புதன், 9 செப்டம்பர், 2015

குறையொன்றுமில்லை + கே கே 3/7



குறையொன்றுமில்லை 



அதீதம் மின்னிதழில் இந்த மாதம் வெளியான என் சிறுகதை.



                                        


"ம்மா.. உனக்கு என்ன குறைம்மா?"

திடீரென தன்னை நோக்கி வீசப்பட்ட கேள்வியில் பலமான காற்று முகத்தில் மோதியது போல நிமிர்ந்தாள் பூமா.


தன்னைப் பார்க்க இரவு பத்து மணிக்கு மேல் வந்தவன், ஒருமணி நேரம் கழித்துக் கிளம்புகிறான்.  'இருந்து விட்டு, காலைல போயேண்டா' என்று சொன்னதற்கு 'மதுவோட அம்மா தனியா இருப்பாம்மா... போகணும்' என்று கிளம்பிக் கொண்டிருந்தவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வி.

மது அவன் மனைவி.   அவனை விட ஆறு மாதம் பெரியவள்.  காதல்!


'நானும் தனியாத்தானேடா இருக்கேன்?' என்ற கேள்வி வாய்க்குள்ளேயே பஞ்சு மிட்டாய் போலக் கரைந்து போனது.  கசந்த பஞ்சு மிட்டாய்!


"ஏன் சுந்தர்?  எதைக் கேக்கறே?  திடீர்னு என்ன கேள்வி?"


"இல்லை..!  உங்க ஃபிரெண்ட் அகிலா ஆன்ட்டி இன்னிக்கி என்னை ஹோட்டலில் பார்த்தாங்க.. அவங்க பேசியதைக் கேட்டதுனால கேக்கிறேன்.. அம்மாவுக்கு என்மேல எதுவும் குறை இருக்காதுன்னு அவங்க கிட்ட சொல்லிட்டேன்.  அதான் உன்னை இப்போ கேக்கறேன்..  சொல்லு.. உனக்கு ஏதும் என்மேல குறை இருக்கா?"


"இல்லடா கண்ணா..  நீ அப்படிக் கேட்டதே சந்தோஷம்.. எனக்கென்ன குறை உன்மேல..?"


மலர்ந்து போனது சுந்தர் முகம்.  கிளம்ப ஆரம்பித்தவன், மறுபடி ஸோஃபாவில் அமர்ந்து கொண்டான்.


"சின்ன குறை ஏதாவது இருந்தாலும் சொல்லும்மா..."


"நீ என் மகன் சுந்தர்..  குஞ்சு மிதிச்சு கோழி முடமாகுமான்னு சொல்வாங்க.. என்ன இப்போ?   விடு"


"அப்படீன்னா?  அப்பா உன்னை சரியாவே கவனிச்சுக்க மாட்டார் இல்லம்மா?  ஆனா, நான் அப்படி இருக்கக் கூடாதுன்னுதான் மதுவை கண் கலங்காமப் பார்த்துக்கறேன்..  உனக்கே தெரியும் அது..  உனக்குக் கூட அதுலதான் சந்தோஷம் இல்லையாம்மா?"


"உண்மைதான் சுந்தர்..." பெருமூச்சு விட்ட பூமா சற்றுப் பொறுத்துத் தொடர்ந்தாள்.


"ஆனால் சுந்தர்.. மதுவோட அம்மா தனியா இருப்பான்னு போறே..  நானும் தனியாத்தாண்டா இருக்கேன்..  நீ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு மாமியார் வீட்டோடயே தங்கிட்டே சரி..  எப்பவாவது என் கூடயும் இருக்கலாமில்லன்னு தோணும் அவ்வளவுதான்.  விடு.. அது ஒரு பெரிய குறை இல்ல..."


"சுபா உன் கூட இருந்தாளே அம்மா..."


"அவ இருந்தா என்னடா...  நீ என் மகன் இல்லையா?  அவளுக்கும்தான் கல்யாணம் பண்ணி வச்சாச்சு..  அவளக் கூட நீ போய்ப் பார்க்கவே மாட்டேங்கறே..  இன்னும் ஒரு மாசத்துல நான் சென்னை போயிடுவேன்.  நீதான் அவளப் பார்த்துக்கணும்.சொன்னாலும் ஒத்துக்க மாட்டேங்கறே..  விடு... அது ஒரு பெரிய குறை இல்ல"


"போம்மா.. எனக்கு அவனப் பிடிக்கலை"


"யாரை?"


"சுபா ஹஸ்பெண்டைத்தான்..  ரொம்ப அலட்டறான்மா..."


"சுபா கிட்ட உன்னப் பத்தியும் மாப்பிள்ளை அதையேதாண்டா சொல்லி இருக்கார்"


சுந்தர் மௌனமாக இருந்தான்.


"கொஞ்சம் பால் சுட வச்சுத் தரவா சுந்தர்?"


"வேண்டாம்மா... நான் கிளம்பறேன்.. கல்யாணத்துக்கு முதல் நாள் நம்ம ரிலேடிவ்ஸுக்கு ஹோட்டல்லேருந்து டிஃபன் வாங்கிக் கொடுத்தேனே..  அந்தக் காசை நீ இன்னும் தரலம்மா... இலை கூட வாங்கி வைக்காம இருந்தே நீ..  நானும் மதுவும்தான் வாங்கி வந்தோம்"


"தரேண்டா..  இப்போ கைல பைசா இல்ல.. நாளைக்கு சுபாவுக்கு ஒரு வெள்ளியில் ஒரு அம்மன் முகம் வாங்கித் தந்துடுடா..நாளைக்கு அவ ஹனிமூனுக்குக் கிளம்பறா.. அதுக்குள்ளே வாங்கிக் குடுத்துடு.."


"போம்மா.  என் கிட்ட பைசா இல்ல..  காசு குடு. வாங்கித் தரேன். நீ அவங்கள மறு வீடு கூப்பிடப் போகச் சொல்ல பூ பழம் வாங்கித் தரச் சொன்னே..  அப்பவும் காசு தராமத்தான் அனுப்பினே..  அந்தக் காசும் வரணும்..  எவ்வளவு வேலை செய்திருக்கேன் சுபா கல்யாணத்துக்கு..  நான்தான் நடத்திக் கொடுத்தேன்"


சிரிப்பு வந்ததை அடக்கிக் கொண்டு  ஒன்றும் பதில் பேசாமல் அவனையே பார்த்தாள் பூமா.  எல்லா காசும் இவள் ஓய்வூதியத்தில் வந்தது.  சத்திரம் பிடிக்கத் தொடங்கி அழைப்பிதழ் கொடுப்பது வரை இவளும் சுபாவும்தான் அலைந்திருந்தார்கள்.  "அண்ணனைக் கூப்பிடாதம்மா...  நாமளே முடிப்போம்" என்றாள் ரோஷத்துடன்.  இவன்தான் 'நடத்திக் கொடுத்தானா'ம்!


தங்கையின் திருமணத்துக்கு நிஜமாக ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவில்லை சுந்தர்.  செய்த ஒரு சிலவற்றுக்கும் காசு கேட்கிறான்.  நிச்சயதார்த்தத்துக்குக் கூட அது நடக்கும் ஒருமணி நேரத்துக்கு முன்புதான் வந்தான்.  முதல் பந்தியில் மதுவுடன் சாப்பிட்டான்.  விருந்தினர்கள் கிளம்பு முன்னரே கிளம்பிப் போய்விட்டான்.


'கல்யாணத்துக்கு சத்திரம் பார்க்க, அழைப்பிதழ் கொடுக்க என்று எதற்குமே வரவில்லையே, ஏண்டா' என்றால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் சொன்னான்.


ஊர் விட்டு ஊர் மாற்றலாகி வந்தபோது கூட இவன் தன்னைக் கேட்ட கேள்வி "லேடீஸ் ஹாஸ்டல்ல இடம் பார்த்துடவா அம்மா?"


'இவனுக்கு ஏன் தன் வீட்டில் அம்மா வந்து தங்கட்டும் என்று தோன்றவில்லை?  மாமியாரைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருப்பவன் தன்னை ஏன் அங்கு தங்க வைக்க யோசிக்கிறான்?' என்று தோன்றும்.


தான்தான் அவனுக்கு எதுவும் சொல்லிக் கொடுத்து வளர்க்கவில்லை என்று நினைத்துக் கொள்வாள்.


அதைவிட சென்ற வருடம் முதல் வரலக்ஷ்மி பூஜை தன் வீட்டில் செய்ய ஆரம்பித்திருப்பதாய்ச் சொன்னவன், இவளைக் கூப்பிடவே இல்லை.  சுபாவை அழைத்தபோது, "அம்மா கிட்ட சொன்னியோ" என்று கேட்டாளாம்.  "சும்மா இரு... இது சுமங்கலி பூஜை" என்றானாம்.  சுபா இதைச் சொல்லும்போது அழுது விட்டாள்.


சனி ஞாயிறு அவனுக்கு விடுமுறை.  இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெள்ளி இரவுகளில் வருவான்.  அதுவும் ஒன்பது மணிக்கு மேல்தான் வருவான்.  இரவு 12 மணியானாலும் கிளம்பிப் போய்விடுவான். மதுவும் எப்போதும் அவனுடனேயே ஒட்டிக் கொண்டுதான் வருவாள்.  சுபாவுக்குத் திருமணம் செய்து கொடுத்த பிறகு தனியாகத்தான் இருக்கிறாள் பூமா.


இவளது தோழிகளுக்கு இவள் நிலை தெரியும்.  அவர்களிடம் கூட இவள் சுந்தரைப் பற்றி எதுவும் குறையாகச் சொன்னதில்லை.  ஆனாலும் அவளாகக் கேட்டிருக்கிறாள் போலும்.


"அகிலா வேற என்னடா சொன்னா?  என்னைக் கேட்டாளா?  பார்த்து ஒரு மாசமாச்சு அவளை"


"உன்னைத்தான் கேட்டாங்க ஆன்ட்டி.  அவங்கதான் உன்னைக் குறைபடும்படி வைக்கக் கூடாதுன்னு சொன்னாங்க.. அதுதான் கேட்டேன்.. எனக்குத் தெரியாதாம்மா?  நான் தப்பா நடந்துக்கலைன்னு எனக்கே தெரியும்.. உனக்கெப்படிக் குறை இருக்கும்?  இருந்தாலும் உன் வாயால கேட்டுக்கலாம்னுதான் கேட்டேன்மா.. குறை இல்லைதானே?


"ஒன்றும் குறை இல்லை சுந்தர்... "


எம் எஸ் பாடலின் இறுதியில் "ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா" என்று அழுத்தி, வலியுறுத்திப் பாடும்போது எப்போதுமே இவளுக்குக் கண்கள் கலங்கி விடும்.


இப்போதும்!
           

=======================================================================


கேட்டது கேட்டபடி 3/7 (ஏழுநாள் தொடர்) 


முந்தைய பகுதிகள், முந்தைய பதிவுகளில் (திங்கள், செவ்வாய்) 



"ஆமாம், உங்களுக்குள் அப்படி என்ன தகராறு?" 
                    
"உன்னுடைய பிரெண்ட் பொண்ணுங்களைப் பார்த்தா அவங்களைப் பற்றி  ஏதேனும் மட்டமான கமெண்ட் பாஸ் பண்ணுவார் தெரியுமா?" 
               
"தெரியும். அவன் அந்த மாதிரி பேசுவது எனக்கும் பிடிக்காது. அவனிடம் இப்படி எல்லாம் கமெண்ட் அடிக்காதே. ஜானகிக்கும் இதெல்லாம் பிடிக்காது என்று அடிக்கடி சொல்லுவேன். " 
                 
"அது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒருநாள் நம்ம வீட்டுக்கு வந்தபோது நான் என்னுடைய பிரெண்ட் மோகனா கூட ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். மோகனாவைப் பார்த்தவுடன், என்னிடம், "ஜானகீ இது உன்னோட பிரெண்டா?" என்று கேட்டுவிட்டு சிரித்தபடி, உன் ரூமுக்கு வந்தான். 

பிறகு மோகனா கிளம்பிச் சென்றபின், ஐந்து நிமிடம் கழித்து உன் ரூமிலிருந்து வந்த முகுந்தன், என்னிடம், " எங்கே உன்னுடைய நண்பி - - -   - - - -  - - - - (edited) "  என்று கேட்டு சிரித்தான். எனக்கு பயங்கரக் கோபம். 

அப்போதிலிருந்து அவன் முகத்தைப் பார்ப்பதில்லை, அவன் பேச்சுக் கேட்பதில்லை, அவனோடு பேசுவதில்லை என்று முடிவெடுத்து, அப்படியே இருந்து வந்தேன். 




 அப்புறம் இரண்டு மாதங்கள் கழித்து அவன் மலேசியா போய் அங்கேயே செட்டில் ஆகிவிடுவான் என்று நீ சொன்னதும் எனக்கு சந்தோசமாக இருந்தது. இப்போ எதுக்கு வருகின்றானாம்?  சரி, சரி.   வருகின்றாராம்? " 

"இங்கே ஒரு வாரம் ஒரு பிசினெஸ் மீட் இருக்கின்றதாம். அடையார் பார்க் ஹோட்டலில். அங்கேயே தங்கிக்கும்படி அவன் பாஸ் சொன்னாராம். நாந்தான் அதெல்லாம் முடியாது, நீ எங்கள் வீட்டில்தான் தாங்கிக்கொள்ளவேண்டும் என்று சொன்னேன். அவன், கெஸ்ட் ரூமில் தங்கிக்கொள்ளட்டும். நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துடறேன்." 

"சரி அண்ணா." 

"சரி . இப்போ நாம நம்ப கம்பெனிக்குப் போகலாம் வா. டிரைவர் ரெடியா?" 

===============  


மாலையில், மாதவன் கிளம்புவதற்கு முன்பு கூறியது: 

"நீ பழசை எல்லாம் ஞாபகம் வெச்சிகிட்டு அவனைக் கஷ்டப்படுத்தாதே. அவன் இப்போ எவ்வளவோ மாறியிருப்பான். அவன் பேசினால், நீயும் பேசு. சிரித்தால் நீயும் சிரி. எவ்வளவு தூரம் இயல்பாக இருக்கமுடியுமோ அவ்வளவு தூரம் இயல்பாக இரு. ஓ கே எனக்கு டாக்சி வந்தாச்சு. பை. " 



(தொடரும்)  . 
                 

22 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம்ம் அதீதம் கதையைப் படிச்சாச்சு. இன்னும் காலை காஃபி சாப்பிடலை. கோபத்தில் இருக்கோம் ரெண்டு பேரும்! :) ஆகவே நோ கருத்து! :))))))))

    பதிலளிநீக்கு
  2. அப்பாடி, இப்போத் தான் காஃபி குடிச்சோம். :) மூளையும் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு. முகுந்தனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் கடைசியில் உப்புச் சப்பில்லாத பகை என முடிக்காதீங்க. கொஞ்சம் விறுவிறுப்பாவே இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. குறையொன்றுமில்லை
    ரொம்ப நாள் கழித்து ப்ளாகர் பக்கம் வந்த வந்தேன். உங்கள் கதை இருந்தது. சும்மா படித்துவிட்டு போகலாம் என்று தான் வந்தேன். ஆனால் அப்படி படிக்க, கதை என்னை விடவில்லை.
    இயல்பான கதையோட்டம். க்ளிஷேவாய் மாறியிருக்கக் கூடிய சாத்தியத்தைக் கொண்ட கடைசி வரியை (ஸாரி! எனக்கு இப்படி தான் தோன்றியது!) ‘அழுத்தி, வலியுறுத்தி’ என்ற வார்த்தைகள் நெகிழ்ச்சியானதாக மாற்றி விட்டது.
    நல்ல கதை. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. மக்களுக்குப் பெற்றோர் மன இயல் புரிவதில்லை.பெற்றோரின் எதிர்பார்ப்பும் அதிகம் ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகள் தேவலாமோ. குஞ்சு முதித்துக் கோழியா கோழி மிதித்துக் குஞ்சா,,,?

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்,
    இயல்பான ஆனால் மனதைக் கனக்கச்செய்யும் கதை,,,,,,,,,
    இப்படித்தான் செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒன்றும் என்மேல் தவறில்லை என்போம்.
    வாழ்த்துக்கள்,,,,,,,,,,,
    நான் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் குறையென்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா,,,,,

    அருமை,,,,,,,,

    பதிலளிநீக்கு
  6. அதீதத்தில் படித்துக் கருத்து சொன்னேன், தாயின் மனதை புரிந்து கொள்ளாத மகன் என்று நினைக்கிறேன். குறைகள் இருந்தாலும் வெளிக்காட்டாத தாய். அதை அருமை.

    தொடர் கதையும் படித்து வருகிறேன், நன்றாக போகிறது.

    பதிலளிநீக்கு
  7. குறையொன்றுமில்லாத கதை. சூப்பர் சார்.

    பதிலளிநீக்கு
  8. இது போன்ற பிள்ளைகளே குறைபட்டவர்கள்தான்.
    ஆனால் இன்றைய வாழ்வில் பெரும்பாலும் இவர்கள்தான் காணப்படுகிறார்கள்
    நல்ல வாழ்க்கைச் சித்திரம்.

    பதிலளிநீக்கு
  9. உருக்கமான கதை. தீர்வு காண வழியின்றிப் பல இல்லங்களில் இருந்து வரும் பிரச்சனை.

    மாதவன் வரட்டும்..

    பதிலளிநீக்கு
  10. அதீதம் மின்னிதழில் உங்கள் கதை வெளிவந்தமைக்கு முதலில் எங்கள் பாராட்டுகள். வாழ்த்துகள்.

    கதை சூப்பர்.....யதார்த்தம்..

    தொடர்கதை ...ப்ளீஸ் இதன் முடிவாவது ஸ்பைசியாக இருக்கட்டும்...ஹஹஹஹ் நல்லா போகுது...

    இந்தப் பதிவை வெளியிட்ட அன்றே வாசித்தும் விட்டோம் கமென்ட் போட தாமதமாகிவிட்டது.....

    பதிலளிநீக்கு
  11. அப்பாஜி....

    //வ.வா.பி.ரி.ப!
    எ.சொ.கு.போ? //



    கீழ்க்காணும் இந்தப் பின்னூட்டத்துக்கும் நீங்கள் கேட்டிருப்பதற்கும் சம்பந்தம் உள்ளது!

    @ அப்பாதுரை - இது ஒரு தொடர் பதிவு என்பதை இன்றைக்குத் தான் தெரிந்து கொண்டேன். ஜோதிஜி பற்றி எழுதியதை படித்துவிட்டு, அடுத்து சுப்பு அவர்களைப் பற்றி என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று அறிய வந்தேன். உங்கள் (வசிஷ்டர்) வாயால் பாடப் பெற்றவர்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள். உங்களால் அவர்களும், அவர்களால் நீங்களும் ஏற்றம் பெறுகிறீர்கள். நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராம், அப்பாதுரை - நீங்கள் இருவரும் என்ன சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லையே!
    இதற்கும் அப்பாதுரை தளத்தில் நான் போட்ட கருத்துரைக்கும் (நீங்கள் மேலே போட்டிருக்கும் கருத்துரை) என்ன சம்பந்தம்? தெரிந்து கொள்ளாவிட்டால் வேதாளம் சபித்த விக்கிரமாதித்தன் தலை போல ஆகிவிடும் எனக்கு. உடனே பதில்!!!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே.

    தாங்கள் எழுதிய கதை மனதை நெகிழ வைத்து விட்டது. கதையில் உள்ளது போல் நிஜத்திலும், இன்றைய கால கட்டத்தின் சூழ்நிலையால் வாழ்வின் போராட்டங்களுடன், மனதின் எழும் எண்ணங்களையும் சொல்ல முடியாமல் மறைத்து வைத்துக்கொண்டு தாய் பாசத்தில் தவிக்கும் அம்மாக்கள் ஏராளம்.

    தொடர் கதையும் நன்றாக உள்ளது. நான் இன்றுதான் மொத்தமாக படிக்கிறேன் அதனால் உடனுக்குடன் கருத்திட இயலவில்லை. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. சிறுகதை சுவை. மனசைக் கலக்கியது. எத்தனையோ
    நல்ல பிள்ளைகளுக்கு நடுவில் இது போல ஒரு பிள்ளை. பாவம் அந்த அம்மா. அதுவும் வரலக்ஷ்மி நோம்புக்கு ஒரு அம்மாவை விலக்கி வைப்பவன் பிள்ளையே இல்லை.
    தொடர் கொஞ்சம் புரியவில்லை. அதீதத்தில் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. குறையொன்றுமில்லை மனதை உலுக்கி விட்டது. இவ்வளவு மோசமான மகன் இருப்பானா என்று மனம் விண்டு போகிறது

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!