுடைய செயல்களைச் செய்பவர்கள், ஊனகாரகர்கள்-இழிவான செயலைச் செய்பவர்கள் அல்லது பிறரைக் கொண்டு தீய காரியங்களைச் செய்ய வைப்பவர்கள். போனகம் – உணவு, சேடம் – சேஷம் என்பதன் தமிழ். மிச்சம் மீதி. 

உச்சிஷ்டம் என்று சொல்லும்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலை ஸ்தாபித்தவர்களில் முக்கியமானவரான திரு ரமணி அண்ணா அவர்களின் அனுபவம். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். இருந்தாலும் இங்கு பதிவு செய்கிறேன். 

ஒரு தடவை சத்குரு ஞானானந்த ஸ்வாமிகளை தரிசிக்க திருக்கோவிலூரில் உள்ள ஞானானந்த தபோவனத்துக்குச் சென்றார். ஸ்வாமியைத் தரிசிக்க நீண்ட வரிசை. காலை 7 ½ மணி. இவர் முறை வந்ததும் ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக வணங்கினார். எப்போது புறப்படுவதாக உத்தேசம் என்று அவர் கேட்க, ஸ்வாமி உத்தரவு கொடுத்தால் உடனே கிளம்பிவிடுவேன், சென்னையில் வேலை இருக்கு என்று சொல்ல, இப்போ வெகேஷன் தானே.. இருந்துவிட்டு நாளை காலையில் போகலாம், இன்று சனிக்கிழமை மாலை அனுமன் சன்னிதில விசேஷ பூஜை இருக்கு. இருந்து தரிசனம் செய்யலாமென்றராம். 

மாலை அனுமனுக்கு புஷ்ப அலங்காரத்துடன் வடை மாலையும் சார்த்தியிருந்தாரம் அர்ச்சகர். அவர், ரமணி அண்ணாவிடம் வந்து, இப்போ சஹஸ்ரநாம அர்ச்சனை பண்ணப் போகிறேன், இந்தப் புத்தகத்தைப் பார்த்து நாமாவளியை ஒவ்வொண்ணாகச் சொல்லுங்கள் என்றாராம். இவர் சொல்லச் சொல்ல அவர் அர்ச்சனை செய்தாராம். அதற்கு முக்கால் மணி நேரமாகிவிட்டதாம். அப்போது சன்னிதியில் நாலைந்து பேர்கள் மாத்திரமே இருந்தனராம். அதில் ஒருவர் தாடி வைத்த, பழுப்பேறிய பெரிய ஜிப்பா அணிந்த பெரியவர். அவர் கண்களில் ஒளி இருந்தது. வெளியே வந்த அர்ச்சகர், அவரைப் பார்த்து கைகூப்பி வணங்கினாராம். அந்தப் பெரியவரும் ஆசி கூறும் விதமாக கையைக் காட்டினாராம். அப்போது ரமணி அண்ணாவுக்கு அது யார் என்று அர்ச்சகரிடம் கேட்கத் தோன்றவில்லையாம். 

தீபாராதனை முடிந்ததும் பிரசாதப் பாத்திரத்துடன் வந்த அர்ச்சகரிடம், இன்று ஸ்வாமிக்கு என்ன நிவேதனமென்று கேட்க, அவர், வெண்பொங்கல் என்றாராம். எப்போதும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை என்று வித விதமாக பிரசாதம் இருக்கும். இன்று என்ன வெண்பொங்கல் மாத்திரம் என்று ஆதங்கத்துடன் கேட்டார். அதற்கு அர்ச்சகர், என்ன பண்ண, திருக்கோவலூர் வரை போயிட்டு வர்றேன்னு சொன்ன பரிசாரகர் இன்னும் வரலை. அதனால் என்னால் முடிந்த அளவு வடையைத் தட்டி வெண்பொங்கல் பிரசாதமா பண்ணிட்டேன், ஆனால் நிவேதனம் பண்ணறப்போ எல்லா பிரசாதங்களின் பெயரையும் சொல்லிட்டேன். ஸ்வாமி சாப்பிட்டிருப்பார் அல்லவா என்றாராம். 

அதெப்படி… பிரசாதங்களின் பெரைச் சொன்னால் அவற்றை நிவேதனம் பண்ணிய மாதிரி ஆகிடுமா? இறைவன் சாப்பிட்டிருப்பாரா? இது என்ன வாதம் என்று அர்ச்சகரிடம் வாதிட்டேன். அவர் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். 

நாங்கள் பேசுவதை தூரத்தில் நின்றுகொண்டிருந்த பெரியவர், அருகிலிருந்தவரிடம் ஆங்கிலத்தில் கேட்டுப் புரிந்துகொண்டார். வடநாட்டைச் சேர்ந்த அந்தப் பெரியவருக்கு தமிழ் தெரியவில்லை போலிருக்கிறது. என்னைப் பார்த்து சிரித்த கண்களுடன் புன்முறுவல் செய்தார். 

அர்ச்சகர் அவர் அருகில் சென்றதும், இரண்டு கைகளையும் சேர்த்துக் குழித்து பிரசாதத்திற்காக நீட்டினார் அந்தப் பெரியவர். அர்ச்சகர் அவர் கை நிறைய வெண் பொங்கலைச் சேர்த்துவிட்டு, எனக்கு உச்சிஷ்டம் வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெரியவர், தாராளமா எடுத்துக்குங்க என்று சொல்ல, அர்ச்சக்ர ஒரு கொட்டைப் பாக்கு அளவு பிரசாதத்தை அவர் கையிலிருந்து எடுத்து வாயில் போட்டுக்கொண்டு தேவாம்ருதம் தேவாம்ருதம் என்று சொன்னார். பிறகு அர்ச்சகர் என்னிடம் வந்து, பெரியவர்களுடைய உச்சிஷ்டம் கிடைக்க ஜென்மாந்திர புண்ணியம் பண்ணியிருக்கணும். போங்கோ.. நீங்களும் போய் வாங்கிக்குங்கோ என்று அவசரப்படுத்தினார் அர்ச்சகர். 

ரமணி அண்ணா உடனே அந்தப் பெரியவரிடம் சென்று உச்சிஷ்டம் வேண்டும் என்று கேட்க, அவரோ, எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜாடை காட்டினாராம். அவர் கையிலிருந்து சிறிது பிரசாதம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டார் ரமணி அண்ணா. அந்தப் பெரியவர், இன்னும் கொஞ்சம் எடுத்துக்கோங்க என்று ஜாடை காட்டவும் இன்னும் சிறிது எடுத்து வாயில் போட்டுக்கொண்டாராம். அது சர்க்கரைப் பொங்கல் போல இனித்ததாம். அசந்துவிட்டார் ரமணி அண்ணா. பெரியவரோ இன்னும் எடுத்துக்கொள்ளச் சொன்னாராம். இன்னும் சிறிது எடுத்து வாயில் போட்டபோது அது புளியோதரையாக இருந்தது. பிரமித்துவிட்டேன். பெரியவர் இன்னும் சிறிது எடுத்துக்கொள்ளச் சொன்னபோது, அந்தப் பிரசாதம் எள்ளோரையாக அவர் வாயில் ருசித்ததாம். ரமணி அண்ணா உணர்ச்சி வசப்பட்டு அந்தப் பெரியவர் காலில் விழுந்து அழுதுவிட்டாராம். பெரியவர், ரமணி அண்ணாவின் முதுகில் தட்டி எழுந்துகொள்ளச் சொன்னார். பிரசாதம் சாப்பிட்டு முடித்த தன் கையை பைஜாமாவில் துடைத்துக்கொண்டு, என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தாராம்.    

அருகில் வந்த அர்ச்சகரிடம், ஸ்வாமி, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். தெரியாத்தனமா உங்கிட்ட, ஸ்வாமிக்கு முன்னால பிரத்யட்சமா வைக்காத பதார்த்க வெறும்ன பிரசாதங்கள் பெயரைச் சொல்லி நிவேதனம் பண்ணினால் ஸ்வாமி எப்படி ஏத்துப்பார்னு நான் வீம்புல கேட்டுவிட்டேன். அது தப்பு என்பதை இந்த மஹான் மூலமாகத் தெரிஞ்சுண்டேன்.  நீங்க வாயால நிவேதனம் பண்ணின அத்தனை பிரசாதங்களையும் பெரியவரோட உச்சிஷ்டம் மூலமா ருசித்தேன். ஆத்மார்த்தமான அர்ப்பணம்தான் முக்கியம் என்று தெரிந்துகொண்டேன். என்று சொன்னார். 

எங்கோ வெறித்தபடி தூரத்தில் சென்றுகொண்டிருந்த அந்தப் பெரியவரைக் காண்பித்து அவர் யார் என்று கேட்தற்கு அர்ச்சகர், அவர் வடக்கே இருந்து வந்திருக்கும் சாது அவர். நம் குருநாதரிடம் அவருக்கு ரொம்பவே ஈடுபாடு. அடிக்கடி ஆஸ்ரமத்துக்கு வருவார், அவர் பெயர் யோகி ராம் சுரத்குமார். விசிறி சாமியார் என்று அவரைச் சொல்லுவா என்றார். 

உச்சிஷ்டம் என்றதும் ரமணி அண்ணா எழுதியிருந்த இந்த அவருடைய அனுபவம் என் நினைவுக்கு வந்தது. 

முக்கியக் காரணம் இந்தக் கிணறுதான் என்று அதீதமாகச் சொல்லியிருக்கிறார்கள். கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் சுவற்றில், அல்லது அணையில் விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு, ஒரு கல் நகரும்போது முழுவதும் உடைந்துவிடும்போது, ஒற்றைக் கல்லால்தான் இந்தப் பிரச்சனை என்று சொல்லமுடியாதில்லையா? 

அடுத்த வாரம் தொடர்வோமா?...

======================================================================================


நான் படிச்ச கதை - JKC

ஓர் அரிசி

கதையாசிரியர்: கிருபானந்த வாரியார்

 

தின/வார இதழ்: கலைமகள் (1982ல் வெளியான சிறுகதை)

என்னுரை: சனிக்கிழமையின் ஆன்மீகத்துக்கு ஈடாக வாரியாரின் கதை ஒன்று இன்று இங்கு தரப்படுகிறது. சிறப்பு அவரது பாட்டும் கதையும்.  கதை sirukathaigal.com இல் இருந்து பெறப்பட்டது. தற்போது பிரபலமாக இருக்கும் “தாய் கிழவி” மனதில் நிழலாடினால் கம்பெனி பொறுப்பேற்காது.

ஓர் அரிசி

ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும் அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபடுவோர்க்கு ஒரு பலன். அடியாரை வழிபடுவோர்க்கு இரட்டைப் பலன். ஏன்? அடியார்கள் உள்ளக் கோயிலில் ஆண்டவன் உறைகின்றான். ஆதலின் அடியார் வழிபாடு உயர்ந்தது என்றுணர்க.

ஆண்டவனுக்குத் தந்த ஒன்று அடியார்க்குச் சேராது அடி யார்க்குத் தந்தது ஆண்டவனைச் சேரும். அஞ்சல் தலைமையகத்தில் இட்ட அஞ்சல் அஞ்சல் பெட்டிக்கு வராது; அஞ்சல் பெட்டியில் இட்ட அஞ்சல் தலைமை நிலையத்துக்குச் சேர்ந்துவிடும். அஞ்சல் தலைமை நிலையம் இறைவன்; அஞ்சல் பெட்டி அடியார்கள் என்றுணர்க.

“படமாடக் கோயில் பரமர்க்கொன் றியின்

நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா

நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயின்

படமாடக் கோயில் பரமர்க்கங் காமே”

என்பார் திருமூலர்.

ஆண்டவனுக்குச் செய்கிற வழிபாடு ஆராதனை எனப்படும். அடியார்க்குச் செய்கிற வழிபாடு சமாராதனை எனப்படும். சம் ஆராதனை – சமாராதனை, சம் – நன்றாக; ஆராதனை – வழிபாடு. நன்றாக வழிபட்டது சமாராதனை.

ஆதலால் காதலால் அடியார்க்குச் செய்யும் வழிபாடு மிகமிகச் சிறந்த பயனை நல்கும்.

ஒரு சமயம் நான் பெருந் தனவந்தர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் மிகவும் இனிமையாகப் பேசி மிகவும் உபசரித்தார். “ஐயா, உமக்கு இத்துணைப் பெருஞ் செல்வம் எவ்வாறு வந்தது?” என்று கேட்டேன். அத்தனவந்தர் செல்வ நலத்தால் சிறந்தவர் மட்டுமன்று; கல்வி நலத்தாலும் சிறந்தவர். உடனே இரு வெண்பாக்களினால் எனக்கு விடையிறுத்தார்.

கட்டத் துணியற்றுக் காந்துபசிக் கன்னமற்

றெட்டி மரமொத் திருந்தயான் – ஒட்ட

எறும்பிற்கு நொய்யரிசி யிட்டேன்; அதனால்

சிறிதுபொருள் ஈந்தான் சிவன்.

அப்பொருள்கொண் டீசன் அடியார்க் கன்னமிட்டேன்

ஒப்புவமை யில்லான் உளமுவந்தே – இப்பார்

அளகேசன் என்றே அதிசயிக்கச் செல்வம்

அளவிலா தீந்தான் அவன்.

“உடுக்கத் துணியும் உண்ணச் சோறும் இன்றி எட்டிமரம் போல் வாழ்ந்து கசந்து இருந்த நான், வேறு ஒரு நற்பணியும் செய்ய இயலாது திகைத்து, எறும்பு வளைக்கு நொய்யரிசி யிட்டு வந்தேன். அதனால் சிவபெருமான் சிறிது செல்வத்தை வழங்கியருளினார். சிவன் தந்த செல்வத்தைப் பாங்கியில் போடாமல் அப் பரமனுடைய அடியார்க்கு அன்னம் இட்டு வந்தேன். அதனால் அகம் மகிழ்ந்து அரனார் பேரன் என்று என்னை எல்லோரும் மதிக்குமாறு அளவிறந்த செல்வத்தை வழங்கியருளினார்”. இது அவர் கூறிய விடை.

ஒரு கிராமத்தில் ஒரு கிழவி இருந்தாள். சூது வாது வஞ்சனை பொய் களவு முதலிய தீக்குணங்கள் அத்தனைக்கும் அவள் உறைவிடமாக இருந்தாள். தரும குணம் ஒரு சிறிதும் இல்லாத பொல்லாத கிழவி. அவள் வீட்டில் வாழ்கின்ற எறும்புகளுக்கு நித்திய ஏகாதசி. ஒன்றையும் சிந்தமாட்டாள். எறும்பின் வாயில் ஒரு நொய்யைப் பார்த்தால் உடனே ஓடி அதைப் பிடுங்கிப் பானையில் போட்டுக் கொள்வாள். அவள் வீட்டில் சாப்பிட்ட இலை வெளியில் விழுந்தால் சாப்பிடாத இலை மாதிரி சுத்தமாக விழும். அதில் ஒரு துளிப் பசைகூட இராது. நாய்கள் வந்து பார்த்து ஏமாந்து போகும். நாம் செய்கின்ற வேலைகள் யாவும் இந்தக் கிழவியே செய்துவிட்டாள் போலும் என்று பேசிக்கொள்ளும்.

பழைய சோற்றைப் பிசைந்து வடகம் போட்டுத் தின்பாள். கந்தல்களையெல்லாம் மடித்து மடித்துத் தலையணையாக்கிப் போட்டுக் கொள்வாள்: கோயிலுக்குப் போவாள். சுவாமி கும்பிடுவதற்கு அன்று; அங்கு யாராவது விட்டிருந்த பாதரட்சைகளைக் கவர்ந்து வரும் பொருட்டே. யாராவது பிச்சைக்காரர் அவளுடைய வீட்டுக்குச் சென்றால் சீறி விழுந்து கடிக்க வருவாள். அவர்கள் அப்படியே நடுங்கி. ஒடுங்கி ஓடிவிடுவார்கள்.

அவள் வாயில் மறந்தும் தெய்வத் திருநாமம் வராது. அவள் சிந்தையில் கருணைக்கு இடமே இல்லை. கருணைக் கிழங்காகத்தான் மாறிப் போயிற்று.

அவளை அந்த ஊரில் அனைவரும் வெறுத்து ஒறுத்தார்கள். ஒரு நாள் காலை. கிழவி நடையில் அரிசி தீட்டிக்கொண் டிருந்தாள். ஒரு சிறந்த சிவனடியார் வந்து,

“அரஹர சிவசிவ அம்பலவாணா பரம தயாபர வரத குணாளா” என்று பாடிக்கொண்டு நின்றார். “பாட்டி! ஒரு பிடி அரிசி போடு” என்றார்.

கிழவி, “ஏய்! உனக்கென்ன மமதை? எனக்கு என்ன வயது? எண்பதுதானே ஆயிற்று? பாட்டி என்கின்றாய். பச்சை வெட்டு மருந்து சாப்பிட்டுப் பல் போய்விட்டது. தேன் பட்டு மயிர் நரைத்துவிட்டது. இது என்ன தரும சத்திரமா? உனக்கென்ன கேடு? செக்குலக்கை மாதிரி இருக்கின்றாய். போ போ!” என்று விரட்டினாள்.

“பெரியம்மா, காதில் தங்கத்தால் செய்த பாம்புவடம் போட்டிருக்கின்றாயே! கழுத்து நிறையத் தங்கச் சங்கிலி. இவையெல்லாம் ஏது? சிவன் தந்ததுதானே? நான் பொன்னையும் பொருளையும் கேட்கவில்லையே! ஒரு பிடி அரிசிதானே யாசிக்கின்றேன்? அண்டாத் தொண்டையால், தகர டின் தட்டியது போல் கர்ஜித்துப் பேசுகின்றனையே!

பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை; பிறந்துமண்மேல்
இறக்கும் பொழுதும் கொடுபோவ தில்லை இடைநடுவில்
குறிக்கும் இச் செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக் கென்சொல்லு வேன்கச்சி ஏகம்பனே.”

அவ்வளவுதான் கிழவிக்குப் பொங்கி எழுந்தது சீற்றம். ஆலகால விஷம்போல் கொதித்தாள். “பிச்சைக்காரப் பயலே! என் வீட்டிலே வந்து இந்தத் தரித்திரம் பிடித்த மரணத்தைக் குறிக்கின்ற பாட்டைப் பாடுகின்றாயே?” என்று வைது, அரிசி தீட்டுகின்ற உலக்கையால் பத்திரகாளி போல் அந்தச் சிவனடியாரை அடிக்க ஓங்கினாள்.

உலக்கையில் ஒட்டியிருந்த ஓர் அரிசி அவருடைய அட்சய பாத்திரத்தில் வீழ்ந்தது. அதனைக் கிழவி பார்க்கவில்லை. பார்த்திருந்தால் எல்லா அரிசியும் என்னுடையது என்று எடுத்துக் கொண்டிருப்பாள். அடியார் பிடித்தார் ஓட்டம்.

மற்ற வீடுகளுக்குச் சென்றார். சிறிது அரிசி கிடைத்தது.ஒரு மண்டபத்தில் அதைப் பொங்கி, தாம் வழிபடும் சிவலிங்கத்துக்கு நிவேதித்தார். பசியாறினார். சிவயோகத்தில் அமர்ந்தார். சிவஞானிகள் இன்றிருந்த ஊரில் நாளை இரார். அவர் தலயாத்திரைக்குச் சென்றுவிட்டார்.

நாளடைவில் கிழவி கண்ணை மூடிவிட்டாள். காலதூதர்கள் அவளைக் கட்டிப் பிடித்து யாதனா சரீரத்துடன் கொண்டுபோய் அறக் கடவுளுக்கு முன்னே நிறுத்தினார்கள்.

அறக்கடவுள் கடுகடுத்த முகத்துடன், “சித்திரகுப்தா, இவள் கணக்கை எடுத்துப் படி” என்று கட்டளையிட்டார்.

சித்திரகுப்தன் கிழவியின் கணக்கை எடுத்துப் படித்தான். “எல்லாம் பாவந்தான். புண்ணியமே இல்லை. எறும்பு வளையில் நெருப்பை இட்டாள். பெரியோரை நிந்தித்தாள். கோயில் உடைமைகளைக் கவர்ந்தாள். கண்ணில்லாதவர்களுக்குக் காலணா போட்டு நாலணா எடுத்துக்கொண்டாள். சிவராத்திரி சஷ்டி ஏகாதசி முதலிய விரத நாள்களில் கூடத் தலையணைக்குப் பஞ்சடைக்கின்ற மாதிரி வயிறு புடைக்கத் தின்றாள். பேசிய யாவும் பொய். ஒரு நாள் ஒரு மகானை உலக்கையால் இடிக்கச் சென்றாள். உலக்கையில் ஒட்டிய ஓர் அரிசி அவருடைய கரத்தில் இருந்த அட்சய பாத்திரத்தில் வீழ்ந்தது. அந்த ஓர் அரிசி சிவநிவேதனமாகி அச் சிவனடியார் திருவயிற்றில் சேர்ந்தது. இந்த ஒன்றுதான் இவள் வாழ்நாளில் செய்த புண்ணியம். இதுவும் அபுத்தி பூர்வமாகச் செய்தது” என்றான்.

அறக்கடவுள், “நல்வினை,அபுத்தி பூர்வமாகச் செய்தாலும் நன்மை பயக்கும். ‘தான் சிறிதே யாயிடினும் தக்கார்கைப் பட்டக்கால், வான் சிறிதாப் போர்த்து விடும்’. நெருப்பைத் தெரியாமல் மிதித்தாலும் சுடுந்தானே? ஆதலால் இந்த ஓர் அரிசிக்கு என்ன நலத்தை நுகர வேண்டும்? பார்த்துச் சொல்” என்றார்.

சித்திரகுப்தன், “அண்ணலே, அந்த ஓர் அரிசி அடியாரின் திருவுதரத்தில் வீழ்ந்தபடியால் திருக்கயிலாய மலையிற் சென்று சிவ பெருமானைத் தரிசிக்க வேண்டும்” என்றான்.

அறக்கடவுள், “புண்ணியம் கடுகளவு: பாவம் மலையளவு. சூசீகடாக நியாயப்படி புண்ணியத்தை நுகரட்டும். பிறகு பாவங்களை நுகரச் செய்யுங்கள். கிழவியின் பாவங்களுக்காக நரகில் இட்டு வாட்டி வருத்துங்கள். கிழவியின் வாயிலே தீயை வைத்துச் சுடுங்கள். கொதிக்கும் எண்ணெயில் இட்டுப் பொரியுங்கள்!” என்றார்.

நமனுடைய தமர்கள் கிழவியைப் பாசக் கயிற்றால் நன்றாகப் பிணித்துக்கொண்டு போய்த் திருக்கயிலாயத்தில் சிவ சந்நிதியில் நெடுந் தொலைவில் நிறுத்தினார்கள்.

“கிழவி. அதோ பார், சிவபெருமான்!”

பவளக் குன்று போன்று கோடி சந்திரப் பிரகாசமாய் வேத மந்திர பீடத்தில் வீற்றிருக்கும் சிவ மூர்த்தியையும், இடப் பாகத்தில் மரகதக் கொடிபோல் வீற்றிருக்கின்ற இமயவல்லி அம்மையையும். கனகச் சிறு குன்றுபோல் களிநடம் புரியும் சுந்தவேளையும் கண்டாள் கிழவி. அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சிந்தியது.

 “அப்பா எமதூதர்களே, உங்களுக்கு ஒரு கோடி வணக்கங்கள். ஓர் அரிசிக்கு இத்துணைப் புண்ணியம் வரும் என்று பாவியாகிய எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அந்தோ! என் வீட்டில் குதிர் நிறைய நெல்லும் பல மூட்டைகள் அரிசியும் நெய்யும் பாலும் முந்திரிப் பருப்பும் பாதாம் பருப்பும் டப்பா டப்பாவாக இருந்தன. அத்தனையும் இப்போது எனக்கு உதவவில்லை. பெட்டி நிறையப் பணமும் வைத்திருந்தேன். வட்டிமேல் வட்டி வாங்கினேன். பெட்டி மேல் பெட்டி அடுக்கினேன். எல்லாம் அங்கேயே நின்றுவிட்டன. அடியாரிடம் சேர்ந்த ஓர் அரிசிதான் இங்கு உதவுகின்றது. இத்துணைப் புண்ணியம் வரும் என்று யாரும் எனக்கு விவரமாகச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் என் வீடு தேடி வந்த அடியார்க்கு இரட்டையிலையிட்டுப் பாலும் நெய்யும் அன்னமும் சொர்ணமும் அள்ளி வழங்கியிருப்பேன். சண்டாளியாகிய நான் கிள்ளிக்கூடத் தந்ததில்லை. வாழ்நாள் முழு வதும் வீழ்நாளாகக் கழித்தேனே! போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே! அப்பா; நீங்கள் நல்ல உத்தமர்கள். தேவருக்கும் மூவருக்கும் காணக் கிடைக்காத கண்ணுதற் கடவுளைக் கண்ணாரக் கண்டேன். ஆனந்தம் கொண்டேன். கடவுளைக் கண்டு கைகூப்பித் தொழவில்லை யானால் மேலும் பாவந்தானே? உங்களைத் தலையினால் வணங்குகின்றேன். சிறிது கட்டை அவிழ்த்து விடுங்கள். கைகூப்பிக் கும்பிடுகின்றேன். பிறகு என்னைக் கட்டிக்கொண்டு போய் எரிவாய் நரகில் இட்டு வருத்துங்கள்” என்று மிக மிக நடுங்கிய குரலுடன் இனிமையாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

இரக்கமே அறியாத எமதூதர்களின் ‘உள்ளம் சிறிது உருகிற்று. குடலறுந்த குறுநரி எங்கே போகும்?’ என்று கருதிச் சிறிது கட்டை அவிழ்த்து விட்டார்கள்.

கிழவி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து திருக்கோயிலுக்குள் சென்று, கருணைக் கடலாகிய சிவபெருமான் திருவடியைச் சிக்கெனப் பிடித்துக் ‘கொண்டாள்.

“தேவதேவா! மஹாதேவா! தீன ரட்சகா! கருணைக் கடலே! ஏழை பங்காளா! அருட் பெருஞ்சோதீ! அப்பனே! சிறியேன் அறி யாமையால் வல்வினைகளைச் செய்து விட்டேன். அத்தனையும் பொறுத்து ஏழையைக் காத்தருள். காலதூதர்கள் இரும்புச் சம்மட்டியால் அடிப் பார்களாமே! கும்பீபாக நரகில் தள்ளிச் சித்திரவதை செய்வார் களாமே! தாண்டவம் புரியும் ஆண்டவனே! வேண்டியவர்களுக்கு அருளும் தயாநிதியே! என்னை விரட்டியடிக்காமல் காத்தருள். குழந்தைகள் செய்த குற்றங்களுக்கு அம்மையும் அப்பனும் தண்டிக்கலாம். தெருவில் போகும் பயில்வானை விட்டுத் தண்டிக்கமாட்டார்களே! எமனிடம் கொடுத்து என்னைத் தண்டிக்காதே!” என்று கூறி அழுதாள்; தொழுதாள்.

கருணாநிதியாகிய கண்ணுதற் பெருமான் அவள்மீது கருணை மழை பொழிந்தார். “அஞ்சேல்” என்று அபயம் அளித்தார்.

கிழவி சிவபெருமான் திருவடியின் அருகில் நிமிர்ந்து அமர்ந்தாள்.

இத்தனையும் கண்ட காலதூதர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். “கிழவி, வெளியே வா!” என்று அழைத்தார்கள். கிழவி, “வர முடியாது, போங்கள்!” என்றாள்.

காலதூதர்கள், “எம்பெருமானே! கிழவியைத் துரத்தி அனுப்புங்கள். இவள் கொடிய பாவி. நரகில் தள்ளி இவளைத் தண்டிக்க வேண்டும்” என்றார்கள்.

சிவபெருமான். “காலது தர்களே, விண்ணளவு அடுக்கிய பஞ்சுப் பொதி நெருப்பினால் எரிந்து கரிந்து சாம்பரானாற்போல இவளுடைய பாவங்கள் யாவும் என்னைத் தீண்டியவுடனே நீறாகிவிட்டன. இவளை நாம் மன்னித்து அருள் புரிந்தோம். நீங்கள் உங்கள் உலகுக்குச் செல்லுங்கள்” என்று அருளிச் செய்தார்.

காலதூதர்கள், “ஐயனே, எங்கள் தலைவனுக்கு என்ன சொல்வது?’ என்றார்கள்.

சிவபெருமான், “மார்க்கண்டேயர் வரலாற்றை நினைவுபடுத்துங்கள் என்றார்.

காலதூதர்கள் மறைந்து நமனுலகம் போய் நடுங்கி அறக் கடவுளுக்கு முன் நின்றார்கள்.

அறக்கடவுள், “எங்கே கிழவி?” என்று கேட்டார். அவர்கள் நிகழ்ந்ததைக் கூறினார்கள்.

அறக்கடவுள் இறைவனுடைய கருணைத் திறத்தையும், அடியார் குட்சியில் வீழ்ந்த ஓர் அரிசி செய்த விந்தையையும் நினைந்து அதிசயம். அடைந்தார்.

– அக்டோபர், 1966

–கலைமகள் பொன்விழாக் கதம்பம் (1932-1981), பொன்விழா வெளியீடு, முதல் பதிப்பு: ஏப்ரல் 1982, கலைமகள் காரியாலயம், சென்னை.

 கிருபானந்த வாரியார்


 கிருபானந்த வாரியார் (திருமுருக கிருபானந்த வாரியார்; கிருபானந்த வாரி) (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சைவ சமய அறிஞர், முருக பக்தர். சமய, ஆன்மிகச் சொற்பொழிவாளர், எழுத்தாளர். 

இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வாரியார் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 

100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

திருமுருக கிருபானந்த வாரியார் 1993-ல், லண்டனில் நடைபெறும் முருகப்பெருமானுடைய குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு, அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மெக்கிரேடிக் என்ற லண்டன் மருத்துவரும், கணேசரத்தினம் என்னும் தமிழ் மருத்துவரும் வாரியாருக்குச் சிகிச்சை அளித்தனர். வாரியாரும் விரைவில் குணமடைந்தார்.

அவர் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஏர்பஸ் விமானத்தில் வாரியார் இந்தியா புறப்பட்டார். காலை 10 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் 1 மணி நேரம் தாமதமாக 11 மணிக்குப் புறப்பட்டது. அப்போது இந்தியாவின் நேரம் மாலை 4.30 மணி.

மருத்துவரும் உடன் வந்தார். அவ்வப்போது வாரியாரின் உடல் நிலையைக் கண்காணித்து வந்தார். ஜூலை 07, 1993, மறுநாள் காலை, மும்பையிலிருந்து சென்னைக்கு விமானம் மாறினார் வாரியார் சுவாமிகள். அது திருப்பதியைக் கடந்தபோது, அருகில் இருந்தவரிடம் வாரியார்," அடுத்தது என்ன திருத்தணிதானே?" என்று கேட்டார். அவ்வாறு கேள்வி கேட்ட சிறிது நேரத்திலேயே முருகன் பெயரைச் சொல்லியவாறே இயற்கை எய்தினார். வாரியாரின் உடல் நலனை உடன் பயணித்த மருத்துவர் பரிசோதித்தபோது வாரியார் காலமானது தெரியவந்தது. அப்போது வாரியாருக்கு வயது எண்பத்து ஏழு.

வாரியாரின் உடல், சென்னை, பெரம்பூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின் அவரது சொந்த ஊரான காங்கேயநல்லூருக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்குச் சரவணப் பொய்கையில் மேடை அமைக்கப்பட்டு சமாதி வைக்கப்பட்டது.

கிருபானந்த வாரியார் சிறப்புத் தபால் தலை

வாரியார் செய்த திருப்பணிகள், இயற்றிய சொற்பொழிவுகள், எழுதிய நூல்கள் என்று வாழ்நாள் முழுதும் செய்த நற்பணிகள் கட்டுக்கங்காதவை. முழு விவரங்களுக்கு =======> இங்கே வாரியார்  

 

32 கருத்துகள்:

  1. எப்போதுமே இந்த குல பேதம் கிடையாது என்பதை நாம் பின்பற்றத் தொடங்கிவிட்டால் சண்டை சச்சரவுகள் இல்லாமல் போய்விடும் இல்லையா? அதுவே ஆத்மஞானத்துக்கு வழிவகுப்பும் பாதை இல்லையா? இறைவனை பேதப்படுத்தாமல் பார்க்கத் தொடங்கிவிட்டால் அதுவே ஆன்ம பலத்திற்கு வழி வகுக்கும் என்று தோன்றும்.

    ஆனா ஆள்பவர்களுக்கு இது இல்லை என்றால் கஷ்டம்...இதுதானே கை கொடுக்குது!!!!! ஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குலபேதம்
      ஆத்ம ஞானம்
      இறைபேதம்
      -- இதெல்லாம் புரியாத வார்த்தைகள்.
      யாராவது உதாரணம் காட்டி பொருள் சொன்னால் தொடரும் சந்தேகங்களைச் சொல்லலாம்.

      நீக்கு
    2. ஜீவி அண்ணா, குலபேதம் என்பது, இந்த குலம் உசத்தி இந்த குலம் தாழ்த்தி என்று நினைப்பது பதிவிலேயே வருதே. சிவப்பு வரிகளில்

      ஜாதி மதம் குலம் என்று பார்த்தால் எப்படி மனம் பேரானந்தத்தை அடையும்?

      ஆத்ம ஞானம் என்பது பேரானந்தம்...மனம் நிச்சலனமாக இருக்கும் நிலை. நம்மைச்சுற்றி எது நடந்தாலும் அது நம்மை பாதிக்காத நிலை. அந்த மனதில் ஒரே ஒரு சிந்தனை மட்டுமே யோகி நிலை. அவர்கள் பேசுவது சாதாரண மனிதர்களுக்குப் புரியாததாக இருக்கலாம்...புத்தர் அல்லது Stoicism வழி சொல்வதென்றால் மனதில் உள்ள ஆசைகளைத் துறந்து, எதிர்மறை எண்ணங்களைக் களைந்து, நாம் நன்றாக இருக்கிறோம், நமக்கு எல்லாமே இருக்கின்றன, நான் ஆரோக்கியமாக இருக்கிறென்....என்று,,,,இக்கிகாய் படி பார்த்தால் வாழ்க்கையில் குறிக்கோள் என்ன? அது என்ன என்று அறிய முடியுமா? அதைப் புரிந்து கொண்டு அதை நோக்கி நகர்வது அதற்கான வழிமுறைகலை அறிதல்.

      எல்லா தத்துவங்களுமே ஒன்றைத்தான் சொல்கின்றன. பேரானந்தத்தை அடைதல் மனதை எப்படி நிம்மதியாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுதல்

      இறைபேதம் என்பதும் உங்களுக்குத் தெரியாதது இல்லையே அண்ணா. எந்த இறைவன் உசத்தின்னு சொல்லி சண்டை வருதே அதுதான். எல்லாம் ஒன்றே ஒரே மாபெரும் சக்தின்னு உருவம் கொடுக்காமல் வழிபட்டால் இந்த பேதங்கள் நிச்சயமாக இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து.

      போட்டு வாங்கறீங்களோ!!!!!! ஜீ வி அண்ணா?! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. அப்படியெல்லாம் இல்லை சகோ!
      சில தெளிவுகள் பிறக்கத்தான் இதெல்லாம் என்பதற்காகக் கேட்டேன்.
      சமய வழிபாடுகளில் இருப்பவையெல்லாம் சமய ஈடுபாடுகளில் இல்லையே என்பதற்காகவும் தான்.ஆல்
      குலபேதம் என்ற வார்த்தையையே எடுத்துக் கொள்ளுங்கள்.
      குலபேதம் என்பது இருந்தால் சாத்தாத வைணவர் என்ற அழைப்பிற்கே இடமில்லை.
      சாத்தாத வைணவரும் இருப்பார் குலபேதமும் இருக்கும் என்பது நடைமுறை சாத்தியம் இல்லை அல்லவா?
      அப்படி வாழ்க்கையில் வார்த்தைகளில் தொட்டதற்கெல்லாம் வித்தியாசம் இருக்கும் பொழுது இவற்றைப் பற்றியெல்லாம் அறியாது இருப்பது மேலல்லவா?
      அதனால் தானோ என்னவோ இறை வழிபாடு என்பது ஆழ்ந்த பக்தியோடேயே சுருங்கி விட்டது எனக்கு.

      நீக்கு
    4. ஜீவி சார்

      குலம் வேறு குலபேதம் வேறு

      ஜீவி சார் ஸ்மார்த்தர் என்று சொல்வது குலபேதம் கிடையாது. ஆனால் குலத்தை வைத்து பேதம் கற்பிப்பது தவறு.

      வைணவர்களில் குலத்தால் வைணவர், கொள்கைகளை ஏற்று ஒழுகுவதால் வைணவர் ஆனவர் என இரண்டு வகை. பிராமணர்கள் இயல்பாக பூநூல் அணிவர். திரிகால சந்தியாவந்தனம் கடமை. சாத்தாத வைணவர்கள், வைணவரானவர். பூநூல் சாத்திக்கொள்வதில்லை.

      சாத்தாத வைணவரா? பக்கத்தில் நிற்காதீர்கள். ஓ.. நீங்கள் தொட்டு சாப்பிடறதில்லை னுலாம் சொன்னால் நினைத்தால் குலபேதம்

      நான் நாராயணனை மாத்திரம் வழிபடுவேன், எனக்கு சிவனே பிரதான தெய்வம் என்பது இறை பேதமில்லை. இறை வழிபாட்டு கொள்கை

      என் இறைவனே பெரியவன் உன் கடவுள் சரியில்லை என்றெல்லாம் பேசுவது விவாதிப்பது இறை பேதம்

      நீக்கு
    5. ஆக.கீதா ரெங்கன் தன் முதல் பின்னூட்டத்தில் குலம் என்பதை ஜாதி என்ற அடிப்படையில் புரிந்து கொண்டு குலபேதம் பார்க்கவில்லை என்றால் ஜாதி சண்டை சச்சரவுகள் இல்லாமலே இருக்கும் என்கிறார்.

      நானோ இறைபக்தி என்பதை இறை வழிபாடு என்ற அர்த்தத்தில் புரிந்து கொண்டு குலபேதம் போன்ற விவகாரமான கருத்துக்களுக்கு இதில் இடமில்லை என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.

      ஆனால் நெல்லையோ குலத்தால் வைணவர் கொள்கையால் வைணவர் என்று இரண்டாகப் பிரித்து குலபேதம் கொள்ளாமையை விளக்குகிறார்.
      ஆக கீதாரெங்கன் சொல்லும் குலம் நெல்லை சொல்லும் ட்டது.

      ஆக, கேள்வி பிறந்ததால் தான் அவரவர் கொண்டுள்ள விளக்கங்களும் புரிகிறது.

      விளக்கத்திற்கு நன்றி நெல்லை.

      நீக்கு
    6. கீதா ரெங்கன் சொலலும் குலம் வேறு, நெல்லை சொல்ல குலம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் வேறு என்று வாசிக்கவும்.

      நீக்கு
  2. செங்கழுநீர் நிகழ்வு இப்போதுதான் அறிகிறேன், நெல்லை

    பாசுரமும் பொருளும் அறிந்து கொண்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஞ்சிபுரத்தில் சங்கர மடம் அருகில்
      செங்கழுநீர் ஓடைத்தெரு
      என்ற பெயரில் நீண்ட தெரு ஒன்று உண்டு.

      நீக்கு
    2. ஓ அப்படியா....நன்றி ஜீவி அண்ணா. சங்கரமடம் சென்றிருக்கிறேன். ஒரே ஒரு முறை. மகாபெரியவர் மௌனவிரதம் இருந்தப்ப.

      கீதா

      நீக்கு
    3. நாங்க எப்போப் போனாலும் சங்கர மடத்தில் தான் சாப்பாடு. அடிக்கடி பெரியவரையும் பார்த்திருக்கோம். ஜெயேந்திரரையும் பார்த்திருக்கோம். இப்போ இருக்கும் விஜயேந்திரரையும் பார்த்திருக்கோம். அநேகமாகக் கலவையில் தான் பெரும்பாலும் மஹா பெரியவர் இருந்தார். அங்கே போயும் பார்த்துட்டு வருவோம். என்ன வேடிக்கைனா இனிய சகோதரர் திரு வாசுதேவன் திருமூர்த்தி மஹா பெரியவரைப் பார்த்ததே இல்லைனு சொன்னார். அது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் பெரியவரின் அணுக்கத் தொண்டரான திரு ரா.கணபதி அவர்கள் முழுக்க முழுக்க மடத்திலேயே பெரியவாளுடன் காலம் கழித்தவர் திரு வாசுதேவனின் அத்தை பிள்ளை. அப்படி இருக்கையில் இவர் பார்க்கலைனா கொஞ்சம் ஆச்சரியமாத் தான் இருந்தது. நானெல்லாம் சின்ன வயசிலேயே இளையாத்தங்குடி சதஸுக்குப் பெரியவங்க கூட்டிப் போகையிலே பார்த்திருக்கேன். அன்னக்கொடி போட்டுச் சாப்பாடு எல்லோருக்கும் போடுவாங்க. -hi-hi, எழுத ஆரம்பிச்சாக் கையும் மனமும் எங்கெங்கெல்லாமோ சஞ்சாரம் செய்யுது. :(

      நீக்கு
    4. அந்த அனுபவங்களை எழுதுங்கள் கீதா சாம்பசிவம் மேடம்.

      நீக்கு
  3. ஒரு தடவை சத்குரு ஞானானந்த ஸ்வாமிகளை தரிசிக்க திருக்கோவிலூரில் உள்ள ஞானானந்த தபோவனத்துக்குச் சென்றார்.//

    யார் சென்றார்கள் என்ற குழப்பம் வருது. கடைசியில் அது ரமணி அண்ணா என்பது தெரிகிறது.

    ஆழ்ந்த மனமும் அன்பும் போதும் எதையும் இறைவனுக்கு சமர்ப்பிக்க.

    ஓ அவர் யோகி ராம்சுரத்குமாரா! திருவண்ணாமலையில் இருந்தவர்ல? நம்ம பாலகுமாரன் அவர்களின் குருவும்.

    இந்த தபோவனம் பற்றித் தெரியும் ஸ்வாமிகளைப் பற்றியும். என் மிக நெருங்கிய உறவினர் இங்கு அடிக்கடி சென்று வந்துள்ளார் ஆனால் உறவினர் இப்போது இல்லை. நாங்கள் பாண்டிச்சேரியில் இருந்தப்ப நாங்களும் அவர்களோடு சென்றிருக்கிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசிறி சாமியாரின் நெருக்கம் ஏற்படவில்லை எனில்
      பாலகுமாரன், பாலகுமாரனாகவே இருந்து தம் எழுத்தில் மேலும் ஜொலித்திருப்பார் என்பது என் சொந்த அபிப்ராயம்
      வரவழித்துக் கொண்ட பக்திகள் என்றுமே சொந்த வளர்ர்சிக்கு இடைஞ்சலானவை.

      நீக்கு
    2. பக்தி என்பதையும் தாண்டி ஆன்மீகம் எனலாம் என்று தோன்றுகிறது. பக்தி என்பது வேறு ஆன்மீகம் என்பது அதற்கும் மேலே.

      உங்கள் வரியை ஏற்பேன். அதாவது அந்த வழி நோக்கிச் செல்லும் போது மனம் எழுதுவதிலிருந்து சற்று விலகி இருக்கும் என்பதைச் சொல்ல முடிகிறது.

      நீங்கள் பார்த்தீங்கனா உளவியலும் தத்துவங்களும் ஒரு புள்ளியில் இணைந்துவிடுகின்றன. அப்ப மனம் உணர்வுகளில் இருந்து சற்று விலகி இருப்பதால் கற்பனைகள் விரிவது குறையும்.

      ஆனால் அதுவும் தவறில்லையே ஜீவி அண்ணா, அது பாலகுமாரன் அவர்களின் தனிப்பட்ட விஷயம். அவர் ஆர்வம் அவருக்கு ஒரு வேளை தான் எழுதியது போதும் என்ற நிலை வந்திருக்கலாம். இந்த ஆன்மீகம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய போது அவர் அதைப் பற்றியும் எழுதினாரே. தன் அனுபவங்கள் என்று, எனவே இவை எல்லாம் ஒரு தனிப்பட்ட மனிதர் சார்ந்த ஒன்று என்று கொள்ளலாம். அவருக்கு மன நிம்மதி தேவைப்பட்டிருக்கும். அவருடைய அனுபவங்களினால்..

      கீதா

      நீக்கு
    3. பக்தி புரிகிறது. பக்தி இறைவன் ஆட்படுதலில் நம்மை ஆழ்த்துவது புரிகிறது.
      ஆன்மீகம் தான் புரியவில்லை.
      அது என்ன ஆன்மீகம்?.. பக்தி என்பதையும் தாண்டியது என்கிறீர்கள்.
      அடியேன் அறிந்திலேன்.

      நீக்கு
    4. ஆன்மீகம் என்பது பாதை பக்தி என்பது உணர்வு. . ஆன்மீகப் பத்திரிகை. பக்தி பண்ணு

      நீக்கு
    5. வரவழைத்துக்கொண்ட பக்தி என்பது தவறான பிரயோகமோ எனத் தோன்றுகிறது ஜீவி சார். கதை நாவல்கள் எழுதி அதிலேயே வாழ்க்கை போகட்டும் என நினைக்காத அவரை குரு ஆட்கொண்டாரோ? அதனால் அவருக்கு தியானம் கைகூடியதோ? யாருக்குத் தெரியும்

      நீக்கு
    6. வரவழைத்துக் கொள்ளவில்லை பாலகுமாரன். அவர் மனம் குருவைத் தேடிண்டே இருந்திருக்கணும். அவருக்கும் தெரியாமல் விசிறி சாமியாரைப் பார்த்ததும் மனம் தானாகக் கனிந்து போயிருக்கு. சொல்லப் போனால் திருவண்ணாமலையில் எத்தனையோ பேர் இருக்கின்றனரே. இவரைப் பார்த்ததும் தான் மனது தேடியது கிடைச்சது என்னும் எண்ணத்திற்கு வந்திருக்கலாம்.

      ஏனெனில் இந்த விஷயத்தில் எங்க அனுபவமும் உண்டு. நாங்களும் எத்தனையோ நபர்களை, சாமியார்களைப் பார்த்திருக்கோம். ஆனால் எங்க ரெண்டு பேருக்குமே காழியூராரைப் பார்த்ததும் தான் இவர் நமக்கு குரு என்னும் எண்ணமே வந்தது. இதை அவரிடம் நானும் என்னிடம் அவரும் சொல்லும்போது தான் இரண்டு பேருக்குமே எங்களோட தேடல் புரிஞ்சது. இதான் பாலகுமாரன் விஷயத்திலும் நடந்திருக்கும். ஆனால் அவர் ஆன்மிகத்தில் முழுகின மாதிரி எனக்கோ/அவருக்கோ நடக்கலை. லௌகிகம் எங்களை இழுத்துக் கொண்டு போயிற்று. அவ்வப்போது நடக்கும் சத்சங்கமே தாராளம் என மனதில் பட்டது.

      நீக்கு
    7. தபோவனம் நாங்க பல வருஷங்களாகப்போக நினைச்ச ஒரு இடம். ஏனோ கிளம்பும்போதெல்லாம் ஏதேனும் தடை வரும். எனக்கு ஞானானந்த கிரி ஸ்வாமிகளைப் பற்றியே சின்ன வயசில் ஸ்ரீ ஹரிதாஸ்கிரி மூலமே தெரிய வந்தது. நாங்கல்லாம் பள்ளியில் படிக்கையிலேயே மதுரைக்கு அடிக்கடி வந்த ஹரிதாஸ் கிரி எங்க தெருவான மேலாவணி மூல வீதியில் ஒண்ணம் நம்பர் வீட்டில் தான் தங்குவார். பாடகர் மதுரை ஜி.எஸ்.மணி அவர்களின் வீடு அது. பஜனை எல்லாம் அமர்க்களப்படும். நாங்க வீட்டில் நடந்த பஜனைகளில் ஜாஸ்தி கலந்துக்கலை. ஆனால் தினம் தினம் ஆடி வீதியில் அவருடைய பக்தவிஜயம் கதா காலட்சேபமும் தினமும் நடக்கும். அதைக்கேட்கப் போவோம். முடியும் நேரம் நடக்கும் பஜனையிலும் கலந்து கொண்டு இருக்கோம். ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுட்டு ஆடி வீதிக்குப் போயிடுவோம். முடியப் பதினோரு மணி ஆயிடும். அப்புறமா வீடு வந்து தூக்கம். ஆனால் காலம்பரவும் வழக்கமான நேரத்துக்கு எழுந்துடுவோம். :))))

      நீக்கு
  4. முக்கியக் காரணம் இந்தக் கிணறுதான் என்று அதீதமாகச் சொல்லியிருக்கிறார்கள். கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் சுவற்றில், அல்லது அணையில் விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு, ஒரு கல் நகரும்போது முழுவதும் உடைந்துவிடும்போது, ஒற்றைக் கல்லால்தான் இந்தப் பிரச்சனை என்று சொல்லமுடியாதில்லையா? //

    இது புரியலையே நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டின் முன்பு இருந்த கிணறுதான் ராமானுஜர் சந்நியாசியாக மாறியதன் காரணம் என படத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி இருக்காது என்பதற்கான விளக்கம். எத்தனையோ அடிகள் கொடுத்து கடைசி அடியில் ஒருவர் இறந்தால் கடைசி அடிதான் இறப்புக்கு காரணம் என்று சொல்வதைப் போன்றது அது. வாங்க கீதா ரங்கன் க்கா.

      காரைக்குடியில் பிரபந்தம் பாராயணம் இப்போ ஆரம்பிக்கப் போகுது. பிறகு வருகிறேன்

      நீக்கு
    2. நெல்லை, படத்தில் உள்ளது புரிந்தது ஓ ரெண்டான்வது படத்தில் இருந்த வரிகள் சட்டென்று கண்ணில் தெரியவில்லை...ஒரு கண்ணுல ஆயின்ட்மென்ட் அடைத்துக் கொண்டு ஒரு கண்ணால் பார்த்ததில்.....

      புரிந்தது. உங்கள் விளக்கம். நம் மனதுள் ஏற்படும் மாற்றத்திற்கு இதைக் காரணம் சொல்வது...நான் விஸ்தரிக்கவில்லை....நேரம் இல்லை இன்றும் ரொம்ப பிஸி..

      கீதா

      நீக்கு
    3. நெல்லை சொல்லி இருப்பது நன்றாகவே புரிகிறது. ஏற்கெனவே மனம் பண்பட்டுவிட்டது. அதுக்கு இந்தக் கிணறு ஒரு சாக்கா?

      நீக்கு
  5. கிருபானந்தவாரியார் கதை நல்லா இருக்கு. அவர் இப்படி நிறைய கதைகள் சொல்லியதுண்டு.

    ஜெ கே அண்ணா தேடிப் பகிர்ந்திருக்கிறார்!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. எபியின் சனிக்கிழமை கதைப் பகிர்வுகள் இப்படியே போனால் நாம் சிறுகதைப் பகிர்வுகளை மறந்தே போய் விடலாம்.
    தொடர்ந்து இப்படியே என்றால் சலிப்பு தான்.மிஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு
  7. தேவராஜப் பெருமாள் என்று சொல்லிப் பழகிய மனசுக்கு
    தேவப்பெருமாள் என்பது ஏதோ இறைவன் நாமத்தை முழுசாக உச்சரில்காமல் வலிந்து குறுக்கிய மாதிரி இருக்கிறது.
    நெல்லை ஏன் இப்படி எழுதுகிறார் என்று தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். பெருமாளை பல பெயர்களில் அழைக்கின்றனர். அந்தப் பெயர்கள் தெரியணும் குழம்பிவிடக் கூடாது என்பதற்காகக் குறிப்பிட்டிருக்கிறேன். காஞ்சியில் பேச்சு வழக்கில் தேப்பெருமா கோயிலுக்குப் போறேன் என்பர்

      நீக்கு
  8. தஞ்சம்மாள் குறித்த இந்தக் கதை (?) கேட்டிருக்கேன். இதன் பின்னரே ராமானுஜர் இல்லறத்தைத் துறந்தார் எனவும் கேள்வி. இன்றைய உச்சிஷ்டம் விளக்கமும், பாசுரமும் அருமை. ரமணி அண்ணாவைப் பற்றி சக்தி விகடனிலோ, குமுதம் பக்தியிலோ வந்து கொண்டிருந்தது. அதில் இதைப் படிச்சிருக்கேன். பாலகுமாரனும் தன் பங்குக்கு ஸ்ரீராம்சூரத்குமாரைப் பற்றி நிறைய எழுதி இருக்கார். பக்தியின் கீழ்நிலையில் இருக்கும் நம்மால் முக்கியமாய் என்னால் ஆன்மிகத்தைப் புரிஞ்சுக்கவோ பிறருக்குச் சொல்லவோ முடியாது. தி/கீதா ஓரளவு முயன்றிருக்கார்.

    இன்றைய கதையும் ஸ்ரீ வாரியார் அவர்களின் சொற்பொழிவில் கேட்டிருக்கேன். அடிக்கடி வாரியாரின் சொற்பொழிவைக் கேட்கும் அதிர்ஷ்டமும் வாய்ச்சிருந்தது. எல்லாம் 1971 வரை தான். பின்னர் இதெல்லாம் முடியலை என்பதோடு நான் இருந்த இடங்களில் எல்லாம் இவங்கல்லாம் வந்து காலட்சேபம் இயற்ற முடியாத சூழ்நிலை. :((( மொத்தத்தில் இன்றைய சனிக்கிழமைப் பதிவுகள் அருமையானவை. இப்படிப் பலரின் கலாட்சேபத்திலிருந்து முக்கியமாக அவர்கள் சொல்லும் கதைகளை எடுத்துப் போடலாம். நிறையப் பேர் இருக்காங்களே!

    பதிலளிநீக்கு
  9. இன்னிக்கு என்னமோ யாருமே வரலை! ஏதேனும் விசேஷமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் காரைக்குடியில் நூற்றாண்டுகள் முடிந்த ஒரு செட்டிநாடு பாரம்பர்ய வீட்டு (பங்களா, அரண்மனை) விழாவில் கலந்து கொண்டு விட்டு இப்போது ஊருக்கு திரும்ப ஆரம்பித்திருக்கிறேன். பலரையும் காணோம். காரணம் தெரியவில்லை

      நீக்கு
    2. திருமண வேலை அலைச்சல்கள், விவாதங்கள், கலந்துரையாடல்கள்...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!