புதன், 17 பிப்ரவரி, 2010

இது கதையா - பகுதி இரண்டு.

முன் கதைச் சுருக்கம் : கனவும் விழிப்பும் ... 
நீ தினமும் என்னையும், நான் தினமும் உன்னையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ கேட்டதால் சொல்கிறேன், நாளைக் காலையில் நீ எழுந்த பிறகு நீ சந்திக்கின்ற உன் சொந்த பந்தம் இல்லாத நான்காவது உயிரினம் நாந்தான் - அந்த நான்காவது உயிரினத்தை ஞாபகத்தில் என்றும் வைத்திரு. மீண்டும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நாம் இந்தக் கனவுலகில் சந்திப்போம்." விழித்துக் கொண்டேன். வியப்புடன் யோசித்தேன்.
*****  ***** *****
படுக்கை அறை வாசல் பக்கம் என்னவோ - இருளில் நிழலுருவம் ஒன்று வந்தது மாதிரி இருந்தது - பயத்தில் 'ஓ....' என்று அலற வாய் திறந்தேன். அப்புறம் நிதானமாகப் பார்த்ததில் - அது பேயோ பிசாசோ இல்லை, என் மனைவிதான் என்று தெரிந்தது. (பெரிய வித்தியாசம் ஏதும் இல்லைதான்! )


உள்ளே எட்டிப் பார்த்து, அவள்  கேட்ட கேள்வியில் - விழிக்க வைத்த அலாரச் சத்தத்தின் விவரம் புரிந்தது. " தாம்பாளச் சத்தத்துல எழுந்துவிட்டீர்களா?   உங்களுக்கு கேட்டிருக்காது என்று நினைத்தேன். கேட்டிடுச்சா? ஆமாம் - நீங்க ஊருக்குப் போகிறதாகச் சொன்னீங்க இல்லியா - ஊருக்குப் போகிறதுக்கு முன்னால - காலை உணவாக சப்பாத்தி பண்ணி கொடுத்திடலாம்னு - மேலேயிருந்து தாம்பாளத்தை எடுத்தேன். அதுக்கு மேலே எப்பவோ வாங்கி வந்த மாதுளம்பழம் ஒன்றை குழந்தைங்க வெச்சிருக்கும் போலிருக்கு. தாம்பாளத்தை எடுக்கும்பொழுது பழம் என் மேலே விழுந்து, அதனால பயந்து, கை தவறி தாம்பாளம் கீழே விழுந்து விட்டது. சரி நீங்க எழுந்ததும் நல்லதாப் போச்சு - சப்பாத்தியோ பூரியோ - உங்களுக்கு எது வேண்டுமோ அதுக்கு கொஞ்சம் மாவு பிசைந்து கொடுங்க. - இந்தாங்க - தாம்பாளம், மாவு டப்பா, தண்ணி, உப்பு. ..நாலும் இருக்கு ..." சொல்லிகிட்டே சமையல் அறைப் பக்கம் நடையைக் கட்டினாள் - அதர்மப் பத்தினி..'மாதுளம் பழம் விழுந்ததால் தாம்பாளம் விழுந்தது, நாலும் இருக்கு....." இவை எல்லாம் என் மூளையில் திரும்பவும் (கனவு) மணி அடித்தது. ஆஹா கடவுள் சொன்னதை மறந்துவிட்டேனே. நான் சந்திக்கும் நான்காவது நபர் யார் என்று விழிப்போடு தேட வேண்டுமே. கடவுள் சொன்னதை நான் சரியாகக் கேட்டேனா - ஒரு வேளை மனைவிதான் கடவுளின் அம்சமோ?
சேச்சே - அப்படி இருக்காது - அதையும் தவிர - கனவில் அவர் ஸ்பஷ்டமாகச் சொன்னாரே - நீ சந்திக்கின்ற - சொந்த பந்தமில்லாத - நான்காவது உயிரினம் என்று! எனவே நான் கடவுளின் கணவன் இல்லை என்று தெரிந்துகொண்டேன். சொந்த பந்தம் இல்லை என்பதால் வீட்டிலே இருக்கும் மற்றவர்கள் கூட கடவுள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.


அப்போ யாரு ? கொஞ்சம் நிதானமா யோசிக்கலாம். யாரை எல்லாம் இன்றைக்குச் சந்திக்கிறோனோ அதை எல்லாம் முழு கவனத்துடன் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தீவிர சிந்தனைகளுடன் மாவு பிசைந்து கொடுத்துவிட்டு, வீட்டு வாசல் கதவைத் திறந்தேன். கடவுளைச் சந்திக்க நான் தயார். அவர் தயாரா?


அப்பொழுதுதான் கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் - கார் துடைக்கும் - பணியாளர் (பெயர் தெரியாது). சரி சொந்த பந்தமில்லாத முதல் உயிரினம் இவர். மனதில் குறித்துக் கொண்டேன். அவர், பக்கெட்டில் நீர் நிரப்பி, காரைக் கழுவ எடுத்துச் சென்றுவிட்டார். நான் வேறொரு பக்கெட்டில், நீர் நிரப்ப ஆரம்பித்தேன். 


அப்போ காம்பவுண்டுச் சுவர் மீது ஓர் ஈ உட்கார்ந்து, கைகளை தேய்த்து தேய்த்து, கழுத்திலும், முகத்திலும்  பூசிக் கொண்டது. இரண்டாவது உயிரினம் 'ஈ'  குறித்துக் கொண்டுவிட்டேன்.


பக்கெட் நீரை எடுத்துக் கொண்டு வாசல் நோக்கி நடந்து போகும்பொழுது - ஒரு தடிமனான (பெண்) உருவம், டிராக் சூட், சட்டை அணிந்து, தலையில் ஸ்கார்ஃப் அணிந்து வழக்கமாக பார்க் நோக்கிச் செல்லும் உருவம். பார்த்து, மூன்றும் ஆயிற்று என்று குறித்துக் கொண்டேன்.


பக்கெட் தண்ணீரை - வாசலில் இருக்கும் மரத்திற்கு ஊற்றியவாறு, தெருவைப் பார்த்தால் - அங்கே அவர் என் கண்ணில் பட்டார். கடவுள் இவரா? இவர்தானா?
(தொடரும்)   

9 கருத்துகள்:

 1. அது யாருன்னு சொல்லிட்டு வெட்டப்படாதா:)). இண்ட்ரஸ்டிங்

  பதிலளிநீக்கு
 2. யார் என்று தெரிந்த பின் தான் பின்னூட்டங்கள் தர இயலும். அடுத்த தவணையை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. எதுக்கு இப்படி சஸ்பென்ஸ் குடுத்து மண்ட காய விடறீங்க! அது யாருன்னு சொல்லிட்டு தொடரும் போட கூடாதா? சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க, நல்ல சுவாரசியமா இருக்கு.
  'அதர்ம பத்தினி' பேஷ்! இது நல்லா இருக்கே! அப்போ, இவங்க தன் கணவனை 'அசத் புருஷர்னு' சொல்லலாமா?

  பதிலளிநீக்கு
 4. சீக்கிரமா அடுத்த தொடரும்ம்ம்ம்ம்

  பதிலளிநீக்கு
 5. சீக்கிரம் தொடருங்க ராம்

  என்ன ஷங்கர் நீங்க என்று ஒரே சஸ்பென்ஸ் பதிவு

  பதிலளிநீக்கு
 6. pomogranate -ஐ கிரனேடு என்றெண்ணிப் பயந்து "உங்களை"யும் எழுப்பி விட்டாராக்கும்?
  சப்பாத்தி எப்படி?

  பதிலளிநீக்கு
 7. சப்பாத்தி மாவு மாதிரி பிசைஞ்சிருக்கீங்க. சுட்டபின்னாடிதான் ​தெரியும் எப்படின்னு!

  படிச்ச வரைக்கும் அருமை!

  பதிலளிநீக்கு
 8. கதையை ஆவலோடு படிக்கிறீங்க எல்லோரும்.
  ரொம்ப சந்தோசம், நன்றி : -
  வானம்பாடிகள், சைவகொத்துப்பரோட்டா, அனானி, மீனாக்ஷி, ஹேமா, தேனம்மை, புதிய வரவாக ஜெகநாதன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!