செவ்வாய், 5 மார்ச், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : வாழ்க்கை - பரிவை சே. குமார்


​​
வாழ்க்கை
பரிவை சே குமார் 

"இப்படியே எத்தனை காலந்தான்டி இருக்கப் போறே...?" "இதை நீ இத்தோட ஆயிரந்தடவை கேட்டுட்டேம்மா... என்னோட பதில் எப்பவுமே ஒண்ணுதான்... பாக்கலாம்... ஏந்தலையில என்ன எழுதியிருக்குன்னு..." "எத்தனை வருசத்துக்கு தலையெழுத்து என்னன்னு பாக்க காத்துக்கிட்டு இருக்கது.... அதான் தெரிஞ்சி போச்சுல்ல... தலையில என்ன எழுதியிருக்குன்னு... இனி எதுக்கு காத்துக்கிட்டு இருக்கணும்... உன்னோட வாழ்க்கையை சரியானதா அமைச்சிக்க வேண்டிய முயற்சியில் இறங்க வேண்டியதுதான்..." "அட ஏம்மா நீ வேற... எந்த முயற்சியிலயும் நான் இறங்க விரும்பலை... என்னை ஆளை விடு..." "நீ எப்பவும் இப்படித்தான் எடுத்தெறிஞ்சி பேசுவே... நடந்ததை நினைச்சிப் பாரு... இப்படியே வாழ்ந்து என்ன லாபம்...? இனியாவது உன்னோட வாழ்க்கையில நல்லது நடக்கணும்..." "ஏம்மா ஜாதகம் பார்த்து பத்துக்கு எட்டுப் பொருத்தம் இருக்குன்னு சொல்லித்தானே கட்டி வச்சீங்க... அந்தப் பொருத்தமெல்லாம் எங்க போச்சு..." அம்மாவைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தாள். "நீ விதண்டவாதம் பேசாதே... ஜாதகம் நல்லாயிருக்குன்னுதான் செஞ்சி வச்சோம்... ஆனா இப்படி ஆகும்ன்னு யாருக்குத் தெரியும்..?... உன்னோட தலையில அப்படி எழுதியிருந்திருக்கு..." "என்னம்மா நீ.... எதிர்காலம் நிகழ்காலம்ன்னு எல்லாம் சொல்ற ஜோசியருக்கு கல்யாணத்துக்குப் பின்னால இப்படி நடக்கும்ன்னு சொல்லத் தெரியலைன்னா அந்த ஜாதகம் பொய்தானே... பின்ன எதுக்குப் பொருத்தம் பாக்கணும்..." "நீ உங்கப்பனை மாதிரியே ஜாதகம் பொய்.... சாமி பொய்யின்னு பேசுவே... உன்னோட வாழ்க்கையை நீதான் தீர்மானிக்கணும்... இத்தனை வருசம் பாத்தாச்சு... இனிமே இதுல என்ன நல்லது நடந்துறப் போகுது.... போனவன் ஒரு பிள்ளையை வேற கொடுத்துட்டுப் பொயிட்டான்... அதோட எதிர்காலம்... உன்னோட எதிர்காலம் எல்லாத்தையும் பாக்கணும்டி... உன்னைய இந்த நிலைமையில எங்களால பாக்க முடியலை... எங்களுக்குப் பின்னால உன் கூடப் பிறந்ததுங்க உனக்கு என்ன செய்யப் போகுதுக... உன்னை எப்படிப் பாக்குங்கன்னு எங்களுக்குத் தெரியாது... அதனால உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக் கொடுத்துட்டா நாங்க சந்தோஷமாப் போய்ச் சேருவோம்." "அம்மா இப்ப எதுக்கு சாவைப் பத்திப் பேசுறே... எனக்குன்னு இருக்கது சாதனாவும் நீயும் அப்பாவும்தான்... எங்கூடப் பிறந்தவங்க தயவுல நான் எப்பவும் வாழ நினைக்கலை... அது சரி பிற்காலத்துல எனக்கென்ன பிரச்சினை வரும்ன்னு நினைக்கிறே... நான் படிச்ச படிப்பு இருக்கு... வேலைக்குப் போறேன்... சாதனாவை நல்லாப் படிக்க வச்சி, நல்ல இடத்துல கட்டிக் கொடுத்துட்டா போதாதா... அவ கல்யாணத்துல சத்தியமா சாதகம் பாக்கமாட்டேன்... எனக்கு இந்த வாழ்க்கை நிறைவாத்தாம்மா இருக்கு... ப்ளீஸ்... புரிஞ்சிக்க..." "உனக்கு இது நிறைவாத் தெரியலாம்... எங்களுக்கு அப்படியில்லடி... பட்டாம்பூச்சியா இருந்த உன்னை இப்படி ஒரு இடத்துல கொடுத்துட்டோமேன்னு மனசு கிடந்து தவிக்கிதுடி..." "அம்மா... இங்க பாரு... வந்தியா, எங்களைப் பார்த்தியா, சந்தோஷமா இருந்துட்டுப் போனியான்னு இரு... சும்மா என் வாழ்க்கை அப்படியிருக்கு இப்படியிருக்குன்னு கண்ணைக் கசக்காதே... என்னோட வாழ்க்கை இப்படியே அழகாய்த்தான் நகருது... இதுவே போதுமானது... புரியுதா..?" "இங்கபாரு.... இது அழகாத் தெரியும்டி... நாளைக்கு என்னாகுமோன்னு பாதுகாப்பில்லாத வாழ்க்கைடி இது... எங்க சின்னாயா என்ன கஷ்டப்பட்டுச்சுன்னு உனக்குத் தெரியாதுடி.... புருஷனை இழந்த அதை எங்க ஆயாவோட அண்ணன் தம்பி பொண்டாட்டிங்க அண்ட விடலை... எங்க பெரியாயா கூட்டிக் கொண்டுபோய் அதோட வச்சிருந்துச்சு... அதோட பிள்ளைகளை ஆத்தாவா இருந்து வளத்துச்சு... கடைசியில என்னாச்சு எங்க பெரியாயா செத்ததும் யாரும் வச்சிக்கலை... எங்க வீட்டுல வந்து கிடந்து கஷ்டப்பட்டு செத்துச்சு..." "இந்தக் கதையை பல தடவை சொல்லிட்டே... நானும் உங்கிட்ட ஆரம்பத்துலயே ஏன் நம்ம ஆயா வீட்ல கூட்டியாந்து வச்சிக்கலைன்னு கேட்டதுக்கு... பெரிய கூட்டுக் குடும்பம்... கஷ்டப்பட்ட குடும்பம்ன்னு எல்லாம் கதை சொல்லியிருக்கே... போதும்மா உன்னோட சின்ன ஆயா புராணம்... அதுக்கு பொழைக்கத் தெரியலை... படிப்பறிவில்லாத மனுசி... எனக்கு எப்படி வாழனுங்கிற வழி தெரியும்மா... என்னை இப்படியே இருக்க விடு... நான் சத்தியமா சின்னாயா மாதிரி இருக்கமாட்டேன்... சரியா..?" "நீ இப்படித்தான் பேசுவே... எனக்குத் தெரியாது ஒரு நல்ல முடிவ எடுத்து உங்கப்பாவுக்கு போன் பண்ணிச் சொல்லு... அவரு மத்த விஷயங்களைப் பாத்துப்பாரு... உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்காதே... சாதனாவையும் யோசி...." "என்ன யோசிச்சாலும் என்னோட முடிவு இதுதான்... அப்படி ஒரு முடிவு எனக்குள்ள எப்பத் தோணுதோ அப்பச் சொல்லுறேன்..." "ம்... என்னமோ செய்யி... எப்பவுமே நீ எங்க மனசைப் புரிஞ்சிக்கவே மாட்டே.... நாங்க ரெண்டு பேரும் உன்னோட கவலையை காலம் பூராம் சுமந்து அந்தக் கஷ்டத்துலயே மண்டையைப் போட்டுடுறோம்..." கண்களைக் கசக்கிய அம்மாவை "என்னம்மா நீ... இன்னும் கொஞ்ச நாளாகட்டும்... ப்ளீஸ்..." என்று அணைத்துக் கொண்டாள் சுகந்தி. சுகந்திக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது... வீட்டில் பார்த்த மாப்பிள்ளை சங்கர் துபாயில் இஞ்சினியர்... கை நிறையச் சம்பளம்... குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு போய் விடுவான் என்று சொல்லி ஜாதகப் பொருத்தம் பார்த்து ஒரு சுப முகூர்த்த சுப தினத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் வைத்துத் திருமணத்தை நடத்தினார்கள். திருமணம் முடிந்து அவன் அவளுடன் இருந்த அந்த மூன்று மாதங்கள் அவர்களுக்கு மிகவும் சந்தோஷமான தினங்களை தினம் தினம் கொடுத்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் அவளுக்கு அவன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று உறவுகள் எல்லாம் சொன்னார்கள். தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பானதாய் அமைந்ததில் ரொம்ப மகிழ்வாய் இருந்தார்கள் அவளின் பெற்றோர். விடுமுறை முடிந்து ஊருக்குச் செல்லும் நாளில் கண்ணீரோடும் கவலையோடும் கனவுகளை மனசுக்குள் புதைத்து வைத்துக் கொண்டு அனுப்பினாள். ஊருக்குப் போனதும் விசா ஏற்பாடு செய்து கூட்டிக் கொள்வதாச் சொல்லிச் சென்றான். அடிக்கடி போன் பண்ணினான்... அவளைக் கூட்டிக் கொள்வதற்கான முயற்சியில் இருப்பதாகச் சொன்ன நேரத்தில்தான் அவள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதன் பின்னர் அவன் அடிக்கடி போன் பண்ணி அவள் நலம் விசாரித்துக் கொண்டிருந்தான். சாதனா பிறந்த பிறகு அவன் கொடுத்துவிட்ட பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்த நண்பன் அவன் கொடுக்கச் சொல்லாத செய்தியையும் மெல்லச் சொல்லிச் சென்றான். துபாயில் அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கு... தன்னுடன் வேலை பார்த்த மலையாளி இஞ்சினியரைத் திருமணம் செய்து கொண்டுள்ளான். அவளுக்கு ஒரு குழந்தை இருக்கு என்ற செய்தியின் விளைவுகள் குடும்பங்களில் வெடிக்க, பிரச்சினை பெரிதாகிய போதும் சுகந்தி எதுவும் பேசவில்லை. அதன்பின் சங்கருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். தன்னைத் தனிமைப்படுத்தி சாதனாவை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள். அவளின் பெற்றோருக்கோ முறைப்படி விவாகரத்து வாங்கி வெறொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம். அவளுக்கோ அவன் திருந்தி வர வேண்டும்... மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை... இருந்தாலும் தன் மகளுக்கு உயிர் கொடுத்தவன் தனக்கு கணவனாக இல்லாவிட்டாலும் அவளுக்கு அப்பனாக ஒருநாள் திரும்பி வருவான்... வரவேண்டும் என்று மட்டும் நம்பினாள். ஊரில் பிரச்சினைகள் என்பது தெரிந்தபின் துபாயில் இருக்கும் சங்கர் தொடர்பிலேயே வரவில்லை. அவன் குடும்பத் தொடர்பு எல்லையில் இருந்து வெளியில் தங்கிவிட்டான். தான் ஒரு புதுவாழ்க்கைக்கு தன்னைப் புதுப்பித்துக் கொண்டாலும், சாதனாவால் புது வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியுமா..? அப்பா என்று இன்னொருவரை அழைப்பதில் அவளுக்கு ஆனந்தம் இருக்குமா...? அப்படியே அவள் மீது புதியவர் பாசம் வைத்திருந்தாலும் அவருக்கென குழந்தை வேண்டுமென நினைப்பாரல்லவா...? அப்படி குழந்தை பிறந்தால் சாதனா அந்நியப்பட்டுப் போவாளல்லவா...? என பல சிந்தனைகள் அவளுக்குள்... மூன்று மாதம் என்றாலும் தனக்குள் மூழ்கி முத்தைக் கொடுத்தவனை விடுத்து புதிதாய் ஒருவனுடன் எப்படி... இந்த வாழ்க்கை இப்படியே நகரட்டும்... என்ற முடிவில்தான் அம்மாவின் நச்சரிப்பை ஒதுக்கிக் கொண்டிருந்தாள். அலுவலகத்தில் தோழியிடம் இதைக் குறித்துப் பேசினாள்... அவளும் அவளின் அம்மாவின் முடிவுதான் சரி என்றும்... மனைவியை இழந்து குழந்தையுடன் இருக்கும் யாராவது ஒருவரை மறுமணம் செய்யும் பட்சத்தில் உன்னையும் சாதனாவையும் அவர் புரிந்து கொண்டு வாழ்வார் என்றும் சொன்னாள். சீதாவுக்கு அதில் விருப்பம் துளியும் வரவில்லை. தன் குழந்தை இன்னொருவரை அப்பா என்றழைப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. அதேபோல் இன்னொருத்தியின் பிள்ளை தன்னை அம்மா என்றழைக்கும்போது முழுமையான அன்பைக் கொடுக்க முடியுமா..? அப்படியே கொடுத்தாலும் அந்தப்பிள்ளையின் பாசம் கடைசிவரை கிடைக்குமா..? என்றெல்லாம் யோசித்தவளின் மனசுக்குள் தன் குழந்தைக்கு உயிர் கொடுத்தவன் என்றாவது ஒருநாள் அவளின் அப்பாவாகத் திரும்பி வருவான் என்று நம்பினாள். அதை தோழியிடம் சொன்ன போது, அடி பைத்தியக்காரி... இனி அவன் வருவான்னு நினைக்கிறே... வரவே மாட்டான்... சரி அப்படியே வந்தால் நீ மன்னித்து ஏற்றுக் கொள்வாயா...? அப்ப அவன் செய்ததை சரி என்று ஒப்புக் கொள்கிறாயா...? உன்னை ஏமாற்றி திருமணம் செய்தவனை எப்படி ஏற்றுக் கொள்வாய்...? என்றெல்லாம் திருப்பிக் கேட்டாள், 'அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டு குடும்பம் நடத்த நான் ஒண்ணும் பத்தாம்பசலி இல்லடி... உலகத்தை புரிஞ்சவ.... என் குழந்தைக்கு உயிர் கொடுத்தவனை இவந்தான் உன் அப்பன் என்று அவளிடம் அடையாளம் காட்ட வேண்டும்... அப்படி அவன் வராத பட்சத்தில் உன் அப்பன் இறந்துவிட்டான் எனச் சொல்லி கதையை முடித்து விடுவேன்." என்றாள். "அப்புறம் எதுக்கு அவன் வரணும்ன்னு நினைக்கிறே... எப்பவோ உன்னைக் கொன்னவனை இப்ப நீ கொன்னு சுபம் போட்டுடு..." "இல்லடி... அவன் வருவான்... இவன்தான் உன் அப்பன்... நம்மை விட்டுட்டுப் போனவன்னு என்னோட சாதானாக்கிட்ட சொல்லும் நாள் கண்டிப்பாக வரும்... உனக்குத் தெரியுமா இப்பல்லாம் எங்க பேர் பொருத்தத்தை நினைச்சா எனக்குச் சிரிப்புத்தான்டி வருது" "நீ சுகந்தி... அந்தாளு சங்கர்.. இதுல என்ன பேர் பொருத்தம் வரப்போகுது." சிரித்தபடி கேட்டாள். "உனக்குத் தெரியுமா எனக்கு கோவில்ல கூப்பிட்ட பேர் சீதாலெட்சுமி... எங்க பாட்டி பேர்... வீட்டுல அடிச்ச கல்யாணப் பத்திரிக்கையில போட்டிருந்தாங்களே..." "அட ஆமால்ல... அப்ப அந்தாளு..?" "அந்தாளுக்கு கோயில்ல கூப்பிட்ட பேரு இராமச்சந்திரன்... எங்க அத்தை என்ன பேர் பொருத்தம் பாத்தியளா... யாருக்கு அமையும்ன்னு எல்லார்க்கிட்டயும் சொல்லுச்சு... இப்ப நினைச்சா சிரிப்பு வருது. புராணத்து ராமனோ பிறன்மனை நோக்காதவன்.... ஆனால் இவனோ... கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்திக்கு புருஷனாயிட்டு என்னை ஏமாத்தி... மூணு மாசம் அம்புட்டுச் சந்தோஷமா வச்சிருந்து..." "அந்த மலையாளச்சியையும் ஏமாத்தின்னு சேத்துக்க..." "ஆமா... ஒருவிதத்துல அவளும் பாவந்தான்... இருந்தாலும் அவளுக்குப் புருஷனா... புள்ளைக்குத் தகப்பனா அவ கூட இருக்கானே..." சொன்னபோது கண் கலங்கினாள். "ஏய்.. என்னடி... இவ்வளவு தெளிவாப் பேசுறே.. பின்ன ஏன் அழுதுக்கிட்டு..." தோள் சாய்த்தாள் தோழி. "ம்... முடியலடி... எல்லார்க்கிட்டயும் போல்டா பேசிடுறேன்... ஆனா நான் ஏமாத்தப்பட்டேன்னு நினைக்கும் போது தாங்க முடியலடி... பல ராத்திரிகள்ல என் தலகாணி நனையிறதை என்னால நிறுத்த முடியலடி..." "ஏய்... விடுடி... உன் வாழ்க்கை நல்லாயிருக்கும்" "நல்லாயிருக்கணும்... எல்லார் முன்னாலயும் வாழ்ந்து காட்டணும்... சாதனாவை சாதிக்க வைக்கணும்... சரி விடு... என் பிள்ளைக்கு அப்பன் அவன்தான் என்பதை அவளுக்குச் சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமுன்னா அவனை அதற்காக மன்னிக்கத் தயார்... அது நடக்குமா... நடக்காதா..? எங்க அம்மா அப்பா விருப்பம் என்ன ஆகும்...? எதுவுமே என் கையில் இல்லை... எல்லாம் காலத்தின் கையில் இருக்கு... எது நடந்தாலும் அது நல்லதுக்கே என்பதுதான் என்னோட பாலிசி. நடப்பது நடக்கட்டும்." என்றபடி தோழியின் மடி சாய்ந்தாள் சீதாலெட்சுமி என்ற சுகந்தி. -'பரிவை' சே.குமார்.

50 கருத்துகள்:

  1. வணக்கம். குமாரின் கதையின் முதல் வரியே அட்டகாசமான ஈர்ப்பு கதை என்னவ இருக்கும் என்று யோசிகக் வைக்கும் வரி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் முதல் வரியே கதைக்குள் இழுக்கனும் என்று சுஜாதா சொல்லியிருந்தது எங்கோ வாசித்த நினைவு....அடுத்த வரியும் சொல்லுகிறது..

      கீதா

      நீக்கு
    2. இப்படியான கல்யாணங்கள் வேதனை...சுகந்தியைப் போன்று நினைத்து வாழும் பெண்களும் உண்டு. மறுமணம் புரியாமல் தன் குழந்தைக்காக...என்று.

      அவன் மீண்டும் வந்தாலும் மற்றொரு பெண்ணையும் ஏமாற்றித்தானே வருகிறான் என்றும் எண்ண வைக்கிறது. முடிவு சுகந்தியின் கையில் எதுநடந்தாலும் நல்லதுக்கே என்ற முடிவு...நல்ல பாலிசி...இருந்தாலும் இவ்விஷயத்தில் மட்டும் யோசிக்க வைக்கிறது ஏனென்றால் அவன் மறுமணம் புரிந்து இன்னொரு குழந்தைக்கும் தகப்பன் என்பதால்...

      கீதா

      நீக்கு
    3. காலை வணக்கம் கீதா ரெங்கன். ஆமாம், சுஜாதா அப்படிச் சொல்லியிருந்ததை நானும் படித்திருக்கிறேன்.

      நீக்கு
    4. குமார் உங்கள் முதல் வரியும் கூடவே தொடர்ந்த இரண்டாவது வரியும் சொல்லிவிட்டது இது ஒரு பெண்ணின் மணவாழ்க்கைப் பிரச்சனை, பிரிவு, துயர் என்பது என்றாலும் கூடவே வேறு ஒன்றும் தோன்றியது..ஒரு வேளை அப்படியும் இருக்குமோ கதை..என்று...அப்படிச் சிந்திக்க வைத்து உள்ளே கொண்டு சென்ற கதை குமார்...வாழ்த்துகள்!

      அந்த இன்னொன்று என்ன்ன என்று அதை இங்கு சொல்லவில்லை ஏனென்றால் அது வேறு ஒன்றுமில்லை...ஒரு கதை நான் எழுதத் தொடங்கியது..பாய்ன்ட்ஸ் மட்டும் போட்டு வைத்திருக்கிறேன்...அதான்...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    5. //கதையின் முதல் வரியே கதைக்குள் இழுக்கனும்// - சுஜாதா சொன்னது, ரோஹித் ஷர்மா போல முதல் 25 பந்துகள் கட்டை போட்டுவிட்டு பிறகு விசுபரூபம் எடுப்பதுபோல் சிறுகதை எழுதக்கூடாது. முதல் வரியிலேயே கதை ஆரம்பித்துவிடணும். ஆனால் சரித்திர நாவல்களுக்கு அப்படி இல்லை. நிலம், காற்று, மரம் வர்ணணைகள் முடிந்து, ராஜபாட்டையின் வர்ணணையும் செய்து (கிட்டத்தட்ட அந்த வாரத்திற்கான மேட்டர் முடியப்போகும் சமயம்), ஒரு பெண்ணைப் பற்றிக் கோடி காண்பித்து (கொஞ்சம் கவர்ச்சியா... அப்போதான் ஓவியருக்கு படம் போட மேட்டர் கிடைக்கும், வாசகர்களும் அடுத்த வாரம் ஏதோ வரப்போகுதுன்னு வாயைப் பிளந்துகொண்டு காத்திருப்பார்கள்) பிறகு 'தொடரும்' போடலாம்.

      இது 'நான் சொல்லலை' என்று சுஜாதாவா வந்து மறுக்கப் போகிறார்?

      நீக்கு
    6. @கீதாக்கா... ரொம்ப நன்றிக்கா... அப்படியா ஆரம்பிக்குது முதல்வரி... :)

      நீக்கு
    7. விரைவில் உங்க கதையை எதிர்பார்க்கிறேன் அக்கா.

      நெல்லைத்தமிழன் அண்ணாச்சி அதானே சுஜாதாவா வந்து நான் எங்கய்யா சொன்னேன்னு கேக்கப் போறாரு... அப்பா பணம் அனுப்புன நிகழ்வு கூட வேறொருவரின் கதைதான் என்றாலும் அதை சுஜாதா சொன்னதாக பத்திரிக்கைகளில் சுற்றி வந்து சமீபத்தில் பாக்யாவில் வந்த போது அது யாருடைய வாழ்வில் நடந்த அவரே முகநூலில் புலம்பி பாக்யா ஆசிரியர் குழுவுடன் மோதினார்... இந்தச் செய்தி முன்னர் பல பத்திரிக்கைகளில் வந்ததுதான்... சுஜாதாவா வரப்போறாருன்னு அடிச்சி விட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க பத்திரிக்கைக்காரர்கள்....

      நீக்கு
  2. மனதை வேதனைப்படுத்திய கதை. பல பெண்களின் நிலைமை இப்படித்தான்! இதையும் பொறுத்துக்கொண்டு தன்னை ஏமாற்றியவன் வர வேண்டும் என எதிர்பார்ப்பதும் அதே பெண் மனம் தான். பரிவை எப்போதும் போல் நன்றாக அலசி இருக்கிறார். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    பரிவை குமார் உங்கள் கதை இப்போது நடப்பது போல எழுதி இருக்கிறிர்கள்.

    பெண் உள்ளப் போராட்டங்கள் தெளிவாகத் தெரிகிறது.
    ஏமாற்றினவனை ஏற்கும் பக்குவம் சிலருக்கே அமையும்.

    சீதாலட்சுமியின் பெண் வளர்ந்த நிலையில் விளக்கமாக
    எடுத்துரைத்தால் புரிந்து கொள்வாள்.
    இன்னோருத்தியை விட்டு விட்டு வந்தால்
    அவள் வாழ்வும் கசப்பாகுமே.

    கதை முடிவு எப்படி இருக்கும் என்று என்னை யோசிக்க வைத்துவிட்டீர்கள். வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. சீதை மன்னிக்க காத்து இருக்கிறாள், ராமன் வரட்டும்.

    //எது நடந்தாலும் அது நல்லதுக்கே என்பதுதான் என்னோட பாலிசி. நடப்பது நடக்கட்டும்." ?/

    சுகந்தியின் உறுதியான எண்ணம் மகிழ்ச்சி தருகிறது.
    கதை அருமை. குமாருக்கு வாழ்த்துக்கள்.
    குமாருக்கும், எங்கள் ப்ளாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றிம்மா...
      எது நடந்தாலும் அது நன்மைக்கே என்பதுதான் என் பாலிசியும் என்பதால்தான் பிரச்சினைகளுக்கிடையே நகர்ந்து செல்ல முடிகிறது... அதுதான் கதையின் இறுதிப் பாராவிலும்...

      நீக்கு
  6. // எது நடந்தாலும் அது நல்லதுக்கே...
    நடப்பது நடக்கட்டும்...//

    அவ்வளவு தான்... வாழ்க்கையின் தத்துவமே இது தான்...

    விடியும் நேரத்தில் கண்டிப்பாக விடிந்து விடும்...

    அன்பின் குமார் அவர்களது கதை என்றாலே அதிலொரு படிப்பினை இருக்கும்...

    வலை உலகில் ஒளி வீசும் முத்துகளில் அவரும் ஒருவர்....

    நல்லகதை.. வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றிய்யா...
      வேலையும் நிம்மதியற்ற வாழ்வுமாய் நகரும் நிலையில் வலைப்பக்கம் வருவதே அரிதாகிவிட்டது... எப்போதேனும் என் வலையை புதுப்பித்துக் கொள்வேன்... யாருடைய வலைக்கும் செல்வதும் இல்லை என்றாலும் என் மீதான தங்களின் அன்பு மனம் மகிழச் செய்கிறது.

      நீக்கு
  7. காலை வணக்கம்.

    பரிவை குமாரின் கைவண்ணத்தில் சிறப்பான கதை. எத்தனை கஷ்டம் அந்தப் பெண்ணுக்கு.

    பதிலளிநீக்கு
  8. சங்கர் மாதிரி கொங்கா மட்டைகளை நானும் அபுதாபியில் சந்தித்து இருக்கிறேன்.

    அவனுக்கு நான் புத்தி சொல்ல, அவன் என்னை வாழத்தெரியாதவன் என்றான் (அதாவது மறைமுகமான இளிச்சவாயன்) இதில் எனக்கும் அவனுக்கும் சண்டையே வந்தது.

    இன்றைய நிலையில் அவன் சொன்னது சரிதான் போலும்... தியாகங்களுக்கு மதிப்பில்லை நான் வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம்.

    இன்றும் அவன் ஸ்ரீலங்கா பெண்ணோடும், மகனோடும் மகிழ்வான வாழ்க்கையே...

    அவனுக்கு இந்தியா தேவையும் இல்லை வரவும் மாட்டான் காரணம் அவன் அபிநந்தன் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா...
      இங்கு நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள்...
      மனைவி மக்களுடன் மகிழ்வாய் பேசிக் கொண்டு பிலிப்பைனி, இலங்கை, ஆந்திரா, பங்களாதேஷ், தமிழ், மலையாளம் என எதாவது ஒன்றுடன் வாழ்ந்து கொண்டும்தான் இருக்கிறார்கள்.

      தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. சீதை ராமனை மன்னித்தாள் (மன்னித்தாளா?) வகை கதையா? காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  10. கதை மிகவும் நன்றாக இருக்கிறது. தன் குழந்தைக்காக அவள் தனியாக வாழ முடிவெடுத்தது நல்லதுதான். ஆனாலும் வாழ்க்கையில் நடப்பவை அனேகமாக பல, நம் கையில் இல்லை.

    சங்கர் மாதிரியானவர்கள் எல்லா நாட்டிலும் உண்டு. நம் நாட்டில் கணவன் செண்டிமெண்ட் ஜாஸ்தி. வெளிநாடுகளில் சங்கர் மாதிரியான அனேகர் உண்டு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா...
      ஆமாம் எதுவும் நம் கையில் இல்லை... நடப்பது நடந்தே தீரும்.

      நீக்கு
  11. சுகந்தியின் மன உறுதியுடன் நல்லதொரு எதிர்ப்பார்ப்பு இருந்தாலும், அது நிறைவேற வேண்டுமே என்று மனம் ஏங்குகிறது...

    பதிலளிநீக்கு
  12. தவறு ஏதும் செய்யாமலே தண்டனை அவளுக்கு ...

    என்ன சமூகம் இது ...அவளின் கனவுகள் , ஆசைகள் என அனைத்தையும் அழித்து விட்டு ஒருவன் மகிழ்வுடன் வாழ்கிறான் ...


    அவளும் இவனை விலகி மீண்டும் ஒரு நல்வாழ்வு வாழ வேண்டும் ..

    கதையும் தாண்டி நிஜம் போல பதியும் உணர்வு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவள் கண்டிப்பாக நல்வாழ்வு வாழ்வாள் என்று நம்புவோமாக... :)

      நனறி சகோதரி.

      நீக்கு
  13. அருமையான கதை அதை உங்கள் நடையில் அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். முடிவை வாசகர்களிடம் விட்டு விட்டீர்கள்.

    இது யாதார்த்தத்தில் நடப்பதுதான் என்றாலும் அவள் கணவன் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு வாழும் போது எப்படி இப்பெண்ணால் ஏற்றுக் கொள்ள முடியும்? சுகந்திக்கு முன்னரே அவன் அப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருந்தால் சுகந்தியை ஏமாற்றியிருக்கிறான். சுகந்திக்குப் பின் அப்பெண் என்றாலும் ஏமாற்றல்தான். சுகந்தி எதற்காக அவனை நம்பி வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. வேலையில் இருப்பதால் அவனைவிட்டு விலகி தன் குழந்தையை நன்றாக வளர்த்துப் படிக்க வைத்து என்று வாழலாமே என்றுதான் தோன்றுகிறது. ஆனால் சுகந்தியைப் போன்ற பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் இங்கும் கண்டு வருகிறேன். எப்படியோ சுகந்திதான் முடிவு செய்ய வேண்டும்.

    வாழ்த்துகள் குமார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுகந்தியை மட்டுமல்ல மற்ற பெண்ணையும் ஏமாற்றி அப்படி இரு பெண்களை ஏமாற்றியிருக்கிறான்.

      துளசிதரன்

      (இந்த வரியை துளசியின் கருத்தைத் தட்டச்சு செய்யும் போது விட்டுவிட்டேன். அதனால்தான் மீண்டும் அந்த வரியை இங்கு கொடுத்துள்ளேன். - கீதா)

      நீக்கு
    2. நன்றி துளசி அண்ணா...

      இந்தக் கருத்துக்கான பதிலை இறுதியில் மொத்தமாய்த் தருகிறேன் அண்ணா.

      நீக்கு
  14. இது கதை அல்ல நிஜம். சுகந்தி என்னும் சீதாலக்ஷ்மியின் நிலை பரிதாபம். ஒரு கனமான விஷயத்தை சுருக்கமாக சொல்வது தனி திறமை, அது கை வந்திருக்கிறது. பாராட்டுகள்.

    நான் முன்னர் அனுப்பிய பின்னூட்டம் என்னவானது?

    பதிலளிநீக்கு
  15. இந்தக் கதையில் சுகந்தி தனித்துத்தான் வாழ்கிறாள் யாரையும் சார்ந்து அல்ல... மகளுக்கு இவன்தான் உன் அப்பன் என்று காட்ட வேண்டும் என்பதுதான் அவளின் எண்ணமே ஒழிய அவனுடன் சேர்ந்து வாழ்வதல்ல... அதை கதையில் அழுத்தமாகச் சொல்கிறாள். அதன் பின் அப்பா, அம்மாவின் சந்தோஷத்துக்காக அவள் மறுமணம் செய்து கொள்வாளா இல்லையா என்பதை காலம்தான் சொல்லணும் என்கிறாள்.

    குழந்தைக்காகத்தான் அவனை மன்னித்து ஏற்பேன் என்கிறாளே ஒழிய அவனுடன் வாழ அல்ல.. சேர்ந்து வாழும் எண்ணம் இல்லை என்பதையே அது காட்டுகிறது.

    மொத்தத்தில் தங்கள் அனைவரின் அருமையான கருத்துக்களே என் எழுத்தைச் செதுக்கும் உளிகள்... இங்குதான் விரிவான கருத்துக்கள்... மனதில்பட்ட கருத்துக்கள்... முகஸ்துதி பார்க்காத கருத்துக்கள்... அதிகம் கிடைக்கும். இதற்காகவே அடுத்த கதை அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்... ஆனால் ஸ்ரீராம் அண்ணா கேட்டால் (திட்டினால்)தான் அனுப்புவதுண்டு...

    அவனாத் தரமாட்டான் என்பதால்தான் முகநூல் பகிர்வுலயே அடுத்தகதை கொடுங்கன்னு போட்டுட்டாரு போல அண்ணன்... :)

    பிடுங்க வேண்டிய ஆணிகள் இன்று கொஞ்சம் கம்மியே என்பதால் எல்லாருக்கும் பதில் அளிப்பதே உங்கள் கருத்துக்கு நான் கொடுக்கும் மரியாதை என்பதால் அலுவலகத்தில் அமர்ந்தே தட்டிவிட்டாச்சு...

    எல்லாருக்கும் மறுக்கா ஒரு தடவை நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அருமையான கதைகளின் சொந்தக்காரர் பரிவை.சே.குமார். அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. இந்தக் கதை குறித்து நேற்று இரவு 11.30 மணிக்கு இங்கிருக்கும் தம்பி ஒருவர் விவாதித்தார். மிக நீண்ட விவாதம்... அவரின் பிடி ஏன் இன்னும் பழமைக்குள் நிக்கிறீங்க... அவள் ஒருவனைக் கல்யாணம் பண்ணி வாழ வேண்டும் என்பதாய் இருந்தது.

    நீண்ட விவாதம்...

    இறுதிவரை அவள் திருமணம் செய்ய வேண்டும் அவனுக்காக அவளெதுக்கு காத்திருக்கணும் என்பதாய் விவாதித்தார்.

    நான் அவள் அவனுக்காக காத்திருக்கவில்லை... அவள் யாரையும் சார்ந்தும் இருக்கவில்லை... குழந்தைக்காகத்தான் வாழ்கிறாள்... போனவனை எண்ணி வருந்தவில்லை... அவனுடன் வாழ நினைக்கலை... தன் பிள்ளையை பெற்றவன் அவன்தானே... அவளுக்கு தன்னோட அப்பா இவன்தான்னு தெரியணும்ன்னு நினைக்கிறா... அதுக்காகத்தான் மன்னிப்பேங்கிறா... அம்மா அப்பாவின் ஆசை நிறைவேறலாம்... தான் மறுமணம் புரியலாம்... எல்லாமே காலத்தின் கையில்தான் இருக்கு என்று சொல்கிறாள் என்று சொன்ன போதும் அவருக்குத் திருப்தியில்லை.

    அவள் மாடர்ன் பெண்ணாக, திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்பதிலேயே நின்றார். இப்படிக் கதைகள் எழுதாதீர்கள்... :( என்று நின்றார்.

    விளக்கிய போதும் எப்போதும் போல் உங்க கதையில் இருக்கும் பீல் அருமையா இருக்கு... ஏன் பெண்களை மட்டும் கணவனுக்காக காத்திருப்பவளாக எழுத வேண்டும்... அவள் அவனைப் பிடிக்கவில்லை என்றால் புது வாழ்க்கை ஆரம்பிக்கணும்... நம் ஆணாதிக்கத்தனம் எழுத்தில் இருக்கக்கூடாதென நீண்ட விவாதம்.

    இறுதிவரை கதை சொல்ல வருவதை அவரும் ஏற்கவில்லை... நானும் விளக்கிப் பார்த்தும் முடியவில்லை...

    இந்தக் கதை அவளின் சுதந்திரத்தைப் பேசவில்லையா...?

    மகளைப் பெற்றவனை அவனுக்கு காட்டுவேன் நான் அவனுடன் வாழ மாட்டேன்... மகளுக்காக அவனின் தவறை மன்னிப்பேன் என்பதாய்தானே இருக்கிறது.

    எப்பவுமே சுபமான முடிவுடன் கதை எழுதுவது எனக்கு வாய்ப்பதில்லை என்று சொன்னேன். என் மீது அதிக நம்பிக்கை கொண்ட தம்பி அவர். நிறைய எழுதுவார்... பிரதிலிபியில் தினம் ஐந்து கதைகள் பகிர்ந்தவர் அவர்.. நிறைய புத்தகம் எழுதியவர்.

    அவரின் கருத்தும் ஏற்புடையதே... சுகந்திக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாமோ...

    அவரின் கருத்து எதிர்மறை என்பதால் இங்கு பகிரவில்லை என்றும் சொன்னார்... நான் ஆஹா... ஓஹோ கருத்துக்கு எல்லாம் எங்கள் பிளாக்கில் வழியில்லை... உள்ளதை உள்ளபடி சொல்பவர்கள்தான் அங்கு அதிகம்... நீங்க தாரளமா எழுதுங்க... உங்க கருத்தை வைத்து ஒரு விவாதம் ஓடட்டுமே என்றேன்.

    ஏனோ அவர் எழுதவில்லை... அதான் நானே நிகழ்ந்ததைச் சொல்லிட்டேன்...

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் விளக்கமாக பதில் சொன்னதற்கு நன்றி குமார்.

      பொதுவாகவே எழுதப்படும் கதைகள் பற்றியொரு அபிப்ராயம் உண்டு.

      அதாவது கதை அந்த கணத்தில் உருவாகும் Feel ஐ வைத்து உருவாவது. அதை அப்படியே விட்டு விடலாம். (உங்கள் கதைகளில் அந்த உணர்வுகள் நன்றாய் இடம்பெறும்).

      சில சமயங்களில் நாம் ஆரம்பித்த கருவிலிருந்து மாறி நாமே எழுதி விடுவோம். இதுவும் ஒரு வகை.

      பாடலோ, கதையோ... எழுதுபவர்கள் சிந்திக்கும் தளத்திலேயே வாசகர்கள் சிந்திப்பதில்லை. அது அவரவர்கள் அனுபவங்களுடன் இணைந்து எழுதியவர் அறியாத புதிய பார்வையையும் அளிக்கலாம்.

      எழுதியவர் அதைக் காட்டிக்கொள்ள மாட்டார்! "இருக்கலாம்" என்று பொதுவாக பதிலளித்து விடுவார்.

      எழுதி முடிக்கப்பட்ட கதைகளுக்கு அதன் கதை மாந்தர்களுக்கு எழுதியவர் வக்காலத்து வாங்கக்கூடாது என்றும் யாரோ சொல்லி இருந்த உணர்வு. ரிஷபன்ஜியோ?

      சுகந்தியின் முடிவு அவள் முடிவு. குழந்தைக்கு கூட அவள் அப்பன் யார் என்று சொல்லலாமே தவிர, குழந்தைக்காக அவனுடன் சேர்ந்து வாழலாம் என்று யோசிக்கலாமா? குழந்தைக்கும் தனது நேர்மறை எண்ணத்தை, துணிச்சலைப் புகட்டலாமே... காலக்கிரமத்தில் ஏதோ ஒரு முடிவு எடுப்பது குழந்தையின் விருப்பம் இல்லையா?

      உங்கள் நண்பரின் கருத்துகளையும் எங்கள் சார்பில் இங்கே பின்னூட்டமிட்ட விரும்பி அழைக்கிறேன்.

      நீக்கு
    2. உண்மை அண்ணா...
      கதை மாந்தருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு நின்றோமே என்றால் அது நம் எழுத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

      நான் கதை குறித்து எப்போதும் விவாதிப்பதில்லை... இங்கிருக்கும் நட்புக்களுடன் விவாதித்தல் நலம் பயக்கிறது... நிறைய விடை கிடைக்கிறது... ஏன் இப்படி எழுதினோம்... இப்படி எழுதியிருக்கலாமோன்னு தோண வைக்கிறது.

      சமீபத்திய நிகழ்வொன்று என்னை அதிகம் பாதித்தது... அது ஒரு புத்தக விமர்சனம்.. அதில் எழுத்தாளர் என் நண்பர் என்பதால் அவரை ஒரு சாரார் ஒரு வட்டத்துக்குள் நிறுத்துவது குறித்து எழுதினேன்.

      அதற்கு முகநூலில் அவர் அபாண்டமான பழி என்பதாய்ச் சொல்லி, நம்ம நித்யாதானே இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்லியிருந்தார். அதன் பின் முகநூல் பதிவை எடுத்துவிட்டு வலைப்பூவில் கூட அந்த பாராக்களை நீக்கினேன்.

      புகழும் விமர்சனங்கள் மட்டுமே வேண்டும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை தவறு. இரண்டுமே வேண்டும் அதுதான் எழுத்தை இன்னும் பட்டை தீட்டும். நான் அதைத்தான் விரும்புவேன்.

      மறுநாள் அவருடன் ஒரு மணி நேரம் போனில் உரையாடினோம்... அவர் நிலையில் அவரும் என் நிலையில் நானுமாய்... புரிதல் வந்தது என்றாலும் என்னை அப்படி நிறுத்தாதீர்கள் என்பதில் அவர் உறுதியாய் இருந்தார்... அப்படி நிறுத்த வைக்கப்படுகிறீர்கள் என்பதில் நான் உறுதியாய்...

      இங்கும் சுகந்தி மகளை தன்னைப் போல் பிரச்சினைகளை எதிர்த்து வாழப் பழக்குவாள் என்றும் அப்பா,அம்மா விருப்பப்படி திருமணம் செய்து கொள்வாள் என்றும் நம்புவோமாக... :)

      நீக்கு
    3. கருத்துகள் மாறக்கூடியவை.

      என் கருத்திலிருந்து சற்றே மாறுபட்டு நான் சொல்லும் அடுத்த கருத்து இது.

      நம் கதையையும் கதை மாந்தர்களும் சிலாகிக்கப்படுவதோ கண்டிக்கப்படுவதோ ஒரு சுகமான அனுபவம். அது எழுத்தாளருக்கு கிடைக்கும் மரியாதை.

      //புகழும் விமர்சனங்கள் மட்டுமே வேண்டும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை தவறு. இரண்டுமே வேண்டும் அதுதான் எழுத்தை இன்னும் பட்டை தீட்டும். நான் அதைத்தான் விரும்புவேன்.//

      முற்றிலும் உண்மை. நம் நண்பர்கள் அப்படிதான் ரசிக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும்.

      எனவே இது சம்பந்தமான ஆரோக்கியமான விவாதங்கள் நமக்குள் புதிய பாதைகளைத் திறக்கும், புதிய கருக்கள் கிடைக்கும்.

      உங்கள் நண்பர் (தம்பி) கதை எழுதுபவர் ஆயின், அவரையும் இங்கு ஒரு கதை எழுதி அனுப்பப் சொல்லுங்களேன் குமார்...

      நீக்கு
    4. இது குறித்து நான் மின்னஞ்சல் செய்கிறேன் அண்ணா...
      அவரையும் அனுப்பச் சொல்கிறேன்.

      நீக்கு
    5. குமார் உங்கள் கருத்து செம அதற்கு ஸ்ரீராமின் பதில் கருத்தும் இரண்டையும் வெகுவாய் ரசித்தேன்...

      கீதா

      நீக்கு
  18. கதை சொல்பவரி கர்த்தும் வெளிப்பட வேண்டும் என்னும் கட்சியைச் சேர்ந்தவன் நான்

    பதிலளிநீக்கு
  19. கதையும் கதையின் நடையும் அருமை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!