7.9.16

புதிர்க்கிழமை 160907


ஒன்று:


ஒரு பெண், ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு  வந்திருந்தாள். வந்துகொண்டிருந்தாள்.


வழியில் ஒரு பெரியவர், அவர்களைப் பார்த்தார். அவர் ஊருக்குப் புதியவர்.


அந்தப்  பெரியவர்,  அவளிடம், " இந்தப்  பையன்  யாரம்மா?" என்று கேட்டார்.


அந்தப் பெண்  கூறியதாவது: " இவனுடைய  அப்பா யாருக்கு மாமனாரோ, அவருடைய  அப்பா எனக்கு மாமனார்."


பெரியவருக்கு சட்டென்று  புரியவில்லை. உங்களுக்கு  யாருக்காவது  புரிந்தால், பெரியவருக்கு  விளக்கிச் சொல்லுங்கள்.



இரண்டு:


இந்தப் படத்தைப் பாருங்கள். 

    

பச்சை நிறத்தில் இருப்பது ஒரு காடு. மரங்களும்,  சிறு / பெரு கற்கள் அந்தக்  காட்டில்  நிறைய  இருக்கின்றன.   

மஞ்சள் நிறத்தில் இருப்பது, மணல் பிரதேசம். 

எஃப்   உயரமான  முள்  வேலி. 

நீல வண்ணத்தில் இருப்பது, சதுரமான கிணறு. எட்டடி X  எட்டடி உள்ள ஆழமான கிணறு. 

U  என்ற மனிதன், காட்டில்  தட்டுத் தடுமாறி, படத்தில்  குறிப்பிட்டுள்ள  இடத்திற்கு வந்துவிட்டார். 

அங்கே P1 ,  P2 என்று  இரண்டு  மரக்கட்டைகள் கிடக்கின்றன. பெரிய  மரக்கட்டை, ஏழடி நீளம், அரை  அடி  அகலம்,  ஓரங்குல தடிமன்.  சிறிய  மரக்கட்டை, மூன்றடி  நீளம், அரை  அடி   அகலம், ஓரங்குல தடிமன்.  மேலும் ஒரே ஒரு ஒன்றரை அங்குல  நீள  ஆணி.  இவை தவிர வேறு  எந்த  பொருட்களும்  இல்லை.  அந்த  இரண்டு  மரக்கட்டைகள், ஒரு  ஆணி  இவற்றைப்  பயன்படுத்தி, மிஸ்டர் யூ, கிணற்றைக்  கடந்து,  மணல்  வெளிக்குச்  செல்ல  வேண்டும்.  How? What can U do? 

மூன்று:  

What number comes at X? 






6.9.16

கேட்டு வாங்கிப் போடும் :கதை : இரவு


          இந்த வார எங்களின் "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் வெளியாகும் சிறுகதை எல்கே என்று அறியப்படும் கார்த்திக் லக்ஷ்மிநரசிம்மனுடையது.  எங்களின் நீண்ட நாள் நண்பர்.

          அவரின் தளம் எல்கே.

          அவருடைய எண்ணங்களையும், சிறுகதைகள், மற்றும் தொடர்கதைகளையும் (இன்னமும் கூட பழைய தொடர்கதைகள் சில முடியவில்லை என்று நினைக்கிறேன்!) சமையல் குறிப்புகளையும் சுவாரஸ்யமாக வழங்கிக் கொண்டிருந்தார். 

          கிரிக்கெட்டில் சுவாரஸ்யம் கொண்டவர்.  அதைப்பற்றி அவர் எழுதிய பதிவுகள் பிற தளங்களிலும் வெளியாகியுள்ளன.  சமீபகாலமாக தனது தளத்தில் எழுதவில்லை.  இப்போது மீண்டும் ஒரு தொடர்கதை தொடங்கி இருக்கிறார்.  நீண்டநாட்களாய் பிளாக்கை கவனிக்காமலிருந்த ஓரிருவரை இந்த 'கேவாபோ' சாக்கில் மறுபடி தளத்தின் பக்கம் பார்வையைத் திருப்ப வைத்ததில் "எங்களுக்கு" பங்கு உண்டு என்றே தோன்றுகிறது!!

          எல்கேயின் ஒருவரி முன்னுரைக்குப் பின் அவரது படைப்பு தொடர்கிறது..

==============================================================================



ஒரு இரவு நேர பயணத்தில் , தூக்கம் வராத தருணத்தில்  சிந்தித்தது 



============================================================================


இரவு


 எல்கே


மெல்லக் கண்களைத் திறக்க முற்பட்டேன். எங்கு நோக்கினாலும் இருட்டாய் இருந்தது. எங்கே இருக்கிறேன் எனப் புரியவில்லை. எழ முற்பட்ட என்னை உடல் அனுமதிக்கவில்லை. பலக் கற்களை உடலில் கட்டியது போன்ற வலி. முயற்சியைக் கைவிட்டு கண்களை மூடினேன்நான் எப்படி இங்கே வந்தேன். என்ன நடந்தது. மெதுவாய் அன்று நடந்தது என் கண்களில் ஓடியது


இரவு 10 : 00


எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், ஈசல் பூச்சிகளாய் இருந்த பல டிபன் கடைகளில் ஒன்றில் இரவு உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தான். கோடை கால புழுக்கத்தில் சிக்கிய வெளியூர் பிரயாணிகள், சென்னைக்கு மட்டுமே வெயில் என சென்னை தங்கள் வட்டார மொழியில் திட்டிக் கொண்டிருந்தனர். இன்னும் நேரம் இருந்ததால், ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு நடந்தவனை, ஆம்னி பஸ் தரகர்கள் ஆங்காங்கே வழிமறிக்க சிறு தலையாட்டலால் அவர்களைக் கடந்து சென்றேன்


இரவு 10:20 


கையில்; லெதர் பெக், தலையில் ஒரு தொப்பி சகிதம் எக்மோர் ஸ்டேஷனில் அடி எடுத்து வைத்தேன். எக்மோர் சென்னை சென்ட்ரலுக்கு மாற்றாந்தாய் பிள்ளைப் போல. சென்ட்ரலில் இருக்கும் பரபரப்பு அந்தக் கூட்டம். சென்ட்ரலில் எப்போதும் இருக்கும் டென்ஷன் கலந்த சூழல் இங்கே இருக்காது. பண்டிகைக் காலங்களில் மட்டும் வேலை செய்யும் மெட்டல் டிடெக்டர்களும், உடமைகளை சோதிக்கும் மெஷின்களும் அங்கிருந்த காவலர்களைப் போல் வேலை செய்யாமல் முடக்கப் பட்டிருந்தது. ஏழாவது பிளாட்பாரத்தில் நான் செல்ல வேண்டிய சேலம் ஒன்றும் எக்ஸ்ப்ரஸ் நின்றுக் கொண்டிருக்க, நிதானமாய் அதை நோக்கி நடந்தேன். மிக நிதானமாய் கிளம்பும் இந்த வண்டி ஒரு வசதி. சென்னை நகர ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டு வண்டியை கோட்டை விடாமல் நிதானமாய் வந்து ஏறிக் கொள்ளலாம்.
 
 
இரவு  11:00 


பள்ளிக்கு செல்லத் தயங்கும் கே ஜி வகுப்பு மாணவர்கள் போல் கிளம்பத் தயங்கி தயங்கி நிதானமாய் பயணத்தைத் துவங்கியது வண்டி. என்னுடன் எடுத்து வந்த பேகை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, வாசல் கதவருகே வந்து நின்றுக் கொண்டேன். இந்திய ரயில்களில் கீழிருக்கையில் அரைமணி நேரம் பயணிப்பதுக் கூடக் கொடுமையே. குளிர்காலத்திலும் வியர்க்க வைக்கும் இடம் அது


இரவு 11:30  


எக்மோரில் முன்பிருந்தக் கூட்டம் இப்பொழுது தாம்பரத்திற்கு மாறி விட்டது போல. நின்ற வண்டியில் இருந்து இறங்கியவன், பிளாட்பாரத்தின் இறுதியை நோக்கி நடக்கத் துவங்கினேன். வெம்மையின் காரணமாய் வேர்க்க, கர்சீப் எடுத்து தொப்பி அகற்றி வியர்வையை துடைத்து, பின் மீண்டும் நடந்தேன். நான் இறங்கியதையும் , கையில் பை இல்லாமல் இருந்ததையும் என் பெட்டியில் இருந்த யாரும் கண்டுக் கொண்டதாய் தெரியவில்லை. வந்த நோக்கம் முடிவடைந்ததால், ஸ்டேஷன் வழியே செல்லாமல், தண்டவாளத்தை கடந்து ஸ்டேஷனின் மறுபக்கத்தில் வெளியே வந்தேன்


மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு செல்போனை எடுத்தேன்அதே சமயம், தொலைவில் பலத்த சப்தம் கேட்டது. சக்ஸஸ் என்ற வார்த்தையை மட்டும் மெசேஜ் செய்து விட்டு, ரோட்டைக் கடக்க முற்பட்டேன். ஒரு கணம் யோசிக்காமல் முன்னே செல்ல, வேகமாய் வந்த லாரியோ, தனியார் பேருந்தோ என் மீள் மோதியது

 
மெல்ல என் நினைவுகள் தப்பத் துவங்கின. மெல்ல அடங்கி விட்டேன்....


5.9.16

"திங்க"க்கிழமை பதிவு – வாழைக்காய் அரைக் கரேமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



     இந்த வாரம் நண்பர் நெல்லைத்தமிழன் அனுப்பி இருக்கும் ரெஸிப்பிகளில் ஒன்றை இங்கு பகிர்கிறேன்.
 

     நன்றி நெல்லைத்த தமிழன்..  
 

     வாங்க... வந்து உங்கள் செய்முறையைச் சொல்லுங்க..  இப்போ நெல்லைத்த தமிழன் சொல்வதைக் கேட்போம் நண்பர்களே...




 

     எனக்கு இந்தக் கறியமுது (என்ன தமிழ்..அடடா..) ரொம்பப் பிடிக்கும். என்னோட பசங்களுக்கும் இது ரொம்பப் பிடிக்கும். இதுக்கு தக்காளி சாத்துமது சாதம் நல்லா இருக்கும். இல்லாட்டா புளி இல்லாத குழம்பு (வேற என்ன.. மோர்க்குழம்புதான்) சாதத்துடன் சாப்பிட அருமையா இருக்கும். போதும் புராணம். எப்படிப்பா பண்றது?





      ரெண்டு வாழைக்காய். தோலை உரித்து அரை வட்டமாகத் திருத்திக் (கட் பண்ணுவது) கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓரளவு கெட்டியாகக் கரைத்த புளிஜலத்தில் வாழைக்காய்த் துண்டுகளையும், கொஞ்சம் மஞ்சப்பொடி, தேவையான அளவு உப்பு போட்டுக்கொள்ளவும். அரை அல்லது முக்காப் பதமா வேகவைத்துக்கொள்ளவும். வாழைக்காய்ல புளியும் உப்பும் கொஞ்சம் சேர்ந்திருக்கும். இப்போ, இதை வடிகட்டி, வாழைக்காய்த் துண்டங்களைத் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.





 
     இலுப்புச்சட்டியில், 4 சிவப்பு மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டுத் திருவமாறிக் (தாளித்துக்) கொள்ளவும். அதில் வெந்த வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டுக் கலக்கவும் (பிரட்டிக்கொள்ளவும்). கடைசியாக ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவலையும் சேர்த்துப் பிரட்டினால், இரண்டு நிமிடத்தில் வாழைக்காய் அரைக்கரேமது ரெடி.







     குறிப்பு: புளித்தண்ணீர் ரொம்பக் கெட்டியாயிடுத்துனா, வாழைக்காய்த் துண்டங்கள் ரொம்ப ஒட்டிக்கொள்ளும். ரொம்பப் புளிப்பு பிடிக்காதவர்கள் கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக்கொள்ளலாம். ஆனால் புளி இருந்தால்தான் இந்தக் கரேமது நல்லா இருக்கும்.






     குறிப்புக்குக் குறிப்பு – நாங்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளில் எழுதியுள்ளேன். இது நம் வீட்டில் (அகத்தில்) புழங்கும் சொற்கள் விட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக. இதை வட்டார வழக்காகவும் புரிந்துகொள்ளலாம்.






 
     நான் நேற்று இதற்கு, சங்கீதா ஹோட்டல் பாணியில் மோர்க்குழம்பு பண்ணினேன். அதன் செய்முறை (பெரிய கம்ப சூத்திரமில்லை) விரைவில்… ஸ்ரீராம் அனுமதித்தால்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்

4.9.16

ஞாயிறு 160904 படமா இது!

             
Image result for picture puzzle
                                       
சாரி கொஞ்சம் லேட்.
சில சோதனைகள்தான் காரணம்.
     

3.9.16

600 பேர்கள் கொண்ட கும்பலை எதிர்த்து நின்ற இரண்டு பெண் போலீஸ்



1)  ஒரு அரசுத்துறை நிறுவனம் இப்படிச் செயல்படும்போது சந்தோஷம் வருகிறது.  அது அவர்கள் கடமை என்றாலும் இப்படி செயல்படுவதே அரிய செயலாக்கி விடுவதால்!   'முகம் மாறிய'  தோப்பூர் அரசு மருத்துவமனை: கைத்தொழிலுடன் 'டிஸ்சார்ஜ்'

 
 
 
2)  600 பேர்கள் கொண்ட கும்பலை எதிர்த்து நின்ற இரண்டு பெண் போலீஸ் காப்பாற்றியது, தாங்கள் தேடிப்போன ஒரு பெண்ணை மட்டுமல்ல, மூன்று மைனர் பெண்களை.  சபாஷ் எஸ் ஐ பியாலி கோஷ், கான்ஸ்டபிள் மதுமிதா தாஸ்.

 
 

 
3)  பணியில் சிறப்பு.  தமிழகத்திலிருந்து விருது பெறும் ஒரே அதிகாரி.  மதுரை கூடுதல் கலெக்டர் ரோகிணி.

 
 
 
4)  "....இயந்திரத்தை இடைவிடாமல் இயக்கலாம். இதில், 1 யூனிட் மின்சாரம் தயாரிக்க, 30 காசுகள் மட்டுமே செலவாகிறது...." ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தச்சு தொழிலாளி நாகநாதன்.  (இது மாதிரிக்கு கண்டுபிடிப்புகள் பற்றி நிறைய செய்திகள் வந்தாலும் பயன்பாட்டுக்கு எத்தனை வருகின்றன என்பது கேள்விக்குறி.  ஒருவேளை அரசு போதுமான அளவு ஆதரவு தருவதில்லையோ?)


 
 

 
5)  "நேரடி கலெக்டர் தேர்வு எழுத முடியாத நிலையில் குரூப் 1 தேர்வு எழுதி துணை கலெக்டராகிவிட்டால் பிறகு சில வருடங்களில் கலெக்டராகும் முடியும் என்பதால் குரூப் 1 தேர்வு எழுதுவதில் உறுதியாகும் முனைப்போடும் இறங்கினார் சதா அதே சிந்தனையோடு இயங்கினார். இப்போது துணை கலெக்டராகி விட்டார்.
எத்தனையோ லட்சம் பேர் முயற்சிக்கிறார்கள் அதில் நாம் எங்கே என்று நினைக்காமல் நமது லட்சியம் என்னவோ அதை நினைத்து படிக்கவேண்டும்..."  வித்யா.

 
 
 
6)  நடைமுறைக்கு வந்தால் மகிழ்ச்சி.  முயற்சிக்குப் பாராட்டுகள்.  மார்பகப் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ள சிறுவன் கிர்தின் நித்தியானந்தம்.

 
 

 
7)  அரிய சேவை.  கருங்கல் அருகே வடக்கன்கரையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். ஓய்வு பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரான இவர், 1988-ம் ஆண்டு நூலக அருட்பணி இயக்கம் என்னும் அமைப்பை தொடங்கினார். அதன் மூலம் இது வரை 153 இலவச நூலகங்களைத் திறந்துள்ளார்..

 
 
 
8)  "காசில்லாட்டி என்னங்க..?  ஆட்டோக்குக் காசு தரவேண்டாம்.. நீங்கள் திரும்பிப் போவதற்கும் நான் காசு தருகிறேன்..."  மும்பை ஆட்டோ டிரைவர் ஷுக்லாஜி.





9)  "....... ஆங்கே டாய்லெட் கட்டித் தருவதாம் நட்பு!"    நண்பன் அகத்தியனுக்காக காசு கலெக்ட் செய்து காட்டித் தந்த வசீகரன், ராகுல், நவீன்ராஜ், ஹரிஷ்.  நாகப்பட்டினம் அருகே நட்புகள்.



2.9.16

வெள்ளிக்கிழமை வீடியோ :: 160902 ( + நேற்றைய பதிவின் தொடர்ச்சி) எலி ஒரு தொடர்கதை!

                 

                               
====================================================================


எலியும் நானும்... நானும் எலியும்..  

Image result for rat images

(நேற்றைய பதிவின் தொடர்ச்சி...)


     இந்தத் தலைப்பு உங்களில் எத்தனை பேருக்கு சமீபத்திய பாடல் ஒன்றினை நினைவு படுத்தியது?
 




     புத்தகங்கள் உட்பட அவ்வளவு அடைசல் இருக்கும் அந்த எங்கள் வீட்டில் சில சமயங்களில் குஞ்சும் குளுவானுமாக எலிகள் பெருகி விடும்.  அப்போது இந்தப் பொறியில் வைக்கப்பட்ட வடையை எலிகள் அசைத்ததும் கதவு அறைந்து சாத்திக் கொண்டாலும் கூட, எந்த பாதிப்பும் இல்லாமல் கம்பிகளின் இடுக்கு வழியாக இந்த சின்னஞ்சிறு எலிகள் ஓடி, ஓடித் தப்பித்து விடுவதோடு, மறுபடியும் அந்த இடுக்குகளில் வழியாகவே உள்ளே சென்று ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டு அங்குள்ள வடையைத் தின்னும் பாருங்கள்...  அப்பாவுக்குப் பற்றிக் கொண்டு வரும்!  அது ஒட்டும் அட்டை வராத காலம், அல்லது நாங்கள் அதை அறியாத காலம்!








     அப்புறம் நான் குடும்பத்தலைவன் ஆனதும் எனக்கும் இந்த வேலை வந்து சேர்ந்த விவரங்களை ஓரளவு நான் சுட்டி கொடுத்துள்ள பதிவுகளில் சொல்லியுள்ளேன்.  








     கொசுவர்த்தி சுற்றி பின்னே சென்று மறைய, நிகழ்காலத்துக்கு வருவோம் - வருகிறேன்!


     சென்ற வாரத்தில் ஒருநாள் முதலில் என் பாஸ் கண்ணிலும், பின்னர் பையன் கண்ணிலும் சற்றே பெரிய சைஸில் இந்த எலி கண்ணில் பட்டது.  வழக்கமான பயங்கள் மனதை வாட்ட வீட்டுக்குள் பார்த்து விட்ட இந்தப் பெரிய எலியைப் பிடிக்க முதலில் ஒரு மசால்வடை வாங்கப்பட்டது.  அதை பொறிக்குள் வைத்து, எங்கள் நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டுக் காலை 11.30 முதல் காத்திருந்தோம்.  ஊ.. ஹூம்..  வெளியில் எங்காவது முக்கிய வேலையாய்ச் சென்றிருந்ததோ என்னவோ, ஆளையே காணோம்.


                                                               


     எதற்கும் இருக்கட்டும் என்று இந்த ஒட்டும் அட்டையையும் வாங்கி வைத்திருந்தோம்.  இதில் ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால் எலி இதில் வந்து ஒட்டிக்கொண்டபின், அதை அதிலிருந்து பிய்த்து எடுக்கும் வேலை.  மகா கடுப்ஸான வேலை அது.  







ஒருமுறை ஒரு பெரிய எலி, தான் ஒட்டிக்கொண்ட அட்டையோடு நகர்ந்து நகர்ந்து ஓடியதும்,  அதை பிடிக்க பின்னாலேயே ஓடியது, பிடிக்கப் போனால் முகத்தை என் கைகளை நோக்கி அது திருப்பியதும் நடுக்க அனுபவமாக மனதில் நின்றிருந்தது.  சிறு எலிகளாயின் சந்தேகமில்லாமல் இந்த அட்டை மூலம்தான் பிடிக்க வேண்டும்.  ஆனால் அவற்றை அந்த அட்டையிலிருந்து நீக்குவதற்குள் வெறுப்பாகிவிடும்!   ஃபோர்ஸ் அப் கொண்டு அதை அட்டையிலிருந்து தள்ளி விடும்போது அதன் சதைகள் சமயங்களில் கிழிந்து விடும்.  அட்டையோடு தூக்கிப் போடவும் மனம் வராது. சிறிய அட்டை 45 ரூபாய்.  பெரிய அட்டை 90 ரூபாய்!







     ஏன் இன்னும் எலி வரவில்லை?  தெரிந்து கொண்டு விட்டதோ?  வடை வாசம் வரவில்லையோ?  நேரமானால் வடை ஊசிப்போகுமோ?  எவ்வளவு நேரத்தில் வடை ஊசிப்போகும்?  ஒருவேளை வடை ஊசினால்தான் எலி வருமோ?  கேள்விகள் மனதில் சுற்ற, எலியை மட்டும் காணோம்.  மாலை வந்தது.  இரவும் வந்தது.  சாப்பிட்டுப் படுத்தும் விட்டோம்.  பொறியின் கதவு மூடிக்கொள்ளும் "டப்' சத்தத்துக்காகக் காத்திருந்து தூங்கிப் போனோம்.








     காலை எழுந்து வரும்போது ஒரு ஆவல்.  ''மாட்டியிருக்கும்!"








     ஊஹூம்.  பொறியின் கதவு அலிபாபா குகை போல திறந்தே இருந்தது.  சந்தேகப்பட்டு உள்ளே பார்த்தேன்.  வடை அங்குதான் இருந்தது!  சமயங்களில் கதவு மூடாமல், எலி வடையைத் தள்ளிக் கொண்டு போயிருக்கும் அனுபவமும் உண்டே..   மதன் ஜோக் என்று நினைவு...  இப்படி வடைப்பொறி வைத்துள்ள கூண்டுக்குள்ளிருந்து வடையை எடுக்க இரண்டு எலிகள் ஒரு நீண்ட கம்பியைக் கொண்டு வரும்.  அது வேறு நினைவுக்கு வந்தது!









     இன்னும் யாரும் எழுந்திருக்காத நிலையில் குளிக்கப் போனேன்.  பாத்ரூமில் இருக்கும்போது அந்த ஆனந்தச் சத்தம் காதில் விழுந்தது.  குளித்து முடித்து, வெளியில் வந்து பார்த்தேன்.  ஆம்! ! எலி மாட்டி விட்டது.  




     அதே சமயம் உள்ளே பார்த்தால், கம்பியில் மாட்டியிருந்த அந்த அரை வடையைக் காணோம்!  வாழ்வு நிலைக்குமா என்ற கேள்விக்கு நடுவே, மிச்சம் வைக்காமல் அதையும் சாப்பிட்டு முடித்திருந்தது எலி!







     நிதானமாக அதை வெளியில் வைத்து, புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன்.  வெளிச்சத்தைக் கண்டு முதலில் மிரண்ட எலியார், முகத்தைத் திருப்பி அமர்ந்து, முதுகைக் காட்டினார்.  பின்னர், 'இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. நேரத்தை வீணாக்கினால் வாழ்க்கைக் கூண்டிலிருந்தே விடுதலை கொடுத்து விடுவான்' என்று நினைத்ததோ என்னவோ, என் முகமும், கேமிராவும் அருகே இருந்தாலும் கம்பியைக் கடித்து அறுக்கப் பார்த்தது!









     ஒரு சிறு வீடியோ கூட எடுத்திருக்கலாம் என்று பின்னர் தோன்றியது.

     விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுத்த பின் அதை எடுத்துக்கொண்டு காம்பவுண்டுக்கு வெளியே பொறியை நீட்டி, பொறியின் கதவைத் திறந்து ரிலீஸ் செய்தேன்.  பொத்தென்று கீழே விழும் என்று நான் எதிர்பார்த்திருக்க, ஊ..ஹூம்..  அது விழவில்லை! 


     என்னவென்று எட்டிப் பார்த்தால், பற்களாலும், சிறிய விரல்களாலும் அந்தக் கம்பியைப் பிடித்தபடி தொங்கி கொண்டிருந்தது!  என்ன ஒரு ஜாக்கிரதை உணர்ச்சி!  பயம் போலும்!  அதை புகைப்படம் எடுக்க முடியவில்லையே என்கிற வருத்தத்தோடு ஒரு தட்டுத் தட்டி குலுக்கினேன்.


     இந்த முறை கீழே குதித்து புதர்களில் ஓடி மறைந்தது!




     அவ்ளோதான்!  அப்புறம் இன்னொரு எலிப் பதிவில் சந்திக்கும் வரை, வணக்கம் கூறி விடை பெற்றுக் கொள்வது........






இன்றைய படங்கள் யாவும் நான்..... நான்...... நானே என் செல்லில் எடுத்தது!
 

1.9.16

எலியும் நானும்... நானும் எலியும்..


      Image result for rat images   ஃபேஸ்புக்கில் சின்னப் பதிவாகப் போடவேண்டிய விஷயத்தை வலைப்பதிவில் பதிவாகப் போடவேண்டி விஷய தானம் செய்த எலியார் வாழ்க!





    
Image result for rat images    எனக்கும் எலிக்கும் உறவுகள் விடுவதில்லை என்று நினைக்கிறேன்.  போதிய இடைவெளியில் அவ்வப்போது வீட்டுக்குள் நுழைந்து மிரட்டி விடுகிறார்.  அவர் என் கண்ணில் பட்டதுமே என் மனக்கண்ணில் கம்பியூட்டர், ஃப்ரிஜ், ஏஸி, தொலைக்காட்சிப்பெட்டி  ஆகியவற்றின் ஒயர்கள் மனக்கண்ணில் வந்து ஆடத் தொடங்கி விடும்.





    
Image result for rat images   முதல் எலிப்பதிவில் கொஞ்சமான சஸ்பென்ஸும், இரண்டாவது ஒரு எலியின் சபதத்தில் சற்று அதிகமான சஸ்பென்ஸும் வைத்துப் பதிவிட்டிருந்தேன்.  எலிப்பதிவுக்கு எப்பவுமே வரவேற்புதான்.  ஏனென்றால், அவரால் பாதிக்கப் படாதவர் யார்!





   
Image result for rat images முந்தைய பதிவிலேயே ஹுஸைனம்மா ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள்.  "ஆமா, உங்க வீட்டில இத்தனை எலிகளா? இல்லை எலிவளையில் நீங்க ஷேரிங்கா? ;-)))))))"





    
Image result for rat images    யானையின் பாதையில் மனிதன் ஆக்ரமித்து அதன் பாதையை வழிமறிக்கிறானாம்.  தன் பாதை என்று வருடா வருடம் வலசையில் வழி மாறாமல் வரும் யானை அங்கு மனிதனைக் கண்டு மிரள்கிறதாம்.  அதே போல எலியின் பாதையில் நான்தான் குறுக்கிட்டிருக்கிறேனோ என்னவோ!


 


     Image result for rat images   என்னுடைய சிறு வயதிலேயே எலியுடனான அனுபவங்கள் ஆரம்பிக்கின்றன!  அப்போதெல்லாம் என் அப்பா பாஹேதான் எலி பிடிக்கும் கடமையைச் செய்து வந்தார்.  குடும்பத்த தலைவரின் பொறுப்புதானே அது!




     Image result for rat images    முதல் கொஞ்ச நாட்கள் ஒரு கொடூரமான பொறி ஒன்றில் எலியைப் பிடித்துக் கொண்டிருந்தோம்.  'ட' போன்ற ஒரு பலகையில் படுக்கை வசத்தில் இறுக்கமாக இருக்கும் கெட்டியான கம்பியை எடுத்து, நிமிர்ந்திருக்கும் பக்கம் இருக்கும்  கொக்கியில் மாட்ட வேண்டும்.  அந்தக் கம்பி அந்த ட வடிவத்தின் பின்பக்கமாகச் செல்லும்.  அதனுடன் இணைந்திருக்கும் சிறு கொக்கி ஓட்டை வழியே முன்னால் உள்ளே வந்து நடுவில் உள்ள இடத்தில் இருக்கும் சிறு பள்ளத்தில் முடிந்திருக்கும்.  அதில் வடையை வைப்போம்.  அதைச் சாப்பிட வரும் எலி வடையைக் கடித்ததும், கொக்கி நகர்ந்து, கம்பியை விடுவிக்கும். அப்போது "டமார்" என்றுஒரு பயங்கர சத்தத்துடன்  அடிக்கும் கம்பியில் அந்த எலி மாட்டி சிதிலமாகி ஸ்பாட்டிலேயே பரலோகம் போகும்!  

     Image result for rat images   இந்தக் கொடூர மரணத்தைப் பார்க்கப் பொறுக்காமலும், அப்புறம் அந்தப் பொறியைச் சுத்தம் செய்யும் கஷ்டத்துக்காகவும் முறையை மாற்றி, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தோம்!


     Image result for rat images   நீள் சதுர டப்பா போன்ற இந்தப் பொறியில், எலி உள்ளே நுழைந்து கம்பியில் மாட்டியிருக்கும் உணவைத் தொட்டதும் கம்பி நழுவி, 'டப்' பென்று கதவு மூடிக்கொள்ளும் வகையில்  வைத்துப் பிடித்த எலியை வீட்டிலிருந்து சற்றுத் தள்ளிச் சென்று, பொறியின் மூடியை சற்றே கஷ்டப்பட்டுத் திறந்து விடுவார்.  விடுதலை பெற்ற எலி துள்ளிக் குதித்து எதிர்த் திசையில் ஓடியதும் உண்டு.  எக்குத்த தப்பாக ஷேன் வார்னே சுழற்பந்து போலத் திரும்பி அப்பாவின் காலடி பக்கமே குதித்து ஒடத் தொடங்கியதும் உண்டு.  


     Image result for rat images   முதல்முறை இப்படி நடந்தபோது பாஹே வேஷ்டி நழுவ, அலறி, துள்ளிக் குதித்து டான்ஸ் ஆடி நின்றதை பார்த்துச் சிரித்த எங்களையும் மிரள வைத்து அந்த எலி எங்களுக்கும் முன்னாலேயே வேகமாக ஓடி எங்கள் வீட்டுக்குள்ளேயே மறுபடியும் நுழைந்து மறைந்தது!  உள்ளயிருந்து வெளியில் வந்த அப்பாவின் அம்மா, அதாவது எங்கள் பாட்டி  "டேய் பாலு..  இங்கக் கூட ஒரு எலி இருக்குடா.. இதையும் பிடித்து வெளில போடு" என்று அப்பாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாள்.



     Image result for rat images    உழைப்பு வீணாய்ப் போன கடுப்பிலும், தெருவில் வேஷ்டி நழுவிய வெறுப்பிலும் இருந்த அப்பா பொறியை 'ணங்' கென்று ஸ்டூலின்மேல் வைத்துக் கோபத்தைக் காட்டிக் குளிக்கப் போனார்.



     Image result for rat images   அடுத்தடுத்த தடவைகளில் வெவ்வேறு முறைகளை முயற்சித்தார்.  யாரோ சொன்னார்கள் என்று  ஒரு சாக்கை எங்கிருந்தோ எடுத்து வந்து, அதைத் திறந்து, அதில் எலியை விடுவிக்க முயற்சித்தார்.  எலி அதற்குள் விழுந்ததும், அதை மூட்டையாகக் கட்டி சுவரிலோ, தரையிலோ மோதிச் சாகடிக்க வேண்டுமாம்.



     Image result for rat images    சாக்கைப் பிடிப்பது என்னுடைய வேலையாகத் தரப்பட,  அப்பா பிடிபட்ட அந்த எலியை ஏதேதோ முயற்சித்து சரியாக சாக்கினுள் விடுவித்ததும், நான் சாக்கின் வாயை மூட வேண்டும்.  ஆனால் பீதியில் நான் சாக்கை நழுவ விட, எலி 'ஆனந்தச் சுதந்திரம் அடைந்து விட்டோமே' என்று பாடாத குறையாக உள்ளே ஓடியது.  அப்பாவின் கையில் நான் என்ன ஆகியிருப்பேன் என்று சொல்லத்  தேவை இல்லை!


 


     Image result for rat images   அடுத்த முறையில் வாளியில் வெந்நீர் வைத்து, அதில் திறந்து விடச் சொன்னார்கள் என்று முயற்சித்தார்.  வாளியில் குதித்துப் பதமாக வெந்த எலியைத் தூக்கிப் போட்டபின், அந்த வாளியை வேறு யாரும் உபயோகிக்க மறுக்க, அந்த தடவையோடு அந்த முயற்சியும் நின்று போனது.  எவ்வளவு வாளி வாங்குவது!


                                                  

                                                                                                                                          - தொடரும் -



[ பதிவு நீண்டு விட்ட காரணத்தினால் இதன் இறுதி பாகம் நாளை "வெள்ளிக்கிழமை வீடியோ" வுடன் சேர்ந்து வெளியாகும்] 




படங்கள்  : நன்றியுடன் இணையத்திலிருந்து...