செவ்வாய், 7 மார்ச், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: அங்கீகாரம் மிடில் கிளாஸ் மாதவி     இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில்
பதிவர் மிடில் கிளாஸ் மாதவி அவர்களின் சிறுகதை இடம்பெறுகிறது.


     அவரின் தளம் மிடில் கிளாஸ் மாதவி.


     அன்றாட வாழ்வில் சந்திக்கும் உணர்வுப் போராட்டத்தின் ஒரு உன்னத கணத்தைப் பதிவு செய்திருக்கும் மிடில் கிளாஸ் மாதவி எங்கள் ப்ளாக்கின் நீண்ட கால வாசக நண்பர்களில் ஒருவர்.  முன்பு பதிவுலகில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த இவர் மீண்டும் அதே சுறுசுறுப்பைப் பெற வாழ்த்துகள்!==============================================================

 கதைக்கான முன்னுரை  :


நான் லோயர் மிடில் க்ளாஸிலிருந்து மிடில் மிடில் க்ளாஸ் தாண்டி அப்பர் மிடில் க்ளாஸை எட்டிப் பார்த்து இறங்கும் ஒரு சாதாரணப் பெண்மணி! அரசு அலுவலகத்தில் பணியாற்றி தற்சமயம் என் தாயாரை கவனிக்க வேண்டியும் திசைக்கொன்றாய்ப் பிரிந்த குடும்பத்துக்காகவும் விருப்ப ஓய்வு பெற்று விட்டேன்! இந்த வாழ்க்கையில் அட்ஜஸ்ட் ஆகி, எழுத்துத் துறையில் இன்னும் ஈடுபட ஆசை! பெரிதாக சொல்லிக் கொள்ள வேறொன்றுமில்லை!


===================================================================================== 

அங்கீகாரம்
மிடில் கிளாஸ் மாதவி

"நீ நல்லவளாகவே இருக்கலாம்; புத்திசாலியா, பார்க்க லட்சணமா இருக்கலாம்! ஆனால், நீ எங்கள் வீட்டுக்குத் தேவையில்லை! எங்கள் வீட்டுப் பழக்க வழக்கமும் உங்கள் பழக்க வழக்கமும் ஒத்துப் போகாது. என் மகன் உனக்கு வேண்டாம். உன்னை அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என் மாப்பிள்ளைகள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்?" இது ரிதம் படத்தில் வந்த வசனம் இல்லை. தேவியைப் பார்த்து ராஜாவின் அம்மா சொன்னது. தேவியும் ராஜாவும் காதலித்தனர். தேவியின் வீட்டில் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டனர். தேவி ராஜாவின் வீட்டிற்குச் சென்ற போது ராஜாவின் அம்மா பங்கஜம் சொன்னது தான் மேலே படித்தது!

ராஜா பிறகு எவ்வளவோ முயன்றும் அவன் அம்மாவின் மனதை மாற்ற முடியவில்லை. இப்படியே ஓரிரு வருடங்கள் கழிந்தன. கடைசியாக மணமகள் வீட்டில் 1 மாதம் கெடு கொடுத்து விட்டனர்! வேறு வழியில்லாமல், தேவி-ராஜா திருமணம், ராஜாவைத் தவிர மணமகன் தரப்பிலிருந்து ராஜாவின் தம்பி மட்டும் கலந்து கொண்டு நிறைவேறியது.  தம்பதியர் தனிக்குடித்தனம் சென்றனர்.

இரண்டு மாதம் உருண்டோடியது. ராஜா வீட்டிலிருந்து அவன் அம்மாவைத் தவிர, அவன் அப்பா உட்பட, அனைவரும் இந்தத் தம்பதியிடம் அன்பாகப் பழக ஆரம்பித்தனர். ராஜா திருமணமானதும் முதல் முதலில் அனுப்பிய காசோலையையும் திரும்ப அனுப்பிய அவன் அம்மா   பங்கஜம், அன்றொரு நாள் கூப்பிட்டு அனுப்பிய போது, ஆசையுடன் ஆசி வாங்கச் சென்றனர் இருவரும். பங்கஜத்தம்மாளோ, அங்கிருந்த ராஜாவின் சாமான்களை எடுத்துப் போகச் சொன்னதோடு, ராஜா கொடுத்து விட்ட தீபாவளிப் புடவையையும் திரும்பத் தந்தார்!! தம்பதி கண்ணீரோடு திரும்ப வந்தனர்.

இதோ, அந்தத் தம்பதிக்கு மகளும் பிறந்து விட்டாள்! லக்ஷ்மியை அப்பா வழிப் பாட்டியைத் தவிர அத்தனை சொந்தமும் கொஞ்சி மகிழ்ந்தனர். கூட்டிப் போன போதும் பாட்டி பார்க்க மறுத்து விட்டார்! ஆனாலும் சன்னலின் வழியே அவர் பார்த்ததை, இருவரும் கவனித்துக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தனர்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு திடீரென தேவியிடமிருந்து ராஜாவிற்குத் தொலைபேசி அழைப்பு - "அம்மா நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்". ராஜா உடனே வீட்டிற்குத் திரும்பினான். "ராஜா, நல்லாயிருக்கியா? பேத்தி, அப்படியே என் அம்மா ஜாடை!  லக்ஷ்மி தேவியே தான்" என்று பேசிய   பங்கஜத்தம்மாளைப் பார்த்து திகைத்தான் ராஜா. "எனக்கு லேசாக ஹார்ட் அட்டாக் வந்து, ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். உங்களிடம் எல்லாம் சொல்ல வேண்டாமென்று நான் தான் அப்பாவைத் தடுத்தேன்! ஆஸ்பத்திரியில் இருந்த போது தான் ஒரு கணத்தில் போயிருக்க வேண்டிய உயிர், எதற்கு இந்த வீண் சண்டை எனத் தோன்றியது. அதான் நல்லா குணமானதும் நானே உங்களைப் பார்க்க வந்து விட்டேன்!" என்றார் அவர்.

பங்கஜம்  அதன் பின் இவர்கள் வீட்டுக்கு அவ்வப்போது வந்து போக ஆரம்பித்தார். திடீரென ராஜாவின் அப்பா உடல் நலன் சரியில்லாமல் போக, அனைவரும் ஆஸ்பத்திரிக்கு அலைய ஆரம்பித்தனர். சிகிச்சைகள் பலனின்றி ராஜாவின் அப்பா இறைவனடி சேர்ந்தார். அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் ஒன்றும் குறைவில்லாமல ராஜாவின் வீட்டிலேயே செய்து முடித்தனர்.

ஆயிற்று, மாமனார் இறந்து ஒரு வருடம் முடிந்து போனது -   வருஷத் திதி முடிந்த இரண்டாவது நாள் -  இன்று தேவியின் வீட்டில் எல்லா உறவினர்களும் கூடியிருந்தனர்.  வந்திருந்த உறவினர் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். பங்கஜம், எல்லாரிடமும் ஆளுக்கு நூறு ரூபாயைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கே அப்போது வந்த தேவி, "என்ன, எதற்குப் பணம்?" என்று கேட்க, "உன் மாமனார் இது வரை எல்லாருக்கும் கார்த்திகைப் பண்டிகைக்குப் பணம் கொடுத்தாரில்லையா, அதான் இப்போ நான் தொடர்கிறேன்" என்று பங்கஜம் பதில் சொன்னார். தேவியும் தனக்கும் அவர் ஆசிர்வாதமாகப் பணம் தருவார் எனப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் - அவர் இவள் பக்கம் திரும்பவே இல்லை!


பக்கத்தில் இருந்த நாத்தனாரிடம் தேவி மெல்லிய குரலில், "எனக்குக் கிடையாதா?" என்று கேட்க, அவளோ, 'அம்மா, அண்ணி கேட்கறாங்க பாரு!" எனப் போட்டுக் கொடுத்து விட்டாள்! பங்கஜம் தேவியிடம், "உனக்குக் கிடையாது" என்று சொல்லி விட்டு, "இந்தா, உனக்கு இந்தப் புடவை வாங்கி வைத்திருக்கிறேன். நீ பொறுப்பாக எல்லாக் காரியத்தையும் செய்தாய். நான என் கையால் உனக்குப் புடவை வாங்கித் தரணும் என்று தோன்றியது" என்று புடவையைக் கொடுக்க, சுற்றியிருந்தவர்கள் கை தட்டினர்.   தேவி அழ ஆரம்பித்தாள்!

27 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  கதையும் கதைக் கருவும் அற்புதம் பகிர்வுக்கு நன்றி.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. கதை நல்லாருக்கு. சமூகத்தின் தளையைச் சொல்லிச் செல்கிறது. தெரிந்தவர்கள் வீட்டில் நடந்ததைக் கதையாக்கிவிட்டீர்களோ.

  பதிலளிநீக்கு
 3. எப்படியோ அந்த பங்கஜத்தம்மாள் மூலம் தேவிக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது கேட்க அந்த தேவியைப் போலவே நம்மையும் ஆனந்தக் கண்ணீர் விட வைக்கிறது. கதாசிரியை அவர்களுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

  இந்த வார இந்தக் கதாசிரியர் யாரு?

  எனக்கும் எங்கேயோ கேட்ட பெயராக ஏதோ ஸ்வப்ன ஞாபகமாக உள்ளது.

  எந்த ஊரில் இருக்கிறார்கள்?

  இவர்களை நீங்கள் எப்படிப் பிடித்தீர்கள்?

  இவர்களை இதுவரை நேரில் பார்த்து சந்தித்துள்ளீர்களா?

  போட்டோவிலாவது பார்க்கலாம் என நினைத்து நான் இங்கு ஓடோடி வந்தேன்.

  அதிலும் எனக்கு ஏமாற்றமாகி விட்டது. :(

  அதனால் பரவாயில்லை.

  அம்பாளை நேரில் காண்பது என்பது நடக்காத காரியம் மட்டுமே என்பது எனக்கும் புரிந்தது.

  நீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் எழுத்துக்களிலாவது தரிஸனம் கிடைத்ததில் மகிழ்ச்சியே.

  பதிலளிநீக்கு
 5. அறிமுகமான வலைப்பதிவர். அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. // பொறுப்பாக எல்லாக் காரியத்தையும் செய்தாய். நான என் கையால் உனக்குப் புடவை வாங்கித் தரணும் என்று தோன்றியது //

  இதைவிட சிறந்த அங்கீகாரம் வேறொன்றுமில்லை ..அன்பு அவர் மனதில் ஆழத்தில் இருந்திருக்கு ஈகோவால் அதை வெளிப்படுத்த தருணம் அமையவில்லை இறுதியில் அன்பே வென்றது .அருமையான கதை மாதவிக்கு வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு நன்றிகள் எங்கள் பிளாக்

  பதிலளிநீக்கு
 7. கதையை படித்து ரசித்தேன் குறை ஒன்று மில்லை வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. நல்ல விதமாக நகர்த்தி, அருமையாக முடித்து, கோபு அண்ணன் சொன்னதுபோல நம் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் வரவைத்துவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. நீர் அடித்து நீர் விலகுமா? தாய்மைப் பண்புகள் காலம் தாமதித்தாவது தம்மை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. (சொன்னால் கோபித்துக்கொள்வார்களோ? இன்னும் சற்றே விரிவாக எழுதியிருக்கலாம்....)

  -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  பதிலளிநீக்கு
 10. சேலையை விடவா பெண்ணுக்கு பணம் சந்தோசம் தந்து விடும் ?சரியான பரிசு :)

  பதிலளிநீக்கு
 11. சரியான பரிசு சரியான நேரத்தில் மருமகளுக்குக் கொடுத்த அங்கீகாரம் தான், சேலையெல்லாம் சும்ம்ம்ம்ம்மா ஜுஜுபி!

  பதிலளிநீக்கு
 12. அருமையான கதை.
  மனதை நெகிழவைத்து விட்டார் மாதவி.
  வாழ்த்துக்கள்.
  கேட்டு வாங்கி போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள், நன்றி.

  பதிலளிநீக்கு
 13. மாமியார் மெச்சிய மருமகள் ஆகிவிட்டார் தேவி.
  அப்புறம் என்ன வேண்டும்?

  பதிலளிநீக்கு
 14. மிடில் கிளாஸ் அல்ல, டாப் மோஸ்ட் கிளாஸ்!

  பதிலளிநீக்கு
 15. கதையை
  நேரில் பார்ப்பது போல
  சிறந்த கைவண்ணம்

  பதிலளிநீக்கு
 16. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 17. சிறப்பான கதை. நன்றியும் வாழ்த்துக்களும். திரு.ராய செல்லப்பா போலவே நானும் உணர்கிறேன், இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ? உங்களால் முடியும்.

  பதிலளிநீக்கு
 18. இறுதி முடிவு அருமை...சேலை வாங்கிக் கொடுப்பது ஒரு டோக்கன் அவ்வளவே ஆனால் புரிந்து கொண்டு தன் மருமகளை ஏற்றுக் கொண்ட அந்த அங்கீகாரம்....ஒரு சின்ன சஜஷன், இன்னும் சற்றுத் தெளிவாக, விரிவாக, ஒரு சில உணர்வு பூர்வமான நிகழ்வுகளுடன், விவரித்திருக்கலாமோ என்று தோன்றியது. நீங்கள் இதே கதையை அப்படி எழுதிப்பாருங்களேன் முடியும் உங்களால்....கரு அருமை!

  வாழ்த்துகள் மிடில்க்ளாஸ் மாதவி சகோ, எங்கள் ப்ளாகிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி! என் அம்மாவை 6ந் தேதி இரவு பறி கொடுத்த காரணத்தால் கையொடிந்தாற் போல், காலொடிந்தாற் போல் மனமொடிந்து கிடக்கிறேன். விரிவான விடைகள் எழுத இப்போது மனமில்லை. நன்றிகள் எல்லோருக்கும்.

  பதிலளிநீக்கு
 20. Middleclass Madhavi,உங்கள் தாயின் மறைவுக்காக எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் தாயின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. விரைவில் இந்தத் துயரிலிருந்து நீங்கள் மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்வைக் கருவாக வைத்துக் கதை எழுதியிருக்கிறார். முடிவில் மருமகளுக்கு அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சியே. கதாசிரியருக்குப் பாராட்டுகள்! தாயை இழந்து தவிக்கும் மாதவிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!