Saturday, August 8, 2009

GenGap

தலைமுறை இடைவெளி என்பது தற்காலத்தில் ரொம்ப அழுத்தமாக உணரப் படுவதாக எனக்குத் தோன்றுகிறது. நான் இருபது(வயது)களில் இருந்தபோது பெரியவர்களுக்கும் எனக்கும் இடையே பெரிய இடை வெளி இருப்பதாக உணரவில்லை. ஆனால் இப்போது இளைய தலைமுறைக்கும் எனக்கும் ஒரு பெரிய சுவர் இருப்பதாக சில சமயம் தோன்றுகிறது.

இந்த மாற்றத்துக்கு காரணம் என்று எனக்குத் தோன்றுபவை இரண்டு. ஒன்று மகளிர் தைரியமாக வீட்டை விட்டு வெளியில் வந்து வேலை பார்த்து சுயமாக தங்களைத்தாமே பார்த்துக் கொள்ளும் திறன் பெற்று விட்டார்கள். காதல் கல்யாணங்கள் வீட்டுக்கு வீடு சகஜமாகி் விட்டது ஒரு பிரத்யட்ச நிரூபணம். என் இருபது வயது சமயம் என் நண்பர் ஒருவர் அவரது சொந்த அத்தை பெண்ணை மணம் செய்ய ஆசைப்பட்டு அதை தன பெற்றோரிடம் தெரிவிக்க வெட்கப்பட்டுக்கொண்டு தன் காதலை தியாகம் செய்துவிட்டார்!

அடுத்தது தொலைக்காட்சி. இந்த மாயப்பெட்டி வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. ஆரம்ப நாட்களில் தூர்தர்ஷன் தயங்கித் தயங்கி கட்டுப் பெட்டி நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தது. (இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்று நீங்கள் கூவுவது என் காதில் விழுகிறது.) தனியார் சேனல்கள் பெருகியபின்பு விவாதம், டாக் ஷோ காமெடி என்ற பெயரில் என்னென்னவோ எல்லாம் வருகின்றது. இதன் தாக்கம் சமூகத்தில் அதிகமாகவே காணப் படுகிறது. வயதின் மூத்தவர்களை "பெரிசு" என்று அழைப்பதிலிருந்து, "சும்மா பொத்திக்கிட்டு இருக்கியா" என்று கேட்பது வரை வந்து விட்டது.

இதற்கும் ஒரு எடுத்துக் காட்டு சொல்ல ஆசை. சமீபத்தில் ஒரு நாற்பது வயதுக் காரர் தம் குடும்ப எதிரிகள் தமக்கு ஏவல் வைத்து விட்டதாக குறைப்பட்டுக் கொண்டார். " அரசி சீரியலில் கூட வருதே, இதெல்லாம் இப்போ ரொம்ப சுலபமா செய்யறாங்க சார், " என்று சொன்னார். நம்புங்கள் இது உண்மை!!
Yraman

9 comments:

Anonymous said...

நான் இப்பொழுது என் பேரன்களுடன் விளையாடுவதுபோல் என் பையன் மற்றும் பெண்ணுடன் விளையாடவில்லையோ
என்று எனக்கு சந்தேகம் உள்ளது.
த. இ பற்றி மேலும் சிந்திக்க
இது உதவுமா?
:: Retired Unhurt ::

Anonymous said...

அப்பாவுக்கு அம்மாவுக்கு நான் கொடுத்து வந்த (கொடுத்துவந்த) மரியாதை இப்போது எனக்குக் கிடைப்பதில்லை என்ற ஒரு ஏக்கம், என் மகன் மகள்கள் தம் குழந்தைகளை சீராட்டுவது போல் என் பெற்றோர் என்னை (அதில் பத்து சதம் கூட) கவனிக்க வில்லையோ என்ற குறை இரண்டு உணர்வுகளும் எனக்கு ஏற்படுவதைப் பார்க்கும் பொது, நடுநிலை என்பது நம்மிடையே இல்லை என்றே தோன்றுகிறது.

Anonymous said...

மேலே அம்மா அப்பா பற்றியும், கீழே - மகன் மகள் பற்றியும் நினைக்கிறோம் என்றால் - அதுதானே "நடு" நிலைமை!

BhanuMurugan said...

அப்போது தன் காதலை பெற்றோரிடம் சொல்லமுடியவில்லை. இப்போது வீட்டுக்கு வீடு பெற்றோரால் நடத்தி வைக்கப்படும் காதல் அங்கீகாரத் திருமணங்கள் என்றால், இப்போது generation gap குறைந்து விட்டது என்றுதானே பொருள்.

உங்கள் பெற்றோருக்கு நீங்கள் பத்தில் ஒன்று. இப்போது எங்களுக்கு இருப்பதே ஒற்று. அதனால்தான் கொஞ்சல் quotient மாறுபாடு. 2 or 3 பெற்று, இரண்டையும் balance செய்பவரே/ செய்தவரே சிறந்த அனுபவம் வாய்த்தவர்.

kggouthaman said...

தலைமுறை இடைவெளி பற்றி தாதா (பாட்டிகள்?) தான் அதிகம் பேசுகிறார்களோ?
Is the change in values and value system - main reason for the gen gap?

Jawarlal said...

இடைவெளியே இல்லாத அளவுக்கு புதுத் தலைமுறையோடு நாம் அலைன் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.

http://kgjawarlal.wordpress.com

kg said...

நீங்கள் ஆட்டத்துக்கு ரெடீ என்றாலும், இளைய தலை முறையின் கணிப்பில் நீங்கள் குழுவுக்கு வெளியே - ஏனென்றால் அவர்கள் நண்பர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் காலத்தில் அப்படித்தான் இருந்தோம் ஆகையால் நீங்களும் என்கிற வாதம் நம் தலை முறையில் பெரிய தாக்கம் இன்றி இருந்தது. ரேடியோ சமையல் காஸ் தவிர வேறு அதிகம் வித்தியாசம் இல்லை. அவர்கள் படித்த அதே முகலாய சரித்திரம், கிழக்கிந்திய கம்பெனி ஆங்கில ஆட்சியாளர்களுடன், நாம் சற்று ஆறாம் ஜார்ஜ் + மெளன்ட் பாட்டன் பற்றியும் படித்தோம் அவ்வளவுதான். நாம் படித்த போது, பொறியியல் கல்வி என்றால் மூன்று வகை மட்டுமே! இப்போது?

raman said...

தலைமுறை இடைவெளி பற்றி தாத்தா பாட்டிகள் மட்டும் அதிகம் பேசுகிறார்கள் என்பது உண்மைதான். காரணம் த. இ. இல வெறுமைப்படுத்தப்படுவோரும் தனித்துவிடப் படுவோரும் துன்பப்படுவோர்களும் இவர்களே.

Anonymous said...

தமது மனக்குறைக்குக் காரணம் த.இ. என பெரியவர்கள் நினைக்கிறார்கள். சம காலத்துடன் ஒத்துப் போகவில்லை இவர்கள் என இளையவர்கள் நினைக்கிறார்கள். இரு தரப்புக்கும் நியாயம கற்பிக்க முடியும். இரண்டு பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்கும்தான். லட்சிய நிலை என்ன வென்றால் ஒரு தரப்பு அடுத்த தரப்பின் நியாயங்களை உணர்ந்து கொஞ்சம் விட்டுக் கொடுப்பதுதான். அப்படி செய்வதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். மாண்பு மிகு எதிர்க் கட்சித் தலைவர் என்ன நினைக்கிறாரோ நான் அறியேன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!