திங்கள், 3 ஜூலை, 2017

"திங்கக்"கிழமை 170703 : பலாக்கொட்டை வெங்காய சாம்பார் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி





     வெங்காய சாம்பார் நான் எப்படிப் பண்ணுகிறேன் என்று எழுதத்தான் நினைத்தேன். சில நாட்களுக்கு முன், சின்ன வெங்காயம் வாங்கி, உரிச்சு குளிர்சாதனப் பெட்டில வச்சேன். சமீபத்தில் கிடைத்த பலாப்பழத்தினால், பலாக்கொட்டை ஸ்டாக் இருந்தது. நான் கடைகள்ல கிடைக்கும் பலாக்கொட்டையை வாங்குவதில்லை. என்னிடம் இருந்தது புதியது என்பதால், அதனையும் வெங்காய சாம்பார்ல போடலாமே என்று எண்ணி, குழம்பு பெயரே பலாக்கொட்டை வெங்காய சாம்பாராக ஆகிடுத்து.

     என்ன, ஒரேயடியா இனிப்பு வகைகளா இருக்குன்னு சிலர் சொல்றதுனால, இதை எழுதியிருக்கேன். வடை, பஜ்ஜி போன்றவைகள் செய்யணும்னு நினைக்கிறேன். இப்போ டயட்டில் இருப்பதால், எண்ணெயைக் கொண்டு செய்யும் ஐட்டத்துக்குத் தடா. இனிப்பு செய்தாலும், அது ஆபீஸ் நண்பர்களுக்குத்தான். வீட்டுல ஸ்டாக் வச்சா, ஒரு பலகீனமான சமயத்துல நிறையச் சாப்பிட்டுடுவேன். இப்போ செய்முறையைப் பார்க்கலாமா?



     ஒரு கைப்பிடி துவரம் பருப்பு, கொஞ்சம் வெந்தயம், ஒரு தக்காளி (தோலுரித்தது. நான் 2 சின்ன தக்காளி போட்டேன்),  மஞ்சள் பொடி, பலாக்கொட்டை (வெளியே இருக்கும் கடின தோலை எடுத்தது), தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 5-6 விசிலுக்கு வேகவைக்கவும்.  வேணும்னா, குக்கர்ல வைக்கும்போதே 1 பச்சை மிளகாய் சேர்க்கலாம்.

     சின்ன வெங்காயம் 10 எடுத்துக்கோங்க. அதோட ஒரு பெரிய வெங்காயத்துல பாதி, பொடியா கட் பண்ணிச் சேர்க்கவும். இதை வாணலில வைத்து கொஞ்சம் சிவக்க (ரொம்ப வேண்டாம்) எண்ணெய் விட்டு வதக்கணும்.



     மீதி பாதி வெங்காயத்தையும், ½ தக்காளியையும் மிக்சில அரைச்சுக்கோங்க. இது சாம்பாருக்கு மணத்தைத் தரும். புளி கொஞ்சமா உபயோகிச்சாப் போதும்.  



     ½ டம்ளர் புளி ஜலத்துல, 1 டம்ளர் தண்ணீர், 1 பச்சை மிளகாய் நடுவில் கீறியது, மஞ்சள்பொடி, பெருங்காயம், தனியாப்பொடி ¼ ஸ்பூன், மிளகாய்ப்பொடி ¼ ஸ்பூன், குழம்புப் பொடி 1 ஸ்பூன், தேவையான உப்பு சேர்த்து, அதோட கொஞ்சம் வதக்கிவைத்திருக்கிற வெங்காயத்தையும் சேர்த்து கொதிக்க வைங்க. இப்போவே அரைத்து வைத்திருக்கிற தக்காளி, வெங்காயத்தைச் சேர்த்துடலாம். நான் 5 கருவேப்பிலையையும் இப்போவே போட்டுடுவேன்.  புளி வாசனை போனபின்பு, குக்கரிலிருந்து எடுத்த பருப்பு/பலாக்கொட்டையைச் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்க வைங்க.

     அப்புறம் கடுகு, கருவேப்பிலை திருவமாற வேண்டியதுதான்.

 
      தக்காளியின் புளிப்பைப் பொருத்து புளித் தண்ணீரின் அடர்த்தியைக் கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளவும். உப்பு அளவையும் சரி பார்த்துக்கோங்க.  நான் கொத்துமல்லித் தழை சேர்ப்பதில்லை. வெங்காய சாம்பார்னா, அதுல வெங்காய மணம்தானே வரணும். கொத்துமல்லி அந்த வாசனையைக் குறைத்துவிடக் கூடாது என்பதற்காக.





     அன்றைக்கு சாதமும் பலாக்கொட்டை வெங்காய சாம்பாரும் மட்டும் சாப்பிட்டேன். தொட்டுக்கொள்ள வேறு எதுவும் பண்ணவில்லை. பொதுவா வெங்காய சாம்பார்னா, உருளைக் கிழங்கு ரோஸ்ட் நல்லா இருக்கும்னு, நாக்கு கொஞ்சம் நீண்டவங்க அபிப்ராயப்படுவாங்க. எனக்கு அன்றைக்கு உருளைக்கிழங்கு பண்ணவேண்டாம்னு தோணித்து.



     நான் வெங்காய சாம்பார் பண்ணுகிற நாளில், இரவுக்கு, சப்பாத்தி (அல்லது மைதா மாவு தோசை), வெங்காய சாம்பாரை விரும்பி சாப்பிடுவேன்.



     இந்த மெதட், நீங்கள் செய்வதைவிட மாறுதலானது என்று நினைத்தால் செய்துபாருங்கள். ரொம்ப நல்லா இருக்கும்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்



( ஆமாம்.  கொஞ்சம் மாறுதலானதுதான்.  செய்து பார்த்து விடுகிறேன்.  சப்பாத்திக்கு சாம்பார் எல்லாம் தொட்டுக்கொண்டு பழக்கமில்லை!  பிடிக்காது.. இதற்கு என் பாஸ் கிட்ட என் அம்மா அவ்வப்போது திட்டு வாங்குவார்! தோசைக்குத்தான் இது சரி..  அதேபோல பெங்களூரு தக்காளி உபயோகிப்பதால் அதில் புளிப்பு எதிர்பார்க்க முடியாது.  புளிதான் கதி. - ஸ்ரீராம் )





மொபைலிலிருந்தா படிக்கிறீர்கள்?  இங்கே க்ளிக் செய்தால் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம்!
 

50 கருத்துகள்:

  1. பலாக்கொட்டை சாம்பார் நன்றாக இருக்கிறது.
    சிறுவயதில் அம்மா பலாக்கொட்டையில் என்ன செய்தாலும் சாப்பிடுவேன்.
    இப்போது வயது ஆகிவிட்டதால் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாது என்று சாப்பிடுவது இல்லை,
    ஆனால் உங்கள் செய்முறை செய்ய விளைகிறது. ஒருநாள் செய்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நெய்வேலியில் இருந்த வரை பலாக்கொட்டைக்கு பஞ்சமே இல்லை! சீசனில் நிறையவே சாப்பிடுவோம் - சாம்பாரில் போட்டு, குமுட்டியில் சுட்டு என விதம் விதமாக!

    இங்கே நல்ல பலாக் கொட்டைகள் கிடைப்பதில்லை. சிறிய பிஞ்சு பலாக்காய் கிடைக்கும். கிடைத்தால் செய்து பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. மருத்துவ குணமுடையது - பலாக்கொட்டை..

    பலாக்கொட்டை சாம்பார் சற்றே வித்தியாசம் என்றாலும் - ஆகா!..
    எனக்கு மிகவும் பிடிக்கும்.. சுட்டுத் தின்பதென்றால் - ஓஹோ!..

    அன்பின் நண்பர் வெங்கட் அவர்கள் சொல்வது சிறிய பிஞ்சு - பலா மூசு எனப்படும்..
    இதையும் பலவகையாக செய்து அசத்தலாம்..

    காலத்தைக் கோளாறாக்கிய பெருமையுடன் -
    அவகேடோ, புரக்கோலி - இவைகளைத் தேடி ஓடுகின்றனர்..

    மா, பலா - இவையிரண்டும் கிடைக்கும் காலத்தில் வயிறார உண்டு விட்டால் - தொடர்ந்து வரும் நாட்களில் மருத்துவச் செலவு மிச்சம்..

    வாழ்க பலாக்கொட்டை.. கூடவே மாங்கொட்டையும்!..

    பதிலளிநீக்கு
  4. பழம் தின்று போட்ட கொட்டையினால் சாம்பாரா ?பேஷ் பேஷ் நன்னாயிருக்கு :)

    பதிலளிநீக்கு
  5. இது மாதரி பலாகொட்டைக்கு பதில் சொரக்காய் போட்டு புளி தண்ணி விடாம திக்கா செய்ற குழம்பு ராகி களிக்கு நல்லா இருக்கும்...நான் அந்த குழம்புக்கு மட்டும் தான் இப்படி வெங்கயம், தக்காளி அரைத்து விட்டு சேர்ப்பேன்..

    இதுவும் நல்லா இருக்கு...அடுத்த முறை பலாக்கொட்டை கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. பலாக் கொட்டை ருசிதான்...ஆனா பாலகருக்கு மட்டுமே... வயதானவர்களுக்கு வாயுத் தொல்லை வருமே

    பதிலளிநீக்கு
  7. நெல்லைத் தமிழன் உங்கள் டைப் புளிக்காய்ச்சலை எதிர்பார்த்தேன். கொடுக்கறேன்னு சொல்லியிருந்தீங்களே அதான்...அந்த ரெசிப்பி தரலையேனு அதிரா போல இங்கருக்கற கூவத்துல எல்லாம் நான் குதிக்க மாட்டேன் ஹிஹிஹி...நாறுது கூவம்....ச்சே அதிரா இன்னும் வரலை...தேம்ஸ் கூட அதிரா இல்லாம ஓடாம நிக்குதோ என்னவோ!!!!!

    சரி சரி இதோ சாம்பாருக்கு வரேன். நானும் வெங்காயத்தை அரைத்துச் சேர்ப்பதுண்டு. வாசனையாக இருக்கும்னு. அது போல கொதிக்கும் போது கறிவேப்பிலை போடுவேன். அதுவும் மணத்திற்காக எல்லா குழம்பிலுமே.....பலாக்கொட்டை சேர்த்தும் செய்வேன். சாம்பாரிலும் சரி, கூட்டிலும் கூட போட்டுச் செய்வேன். உங்கல் சாம்பாரிலிருந்து வித்தியாசம் என்னவென்றால், பொதுவாக வெங்காயம் சேர்ப்பதற்கு நான் பெருங்காயம் சேர்ப்பதில்லை. ஏனென்றால் வெங்காயத்தின் மணத்தை அது எடுத்துவிடுமோ என்ற எண்ணத்தில். சில சமயம் சின்ன வெங்காயம் மட்டும் சில சமயம் இரண்டும் கலந்து நீங்கள் சொல்லியிருப்பது போல் அல்லது பெரிய வெங்காயம் மட்டும் சின்னது இல்லையென்றால். அப்புறம் கொத்தமல்லி சேர்ப்பேன். நீங்கள் சேர்க்கவில்லை. உங்களைப் போல் பெருங்காயம் சேர்த்து கொத்தமல்லி சேர்க்காமல் செய்து பார்த்துவிடுகிறேன்...
    எப்போதுமே பருப்புடன் வெந்தயம் சேர்த்து வேகவைத்தால் மணம் நன்றாக இருக்கும்.

    இப்போது பலாப்பழ சீஸனாச்சே. இங்கு அவ்வப்போது வாங்கும் பலாப்பழக் கொட்டைகளைச்க் சேர்த்து வைத்து...சுட்டு அல்லது பலாப்பழக் கூட்டு (என் பாட்டி செய்வார். ரொம்பத் தித்திப்பாக இல்லாத பழங்கள் என்றால்) செய்யும் போது அதனோடு கொட்டைகளையும் சேர்த்துச் செய்வதுண்டு. பலாப்பழக் கூட்டும் நன்றாக இருக்கும். தேங்காய் ஜீரகம், வற்றல் மிளகாய் அரைத்துச் சேர்க்கணும் அவ்வளவுதான். தேங்காய் எண்ணையில் தாளித்துச் செய்தால் நன்றாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வெங்கட்ஜி மற்றும் துரை செல்வாராஜு சகோ சொல்லியிருப்பது போல் பிஞ்சு பலாக்காய், இடிச்சக்க என்று சொல்லப்படுவது கிடைக்கிறது இங்கு. அதிலும் தேங்காய் சேர்த்துப் பொரியல் செய்தால் நன்றாக இருக்கும். அதில் கூட்டு செய்தாலும் நன்றாக இருக்கும். அதைப் போட்டுச் சாம்பாரும் செய்யலாம். அதிலும் நான் பலாக்கொட்டைகளைச் சேர்த்துச் செய்வதுண்டு. நன்றாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நெல்லைத் தமிழன் நான் இதுவரை சாம்பாருக்குத் தக்காளி போடும் போது தோல் எடுத்துச் செய்ததில்லை...நீங்கள் சொல்லியிருப்பது போல் தோல் எடுத்துச் செய்து பார்த்துட்டா போச்சு. தோல் நீக்கிச் செய்தால் டேஸ்ட் வித்தியாசப்படுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  10. பலாக்கொட்டைல குருமா, பொரியல் செய்வேன். இது புதுசா இருக்கே. ட்ரை செஞ்சு பார்க்குறேன்

    பதிலளிநீக்கு
  11. பலாக்கொட்டையைத் தனியா வேக வைச்சு (குக்கரில் எல்லாம் வைப்பதில்லை) உருளைக்கிழங்கு கறி போல் காரக்கறியும் பண்ணலாம். நான் கூட்டு, சாம்பார், பொரிச்ச குழம்பு எல்லாத்திலேயும் பலாக்கொட்டை இருந்தால் சேர்ப்பேன். அதே போல் சாம்பாரோ, ரசமோ, வற்றல் (வற்றல்கள் போட்டுச் செய்யும் குழம்பு) குழம்பு போன்றவற்றில் கருகப்பிலையைக் கொதிக்கும்போதே சேர்த்தால் கருகப்பிலை மணத்துடன் நன்றாக இருக்கும். கொத்துமல்லியையும் அப்படிச் சேர்த்துக் கொதிக்கவைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  12. நெல்லை படங்கள் ரொம்ப நல்லாருக்கு...சொல்ல மறந்துவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. எங்கள் வீட்டில் பலாமரம் உண்டு என்பதால் பலாப்பழம் பழுத்ததும் அதில் சில பதார்த்தங்களும் செய்வதுண்டு. வட்டையப்பம் என்று ஒன்று செய்வதுண்டு வீட்டில். பலாக்கொட்டை நிறைய இருக்கும் ஆதலால், அதைச் சுட்டும் தின்போம்...கறியும் செய்வார்கள். நேரடியாகவே வேகவைத்து. சாம்பாரிலும் சில சமயம் போடுவார்கள். நல்லாருக்கு உங்கள் படங்களூம் செய்முறையும்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி எங்கள் பிளாக், ஸ்ரீராம் - வெளியிட்டமைக்கு. நாளை வந்து பதில் சொல்றேன் எல்லோருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. பலாட்ட்கொட்டையில் விதவிதமாக சமையல் செய்து சாப்பிட்டதுண்டு. குழம்பு, சாம்பார், பொரியல் என தனியாகவும், உருளைக்கிழங்கு முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்தும் சமைப்பதுண்டு.இப்போதெல்லாம் பலாப்பழம் வாங்கிச்சாப்பிட்டு விட்டு பலாட்டொட்டையை சுத்தப்படுத்தி சமைக்க நேரமே கிடைப்பதில்லை. எங்களுக்கு பலாக்கொட்டை சமைக்க அதன் மேலிருக்கும் தவிட்டு கலர் தோலை உரித்து எடுக்க வேண்டும். வெள்ளைக்கலரில் தோல் பகுதியும் வந்தால் தான் பலாக்கொட்டை சமையல் ருசிக்கும்,

    இரண்டு மாதம் முன் பலாக்கொட்டை சமைக்கலாம் என பலாப்பழம் வாங்கி சாப்பிட்டு நேரம் இல்லாமல் காய்ந்து போய் தூக்கி குப்பையில் போட்டேன். வெங்காய்ம் அதிலும் சின்ன வெங்காயம் சேர்ந்து சாம்பார் அதனுடன் பலாக்கொட்டை சேர்த்து செய்ய ரெம்ப பொறுமை வேண்டும். அது உங்களிடம் இருப்பதனால் சமையல் ருசிக்கும். சூப்பர்.

    பலாக்கொட்டையை முருங்கைக்காயுடன் அல்லது கத்தரிக்காயுடன் சேர்த்தும் சமைக்கலாம். சமைத்து பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  16. கில்லர்ஜி... அம்மாட்ட சொல்லி செய்து பார்ப்போம்னு சொல்லுவீங்கன்னு நினைச்சேன். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம். நான் பண்ணினது வெங்காய சாம்பார்தான். பலாக்கொட்டை இருந்ததால் அதை நிறைய போட்டேன். நன்றாக இருந்தது. செய்துபாருங்கள்.

    பதிலளிநீக்கு
  18. வாங்க வெங்கட்ஜி. நெய்வேலிக்காரங்ககிட்ட பலாவையும் பண்ருட்டிகாரங்ககிட்ட பலா, முந்திரியையும் எப்படிப் பேசமுடியும்? பலா, மாங்காய் இதெல்லாம் தில்லியில் இருப்பதால் நீங்கள் இழப்பவைனு நினைக்கறேன். (ஆனா எனக்கு தில்லியில் சாப்பிட சில ஐட்டங்கள் உள்ளன. பிகானிர்வாலாவில் லஞ்ச், பூசனி பேடா, ஹால்திராம்ஸ் கடைகள்ல சென்னா பட்டூரா போன்று)

    பதிலளிநீக்கு
  19. நன்றி துரை செல்வராஜு. பலா மூசுவை உபயோகப்படுத்திச் செய்யும் கறியை நான் சாப்பிட்டு 35 வருடங்களாகிவிட்டன. இப்போ இருக்கற தலைமுறை, ஓட்ஸ், ப்ராக்கோலி, சாண்ட்விச்சில் உபயோகப்படுத்தும் சாலட் இலைகள், போதாக்குறைக்கு நூடுல்ஸ் ( நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன்) போன்றவற்றை ஆஹா ஓஹோ என்று சொல்லும்போது, எனக்கு அவங்களாம் ஏலியன்ஸாகத்தான் தெரியறாங்க. அவங்க, சிம்பிளா நம்மைப்பார்த்து நீங்க ஓல்டர் ஜெனெரேஷன்பா என்று சொல்லிடறாங்க.

    பதிலளிநீக்கு
  20. நன்றி அனுராதா ப்ரேம்குமார். ராகி களி நான் சாப்பிட்டதில்லை. ஆனால் அரிசி உப்புமா போன்றவற்றிர்க்கு நீங்கள் சொல்லியிருப்பது நல்ல துணையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  21. வருகைக்கு நன்றி அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  22. வருகைக்கு நன்றி தில்லையகத்து கீதா ரங்கன்.

    'உங்க டைப் புளிக்காச்சலை' - நீங்க செய்முறையைச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். வருது வருது. நாங்கள்லாம், சமீபத்துல வெங்கட் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, உங்களைப் பார்த்து 'ஹாய்' சொன்னால் ஒரு புளிக்காச்சல் டப்பா கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.

    வெங்காய சாம்பாருக்கு கொத்தமல்லி சேர்ப்பதில்லை (வெங்காய வாசனையை மல்லி அமுக்குவிடும்). பெருங்காயம் சேர்த்தது, பலாக்கொட்டை சேர்த்ததினால் (இல்லாவிட்டாலும் பருப்பு போடும் குழம்பிற்கு பெருங்காயம் சேர்ப்பேன்)

    பலாப்பழக்கூட்டு - நீங்கள் கொஞ்சம் காய்வெட்டில் அதிகமாக இனிக்காத பலாவைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதெல்லாம் பலாமரங்கள் சூழ்ந்த வீட்டில் இருப்பவர்களுக்கு. நான் இதுவரை சாப்பிட்டதில்லை. நன்றாக இருக்கும் என்று மனதுக்குத் தோன்றுகிறது (இனிப்பில்லாமல் இருந்தால். கொஞ்சம் இனிப்பு இருந்தால் பரங்கிக்காய் பால்கூட்டு மாதிரி இருக்கும்)

    இடிச்சக்கை கறி - ரொம்ப நல்லா இருக்கும். இங்க என் ஹஸ்பண்ட் இருந்த காலத்துல சிறிய பலாக்காயை வாங்கச் சொல்லுவா. நான் வாங்கினதே இல்லை. (பொதுவாக கல்ஃப் தேசங்கள்ல, மலையாளிகள் நிறைய இருப்பதால் பலா மூசு, நேந்திரம் காய்/பழம், குண்டு வெள்ளரிக்காய்-கூட்டு செய்வதற்கு, பலவித பாகல்காய்கள் கிடைக்கும்.

    தக்காளி தோல் எடுத்துவிட்டுச் செய்யும்போது சாப்பிடும்சமயத்துல சுலபமா இருக்கு. தோலி அகப்பட்டால் செரிக்காது என்ற எண்ணம் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  23. வாங்க ராஜி. பலாக்கொட்டையில் குருமாவா? செய்முறை எங்க? இருந்தால் தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். பலாக்கொட்டையில் 'உருளை காரக் கறி'போலா? செய்துபார்க்கிறேன். எனக்கு சங்கீதா செஃப் சொன்னது, கொத்தமல்லி இலை தவிர்த்த தண்டுகளை கறிவேப்பிலைபோல், கொதிக்கும்போது சேர்க்கலாம், கொத்தமல்லி இலையை அடுப்பை அணைத்தபின்பு சேர்க்கலாம், வாசனை அதிகமாக இருக்கும். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. மீள் வருகைக்கு நன்றி கீதா ரங்கன். கேரளா, பாலக்காடு இங்கெல்லாம் பயணிக்கும்போது இப்படி மரங்கள் சூழ்ந்த அருமையான இடத்தைவிட்டு, வேலைக்காக இந்த மலையாளிகள் நிறைய இடங்களுக்குப் பயணிக்கிறார்களே, நமக்கு வாய்ப்பு இருந்தால் இங்கேயே ஒரு வீடு, அதைச் சுற்றி, 2 பலா, 2 மாமரம், கொஞ்சம் இடம் காய்/செடிகளுக்கு, ஒரு கிணறு என்று வாழ்க்கைமுழுக்க தங்கிவிடலாமே என்று நினைப்பேன். (அவங்க, கோவிலை வேறு கொஞ்சம்கூட புனிதம் கெடாமல் தமிழகத்தை விட நன்றாக வைத்துக்கொள்கிறார்கள்-இதை நிறைய பேர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்)

    பதிலளிநீக்கு
  26. நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.

    பதிலளிநீக்கு
  27. வாங்க தி.தனபாலன். பலாப் பழத்தை, இனிப்பு காரணமாக சாப்பிடுவதில்லை போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  28. வருகைக்கு நன்றி நிஷா. பலாக்கொட்டையில் அந்த பிரௌன் நிறத் தோலை என்னால் எடுக்க முடியாது. கத்தரி சாம்பாரிலும் போடலாம். முருங்கை உபயோகப்படுத்துவதற்கு என் ஹஸ்பண்ட் எனக்குத் தடை போட்டுள்ளார்கள் (எங்கள் வீட்டில் வழக்கத்தில் இல்லாத காய்கறியை உபயோகப்படுத்தி என் டேஸ்டை மாற்றிக்கொள்ளக்கூடாது என்பது அவளின் ஆர்டர்). நான் பல தேசங்களில் ஸ்ரீலங்கன் கடைகளில் பலாக்கொட்டை விற்பதைப் பார்த்திருக்கிறேன். (கேரளா கடை இல்லைனா, நமக்குத் தேவையான பொருட்கள் ஸ்ரீலங்கன் கடைகளில்தான் கிடைக்கும்)

    பதிலளிநீக்கு
  29. "என் பாஸ் கிட்ட என் அம்மா அவ்வப்போது திட்டு வாங்குவார்!" ஸ்ரீராம் - மாற்றி எழுதிவிட்டீர்களா? அல்லது உங்கள் அம்மாவுக்கு சப்பாத்தியோடு சாம்பார் சாப்பிடப் பிடிக்குமா? (சப்பாத்திக்கு தேங்காய் சட்னியும் நல்லாருக்கும். இல்லை வெறும்ன வெங்காய ரெய்த்தாவும் நல்லாருக்கும். இவை எல்லாவற்றையும்விட, எனக்கு சப்பாத்தி-கார எலுமிச்சை ஊறுகாய் ரொம்பப் பிடிக்கும், ஆனால் ஊறுகாய்னால பிரஷர் அதிகமாகிடும் என்பதால் சாப்பிடமுடிவதில்லை)

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம் - நீங்கள் சொல்லியிருப்பதைப் படித்தபோது இன்னொன்று தோன்றியது. இங்கு கேரளத்தைச் சேர்ந்த ஒருவர், சாதம், சாம்பார், ரசம், கறி, கூட்டு எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக சாப்பிடுவார். எனக்கு ரொம்ப வித்தியாசமா இருந்தது. அவர், நிறைய கேரளத்தவர்களுக்கு இப்படிச் சாப்பிடுவது (எல்லாத்தையும் கலந்து) பிடிக்கும் என்றார்.

    பதிலளிநீக்கு
  31. ஆவ் !! பலாக்கொட்டையில் சாம்பரா .நான் பலாக்கொட்டையை அவியலிலும் சேர்ப்பேனே :).வித்யாசமா இருக்கே இங்கே கூடை கூடையா விற்கிறார்கள் வங்காளிகள் கடைகளில்
    வாங்கி செய்து பார்த்து சொல்கிறேன் ..

    பதிலளிநீக்கு
  32. ஏஞ்சலின்-செவ்வாய் கதையின் பின்னூட்டத்தில் நீங்கள் இன்னும் ஃப்ளைட் ஏறலை என்று படித்தேன். வேலைகள் இருந்தபோதும் வந்ததற்கு நன்றி. (இப்போ எழுதணும்னு தோணுவது நான் எப்போதும் எங்கள் ஹாஸ்டலில் இருக்கும்போது சர்ச்சில் கேட்டது. சென்றுவாருங்கள் பூசை முடிந்தது-ஆமென்)

    பதிலளிநீக்கு
  33. நான் ரொம்ப லேட். பலாக்கொட்டை ஸாம்பார் மற்ற காய்களுடன் மட்டுமே. வெங்காயத்துடன் சேர்த்ததில்லை. மற்றபடி வெந்தயக்குழம்பில் ருசிஜாஸ்தி. நிறைய பலாக்கொட்டையுடன் ஸாம்பார் வாங்கோவாங்கோ என்று கூப்பிடுகிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  34. காமாட்சியம்மா.. நீங்கள் சொல்றது, வெந்தயக் குழம்புக்கு பலாக்கொட்டை தானாகப் போடலாமென்றா? நல்லா இருக்குமா? வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  35. அதுவும் பச்சை சுண்டைக்காயுடன்,பலாக்கொட்டையும் சேர்த்து வெந்தயக்குழம்பு நன்றாக இருக்கும். சின்ன வெங்காயத்துடனும் வெந்தயக்குழம்பு,பலாக்கொட்டையுடன் மிவும் நன்றாக இருக்கும். தானாகத்தான் சேர்க்கிறோம். உப்பும்,காரமும்,புளிப்பும்சேர்ந்து சாதம் போராது போய்விடும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  36. பலாக்கொட்டை + வெங்காய சாம்பார் ..... நன்னாத்தான் இருக்கும்.

    இரண்டுமே மிகவும் பிடித்தவைகள் மட்டுமே. பகிர்வுக்கு நன்றிகள்.

    படங்களும் பக்குவமும் அசத்தால் ..... சமையல்களில் பெண்களையே மிஞ்சி விடுவீர்கள் போலிருக்குது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  37. மீள்வருகைக்கு நன்றி காமாட்சியம்மா. சமீபத்தில் சுண்டைக்காய் பருப்புசிலி செய்து சாப்பிட்டேன். ஒவ்வொரு சுண்டைக்காயையும் இரண்டிரண்டாக நறுக்குவதற்குள் பொறுமை போய்விட்டது. பலாக்கொட்டையை தளிகைப்பண்ணி வெந்தயக்குழம்பில் சேர்த்துப்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. கோபு சார்.. உங்கள் வருகைக்கு நன்றி. உங்களுக்கு ரெண்டும் கலந்ததால் பிடிக்காது, அதனால் வரவில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் காரம் அதிகமாக வெங்காய சாம்பார் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு தெரியும். பலாக்கொட்டையும் பிடிக்குமா (இது 'உணவே வா உயிரே போ'வில் படித்தமாதிரி ஞாபகம் இல்லையே)

    இரண்டு நாட்களுக்கு முன்புகூட கடுகு வெடித்து விரலில் சூடா எண்ணையோட பட்டது. அப்போது உங்கள் அனுபவம் ஞாபகம் வந்தது. வருகைக்கு நன்றி (கொஞ்சம் தாமதமானாலும்)

    பதிலளிநீக்கு
  39. நெல்லைத் தமிழன் said...

    //கோபு சார்.. உங்கள் வருகைக்கு நன்றி. உங்களுக்கு ரெண்டும் கலந்ததால் பிடிக்காது, அதனால் வரவில்லை என்று நினைத்தேன்.//

    பொதுவாக இரண்டு காய்கறிகள் அல்லது அதற்கும் மேல் சேர்த்து செய்யும் அவியல் போன்றவை எனக்கு சுத்தமாகவே பிடிக்காதுதான்.

    ஆனால் சாம்பாரில் மிதக்கவிடும் ’தான்’ ஆக, எனக்குப் பிடித்தமான காய்கறிகள் சிலவற்றைப் போட்டால் அதனால் ஒன்றும் குத்தமில்லை என மன்னித்து விட்டு விடுவேன்.

    முருங்கைக்காய் அல்லது வெங்காயம் தனித்தனியே போட்டு கார சாரமாக, திக்காக, ரிச்சாக சாம்பார் வைத்தாலோ, வற்றல் குழம்பு வைத்தாலோ அதன் டேஸ்ட் தனிதான்.

    அதுபோல இந்த மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், மினுக்கு வற்றல் என்ற துமுட்டிக்காய் வற்றல் (ஜிமிக்கி போல இருக்கும்), முருங்கைக்காய், வெங்காயம் போன்ற ஐந்தில் ஏதேனும் ஒன்றை தனியே போட்டு வைக்கும் காரசாரமான வற்றல் குழம்புக்கு ஈடு இணை ஏதும் இந்த உலகில் கிடையாது.

    சிறு வயதிலிருந்தே பலாக்கொட்டைகளை சுட்டோ அல்லது வேக வைத்தோ கொடுத்தால், தனியாகவே நான் தின்று விடுவது உண்டு.

    வெங்காயமும் எனக்குப் பிடித்த ஐட்டம் தான். பச்சை வெங்காயத்தையே தொட்டுக்கொண்டு மோர்/தயிர் சாதம் முதலியன நான் சாப்பிட்டு விடுவதும் உண்டு.

    அதனால் இவ்விரண்டையும் சாம்பார் தானாகத் தாங்கள் இந்தப்பதிவினில் சொல்லியுள்ளதால், சர்த்த்த்தான் என நானும் கண்டு கொள்ளவில்லை.

    //கொஞ்சம் காரம் அதிகமாக வெங்காய சாம்பார் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு தெரியும்.//

    ஆமாம். பருப்பு மேலிட காரசாரமாகவும் ருசியாகவும் மணமாகவும் குவாலிடியாகவும் இருந்தால், அந்த சாம்பாரை நான் சமயத்தில் அப்படியே டம்ளரில் வாங்கி (ரஸம் போல) குடித்தும் விடுவேன். :) அதுபோல தனி டேஸ்ட் ஆக இருக்கும்போது மட்டும், ஊறுகாய் தவிர இதனை மோர்சாதத்துக்கும் கொஞ்சம் விட்டுக் கொள்வேன்.

    //பலாக்கொட்டையும் பிடிக்குமா//

    எப்போதாவது பலாப்பழம் வாங்கிச் சாப்பிடும்போது, கொட்டைகளை வீணாக்காமல் சுட்டோ / வேக வைத்தோ சாப்பிடுவோம். எனக்குப் பிடிக்கும்தான்.

    இவற்றை சுட்டுத்தரவோ, வேகவைத்துத்தரவோ ஆள் இல்லாவிட்டாலோ, ஆள் இருந்தும் அவர்களுக்கு கை ஒழியாமல் போனாலோ, கடுப்படித்தாலோ, உடம்புக்கு ஆகாது எனச் சாக்குப்போக்குச் சொன்னாலோ, நான் அவற்றையெல்லாம் குப்பைத்தொட்டியில் போடுவதும் உண்டு. (பலாக்கொட்டைகளைத்தான் - பணிப்போர் / பனிப்போர் நடத்தும் ஆட்களை அல்ல)

    //(இது 'உணவே வா உயிரே போ'வில் படித்தமாதிரி ஞாபகம் இல்லையே)//

    அதில் இது விட்டுப்போய் இருக்கலாம். இதில் பிரமாதமாக எனக்கும் ரொம்ப ஆசையொன்றும் கிடையாது. விருப்போ வெறுப்போ இல்லை என வைத்துக்கொள்ளலாம்.

    //இரண்டு நாட்களுக்கு முன்புகூட கடுகு வெடித்து விரலில் சூடா எண்ணையோட பட்டது. அப்போது உங்கள் அனுபவம் ஞாபகம் வந்தது.//

    ஆஹா ...... விரலில் சுடும் போது மட்டும் என் (அனுபவ) ஞாபகம் வருதா? கேட்க மிகவும் வருத்தமாக உள்ளதே, ஸ்வாமீ.

    //வருகைக்கு நன்றி (கொஞ்சம் தாமதமானாலும்)//

    மிக்க மகிழ்ச்சி. தாமதத்திற்கு வேறு ஒரு காரணம் உள்ளது. நேற்று எனக்கு மிகவும் இடுப்பு வலி. (இடுப்புவலி என்றதும் பிரஸவ வலியோ என நினைத்துக்கொள்ள வேண்டாம்) ஏதோ ஒருகிலோ அளவுக்கு பலாக்கொட்டைகளை சுட்டோ/வேக வைத்தோ சாப்பிட்டு விட்டது போல, வலதுபுற இடுப்புப்பக்கம் வாயுப் பிடிப்போ, சதை பிடிப்போ ஏற்பட்டு, டக்குன்னு திரும்ப முடியாமல் அவஸ்தைப்பட்டேன்.

    பிறகு ஆயின்மெண்ட் தடவி, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தேன். பிறகு இதனைக்கேள்விப்பட்ட, வேறொரு பதிவர் ‘பெண்மணி என் கண்மணி’ சொன்னதோர் அக்கு பஞ்சர் போன்றதோர் விரல் அழுத்த வைத்தியம் செய்து, இப்போ ஓரளவு சரியாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  40. //மா, பலா - இவையிரண்டும் கிடைக்கும் காலத்தில் வயிறார உண்டு விட்டால் - தொடர்ந்து வரும் நாட்களில் மருத்துவச் செலவு மிச்சம்

    விளக்கினால் உதவியாக இருக்குமே?

    பதிலளிநீக்கு
  41. "ஆள் இருந்தும் அவர்களுக்கு கை ஒழியாமல் போனாலோ, கடுப்படித்தாலோ, உடம்புக்கு ஆகாது எனச் சாக்குப்போக்குச் சொன்னாலோ, நான் அவற்றையெல்லாம் குப்பைத்தொட்டியில் போடுவதும் உண்டு. (பலாக்கொட்டைகளைத்தான் - பணிப்போர் / பனிப்போர் நடத்தும் ஆட்களை அல்ல"

    கோபு சார் உங்கள் மீள் வருகைக்கு நன்றி. மேலே உள்ள பகுதி ரசிக்கும்படி இருந்தது. அதிலும் 'பணிப்போர்'/'பனிப்போர்'. படித்தவுடன், 'ஓடம் வண்டியில் ஏறும் காலமும் வரும்' என்று என்னை நினைக்கத் தோன்றியது.

    உங்களுக்கு மெயிலில் எழுதியிருந்தமாதிரி, உணவு சம்பந்தமாகப் படிக்கும்போது, அதிலும் அடை மலைக்கோட்டை, டிரெடிஷனல் உணவு, ரமா கஃபே, மதுரா, ஆண்டார் தெரு போன்றவற்றை எப்போ கேள்விப்பட்டலோ படித்தாலோ, எனக்கு உங்கள் ஞாபகம்தான் வரும். உங்கள் பதிவைப்படித்தவர்களுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன்.

    "இடுப்புவலி என்றதும் பிரஸவ வலியோ என " - கொஞ்சம் தாட்டியா உள்ளவர்கள் இடுப்புவலி என்று சொல்லும்போது சம்சயம்தான். இப்போது சரியாகிவிட்டது என்பதறிந்து சந்தோஷம்தான்.

    பதிலளிநீக்கு
  42. "மா, பலா - இவையிரண்டும் கிடைக்கும் காலத்தில்" - வருகைக்கு நன்றி அப்பாத்துரை சார். அந்த அந்த சீசனில் கிடைப்பவற்றைச் சாப்பிட்டால் உடம்புக்கு ஒன்றும் செய்யாது என்பதுதான் கருத்து என்று நினைக்கிறேன். நுங்கு நல்ல வேனில் காலத்தில், மாங்காயும் அப்படியேதான், கரும்பு ஜனவரியில், புது வெல்லமும் அப்போதுதான், பலா மார்ச்சிலிருந்து ஜூனுக்கு முன் வரை - அந்த அந்த கால'நிலையின்போது இவைகளைச் சாப்பிடுவதால் உடம்புக்கு நல்லதுதான்.

    உங்களுக்குத் தெரியுமா? புளி விளைச்சல் நல்லா இருந்தா மாங்காய் விளைச்சல் குறைந்துவிடும், அதேபோல் மாங்காய் நல்ல விளைந்தால் புளி விளைவது குறைந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  43. பலாக் கொட்டையில்
    கொஞ்சம் சீனி
    வெங்காயத்தில
    இன்சுலின் இருக்கிறபடியால்
    நீரிழிவுக்காரரும் உண்ணலாம்!

    பதிலளிநீக்கு
  44. ஜீவலிங்கம், தன்றி. ஆனால் நீங்க சொல்றதுல எனக்குச் சந்தேகம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!