செவ்வாய், 22 செப்டம்பர், 2015

அலுவலக அனுபவங்கள் :: இப்படியும் சில ஊழியர்கள், அதிகாரிகள்!


குடியிருப்பும் அலுவலகமும் கலந்திருக்கும் ஒரு அலுவலகம்.


அலுவலகத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் குடியிருப்புகள்.  அந்தக் குடியிருப்பின் ஒரு வீட்டில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் தலைமை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு மேலதிகாரி வசித்தார்.


தினமும் இந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அடிப்படை ஊழியர்களை அழைத்து ஏதாவது வேலை வாங்கிக் கொண்டே இருப்பது அவர் வழக்கம்.  இது அந்த ஊழியர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தாலும் வேறு வழியில்லை.


தலைமை அலுவலகத்தின் மேலதிகாரி.   என்ன செய்ய முடியும்?


அலுவலகத்தில் கொஞ்சம் கடபுடா பேர்வழி ஒருவன் இருந்தான்.  அவனை மட்டும் அந்த அதிகாரி வேலை சொல்ல மாட்டார்.  மற்றவர்களுக்குக் காரணம் புரியவில்லை.  அவன் மேல் பொறாமையாகக் கூட இருந்தது.


அதற்குக் காரணமும் ஒரு நாள் அவன் சொல்லித் தெரிந்தது.  இவர்கள் செய்யாத செயலை அவன் செய்திருந்தான்.  அதுவும் ஒருமுறை அல்ல!


ஒருமுறை அந்த அதிகாரி இவனை அழைத்து  100 ரூபாயைக் கையில் கொடுத்து காலை டிஃபன் வாங்கி வரச் சொல்லி இருக்கிறார். ஒரு பொங்கலும், ஒரு வடையும் வாங்கி வரச் சொல்லி இருக்கிறார்.  கூடவே எப்போதும் மற்றவர்களிடம் சொல்வது போல 'உனக்கு ஏதாவது வேணும்னாலும் வாங்கிக்கோ' என்று சொல்லி இருக்கிறார்.  எப்போதுமே, எல்லோரிடமுமே சொல்வதுதான் என்றாலும் மற்றவர்கள்  "பரவாயில்லை ஸார்"  சொல்லி விடுவார்கள்.


இவன் அவருக்குப் பொங்கல் வாங்கிக் கொடுத்து விட்டு ("வடை இல்லையாம் ஸார்"),  மிச்சம் 20 ரூபாய் தந்திருக்கிறான்.   இருபது வருடங்களுக்கு முன் 100 ரூபாயின் மதிப்பும், டிஃபன்களின் விலைகளும் வேறு லெவல்! 

 
அவர் கேள்விக் குறியுடன் பார்த்தபோது தான் வாங்கிக் கொண்ட பொட்டலங்களைக் காட்டியிருக்கிறான்.  மூன்று, நான்கு வகைகள்!  அவருக்குப் பொங்கல் வடை மட்டும்!  தானே சொன்னதால் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை.  சாப்பாட்டு விஷயத்தில் என்ன சொல்ல முடியும்?


அடுத்த முறை அவனை அழைக்க நேர்ந்தபோது அவன் கையில் சென்ற முறையை விட காசு குறைத்தே கொடுத்திருக்கிறார்.  அதற்கும் அவன் தங்கள் இரண்டு பேருக்கும் சரி சமமாக வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான்.  மிச்ச காசு இல்லை என்று சொல்லி விட்டான்.


அதற்கும் அடுத்த முறை சரியான காசு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.  ஆனால், அடுத்த 'டர்னி'ல் அவருக்கு டிஃபன் வாங்கப் போன
இன்னொரு ஊழியர் வந்து,  இவர் கணக்கில் 45 ரூபாய் கடன் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.  சென்ற முறை 'இவன்' செய்த கைங்கர்யம்!

 
அதுதான் அவர் அவனை அழைப்பதே இல்லை.  மற்ற ஊழியர்களுக்கு இது போல செய்ய ஏனோ தைரியம் இல்லை!


இன்னொருமுறை குழாய்த் தண்ணீரில் ஏதோ நாற்றம் வருகிறது என்று
மேலே தண்ணீர்த் தொட்டி சுத்தம்செய்யச் சொன்னபோது, மேலே ஏற வழி இல்லாத அந்த வீட்டில், பின்னால் தண்ணீர் ஏறும் பைப் வழியாக ஏறுகிறேன் என்று அந்த பைப்பையும், ஒரு ஜன்னல் கதவையும் உடைத்து வைக்க, அதை அவர் சரி செய்யப் பட்ட பாட்டில்
அவர் இவனை அழைப்பதே இல்லை.  இவனைப் பார்த்தாலும் பார்க்காதது போலத் தாண்டிச் சென்று விடுவார்.


31 கருத்துகள்:

 1. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ன செய்வது !

  அலுவலக வேலை மட்டும் வாங்கி இருந்தால் இந்த நஷ்டம் இல்லை மேல் அதிகாரிக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச் சொன்னீர்கள் கோமதி அரசு மேடம். முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. நான் உ.மு. ஆக வேலை பார்த்தபோது மு ஒரு பிரம்மச்சாரி. அந்த கல்லூரியிலேயே காண்டீன் இருந்ததால் இரவு 10 அல்லது 11 மணி வரைக்கும் இருப்பார்.
  அவருக்கு யாராவது ஒருவர் இருவர் அலுவலகத்தில் இருக்கவேண்டும். அவரால் இப்படி துன்பப் பட்டவர்களில் ஒரு உதவி நிர்வாக அதிகாரி யின் மகன் ஒரு நாள் இரவு என் க்வார்டர்சுக்கு வந்து விட்டார் : ஏன் சார். இடத்தில் லேபர் லாஸ் கிடையாதா சார் என்றார்.
  நான் சொன்னேன். உங்கள் தந்தையை நான் இருக்கச் சொல்லவில்லை. நான் சரியாக 5 மணிக்கு கிளம்புகிறேன். அதே போல் அவரையும் கிளம்பச் சொல்லுங்கள். உங்கள் தந்தைக்கு தைரியம் இல்லை என்றால் நான் என்ன செய்யட்டும் ?
  சி.ஆர். ல் குளறுபடி செய்துவிடுவார் என்று பயப்படுகிறார் என்றார்.
  அப்ப, பயந்து கொண்டே இருக்கச் சொல்.
  என்றேன்.

  இன்னொரு கேஸ் இதைவிட மோசமானது. வெறுத்துப்போன அந்த உதவி நிர்வாக அதிகாரியின் மனைவி தன கணவரிடம் மிகவும் மோசமாக திட்டிவிட்டார். இதை அந்த அதிகாரியே என்னிடம் வந்து முறையிட்டார்.

  சிலருக்கு வீட்டுக்கு போனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. சிலருக்கு வீட்டுக்கு போனால் பெண்டாட்டி தொந்தரவு . அதற்கு இங்கேயே இருக்கலாம் என்று இருப்பார்கள். அதற்கு பிறரை தொந்தரவு செய்யக்கூடாது அல்லவா.

  நடந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகிவிட்டன.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உ.மு ? உதவி முதல்வர்?
   சி ஆர்? அல்லது எஸ் ஆர்? (ஸர்வீஸ் ரெஜிஸ்டர்?)

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப்பு தாத்தா.

   நீக்கு
 3. சின்ன கிராமப் பள்ளிக்கூடங்களில் தலைமை டீச்சர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் அடிமைதான் .இப்படி எவ்வளவோ நடந்து கொண்டு இருந்தது. உங்கள் இந்த பதிவு அபாரம்..அன்புடன்

  பதிலளிநீக்கு
 4. அவர்களின் கீழிருக்கும் டீச்சர்கள் என்று சேர்த்துக் கொள்ளவும். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை காமாட்சி அம்மா... பொதுவாக எல்லா மேல் அதிகாரி மற்றும் சிற்றூழியர்களுக்கும் பொருந்தும்.

   நீக்கு
 5. எனக்கு என்னமோ அந்த ஆள் நீங்கள் போல தெரியுது அய்யா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.... ஹா.... ஹா... எந்த ஆள் பாஸ்?

   வருகை, தம வாக்கு, கருத்துகளுக்கு நன்றி செந்தில்குமார்.

   நீக்கு
 6. அலுவலகப் பணி வேறு அலுவலருக்குப் பணி செய்வது வேறு. புத்தி உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்

  பதிலளிநீக்கு
 7. பதில்கள்
  1. நன்றி கில்லர்ஜி. இதுபோல் நிறைய பேர் இருக்கிறார்கள்.

   நீக்கு
 8. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
  நன்றி நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
 9. இப்படி ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆட்கள். நானும் இப்படி பல கதைகள் கேட்டுள்ளேன்! சிலவற்றை எழுத இயலாது! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானே எழுதக் கூடியவற்றை மட்டும்தான் எழுதுகிறேன் வெங்கட். வருகை, த ம வாக்கு, கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 10. அதிகாரியின் ஸ்கூட்டரை வாங்கிட்டு போய், இடித்து கொண்டு வந்து தப்பித்தவர்களும் உண்டு :)

  பதிலளிநீக்கு
 11. பல அரசு மேலதிகாரிகள் இப்படித்தான் தங்கள் பெர்சனல் வேலைகளையும் ஊழியர்களைச் செய்யச் சொல்லுவதால் ஊழியர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கின்றார்கள்.

  இப்படிச் செய்வதெல்லாம் கூட ஊழல்களுக்கும் அஸ்திவாரம் போடப்படுகின்றது.

  பதிலளிநீக்கு
 12. ஊழியரின் சாமர்த்தியம் புன்னகைக்க வைக்கிறது. கோமதிம்மா சொல்லியிருப்பது சரி.

  பதிலளிநீக்கு
 13. நிறைய இருக்கு, ஆனால் எல்லாமும் வெளியே சொல்ல முடிவதில்லை. :) ஆனாலும் தண்டனை ஏதும் வாங்காமல் சாமர்த்தியமாகத் தப்பித்த ஊழியரைப் பாராட்டியே ஆகணும். :)

  பதிலளிநீக்கு
 14. இது ஒண்ணு தானே! வேறே பதிவு ஒண்ணையும் காணோமே!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 15. நன்றி கீதா மேடம்.

  //இது ஒண்ணு தானே! வேறே பதிவு ஒண்ணையும் காணோமே!!!!!!!!!!!!!!!!//

  இதோ... அடுத்த பதிவு வெளியாகி விட்டது!

  பதிலளிநீக்கு
 16. அவன் தான் நல்ல 'வேலை' தெரிஞ்சவன் !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!