22.7.26

கதாநாயகனாக 75 வயது நடிகர் நடித்தாலும்.. .. சரோஜாதேவி பகுதி 08

 

கேள்வி பதில்கள் :

நெல்லைத்தமிழன்: 

தண்ணீருக்குப் பதில் பெரும்பாலும் பயணங்களில் கோக் போன்றவைகளைச் சாப்பிடுபவர்களுக்கும் டாஸ்மாக் சரக்கு சாப்பிடறவங்களுக்கும் வித்தியாசம் உண்டா? இருவரும் அடிக்ட்தானே? 

# தண்ணீர் சில பயணங்களில் சுத்தமாக இருக்காதோ என்ற ஐயம் வந்தால் இது ஒரு மாற்று.  தினசரி குடிக்க வேண்டும் என்று பறந்தால் அதுவும் தவிர்க்க வேண்டிய அடிக்ஷன்தான்.

& வெறும் தண்ணீர் போதை வஸ்து அல்ல. கோக் பெப்சி பொவோன்டோ சமாச்சாரம் சரியாகத் தெரியலை! போதை வராது என்றே நினைக்கிறேன்!  

இப்போ ஐஸ்வர்யா (உலக அழகியாக பட்டம் பெற்றவர்) வைப் பார்த்தால் பாவமா இருக்கே கன்னம்லாம் தொங்கிப் போய். இப்படி வேறு எந்த எந்த நடிகைகளைப் பற்றி நீங்கள் நினைத்திருக்கிறீர்கள்?

# என் கண்களுக்கு அப்போவும் அவர் பேரழகாகத் தெரியவில்லை.  எனினும் நடிகரின் வயது மூப்பு நம் கண்களை நடிகையர் அளவுக்கு உறுத்துவதில்லைதான்.   அரைக் கிழவர்கள் காலேஜ் மாணவர்களாக நடித்து நம்மை  மூளை மழுங்கச் செய்துவிட்டார்கள்.

பத்மினி வைஜயந்திமாலா இருவரை மட்டுமே அவர்களது 50+ வயதில் பார்த்திருக்கிறேன்.  இருவருமே அதிக பவுடர் கவசமின்றி லட்சணமாக இருந்தார்கள். நான் படத்தில் அழகி என்று பார்த்த அஞ்சலி தேவி நேரில் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவு சாதாரணமாக இருப்பார் என்று உறவினர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

& ஹூம் எதிர்காலத்தில் தமன்னா என்ன ஆவாரோ என்று நினைத்து ஒரே கவலையா இருக்கு! 















கதாநாயகனாக 75 வயது நடிகர் நடித்தாலும் இருபது வயதுப் பெண்ணைத்தான் கதாநாயகியாக ஆக்குகிறார்களே. பெண்களுக்கு 30 வயது ஆகிவிட்டால் என்ன மேக்கப் போட்டாலும் 20 வயதாகக் காண்பிக்க முடியாது என்பதாலா?

# இளம் பெண் கவர்ச்சி, படத்தை ஓரளவு கொண்டு செல்லும் என்ற மூட(?) நம்பிக்கை ஒரு காரணம்.  அண்மையில் தாத்தாக்கள் ஸ்டண்ட் படங்களில் பன்மொழி ஹீரோக்களை குறுக்கே ஓடவிட்டு படத்தை ஓடச் செய்வது போல இதெல்லாம் ஒரு சென்டிமென்ட்.

 வெளிநாடுகளில், திருமணமான பெண் கணவனின் பெயரை சர்நேம் ஆக வைத்துக்கொள்வதில்லை. இந்தியாவில் திருமணமானவுடன் பெண்ணுக்கு கணவனின் சர்நேம் வந்துவிடுகிறது. இது எதனால்? இந்தியாவில் மனைவி, கணவனின் உடைமையாக கருதப்படுவதாலா?

# ஹில்லாரி க்ளிண்ட்டன் மற்றும் பலர் வைத்துக் கொண்டு இருக்கிறார்களே. இதுவும் ஆங்கிலேயரைப் பார்த்து நாம் கற்றுக் கொண்டது.

பெண்களை ஒரு பொருளாகத்தான் இன்றும் பொதுவாக நினைக்கிறோம். ஆனால் வெளியே சொல்வதில்லை.‌

& சமீப காலங்களில் பல பெண்கள் படித்து முடித்து வேலைக்கும் சேரந்தபின்தான் திருமணம் என்பதால், சர்டிபிகேட் புக் தொடங்கி ஆதார் , பான் கார்ட் எல்லாவற்றிலும் பெயர் மாற்றவேண்டி உள்ளது என்பதால், அப்பா பெயரையே சர்நேம் ஆக தொடர்கிறார்கள். 

 ஒரு சங்கடமான கேள்விதான். கானக்குயில் ஜானகி உயிர் மகனைத் தேடிச் சென்றது என்று எஸ்.ஜானகி மறைந்த அன்று யூடியூபில் போட்டிருந்தார்கள். ஒரு பெண்ணுக்கு கணவன் முக்கியமா இல்லை மகன்/மகளா? யார் மேல் அவள் அதீத அன்பு செலுத்துவாள்?   (ஆசிரியர்கள் எல்லோரும் ஆண்கள். எங்களுக்கு என்னா தெரியும் இதைப்பற்றி என்று மாத்திரம் சொல்லாதீர்கள்)

# சங்கடம் ஏதுமில்லை. இது மாதிரி எழுதுபவர்கள் ஏதோ தம் சாமர்த்தியத்தைக் காட்டுவதற்காக எழுதுகிறார்களே தவிர அவர்கள் மனப்பூர்வமாக அப்படியெல்லாம் நினைத்து எழுதுவதில்லை.

எல்லாரும் யார் மேல் பிரியமாக பற்றாக பாசமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நியமங்கள் செய்ய முடியாது. சாத்தியமாக இருக்குமானால் இங்கிருந்து செல்லும் ஆத்மா தனக்குப் பிடித்த பலர்களோடு சேர்ந்து இருக்கும் என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே. 

நம் சாத்திரங்கள் பெண்ணுக்கு கணவன் தான் கண்கண்ட தெய்வம் என்று சொல்லுகின்றன. தன் மனைவியை முற்று முழுதாக கணவன் மட்டுமே பார்த்துக் கொண்டால் கூட ஒரு குறிப்பிட்ட பெண்ணுக்கு அது பொருந்துமா - பொருந்தியாக வேண்டுமா என்பதே சந்தேகம்தான்.

 ஒருவருக்கு யார் மேல் அன்பு அதிகம் இருக்கிறது என்பது பல விஷயங்களைச் சார்ந்திருக்கும் .  இதற்கு எளிதான பதில் இல்லை.

& இவரைப் பொருத்த மட்டில், முதலில் காலமானவர் கணவர். பிறகு பல வருடங்கள் கழித்து காலமானவர் மகன். மகன் காலமான பிறகு இவர் காலமானதால் மகனைத் தேடி அவர் உயிர் சென்றது என்று எழுதுகிறார்கள். கணவர் காலமான ஓரிரு வருடங்களுக்குள் இவர் உயிர் பிரிந்திருந்தால், கணவரின் உயிரைத் தேடிச் சென்றது என்று எழுதியிருப்பார்கள். 

ஒரு பெண்ணுக்கு யார் முக்கியம் கணவனா அல்லது மகன் / மகளா என்று கேட்டால் என் பதில் : மகன். மகன் இல்லை என்றால் மகள். இது என் அனுபவபூர்வமான பதில். 

ஜீவி : 

பிரதமர் மோதி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மத்திய அரசின் கீழிருந்த அரசு நிருவனங்கள் என்னன்ன?

மோதி ஆட்சிக்கு வந்த பின்னர் இப்பொழுதிய நிலையில் மத்திய அரசின் கீழிருக்கும் அரசு நிருவனங்கள் என்னன்ன?

# மூன்று மட்டும் தான்.  எட்டு நிறுவனங்களில் பெரும்பாலான அரசு பங்குகள் விற்கப்பட்டிருக்கின்றன.

& என் பதில் சுருக்கமாக : 

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மத்திய அரசின் கீழிருந்த அரசு நிறுவனங்கள் (முழுப் பட்டியல் மிகவும் நீளமானது)  2014-ல் மட்டும் 290-க்கும் மேற்பட்ட செயல்படும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs) இருந்தன. சில நிறுவனங்கள் மட்டும் கீழே ( விவரங்கள் வேண்டாதவர்கள் கருப்பு நிற எழுத்துகளை கடந்து செல்லவும்) 

பெட்ரோலியம்

  • Indian Oil Corporation (IOC)
  • Bharat Petroleum (BPCL)
  • Hindustan Petroleum (HPCL)
  • ONGC
  • Oil India
  • GAIL
  • Chennai Petroleum
  • Numaligarh Refinery

மின்சாரம்

  • NTPC
  • NHPC
  • Power Grid Corporation
  • NLC India (அப்போது Neyveli Lignite Corporation)

நிலக்கரி

  • Coal India
  • Singareni (மத்திய-மாநில கூட்டு நிறுவனம்)

எஃகு மற்றும் உலோகம்

  • SAIL
  • NMDC
  • Hindustan Copper
  • MOIL
  • NALCO
  • KIOCL
  • Rashtriya Ispat Nigam (Vizag Steel)

பாதுகாப்பு

  • HAL
  • BEL
  • Bharat Dynamics
  • Mazagon Dock
  • Garden Reach Shipbuilders
  • Goa Shipyard
  • Mishra Dhatu Nigam

கனரக தொழில்

  • BHEL
  • BEML
  • HMT
  • HEC

தொலைத்தொடர்பு

  • BSNL
  • MTNL
  • ITI Limited

போக்குவரத்து

  • Air India
  • Pawan Hans
  • Shipping Corporation of India
  • Container Corporation of India
  • IRCON
  • RITES
  • RailTel
  • Konkan Railway

உணவு மற்றும் வேளாண்மை

  • Food Corporation of India
  • Central Warehousing Corporation
  • National Seeds Corporation

வர்த்தகம்

  • MMTC
  • STC
  • PEC 

மோடி ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசின் கீழ் உள்ள உள்ள அரசு நிறுவனங்கள் (2025 ஆம் ஆண்டு மார்ச் 01 கணக்குப்படி) செயல்படும் CPSE-கள் 450-க்கும் மேல் உள்ளன (இவற்றில் துணை நிறுவனங்களும், புதிய பாதுகாப்பு நிறுவனங்களும் அடங்கும்) ஆக, 160+  நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன! 

சில நிறுவனங்கள் விவரம் கீழே: (விவரம் வேண்டாதவர்கள் கடந்து செல்லவும்!) 

2014-க்குப் பிறகு ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள்

பல நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன, சில மூடப்பட்டன, சில ஒன்றிணைக்கப்பட்டன, சில புதிதாக உருவாக்கப்பட்டன.

தனியார்மயமாக்கப்பட்டவை

  • Air India → Tata Group (2022)
  • Neelachal Ispat Nigam
  • Hindustan Zinc (மத்திய அரசின் கட்டுப்பாடு முன்பே குறைந்தது)
  • BALCO (ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்டிருந்தது)

ஒன்றிணைக்கப்பட்டவை

  • பல எண்ணெய் நிறுவனங்களில் துணை நிறுவனங்கள் இணைக்கப்பட்டன.
  • Ordnance Factory Board கலைக்கப்பட்டு புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

புதிதாக உருவான பாதுகாப்பு நிறுவனங்கள்

  • Munitions India Ltd.
  • Armoured Vehicles Nigam Ltd.
  • Advanced Weapons & Equipment India Ltd.
  • Yantra India Ltd.
  • Troop Comforts Ltd.
  • India Optel Ltd.
  • Gliders India Ltd. 

= = = = = = = =

படமும் பதமும் : 

இன்று ஒரு முக்கியமான தகவல் - படமும் பதமும் மூலமாக அளித்தருப்பவர் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன். அவர் அனுப்பியுள்ள இந்தத் தகவல் மிகவும் பயனுள்ள புதிய தகவல். பாவனா சார்பில் (!) அவருக்கு நன்றி. 

சென்ற புதனன்று நான், எ.பி. பதிவு ஆடியோவாக வருகிறது என்பதை பற்றி கேட்டிருந்தேன், வேறு யாருக்கும் அந்த அனுபவம் இல்லையென்று தெரிந்தது. 

அதைப் பற்றி தெரிந்து கொள்ள கொஞ்சம் குடைந்தேன். ரொம்ப சிம்பிள். 

மொபைல் போனில் எ.பி.பைத் திறந்தால், மேலே  வலது ஒரத்தில் மூன்று புள்ளிகள் தெரிகிறதா? அதை அழுத்துங்கள். 


படம் இரண்டில் வருவதைப் பல ஆப்ஷன்கள் வரும், அதில் 'listen to this page' என்பதை தொட்டால் அத்தனை கவர்ச்சியாக இல்லாத பெண் குரல் அந்த பக்கத்தை படிக்கிறது. உச்சரிப்பு  சுமார்தான்.


நெல்லைத்தமிழன் : 


பஹ்ரைனில் பல வருடங்கள் வாழ்ந்திருந்தபோதும் எல்லா இடங்களையும் நான் பார்க்கும் சந்தர்ப்பம் இருந்ததில்லை.  என் அப்பாவின் மறைவுக்குப் பிறகு என் அம்மாவை பஹ்ரைனுக்குக் கூட்டிச் சென்றிருந்தேன். (அதுபோல நான்கு ஐந்து முறை என்று நினைவு). அப்போது என் அம்மாவிற்குக் காட்டுவதற்காக, அனேகமா எல்லா இடங்களுக்கும் சென்றேன். அப்போதுதான் நான் பஹ்ரைனை ஓரளவு முழுவதுமாகப் பார்த்தேன்.  பஹ்ரைனில் ஒரு சில கோட்டைகள் உண்டு. அதில் ஒன்று இந்த  அல் ஃபதே கோட்டை.   துபாயில் நான் 94களில் அங்கு அரச குடும்பத்தினர் வசித்த வீட்டைப் பார்த்திருக்கிறேன். அது பிற்காலத்தில் ஊருக்குள்ளேயே நினைவிடமாக மாற்றப்பட்டுவிட்டது. 70களில் மிக மிக சாதாரணமான வாழ்க்கைதான் அரச குடும்பத்திற்கு. பஹ்ரைனிலும் எண்ணெய் வளம் பிரிட்டிஷாரினால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னம் சாதாரண வாழ்க்கைதான். பிறகுதான் அரபு நாடுகள் வெகுவாக முன்னேற ஆரம்பித்துவிட்டன. 


அந்தக் கோட்டையில் சமீபத்தில்தான் அரச குடும்பத்தினரின் கல்லறை இருக்கிறது.  எவ்வளவு பெரியவராக இருந்தாலும் ஆறுக்கு மூன்றடி கல்லறைதான். அதில் இன்னார் என்ற மார்க்கிங்கே இருக்காது. இறந்த அன்றே வெகு சீக்கிரமாக புதைத்துவிட்டு அடுத்த அரசர் பதவி ஏற்றுக்கொள்வார்.  கல்லறைகளின் முன்பு நான் எடுத்துக்கொண்ட புகைப்படம். என் குடும்பத்தினரோடு இந்த இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். (ஆமாம் அப்போ இரண்டு ஆள் சைஸுக்கு இருக்கிறேனே என்று நினைக்கிறீர்களா?  எடை கான்ஷியஸ்னஸ் எனக்கு எப்போதுமே இருந்தது என்றாலும் கலோரி, அதன் தாக்கம் என்று ஒன்றைப்பற்றியும் எனக்கு அப்போது தெளிவு இல்லை. இந்தப் புகைப்படம் எடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கன் மிஷன் ஹாஸ்பிடலுக்கு ஒரு தடவை சென்றிருந்தபோது-சும்மா..பொழுதுபோகாமல்..அதைப்பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன், என் எடை 97 கிலோ என்று காண்பித்தவுடன் அதிர்ச்சி ஆகிவிட்டது. அதன் பிறகு வி.எல்.சி.சி. என்ற எடை குறைப்பு நிறுவனத்தில் நிறைய செலவழித்து எடை குறைத்து, பிறகு எடை கான்ஷியஸ் ஆக ஆகிவிட்டேன். 2010லிருந்து இன்று வரை என்னுடைய அதிகபட்ச எடை 84க்குப் போயிருக்கிறது.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை

முன்கதை சுருக்: 

பகுதி 01 :  பாபா ஒரு துப்பறியும் நிறுவனத்தில் private detective ஆக வேலையில் சேர்கிறான். நாநா என்பவரிடமிருந்து appointment கேட்டு - சந்திக்க நேரம் கேட்டு வாட்ஸ் ஆப் செய்தி வருகிறது. பாபா சம்மதிக்கின்றான். 

பகுதி 02 :  நாநா வருகிறான். சரோஜா மெமரி கார்ட் பற்றி விளக்குகிறான். பாபாவின் ஜாதகம் கேட்கிறான். பாபா உள்ளே சென்று ஜாதகம் கொண்டுவருகிறான். 

பகுதி 03 :  நாநா பாபாவிற்கான சரோஜா மெமரி கார்ட் உருவாக்கி, அதை இயக்கி ஒரு ஜோதிட முன் நிகழ்வை சொல்கிறான். 

பகுதி 04 : நாநா சொன்னபடியே பாபாவின் நெற்றியில் இரத்தக் காயம் ஏற்படுகிறது. 

பகுதி 05 : நாநா, பாபாவின் நெற்றிக்கு பெரிய கட்டுப் போட்டு, எதிர் வீட்டு விமலாவின் கடைக்கண் பார்வை பெற யோசனை சொல்கிறான். தெருவில் கூடிய கலாட்டா கும்பலை போலீஸ் வேன் ஏற்றிச் செல்கிறது 

பகுதி 06 : பாவனா நீ எந்திரி! நானாவின் வீட்டிற்கு வரும் பாபாவை வரவேற்பது, பாவனா என்னும் கம்ப்யூட்டர் பிம்பம். அதுதான் நானாவின் அந்தரங்கக் காரியதரிசி. பாவனாவால் படிக்க முடியும், கேட்க முடியும், கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், யோசனைகள் சொல்லவும் முடியும். 

பகுதி 07 : அறுஷ்கா & தமெனா !! 😄பாவனா வைத்த குறும்புப் பெயர்கள். நாநாவும் பாபாவும் ஹோட்டல் சென்று டிஃபன் சாப்பிட்டு வந்தபின் நாநா ச தே மெ கார்ட் உபயோகித்து அருவ நிலை அடைவது எப்படி என்று காட்டுகிறான். 

இனி 

பகுதி 08 : நானே நாநா, யாரோதானா ! 

நாநா அருவம் ஆனதைப் பார்த்த பாபாவிற்கு முதலில் பயம் ஏற்பட்டது. 
" ஏய் நாநா எங்கே இருக்கே? " என்று நடுங்கும் குரலில் கேட்டான். 

பாவனா சிரித்துக் கொண்டே " பாஸ் சீக்கிரமா உங்க உருவத்துக்கு திரும்பி வாங்க. பாபா ரொம்ப பயப்படறாரு" என்றது. 

நாநா அருவமாகவே இருந்தபடி " பாபா, இப்போ நான் உன் பக்கத்தில் வருகிறேன். எப்படி உணர்கிறாய்?" என்று கேட்டான். 

பாபா சற்றுத் தெளிந்தவனாக பக்கத்தில் ஏதோ ஒரு பனிப்புயல் வீசுவது போல ஜில் என்று இருக்கிறது" என்றான். 

" இதே உணர்வு இதற்கு முன் ஏற்பட்டது உண்டா?" என்று கேட்டான் நாநா. 

யோசித்துப் பார்த்த பாபா, " ஆமாம். நான் அன்று ப்ரைவேட் டிடெக்டிவ் ஆக பதிவு செய்து கொண்டு வெளியே வந்தபோது இதே உணர்வு ஏற்பட்டது " என்றான். (பகுதி 01) 


" கரெக்ட். அன்றைக்கு நான் அந்த அலுவலகத்தில் அருவமாக இருந்தேன். அதனால்தான் நீ அங்கு கொடுத்த விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். என் விவரங்கள் எப்படித் தெரியும் என்று நீ கேட்டதற்கு பதில் பிறகு சொல்கிறேன் என்று சொன்னேன் இல்லியா? இதுதான் பதில். " 

" சரி சரி . சீக்கிரமாக உன் உருவத்திற்கு திரும்பி வா. வெற்றிடத்தைப் பார்த்து பேசுவதற்கு ஒரு மாதிரியாக இருக்கு" என்றான் பாபா. 

நாநா தன் கையில் கட்டியிருந்த இருந்த கருவியில் வைப்ரேட் பொத்தானை அமுக்கி உருவத்திற்கு திரும்பி வந்தான்.

பாபா அவனிடம், " சரி இது பற்றி நிறைய சந்தேகக் கேள்விகள் கேட்கிறேன். பதில் சொல் " என்றான். 

கே : ஒருநாள் முழுவதும் இப்படி அருவமாக இருக்க முடியுமா? 

ப: முடியாது. கருவியில் உள்ள பாட்டரி ஒரு தடவை சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் மட்டுமே டி வைப்ரேட் செய்யும். அந்த நேரம் முடிந்ததும் பவர் ஆஃப் ஆகி சுய உருவம் திரும்ப வந்து விடும். அதற்குப் பின் அதை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். 

கே : டிவைப்ரேட் செய்யும்போது நாம் போட்டிருக்கும் உடைகளும் சேர்ந்து எப்படி காணாமல் போகிறது? 

ப: ஆரம்பத்தில் சரோஜா கார்டு பொருத்தி வைப்ரேஷன் பார்க்கிறோம். அப்போதே நம் அடிப்படை அதிர்வு எண் சேமிக்கப் படுகிறது. அப்போதும் அதற்குப் பின் எப்போதும் கருவியை பயன்படுத்தும்போது X + dx அல்லது X - dx என்ற அளவில் மாற்றம் இருந்தால் அது பெரிய மாற்றம் கிடையாது. உதாரணமாக உன் எடை 60 கிலோ என்றால் எடையில் ஐந்து சதவிகிதம் மாற்றம் வந்தாலும் டிவைப்ரேட்டர் தொடர்ந்து வேலை செய்யும். நான் இப்போ உருமாறி இருந்த நேரத்தில் உன் முகத்தில் தெரிந்த பயத்தை என் மொபைலில் படம் எடுத்தேன். 

கே: சரி. ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். தப்பா எடுத்துக்காதே. நான் அருவமாக மாறி யார் வீட்டு பாத்ரூமிலாவது போய் அங்கே குளிப்பவர்களை என் மொபைலில் வீடியோ எடுத்தால் என்ன ஆகும்? 

ப: நீ உடனடியாக ஜெயிலுக்குப் போக வேண்டியதாகிவிடும். இந்த டிவைப்ரேட்டர் கருவி மீது கொஞ்சம் தண்ணீர் பட்டாலும் அல்லது ஈரமான தரையில் நீ 10 நொடிகள் நின்றாலும் உன் அடிப்படை அதிர்வு எண் erratic ஆக மாறும். டிவைப்ரேட்டர் வேலை செய்யாமல் ஆஃப் ஆகிவிடும். உடனே சுய உருவம் வந்துவிடும். 

கே : அப்போ இந்தக் கருவியால் வேறு என்ன பயன்கள்? 

ப: உதாரணமாக சில சொல்கிறேன்.
1) குற்றவாளி என்று சந்தேகிக்கப்படுபவர்களை கண்காணிக்க
2) நேரடியாக கேட்டால் பதில் கொடுக்காதவர்களின் விவரங்களைத் தெரிந்து கொள்ள 
3) ஒரு சிலரை நம் வழிக்குக் கொண்டு வர சில தகவல்கள் திரட்ட
4) ஒரு சிலரின் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்த வகையில் எவ்வளவோ செய்யலாம். 

பாபா: " நடந்தவைகளையும், நீ சொன்ன விவரங்களையும் சேர்த்துப் பார்த்தால் இதில் ஒரு திரில் இருப்பது தெரிகிறது. எனக்கும் ஒரு ச தே மெ கார்ட் தயார் செய். என்ன கட்டணம்? " 

நாநா: " பிஸினஸ் பார்ட்னர் என்பதால் உனக்கு ஃப்ரீ. மற்றவர்களுக்கு இந்தக் கருவியின் விலை ஒரு லட்சம். " 

பாபாவுக்கு ஒரு SDMC தயார் செய்தான் நாநா.‌

***** 
நாநாவின் கைப்பேசி ஒலித்தது.‌

நாநா: " டேய் ஆனந்த்! எப்படி இருக்கே? " 
" .. " 

" ஆமாம். வீணா என் பிசினஸ் பார்ட்னர் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கிறாள். அமெரிக்க மாப்பிள்ளைதான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறாளாம் " 

" .. ..  " 

" ஆஹா! வெரிகுட் - உன்னுடைய அம்மா அப்பா இருவருக்கும் செய்தி அனுப்பி சீக்கிரமா வந்து வீணாவின் அப்பாவிடமும் வீணாவிடமும் பேசச் சொல்கிறேன். பை" 

" அமெரிக்கா நண்பன் ஆனந்த், தனக்கு வீணாவைப் பிடித்திருப்பதாக சொன்னான்" என்றான் நாநா. 

பாபா: " ஆனந்த் அப்பா அம்மா எந்த ஊரில் இருக்கிறார்கள்? " 

நாநா: " கோயம்புத்தூரில் இருக்கிறார்கள். அங்கே வீடு நிலம் என்று சொத்துகள் இருப்பதால் அதை விட்டு எங்கும் வரமாட்டார்களாம்." 

பாவனா : " அப்போ வீணாவுக்கு சரியான மாப்பிள்ளைதான் ஆனந்த் ! அமெரிக்க மாப்பிள்ளை, Microsoft வேலை, மாமனார் & மாமியார், நாத்தனார் தொந்தரவு எதுவும் இருக்காது!"  

பாபா: " சரி இவ்வளவு விஷயம் சொல்லிட்டே. நாநா உன் அம்மா அப்பா எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? " 

(தொடரும்) 

30 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2014 முன்னான காலகட்டத்தில் பாரதமாதாவிற்கு அணிகலனாய் தேசத்தி ற்கு சொந்தமாக இருந்த பொதுத்துறை நிருவனங்கள்,
      அதற்கு பின்னான காலகட்டத்தில் தமியாருக்கு சொந்தமான நிருவனங்கள் இவற்றைப் பற்றிய விவரங்களை சேகரித்து பட்டியலிட்டுத்
      தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்கு மிக்க நன்றி, கேஜிஜி ஸார்

      நீக்கு
    2. தனியாருக்கு சொந்தமான -- என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
    3. நிருவனங்கள் என்பதையும் நிறுவனங்கள் என்று வாசிக்க வேண்டுகிறோம்...  ஹிஹிஹி...    குட் ஈவினிங் ஜீவி ஸார்!

      நீக்கு
    4. பாரதமாதாவிற்கு அணிகலனாயிருந்த -- ரசிக்கவில்லையா ஸ்ரீராம்?

      நீக்கு
    5. எங்களுக்கு இப்பொழுது இரவு 09.10.

      நீக்கு
    6. ரசித்தேன் ஜீவி ஸார். Good Night!

      நீக்கு
    7. // 2014 முன்னான காலகட்டத்தில் பாரதமாதாவிற்கு அணிகலனாயிருந்த// பழைய மாடல் நகைகளை விற்று, புது மாடல் நகைகள் வாங்குவது இந்தக் காலத்து இல்லத்தரசிகள் செய்வதுதானே! 2014 ஆம் ஆண்டிற்கு முன்பு 290 பொதுத்துறை நிறுவனங்கள் - தற்போது 450+ பொதுத்துறை நிறுவனங்கள் - இதை நீங்கள் ரசிக்கவில்லையா ஜீவி சார்?

      நீக்கு

    8. //2014 முன்னான காலகட்டத்தில் பாரதமாதாவிற்கு அணிகலனாய் தேசத்தி ற்கு சொந்தமாக இருந்த பொதுத்துறை நிருவனங்கள்,//

      //(2025 ஆம் ஆண்டு மார்ச் 01 கணக்குப்படி) செயல்படும் CPSE-கள் 450-க்கும் மேல் உள்ளன (இவற்றில் துணை நிறுவனங்களும், புதிய பாதுகாப்பு நிறுவனங்களும் அடங்கும்) ஆக, 160+ நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன! //

      நீக்கு
  3. இந்த வாரம் கேள்விகள் குறைவு தான்.

    //எ.பி. பதிவு ஆடியதாக வருகிறது என்பதை// என்னது பதிவு ஆடியதாக வருகிறதா என்று சற்றே குழப்பம் வந்தது. தொடர்ந்து படித்ததில் புரிந்தது அது ஆடியோவாக என்று புரிந்து கொண்டேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////எ.பி. பதிவு ஆடியதாக வருகிறது என்பதை// ஹி ஹி! இப்போதுதான் கவனிக்கிறேன். இந்த ஆட்டோ கரெக்ஷன் படுத்தும் பாடு இருக்கிறதே.. சரியாக நாம் அடிப்பதை தப்பாக மாற்றி விட்டு, ஆட்டோ கரெக்ஷனாம். correction என்பதையே தப்பாக அடிக்கிறது. கர்ர்ர்ர்!

      நீக்கு
    2. லேட் ஆனாலும் லேடஸ்ட் ஆக திருத்திவிட்டேன்!

      நீக்கு
  4. நெல்லை பகிர்ந்திருக்கும் பஹ்ரைன் கோட்டையைப் பார்த்ததும் ஓமானில் நிஸ்வா(Nizwa) என்னும் இடத்தில் இருக்கும் கோட்டையின் படம்தான் பகிர்ந்திருக்கிறாரோ என்று நினைத்தேன். இப்படியேதான் இருக்கும். அதன் டெரஸில் ஓமானி ஹல்வா கிளறுவதற்கு கேரள கோவில்களில் இருக்கும் உருளி போன்ற பெரிய உருளிகள் இருந்தன.

    பதிலளிநீக்கு
  5. ஒரு பெண்ணுக்கு கணவன் முக்கியம்தான், ஆனால் அதீத அன்பு குழந்தைகளிடம்தான் என்பதில் இரண்டாவது கருத்து இருக்காது. மகாபாரதத்தில் ஒரு கிளைக் கதையில்,"குழந்தைகள் பெற்ற பெண் கணவனை மதிக்க மாட்டாள்" என்பது நீதியாக சொல்லப்பட்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. நான் கர்நாடகா யாத்திரை சென்றபொழுது, அந்த டூர் கண்டக்டர், அவ்வப்பொழுது கதைகள் சொல்லி, எங்களிடம் கேள்விகள் கேட்டார். ஒரு முறை சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் சொக்கட்டான் ஆடினார்கள், அதற்கு நடுவர் பார்வதி. போட்டி ட்ராவில் முடியும் போல் இருந்தது. யார் ஜெயித்தது என்று பார்வதிதான் தீர்ப்பு கூற வேண்டும்.." இந்த இடத்தில் அவர் நிறுத்தி விட்டு, "உங்கள் கணவரும், சகோதரருக்கும் போட்டி வந்து, நீங்கள்தான் தீர்ப்பு கூற வேண்டும் என்றால் யாருக்கு சார்பாக தீர்ப்பு கூறுவீர்கள்?" என்று கேட்டார். பஸ்ஸில் இருந்த பெண்கள் அணைவரும், "அண்ணா(ஸகோதரர்) சார்பாகத்தான் சொல்லுவோம்" என்றோம். உடனே அந்த கைட், "நானும் இந்தக் கேள்வியை ஒரு ஐநூறு பெண்களிடம் கேட்டிருப்பேன், இதுவரை எல்லாப் பெண்களுமே, சகோதரன் சார்பாகத்தான் பேசுவோம் என்கிறார்கள். என்றைக்காவது, யாராவது ஒரு பெண் கணவன் சார்பாக பேசுவேன் என்று சொல்கிறாளா என்று பார்க்க வேண்டும்" என்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ! சகோதரர் என்பதுதான் சற்று வித்தியாசமாக உள்ளது! கல்யாணம் ஆன புதிது என்றால் - குழந்தைகள் இன்னும் பிறக்கவில்லை என்றால் ஓ கே.

      நீக்கு
  7. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது கொஞ்சம் சோகம்தான். ஆனால் நஷ்டத்தில் இயக்கி மேலும் மேலும் அரசின் பளுவை அதிகரிப்பது சரியா என்றும் கேள்வி வருகிறது. கொரோனா காலத்தில் மிகக்கடுமையான பொருளாதார சிக்கலை சந்தித்தோம். கஜானா அலமோஸ்ட் காலி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை விற்றுதான் தீர வேண்டும் என்ற நிலை. பசியைத் தீர்க்க வீட்டில் இருக்கும் பொருள்களை விற்க வேண்டிய நிர்பந்தம் வருவது போன்ற சூழல்.

    பதிலளிநீக்கு
  8. கதாநாயகனாக 75 வயதிலும்

    அந்தக் கொடுமைகள் முடிந்து விட்டனவா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே ! அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என்று கூப்பிட்ட மீனா ஜோடியாக நடித்து அடுத்து ரஜினிக்கு அம்மாவாக நடிக்கும்வரை முடியாது. நிழல் நிஜமாகிறது படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த சுமித்ரா, சிங்காரவேலன் படத்தில் கமலுக்கு அம்மாவாக நடிக்கவில்லையா!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!