பட்டம் பெறுதலும் பட்டம் வழங்குதலும் சாணக்கியத் தனமான வெற்றித் தந்திரங்கள். அழகிய மூக்கன் என்று ஒரு பட்டத்தை விழா எடுத்துக் கொடுத்தால் அதை வாங்க ஆயத்தமாக இருக்கும் ஐம்பது தலைகளை நான் உங்களுக்கு அடையாளம் காட்ட வேண்டியதில்லை. சிறந்த சினிமா நடிக நடிகை இயக்குனர் தொகுப்பாளர் உணவு உபசரிப்பாளர் ப்ளோர் பெருக்குபவர் என்று தேடித் தேடி பட்டம் வழங்கி விழா நடத்தி அதை படம் எடுத்து அதை பகுதி பகுதியாக ஷாம்பு சீயக்காய் தூள் சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களுடன் பரவலாகக் கலந்து அளித்து நம்மை வாழ வைக்கும் தெய்வங்களைப் பற்றி தனியாக சொல்ல வேண்டுமா என்ன?
பெறுபவருக்குத் தெரியாமல் வழங்கப்படும் பட்டங்களும் உண்டு. வாத்தியார்களில் நொண்டி சார், பொடி மூக்கன், சபக் டிஜின் (இது எதோ ஒரு முகலாய முற்றுகை யாளர் பெயர். சற்று கால் தாங்கிதாங்கி நடப்பதால் அந்த ரிதம் கருத்தில் கொள்ளப் பட்டு வைக்கப் பட்ட பெயர் - இது குறித்து பலமுறை நான் பின்னாளில் வெட்கப் பட்டிருக்கிறேன்.) என்று கற்பனை வளத்துடன் சூட்டிய பட்டங்கள் கொஞ்ச நாளில் பட்டத்துக்கு உரியவருக்கே தெரிய வரும். என்ன செய்வது! பழகிப் பழகி பட்டமும் நிலை கொண்டு விடும்.
தெருப் பெண்களுக்கு பட்டப் பெயர்கள் இன்னும் அதிக ரசனையுடன் வைக்கப் படும். வெள்ளைக் காக்கை என்று ஒரு யுவதிக்கு பெயர் வைத்தோம். காரணம் அவள் நல்ல அழகி. ஆனால் வாயைத் திறந்தால் போதும் கலவரப் பட்ட காக்கைக் குஞ்சு போல் இருக்கும் குரல். இறைவன் ஏன்தான் வரத்தையும சாபத்தையும் ஒரு சேர அளிக்கிறானோ என்று வியக்க வைக்கும் கலவை. பொருத்தமாக உடை உடுத்தும் ஒரு ஹீரோயினுக்கு சப் ஸ்டேஷன் என்று பெயர் வைத்தார்கள் எங்கள் தெரு ஹீரோக்கள். அது என்ன சப் ஸ்டேஷன்? சப் ஸ்டேஷனுக்கு சுருக்கம் எஸ். எஸ். பெண் Simply Superb ஆம். எனவே எஸ். எஸ். எனவே சப் ஸ்டேஷன். எப்படி இருக்கிறது கற்பனை வளம்?
பையன்களுக்கு பெண்கள் என்ன பெயர் என்ன அடிப்படையில் வைப்பார்களோ அதை பெண் வாசகர்தாம் சொல்லவேண்டும். பையன்களே பையன்களுக்கு வைக்கும் பெயர்கள் எளிதில் புரியக் கூடிய காரணப் பெயர்கள். ஒட்டடைக் குச்சி சாரங்கன், புளிமூட்டை சிதம்பரம், குள்ளச் சாமியார் இப்படிப் பலப் பல.
திருவாரூரில் நான் படிக்கும் போது இரண்டு சாமிநாத அய்யர்கள் இருந்தனர். ஒருவர் முடிகொண்டான் வேங்கட ராம அய்யர் என்ற மகா வித்வானின் புதல்வர். இன்னொருவர் எப்போதும் பாண்ட்டும் புஷ் கோட்டும் அணிந்து நவ நாகரிகமாக இருப்பவர். ஒரு சமயம் எங்கள் வகுப்பு ஆசிரியர் இல்லாமல் அமளி துமளிப் பட்டுக் கொண்டு இருந்தது. கையில் பிரம்புடன் தலைமை ஆசிரியர் ராஜாராமய்யர் வந்தார். " என்ன இங்கே இரைச்சல் ? யார் கிளாஸ் எடுக்கணும்? " என்று அதிகாரமாக கேட்டார்.
"சாமிநாத அய்யர் சார் " என்று பையன்கள் கோரஸ் ஆக கத்தினார்கள் .
"ஸ்டைல் சாமிநாத அய்யரா பூனைக்கண் சாமிநாத அய்யரா " என்று இயல்பாகக் கேட்டார் தலைமை ஆசிரியர்! முடிகொண்டான் ஐயர் நல்ல சிவந்த மேனி. கண்கள் பச்சை விழியுடன் வெளிநா ட்டு பூனைக் கண்ணாக ஜொலிக்கும்.
சங்கரன் என்று எங்களுக்கு ஒரு மேற்பார்வை பொறியாளர் இருந்தார். காலை ஆபீஸ் திறந்ததும் நிதானமாக ஒரு சுற்று ஆபீசை வலம் வருவார். ஒவ்வொருவராக குடைந்து குடைந்து கேள்விகள் கேட்பார். அவர் வரும்போது கவனிக்காத ஒரு தோழரை சக தொழிலாளி ரகசியமாக எச்சரிக்க, பக்கத்தில் வந்து நின்ற சங்கரன் " தெரியுமய்யா நீ என்ன சொல்லி இருப்பே என்று. கிங்கரன் வந்துட்டான்னு தானே." என்று விளம்பி தனக்குத் தானே ஒரு சரியான பட்டப் பெயர் சூட்டிக் கொண்டார்.