செவ்வாய், 3 ஜனவரி, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: மீனா மாமியா? பாட்டியா?


     இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் மூத்த பதிவர் காமாட்சி அம்மா கலந்து கொள்கிறார்.  


     அவரது தளம் சொல்லுகிறேன்


     மூத்த பதிவர்.  அதனாலேயே அவர் வரிகளில் அனுபவம் பளிச்சிடும்.  அன்பு மிக்கவர்.  அவரது ஒவ்வொரு பின்னூட்டமும் 'அன்புடன்' என்றே முடியும்.  சமையல்கலையா, வாழ்க்கைப் பாடமா எல்லாம் உண்டு இவர் தளத்தில்.   முதன்முதலில் ரஞ்சனி அக்கா சொல்லியோ, வலைச்சரம் மூலமாகவோ அறிமுகம்.  ரஞ்சனி அக்காதான் வலைச்சரத்தில் சொல்லியிருந்தார்களோ...  இவர் தளத்தை  முதல் தொடர்கிறேன்.



     இவரைப்பற்றி பிரபல பதிவர் சைபர்சிம்மன் சொல்லியிருப்பதன் 'லிங்க்' காமாட்சி அம்மாவின் முன்னுரையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
   



     அவர்தம் முன்னுரை முதலில்.  பின்னர் அவர் படைப்பு.




==============================

 முன்னுரை.

நீங்கள் சிறுகதை எழுதியிருக்கீங்களோ? என்ற வாக்கியம், ஸ்ரீராம் அனுப்பியது

தாமதமாகத்தான் ஃபேஸ்புக் செய்தியனுப்புதலில் பார்த்தேன். என்ன பதில் கொடுப்பது, நம்மை அனுப்பும்படி கேட்டால் எதுவும் இல்லை. ஸரி எழுதிதான் பார்ப்போமே. இதையும் போடுங்கள் என்று கேட்பதாக நினைத்து விட்டால்.!

பரவாயில்லை. நம்மை ஓரளவு தெரிந்தவர் என்பதால் அவருக்கு அனுப்பினேன்.

எங்கள் கிராமம் நான் அறிந்தபோது அதுவும் எங்கள் தெரு ஒரு வைதீகர்கள் வசிக்கும் தெருவாகவே இருந்தது. வீட்டிற்கு ஒரு விதவையாவது இருப்பார்கள். சிலருக்கு வசதிகள் இருக்கும். பலருக்கு வசதிகள் இருக்காது. அப்பளாம் இடுதல் என்பது வீட்டிற்கு வீடு இருந்தது.

ஒரு ரூபாய் முதலீடு செய்தால் வருமானம் இரண்டு ரூபாயாக ஆகும்.

அதன்பிறகு நான் எழுத ஆரம்பித்தபோது அந்தக்கால பல விஷயங்கள் மனதில் கிடந்தது.  ஒரு தைரியமான விதவை வயோதிகத்தில் ஏமாற்றப்படுவது, மனதில் கதையாக உருப்பெற்றது.

பெண்,பிள்ளைகளாலும் ஸொத்துகள் எழுதி வாங்கப்பட்டு பெற்றோர்கள் திண்டாடுவதும் மனதில் வந்தபோது அதை ஒரு தூர உறவினனாக சித்தரிப்போம் என்ற எண்ணத்தில் எழுந்தது

இக்கதை. மற்றும் நல்ல புராணக் கதைகளும்,பாட்டு வடிவத்தில் அவர்கள் பாடி பக்தியும் வளர்த்தார்கள்.  வம்பும் பேசுவார்கள்.   உதவியும் செய்வார்கள்.

நான் திரும்பவும் கதைகள் கட்டுரைகள் எழுதத் தூண்டியது திரு ஸைபர் ஸிம்ஹன் அவர்களின் எண்பது வயது பாட்டியின் வலைப்பதிவு என்ற என் பிளாக்கைப்பற்றி எழுதிய கட்டுரையில் அவர் எனக்கு விடுத்த வேண்டுகோள் சமையல் குறிப்புகளினின்றும் சற்றே விலகி உங்கள் வாழ்க்கை அனுபவங்களை அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதுதான். அந்த  யோசனை மனதைப் பக்குவப்படுத்தியது.

நன்றி திரு. ஸைபர்ஸிம்ஹன்.

சின்ன வயதில் எழுதியவைகளை சேமிக்க முடியவில்லை. இப்போது மனோ வேகத்திற்குப் பதிவுகள் தட்டச்சு செய்யமுடியவில்லை. வயது ஞாபகப்படுத்துகிறது.

முதியவளான மீனா பாட்டியும் தைரியமான வியக்திதான்.

ஸ்ரீராமுக்கு நன்றி. எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. 



அன்புடன்

காமாட்சி.





==================================





மீனா மாமியா பாட்டியா?


 காமாட்சி மகாலிங்கம்.

ஏரியை அடுத்த   வழல் வீடுகளிலிருந்து வளர்க்கும் சேவல்கள்

கொக்கரகோகோ

பொட்டைகோழி கூவி  பொழுது விடியுமா என்ன?    

சேவல்களினாலேயே பொழுது விடிந்து விட்டது.  சக்சக்கென்று  எல்லார் வீட்டிலும்  சாணி கரைத்து  தெளிக்கப் பட்டுக்  கொண்டிருக்கிறது. விடிந்தும் விடியாத காலை நேரம்.

பொழுது புலர்ந்தது,   பொற்கோழி கூவிற்று,   பொன்னான  வேலரே

எழுந்திரும்,

கண்ணான வேலரே   எழுந்ந்ந்ந்திரும்!ம்

மீனாமாமி  உதயராகம்  பாடத் துவங்கியாயிற்று.

காய்ந்த   தென்னமட்டையில்    குச்சியை   அரிவாள் மணையில் சீவி   யெடுத்துவிட்டு பாக்கி ஓலையை  சின்ன சின்ன  கட்டாக கட்டி எறியவிட லாகவமாய். குச்சிகள் கட்டி   ஈரம் பெருக்கும்   துடப்பமாக,

அம்மா பாலு.   நேராக   போகிணியிலே பால்

.இரும்படுப்பில்  கறிபோகிணியில் 4 கரண்டி  ஜலம்   ஓலையைப்போட்டு எரியவிட்டு கொதிக்கவைத்து குட்டியூண்டு பில்டரில்   காஃபிப்பொடி   அமுங்க ஸ்நானம் செய்கிரது.

மெல்ல  டொக்டொக். பில்டருக்குச் செல்லத் தட்டல்.

சின்ன அருவியாய்  அடிப்பாத்திரம் 2 தரம்  ரொம்பறது.

திரும்பவும் ஓலை எரியறது.

கரி போகிணியில்  பால்   ஸந்தோஷமாய் மேலே வரது.

ஸரி பாதியா பிரித்து    சக்கரையைப் போட்டு,   இரண்டாந்தரம் காஃபிக்கு  ஸ்டாக் மூடியாகிறது.

வாசல்லே போட்ட  கோலத்தை விட   பக்கத்திலிருக்கும், பெருமாள் கோவிலோட ஹனுமானுக்கு ஒரு சின்ன கோலம். சாமியை சுத்திட்டு வரச்சே கிடைக்கற   2 பூவை  வீட்டு படத்திற்கு ஒரு பூஜை.

ஆனந்த மஹத்வம்  அகில ஜகம்  அத்தனையும்,

அனந்த மஹத்வம்   மாமுனிவரெல்லாரும்.

காவேரியம்மன்  கமலமலர்த் தாள் பணிந்தே

கங்கை யமுனையம்மன் செங்கமலர்த் தாள் பணிந்தே

காவேரிமாலை  அடிமேலடியாக  தொடருகிறது.

காவேரி ,  கங்கை  வாதம்  கேட்கிறது.

அப்பளாத்திற்கு    பிரண்டையும்  சேப்பங் கிழங்கையும் அரைத்துக்கொண்டே

பெண்ணை,கருடநதி,பேர் பெற்ற  வெள்ளாறு,தாமிர பரணி,

இதமானஸத்யநதி,

திவ்ய தீர்த்தமெல்லாம்  சேர்ந்த   கௌதமியும்,

ஸரயோர்க்கவையும்  ஸரிக்கொத்த கண்டகியும்

நேத்ராவதியுடனே நேர்வடக்கே  பெருகி நின்னா! கங்கை சொல்வது

காவேரி—பூக்கும் பயிர்களுக்கு  புதுஜலத்தை காணாட்டா,

காய்க்கும் பயிர்களுக்கு   காவேரி  காணாட்டா

வாடித் தவிப்பரம்மா மா ஜனங்க ளெல்லோரும்....

இப்போதய நிலவரம் அப்பவே தெரியும் போலிருக்கு!!

அரைச்சாச்சு.  பிரண்டையை.  வழிச்சாச்சு ஏனத்தில்

கையில்  குழிவான  நீள காம்போடு  இலுப்பைக்கரண்டி.

யார் முன்னாடி அடுப்பை மூட்டிருப்பா? விடி வெளக்குலே ஓலை பத்தவச்சு காபி போட்டாச்சு.  அடுப்பை மூட்டிட்டா ராத்ரிக்கு யார் முன்னே வெளக்கேத்தராளோ  அங்க போனா விளக்கெ  ஏத்தண்டு வந்திடலாம்.  வெத்துபொட்டி வாங்காத தள்ளணும். அவ்வளவுதான்.

அக்கா வென்னீர் சுட்டாச்சா?  இன்னும்  குளிக்கலையா நீ?

துளி  தணல் எடுத்துக்க  வந்தேன்.  விறகை நெறித்து தணல் எடுத்தாச்சு.

அப்படியே  விசிறிட்டுப் போ.  இல்லாட்டா  அடுப்பு அணைஞ்சுடும்.

தணலுக்கு கூலி.

கரண்டியில் ரெண்டு வரட்டியை பிச்சு போட்டுண்டு புகையவிட்டுண்டு, வீட்டில் வந்து அடுப்பை மூட்டியாச்சு.

முதலடுப்பில்   அப்பளாத்திற்கு   அரைத்ததைப் போட்டு உப்பு ஜலம் காச்சி மடியா எடுத்து வைச்சுட்டு,   குமட்டியில் தணலெப்போட்டு  சின்ன உருளியிலே பருப்பு வேகறது.

காயெப்போட்டு ஒரு பருப்புக் குழம்பு,  ஒரு கறி,  சம்ப்ரமமா சாப்பாடுதயார்.

அடுப்பு வேலெ ஆனதும்   தணலெத்    தள்ளி     அணைத்து மறு நாளுக்கு
 குமட்டிக்கு கறி  தயார். ஆச்சு. உளுத்தமாவை   உப்பு  ஜலம்விட்டு கெட்டியாகப் பிசைந்து   இடிக்க, மாவு ரெடி.

மாவு இடிக்கலாமாம்மா?  சிவப்பி வந்தாச்சு. டங்டங்டங்

திருப்பிப் போடம்மா,  இப்படி,அப்படி கைதேர்ந்த கைகாரியாய்ப் பதம் சொல்லிச் சொல்லி  இடியோ இடித்து, அம்மா எண்ணெ கொணாந்து போடம்மா,. விளக்கெண்ணெய்  ததும்பத் தடவி சீரக வாஸனையுடன் ஸோடாஉப்பு  சேத்த  மாவு  பளபள   என்று  தயார்.

அப்பளாத்துருண்டை கூட  ருசிதான். ஏனோ  எண்ணெய் வாஸனை கூட தெரியலே!!!   என்ன   மாயமோ?

தெரட்டி   ஒரே  சீரா   உருட்டி அஞ்சு அஞ்சா உண்டெய அடுக்கி கணக்கு

சுலபமா போட அடுக்கில் போட்டு எண்ணி மூடியாச்சு.

அரிசி மாவு, மணை,குழவிகளும்  ரெடியா  எடுத்து வைச்சு அப்பளாக் கச்சேரிக்கு  களம்  ரெடியாயிடுத்து.

நிம்மதியா சாப்பிட உட்கார்ந்தா   மாமின்னு  கோபு பெண்டாட்டி வந்து நிக்கறா. 

என்னடீ என்ன ஸமாசாரம்,   ஒருவாய் சாப்பிடலாம்னா ஸரியா வந்து நிக்கறயே?

இல்லே மாமி ஒரு அவஸரம்.  மூணு வரகான் வேணும்.குடுங்கோ.

என்ன கொணந்திருக்கே.  வெள்ளியா, பவுனா?

சின்ன தட்டு மாமி.

ஸரி   இந்தப் பையிலே போடு.   நான் ஸாயங்காலம் எழுத வைக்கிறேன். அப்புறம் இன்னும் பணம் கேட்கக் கூடாது.  வட்டி தெரியுமோன்னோ,  வரகானுக்கு ஓரணா.   வட்டி மாஸா மாஸம்  கொடுக்கணும்.  அதான் எனக்குச் சாப்பாடு தெரியுமா?

தெரியாதாயென்ன மாமி   உங்களவிட்டா சட்டுனு பணம் எங்கே பிரட்ட முடியும்?

மாமி ரொம்ப கரார்.  சின்ன வயதிலே விதவை ஆயிட்டா.ஆனாலும் இருக்கறதை வித்து சுட்டு கொஞ்சம் பைஸா கையிலே. சின்னதா வீடு ஒண்ணு.  எப்பவும் புராண கதைகளின் வசனம் போன்ற பாட்டுகள்.

அப்பளாம் இட்டு வரகாசு, வட்டி காசு, மாமி யாரிடமும் நிக்கலேன்னு பெருமையாவும் சொல்றதோட மத்தவாளை அசடுன்னு,  கூசாத சமத்து போறாது.  எப்பபாத்தாலும்  கடன் கேட்டுண்டு,  என்ன குடுத்தனம் பண்ரா?

மாமிக்கு   மூணறை ரூபா கணக்குதான் தெரியும்.     ஒரு வராகனாம் அது. அதுக்கு மாஸம் ஓரணா.   கிட்டதட்ட  4,    5 ரூபா  வட்டிவருமோ என்னவோ?

மீதி அஞ்சு ரூபா அப்பளாம் இட்டே   ஸம்பாதிச்சுடுவா.

வயணமா சாப்பிடணுமே.   கணக்கெல்லாம்   நான்  எழுதி  மாமிக்கு எல்லார் கணக்கையும் படித்சு காட்றதாலே   எனக்கு சலுகை

இதோ இன்னும் மாமிகளெல்லாம் வந்தாச்சு. ஒருவா இதோ சாப்டூட்டு வந்துடரேன்.

பசங்களைக்      கூட  அழைத்து  வந்தால் மாமிக்கு பிடிக்காது.

இங்கே எதுக்கு ஜடை கொச்சு எல்லாம் வேண்டிக் கிடக்கு.  நிம்மதியா வந்தமா, நல்லவார்த்தை நாலு    சொன்னமான்னு போகாம என்ன   சீரு  இதெல்லாம்.  நீ என்ன வேணுமானாலும்  நினைச்சுக்கோ. எனக்கு  பிடிக்கிரதில்லே.

இல்லே  சொன்னதை   கேக்காம வந்துடுத்துங்கோ!

எல்லாம் அப்பறமா   வாங்கோ...  போங்கோ.   மீனா பாட்டிக்கு பயந்து பசங்களெல்லாம் ஓட்டம்   ஆளுக்கொரு   மணை,  குழவி.

இன்னிக்கு என்ன பாட்டு?

காவேரி மாலை  கடைசி அடி

கலி விமோசனங்கள் பண்ணும்    காவேரி அம்மன் நான்

அதனாலே நானதிகம்   அன்ன நடையாளே

உமையாள்  ஸகோதரிக்கு  உபமானங்கள் சொல்லி நின்றாள்.

வட்டம் எல்லாம் ஸரியா இடுங்கோ!  வட்டங்கள் குவியரது.

எட்டும், பத்துமா  வட்டங்கள் ஒண்ணுமேலே ஒண்ணா வைச்சு

அப்பளாங்களாக   அரிசிமாவைத் தொட்டு  இரண்டொரு நிமிஷத்தில்

ஓட்டி   அப்பளாம்   வடிவெடுத்து விடுகிறது.

மறுநாள் அப்பளாம் காயவைச்சு த் துணியாலே தொடைச்சு அப்பளாம் ஒரே சீரா அமுங்க   மேலே  சந்தனக்கல்லை வைச்சு ஸமமா  அமுங்க வைத்தாகிறது.

நமுத்த  வாழை நாறைக்கொண்டு ஐம்பது    ஐம்பதா  எண்ணி    வாழை நாரால்  ப்ளஸும், பெருக்கல் குறியுமாக   கட்டி  அழகான   கட்டு தயாராகிவிடுகிறது.

வாங்கிரதுக்கு  மனுஷாளுக்கு பஞ்சமா என்ன?

ஒருநாள் பருப்பு உலத்தி  அரைக்கிரது.மறுநாள் இடிச்சு அப்பளாம்

நாலு வருஷமா உருண்டு  மாமி,  பாட்டியாயாச்சு.

பணம் மதிப்பு குறைஞ்சு போச்சு.   எல்லா பணமும் காலியாச்சு.

மன தைரியம் .  ஒரு முடிவு பண்ணிட்டா பாட்டி.பார்வையும் குறைய ஆரம்பிச்சுடுத்து.  தைரியமா கிளம்பிட்டா.   எங்கே?

நாராயணா கோபாலம்.

நான்தான்  நாராயண கோபாலம் சொல்றேன்.

முடிஞ்சதைக் குடுங்கோ.  நாராயணா சொல்ல தெம்பு கொடுங்கோ.

அரிசிக்கு பஞ்சமே இல்லை. நாலு நாளுக்கு ஒரு தரம் போனா போறும்.

மீந்த மோர், காய் கறி எல்லாம் கொடுத்தா எல்லாரும்.

இரண்டொரு வருஷம் போச்சு.   இன்னும் தள்ளாமை.

தூரத்து உறவு.   பேத்தி புருஷன் .  பணக்காரன். "பாட்டி நீ ஏன் கஷ்டப்படறே?  நான் போடறேன் சாப்பாடு.  நீ இருக்ற வரைக்கும் இந்த வீட்லேயே இரு.  நீ போனாக்க  இழுத்து போட்டூடறேன்.

பழமும் பக்ஷ்க்ஷணமும்  மதியை மறித்து  பாட்டி இரண்டாம் பேருக்குத் தெரியாமல்   ரிசிஸ்டராபீஸ் வரை போய்  கை நாட்டும் போட்டாச்சு.

ஸொந்தக்காரன்  கையிலே  நிக்காம  அசலாத்துப் பிள்ளை பாத்துக்குவான்.

பூரண நம்பிக்கை.

ரெண்டு வேளை  சாப்பாடு ஸரியா வந்தது.  பாட்டி நாராயண கோபாலம் போகலை  இரண்டு வருஷத்துக்கு மேலே ஆச்சு.

அசலாத்துப்     பிள்ளை  வந்தான்   ஒரு  நாள்.

வீட்டு விலைக்கு மேலே சாப்பாடு  போட்டாச்சு. நீ வீட்லெ இருந்துகோ.  என்ன பண்ணுவையோ எனக்குத் தெறியாது.  இரண்டொரு பாட்டு சொல்லிக்ரவா வந்தா.  பாட்டி கதை சொல்லி அழுதா.   பிச்சைக்கு போக கூட தெம்பில்லெயே?

பெரிய ஊர்.   எல்லாரும்   சாப்பாடா பேசி வைச்சக் கொடுத்தா.

அசலாத்து பிள்ளைக்கு   கொஞ்சம் ஒரைச்சு  அவாளும்  கொடுக்கிற மாதிரி  ஏதோ கொடுத்தா! யாருக்குத் தெரியும்?

பாட்டி வீதிக்கு வந்தாச்சு. எல்லோரும்  ஏதோ எறும்புக்கு  வராம போடும் மருந்தை கலந்து கொடுத்துட்டா போலிருக்கு   அப்படி இப்படி. எல்லோரும் பந்தோபஸ்தா   பாட்டியை உள்ளே  கொண்டுவிட்டு உபகாரம் பண்ணினா.

பாட்டி   யாருண்டையும்   உறவுகாராகிட்ட நிக்கலேன்ற எண்ணத்துடன்ஒரு நாள்போய்ச் சேந்தா.  அசலாத்துப் பிள்ளை காத்திருந்தவன் மாதிரி  ஓடி வந்தான். குறை ப்ராணன் போறதுக் குள்ளாகவே  தூக்கிப்போக  ஏற்பாடு செய்து  கோவிந்தா கொள்ளி போடவைத்துட்டான்.

பாட்டி பதமா போய்ட்டா.   எவ்வளவு   உழைச்சு தன்மானமா இருந்தா ?

வயோதிகம்   யாரை விட்டது?

பங்காளிகள் காரியமும் செய்தார்கள்.   எதிலும் குறைவில்லை.

20,  30 ஆகி 1000 உசந்த   முதியோர் பென்ஷன்  இப்போ இருக்கு.

பாட்டிக்கு   உறத்த மனம்தான் இருந்தது.

மீனாமாமியா,   மீனா சித்தியா,  மீனா பாட்டியா  நினைச்சிண்டா முதியோர் பென்ஷன்   தான்  ஞாபகம் வரது...

25 கருத்துகள்:

  1. நாங்கள் கோயில் உலா செல்லும்போது உடன் வருவோர் பலர் 60, 70 வயதிற்கு மேலுள்ளோர் ஆவர். அவர்களுடைய வேகமும் ஆர்வமும் என்னை பிரமிக்கவைக்கும். அவ்வாறே தங்கள் பதிவு மூலமாக அறிமுகமான அம்மா மற்றும் அவருடைய கதை என்னை உணர்வுபூர்வமாகப் பிணைத்தது. தங்களின் முயற்சிக்கு நன்றி. அம்மாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. காமாட்சி மகாலிங்கம் அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. இப்படி எத்தனை மீனா பாட்டிகள்.... நல்லதொரு கதை.

    பாராட்டுகள் அம்மா....

    பதிலளிநீக்கு
  4. புதுக் கவிதை போல் நடையில் கதை - மனதைத் தொட்டது. சின்ன வயதில் பார்த்த பாட்டியை அத்தைகளை நினைவுபடுத்தியது...

    பதிலளிநீக்கு
  5. கதை, முதியோர்களை, 2-3 லட்சம் காசியில் உள்ள சில மடங்களுக்குக் கொடுத்துவிட்டுத் தன் பெற்றோர்களையோ அல்லது அம்மாவையையோ விட்டுவிட்டு வந்துவிடுபவர்களைப் பற்றிப் படித்ததை நினைவுகூர வைத்துவிட்டது. மடங்களும் ஓரிரு வருடங்களுக்குப் பின், கொடுத்த காசுக்கு சாப்பாடு போட்டாச்சு என்று அவர்களை நிர்க்கதியாகவிட்டுவிடுவதும், அவர்கள் கங்கையில் குளித்து, காசி நாதனைத் தரிசித்து எங்கேயாவது கிடைத்ததை உண்டு அல்லல்படுவதும் நினைவுக்கு வந்தது.

    என் அப்பா என்னிடம் இதைப் போன்று பலரின் வாழ்க்கையைக் கூறியிருக்கிறார். அவர் சொன்னது, குழந்தைகளானாலும், வாயும் வயிறும் வேறு, சொத்து எப்போதும் கடைசி வரை தாங்கள்தான் வைத்துக்கொள்ளவேண்டும், தங்கள் காலத்துக்குப் பின்புதான் குழந்தைகளுக்கு என்பதே சரியான வழி.

    காமாட்சி மேடத்தின் அனுபவம் (experience in hearing such instances from people around) இதைப் போன்ற பல சம்பவங்களை நினைவுகூர வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீமதி காமாக்ஷி மாமிக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

    மிகவும் அருமையான அசத்தலான உணர்வுபூர்வமான எழுத்துக்கள்.

    //காய்ந்த தென்னமட்டையில் குச்சியை அரிவாள் மணையில் சீவி யெடுத்துவிட்டு பாக்கி ஓலையை சின்ன சின்ன கட்டாக கட்டி எறியவிட லாகவமாய். குச்சிகள் கட்டி ஈரம் பெருக்கும் துடப்பமாக........ பிரண்டை அரைத்தல் + அப்பளம் இடுதல் ஆகிய வரிகளில் என் மாமியாரை நினைத்து நினைத்து அழ வைத்து விட்டீர்கள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. //அப்படியே விசிறிட்டுப் போ. இல்லாட்டா அடுப்பு அணைஞ்சுடும்.

    தணலுக்கு கூலி.//

    இந்த இடத்தில் நான் மிகவும் ரஸித்துச் சிரித்துக்கொண்டேன். உணர்வுபூர்வமான எழுத்தென்றால் .... இதுதான் எழுத்து.

    என் ஸ்பெஷல் பாராட்டுகள், மாமி.

    >>>>>

    பதிலளிநீக்கு
  8. //மாமிக்கு மூணறை ரூபா கணக்குதான் தெரியும். ஒரு வராகனாம் அது. அதுக்கு மாஸம் ஓரணா. கிட்டதட்ட 4, 5 ரூபா வட்டிவருமோ என்னவோ?//

    ஆம். அந்தக்காலத்தில் மூன்றரை ரூபாயை (Rs. 3.50) ஒரு வராஹன் எனச் சொல்லி நான் என் தந்தை மூலம் கேள்விப்பட்டுள்ளேன்.

    ரூ. 3.50 க்கு மாதம் ஒரு அணா வட்டி என்றால் வருடத்திற்கு 0.75 வட்டி ஆகிறது.

    இன்று 100 பைசா என்பது ஒரு ரூபாய். அந்தக்காலத்தில் 16 அணாக்கள் என்பது ஒரு ரூபாயாகும். அந்தக்கால ஒரு அணா என்பது இந்தக்கால 6.25 பைசாவுக்கு சமமாகும்.

    தாங்கள் கதையில் சொல்லியுள்ளது போல வைத்துக்கொண்டால், ரூபாய் நூற்றுக்கு ஒரு வருடத்திற்கு ரூ. 21.50 மட்டுமே வட்டிக் கணக்காகிறது. இதைக் கந்து வட்டிபோல அதிக வட்டி எனச் சொல்ல முடியாது. மாதம் ரூ 100 க்கு ரூ.2 கூட வரவில்லை. அதில் ஒன்றும் தப்பே இல்லை. ஒருவருக்கொருவர் பரஸ்பர உபகாரம் மட்டுமே என நாம் வைத்துக்கொள்ளலாம்.

    நான் பிறப்பதற்கு முன்பு, அன்று வறுமையில் வாடிய என் பெற்றோர்களும் இதுபோல வீட்டிலுள்ள சாமான்களை அடகு வைத்து, அக்கம்பக்கத்தாரிடம் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளதாகக் கேள்விப்பட்டு வருந்தியுள்ளேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  9. //பசங்களைக் கூட அழைத்து வந்தால் மாமிக்கு பிடிக்காது.//

    கொல்லன் பட்டறையில் ’ஈ’க்கு என்ன வேலை எனச் சொல்லுவார்கள். பெரியவர்கள் அழகாக அப்பளம் இட்டுக் காயப்போடும் ஃபேக்டரி வேலையில் குழந்தைகளைக்கூட்டி வந்தால் மிகவும் தொல்லைதான். மாமிக்குப் பிடிக்காது என்ற யதார்த்தம் எனக்குப் பிடித்துள்ளது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  10. //தூரத்து உறவு. பேத்தி புருஷன் . பணக்காரன். "பாட்டி நீ ஏன் கஷ்டப்படறே? நான் போடறேன் சாப்பாடு. நீ இருக்கிற வரைக்கும் இந்த வீட்லேயே இரு. நீ போனாக்க இழுத்து போட்டூடறேன். ஸொந்தக்காரன் கையிலே நிக்காம அசலாத்துப் பிள்ளை பாத்துக்குவான். பூரண நம்பிக்கை.

    பழமும் பக்ஷணமும் மதியை மறித்து பாட்டி இரண்டாம் பேருக்குத் தெரியாமல் ரிசிஸ்டராபீஸ் வரை போய் கை நாட்டும் போட்டாச்சு.//

    பாவம் .... அந்தப் பாட்டியிடம் இருந்த ஒரே வீட்டையும் எழுதி வாங்கிக்கொண்டு விட்டான் போலிருக்குது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  11. அழகாக எழுதி அருமையாக முடித்துள்ளீர்கள். ஸ்பெஷல் பாராட்டுகள். வாழ்த்துகள். நமஸ்காரங்கள்.

    இதுபோன்று லோகத்தில் எவ்வளவோ மாமிகள் + பாட்டிகள் உழைத்து உழைத்து, வாழ்க்கையில் கொஞ்சமும் சுகப்படாமல் கடைசிவரை கஷ்டங்களை மட்டுமே அனுபவித்துப் போய்ச் சேர்ந்துள்ளார்கள்.

    ஒவ்வொன்றையும் அனுபவித்து எழுதியுள்ள கதாசிரியருக்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    இதனை இன்று இங்கு வெளியிட்டுப் படிக்க வாய்ப்பளித்துள்ள ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’க்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    -oOo-

    பதிலளிநீக்கு
  12. அனுபவம் பேசும் கதையாக இருக்கிறது எழுத்தும் நடையும் அவர் இன்னும் அந்தக்காலத்திலேயே இருப்பதுபோல் காட்டுகிறது இதுதான் இவர் எழுத்தை நான் முதன்முதலாகப் படிக்கும் கதை வாழ்த்துகள்;

    பதிலளிநீக்கு
  13. காமாட்சியம்மா ..நிறைய சமையல் குறிப்புகள் அவங்ககிட்டருந்து கத்துகிட்டேன் ..அப்படியே அருகில் இருந்து பேசுவது போன்ற இயல்பான எழுத்து நடை ..அவங்க ராயல் பிளைட் சாளக்கிராமம் பதிவும் எல்லா பதிவுகளுமே ரொம்ப நல்லா இருக்கும் .
    மீனா மாமி கதை கண்களை குளமாக்கியது ..இங்கே வெளிநாட்டை பொறுத்தவரை வயதானோருக்கு பணம் பிரச்சினையில்லை தனிமை மட்டுமே ..நம்ம நாட்டு சீனியர்ஸுக்கு கட்டாயம் முதியோர் பென்ஷனும் அன்பா அரவணைக்கும் மனதுள்ள மனிதர்களும் கட்டாயம் அவசியம் .வாழ்த்துக்கள் எங்கள் பிளாக் ..

    பதிலளிநீக்கு
  14. ஒரு நாற்பது, நாற்பத்தைந்து வருடங்களுக்கு பின்னால் கூட்டிச் சென்று விட்டீர்கள். நான் சிறுமியாக இருந்த பொழுது பார்த்த அப்பளக் கச்சேரிகளும், அதில் கலந்து கொண்ட மாமிகள், பாட்டிகளும் நினைவுக்கு வந்தார்கள். வித்தியாச நடையில் ஒரு கதையை படிக்க வைத்த உங்களுக்கும் சிறுகதை காவலர் ஸ்ரீ ராமுக்கும் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  15. காமாட்சியம்மா!! அப்படியே அந்தக் காலத்துத் திண்ணைக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள்! திண்ணையில் உட்கார்ந்தால் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள்! அப்படியே திண்ணையில் உட்கார்ந்து மீனா பாட்டியைப் பற்றிக் கேட்டது போலுள்ளது!! வாழ்த்துகள்! பாராட்டுகள் காமாட்சியம்மா! இப்படி எத்தனையோ மீனா பாட்டிகள்/மாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாட்டிகள்/மாமிகள் மட்டுமில்லை, தாத்தாக்களும்/மாமாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாவம் பாட்டி! மனதை என்னவோ செய்தது இறுதியில்!

    எங்கள்ப்ளாகிற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  16. பாட்டி மனோதிடம் மிக்கவள் தான். ஆனாலும் இப்படி ஏமாத்தி இருக்க வேண்டாம்! :( நேரில் பேசுவதைக் கேட்பது போலவே இருக்கு!

    பதிலளிநீக்கு
  17. இங்கே செவ்வாய் இரவு. நானும் காலையில் இருந்து இதைப் படிச்சுட்டுக் கருத்துச் சொல்ல வரும்போதெல்லாம் முடியாமல் போய் விட்டது! :) அடுத்த பதிவும் வந்திருக்கு போல!

    பதிலளிநீக்கு
  18. காவேரி அம்மன் பாட்டு நன்றாக இருக்கு என்றால் இந்த ஓலையில் அடுப்பை எரிய விடுவது எல்லாம் எனக்குக் கல்யாணம் ஆனப்புறமாத் தான் புக்ககத்தில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். எங்க பக்கமும் கிராமங்கள் உண்டுன்னாலும் அங்கே எல்லாம் ஓலையில் எரித்துப் பார்த்ததில்லை. என் மாமியாரும் ஓலையை எரித்துத் தான் காஃபி போடுவார். எனக்கெல்லாம் ஓலை வாசனை வராப்போல் இருக்கும். :) அவங்க எல்லாம் இல்லைனு சொல்வாங்க! :) மறுபடியும் பழைய நாட்களுக்குப் போய் விட்டேன் இதைப் படிச்சதும். தென் மாவட்டத்துக் கிராமங்கள் எல்லாம் அப்போதே சாலை வசதி, விளக்குகள், குழாய் போன்றவற்றோடு இருக்கும். கிராமத்துக்குக் கிராமம், நகருக்கு நகர்!

    பதிலளிநீக்கு

  19. வலையுலகின் சிறந்த படைப்பாளியின் பதிவை பகிர்ந்த தங்களைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. ஏற்கனவே மாமியின் வலைத்தளத்தில் படித்த கதை. மீனா பாட்டி எத்தனை தான் சாமர்த்தியமாக இருந்தாலும் ஏமாற்றுவதற்கு எங்கிருந்தோ ஒருவன் வந்திருக்கிறான். மனதை ரொம்பவும் வருத்துகிறது. நாதி இல்லாதவர்களை ஏமாற்றும் ஒருவன் மனிதனா? எப்படியோ, இதுதான் உலகம்.
    ****

    காமாட்சி மாமி இப்போது ஜெனிவாவில் இருக்கிறார். கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரியில் இருக்கிறார். நேற்று அவருடன் பேசினேன். தனது கதைக்கு கருத்துரை எழுதியவர்களுக்கு உடல்நலம் சரியானதும் பதில் எழுதுவதாகச் சொல்லச் சொன்னார்.

    சைபர் சிம்மன் ஒருமுறை வெளிநாட்டில் ட்விட்டர் தளத்தில் பிரபலமாக இருந்த ஒரு என்பது வயதுப் பாட்டி பற்றி எழுதியிருந்தார். அந்தப் பதிவில் கருத்துரை போடும்போது, இங்கும் இதுபோல பாட்டிகள் இருக்கிறோம், எங்களைப் பற்றியும் எழுதுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். அவரும் எழுதியிருந்தார். அந்தப் பதிவில் என்னை காமாட்சி மாமியின் மகள் என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் நானும் மாமியும் அப்படித்தான் பழகி வருகிறோம். அவள் விகடனிலும் என்னையும் மாமியையும் ஒரே வாரத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.
    மாமியின் நட்பு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுப்பது. மனதிற்கு இதமானது. மாய் வெகு விரைவில் வீடு திரும்பி இயல்பு வாழ்க்கையை தொடர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. மாமியின் ஆரோக்கியத்திற்கு எல்லோருமாக பிரார்த்தித்துக் கொள்வோம், வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  21. காமாட்சி அம்மாவின் உடல் நலம் விரைவில் பூரண குணம் அடையப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  22. Thanks for the information ranjanimma .we shall join our hands in prayers for kamatchi ammas quick recovery.

    பதிலளிநீக்கு
  23. 'அடுத்த வீடு' , 'அரக்கு மாளிகை', 'மிதிலா விலாஸ்' எழுதிய 'லக்ஷ்மி' அவர்களை நினைத்துக்கொண்டேன். அந்தக் காலத்து பிராம்மண பாஷை. நினைவுகள் பின்னோக்கி ஓடுகின்றன. எழுத்துக்கு வயதில்லை என்று நிரூபணம் ஆகிறது. காமாட்சி அம்மா அவர்களுக்கு எனது நமஸ்காரம். - இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!