செவ்வாய், 15 நவம்பர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: எதிர்க்காத்து



     இந்த வார கேட்டு வாங்கிப்போடும் கதை பகுதியில் நண்பர் அரசனின் கதை இடம்பெறுகிறது.  நண்பரை  ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன்.  அது ஆவி அழைத்த ஒரு ஒன்றுகூடும் அழைப்பில்.


அவரின் தளம் கரைசேரா அலை...



    சமீபத்தில் இன்ட முள்ளு என்கிற சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது அந்தப் புத்தகம்.


     அவருடைய முன்னுரையைத் தொடர்ந்து அவர் கதை..

 


====================================================================



கதை உருவான  கதை:

முன்னூறு வீடுகள் கொண்ட சிறிய கிராமம் தான் எனது ஊர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு. மண்ணை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் சம்சாரிகளின் வாழ்வியலைத் தான் கதையாக புனைந்து அதை இண்ட முள்ளு  என்ற தலைப்பில் கதை தொகுப்பாகவும் வெளியிட்டுள்ளேன். அதில் இடம்பெற்றுள்ள ஒரு கதை தான் இந்த எதிர்காத்து. இது ஒரு உண்மை நிகழ்வு, அதை கதையாக அந்த மாந்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிகழ்ந்த இடத்தையும், பெயரையும் மாற்றி சிறு சிறு மாற்றம் செய்து கதையாக்கியிருக்கிறேன். 
 

என்னைப்பற்றி :
 

அரியலூர் மாவட்டத்துக்காரன், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் பணி. தேடித் தேடி  புத்தகம் வாசிப்பதில் அலாதி. ஒன்றிரண்டு குறும்படங்களில் நடிப்பதாக தலை காட்டியிருக்கிறேன். இண்ட முள்ளு எனும் கதைத் தொகுப்பினை சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.
 




=====================================================================


09 – “எதிர்க்காத்து”
 
 அரசன்
கோட மாசத்து அக்கினி வெயிலு திகு திகுவென காய்ச்சியது. ஊருக்கு மத்தில இருக்கும் மாரியம்மன் கோயிலு வேப்பமரத்து நெழலுல வண்டிய நிறுத்திப்புட்டு, கோயில் டப்பக் கதவில் கட்டியிருந்த தபால் பொட்டியில, கொண்டுவந்திருந்த கடுதாசியப் போட்டுட்டு வண்டிய எடுத்துக்கிட்டு கெளம்பினா லதா.


வேர்வையில நனைஞ்சிருந்த அவளோட ஜாக்கெட்ட, மேஞ்சபின்னாடி மொகத்துக்கு தாவின கோயிலுக்குள்ள ஊர்ஞாயம் பேசிக்கிட்டிருந்த கண்கள்.  முப்பது போல தெரியாத உடல்வாகு, மெலிஞ்ச தேகம், சற்று பருத்த மாரு, சிரிக்கும்போது மட்டும் அடிக்கடி கண்ண சிமிட்டும் அவள பாத்தவுடனே எல்லோருக்கும் புடிச்சிப் போவும்.


வூட்டுக்கு வந்த லதா, மேக்கால தாவாரத்துல வண்டிய நிறுத்திப்புட்டு, வாசக் கதவோரம் வச்சிருந்த மம்பானத் தண்ணிய மொண்டு குடிச்சிட்டு உள்திண்ணையில பல்லு போன கெழவியின் நெஞ்சு போல தளந்து போயி கெடக்கும் தேங்காநாரு கட்டிலில் தொப்பென வுழுந்தா.


வெளிய குஞ்சுகளோடு மேஞ்சிக்கிட்டு இருந்த கோழி, இவ கட்டில்ல வுழுந்த சத்தங்கேட்டு பயந்து போயி பராச்சின்னு ஓடிச்சி.  "ம்ம்மா" வென வீறிட்டது பாலுக்கு ஏங்கிய எளங்கன்னுக்குட்டி.


“யோவ், ஐஸு நில்லுய்யா”,ன்னு வீதியில போவும் ஐஸ்காரன நிக்க சொல்லிப்புட்டு இடுப்பிலொன்னும், வெரல் புடிச்சதும் ஒன்னுமாய் போவும் கசந்திய எட்டிப்பாத்ததும் லதாவுக்கு கண்ணு கலங்குச்சி.


யாருகிட்டவாது சொல்லி அழணும் போல நெனச்ச லதாவுக்கு யாருமே இல்லாத அந்த வூட்ல அவளுக்கு ஆறுதல் அவளே தான்.  


தன்னோட விதிய நொந்துக்கிட்டே கட்டில்ல இருந்து எறங்கி கூட்டாம கெடக்கும், வெறுந்தரையில சுருண்டு படுத்தா.  வாச புழுதிய வாரி எறச்சிட்டுப் போச்சி திடிர்னு வந்த பெருங்காத்து.


இப்படித்தான் ஒருநா அவனும் வந்தான்.


மாவு அரைக்கப் போயிருக்கும்போது, மெல்ல கைய சொரண்டியபடி மீசைய சொரிஞ்ச மணியிடம் செருப்பக் காட்டி வந்தவ, இவனிடம் எப்படி வுழுந்தான்னு இன்னும் ஆச்சர்யமா இருக்குது.


வெடிச்ச வெள்ளரி மாதிரி அவன் சிரிச்ச சிரிப்புல சிக்குனவ தான் இன்னும் தெளியல அந்த சீக்கு.


எதையோக் கேட்டு வந்தவனிடம், தன்னையே கொடுக்குமளவுக்கு அடங்கிப் போனா.


மனச மயக்கும் அவன் பேச்சுல மயங்கி சரிஞ்சவ தான் அதுக்கப்புறம் லதாவால் எந்திரிக்கவே முடியல,


அப்படியொரு வசியம் செய்யும் வித்தைக்காரன் அவன்.  உசுரப் புழியும் அவம்பேச்சு, கெஞ்சலில் தொடங்கி கொஞ்சலில் வந்து நின்னுச்சி.


கரையான் புத்து போல நாளுக்கு நாளு கூடிக்கிட்டே போச்சி ரெண்டு பேத்தோட நெருக்கம். பயத்த தள்ளி வச்சிட்டு படமெடுத்து ஆடுச்சி பருவ கெரக்கம்.


அங்க இங்கன்னு ஒளிஞ்சி மறஞ்சி பேசி மனசுல ஆசய வளத்துக்கிட்டு வந்தாங்க.


ஒருநா லதாவோட ஆத்தாக்காரி சின்னு, பக்கத்தூரு எழவுக்கு போயிருக்கும் நேரமா பாத்து பொறவாச வழியா வூட்டுக்குள்ள வந்து, இவள நெருங்க, வாரியணச்சிக்கிட்டா. ஒருமொற ருசி கண்ட நாக்கு சும்மா இருக்குமா? ஆத்தாக்காரி கண்ணுல மண்ண தூவிப்புட்டு அங்க இங்கன்னு சந்தர்ப்பம் கெடைக்கும் போதெல்லாம் சாரையும் நாகமுமா இருந்தாங்க ரெண்டு பேரும்.


யாரும் வேண்டாம், அவன் மட்டும் போதுமுன்னு நெனைக்குற அளவுக்கு இழுத்துக்கிட்டு போச்சி அந்த கெரக்கம் லதாவுக்கு.


இப்படியே ரெண்டு மூணு மாசம் போக, ஒரு நா சாயந்திரம், சூடுபட்ட பூனையாட்டம் அடுப்பங்கரையில படுத்துக் கெடந்த லதாவ பாத்துட்டு,


"என்னடி இப்படி படுத்து கெடக்கே" ன்னு சின்னு கேட்க,


திக்கித் தெணறி விசயத்த சொன்னா.


மவ சொன்ன சேதியக் கேட்டு ஒடம்பெல்லாம் துடிச்சிப் போயி, "எங்குடும்பத்துல இப்படி கொண்டாந்து இடிய எறக்கிப்புட்டியேடி.."ன்னு கெடந்து கதறி கதறி புழுவா நெளிஞ்சா சின்னு.



எந்திரிச்சி போயி சுருண்டு கெடக்கும் லதாவின் மசுர இழுத்து வச்சி நாலு சாத்து சாத்திப்புட்டு ஆளு யாருன்னு கேட்டுட்டு எந்திரிச்சி வெளிய போனா.


கோயில் கட்டையில் ஒக்காந்து பசங்களோட பேசிக்கிட்டு இருந்தவன, கூட்டியாந்து நடுவூட்ல ஒக்கார வச்சி அரவம் படமா கேட்டா சின்னு.


எதுவுமே நடக்காதமாதிரி மொகத்த வச்சிக்கிட்டு குந்தியிருந்தவன், “இன்னும் ரெண்டு வருசம் போவட்டும் அத்த, நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், அண்ணன வச்சிக்கிட்டு தம்பி கல்யாணம் பண்ணுனா ஊரு ஒலகம் ஒரு மாதிரியா பேசாதா?” ன்னு கேட்டான் மூணாந்தெரு பொம்மன் மவன் சங்கர்.


“ஊரு, ஒலகம் ஒரு மாதிரி பேசறது இருக்கட்டும், மடிய நெரப்பி நிக்கும் எம்புள்ளைக்கு வழியென்ன?”ன்னு ஆங்காரத்துடன் கேட்டா சின்னு, அவ பேச பேச ஒடம்பெல்லாம் நடுங்கியது.


“அத்த, ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டோம், நடந்தது நடந்து போச்சி, இப்பதான் நெறைய வழியிருக்கே. ஏதாவது ஒன்ன பண்ணி கலைங்க, ரெண்டு வருசத்துல லதா கழுத்துல தாலி கட்டவேண்டியது எம்பொறுப்பு”ன்னு ரொம்ப சாதாரணமா சொன்னான்.


“தம்பி ஒங்க வூட்டுலையும் ஒரு பொண்ணு இருக்குது, அதுக்கு இப்படியொரு நெலமன்னா நீங்க இப்படித்தான் பண்ணுவீங்களா?”ன்னு கண்ணு கலங்க கேட்டா சின்னு.


“நான் சொல்றத சொல்லிப்புட்டேன், மீறி வூட்டுப் பக்கம் வந்து சத்தம் போட்டு ஒங்க மானத்த நீங்களே வாங்கிக்காதீங்க” ன்னு சொன்னவன், தூணில் சாஞ்சி குந்தியிருக்கும் லதாவ ஏறெடுத்து கூட பாக்காம எந்திரிச்சி விருட்டுன்னு கெளம்பினான் சங்கர்.


அவம் போவதையே வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கிட்டு நின்ன சின்னு, “கேட்டியாடி தேவிடியா, அவன் என்ன சொல்லிட்டு போறாங்குரத, இவன நம்பி, ஒன்னையே கொடுத்துருக்க. ஒன்ன வாழ வக்கிறவன் மாதிரி தெரியலடி, வாழ வைக்கனமுன்னு நெனைக்கிறவன் எதுக்குடி, வாய் கூசாம கலச்சிட்டு வான்னு
சொல்ல போறான், ஆம்பள இல்லாத வூடுங்குற தைரியத்துல தான் நீயும் படி தாண்டி போயிருக்க, அவனும் பீக்கல்லு மாதிரி தொடச்செரிஞ்சி பேசிட்டு போறான்”.


ஆங்காரத்தில் என்ன பேசுரமுன்னு கூட தெரியாம பொலம்பிக்கிட்டு கெடந்த சின்னு ராத்திரி பூரா சன்னக் கொரலில் ஒப்பாரி வச்சிக்கிட்டு கெடந்தா. நஞ்சிப் போன சேல மாதிரி கெடந்தா லதா.


சங்கர் போனதையும், மொதன் மொறையா ரெண்டு பேரும் கட்டி உருண்ட எடத்தையும் மாறி மாறி பாத்துக்கிட்டே தூணில் சாஞ்சி ஒக்காந்திருந்தா லதா, கண்ணுல வந்த தண்ணி மட்டும் நிக்கவே இல்ல.


பூனையொன்னு சோத்துப் பானைய உருட்டுறதக் கூட கவனிக்காம மூலைக்கொரு ஆளா சுருண்டு கெடந்தனர். எழவு விழுந்த வீடு மாதிரி இருந்துச்சி.


ரெண்டு மூணு துணிய சுருட்டி ஒரு பைக்குள்ள திணிச்சிக்கிட்டு விடியுறதுக்குள்ள, லதாவ கெளப்பி கூட்டிக்கிட்டு திருவையாறு ஆஸ்பித்திரிக்கு போனா சின்னு.


ரெண்டு நாள் ஆஸ்பித்திரியில தங்கும்படி ஆச்சி, மூணாம் நாள் பொசாய வூடு வந்து சேந்தார்கள் தாயும், புள்ளையும். வேரறுபட்ட கொடியாட்டம் வதங்கி போயிருந்தா லதா.


என்னதான் மூடி வச்சாலும் அவுச நாத்தம் வெளியத் தெரியாமலா போயிடும், அங்க இங்க மெல்ல சேதி கசிஞ்சி ஆளுக்கொரு வெதமா ஊருல குசுகுசுன்னு பேசுனத காதுல போட்டுக்காம பொழப்ப பாக்க ஆரம்பிச்சார்கள். சனங்க கூடுற எடத்துல எல்லாம் லதாவோட வெசயத்த தான் பேசி தீத்தாங்க மக்க.


பத்து நாள் கழிச்சி ஒருநா வந்து வாசல்ல நின்னே பேசிட்டு போனான் சங்கர். சேதிய தெரிஞ்சிக்க தான் வந்திருக்கான்னு புரிஞ்சிக்கிட்ட லதா எதுவும் பேசாம அமைதியா குந்தியிருந்தா சின்னு தான் மூஞ்சிலடிச்ச மாதிரி நாலு வாத்த பேசி அனுப்புனா.


தண்ணி புடிக்க அவன் வூட்ட கடக்கையில முன்னெல்லாம் பட்டாம் பூச்சி கூட்டம் வட்டமடிக்கும், இப்போ கருவேல முள்ளா கிழிச்சிது அவன் நெனப்பு. அவன நெனச்சி வர கோவத்த விட,  இப்படி ஏமாந்து போயி அசிங்கப் பட்டு நிக்குறோமேங்குற குத்த ஒணர்ச்சி தான் உள்ளுக்குள்ள தூண்டி முள்ளா கெடந்து கீறிக்கிட்டு இருக்கு.


மூணுமாசத்துக்கு அப்புறம் ஒரு நா ராத்திரியில, போதையில வந்து கதவ தட்ட, லதா தான் கதவ தொறந்தா.


சங்கர் கொழறியபடி ஏதோ சொல்லிக்கிட்டு நிக்க, சத்தங்கேட்டு எந்திரிச்சி வந்த சின்னு, லதாவோட கன்னத்துல வலுக்க அறஞ்சி உள்ள போடின்னு சொல்லிப்புட்டு, “போடா, ஒன்னோட அக்கா, தங்கச்சி இருந்தா அவளுக கூட படுத்து எழும்பு போ”ன்னு கத்தி தொறத்தினா.


சின்னுவுக்கு எங்கேயிருந்து அந்த ஆவேசம் வந்துச்சின்னு தெரியல, மெரண்டு போன லதா கன்னம் செவக்க படுத்துக் கெடந்தா.


அன்னைக்கி போனவந்தான், அதுக்கப்புறம் லதாவ, நாலஞ்சி மொற கோயிலில் பாத்துட்டு ஏளனமா சிரிச்சிக்கிட்டு கடந்து போனான். லதாவும் அத ஒரு பொருட்டா எடுத்துக்கல. வலிய தாங்க பழகிக்கிட்டா,


அதோட சுவை சொகமாத்தான் இருக்கும் போல.


கரடு மொரடா வாழ்க்க போயிக்கிட்டு இருக்கையில காச்சன்னு படுக்கயில வுழுந்த சின்னு, லதாவ வுட்டுட்டு ஒரு அமாவாசைக்கி முந்தின ராத்திரியில் போய் சேந்தா.


இந்த ரெண்டு வருசத்துக்குள்ள வாழ்க்கையோட எல்லா கோரங்களையும் பாத்துட்டா லதா, ஒடம்பு அளவுல மட்டும் தளந்து போயிருக்காளே ஒழிய மனசளவுல தெம்பாகத்தான் இருக்குறா.


பால் மாடொன்ன வச்சிக்கிட்டு பொழுத போக்கி கொண்டிருக்கும் லதாவுக்கு, எறக்கி வைக்க முடியாத அளவுக்கு சோகம் இருந்தாலும், வெளியக் காட்டிக்காம தெம்பா நடமாடுபவள, மாசத்துக்கு ஒருமுறையேனும் சூறக்காத்து போல வந்து சொழட்டியடிச்சிப்புட்டு போவுது அந்த கறும நெனவுகள். வேற யாரா இருந்தாலும் இந்நேரம் தற்கொல செஞ்சிருப்பாங்க, ஆனா இவ கொஞ்சம் அழுத்தக்காரிதான். ஊரு வாயில சிக்கி சின்னா பின்னாமானாலும் எதையும் காதுல வாங்கிக்காம தனிக்கட்டையா வாழ்ந்துக்கிட்டு இருக்கா.


“நாப்பது பவுனு போட்டாலே ஆச்சுன்னு ஒத்த காலுல நின்னு, உஞ்சினியில இருந்து ஒரு புள்ளைய கட்டிக்கிட்டு வந்தான்”ல இந்த சங்கர் பய, அவளுக்கு கொழந்த வரமே இருக்காதுன்னு டாக்டர் சொன்னதுல இருந்து சங்கர் பய பித்து புடிச்சவன் மாதிரி திரியுறான்னு அவனோட ஆத்தாக்காரி ஒப்பாரி வச்சி அழுதுக்கிட்டு இருக்கான்னு” பேசிக்கிட்டு போவும் ரெண்டு கெழவிகளின் பேச்சக் கேட்டுக்கிட்டே வாசல கூட்டிக் கொண்டிருந்தா லதா.

23 கருத்துகள்:

  1. அரசன் தளத்திற்கு அவ்வப்போது சென்றுவருவதுண்டு. அவரது அறிமுகம் அருமை. அவரது கதை ஒரு பாடம்.

    பதிலளிநீக்கு
  2. அருமை
    தம சுற்றிக் கொண்டே இருக்கின்றது நண்பரே
    மீண்டும் வருகின்றேன்

    பதிலளிநீக்கு
  3. கதை அருமை... இனிய நண்பர் அரசனுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. அன்று கொல்வான் 'அரசன் 'என்று சொல்வது சரிதான்னு படுது :)

    பதிலளிநீக்கு
  5. கதை நல்லா இருந்தது. அதைவிட வருணனைகள் அந்த கிராமத்தின், வீட்டின், இருப்பவர்களின் சூழலை அழகாகப் படம் பிடித்துள்ளது. "போவும் கசந்திய எட்டிப்பாத்ததும் " இதுதான் புரியலை. கசந்தி என்பது பெயரா? கதையில் நிறையப் படம் வரையும் சூழல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. கதை சிறப்பாக இருக்கின்றது நண்பர் திரு.அரசன்.சே அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. கதை நன்றாக இருக்கிறது.
    குறும் படத்தில் அரசனின் நடிப்பைப் பார்த்து இருக்கிறேன்.
    இப்போது கதையும் படித்துவிட்டேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. கிராமத்து வெய்யில் சுள்ளென்று உரைப்பது போல அழகான தமிழ் நடை. நல்ல கதை. நல்ல தீர்ப்பு. வாழ்த்துகள் திரு அரசனுக்கு. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  9. கசந்திதான் என்னவென்று எனக்கும் புரியலை! நல்ல படிப்பினை உள்ள கதை. சோர்ந்து போய்க் கிடக்காமல் வாழ்க்கையை எதிர்நோக்கத் துணிந்த லதாவுக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  10. இன்னும் வருஷங்களை எதிர் கொள்ள வேண்டி இருக்குமே லதாவுக்கு. குழந்தைப் பேறில்லாத பலருள் சங்கரும் ஒருவன் என்று போய் விடும் லதாவுக்கு மட்டுமல்ல அவள் போன்ற பல பெண்களுக்கு ம் ஒரு பாடம்

    பதிலளிநீக்கு
  11. பயத்த தள்ளி வச்சிட்டு படமெடுத்து ஆடுச்சி பருவ கெரக்கம் நல்ல வர்ணணை

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்திய அனைவருக்கும், எனது கதையை பிரசுரித்த ஸ்ரீராம் சார் அவர்களுக்கும் அன்பும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
  13. இதுதான் புரியலை. கசந்தி என்பது பெயரா?// ஆம் கசந்தி என்பது பாத்திரத்தின் பெயர். இடுப்பில் ஒரு குழந்தையும், விரல் பிடித்து ஒரு குழந்தையும் அழைத்துக் கொண்டு ஐஸ் வாங்கப் போகும் காட்சி அது. கசந்தி லதாவின் தோழி என்பதை நேரடியாக கூறாமல், லதாவின் கண்ணு கலங்கியது என்று குறிப்பிட்டேன் நெல்லைத்தமிழன் சார் ...

    பதிலளிநீக்கு
  14. கசந்திதான் என்னவென்று எனக்கும் புரியலை// மேலே குறிப்பிட்டு இருக்கிறேன் கீதா மேடம் ...

    பதிலளிநீக்கு
  15. ஐயோடி சின்ன வயஸிலே கிராமத்து குடியானவர்கள் வீட்டிலே ,அதுவும் ஏரியையொட்டிய மோட்டுத்தெரு கதைகளையும், பேச்சு வழக்கையும் எதிரே கொண்டு வந்து விட்டது. பெத்த அப்பன் இருந்திருந்தால் அடியும்,தடியுமாய்,குத்தும்,கொலையுமாய் எங்கெங்கோ போயிருக்கும். மாலை கோர்ப்பதுபோல் கதையில் மனநிகழ்வுகள் கோக்கப்பட்டுள்ளது. நெகிழ்ச்சியானகதை. மன உறுதி பின்பு வந்ததுதான் சோகம். நல்ல படிப்பினையுள்ளகதை. நன்றாக இருக்கிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  16. கிராம சூழல்களையும், பருவ வயதில் ஏமாறக்கூடிய பெண்களின் பரிதாப நிலைகளையும் படம் பிடித்துக் காட்டியுள்ள எழுத்து நடை மிகவும் அருமை.

    சின்னு மிகச்சிறப்பான கதாபாத்திரமாக நெஞ்சில் நிற்கிறாள்.

    கடைசிக்கு முந்திய பத்தியில் (Paragraph) இன்றைய லதா, தன் பெயருக்கு ஏற்றபடி, கொடியாகப் படர்ந்து அழுத்தமாக நின்று வசீகரிக்கிறாள்.

    சூழக்காற்று அவ்வப்போது சுழன்று அடிக்கும் போது கொடி சற்றே அசைந்தாலும் ஒரேயடியாக படுத்து விடாது என நம்புவோம்.

    உலக யதார்த்தங்களை தன் எழுத்தில் சுவையாகவும், படிக்க சுவாரஸ்யமாகவும் வடித்துக்கொடுத்துள்ள கதாசிரியர் அவர்களுக்கு நம் பாராட்டுகள்.

    வெளியிட்டு படிக்க உதவிய ’எங்கள் ப்ளாக்’குக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  17. முள் மேல் சேலை விழுந்தாலும், சேலையில் முள் தைத்தாலும் சேலைக்குத் தான் ஆபத்து என்று ஒரு பழமொழி உண்டு. பெண்கள் தான் எந்த நிலையிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
    தைரியமாக எதிர்கொண்ட லதாவைப் போல எல்லா பெண்களும் இருக்கவேண்டும்.
    அரசனுக்குப் பாராட்டுக்கள்.
    வசந்தி என்ற பெயர் தட்டச்சும்போது கசந்தி ஆகிவிட்டதோ?

    பதிலளிநீக்கு
  18. நண்பர் அரசனின் கதைகள் எல்லாமே கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை அப்படியே கண் முன் காட்சியாக நிறுத்தும்... இது இண்டமுள்ளு-வில் படித்த கதைதான் என்றாலும் மீண்டும் வாசித்தேன்...

    அரசனுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. பாடம் புகட்டும் கதை. கதையைக் கொண்டு சென்ற விதம் சுவாரஸ்யம்.
    அரசன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். பகிர்த்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம் சார்.

    பதிலளிநீக்கு
  20. //அவன நெனச்சி வர கோவத்த விட, இப்படி ஏமாந்து போயி அசிங்கப் பட்டு நிக்குறோமேங்குற குத்த ஒணர்ச்சி தான் உள்ளுக்குள்ள தூண்டி முள்ளா கெடந்து கீறிக்கிட்டு இருக்கு// -- மனதின் படம்.
    வாழ்த்துக்கள் அரசரே!

    பதிலளிநீக்கு
  21. தம்பி அரனுக்கு பாராட்டு!

    பதிலளிநீக்கு
  22. நெஞ்சை தொட்ட நல்ல கதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  23. மனம் தொட்ட கதை. லதாக்கள் இன்னும் எத்தனை எத்தனை பேர்.....

    சிறப்பான கதையை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நண்பர் அரசனுக்கு, பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!