மைசூர் சாத்துமது (ரசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மைசூர் சாத்துமது (ரசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.1.17

"திங்க"க்கிழமை 170109 :: மைசூர் சாத்துமது (ரசம்) - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



எங்கள் வீட்டில் சாதம், குழம்பு, சாத்துமது, கரேமது, கூட்டு, திருவமாறுவது, தளிகைப்பண்ணுவது, கொதிக்க வை, சாதம் குழையட்டும், சாதத்தை சாதி (அதாவது போடு), தோசையை வார், இட்லி பண்ணு போன்றவைதான் வழக்குச் சொற்கள். மாற்றிச் சொன்னால், பெரியவர்களின் அனல் மற்றும் வித்தியாசமான பார்வையை எதிர்கொள்ள நேரிடும். (Pre KG படித்துக்கொண்டிருந்தபோது, என் பையனுக்கு அவன் அம்மா, Duck அப்படின்னா வாத்துன்னு சொல்லிக்கொடுத்தா. பையன், உடனே, ‘வாத்து வாத்து வாத்து.. தோசை வாத்து வாத்து வாத்து’ அப்படீன்னான். அதை அப்போதே வீடியோ கிளிப்பிங்க் எடுத்தேன் இப்போவும் அதைப் பார்க்கும்போது எங்களுக்கு குழந்தைகளின் மழலையும், வீட்டின் வழக்குச் சொற்களை மனதில் வைத்துக்கொள்ளும் குணமும், innocenceம் ஞாபகத்துக்கு வரும்). ‘வெங்காய சாம்பார்’ மட்டும்தான், எங்கள் வீட்டில் ‘சாம்பார்’ என்பது சேர்த்துவரும் (ஏன்னா, அது எங்கள் அகத்தில் வழி வழி வரும் உணவல்ல. பெரியவர்கள் இல்லாத நாட்களில், தனிப் பாத்திரத்தில் பண்ணவேண்டிய சமாச்சாரம் அது).  இப்போ புரிவதற்காக, ரசம் என்று உபயோகப்படுத்துகிறேன். என்னுடன் பணிபுரிபவர், ‘ரசம்’ என்று சொல்லாமல், ‘தண்ணிசாறு’ என்ற சொல்லை உபயோகப்படுத்துவார். அவர் மாயவரத்தான்.

முதல்ல ரசம் வைக்கணும்னா, (பெரும்பான்மையானவைகளுக்கு), கொத்தமல்லித் தழை முக்கியம். (வாசனைப்பொருட்கள், துணைப்பொருட்கள் இல்லாமல் நான் சமையலில் இறங்கவே மாட்டேன்!!)  அது இல்லைனா ரசம் ரொம்ப வாசனையா இருக்காது (ஜீரகரசம், மிளகு ரசம், மோர் ரசம் போன்றவைகளுக்கு கொத்தமல்லி வேண்டாம்). கொஞ்சம் குளிர் காலம்னா, மைசூர் ரசம் வச்சுச் சாப்பிட்டா, ரொம்ப நல்லாருக்கும். இப்போ எப்படிப் பண்ணறதுன்னு பார்க்கலாம்.



முதல்ல, 1/3 கப் துவரம்பருப்பு, 2/3 கப் தண்ணீர், துளி மஞ்சள்பொடியோட குக்கர்ல வேகவைச்சுக்கோங்க. 



ஜீரகம் 1 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், கொத்தமல்லி விரை (தனியா) 1 மேசைக்கரண்டி, துவரம்பருப்பு 1 மேசைக்கரண்டி, 3 சிவப்பு மிளகாய், தேங்காய்த் துருவல் 1 மேசைக்கரண்டி ஆகியவற்றை, வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.  நான் 1 ¼ ஸ்பூன் மிளகு உபயோகப்படுத்துவேன். வறுத்தவற்றை ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கவும்.



2 சாதாரண அளவு தக்காளியைத் தோலுரித்துவிட்டு (நான் வென்னீரிலெல்லாம் போட்டுத் தோலுரிக்கமாட்டேன். சதக் சதக் என்று நல்ல கத்தியால் தோலை எடுத்துவிடுவேன்), சிறிது சிறிதாக கட் செய்துகொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துவிட்டு, தக்காளித்துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.



வறுத்தவை இப்போது ஆறியிருக்கும்.. அதை மிக்சியில் போட்டு நைசா அரைத்துக்கொள்ளவும்.

 (படம் படு கவர்ச்சியா இருக்கு நெல்லை..  அப்படியே ஒரு டம்ளர் கொண்டு மொண்டு குடிக்க ஆசை!!)



¾ டம்ளர் நீர்த்த புளித் தண்ணீர் (ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு புளி போதும்), (ரசத்துக்கு எப்பவுமே ரொம்பக் குறைவாத்தான் புளி எடுத்துக்கறது வழக்கம்.  சிலசமயம் தக்காளியே போதும்னு விட்டுடறதும் உண்டு!) ½ டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயம் கொஞ்சம், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவைக்கவும். புளிவாசனை போனபின், வேகவைத்த துவரம்பருப்பு, வதக்கின தக்காளி சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்கவிடவும்.  அப்புறம், அரைத்த பொடி, கொத்தமல்லி சேர்த்து, குறைந்த தணலில் கொதிக்கவைக்கவும். இப்போ, சுவையைப் பொறுத்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். பொதுவா, காம்போட உள்ள கொத்தமல்லியைக் கொதிக்கும்போதும், அடுப்பை அணைத்தபின், கொஞ்சம் கொத்தமல்லி இலைகளையும் போட்டால், வாசனையாக இருக்கும்.



மைசூர் ரசத்துக்கு எந்தக் காயும் (கரேமது) தொட்டுக்க நல்லா இருக்கும். சேப்பங்கிழங்கு ரோஸ்டோ, உருளை காரக் கறியோ எந்த ரசத்துக்கும் சேரும். நான் அன்றைக்கு பீன்ஸ் பருப்புசிலி செய்தேன் (அதன் செய்முறையை விரைவில் எழுதுகிறேன்). மைசூர் ரசம், அன்றைக்கு ரொம்ப நல்லா வந்திருந்தது. இரவுக்கு, என் favoriteஆன, சப்பாத்தி, அதன் மேல் ஒரு கரண்டி மைசூர் ரசம் மண்டி (ரசத்தில் மேலாப்புல நீரா இருக்கும், அடியில் கொஞ்சம் thickஆக இருக்கும். அதை மண்டி என்போம்), அதன் மேல் இன்னொரு சப்பாத்தி.. இப்படி 4-5 சப்பாத்திகளை அடுக்கி, பத்து நிமிடம் கழித்துச் சாப்பிட எனக்கு ரொம்பப் பிடிக்கும். அன்றைக்கு சப்பாத்தி, மைசூர் ரசம்தான் இரவுணவுக்கு.

சாதாரண தக்காளி ரசம், மிளகு ரசம், ஜீரக ரசம் போன்றவற்றைவிட, மைசூர் ரசம் நல்லா வாசனையா இருக்கும். செய்துபாருங்கள்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.


(நாங்கள் தேங்காய் சேர்க்க மாட்டோம்.  மைசூர் ரசம் என்று வைத்ததில்லை.  என் பாஸ் ஆண்டாள் ரசம் என்று வைப்பார்.  எளிதாகவும், சுவையாகவும் இருக்கும் அது.)