Saturday, February 27, 2010

சுஜாதா ரங்கராஜன்


சுஜாதா...

மந்திரச் சொல்.

அறுபதுகளின் பிற்பகுதியில் தென்றலாய் தொடங்கி போகப் போகப் புயலாய் மாறிய ஒரு எழுத்து ராட்சசர்...

இன்று அவர் மறைந்த நாள்.


புத்தகம் படிக்கும் பழக்கம் என்பது மு.வ கதை ஒன்றை படிப்பதுடன் தொடங்கியது. பின்னர் அம்புலிமாமா, விக்ரமாதித்தன் கதை முதல் கல்கி, அரு.ராமநாதன், மணியன், பி.வி.ஆர், ஜ.ரா.சு., விந்தன், சாண்டில்யன், ஜெகசிற்பியன், ரா.கி.ரங்கராஜன், கதைகள் வரை... எல்லாம் படிக்கத் தொடங்கிய காலத்தில் எங்கேயோ ஒரு சுஜாதா கதை படிக்க நேர்ந்தது. மற்ற எழுத்துகளில் இருந்து அதன் வித்யாசம் உடனே உரைத்து மனதில் இடம் பெற்றது.மாடிப் படிகளில் 
ங்
கி --> நடந்தான் என்று எழுதிய அவர் பாணி புருவம் உயர்த்த வைதத்தது. வேறு என்ன என்ன பத்திரிகைகளில் அவர் எழுதுகிறார் என்று தேட வைத்தது.

சமீப காலங்களில் அல்லது எழுபதுகளுக்குப் பின் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களுக்கு சுஜாதா நடை சாயல் இல்லாமல் இருக்காது. நடிப்புலகில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு இடத்திலாவது சிவாஜியைப் போல முயற்சி பண்ணுவார்கள் என்பது போல சுஜாதா பாணி, அவரது சில வார்த்தைகளை ஸ்வீகாரம் செய்யாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. அவர் இந்த அளவு தனது ஆதர்ச எழுத்தாளராய் தி. ஜானகிராமனை சொல்லி உள்ளார்.
அவரது பாலம் கதையைப் படித்து விட்டு, 'எனக்கு உன்னையே கொல்லணும் போல இருக்கு வரவா' என்று யாரோ லெட்டர் எழுதி இருந்தார்களாம்.

சிறுகதை, தொடர்கதை, நாவல், நாடகம், விஞ்ஞானக் கட்டுரைகள், பல்சுவைக் கட்டுரைகள்...சுஜாதா வீட்டு லாண்டரிக் கணக்கை எடுத்துக் கூடப் பிரசுரிக்க பத்திரிகையாளர்கள் தயாராய் இருந்தார்கள் என்று சொல்வதுண்டு..அவர் என்ன எழுதினாலும் பிரபலம் தான்.
சில வித்யாசங்கள், பாதி ராஜ்ஜியம், கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு, அனிதா இளம் மனைவி, காயத்ரி, (இந்தக் கதையின் கருவுக்கு சாவியிடமிருந்தே எதிர்ப்பு வந்ததாம்)..ஜேகே, வானமெனும் வீதியிலே, பதினாலு நாட்கள், எதை விட, எதைச் சொல்ல?

விகடனில் வந்த அவரின் 'கற்றதும், பெற்றதும்...' பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர். ஜூனியர் விகடனில் வந்த 'ஏன், எதற்கு, எப்படி? ' விஞ்ஞானக் கேள்வி பதில்கள்..

யாருக்கும் தெரியாததை இங்கு சொல்ல வரவில்லை. அவர் நினைவு நாளில் அவரை நினைவு கூரும் முயற்சிதான்.

".......எனவே இந்தக் கதையில் நீதி தேடுபவர்களுக்கு சரியாக மூன்று நிமிடங்கள் தருகிறேன், விலகுவதற்கு...
மூன்று நிமிஷம்.
மற்றவர்கள் மேலே படிக்கலாம்....".........
சுஜாதா பாணி!

சில பிரத்யேக வார்த்தைகள் சுஜாதா ஸ்பெஷல். ஆதார, உத்தேசம், போன்றவை உதாரணங்கள். பசித்த புலி தின்னட்டும் என்பது அவர் எழுதும் இன்னொரு சொற்றொடர். மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்கை சொல்லாமலேயே பிரபலப் படுத்தியவர்.

அறுபத்தைந்து, எழுபது வயதுகளிலும் இளமை மாறாத எழுத்துகளுக்கு சொந்தக் காரர். மற்றவர்களின் எழுத்துகளையும் ரசித்து, படித்து, மனமுவந்து பாராட்டுபவர்.

கதைகளிலும் நாவல்களிலும் ஆரம்பித்தாலும் அவர் எழுதிய கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும், பெற்றதும், சில எண்ணங்கள், விவாதங்கள் விமர்சனங்கள், போன்ற அவர் எழுத்துகளை வாசிப்பது சுகம். ஆரம்ப காலங்களில் பெண்கள் பற்றிய அவர் வர்ணனைகள் படிக்கும்போது சற்றே கூச்சப் படவைக்கும் அளவு இருந்தாலும், ஒரு தரப்பு வாசகனை கட்டி இழுக்க செய்த முயற்சியாகக் கூட அதைச் சொல்லலாம்.

ப்ரியா, காயத்ரி, போன்ற அவரது கதைகள் படமானபோது, அவை படமான விதம் குறித்து தன் கோபத்தை வெளிப்படுத்த மேற்கே ஒரு குற்றம் என்ற கதையை எழுதி 'இதை எப்படிப் படமெடுக்கிறார்கள் பார்க்கிறேன்..' என்று கோபப் பட்டவர், பிறகு அதே சினிமா உலகுக்குள் புகுந்து பல முயற்சிகள் செய்தவர்.

பாலச்சந்தர் அவரை ஒரு கதை எழுதித் தரச் சொல்ல, கடத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் எழுதிய மர்மக் கதையை பாலச்சந்தர் மாற்றி அற்புதமான காதல் கதையாக எடுத்ததைப் பற்றி சொல்லி இருந்தார்....(நினைத்தாலே இனிக்கும்)

ஒரே ஒரு படத்தில் 'நடித்துள்ளார்'! தைப் பொங்கல் என்ற படத்தில் ஒரு காட்சியில் தன் மனைவியுடன் அவர் வருவது போன்ற காட்சி இருக்கும்.

எழுத்தில் இவ்வளவு பேர் மனத்தைக் கொள்ளை கொண்டவர், மேடையில் தனக்கு பேச வராது என்பார். தன் மனைவி கூட தான் எழுதுவதை பின்னால் நின்று பார்த்தால் எழுதுவது நின்று போகும் என்று சொல்பவர், மன்னிக்கவும், சொன்னவர்.

கணேஷ் - வசந்த் என்ற சுவாரஸ்யமான பாத்திரங்களைப் படைத்து, ரசிகர்கள் மனதில் இடம் பெறச் செய்தவர். (ஆங்கிலத்தில் பெர்ரி மேசன், ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற பாத்திரப் படைப்புகளைப் பார்த்த/படித்த பாதிப்பாக இருக்கலாம்)

"ஆசார்யருக்கு வடை வாங்கிக் கொடுத்தால் நம்ம கட்சிக்கு வந்துடுவார்.."
"உங்களை ஒரு பார்ட்டியில பார்த்திருக்கேன்.." போன்ற வசந்தின் கமெண்ட்ஸ் அவர் சொல்லும் ஜோக்குகள், மற்றும் அவரது புத்தி கூர்மை, கணேஷின் ஒரு அறிவு ஜீவித் தனமான அலசி ஆராய்ந்து துப்பறியும் பாத்திரப் படைப்பு...ரசிகர்களால் மிகவும் விரும்பி படிக்கப் பட்ட கதைகள்..கொலையுதிர் காலம், நில்லுங்கள் ராஜாவே, மறுபடியும் கணேஷ், நிர்வாண நகரம், விபரீத கோட்பாடு, மேற்கே ஒரு குற்றம்....பிரியாவில் வசந்த் இல்லாத கணேஷ்..

கணையாழியின் கடைசிபக்கங்கள்...அவரது எண்ணங்களைப் படிப்பதில் தான் எத்தனை சுகம்...

கற்றதும் பெற்றதும் பகுதியில் ஒரு முறை (அவர் முதல் முறை பை-பாஸ் சர்ஜரி செய்து கொண்ட பின் என்று நினைக்கிறேன்) ஆஸ்பத்திரி அனுபவங்களைப் பற்றி எழுதும்போது அறுவை சிகிச்சைக்கு முன் தரப்படும் பச்சை நிற உடையை பற்றி ஒரு விமர்சனம் செய்திருப்பார். மேலும் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் நன்றாகப் படிக்க வேண்டும், எஞ்சினியர் ஆக வேண்டும், பைலட் ஆக வேண்டும் என்ற இலட்சியங்கள் மறைந்து ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் காலை பாத்ரூம் போய் நிம்மதியாய் சிறுநீர் கழித்து வந்து விட்டாலே போதும் என்ற நிலைக்கு வருவது வாழ்க்கையின் ஒரு Progressive Compromise என்று சொல்லி இருப்பார். வாசகர்களை 'சட்'டென அதிர வைத்த வாரம் அது.

பாசாங்குகளையும் , அலங்கார வார்த்தைகளையும் சட்'டென அகற்றி விட்டு நேர் வார்த்தைகளில் சிக்கனமாக முகத்தில் அறையும் வார்த்தைகள்..

அவரது Electronic Voting Machine இன்று பரவலாக உபயோகப் படுவது நான் சொல்லத் தேவை இல்லை.

சிலிகான் - சில்லுப் புரட்சி, தலைமைச் செயலகம் போன்றவை அவரது இன்ன பிறக் கட்டுரைகள். அம்பலம் டாட் காமில் அவர் எழுதியவை பின்னர் புத்தகமாகவும் வெளி வந்தது. திருக்குறளுக்கு விளக்கம் கூட எழுதி உள்ளார் என்று ஞாபகம். ஆரம்ப காலங்களில் கடவுள் மறுப்பு போலவும், சற்றே நாத்திகமும் பேசி (எழுதி) வந்தவர், பின்னாளில் ஆழ்வார் பாசுரங்கள் ஒரு எளிய அறிமுகம் என்று கல்கியில் எழுதினார். பிரம்ம சூத்திர விளக்கம் போன்றவை அவரது அசாதாரண ஆற்றலுக்கு எடுத்துக் காட்டு. கதைகள் எழுதுவதில் தொடங்கி அவர் தொடாத துறையே இல்லை எனலாம்.
சுருக்கமாக முடிக்க வேண்டும் என்றுதான் தொடங்கினேன்...சற்றே அதிகமாக நீண்டு விட்டாலும், இன்னும் எனக்கு ஒன்றுமே சொல்லாதது போல குறை.சுஜாதா...

மறக்க முடியாத, மறக்க விரும்பாத எழுத்தாளர்.
(பக்கத்தில் மீசையுடன் உள்ள சுஜாதா படத்தில் மீதியைத் தேடுபவர்கள் அந்தக் கதைப் புத்தகத்தின் பெயரைப் படித்துக்கொள்ளுங்கள். நாம் எல்லோரும் எவ்வளவு தேடினாலும் கிடைத்துவிடுவாரா - இம்மாதிரி எழுத்தாளர் இனிமேல்?)

31 comments:

ganesh said...

சுஜாதாவை அதிகம் விரும்புவர்களில் நானும் ஒருவன்.... எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தியது இல்லாமல் எந்த மாதிரியான புத்தககங்க்களை படிக்கவேண்டும் என்று அவரே சொல்லி இருப்பார்.. முக்கியமாக அறிவியல் சப்ம்பந்த்தமனவைகள்.....


என் ஒரே கவலை அவர் இப்ப்போது இல்லை என்பதே..


அவரைப் பற்றி எழுதியதர்க்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

புலவன் புலிகேசி said...

சுஜாதாவைப் பிடிக்கவில்லை எனச் சொன்னால் அது எழுத்துலகிற்கு நான் செய்யும் துரோகம்..அவ்ர் பற்றி எழுதியமைக்கு நன்றிகள்...

பட்டாபட்டி.. said...

எழுத்துலகச் சக்கரவர்த்தி...
என் ஆசான்..
அவரைப் பற்றி நினைவு கூர்ந்தமைக்கு என் நன்றி...

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த தொகுப்பை இன்னும் கூட எழுதி இருக்கலாமே என தோன்றுகிறது, சட்டென முடிந்த மாதிரி இருக்கிறது, மிக்க நன்றி.

ஜெட்லி said...

சுஜாதாவின் எழுத்துக்கு ரசிகன் என்பதில்
பெருமை கொள்கிறேன்...நேத்து தான்
மறுபடியும் கணேஷ் படிச்சு முடிச்சேன்....!!

தமிழ் உதயம் said...

சுஜாதாவுக்கு முன்னும் சரி, பின்னும் சரி... அவர் சாதனையை யாரும் செய்யவும் இல்லை. இனி செய்யப் போவதுமில்லை.

அண்ணாமலையான் said...

மறக்கவே முடியாத மறக்க கூடாத மனிதர்....

Anonymous said...

there will be one and only SUJATHA.i am lucky to hahe lived in his era.....

ராமலக்ஷ்மி said...

எழுத்தால் எல்லோரது நினைவுகளிலும் என்றைக்கும் வாழ்ந்திருப்பார் சுஜாதா. பதிவுக்கு நன்றி.

hareekaa said...

**//ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் காலை பாத்ரூம் போய் நிம்மதியாய் சிறுநீர் கழித்து வந்து விட்டாலே போதும் என்ற நிலைக்கு வருவது வாழ்க்கையின் ஒரு Progressive Compromise என்று சொல்லி இருப்பார்.//**

அப்பொழுது படித்த போது திக் கென்று தானிருந்தது. இப்பவும் அந்த வார்த்தை பொட்டில் அறைந்த மாதிரி உறைக்கிறது. எந்த எழுத்தை படித்தாலும் அவர் எழுத்தை படிப்பது போல் உணர்வு. அவர் இறந்து விட்டார் என்பது நிஜம் என்றாலும் அவர் நம் மனதில் இருந்து விட்டார் என்பது தான் நிஜம்.

அன்புடன்
ஹரிகா

யாஹூராம்ஜி said...

nice post, thanks for sharing

எங்கள் said...

நன்றி கணேஷ் (வசந்த்) புலவன் புலிகேசி.

விஜய் said...

என்ன ஒரு மொழி ஆளுமை அவரிடத்தில்,

அறிவுப்போதை தரும் எழுத்துக்கள் அவருடையது.

அவர் இருந்திருந்தால் இன்னும் பல விடயங்களை நாம் அறியும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

மறக்க முடியாத மாமுனிவர்

விஜய்

பா.ராஜாராம் said...

என்ன அருமையான,நெகிழ்வான பகிரல்!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஆசான்..!

meenakshi said...

என் அபிமான எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவர் கதைகளில் வரும் பெண்ணின் ஓவியத்தை பார்த்தால், இவர் அந்த பெண்ணை பற்றி வர்ணித்திருக்கும் அழகை படித்துதான் 'ஜெ' அவர்கள் அவ்வளவு அழகாக வரைந்திருப்பார் என்றே எண்ண தோன்றும். மறக்க முடியாத ஒரு எழுத்தாளர்.

சத்தியமூர்த்தி said...

ஒரு விதத்தில் பார்த்தால் இன்றைய ப்ளாக் உலகம் ஒரு சிறு பத்திரிகை போலத்தான். எல்லோருக்கும் எழுத வாய்ப்பு கொடுக்கும் சுதந்திரம் ப்ளாக் உலகில் இருக்கிறது. சுஜாதா இந்த அசுர வளர்ச்சியை பார்த்திருந்தால் உண்மையில் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார். அதிலும், ட்விட்டர் அவருக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். அவருடைய எழுத்தில் எனக்கு பிடித்தது எப்போதும் ஊடாடும் சன்னமான நகைச்சுவை.

http://www.sathyamurthy.com/2010/02/27/request-to-sujatha/

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

பகிர்வுக்கு நன்றி.

உங்கள் இந்த பதிவை
இங்கேஇணைத்துள்ளேன்.

நன்றியுடன் ஒரு சுஜாதாரசிகன்

பிரியமுடன்...வசந்த் said...

சிறந்த எழுத்தாளரின் நினைவுகள்....

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

அருமையான பதிவு . பகிர்வுக்கு நன்றி !

யவனராணி said...

சுஜாதாவின் நினைவு நாளில் திரு. அண்ணாமலையான் கூறியதுபோல்,

“மறக்க முடியாத, மறக்ககூடாத எழுத்தாளர் அவர்...”

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சுஜாதா - எழுத்துலகில் ஒரு ஏ.ஆர். ரஹ்மான் - இளசுகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். உங்கள் பதிவுக்கு நன்றிகள் பலப்பல!

ஹேமா said...

நல்லதொரு நினைவு மீட்டல்.
கால காலத்துக்கும் பொக்கிஷமானவர்கள்.

Prabhakaran said...

Abdul kalaamai pol yennai vaseegarithavar Sujaatha.. Naan kalaamai therinthukondathae Sujathaavin paenaavaalthaan.. mannikavum, typingaala thaan.....

thenammailakshmanan said...

சுஜாதாவுக்கு ஒரு முழுமையான சல்யூட் போல இருந்தது எங்கள் ப்லாக் ஆனால் ஸ்ரீரங்கத்து தேவதைகள் இல்லமல் அவரா

Jawahar said...

//பாலச்சந்தர் அவரை ஒரு கதை எழுதித் தரச் சொல்ல, கடத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் எழுதிய மர்மக் கதையை பாலச்சந்தர் மாற்றி அற்புதமான காதல் கதையாக எடுத்ததைப் பற்றி சொல்லி இருந்தார்....(நினைத்தாலே இனிக்கும்)//

பாலச்சந்தர் செய்த மாற்றம் பெருங்குழப்பத்தை உண்டு பண்ணி திரைக்கதை படு சொதப்பலாக இருந்தது அந்தப் படத்தில். பாலச்சந்தர் படமும் நன்றாக இருக்கும், சுஜாதா கதையும் நன்றாக இருக்கும். இரண்டும் சேர்ந்த போது?

ஊத்தாப்பத்தை பதநீரில் தோய்த்து சாப்பிடுகிற மாதிரி இருந்தது!

சுஜாதாவை சிறந்த முறையில் பயன்படுத்தியவர் சங்கர் மட்டுமே.....

ஒருவேளை கதை எழுதுவதற்கும், திரைக்கதை வசனம் எழுதுவதற்கும் இருக்கும் வித்தியாசங்களை அதற்குள் சுஜாதா நன்றாகக் கற்றுக் கொண்டாரா அல்லது சுஜாதா படமா சங்கர் படமா என்கிற கேள்வி எழுந்து விடுமோ என்கிற அச்சம் சங்கருக்கு இல்லாதிருந்ததா?

http://kgjawarlal.wordpress.com

அப்பாதுரை said...

இன்றைக்கு இத்தனை பேர் எழுதக் கிளம்பியிருப்பது தான் சுஜாதாவின் contribution என்று நினைக்கிறேன்.

அப்பாதுரை said...

கதை எழுதிய அளவுக்குத் திரைக்கதை எழுத வரவில்லை சுஜாதாவுக்கு. ஜவஹர் சொன்னது போல் நி.இ படு சொதப்பல்.

Anonymous said...

சுஜாதாவே குறிப்பிட்டது போல் கதை எழுதுவது வேறு அதை படமாக்குவது வேறு. பின் காலத்தில் சுஜாதா திரைக் கதைகளையும் நன்றாகச் செய்தார் என்றே நினைக்கிறேன். ஒரு சில புத்திசாலித்தனமான வார்த்தைகளில் கொண்டுவரப் படும் மூட் திரையில் கொண்டுவர அதிகம் சிரமப் படவேண்டும். மேலும் சஸ்பென்ஸ் எழுத்தில் சுலபம் திரையில் கஷ்டம். கல்கி பார்த்திபன் கனவு எழுதும்போது சிவனடியார் யார் என்று பெரிய மர்மம் வைத்து எழுதினார். அதையே ரொம்ப சிரமப் பட்டு செட் எல்லாம் போட்டு படமாக எடுத்த போது ரங்கா ராவுக்கு தாடி மீசை வைத்து மாறு வேஷம் போட்டு மாட்டிக் கொண்டார்கள். அதையே அடியார் வேஷம் வேறு நபரைப் போட்டு எடுத்து இருப்பின் நன்றாக இருந்திருக்கும் எம் ஜி ஆர் படங்களில் கூட ஒரு தொப்பி ஒரு சிறு தாடி ஒரு கூலிங் கண்ணாடி போட்ட வுடன் அவரை அடையாளம் தெரியாமல் வில்லன்கள் வலிய வந்து மாட்டிக் கொள்ளும் காட்சிகள் பல முறை வந்திருக்கின்றன. உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா பெண் ஜவுளிக் கடையில் சிறந்த மாறு வேடத்தில் இருப்பதைப் பார்த்த போது இந்த எண்ணங்கள் மேலோங்கின.

geetha santhanam said...

சுஜாதவைப் பற்றிய பதிவு அருமை. தமிழ் சிறுகதை உலகில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியவர். science fiction-ஐத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் என்றும் சொல்லலாம். அவரின் கரையெல்லாம் செண்பகப்பூ எனக்கு மிகவும் பிடித்த தொடர்கதை. நம்மால் என்றென்றும் மறக்க முடியாதவர். ----கீதா

ஜெகநாதன் said...

மறப்பதற்கில்லைதான். நம் எழுத்தில் சுஜாதா​ஒளிந்திருக்கிறார். கணையாழி-யின் கடைசிப்பக்கங்கள் அவர் எல்லாப்பக்கமும் சுழலுவார் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.

குமுதம் வார இதழின் பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். அப்போது குமுதம் அடைந்த உயர்வு எந்த பத்திரிக்​கையாலும் எப்​போதும் சாத்தியமில்லாத ஒன்று. ஏர்-இந்தியாவுடன் இணைந்து சுஜாதா நடத்திய இலக்கியப்​போட்டியின் வாயிலாகத்தான் சு. வேணு​கோபாலன், தாமரை போன்றவர்கள் நமக்கு பரிச்சயமானார்கள். குமுதத்தை தன் ஆடுகளமாக எடுத்துக் ​கொண்ட சுஜாதா தமிழ் வார இதழின் சாத்தியங்களை வாசகர்களுக்குப் புரிய​வைத்தார். குபாரா, ​தேவன், புதுமைப்பித்தன் ​போன்றவர்களின் கவிதைகள், வைத்தீஸ்வரன், வஐச. ​ஜெயபாலன், பாலா, கல்யாண்ஜி, இந்திரன், யூமா. வாசுகி ​போன்றோரின் கவிதைகள், இளைய தலைமுறைப் படைப்பாளிகளான இரா. முருகன் போன்றோரின் கதைகள் என கொண்டாட்டமாக குமுதம் அப்போது இருந்தது. நவீன இலக்கியம், கம்ப்யூட்டர் அறிமுகம் (இராதாகிருஷ்ணன் எழுதியது), ​மேற்கத்திய இசை, ஓவியங்கள், துணுக்குகள் என புது படிப்பவனுபத்தைத் தந்தார் சுஜாதா. அவர் பொறுப்பாசிரியர் பதவியிலிருந்து விலகியதும் குமுதம் அப்படியே தன் நிறத்தை மாற்றிக் கொண்டது. படைப்பாளியின் இடத்தை வேறு எதனாலும் நிரப்ப முடியுமா?

குமுதத்தில் தான் இருந்த போது எழுதிய 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' அவரின் சரித்திர எழுத்துத் திறமைக்கு ஒரு சான்று. கணேஷ்-வசந்த் இவர்களை ராஜராஜ​சோழன் காலத்திற்குக் கொண்டு சென்று எழுதிய கதை. துரதிர்ஷ்டவசமாக அது பாதியிலேயே நின்று​போனது. ஆனாலும் படித்த ஒவ்வொரு அத்தியாயங்களும் இன்னும் குதிரைக் குளம்பொலிக்க நினைவிலிருக்கிறது.

சுஜாதாவின் திரைமுயற்சிகளும் குறிப்பிட்டுச் சொல்லப்பட​வேண்டியவன. அவற்றை நீங்கள் இங்கு நன்கு நினைவுறுத்தியிருக்கிறீர்கள்.
அவரின் 'கரையெல்லாம் ​செண்பகப்பூ' நாவல் படமாக்கப்பட்டது. நாவலின் 30% தாக்கம் கூட திரையில் இல்​லை. இதை சுஜாதா எப்படி எடுத்துக் ​கொண்டார் என்று தெரியவில்லை. அவருக்கே தெரியாமல் அவரின் படைப்புகள் நிறைய சினிமாவில் சுடப்பட்டிருக்கிறது (ஏர்போர்ட் ஒரு உதாரணம்). அநாவசியமாக கூச்சல் ​போடமாட்டார். 'கண்ணெதிரே ​தோன்றினாள்' படத்துக்கு சுஜாதா வசனம் (படத்தலைப்பு கூட அவர் உபயம்தான்). அதில் ஒரு காட்சி: சிம்ரன் நின்று​கொண்டிருப்பார். அருகில் பிரசாந்த். சிம்ரனின் ​தோள் மீது ஒரு பட்டாம்பூச்சி வந்தமரும். அதை எடுத்துவிடுவார் பிரசாந்த். என்ன செய்யறே என சிம்ரன் கேட்க, அதற்கு பிரசாந்த் ​பேசும் வசனம்: "தோள்ல பட்டாம்பூச்சி உட்கார்ந்தது​.. உனக்கு வலிக்குமேன்னு எடுத்துவிட்டேன்"
சாதாரண எழுத்தாளர்கள் அவர்கள் ப​டைப்புகளில் நித்தியமாக வாழ்கிறார்கள். சுஜாதா போன்ற படைப்பாளிகள் அவர்கள் படைப்பையும் தாண்டி மற்றவர் படைப்புகளிலும் வாழ்கிறார்கள்.

குறிப்பு:
'சுஜாதா ரங்கராஜன்' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். சுஜாதா என்பதே போதும்தானே? இது ஏதோ அவரின் மனைவியை குறிப்பதாகப்படுகிறது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!