29.8.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் பகுதி 35 --- நான் படிச்ச கதை - JKC

 

 நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 35 

திருவரங்கத்தில் வைணவ ஆச்சார்யார்கள் அனைவரும் இருந்து வைணவத்தை திருவரங்கத்தைத் தலைமைப் பீடமாகக் கொண்டு வளர்த்தனர் என்று சென்ற வாரம் பார்த்தோம். 

அரங்க விமானத்தின் கதை நீங்கள் அறிந்ததுதான். பிரம்ம தேவர் திருமாலை வழிபட்டு அரங்கநாதர் சயனித்திருக்கும் விமானத்தை அவரிடமிருந்து பெற்று தன்னுடைய சத்யலோகத்துக்குக் கொண்டு சென்றார். அங்கு அவர் தினமும் வழிபட்டுவந்தார். சூரியனின் புதல்வரான மனு, தாம் அந்த விமானத்தை வழிபட விரும்பி, அதற்காக சத்ய லோகம் செல்லத் தவம் செய்தார். தவத்தின் பயனாக சத்ய லோகம் சென்று அங்கு விமானத்தைக் கண்டு வழிபட்டார். அதன்பிறகு பூவுலகம் திரும்பினார். 

அரங்க விமானத்தைத் தான் பெறுவதற்காக திருமாலை நோக்கி, மனுவின் புதல்வரான இஷ்வாகு தவம் மேற்கொண்டார். தவத்தின் பயனாக, திருமால் பிரம்மனிடம், தன் விமானத்தை இஷ்வாகுவிடம் கொடுக்கச் சொல்ல, இஷ்வாகு மன்னர் அதனைப் பெற்று அயோத்திக்குக் கொண்டுசென்றார். அவருக்குப் பின்னர் அவர் வம்ச வழி வந்த தசரதர் அதனை வழிபட்டார். இராவணன் வதத்திற்குப் பிறகு அயோத்திக்கு வந்த விபீஷணரிடம் அரங்க விமானத்தை இராமர் அளித்தார்.  அரங்க விமானத்தைத் தலைமேல் தாங்கி விபீஷணர் இலங்கை நோக்கிச் சென்றார். 

விபீஷணர், இலங்கை செல்லும் வழியில், காவிரி ஆற்றின் நடுவிலிருந்த தீவில் சந்திரபுஷ்கரணி கரையில் விமானத்தை வைத்துவிட்டு, காவிரி ஆற்றில் நீராடச் சென்றார். அரங்க விமானம் வந்திருப்பதை அறிந்த அந்த நாட்டு மன்னர் தருமவர்ம சோழனும் மற்ற முனிவர்களும் அங்கு வந்தனர். அவர்கள் விருப்பத்திற்கேற்ப அந்த நாள் பூசையையும் மறுநாள் பிரம்மோத்ஸவத்தையும் விபீஷணர் நடத்தினார். பிறகு அரங்கநாதர் சயனித்திருந்த அந்த விமானத்தை விபீடணர் எடுக்க முயன்றபோது அவரால் இயலவில்லை. அரங்கநாதன் அவரிடம், தாம் அங்கேயே எழுந்தருள விரும்புவதாகவும், விபீஷணருக்கு நலம் செய்யும் வகையில் தெற்கு நோக்கிப் பள்ளிகொண்ட நிலையில் இருப்பதாகவும் சொல்ல, விமானத்தை அங்கேயே விட்டுவிட்டு தன்னுடைய நாட்டை நோக்கிச் சென்றான் விபீஷணன்.  (இந்த வரலாற்றுக்கான ஆதாரங்கள் வால்மீகி இராமாயண ஸ்லோகங்கள்)

அரங்கவிமானம் (இது அரங்கன் துயில் கொள்ளும் கருவறையின் பின்புறத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்.)

அரங்க விமானத்தின் முன்புறத்தில் தெரியும் பரவாசுதேவர்

தருமவர்மர் இந்த விமானத்தைச் சுற்றி சிறிய கோயிலை அமைத்தார். காலப்போக்கில் இந்தக் கோயில் மண்ணில் புதையுண்டது. தர்மவர்மர் மரபில் வந்த இன்னொரு சோழ மன்னன் இந்தப் பகுதிக்கு வந்தபோது கிளி ஒன்றின் மூலமாக இந்தக் கோயிலை அகழ்ந்தெடுத்து கருவறையைச் சுற்றிலும் ஒரு சிறிய கோட்டையை அமைத்தான். (சுற்றுச் சுவரை). இந்த மன்னன் சங்க காலத்தைச் சேர்ந்த கிள்ளி வளவன், உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ அரசை ஆண்டவன் என்கிறார்கள். கிளியின் மூலம் கோயிலைக் கண்டுபிடித்து ஒழுங்கு செய்ததால் இவனைக் கிளிச் சோழன் என்றும் குறிப்பிடுகிறார்கள். கிளி, சோழனிடம் கோயில் இருப்பதைச் சொன்ன இடத்தில் தற்போது கிளி மண்டபம் அமைந்துள்ளது. 

இவனுடைய மகன் புகழோடு ஆட்சி செய்த மன்னர் நந்தச் சோழ மன்னன். இவனுக்கு குழந்தை கிடையாது. ஒரு நாள் அல்லிக் குளத்தில் தாமரை மலரில் ஒரு குழந்தை கிடக்க, அதனை எடுத்து தன் அரண்மனைக்குக் கொண்டு சென்று, “கமலவல்லி” என்ற பெயரை இட்டு வளர்த்தான். தக்க பருவம் வந்த போது, அவள், அரங்க நாதருக்கான திருவுலா நிகழ்வைக் கண்டு மெய்மறந்து அரங்கனின் ஒளியுருவில் கலந்துவிட்டாள் என வரலாறு தெரிவிக்கிறது.  இதன் நினைவு காரணமாக நந்தச் சோழ மன்னன் உறையூரில் கமல நாச்சியார் உடனுறை அழகிய மணவாளப் பெருமாளுக்கு ஒரு கோயில் அமைத்தான். இது இப்போதும் இருக்கும் வைணவ திவ்யதேசமாகும்.

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில்

கமலவல்லி நாச்சியார், அழகிய மணவாளன்

நாம் அரங்கநாதர் கோயிலுக்கு வருவோம். இந்தக் கோயிலின் தல விருட்சம் புன்னை மரம். சந்திரபுஷ்கரணி அருகில் அமைந்துள்ளது. தாயார் சன்னிதியின் வலது புறம் மேடையின் மீது இருக்கும் வில்வ மரத்தை நீங்கள் தரிசித்திருக்கலாம். கோயில்பற்றி எழுதும்போது படங்கள் பகிர்கிறேன். 

வைணவக் கோயில்களுக்கும் எல்லைக் காவல் தெய்வங்கள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? திருவரங்கத்தில் நாற்புறங்களிலும் செல்லாயி அம்மன், காமாட்சி, காஞ்சி ஆயி, காளி முதலியோர் எல்லைக் காவல் தெய்வங்களாக உள்ளனர். தெற்கில் உள்ள பெரிய கோபுரத்தில் நுழைந்தால் முனியப்பர் காவல் தெய்வமாக உள்ளார். அவருக்கு ஒரு சன்னிதி உண்டு. 

அரங்கன் கோயிலில் ஏராளமான சன்னிதிகள் உண்டு (சிறு கோயில்கள்). அந்தக் கோயில்கள் ஒவ்வொரு காலத்திலும் கட்டப்பெற்றவை. அதனைப் பற்றியும் நாம் இங்கு சுருக்கமாகக் காண்போம். தெய்வ சன்னிதிகளில் வேறுபாடுகள் கிடையாது. இருந்தாலும், ஒரு கோயிலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சன்னிதிகளை விட்டுவிடக் கூடாது. 

பதிவில் திருவரங்கம் கோயிலை விட்டுக் கொஞ்சம் விலகிச் செல்வதற்கு மன்னிக்கணும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைணவ திவ்யதேசம் என்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இங்கு ஆழ்வார் ஆச்சார்யார்களுக்கு சன்னிதிகள் இருந்தாலும், இந்தக் கோயிலின் சிறப்பு, இங்கு இருக்கும் ஐந்து பெருமாள் சன்னிதிகளும் ஆழ்வாரினால் பாடப்பெற்றது என்பது. பார்த்தசாரதி, கஜேந்திர வரதர், நரசிம்மர், இராமர் மற்றும் மன்னாதர் (அரங்கநாதர்) என ஐந்து சன்னிதிப் பெருமாளையும் ஆழ்வார் பாடியிருக்கிறார். இந்தக் கோயிலுக்கு இரண்டு த்வஜஸ்தம்பங்கள் உண்டு. வேங்கடகிருஷ்ணர் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்கு ஒரு த்வஜஸ்தம்பமும், அதற்குப் பின்னால் எழுந்தருளியிருக்கும் தெள்ளியசிங்கர் (நரசிம்மர்) கோயிலுக்கு ஒரு த்வஜஸ்தம்பமும் உண்டு. இன்றையக்கு திருவல்லிக்கேணி பாசுரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மனதில் தோன்றிவிட்டது. 

இன்றைய பாசுரம் திருமங்கையாழ்வார் இயற்றிய பெரிய திருமொழியில் இரண்டாம் பத்து மூன்றாம் திருமொழியான ‘விற்பெரு விழவும்’ என்று தொடங்கும் திருமொழி. அதில் முதல் பாசுரம், 

##விற்பெரு விழவும், கஞ்சனும் மல்லும் *

         வேழமும், பாகனும் வீழ*

செற்றவன்-தன்னை,  புரம் எரி செய்த*  

        சிவன் உறு துயர் களை தேவை*

பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு*  

        பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை*

சிற்றவை பணியால் முடி துறந்தானை*  

        திருவல்லிக்கேணிக் கண்டேனே 

பொருள்: கம்சன் ஏற்பாடு செய்திருந்த வில் விளையாட்டு விழாவையும், கம்சனையும், அவனது மல்லர்களையும், குவலயாபீடம் என்ற யானையையும் அதனைச் செலுத்திய பாகனையும் நிலத்தில் வீழ்த்தி அழித்தவரை, திரிபுரம் எரித்த சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிய இறைவனையும், பகைவர்களான கௌரவர்கள் அழியும்படி சாட்டையைக் கையில் பிடித்து, அர்ஜுன னின் தேருக்கு முன்பாக தேரோட்டியாக நின்றவனையும், சிற்றன்னையான கைகேயி இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு, தனக்குக் கிடைக்கவிருந்த அரியணையைத் துறந்து காட்டுக்குச் சென்றவனையும் அந்தத் திருவல்லிக்கேணி என்ற திருத்தலத்தில் நான் தரிசனம் செய்யப்பெற்றேன் என்கிறார் திருமங்கை ஆழ்வார். 

கண்ணனின் அவதாரச் செயல்கள், சிவபெருமானின் துயர் தீர்த்தமை, அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தமை மற்றும் அரியணையை விலக்கிய இராமனின் ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற தன்மை ஆகிய அனைத்து அவதார குணங்களையும் ஒருங்கே கொண்டவரான பார்த்தசாரதி பெருமாளை (ஸ்ரீ வேங்கடகிருஷ்ணரை) திருவல்லிக்கேணியில் தரிசித்தேன் என்கிறார். 

விளக்கம்: கஞ்சன் – கம்சன், புரம் எரி செய்த – திரிபுரத்தை சிவபெருமான் எரித்த சம்பவம், பற்றலர் – பகைவர்கள், தேர் முன் நின்றானை – சாரதியாக அமர்ந்துதான் தேரைச் செலுத்த வேண்டும். இங்கு ஏன் நின்றான் என்று ஆழ்வார் கூறுகிறார்? அர்ஜுனன் தன் கையில் உள்ள காண்டீபம் என்னும் வில்லைக் கீழே போட்டுவிட்டு தேரில் அமர்ந்தவனை, கிருஷ்ணர் நின்றுகொண்டு கீதையை உபதேசம் செய்ததை இங்கு குறிப்பிடுகிறார். சிற்றவை பணி – சிறிய அன்னையின் கட்டளை. கைகேயி, இராமனை அரியணையைத் துறந்து காட்டுக்குச் செல் என்று கூறியது

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில்

மூலவர் வேங்கடகிருஷ்ணன். உற்சவர் பார்த்தசாரதி. 

நூற்றுக்கும் மேற்பட்ட பிரபந்த கோஷ்டியினர் தமிழ் மறையைச் சேவிப்பது திருவல்லிக்கேணிக்கே உண்டான சிறப்பு. (சமீபத்தில் எடுத்த படம்) 

இனி திருவரங்கம் கோயில்.  தெற்குக் கோபுரத்தில் முனியப்பர் சன்னிதி இருக்கிறது என்று சொன்னேன் (காவல் தெய்வம்). அதனைத் தாண்டி ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னிதி அமைந்திருக்கிறது. கோபுரத்தைத் தாண்டினால், திருக்குறளப்பன் சன்னிதி அமைந்துள்ளது. 

திருக்குறளப்பர் (வாமனர்) சன்னிதி மிகவும் பழைமையானது. ஒரு காலத்தில் இது சந்தியாமடம் என்ற பெயரில் இருந்ததாகவும், ஒரு காலத்தில் நம்மாழ்வார் திருவுருவம் மதுரகவியாழ்வாரால் திருவரங்கத்துக்குக் கொண்டுவரப்பட்ட போது, இந்த மடத்தில்தான் நம்மாழ்வார் திருவுருவத்தை வைத்திருந்தார்கள் என்பது செவிவழிச் செய்தி. இதனால் இங்கு நம்மாழ்வார் மற்றும் மதுரகவியாழ்வார் திருவுருவங்கள் நல்ல நிலையில் உள்ளன. இந்தக் கோயிலின் வெளிப்புறத்தில் வைணவ ஆச்சார்யரான தாத தேசிகர் மற்றும் அவருடைய துணைவி ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. 

தெற்குக் கோபுரத்தின் கீழே இருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் முனியப்பர் சன்னிதி. இவற்றிர்க்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் சன்னிதி அமைந்துள்ளது.

தெற்குக் கோபுரத்தைக் கடந்த உடன் வரும் திருக்குறளப்பர் சன்னிதி (முன்பு சந்தியாமடம்) நாங்கள் சென்றபோது நடை சாத்திவிட்டார்கள். அடுத்த முறைதான் சேவிக்கணும். 

பெரியாழ்வாரின் தவப்புதல்வி ஆண்டாள், அரங்கநாதனையே மனதில் வரித்திருந்தாள். திருவரங்கர் பெரியாழ்வாரின் கனவில் கூறியதற்கேற்ப, ஆண்டாளை மூடுபல்லக்கில் பெரியாழ்வார், திருவரங்கத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்தார். அப்போது ஆண்டாள் தங்கியது, தற்போது வெளி ஆண்டாள் கோயில் என்று அழைக்கப்படும் இடமாகும். அதன் பிறகே பெரியாழ்வார் அவளை அரங்கநாதர் சன்னிதிக்கு அழைத்துச் சென்றார். 

திருவரங்கம் கோயிலின் ஏழாவது பிராகாரம் வெளிச்சுற்றில் அடையவளைஞ்சான் வீதி உள்ளது. இது நான்கு திசைகளிலும் பரந்திருந்தாலும், தற்போது தெற்கு அடையவளைஞ்சான் வீதி சாத்தாரத் தெரு என்று அழைக்கப்படுகிறது. உட்சுற்று சித்திரை வீதி என்று அழைக்கப்படுகிறது. ஆறாம் பிரகார நுழைவாயிலில் தாமோதர கிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது.  

ஆறாவது பிராகாரம் உத்தரவீதி (உள்துறை வீதி என்று இராமானுஜர் காலத்தில் பெயர் பெற்றது. கோயில் உள் அலுவலர்கள் இந்த வீதியில் இருந்த வீடுகளில்/மடங்களில்தான் தங்கினார்கள்). தெற்கு உத்தர வீதியில் தென்கிழக்கில் ஸ்வாமி மணவாள மாமுனிகள் மடம் அமைந்துள்ளது. இது வடக்கு பார்த்து இருக்கிறது (நான் எழுதுவது, தெற்கு பெரிய கோபுரத்திலிருந்து நாம் நுழைவதிலிருந்து ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அதற்கு ஏற்றவாறு திசைகளை கற்பனை செய்துகொள்ள வேண்டும். உதாரணமாக மணவாள மாமுனிகள் மடம் நம் வலப்புறத்தில் இருக்கும்) 1370ல் பிறந்த மணவாள மாமுனிகள், 1400களில் இங்கிருந்துதான் தமிழ் மறைகளைப் பரப்பினார், திருவரங்கம் கோயிலுக்கு கைங்கர்யங்கள் செய்தார். அவரது வரலாறு கடைசியில் வரும். தென்கலை சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இவர்தான் ‘பெரிய ஆச்சார்யார்’ (பெரிய ஜீயர்) 

மணவாள மாமுனிகள் கோயிலில் (முன்பு மடம்) அரங்கநாதர் உற்சவத் திருவுருவம் உபய நாச்சியார்களுடன் உள்ளது. கோயில் கருவறையில், மணவாள மாமுனிகள் சாய்ந்திருந்த தூணில் இவரது திருவுருவம் சித்திர வடிவில் உள்ளது. இவரது பொற்பாதுகை (அதாவது பொன் தகடுகளைப் பிற்காலத்தில் இவரது பாதுகையின் மீது பதித்திருக்கிறார்கள்) இந்தக் கோயிலில் இருக்கிறது. இந்தத் தடவை நாங்கள் உள்ளே சென்றோம். பல விஷயங்கள் தெரிந்துகொண்டோம். அங்கிருந்தவர் ஸ்வாமியின் பொற்பாதுகையை எங்கள் சிரஸில் வைத்தார். 

பாண்டிய நாட்டில் பிறந்த இவர், திருவரங்கத்தில் சுமார் 22 ஆண்டுகள் வாழ்ந்தார். இவரது வரலாறு, வைணவ சம்ப்ரதாயத்திற்காக இவர் ஆற்றிய தொண்டுகள், பல்வேறு இடங்களுக்குச் சென்றது எல்லாமே அவர் வரலாறு எழுதும்போது எழுதுவேன்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஸன்னிதி – தெற்கு உத்தர வீதி

தெற்கு உத்தரவீதியில் உள்ள கோபுரம்தான் ‘ரங்கா ரங்கா ரங்கா’ கோபுரம். 

இனி திருவரங்கம் கோயில் பற்றி அடுத்த வாரம் தொடர்வோம்...

==============================================================================

நான் படிச்ச கதை - JKC

விகாசம்

 கதையாசிரியர்: சுந்தர ராமசாமி

 

கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)

சுந்தர ராமசாமி (1931-2007) பிரபலமான  நாஞ்சில் நாடு எழுத்தாளர். பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவிதாம்கூர் ராஜ்யத்தில் என்பதால் பள்ளிக்கல்வியை மலையாளத்தில் தான் படிக்க நேர்ந்தது. ஆனாலும் முயன்று தமிழ் எழுதப் படிக்கக் கற்று தமிழில் சொல்லாடல் முறையில் கதைகள் எழுதும் திறமை அடைந்தவர். ‘காலச்சுவடு’ நிறுவனர். ‘காகங்கள்’ என்ற இலக்கிய எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர். 

இவருடைய சிறந்த படைப்புகள் ‘ஒரு புளிய மரத்தின் கதை’, ‘ ஜே ஜே சில குறிப்புகள்’.  மேலும் இவரைப் பற்றிய விவரங்களை தமிழ் விக்கியின்

சுந்தர-ராமசாமி  யில் காணலாம்.

முன்னுரை

றிவு என்பது இரண்டொழிய வேறில்லை யாதெனின் 

படிப்பால்  கிடைப்பது படிப்பறிவு, செயலால் வருவது பட்டறிவு

இரண்டும் பெற்றோர் தரணியில் புகழுடன் திகழ்வர் என்பது உறுதி 

ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு தனித்திறமை உண்டு. இந்த திறமை வழி வழியாக அல்லது பட்டறிவாக பெறப்படுகிறது.

மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று ஆசிரியர்கள் பிள்ளைகளை திட்டுவதை கேட்டிருக்கலாம். மேய்பதிற்கும்  திறமை வேண்டும். திறமை பட்டறிவால் தான் கிடைக்கும். அது போன்ற ஒரு படிப்பறிவில்லாத பட்டறிவு மட்டும் உள்ளவரின் திறமையைக் கூறும் கதை இது.

மாற்றம் ஒன்றே மாறாதது. முன்னேற்றம் என்பதே காலப்போக்கில் இடம் பொருள் சூழல் மாறுவதைத் தான்  குறிப்பிடுகிறது. காலங்கள் மாறும் தோறும் திறமைகளும் மாற வேண்டி உள்ளது, இம்மாற்றம் ஒவ்வொரு துறையிலும் காண முடியும். உங்களுக்கு பரிச்சயமான கணினித் துறையிலேயே மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். Analytical engine, Accounting machines, Valve Behomoths, Transistor mainframes, IC in chips third generation mainframes. PC, Laptop என்று மாறுதல்கள் பலவும் பெற்று இன்று gpu chip based AI data centers என்று வளர்ந்து நிற்கிறது. நானும் Facit mechanical calculator, accounting machine, mainframe, client server, blade server  என்று படிப்படியாக பட்டறிவை வளர்த்து ஒய்வு பெற்றவன் தான். 

பழைய தலைமுறையை சேர்ந்த ஒருவர் மனக்கணக்கில் சிறந்து விளங்கி துணிக் கடையில் உதவியாளராக இருக்கிறார். // மனக்கணக்கில் ஒரு மின்னல் பொறி அவர்.//  ஆனால் ஒரு கால்குலேட்டர்  அவருடைய ஆற்றலை மழுங்கடிக்கிறது. அப்புறம் அவர் என்ன ஆனார்? கதையின் முடிவைப் பாருங்கள். 

‘சுந்தர ராமசாமியின் தந்தை நாகர்கோயிலில் துணிக்கடை ஒன்றை உறவினர் உதவியுடன் தொடங்கி நடத்தினார். அது பின்னர் சுதர்சன் துணிக்கடை என்னும் பெயர் பெற்றது. தந்தை இருக்கையிலேயே சுந்தர ராமசாமி அந்த துணிக்கடைக்குப் பொறுப்பேற்று வெற்றிகரமாக அதை நடத்தினார்.’

இந்த அனுபவம் தான் இக்கதை என்று எனக்கு தோன்றுகிறது. 

கதை அசோகமித்திரன் எழுதியது போல் உள்ளது என்பது எனது கருத்து. 

கதை situkathaigal.com இலிருந்து பெறப்பட்டது.

விகாசம்

 சுந்தர ராமசாமி 

அம்மா கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். நான் கட்டிலை ஒட்டிக் கீழே படுத்துக் கொண்டிருந்தேன். பிந்தி எழுந்திருப்பதை நானும் அம்மாவும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம். நாங்கள் சிறிது போராடிப் பெற்றிருந்த உரிமை இது. சூரியோதயத்திற்கு முன் குளியலை முடித்து விடும் தர்மத்தை யுகாந்திரங்களாகக் காப்பாற்றி வரும் குடும்பம். நாங்களோ நோயாளிகள். அம்மாவுக்கு ஆஸ்துமா. எனக்கு மூட்டுவலி. இரண்டுமே காலை உபாதைகள் கொண்டவை.

குதிரை பிடரியை உதறும் மணிச்சத்தம் கேட்டது. வண்டியைப் பூட்டியாயிற்று. அப்படி என்றால் அப்பா கடைச் சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டுவிட்டார் என்று அர்த்தம். கடிகாரம் எட்டரையை நெருங்கிவிட்டது என்றும் அர்த்தம். இனி செருப்பு அணிதல். கிரீச் கிரீச். படி இறங்கியதும் குடையைப் படக்கென்று ஒரு தடவை திறந்து மூடல். குடையின் அன்றாட ஆரோக்கிய சோதனை அது.

கதவு லேசாகத் திறந்தது. இடைவெளியில் பாய்ந்த சூரிய ஒளி கண்ணாடிக்குழாய் போல் உருப்பெற்று உயர்ந்தது. ஒளித்தூணில் தூசி சுழல்கிறது. அப்பா! கண்ணா, ஒரு கண், பாதி விபூதிப் பூச்சு, சந்தனப்பொட்டு, அதற்குமேல் குங்குமப்பொட்டு.

“டேய் அம்பி, எழுந்திரு” என்றார் அப்பா.

நான் கண்களை மூடிக்கொண்டேன். ஆழ்ந்த நித்திரைக்கு வசப்பட்டுவிட்டதுபோல் அசையாமல் கிடந்தேன்.

“டேய் எழுந்திருடா தடியா. அப்பா கூப்பிடறார்” என்றாள் அம்மா.

ஓரக்கண்ணால் அப்பா முகத்தைப் பார்த்தேன். அது அன்பாக இருந்தது. மிருதுவாக இருந்தது. கடுமையான தூக்கத்தைத் தகர்த்துக் கொண்டு வெளிப்படும் பாவனையில் கண்களைத் திறந்தேன்.

”டேய், குளிச்சு சாப்பிட்டுட்டு ஆனைப்பாலம் போ” என்றார் அப்பா. “போய் ராவுத்தரைக் கையோட கடைக்குக் கூட்டிக்கொண்டு வந்துடு. நான் போய் வண்டி அனுப்பறேன்” என்றார்.

நான் அப்பா முகத்தையும் அம்மா முகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன். கடையில் முன் தினம் ராவுத்தருக்கும் அப்பாவுக்கும் நடந்த மோதலைப்பற்றி அம்மாவிடம் சொல்லியிருந்தேன். “அவர் இல்லாம உங்களுக்கு முடியுமா முடியாதா?” என்று கேட்டாள் அம்மா. “எத்தனை வருஷமாச்சு இந்தக் கூத்து” என்றாள். “விலகறதும் சேத்துக்கறதும்” என்றாள்.

அப்பாவின் முகம் சிவந்தது. மேலும் சிவந்தால் மூக்கு நுனியில் ரத்தம் கசிந்துவிடும் என்று தோன்றிற்று.

“ஓணம் வர்றது… நீ கடைக்கு வந்து பில்போடு” என்றார் அப்பா. கோபத்தின் உக்கிரத்தில் உதடுகள் கோணி வலித்துக் காட்டுவதுபோல் வார்த்தைகள் தேய்ந்தன.

“இந்த லோகத்திலே ராவுத்தர் ஒருத்தர்தான் பில்போடத் தெரிஞ்சவரா?” என்றாள் அம்மா.

”வாயை மூடு” என்று கத்தினார் அப்பா. சடேரேன்று என்னைப் பார்க்கத் திரும்பிக்கொண்டே, “எழுந்திருடா” என்று ஒரு அதட்டல் போட்டார். நான் படக்கென்று எழுந்திருந்து வில் மாதிரி நின்றேன். “போ, நான் சொன்ன மாதிரி செய்” என்றார். என் காலில் கட்டியிருக்கும் சக்கரத்தை யாரோ இழுத்ததுபோல் வேகமாக வெளியே நகர்ந்தேன்.

குதிரைவண்டி கிளம்பும் சத்தம் வாசலில் கேட்டது.

காலைக் காரியங்களைப் பம்பரமாகச் செய்து முடித்தேன். என்ன சுறுசுறுப்பு! வழக்கத்திற்கு மாறாக அரை நிஜாருக்குமேல் வேட்டியைக் கட்டி, முழுக்கைச் சட்டையும் அணிந்து கொண்டேன். இரண்டும் சேர்ந்து சற்றுத் தெம்பாக என்னைப் பேசவைக்கும் என்று ஒரு நம்பிக்கை. அப்பாமீது வழக்கமாக வரும் கோபம் அன்று வரவில்லை. வருத்தமும் இல்லை. கொஞ்சம் பிரியம்கூட கசிவது போல் இருந்தது. பாவம், ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டுவிட்டார். முன்கோபத்தில் முறித்துப் பேசிவிட்டார் ராவுத்தரிடம். சிறிது சாந்தம் கொண்டிருக்கலாமே என்று சொல்லலாம். அவர் ஒரு முன்கோபி என்றால் சிறிது சாந்தம் கொண்டிருக்கலாம். முன்கோபமே அவர் என்றால் எப்படி சாந்தம் கொள்ள முடியும்? இந்த மனப்பின்னல் தந்த குதூகலத்தில், அம்மா முன் சென்று அவள் முகத்தைப் பார்த்து, “முன் கோபமே அவர் என்றால் எப்படி சாந்தம் கொள்ள முடியும்?” என்று கேட்டேன். அம்மா சிரித்தாள். மறுகணம் சடக்கென்று முகத்தைக் கடுமையாக்கிக்கொண்டு, “ரொம்ப இலட்சணம்தான். புத்தியுள்ள பிள்ளை என்றால் ராவுத்தரைக் கூட்டிக் கொண்டு கடைக்குப் போ” என்றாள். தன்நெஞ்சின் மீது வலது கையை வைத்துக்கொண்டு “அவர் என்ன பேசியிருந்தாலும் அதற்காக நான் வருத்தப்படறேன்னு சொல்லு” என்றாள்.

நான் போய் குதிரைவண்டியில் ஏறிக்கொண்டேன்.

ஓணம் விற்பனையை ராவுத்தர் இல்லாமல் சமாளிக்க முடியாது என்றுதான் எனக்கும் தோன்றிற்று. அவர் மாதிரி யாரால் கணக்குப் போடமுடியும்? மனக்கணக்கில் ஒரு மின்னல் பொறி அவர். அவரும் சரி, வரிசையாக ஐந்து பேர் உட்கார்ந்து காகிதத்தில் கூட்டிக் கழிப்பதும் சரி. மனித மூளையா அது! அமானுஷ்யம். பில்போடும் பகுதியில் கூடிநிற்கும் வாடிக்கையாளர்கள் பார்த்து வியக்கும் அமானுஷ்யம். ஆச்சரியத்தில் விக்கித்துப் போய் “மனுஷ ஜென்மம்தானா இது!” என்று பலர் வாய்விட்டு கேட்டிருக்கிறார்கள். “காதாலே கேட்டே இப்படி போடுறாரே மனுஷன்; கண்ணால் பார்க்க முடிஞ்சா எப்படிப் போடுவாரோ?” என்று கேட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் ஸ்கூல் படிப்பு மூணாம் கிளாஸ். கடையைப் பெருக்கிப் பாய் விரித்து தண்ணீர் வைக்கும் கோமதியை விட வருஷம் படிப்புக் குறைவு.

அன்று இதமாகத்தான் பேச்சுத் தொடங்கிற்று. “கடனை இப்படி மேலே ஏத்திண்டே போனா எப்படி ராவுத்தர்? தொகை ஏகமா ஏறிப்போச்சே” என்றார் அப்பா. தனக்கு வேண்டிய துணிகளையெல்லாம் பொறுக்கித் தன்பக்கத்தில் குவித்து வைத்துக்கொண்டுவிட்டு அதன்பின் கடன் கேட்டது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றிற்று. “என்னச் செய்யச் சொல்றீங்க ஐயா? வீடு முழுக்க பொட்டைக. மகன்க கூறில்லே. மாப்பிள்ளைக கூறில்லே. மக நாலு. மருமக நாலு. பேத்திக எட்டு. பேரன்க எட்டு. எத்தனை ஆச்சு? ஆளுக்கொண்ணு எடுத்தாலும் தொகை ஏறிப் போகுதே” என்றார் ராவுத்தர். ராவுத்தரின் முகத்தை அப்பா கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ‘இளக்காரம் கொஞ்சம் கூடிப்போச்சு. அத மட்டுப்படுத்திக் காட்டறேன் இப்போ’ என்று அவர் தனக்குள் கறுவிக்கொள்வதுபோல் இருந்தது. “கோலப்பா, துணிக்கு பில் போட்டுக் கட்டித் தந்துரு” என்றார் ராவுத்தர். தான் சம்மதம் தருவதற்குமுன் அவரே எடுத்துக் கொண்டு விடுவதா? அப்பாவின் முகம் சிவந்தது. “இந்தத் தவா கடன் தர சந்தர்ப்பம் இல்லை” என்றார் அப்பா. குரலில் கடுமை ஏறி இருந்தது. “அப்படீன்னா நம்ம உறவு வேண்டாம்னுதானே ஜையா சொல்றீங்க? குட்டீ, என்னெ ஊட்ல கொண்டுபோய் சேர்த்துடு” என்று சொல்லிக்கொண்டே எழுந்திருந்தார் ராவுத்தர். கோமதி, ராவுத்தரின் வலது கையைத் தனது இடது தோளில் தூக்கி வைத்துக்கொண்டது. படி இறங்கிற்று. ராவுத்தரும் படியிறங்கினார். கடை சாத்தும்போது ஒவ்வொரு நாளும் ‘வரேன் ஐயா’ என்று அப்பா இருக்கும் திசையைப் பார்த்து ராவுத்தர் கும்பிடுவது வழக்கம். அன்று அவர் விடை பெற்றுக் கொள்ளவில்லை. அதாவது விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.

கோமதியைக் கூட்டிக்கொண்டு ராவுத்தர் வீட்டுக்குப் போகலாம் என்று நான் யோசித்தேன். அப்படிச்  செய்தால் ராவுத்தர் மனதில் இருக்கும் வெக்கை சற்றுத் தணியும் என்று எனக்குத் தோன்றிற்று. ஆனால் கோமதி வீட்டில் இல்லை. “ராவுத்தர் வரலேன்னு சொல்லிட்டாரு. இப்பத்தான் போகுது கோமதி கடைக்கு” என்றாள் அவள் தாயார்.

தோப்பைக் குறுக்காகத் தாண்டி, சந்து வழியாக நுழைந்து, ராவுத்தரின் வீட்டு முன்னால் போய் நின்றேன். ஓட்டு வீடு. தணிந்த கூரை. முன் முற்றத்தில் வலதுபக்கம் கிணறு. காரைப் பூச்சு இல்லாத கைப்பிடிச் சுவர் இடிந்து கிடந்தது. சுவரிலும் கிணற்றைச்சுற்றித் தளத்திலும் வெல்வெட் பாசி புசுபுசு வென்று. வீட்டின் முன் வெட்டுக் கல் படிகள். நிலையில் சாக்கு விரிப்புத் தொங்கிக் கொண்டிருந்தது.

“அம்பி வந்திருக்கேன்” என்றேன் நான் உரக்க.

ஒரு சிறுமி வெளிப்பட்டாள். இரட்டையில் மற்றொன்று என்று தோன்றிய இன்னொரு சிறுமியும் அவள் பின்னால் வந்தாள். உள்ளேயிருந்து “யாரம்மா?” என்று ராவுத்தரின் குரல் கேட்டது.

“நான்தான் அம்பி” என்றேன்.

“வா, வா” என்றார் ராவுத்தர். உற்சாகத்தில் கொப்பளிக்கும் குரல்.

நான் படுதாவைத் தள்ளிக்கொண்டே உள்ளே போனேன். சாணி மெழுகிய தரையில் வஸ்தாத் மாதிரி ராவுத்தர் சப்பணம் கூட்டி உட்கார்ந்து கொண்டிருந்தார். இரு கரங்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தன. “வா, வா” என்று வாய் அரற்றிக்கொண்டே இருந்தது. நான் அவர் முன்னால் போய் முட்டுக்குத்தி நின்றேன். துழாவிய கரங்கள் என் மீது பட்டன. கண்கள் மலங்க மலங்க விழித்தன. என்றோ இழந்து விட்ட ஜீவ ஒளியை மீண்டும் வரவழைக்க அவை துடிப்பதுபோல் இருந்தன. என் தோள்பட்டையை அழுத்தி என்னைத் தன்பக்கத்தில் இழுத்து உட்கார வைத்துக்கொண்டார் அவர். உணர்ச்சி வசப்பட்டதில் அதிகம் நெகிழ்ந்துவிட்டது போல் இருந்தது.

“இன்னிக்கு என்ன, வேட்டி கட்டிக்கிட்டாப்ல!” என்றார்.

“தோணிச்சு” என்றேன்.

“என்ன கரை?”

“குண்டஞ்சி.”

“ஐயர் மாதிரியே. பாக்கவும் ஐயர் மாதிரியே இருக்கேன்னு கடைப்பையன்க சொல்வானுக. எனக்குத்தான் கொடுத்து வைக்கல பாக்க.” இப்படிச் சொல்லிவிட்டு என் கன்னம், கழுத்தும், நாடி, வாய், மூக்கு, கண், நெற்றி, காது எல்லாம் தடவிப் பார்த்தார். “எல்லாம் கணக்கா வச்சிருக்கான்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

வந்த விஷயத்தைச் சொல்ல இதுதான் சந்தர்ப்பம் என்று தோன்றிற்று. ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஒரு கை மென்னியைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. நாக்கு புரள மறுக்கிறது.

“அம்மா…” என்று பேச்சைத் தொடங்கினேன்.

ராவுத்தர் குறுக்கிட்டு, “எப்படி இருக்கு அவங்களுக்கு உடம்பு?” என்றார்.

”அப்படியேதான்” என்றேன்.

”நம்மட்ட தூதுவளை கண்டங்கத்திரி லேகியம் இருக்கு. இழுப்புக்கு அதுக்கு மேலே மருந்து இல்லே. ஐயருக்கு புட்டி மேலே இங்கிலீஷ்ல எழுதியிருக்கணும். நம்மகிட்ட இங்கிலீஷ் இல்லே. மருந்துதான் இருக்கு” என்று சொல்லி விட்டுப் பெரிதாகச் சிரித்தார்.

விஷயத்தைச் சொல்ல இதுவும் நல்ல தருணம்.

“அம்மா உங்களைக் கடைக்குக் கூட்டிண்டு போகச் சொன்னா. அப்பா ஏதாவது முன்பின்னா பேசியிருந்தாலும் அதுக்காக அம்மா வருத்தப்படறதாகச் சொல்லச் சொன்னா. தப்பா எடுத்துக்கப்படாதாம். தட்டப்படாதுன்னும் சொன்னா” என்றேன்.

ராவுத்தரின் முகம் பரவசத்தில் மலர்ந்தது. இரு கரங்களையும் மேலே உயர்த்தி, “தாயே நீ பெரிய மனுஷி” என்று கூவினார். “எழுந்திரு, இப்பவே போறோம் கடைக்கு” என்றார்.

அந்த வருடம் ஓணம் விற்பனை நன்றாக இருந்தது. படு உற்சாகமாக இருந்தார் ராவுத்தர். தன்னைச் சுற்றி முண்டி மோதும் கடைப் பையன்களை எப்போதும்போல் அனாயாசமாகச் சமாளித்தார். அபிமன்யு தன்னந்தனியாகப் போரிட்டது போல் இருந்தது. துணியின் அளவும் விலையும் காதில் விழுந்த மறுகணம் விடை சொல்கிறது வாய். என்ன பொறி மூளைக்குள் இருந்ததோ அந்த தெய்வத்துக்குத்தான் வெளிச்சம். விடை சொல்ல ஒரு கணம்கூடத் தேவையில்லாத அந்தப் பொறி என்ன பொறியோ? பதினாறு அயிட்டங்களுக்குப் பெருக்கி வரிசையாக விடை சொல்லி விட்டு, “அயிட்டம் பதினாறு, கூட்டுத்தொகை ரூபா 1414, பைசா 25” என்று கூறும் அந்தப் பொறியை மனித மூளை என்று எப்படிச் சொல்ல முடியும்? அவ்வளவும் கரும்பலகையில் எழுதிப்போட்டிருந்தால்கூடப் பார்த்துக்கூட்ட எனக்கு அரை மணி நேரம் பிடிக்கும். இங்கோ விடை மின்னல் அடிக்கிறது. ஒரு பிசகு விழுந்ததில்லை அன்று வரையிலும். 

அம்மா சொல்லியிருந்தாள். முன்னெல்லாம் அப்பா இரவில் கண் விழித்து ராவுத்தரின் விடைகளைச் சரி பார்ப்பாராம். “துள்ளல் கொஞ்சம் கூடிப்போச்சு அந்த மனுஷனுக்கு. ரெண்டு தப்பைக் கண்டுபிடிச்சு ஒரு தட்டுத் தட்டி வைக்கணும்” என்பாராம். ஆனால், இரவில் கண் விழித்ததுதான் மிச்சம். ஒரு தவறைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை அப்பாவால்.

ஒரு நாள் ஓர் ஒற்றைக்காளை வண்டி கடை முன்னால் வந்து நின்றது. முன்னும் பின்னும் வெள்ளைப் படுதா போட்டு மூடிக் கட்டிய வண்டி. வண்டிக்குள் இருந்து ‘ஓ’வென்று பெண்களின் ஓலம். குஞ்சு குளுவான்களின் கத்தல்கள்.

“நம்ம வூட்டுப் பொட்டைப் பட்டாளம் இல்லா வந்திருக்கு” என்றார் ராவுத்தர்.

ராவுத்தரின் வீடு ஏலத்திற்கு வந்து விட்டதாம்! சாமான்களைத் தூக்கி வெளியே வீசுகிறானாம் அமீனா.

“எனக்கு என்ன செய்யணும்னு தெரியலியே, ஆண்டவ” என்று கதறினார் ராவுத்தர்.

குழந்தை மாதிரி அழத் தொடங்கி விட்டார். அப்படி அவர் அழுது கொண்டிருந்தபோது, கடைச் சிப்பந்தி கோலப்பன் பில்லுடன் வந்து, “13 ரூபா 45 பைசா; 45 மீட்டர் 70 சென்டி மீட்டர்” என்றான். அழுகையை நிறுத்தி விட்டு “எழுதிக்கோ, 614 ரூபா 66 பைசா” என்றார் ராவுத்தர். இப்படிச் சொல்லிவிட்டு அப்பா இருந்த கல்லாப் பெட்டி பக்கம் திரும்பி, “ஐயா, வட்டியும் முதலுமா ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் கோர்ட்டிலே கட்டணுமே…. நான் எங்கே போவேன் பணத்துக்கு” என்று கதறினார்.

ராவுத்தரும் அப்பாவும் குதிரைவண்டியில் வக்கீலைப் பார்க்கச்  சென்றார்கள்.

அடுத்த நாள் ராவுத்தர் கடைக்கு வரவில்லை. செட்டியார் ஜவுளிக்கடையில் அவர் பில் சொல்லிக் கொண்டிருப்பதைத் தன் கண்ணால் கண்டதாகக் கோலப்பன் அப்பாவிடம் சொன்னான்.

“என்ன அநியாயம்! இப்பத்தானே அவருக்காக கோர்ட்ல பணத்தைக் கட்டிட்டு வரேன். காலை வாரிவிட்டுட்டாரே நன்றி கெட்ட மனுஷன்” என்று கத்தினார் அப்பா.

கடைக் கோலப்பனுக்கு மிதமிஞ்சிய கோபம் வந்துவிட்டது. “கணக்குப் போடத் தெரியுமே தவிர, அறிவுகெட்ட ஜென்மமில்லே அது” என்றான். “இதோ போய்த் தரதரன்னு இளுத்துக்கிட்டு வாறேன்” என்று சைக்கிளில் ஏறிச் சென்றான்.

அப்பா சோர்ந்து தரையில் உட்கார்ந்து விட்டார். அவர் வாய் புலம்பத் தொடங்கிவிட்டது. “ரொம்பப் பொல்லாதது இந்த லோகம்” என்றார். “பெத்த தாயை நம்ப முடியாது இந்தக் காலத்திலே” என்றார்.

சிறிது நேரத்தில் கோலப்பன் திரும்பிவந்தான். சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் ராவுத்தர்!

ராவுத்தரைக் கல்லா முன்னால் கொண்டுவந்து நிறுத்தினான் கோலப்பான்.

“புத்தி மோசம் போயிட்டேன் ஐயா” என்றார் ராவுத்தர் இரு கைகளையும் கூப்பியபடி.

“உம்ம கொட்டம் அடங்கற காலம் வரும்” என்று அப்பா கத்தினார்.

“அப்படிச் சொல்லாதீங்க ஐயா…. வேலைக்கு வா, நான் பணம் கட்டறேன்னு சொன்னார் செட்டியார். புத்தி மோசம் போயிட்டேன் ஐயா” என்றார் ராவுத்தர்.

“உம்ம கொட்டம் அடங்கற காலம் வரும்” என்று மீண்டும் சொன்னார் அப்பா.

ஆச்சரியம்தான், அப்பாவின் வாக்குப் பலித்ததுபோல் காரியம் நடந்தது. அந்தத் தடவை கொள்முதலுக்கு பம்பாய் போய்விட்டு வந்திருந்த அப்பா, ஒரு சிறு மிஷினை அம்மாவிடம் காட்டினார். “இது கணக்குப் போடும்” என்றார்.

“மிஷினா?”

“போடும்” என்றார் அப்பா.

அம்மா ஒரு கணக்குச் சொன்னாள். அப்பா பித்தான்களை அழுத்தினார். மிஷின் விடை சொல்லிற்று.

நான் காகிதத்தை எடுத்துப் பெருக்கிப் பார்த்தேன். “விடை சரிதான் அம்மா” என்று கத்தினேன்.

ராவுத்தர் மூளையை மிஷினா பண்ணிட்டானா?” என்று கேட்டாள் அம்மா.

நான் அன்று பூராவும் அதை வைத்து அளைந்து கொண்டே இருந்தேன். இரவு தூங்கும்போது கூட பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கினேன். ஆகக் கஷ்டமான கணக்குகளை எல்லாம் அதற்குப் போட்டேன். ஒவ்வொன்றுக்கும் விடை சரியாகச் சொல்லிற்று அது. கோமதி சொன்னது நினைவுக்கு வந்தது. ‘தாத்தா எப்படி நிமிட்ல போடறீங்க கணக்கை?’ என்று கேட்டதாம் கோமதி. ‘மூளையில் மூணு நரம்பு அதிகப்படியாக இருக்கு’ என்றாராம் ராவுத்தர். அந்த அதிகப்படியான நரம்புகள் எப்படி இந்த மிஷினுக்குள் வந்தன? ஆச்சரியத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோமதியிடம் கொண்டுபோய்க் காட்டினேன். கோமதியும் மாறிமாறிக் கணக்குப் போட்டுப் பார்த்தது. “எனக்கும் சரியா வருதே” என்றது. “தாத்தாவை விட இது பொல்லாதது” என்றது.

ஒருநாள் மாலை. ராவுத்தர் விடை சொல்லிக் கொண்டிருந்த நேரம். கோமதி பாவாடையின்மீது கால்குலேட்டரை வைத்து விடைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தது. தன்னையறியாமல் ஒரு தடவை “சரிதான் தாத்தா” என்றது. “நீயா சொல்றது சரின்னு?” என்று கேட்டார் ராவுத்தர். “கணக்குப் போட்டுத்தான் சொல்றேன் தாத்தா” என்றது கோமதி. “இப்போ போடறேன் சொல்லு” என்று ராவுத்தர் ஒரு கணக்குப் போட்டார். கோமதி விடை சொல்லிற்று. இன்னொரு கணக்கு. அதற்கும் விடை சொல்லிற்று.

வெளிறிப் போய்விட்டது ராவுத்தர் முகம்!

“ஆண்டவனே, இந்த மூட ஜென்மத்துக்கு ஒரு சூச்சுமமும் விளங்கலியே” என்று கதறினார் ராவுத்தர்.

“நான் போடலே தாத்தா. இந்த மிஷின் போடுது” என்றது கோமதி. கால்குலேட்டரைத் தாத்தாவின் கையில் திணித்தது.

கால்குலேட்டரை வாங்கிய தாத்தாவின் கை நடுங்கிற்று. விரல்கள் பதறின. அதை முன்னும் பின்னும் தடவிப் பார்த்தார். “இதா கணக்குப் போடுது?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார். “ஆமா” என்றது கோமதி. “நீயே வச்சுக்கோ” என்று அதைத் திருப்பிக் கொடுத்தார்.

அதன்பின் அன்று ராவுத்தரால் பேசமுடியவில்லை. அவருக்கு வாயைக் கெட்டிவிட்டது. உடலசைவுகூட இல்லை. ஸ்தம்பித்துப் போய் சுவரில் சாய்ந்து கொண்டிருந்தார். அன்று நானும் கோமதியும் தான் மாறிமாறி பில் போட்டோம். நீண்ட நேரம் கழித்து தாத்தாவின் தொடையை நோண்டி, “ஏன் தாத்தா பேசமாட்டேங்குறீங்க?” என்றது கோமதி. அதற்கும் அவர் பதில் சொல்லவில்லை.

நடைப்பிணம் போல் ஒவ்வொரு நாளும்  ராவுத்தர் கடைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். சிரிப்பு, சந்தோஷம், இடக்கு, கிண்டல், குத்தல் எல்லாம் அவரைவிட்டு உதிர்ந்து போய் விட்டிருந்தன. குரல் இறங்கிப் போய்விட்டது. உடம்புகூட சற்று இளைத்ததுபோல் இருந்தது.

அப்பா அவரை பில் போடச் சொல்லவே இல்லை.

ஒருநாள் பிற்பகல் நேரம். கடை கலகலப்பாக இருந்தது. முருகன் வெட்டியிருந்த துணிகளுக்கு நான் கணக்குப் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தேன். நடுவில் “இந்தாப்பா நில்லு” என்று குறுக்கிட்டார் ராவுத்தர்.

முருகன் சொல்வதை நிறுத்திவிட்டு ராவுத்தர் முகத்தைப் பார்த்தான்.

“பாப்ளின் என்ன விலை சொன்னே?”

“மீட்டர் 15 ரூபா 10 பைசா.”

“தப்பு. பீஸை எடுத்துப்பாரு. 16 ரூபா 10 பைசா.”

அப்பா எழுந்திருந்து ராவுத்தர் பக்கம் வந்தார்.

பீஸைப் பார்த்த முருகன் முகம் தொங்கிவிட்டது. “நீங்க சொன்னதுதான் சரி” என்றான்.

“பத்து மீட்டர் கொடுத்திருக்கே. பத்து ரூபாய் போயிருக்குமே. ஐயர் முதல அள்ளித் தெருவுல கொட்டவா வந்திருக்கே?” என்று அதட்டினார் ராவுத்தர்.

”உங்களுக்கு விலை தெரியுமா?” என்று கேட்டார் அப்பா.

“ஒரு ஞாபகம்தான் ஐயா” என்றார்.

“எல்லாத்துக்கும்?” என்று கேட்டார் அப்பா.

“ஆண்டவன் சித்தம்” என்றார் ராவுத்தர்.

“ஆக சின்ன டவல் என்ன விலை?” என்று கேட்டார்.

“4 ரூபா 10 பைசா.”

“ஆகப் பெரிசு?” என்று

“36 ரூபா 40 பைசா.”

அப்பா கேட்டுக்கொண்டே போனார்.

பதில் வந்துகொண்டே இருந்தது.

ஆச்சரியத்தில் விரிந்து போயிற்று அப்பாவின் முகம். நம்ப முடியவில்லை அவரால். நீண்ட பெருமூச்சு விட்டார். பெருமூச்சுக்களை அடக்க முடியவில்லை.

“அப்படீன்னா ஒண்ணு செய்யும். பில் சொல்லறச்சே விலை சரியாயிருக்கான்னு பாத்துக்கும்” என்றார் அப்பா.

“முடிஞ்ச வரையிலும் பார்ப்பேன் ஐயா” என்றார் ராவுத்தர். இப்படிச் சொல்லிவிட்டுத் தலையைத் தூக்கி “ஐயா, மின்சாரக் கட்டணம் கட்டிட்டேளா? இன்னிக்குத் தானே கடேசி நாள்” என்றார்.

“ஐயோ, கட்டலியே!” என்று சொன்ன அப்பா, “கோலப்பா” என்று கூப்பிட்டார்.

“இன்னிக்கு அவன் வரலியே ஐயா” என்றார் ராவுத்தர்.

“உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார் அப்பா.

“ஒவ்வொருத்தருக்கும் ஒரு குரல் இருக்கு. ஒரு மணம் இருக்கு. இன்னிக்கு அவன் குரலும் இல்லே, மணமும் இல்லே.” இப்படிச் சொல்லிவிட்டு, “முருகா” என்று கூப்பிட்டார் அவர்.

முருகன் வந்தான்.

“நேத்து இவன் ஒரு வாடிக்கைக்கு ரெட்டை வேட்டி இல்லைன்னு சொன்னான். கண்டியுங்க ஐயா” என்றார் ராவுத்தர்.

“என்ன சொல்றீர்னு புரியலையே” என்றார் அப்பா.

“ஐயா, பத்து வேஷ்டிக்கு விலை போட்டு வச்சீங்க. ஏளு வேட்டிதானே வித்திருக்கு. மீதி மூணு இருக்கணுமில்லே?” என்றார்.

அப்பா வேஷ்டியை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார்.

மூன்று சரியாக இருந்தது.

ராவுத்தர் தன் குரலைச் சற்றுக் கோணலாக மாற்றிக் கொண்டு, “முருகப் பெருமானே, இருக்கறத இல்லைன்னு சொல்லி ஆளை நைசா அனுப்பி வைக்கிறீரே… வியாபாரத்துக்கு உக்காந்து இருக்கோமா, இல்ல தர்மத்துக்கு உக்காந்து இருக்கோமா?” என்று கேட்டார்.

அன்று மாலை பில்போடும் பகுதியிலிருந்து அப்பாவின் பக்கம் போய் உட்கார்ந்துகொண்டார் ராவுத்தர்.

”உங்க பக்கத்துலே இருந்தா இன்னும் கொஞ்சம் உபயோகமா இருப்பேன் ஐயா” என்றார். அதன்பின் “உங்க மின்விசிறியே சித்த கூட்டி வைச்சா அடியேனுக்கும் கொஞ்சம் காத்து வரும்” என்றார்.

அப்பா மின்விசிறியைக் கூட்டிவைக்கச் சொன்னார்.

“வருமானவரி முன்பணம் கட்ட நாள் நெருங்குதே ஐயா. ஆடிட்டரெ பாக்க வேண்டாமா?” என்று கேட்டார் ராவுத்தர்.

“பாக்கணும்” என்றார் அப்பா.

கடை சாத்தும் நேரம்.

”ஐயா, அம்மாவுக்கு மருந்து வாங்கணும்னு சொன்னீங்களே… வாங்கிட்டீங்களா?” என்று கேட்டார்.

“வாங்கறேன்” என்றார்.

சாத்திய கடையின் பூட்டுக்களை இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா.

“ஐயா, தாயாருக்கு திதி வருதுன்னு சொல்லிட்டிருந்தீங்களே. முருகன் கிட்ட சொன்னா போற பாதையிலே புரோகிதர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுவானில்லே” என்றார்.

“சொல்றேன்” என்றார் அப்பா.

கடைச் சிப்பந்திகள் ஒவ்வொருவராகக் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

கோமதி, தாத்தாவின் கையைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நகரத் தொடங்கிற்று. “தாத்தா, இனிமே கணக்குப் போட வரவே மாட்டீர்களா?” என்று கேட்டது அது.

“இப்போ இப்ராஹிம் ஹசன் ராவுத்தர் கணக்கு மிஷின் இல்லே. மானேஜர். ஆண்டவன் சித்தம்” என்றார் ராவுத்தர்.

– இந்தியா டுடே,

குறிப்பு : அடிக்கோடிட்ட வரிகள் சிலேடையானவை. இரண்டு அர்த்தங்கள் வரும். ரசிக்கலாம்.

சுந்தர ராமசாமியின் தந்தை நாகர்கோயிலில் துணிக்கடை ஒன்றை உறவினர் உதவியுடன் தொடங்கி நடத்தினார். அது பின்னர் சுதர்சன் துணிக்கடை என்னும் பெயர் பெற்றது. தந்தை இருக்கையிலேயே சுந்தர ராமசாமி அந்த துணிக்கடைக்குப் பொறுப்பேற்று வெற்றிகரமாக அதை நடத்தினார்.

கதை இந்த உண்மையின் அடிப்படையாக எழுந்தது எனலாம்.   

ஆக விகாசம் என்பது பழைய திறமைகளை மறந்து புதிய திறமைகளைப் பெற்று மாறுவது எனக் கொள்ளலாம்.

32 கருத்துகள்:

  1. // அங்கிருந்தவர் ஸ்வாமியின் பொற்பாதுகையை எங்கள் சிரஸில் வைத்தார். //

    தொடர்ந்த செய்யும் தரிசனங்களுக்கும்,  மனதின் அர்ப்பணிப்புக்கும் பெருமாள் தந்த பரிசு.

    பதிலளிநீக்கு
  2. திருவரங்கத்தில் ஆரம்பித்தது திருவல்லிக்கேணி சென்று மீண்டும் திருவரங்கம் திரும்பிய இன்றைய பாசுரப் பகுதி வாசித்தேன். இறைவன் (பெருமாள்) பெருமைகளை பாடலாய் வாசித்து மகிழ்கையில்ல் உங்கள் விவரிப்பில் ஆழ்வார்களைப் பற்றிய செய்திகளையும் அறிய முடின்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். மிகவும் நன்றி. சென்னை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறேன்

      நீக்கு
  3. கதையில் ராவுத்தரின் மாற்றுத்திறமை உதவுவது அல்லாஹ்வின் விருப்பம்.  ஆச்சர்யமான மாற்றம்.  ​எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்பார்கள்.  ஒரு கதவு  மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள்.  உண்மைதான் போல!

    பதிலளிநீக்கு
  4. ஜேகே சில குறிப்புகள் இவரது எழுத்தில் மிக உயர்ந்த தரம்.  ஆனால் என்னால்தான் படிக்க முடியவில்லை.  ஒரு புளியமரத்தின் கதை மட்டும் படித்திருக்கிறேன்.  ஜேகே சில குறிப்புகள் படித்த பாதிப்பில் சுரா என்றாலே ஓடிவிடுவேன்.  இன்றுதான் மறுபடி வாசித்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  5. சுந்தர ராமசாமி வித்தியாசமான அந்நாளைய எழுத்தாளர். தோழர் ஜீவாவுக்கு நெருக்கமானவர் என்று சொன்னாலே போதும் என்று நினைக்கிறேன். அசோக மித்திரனின் எழுத்து வேறே மாதிரி. கதை ரூபத்தில் புரிந்து கொள்வது கஷ்டம். அதற்கு தனிப்பட்ட பயிற்சி தேவை. ஆனால் சுந்தர ராமசாமியின் எழுத்து அப்படிப்பட்டதல்ல.
    சுந்தர ராமசாமியின் கதை ஒன்றை நானும் ஒரு சனிக்கிழமை பகிர்ந்து கொண்ட நினைவு.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  7. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய பாசுர பதிவு அருமை. திருவரங்கம் கோவிலைப் பற்றிய விபரங்கள் படிக்க, படிக்க ஸ்வாரஸ்யமாக உள்ளது. உண்மையில் அந்தக் கோவிலை பல நாட்கள் அங்கு தங்கியிருந்தபடியே சென்று தரிசனம் செய்தால்தான் விளக்கமாக கோவிலின் வரலாறு புரியும்.( அவ்வளவு செய்திகளை தன்னுள் கொண்ட பெரிய கோவிலது.) இன்று கோவிலின் விமான தரிசனம் பெற்றுக் கொண்டேன்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் தரிசனமும் பெற்றுக் கொண்டேன். மூலவர், உற்சவர் என அருமையான தரிசனம். நாங்கள் சென்னையில் வசித்த போது சில தடவை இக்கோவிலுக்குச் சென்று வந்துள்ளோம்.

    இன்றைய பாசுரமும், அதன் விளக்கமும் மிக நன்றாக உள்ளது. படித்து பரவசமுற்று மகிழ்ந்தேன். தங்களின் இடையறாத இறை பக்திக்கு ஆழ்வாரின் பொற்பாதங்களை தங்கள் சிரசில் வைத்து ஆசிர்வதித்து இறைவனே பார்த்து தங்களுக்கு நல்லதை செய்கிறார்.உங்களின் இறை தரிசன பகிர்வுகளை நாங்கள் படிப்பதும் நாங்கள் செய்த பாக்கியம். தொடரட்டும் உங்களது இறைப்பணி. நாங்களும் தொடர்ந்து வருகிறோம். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துக்கு மிக்க நன்றி

      திருவல்லிக்கேணி கோயிலுக்கு நிறைய சிறப்புகள் உண்டு

      திருவரங்கம் கோயிலுக்கு எத்தனை முறைகள் சென்றாலும் திருப்தி கிடைக்காது. அவ்வளவு பெரிய, ஏராளமான சன்னிதிகளும் ஆழ்வார்கள் ஆச்சார்யார்கள் திருவடிகள் பட்ட கோயில்

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதைப்பகிர்வும் நன்றாக உள்ளது. முன்னுரையும் முடிவுரையும் மனதை கவர்ந்தன. இக்கதையை பாதி படித்துக் கொண்டிருக்கையில் ஏற்கனவே முன்பு படித்த நினைவும் வந்தது. இப்போதும் முழுமையாக படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. அரங்கன் கோயில் பற்றிய தெரிந்த விஷயங்களை நெல்லையின் கை வண்ணம் மூலமாகப் படிக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கோயில் நினைப்பாவே இருந்தது நேற்றெல்லாம். இன்னிக்கு அதைப் பற்றிப் படிக்கக் கிடைத்தது சந்தோஷம். வைகுண்ட ஏகாதசியில் நாங்க கிளி மண்டபத்தில் தான் உட்கார்ந்து கொண்டு அரங்கன் வெளியே வந்து சொர்க்க வாசல் நோக்கிப் போவதைப் பார்க்க வேண்டிக் காத்திருந்தோம். என்ன பிரச்னைனா அத்தனை நேரம் உட்கார்ந்திருந்த மக்கள் தோளுக்கினியான் நெருங்கியதுமே எழுந்து நின்று கொண்டு கும்பலாக மறைத்துவிடுகின்றனர். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரிரு வாரங்களுக்கு திருவரங்கம் கோயில் படங்களுடன் எழுதணும்

      வாங்க கீதா சாம்பசிவம் மேடம். செட்டிலாயாச்சா?

      நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. முதல் முதல் பார்த்தசாரதி தரிசனம் 1963 ஆம் ஆண்டில் கிடைச்சது. அதன் பின்னர் பல முறை போய் வந்தாச்சு. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியான எண்ணங்கள். கோயில் முன்னர் இருந்ததுக்கும் இப்போ ஆங்காங்கே மாறி இருப்பதும் கொஞ்சம் மனதை வேதனைப் படுத்தும். என்றாலும் திருவல்லிக்கேணி இன்னமும் அந்தப் பழமை மாறாமல் இருக்கிறது என்றே தோணும். ஒவ்வொரு தரம் அங்கே போகும்போதெல்லாம் பாரதியாரின் வீட்டைப் பார்க்காமல் வந்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2010ல் அம்மாவுடன் அந்த ஏரியாவிற்குப் போயிருந்தபோது என்ன என்ன மாறுதல்னு சொன்னாங்க

      எத்தனையோ மாறுதல்கள். பாரதி வீட்டின் படங்கள் பகிர்கிறேன்

      நீக்கு
  13. பல வருடங்களாகத் தொடர்ந்து நட்பில் இருக்கும் இளைய சிநேகிதர் கேசவபாஷ்யம் வி.என். அவர்கள் காஞ்சியைச் சேர்ந்தவர் என்றாலும் "தெள்ளிய சிங்கரை" ப் பற்றிப் போடாமலோ எழுதாமலோ இருந்தது இல்லை. இந்தப் பிரபந்த கோஷ்டியையும் அவர் அடிக்கடி சொல்லி இருக்கார். அவர் பையர் ஆத்ரேயன் பிறந்ததில் இருந்து தெரியும். தன் நண்பர்களுடன் சேர்ந்து பெருமாளுக்கு எல்லாவிதமான வைணவ கைங்கரியம் செய்திருக்கார். குழந்தையில் இருந்தே பெருமாளை ஏளப்பண்ணுவதில் இருந்து எல்லாவிதமான வழிபாடுகளையும் நண்பர்களோடு செய்வார். இப்போ அநேகமாக வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்கலாம். ஆச்சு, இன்னும் ஓரிரு வருடங்களில் அவருக்கும் கல்யாணம் என்று ஆகிவிடும். வருடங்கள் பறக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவல்லிக்கேணியில் வாழும் வாய்ப்பு பெற்றவர்கள் அதிலும் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்

      நீக்கு
  14. காஞ்சி வரதராஜரைப் பேரருளாளன் என அவர் எப்போவுமே குறிப்பிட்டுப் பார்த்திருக்கேன். பின்னர் நீங்க காஞ்சியைப் பத்தி எழுதினப்போச் சொல்லி இருந்தீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா சாம்பசிவம் மேடம். பேரருளாளன் பெருந்தேவி தாயார்

      நீக்கு
  15. சுந்தரராமசாமியின் இந்தக் கதை படிச்சதில்லை. ஒரு புளியமரத்தின் கதை நாவல் "வாசகர் வட்டத்தின்" வெளியீடாக வந்தப்போச் சித்தப்பா வீட்டில் படிச்சேன். அப்போ அத்தனை புரியவில்லை. ஹிஹிஹி, பதினேழு வயசோ என்னமோ அப்போ. ஜேகே சில குறிப்புக்கள் படிக்கலைனு நினைக்கிறேன்.

    இந்தக் கதை சித்தப்பா எழுதினது போல் எல்லாம் இல்லை. அவரோட கதைகளில் உரையாடல்கள் குறைவாகவே இடம் பெறும் என்பதோடு இன்னும் சில இடங்களிலும் அவரோட எழுத்தின் சாயல் துளிக்கூட இல்லை. மற்றபடி கதை நன்றாக இருக்கிறது. கடைசியில் ராவுத்தர் தான் பிழைக்க இன்னொரு வழி தேடிக்கொண்டதோடு அல்லாமல் பதவியில் உயர்வும் பெற்று விடுகிறார்.

    இங்கே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது ராவுத்தருக்கும் கடைக்காரர் ஆன ஐயருக்கும் உள்ள நெருங்கிய நட்புத் தான். அந்தக் கால கட்டத்தில் இதெல்லாம் சகஜம். நானே நிறையப் பார்த்திருக்கேன். இன்னும் சொல்லப்போனால் மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் (வடக்காவணி மூல வீதி) இருந்த காய்கறி மார்க்கெட்டில் இருந்த உருளைக்கிழங்கு சாயபு விடம் தான் குழந்தைகளைக் கொண்டு போய் மந்திரித்துக் கூட்டி வருவோம். நானே அக்கி வந்தப்போவெல்லாம் அவரிடம் போய்த் தான் மந்திரித்துக் கொன்டு வருவேன். ஆசாரியிடம் போய் எழுதிக் கொள்ளுவேன்.

    பதிலளிநீக்கு
  16. "காலச்சக்கரம் நரசிம்மா"வில் திருவல்லிக்கேணி கோயில் குறித்த சரித்திர சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன. முதல் தரம் பார்த்தசாரதியைப் பார்த்தப்போ அந்த மீசையும் முகத்தில் தெரிந்த வடுக்களும் ஆச்சரியப்பட வைத்தது. பின்னாட்களில் தான் அதன் காரணங்கள் புரிய வந்தன. இந்தக் கோயிலில் புளியோதரை (ஸ்ரீராம் கவனிக்க) நன்றாக இருக்கும். இங்கே இருந்த அல்லது இருக்கும் சுஸ்வாத் என்னும் காடரிங்(?) பக்ஷணக்கடையில் என் மைத்துனர் பக்ஷணங்கள் வாங்குவார் என்பதால் நாங்களும் ஒரு தரம் போனப்போ வாங்கிக் கொண்டு போனோம். (அம்பத்தூரில் இருந்தப்போ) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பக்ஷணங்கள் நன்றாகவே இல்லை. :( ஆனால் இப்போ தி.நகரிலும் அவங்க கடை திறந்து மைத்துனர் அங்கே தான் வாடிக்கையாகப் பொருட்கள் வாங்குகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு போல் புளியோதரை பிரசாதம் இல்லை. சுஸ்வாத் நல்லா கல்லா கட்டறாங்க. இப்போல்லாம் எவ்வளவு விலை போட்டாலும் வாங்க கியூல நிற்கறாங்க

      நீக்கு
    2. காலச் சக்கரம் நரசிம்மாவின் "அத்திமலைத் தேவன்" நாவலில் /என்று வந்திருக்கணும். இங்கே எப்படியோ வார்த்தைகள் விடுபட்டிருக்கின்றன. இப்போத் தான் பார்த்தேன். :(

      நீக்கு
  17. திருவரங்கம் கோவில்பற்றிய விபரங்கள் அருமை.

    ஒரு புளியமரத்தில் கதை படித்திருக்கிறேன் இன்றைய கதை இப்பொழுதுதான் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  18. திருவரங்கத்திலிருந்து உறையூர் அழிகிய மணவாளனையோ, திருவெள்ளரை புண்டரீகாட்சப் பெருமாளையோ, கோயிலடி அப்பகுடத்தாணையோ பாடியிருக்கும் பாசுரங்களை விட்டு விட்டு திடீரென்று திருவல்லிக்கேணி சென்று விட்டீர்கள், திரும்பியும் வந்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. என் சிறு வயதில் உறையூரில்தான் வசித்தோம். அப்போது எங்கள் பகுதியில் நடக்கும் கல்யாணங்களில் மாப்பிள்ளை அழைப்பு நாச்சியார் கோவிலில்தான் தொடங்கும். அப்போதெல்லாம் அங்கு நிறைய முறை சென்றிருந்தாலும், அங்கு மூலவர் கையில் இருப்பது பிரயோக சக்கரம் என்பது சமீபத்தில்தான் தெரிந்தது.

    பதிலளிநீக்கு
  20. சுந்தர ராமசாமியின் கதைகள் படித்ததில்லை. இந்த கதையில் ராவுத்தர் பாத்திர படைப்பு அற்புதம். கதையில் நடை சில இடங்களில் அசோக மித்திரன் சாயல் அடித்தது.
    ராவுத்தர் கணக்கு போடுவது மஸ்கட்டில் வாடி கபீர் கறிகாய் மார்க்கெட்டில் இருந்த முகமது என்பவரை நினைவு படுத்தியது. அவர் கறிகாய்களை நிறுத்து விலை சொல்வது ரசிக்கக்கூடிய அழகு!. பிளாஸ்டிக் கவரில் நாம் நிரப்பி கொடுக்கும் காய்களை கையில் வாங்கி 600கிராம், 750கிராம், என்று சொல்லியபடியே தராசில்(weighing scale) வைப்பார், துல்லியமாக அப்படியே இருக்கும். அதற்கான விலையை நம்மிடம் சொல்லி ஒரு நோட் பேடில் குறித்துக் கொண்டு கூட்டச் சொல்வார். நாம் கூட்டி சொல்வதற்குள் அவர் மொத்த தொகையை சரியாக சொல்லி விடுவார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!