திங்கள், 20 மார்ச், 2017

"திங்க"கிழமை : கொள்ளு - பயறு புட்டு (ஒக்காரை) -ஹேமா ரெஸிப்பி




    ஒரு நாள் இதில் சாம்பிள் எடுத்து வந்து கொடுத்தபோதுதான் போட்டோ எடுத்து, விவரம் எழுதித் தரலாமே என்று ஹேமாவிடம் நான் கேட்டேன்.
  இதுதான் முதலில் கொடுத்தார்.  சென்ற வாரம் வெளியிட்டதை முதலில் எழுதிக் கொடுத்து விட்டதால்அதை முதலில் வெளியிட்டேன்.
     இன்று இதை வெளியிடுகிறேன்.

தேவையான பொருட்கள் :
கொள்ளு - 1/4 கப்  வறுத்து அரைத்து மாவு
பயறு - 3/4 கப் வறுத்து அரைத்து மாவு
அவல் - 1/2 கப் வறுத்துப் பொடித்துத் தனியே வைத்துக் கொள்ளவேண்டும்
சிகப்புப் புட்டரிசி மாவு - 1 கப் அல்லது அரிசி புட்டு மாவு
தினை மாவு - 1 கப்
வெல்லம் - 21/2 முதல் 3 கப் வரை
நெய் - 2 டீஸ்பூன்
ஆளிவிதை,பூசணி விதை, வெள்ளரி விதை தலா 2 டீஸ்பூன்.
ஏலக்காய்த் தூள்.

கொள்ளு, பயறு இரண்டையும் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.  தினை மாவை வறுத்துக் கொள்ளவும்.  

 
கொள்ளு, பயறு இரண்டையும் வறுத்த பிறகு ஒருமணிநேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.  அரைத்த மாவை இட்லி மாதிரி ஆவியில் வைத்து எடுத்து புட்டுக்கு உதிர்ப்பது போல உதிர்த்துக் கொள்ளவேண்டும்.  அதே போல மாவையும் உப்பு நீர் லேசாகத் தெளித்து புட்டுக்கு ஆவி காட்டி எடுப்பது போல எடுத்துக்கொள்ள வேண்டும். 
 

பிறகு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வெல்லப்பாகில் சேர்க்கவேண்டும்.
 
 



வெறும் வாணலியில் ஆளி, பூசணி, வெள்ளரி விதைகளை வறுத்துத் தனியே வைத்துக் கொள்ளவும்.






வெல்லத்தை வடிகட்டி நல்ல பாகாகக் காய்ச்சவும்.  பாகு நன்றாக பாகு பதம் வந்ததும் வைத்துள்ள மாவுகளைக் கொட்டி கிளறவும்.  கடைசியில் அவல் பௌடரைத் தூவிக் கிளறவும்.  இறக்கும்போது வறுத்து வைத்துள்ள விதைகளைத் தூவி நெய்யை ஊற்றிக் கிளறி இறக்கவும்.

26 கருத்துகள்:

  1. நல்லா இருக்கும். செய்யச் சொல்லிடுவோம் - அடுத்த பயணத்தில்!

    பதிலளிநீக்கு
  2. ஆ நான் பர்ஸ்ட் என்று சொல்லும் போது வெங்க்ட் இல்லை வெளியிடும் போது எனக்கு முன்னால் ஜம்ப் பண்ணிட்டாரு

    பதிலளிநீக்கு

  3. எங்காத்து மாமி இன்று கூட இது மாதிரிதான் கேப்பை மாவையும் ரோஸ்ட் செய்த ஆல்மண்ட்டையும் பொடி செய்து நெய்யும் கருப்பட்டி பாககையும் சேர்த்து இது மாதிரி ஒரு பண்டம் பண்ணினார். இங்கே கொள்ளு கிடைப்பதில்லை...

    பதிலளிநீக்கு
  4. அதிசயமா இன்னிக்கு தான் மீ த ஃபர்ஸ்ட்! மதுரைத் தமிழன்! :) பெரும்பாலும் லேட் லத்தீஃப் தான் நான்!

    பதிலளிநீக்கு
  5. இன்னிக்குத் தான் பாம் ஷுகரில் கேழ்வரகு மாவை இந்த மாதிரிப் பண்ணலாம்னு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
  6. வித்யாசமாக இருக்கு. செய்துபார்த்துவிட வேண்டியதுதான்.

    @கீதா மேடம்... எங்கிட்ட நிறைய உடன்குடி கருப்பட்டி இருக்கு. அதுவைத்து கருப்பட்டி பணியாரம் பண்ணலாம்னு நினைச்சேன். ராகிமாவும் இருக்கு. செய்முறை சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா... வித்தியாசமான இருக்கும் போல....

    பதிலளிநீக்கு
  8. ஈஸியா இருக்கு...

    ஒரு சந்தேகம்...
    பாகுல மாவுகளை சேர்த்து கிளறினால் போதுமா...
    இன்னொரு ஆவி மாவை வேக விட வேண்டாமா...

    பதிலளிநீக்கு
  9. @Anuradha Premkumar தானியங்களை வறுத்து அரைப்பதால் வேகவிட வேண்டாம்

    பதிலளிநீக்கு
  10. சில வரிகள் - முக்கியமான குறிப்புகள் - விட்டு போயிருப்பதை ஹேமா சுட்டிக் காட்டினார். குறிப்புகளும் கொடுத்தார். அதை பதிவில் சேர்த்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  11. படிக்கவே அருமையா இருக்கு. சாப்பிடவும் நன்றாக இருக்கும். இங்கே கடையில் உ.கிழங்கு வறுவல் பவாங்க்கக் கூட பயமா இருக்கு. அவர்கள் மொழியில் மீன் கலந்திருக்குன்னு எழுதுகிறார்கள். இந்தியக் கடைகளிலில் கிடைக்குமான்னு பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  12. இதேமாதிரி ராஜ்கிராவில் செய்யலாம் அதோடு கேழ்வரகு மாவு சிகப்பு புட்டரிசி அப்புறம் buck wheat //குட்டு ஆட்டா எல்லாமும் சேர்த்து செய்ய சூப்பரா இருக்கும் .
    ஒரு நேந்திரம்பழத்தை குட்டியா வெட்டி அடியில் பரப்பி அதன் மேலே ஒக்கரை புட்டு மிக்சிங் அதுமேல தேங்காய் துருவல் போட்டு ஸ்டீம் செஞ்சாலும் நல்ல இருக்கும் ..வெள்ளரி விதை பூசணி விதை ஆளி விதை எல்லாமே நான் அடிக்கடி சேர்ப்பது ..

    பதிலளிநீக்கு
  13. புது மாதிரி புட்டு செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. வறுத்து மிஷினில் அல்லது மிக்சியில் திரித்த மாவை ஆவியில் வேக வைக்காட்டியும் நன்றாகக் கொதித்த சுடுநீரை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஊற்றிக் கிளறி ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஊற வைத்து விட்டுப் பின்னர் வெல்லப் பாகைச் சேர்க்கலாம். கேழ்வரகு மாவு, தினைமாவெல்லாம் ஆவியில் வேக வைத்து எடுக்கையில் ரொம்பக் கவனமாக உடனே எடுக்கும்படியா இருக்கும். ஆகவே இது வசதியா இருக்கும். கொள்ளைத் திரித்து ஆவியில் வேக வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  15. @ நெல்லைத் தமிழன், மாவில் கருப்பட்டி சேர்த்து, ஏலக்காய், தேங்காய்த்துருவல் சேர்த்து அப்பம், குழிப்பணியாரம் மாதிரிச் செய்யலாம். மேலே சொன்னாப்போல் புட்டு செய்யலாம், நெய் சேர்த்து ஏலக்காய், முந்திரிப்பருப்புப் போட்டு உருண்டை பிடிக்கலாம். கஞ்சி அல்லது கூழ் செய்து கருப்பட்டியைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
  16. நான் கொள்ளு சேர்த்து உப்புப் புட்டு, நவதானிய மாவுடன்.....சிறு தானிய மாவுடன் செய்துள்ளேன். அது போல கொள்ளும், வெள்ளரி மற்றும் பூசணி விரை சேர்க்காமல் இனிப்புப் புட்டு செய்துள்ளேன். வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துச் செய்வேன். உப்புப் புட்டானாலும் சரி, இனிப்புப் புட்டானாலும் சரி மாவை நல்ல சூடு தண்ணீர் தெளித்துத் தெளித்து பிசறி மூடி வைத்துவிட்டு மீண்டும் அது ட்ரை ஆகி யிருந்தால் சூடு தண்ணீர் தெளித்து பிசறி வைத்துவிட்டு பின்னர் சில மணி நேரங்கள் கழித்துச் செய்வது வழக்கம். உப்புப் புட்டிற்கே மாவைப் பிசறி சில மணி நேரங்கள் மூடி வைத்துவிட்டுச் செய்தால் புட்டு மிகவும் நன்றாக வரும்.

    சிகப்பரிசியில் தனியாகவும் செய்வதுண்டு இனிப்பும் உப்பும்....இனிப்பில் கொள்ளு, விரைகளும் சேர்த்துச் செய்து பார்த்துவிடுகிறேன்....நல்ல ரெசிப்பி....

    கீதா

    பதிலளிநீக்கு
  17. ஏஞ்சல் யெஸ் நீங்கள் சொல்லுவது போல் நேந்திர்ப்பழம் வைத்தும் செய்வதுண்டு.....ஆளி விதையும் அடிக்கடி சேர்ப்பதுண்டு. ஆளிவிதை பௌடரை சப்பாத்தி மாவிலேயே கலந்தும் செய்வதுண்டு....

    கீதா சாம்பசிவம் அக்கா சொல்லியிருப்பது போல் கருப்பட்டி சேர்த்து கூழ் எல்லாம் பெரும்பாலும் வெல்லம் அல்லது கருப்பட்டிதான்....

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அதே அதே !! ஆமாம் கீதா நான் கவுனி அரிசியிலும் இப்படி செய்வேன் எங்கூர்ல ஒரே வெல்லம் குஜராத்தியர் உபயோகிக்கும் gur ரொம்ப இனிப்பு அதனால் பாதி அளவ போட்ட போதும்

    பதிலளிநீக்கு
  19. சுவைத்துப் பார்க்க மனம் விரும்புகிறது நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  20. கருத்துரை மூலம் அதிக குறிப்புகள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  21. நல்லதொரு ரெசிப்பி... ஆனா எனக்கும் வீட்டிலும் இது பிடிக்குமா தெரியல்ல.. இப்படியான ஐட்டங்கள் பெரிசா பிடிக்காது அத்தோடு ரொம்ப பொறுமையா மினக்கெட்டு செய்யோணும்... பொறுமையா அழகா படங்கள் எடுத்து அனுப்பிய ஹேமா(பெரியவரா சிறியவரா தெரியல்ல.. அதனால பெயர் சொல்லிவிடுகிறேன்) வுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இன்னும் பல குறிப்புக்களை எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து.

    பதிலளிநீக்கு
  22. மிகவும் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  23. அதென்னவோ தெரியலை கொள்ளு என்றதும் குதிரை நினைவுதான் வருகிறது என் மனைவி கொள்ளு ரசம் உடம்புக்கு நல்லது என்று சொல்லி அவ்வப்போது வைப்பாள்

    பதிலளிநீக்கு
  24. பயறு என்றதும் நீரிழிவுக்கு நன்றென்று உணருகிறேன்.

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!