செவ்வாய், 18 ஜூலை, 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: சினம் - ஹேமா (HVL) - சீதை 13



     இந்த வார 'சீதா கதை' எழுதியிருப்பவர் ஹேமா (HVL)








=========================================================================


சினம்


ஹேமா (HVL)



துணிகளும் அத்தியாவசியப் பொருட்களும் அடங்கிய பையுடன், கிரணைத் தூக்கிக் கொண்டு தாட்சாயணி வீட்டினுள்ளே நுழைந்த போது, பொழுது சாயத் துவங்கியிருந்தது. சந்தன ஊதுபத்தியின் மணமும் உருளைக்கிழங்கு வறுவலின் வாசமும் மூக்கை நிரடி, இது உன்னுடைய இடம் என்றது. இவர்கள் வந்த சத்தம் கேட்டு உள்ளேயிருந்து ஓடி வந்த ஆதித்யன், கடந்த ஏழு மாதங்களில் வளர்ந்திருந்தான். இவர்களைப் பார்த்ததும் கண்களை அகல விரித்து ஒதுங்கி நின்றான்.

“என்னடா! அத்தையைத் தெரியலையா!” என்று சொன்னபடி அவனைத் தூக்கினாள் தாட்சாயணி. அவளது கைப்பிடிக்குள் சங்கடத்துடன் நெளிந்தான் அவன். உள்ளேயிருந்து வந்த லட்சுமி,

“வாடா ராஜா” வெனக் கிரணைத் தூக்கிக் கொண்டாள். தாட்சாயணியிடமிருந்து கைப்பையையும் வாங்கிக் கொண்டாள்.

“மோர் குழம்பு செஞ்சிருக்கேன், சாப்பிடு” என்றாள்.  “வா! தாட்சாயணி, எப்படி இருக்க!”  என்றவாறு அறைக்குள்ளிருந்து வெளியே வந்த சகுந்தலா நைட்டியிலிருந்தாள். அவளுக்குப் பின்னால் திறந்திருந்த அறைக்கதவின் வழி சினிமாப் பாடல் கசிந்து வந்து கொண்டிருந்தது.

“நல்லாயிருக்கேன்! நீங்க?”

“ஏதோயிருக்கேன்! சரி, சாப்பிடு இன்னும் கொஞ்ச நேரத்தில உங்க அண்ணன் வந்திடுவார்” என்று விட்டு உள்ளே சென்றுவிட்டாள் அவள்.

ஆதித்யன் பிறந்து இரண்டு வருடங்கள் வரை, சகுந்தலா குரோம்பேட்டையில், தன் தாய் வீட்டிற்கு அருகிலேயே, வாடகைக்குத் தங்கியிருந்தாள். அவளது அம்மா சென்ற சித்திரையில் இறந்த போது, லட்சுமியை உடனிருக்கும் படி அழைத்துப் பார்த்தான் தியாகு. வேறு வழியின்றி சென்ற இரண்டு மாதங்களாக அவர்கள் இங்கே குடியேறியிருந்தார்கள். தட்டில் சாதத்தைப் போடும் போதே, இன்று வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டாம் என்ற நினைப்பு தாட்சாயணிக்கு ஆசுவாசம் தருவதாய் இருந்தது.

முதல் முறை இப்படி வந்த போது இதே லட்சுமி, பெரிதும் பதறிப் போனாள். அப்போது ஷ்யாம் வேலையை ராஜினமா செய்திருந்தான். வந்த மறுநாளே, ராமசேஷன் தன் அண்ணனை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளையைப் பார்த்துப் பேசச் சென்றார்.

கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பின் தாட்சாயணியைச் சமாதானப்படுத்தி ஷ்யாமுடன் சேர்த்து வைத்து விட்டு வந்தார்.

அதன் பின்னர், ஏழெட்டு முறைகள் இப்படியானது அவர்களுக்குப் பழகிப் போயிருந்தது. ‘ஆண்கள் இப்படித் தான்!’ என்று ஷ்யாம் செய்யும் எதையும் நியாயப்படுத்திக் கொள்ளும் மனோபாவம் அவளது பெற்றோர்களுக்கு இருந்தது போல், தான் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம் என்று ஷ்யாம்
நினைப்பதாய் தோன்றும் அவளுக்கு. இந்த முறை ஷ்யாம் பொறுப்பாய் இருப்பதாய் உறுதியளிக்கும் வரை, தான் அங்கே திரும்பிப் போகப் போவதில்லை என்று முடிவு செய்து கொண்டிருந்தாள் தாட்சாயணி.

கிரண் லட்சுமி ஊட்டிய சாதத்தை வாயில் வாங்கிய படி, ஆதித்யனும் விளையாடத் துவங்கியிருந்தான். தட்டை சிங்க்கில் போட்டுவிட்டு, தன் அறைக்குள் சென்றாள் தாட்சாயணி. அந்த அறை அவளுடையதாகவே இன்னமும் இருந்தது. படுக்கைக்கு எதிரே சுவரில் தொங்கிய சீதையும் ராமனும் இவளை வாவென அழைத்து விட்டு தூரத் தெரிந்த மானை நோக்கி திரும்பிக் கொண்டார்கள்.

ராமன் பாறையின் மீது ஒரு காலை மடித்து, வில்லில் நாணை இழுத்தபடி அமர்ந்திருந்தான். சீதை, அவனுக்கு முன்புறம் அவனை ஒட்டி, கூந்தல் அவனது முகத்தில் அலைமோதும் நெருக்கத்தோடு உட்கார்ந்து, அந்த மானைக் கைகாட்டிக் கொண்டிருந்தாள். கறுப்பு வெள்ளையில் இருந்த அந்தப் படம், அவள் கல்லூரியில் படிக்கும் நேரம், குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்ற போது வாங்கி வந்தது.

தாட்சாயணிக்கு சீதையை மிகவும் பிடிக்கும். சிறு வயதில் நிலவொளியில் திண்ணையின் மீது படுத்தவாறு அவளைப் பற்றிய கதைகளைப் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறாள். பாட்டி உருகி உருகி சீதம்மாவைப் பற்றிச் சொல்லும் போது, அவள் தான் வளர்ந்ததும் சீதையைப் போல இருப்பதாய் கற்பனை செய்து கொள்வாள்.  தூர்தர்ஷனில் ராமாயணம் தொடரைப் பார்க்கத் தொடங்கிய போது, சீதை அவள் மனதிற்கு இன்னமும் நெருக்கமாகிப் போனாள்.

தாட்சாயணி இளவயதில், ஶ்ரீ ராமனைப் போன்ற அழகுடன், அதே பெயருடன் கணவன் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளது தோழிகள், ராமன் பெயரைக் கொண்ட யுவன்களைப் பற்றிய பேச்செழும் போதெல்லாம் இவளைக் கிண்டல் செய்தார்கள். அப்போதெல்லாம் இவள் தன்னை சீதையாகவே நினைத்து பெருமைப் பட்டுக் கொள்வாள். அந்நேரங்களில் தன் வாழ்க்கையில் அவள் மட்டுமே முக்கியம் என்று நினைத்த ராமன், அவள் கனவுகளில் வலம் வந்து கொண்டிருந்தான். அவளுக்குப் பிடிக்காது என்ற காரணத்தினாலேயே சைவ சாப்பாட்டிற்கு மாறி விடுபவனாக, அவளுக்குப் பிடிக்கும் என்பதாலேயே நள்ளிரவு வரை விழித்திருந்து குல்ஃபி சாப்பிடுபவனாக இருந்தான் அவன்.

அவனுக்காக தாட்சாயணியும் தன் ஆசைகளைத் துறக்கத் தயாராக இருந்தாள். வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில், ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான்’ என்ற வரிகளைப் பலமுறை கண்ணாடி முன் நின்று, ராமன் நிற்பதாய் கற்பனைச் செய்து நடித்துப் பார்த்திருக்கிறாள்.

மின்சார வாரியத்தில் வேலை செய்த ஷ்யாம் அவளைப் பெண் பார்க்க வந்த போது, ஏதோவொரு சாயலில் ராமனைப் போல இருந்ததாய் நம்பினாள். அல்லது, குடும்பத்தினருக்குப் பிடித்துப் போய்விட்டது என்று தெரிந்ததால், அவள் மனம் அப்படி கற்பனைச் செய்திருக்குமோவென இப்பொழுதெல்லாம் யோசித்துப் பார்க்கிறாள்.

திருமணமான புதிதில் அவன் மீது இவள் கொண்ட உருக்கத்திற்கு, அவனிடமிருந்து எந்தவொரு தாக்கமும் இல்லாமல் இருந்தது.

அவனுக்குத் தன் மனைவியைப் பற்றிய கனவுகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.  ஷ்யாமுக்கு எழுதுவதில் விருப்பம். அவனுடைய குறிக்கோள் பிரபல எழுத்தாளனாக ஆகவேண்டும் என்பதாக இருந்தது. இரவும் பகலும் பேனாவும் பேப்பருமாய் சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் எழுதுவதற்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வது தன் கடமை என்று அப்போது எண்ணினாள் தாட்சாயணி. சீதையாக இருந்தாலும் அதைத் தானே செய்திருப்பாள்.

மாலையில், வேலை முடிந்து வந்ததும் எழுத அமரும் கணவனுக்காக, அதுவரை ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, தேநீர் போட்டுக் கொடுப்பாள். அவன் எழுதும் போது யாரும் அருகில் அமர்வதை அவன் ரசிப்பதில்லை என்பதால், அந்த அறையிலேயே இன்னொரு பக்கம், ஏதேனும் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்துவிடுவாள். இரவு, இவள் தூங்கிய பின் அவன் எப்போது வந்து தூங்குகிறான் என்பதை அவள் அறிந்ததே இல்லை. காலையில் தாமதமாக எழுந்து வேலைக்குச் செல்வது அவனுக்கு சாதாரணமான விஷயமாய் இருந்தது. அவன் கிளம்பிப் போன பின்னர், மூலைக்கு ஒன்றாய் கிடக்கும் அவனது உள்ளாடைகளையும் துணிகளையும் சலவைக் கூடையில் போட்டு, வீட்டை எடுத்து வைத்து, கடைக்குச் சென்று வேண்டிய பொருட்களை வாங்கி, அவனுக்கான இரவு உணவைத் தயாரித்து விட்டுக் காத்திருப்பதை, அவள் ஒரு தியானத்தைப் போலச் செய்தாள். அவனுக்குச் செய்யும் அவ்வேலைகளில் தன் பிரியத்தை நிறைத்தாள், அது, தன் மீது அவனுக்கு ஒரு ஆழமான காதலை உருவாக்கும் என்று பலமாக நம்பினாள். அப்படி ஏற்படும் காதலையே அவள் விரும்பினாள்.

ராமசேஷன் வீட்டிற்குள் நுழைந்ததும் கிரணுக்கு ஒரே குதூகலமாய் போய் விட்டது. ஒருபக்கம் கிரணும் மறுபக்கம் ஆதித்யனுமாய் தனது மடியில் அமர்ந்து விளையாடுவதை அவரும் ரசித்துக் கொண்டிருந்தார். தியாகு வந்ததும் வீடு இன்னமும் கலகலவென்றானது. இப்பொழுது சகுந்தலாவும் வெளியே வந்து அமர்ந்து கொண்டாள். அறைக்குள்ளிருந்து, கூடத்தில் ஒன்றாய் அமர்ந்து சிரிப்புடனும் கிண்டலுடனும் அமர்ந்திருந்த அண்ணனின் குடும்பத்தைப் பார்க்கும் போது தாட்சாயணியின் மனதிற்குள் மெல்லிய நெருடல் ஏற்பட்டது. அவள் விரும்பியது இது போன்ற ஒரு வாழ்வைத் தான். தனக்கு அப்படியொன்று கிடைக்காத காரணத்தால், தான் அக்கூட்டத்தில் தனித்து விடப்பட்டதாய் உணர்ந்தாள். இப்படி நினைக்கும் போதே, தன் அண்ணன் மகிழ்ச்சியாய் இருப்பதைப் பார்த்து பொறாமைப் படுகிறோமோ என்ற குற்ற உணர்ச்சியும் உடன் எழுந்தது.

எல்லாப் பெண்களையும் போலத் தாட்சாயணிக்கும், கணவனுடன் வாரயிறுதிகளில் வெளியே செல்ல வேண்டும்,  வருடத்திற்கு ஒரு முறை தூர தேசம் செல்ல வேண்டும்,  பனிமலைகளின் முன்நின்று ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு அவனோடு நெருக்கமாய் நிற்கும் படங்களைப் பெருமையோடு பிறரிடம் காட்ட வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருக்கத் தான் செய்தது. இவையெல்லாம் என்றோ ஒரு நாள் நிச்சயம் நடக்கும் என்றே நினைத்திருந்தாள் தாட்சாயணி, ‘அவள் சோம்பேறித்தனமாய்த் திரிகிறாள்’ என்று அவன் திட்டும் நாள் வரையில். அதைவிட, உலகிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் ஏற்படும் சாதாரண விஷயத்தை அவள் பெரியதாய் பேசுகிறாள்,

வேலைகளைச் செய்யாமல் இருப்பதற்காக நடிக்கிறாள் என்று சொன்னது அவளுக்கு வலித்தது.

அவன் அப்படித் திட்டிய தினத்தில், அவள் அதிகப்படியான உதிரப் போக்கினாலும், அவளது ராமன் அவளை நோக்கி வீசிய சொற்கணைகளாலும் சோர்ந்து போயிருந்தாள். அவள் அவனுக்காக உருகுவதையெல்லாம் அவன் அறிந்திருக்கிறானா என்ற சந்தேகம் அன்று தான் அவளுக்கு ஏற்பட்டது. தான் செய்யும் அதிகப்படி வேலைகளையெல்லாம், மனைவி செய்ய வேண்டிய கடமையாக எடுத்துக் கொண்டிருக்கிறான், என்று அவளுக்குத் தோன்றியது. தன் ஏக்கங்களைப் பற்றி ஷ்யாமிடம் நேராய் பேச முயன்ற போதெல்லாம், அவள் தேவையின்றி தொல்லை செய்வதாகச் சினம் கொள்ளத் துவங்கினான் அவன்.


அந்த வாரயிறுதியில் தியாகுவும் சகுந்தலாவும், அபிராமி மாலுக்கு, படம் பார்க்க அழைத்த போது, தலை வலிப்பதாய்ச் சொல்லி உடன் செல்ல மறுத்துவிட்டாள் தாட்சாயணி. அம்மா, அப்பாவுடன், அண்ணன், அண்ணியுடன் செல்லும் போது தான் துணையின்றி தனித்து விடப்பட்டதாய் உணர்ந்தாள் அவள். சற்று வற்புறுத்திப் பார்த்து விட்டு, கிரணை அழைத்துக் கொண்டு அனைவரும் கிளம்பி விட்டார்கள். அன்றிரவு, தான் பார்த்த படம் பற்றியும் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் பற்றியும் கிரண் மகிழ்ச்சியோடு சொன்னதைக் கேட்க அவளுக்குச் சந்தோஷமாய் இருந்தது.

அன்றிரவு தாத்தாவுடன் தூங்கப்போவதாய்ச் சொல்லி அவன் சென்ற போது, ஒருவித மனநிறைவு ஏற்பட்டது அவளுக்கு.

கிரண் பிறந்த நேரம் ஷ்யாமினுடைய பெயர் எழுத்துலகில் பிரபலமாகத் தொடங்கியது. தமிழ் நாட்டில் இருந்த பத்திரிக்கைகளில் அவன் கதைகள் வெளியாகத் துவங்கியிருந்தன.

அந்த நாட்களில் தான், திடீரென ஒரு இரவு தொலைப்பேசியில் அழைத்து, தான் திருவண்ணாமலைக்குச் செல்வதாகச் சொன்னான்

அவன். அன்றிரவு, தாட்சாயணி கைக்குழந்தையுடன் தனியே இருப்பதை நினைத்துப் பயந்தாள். நள்ளிரவில், திடீரென கிரணுக்கு ஏதேனும் உடம்பிற்கு வந்தால் யாரை உதவிக்கு அழைப்பது என்று யோசனையாக இருந்தது அவளுக்கு. அப்பாவை அழைத்து ஒரு ராத்திரிக்கு அங்கே வரச் சொல்லலாமா என்று யோசித்தாள். பின்னர் அவ்வளவு தொலைவு அவரை வரவழைக்க மனமின்றி, தேவைப்பட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்.

அன்றிரவு தூங்கிவிட்ட கிரணுக்குப் பக்கத்தில் படுத்தவாறு, தன்னால் இப்படி திடீரென தொலைப்பேசியில் அழைத்துச் சொல்லிவிட்டு, சட்டென எங்காவது போக முடியுமா என்று யோசித்தாள். அப்படிக் கிளம்பினால் அவனுடைய எதிர்வினை எப்படி இருக்கும் என்று நினைக்கையில் அவளுக்குத் துக்கமாக இருந்தது.

பிள்ளையை வைத்துக் கொண்டு இப்படிப் பொறுப்பில்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றும் தோன்றியது அவளுக்கு.

அதன் பிறகு, அவன் அடிக்கடி அது போல செல்லத் துவங்கினான்.

பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சுவதற்குக் கூட நேரமின்றி, அவனது பணிகள் அவனை எடுத்துக் கொண்டன. தாட்சாயிணிக்கும் இது பழகிப் போகத் தொடங்கியது.

ஷ்யாம் மெல்ல மெல்ல புகழ்பெறத் துவங்கினான். அவனது எழுத்துகள் சர்ச்சைகளைக் கிளப்புபவையாக இருந்தன. ஷ்யாமின் வாசகர்கள் அவனது வார்த்தைகளால் கிளர்ந்தெழுந்து அவன் பின்னே செல்லத் துடித்தார்கள். இந்த நேரத்தில் தான், தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடத் துணிந்தான் அவன்.

இதற்கு இலக்கிய உலகில் தான் செய்ய வேண்டிய வேலைகள், தமிழின் வளர்ச்சிக்காகத் தான் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருப்பதைக் காரணமாகச் சொன்னான். நன்றாய் இருக்கும் தமிழை இன்னமும் ஏன் வளர்க்க வேண்டும் என்று தாட்சாயணிக்குப் புரியவே இல்லை. தமிழ் சோறு போடும் என்றான் அவன். தன் வாழ்வாதாரத்தை நினைத்துக் கவலையாக இருந்தது அவளுக்கு.

அம்மாவின் வீட்டிலிருந்து சமாதானமடைந்து திரும்பியபின், தனக்கென ஒரு வேலை தேடிக் கொண்டாள் தாட்சாயணி. அது ஷ்யாமிற்கு இன்னமும் வசதியாகப் போனது. வீட்டைப் பற்றிய கவலை ஓட்டை அவள் முதுகிற்கு மாற்றிவிட்டு, அவன் தன் எழுத்துகளை மெருகேற்றும் வேலைகளில் ஈடுபடத் துவங்கினான்.

இவற்றையெல்லாம் அறியாது, ஷ்யாமின் வார்த்தைகளின் வீச்சிற்குள் சிக்கிக் கிடந்த பெண்கள் தாட்சாயணியைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள். அவளிடமே அதைச் சொல்லவும் செய்தார்கள். அவர்களைப் போன்ற சாதாரண வாழ்க்கை தனக்கு அமைந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும் என்று தாட்சாயணி நினைத்தாள். ஒவ்வொரு வார இறுதியிலும் மனைவி பிள்ளைகளுடன் ஒன்றாய் அமர்ந்து படம் பார்க்கும், வெளியே அழைத்துச் செல்லும் கணவர்களைப் பார்க்கும் போதெல்லாம் தனக்கு மட்டும் ஏன் இப்படி என்று தோன்றியபடியே இருக்கும்

அவளுக்கு. இப்பொழுதும் தாட்சாயணி தன்னைச் சீதையாகவே உணர்ந்தாள். மக்களுக்கெல்லாம் ஆதர்சப் புருஷன் ஶ்ரீ ராமச்சந்திரன், அவளது கணவனைப் போல. ஒரு பிரபலத்திற்கு மனைவியாய் இருக்க நேர்ந்த சீதையின் உணர்வுகளை தாட்சாயணியால் புரிந்து கொள்ள முடிந்தது.

கடந்த இரண்டு வாரங்களில் கிரணின் முகம் தெளிவடைந்திருந்தது. தாத்தா பாட்டியுடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தான். மாமாவுடன் பைக்கில் ஏறி வெளியே சுற்றி விட்டு வந்தான். இவள் அலுவலகம் செல்லும் நேரம், காப்பகத்தில் தனியே அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்க வேண்டிய தேவையின்றிப் போயிருந்தது அவனுக்கு. அலுவலகம் இங்கிருந்து தூரமாய் இருந்தாலும், கிரணைப் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருந்தது அவளுக்கும் நிம்மதியாக இருந்தது. இந்த முறை தாட்சாயணி ஷ்யாமைப் பிரிந்து வந்தது கிரணுக்காக.

அன்று அவள் அலுவலகத்தில் வேலைகளுக்கிடையே சுழன்று கொண்டிருந்தாள். அப்பொழுது குழந்தைகள் காப்பகத்திலிருந்து, ‘கிரணுக்கு உடம்பு சரியில்லை, அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டுங்கள்’ என்று தொலைப்பேசி அழைப்பு வந்தது. சட்டென விடுப்பு எடுத்துக் கொண்டு கிளம்ப முடியாத சூழல் தாட்சாயணிக்கு. வேறுவழியின்றி, ஷ்யாமைத் தொலைப்பேசியில் கூப்பிட்டு, காப்பகத்திற்குச் சென்று கிரணை அழைத்து வரும்படிக் கேட்டாள்

அவள். ஷ்யாம் அவள் சொல்வதைக் கூட முழுதாய்க் கேட்காமல். அவ்வேலையைச் செய்ய மறுத்தான். தான் காஞ்சீபுரத்திற்கு நண்பனுடன் கிளம்பி கொண்டிருப்பதாகவும், பேருந்து நிலையத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகவும் சொன்னான்.

“இப்போது என்ன செய்வது?” என்று அவள் கேட்ட போது, இது போன்ற வேலைகளையெல்லாம் அவள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றான் அவன். தாட்சாயணி திகைத்துப் போனாள்.

அதன் பின் அவள் விடுப்பு எடுத்துக் கொண்டு, கிரணை மருத்துவரிடம் அழைத்துச் சென்று விட்டு, வீடு வந்து சேர இரவாகிப் போனது. அன்று ஷ்யாம் வீட்டிற்கு வரவில்லை.

மறுநாள் அவள் தாய் வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்.



அன்று ஞாயிற்றுக்கிழமை. தாட்சாயணி தலை குளித்து விட்டு, கூடத்தில் அமர்ந்து முடியைக் காய வைத்துக் கொண்டிருந்தாள்.

கிரண் வீட்டிலிருக்கும் தாயின் மீது ஏறியும் இறங்கியும் விளையாடிக் கொண்டிருந்தான். ஆதித்யன் தாழ்வாரத்தில் தனது மூன்று சக்கர சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது சாப்பிட்டு முடித்து, வெளியே கிளம்ப தயாரானான் தியாகு. அவன் தனது வண்டியை வெளியே எடுப்பதை கவனித்து விட்ட கிரண், தாட்சாயணியை விட்டு விட்டு, வெளியே ஓடி, தியாகுவின் கண்ணில் படும்படி நின்று கொண்டான். அவன் அங்கு நிற்பதன் காரணத்தைப் புரிந்து கொண்ட தியாகுவும் அவனைத் தூக்கித் தன் வண்டியில் அமர வைத்தான்.

அந்நேரம் ஆதித்யனுக்கு என்ன தோன்றியதோ, சைக்கிளை உதறிவிட்டு, ஓவென்றழுதவாறு தன் தந்தையை நோக்கி ஓடிச் சென்றான். தன் தந்தையின் அருகில் கிரண் உட்காரக் கூடாது என்றும், தான் தான் அமரவேண்டும் என்றும் அடம் பிடிக்கத் துவங்கினான். தியாகு அனிச்சையாக கிரணை இறக்கி விட்டு, “கொஞ்சம் இருப்பா, தம்பி ஒரு ரவுண்ட், அப்புறம் நீ. அவன் சின்னப் பிள்ளை தானே!” என்று சொன்னபடி ஆதித்யனை அமரவைத்துக் கொண்டு வண்டியைக் கிளப்பினான். கிரண் திகைத்துப் போனான்.

அவர்கள் இருவரும் தெருவில் மறைவதைப் பார்த்த படி சில நொடிகள் நின்றான். அவனது முகம் சுண்டிப் போயிருந்தது. பின்னர் என்ன நினைத்தானோ, தங்கள் அறைக்குள் சென்று விட்டான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தாட்சாயிணிக்கு மனம் நெகிழ்ந்து போனது.

தியாகு செய்ததில் தவறு இல்லையென்றாலும், கிரணின் முகவாட்டம் அவளுக்கு மிகுந்த துக்கத்தைக் கொடுத்தது. அவனைச் சமாதானப் படுத்துவதற்காக அவளும் அறைக்குள் சென்றாள்.

கட்டிலின் மீது சுருண்டு படுத்திருந்த மகனைப் பார்க்கும் போது அவளது மனம் உருகியது. திரும்பி வந்த தியாகு, வண்டியில் செல்வதற்காக கிரணைக் கூப்பிட்ட போது, அவன் மறுத்து விட்டான்.


இரவு, உறங்கிக் கொண்டிருந்த கிரணைப் பார்க்கையில், சிறு குழந்தையின் போர்வையில் படுத்துறங்கும் பெரிய மனிதனாய்த் தோன்றினான். அவன் வளர்ந்து வருகிறான் என்பது தாட்சாயணிக்கு புரிந்தது. அந்த நொடி அவளுடைய கவலைகளும் உணர்வுகளும் பின்னுக்குத் தள்ளப்படுவதை உணர்ந்தாள். இப்போது மகனின் உணர்வுகளே அவளுக்கு முக்கியமாய் பட்டது. தன் வீட்டில் இருந்தால் இன்று நடந்தது போன்ற தர்மசங்கடங்கள் ஏற்படுவதையாவது தடுக்க முடியும் என்று நினைத்தாள். ஷ்யாம் பொறுப்பில்லாமல் இருந்தாலும் கிரணின் தந்தை. இன்னும் சிறிது நாட்கள் சென்றால், கிரண் கொஞ்சம் வளர்ந்துவிட்டால், அவனுக்கும் அவனது தந்தைக்குமான பிணைப்பு மேம்படக் கூடும், இப்படி எண்ணும் போதே, தன் வீட்டிற்குக் கிளம்ப வேண்டும் என்று அவளது மனம் பரபரக்கத் துவங்கியது. 



இந்த முறை தன் லவனுக்காக சீதை இராமனை மன்னித்துவிட்டாள்.






இங்கு தொட்டு தமிழ்மணத்தில் வாக்களிக்க முடியும்!

35 கருத்துகள்:

  1. நல்ல கதை. ஆனால் சட்டென முடித்து விட்டதாகத் தெரிகிறது. மன்னிப்பின் காரணம் ஓரளவுக்குப் புரிந்தாலும் இது அநேகமாக எல்லா வீடுகளிலும் நடக்கும் ஒன்று. குழந்தையை அழைத்துக் கொண்டு பிறந்த வீடு வரும் மகள்கள் அனைவருக்கும் தங்கள் சகோதரனுக்குத் திருமணம் ஆகிக் குழந்தை பிறந்த பின்னர் அவர்கள் நடந்து கொள்ளுவது இப்படித் தான் என்பது புரிந்ததே! இதற்குத் தந்தையின் அன்பு இல்லை என்பதைக் காரணமாகச் சுட்ட முடியாது!சகோதரனுக்குத் திருமணம் ஆகி ஒரு குழந்தை பிறக்கும்வரை சகோதரி குழந்தைகளிடம் காட்டும் அன்பும், பாசமும் அவருக்கென ஓர் பிள்ளை பிறந்தவுடன் பகிர்ந்தே அளிக்கப்படுகிறது. இது சகஜமான ஒன்றே!

    பதிலளிநீக்கு
  2. மன்னிப்பதற்கு வலுவான வேறு காரணம் இருந்திருக்கலாமோ!

    பதிலளிநீக்கு
  3. கதை சில விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பிரபலங்களின் வாழ்க்கை, அவரது மனைவியின் அதிருஷ்டம் என பொறாமைப்படக் கூடியதாகத் தோன்றும். அதற்கேற்றவாறு மீடியாவில் அவர்களும் அப்படித்தான் பேட்டியளிப்பார்கள். எப்போதும் பிரபலங்களின், அதிலும் கற்பனை உலகில் சஞ்சரிக்கும் எழுத்தாளர்களின் வாழ்க்கைத்துடையாக இருப்பதே தியாக வாழ்க்கைதான்.

    ஆனாலும் மன்னிப்புக்கான காரணம் சரியாக வரவில்லை. கதைச் சூழல் இன்டெரெஸ்டிங் ஆக இருந்தது. நடப்பட்ட நாற்று எப்படி மீண்டும் தான் பிறந்த வயலுக்குச் செல்லமுடியும்?

    பதிலளிநீக்கு
  4. //நன்றாய் இருக்கும் தமிழை இன்னமும் ஏன் வளர்க்க வேண்டும் என்று தாட்சாயணிக்குப் புரியவே இல்லை.
    சிரிக்காம இருக்க முடியலே.

    பதிலளிநீக்கு
  5. சீதை விட்டுக் கொடுத்து peaceful co-existenceக்குத் தயாராகி விட்டாள் எல்லா இந்தியப் பெண்களைப் போல!!

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
    இந்த மன்னிப்பு, வெவ்வேறு காரணங்களுக்காக, இதற்கு முன்பும் ஷ்யாமிற்கு வழங்கப்பட்டிருக்கிறது,இப்போது பிள்ளைக்காக வழங்கப்படுகிறது, இனியும் இது தொடரும்.

    நான் எடுத்துக்கொண்டது தாட்சாயணியின் வாழ்வில் திரும்பத் திரும்ப நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றை. அப்போது அவளுக்குள் ஏற்படும் மனச் சலனங்களை.

    அதை படிப்பவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் எழுதவில்லை என்று தோன்றுகிறது. உங்களிடமிருந்து கற்றுக் கொள்கிறேன். நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  8. குழந்தைகளின் சாதாரண செயல்களின் வழியே வாழ்க்கைப்பாதையை மாற்றி அமைத்தது அருமை.

    பதிலளிநீக்கு
  9. பல்வேறு உணர்வுகள் எனும் நூலிழைகளால் பின்னப்பட்டிருக்கின்றது..

    அருகில் நிகழ்வதைப் போல இருக்கின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  10. கதை எழுதிய விதம் அருமை!!! நடை வெகு அழகு! தாட்சாயிணியின் உணர்வுகள் ஒரு பெண்ணாக, மனைவியாக, தாயாக நன்றாக உணர முடிகிறது. பிறந்த வீட்டு ஆதரவு இருப்பதால் அதாவது அக்குடும்பத்தினர் அவளிடமும் குழந்தையிடமும் அன்புடன் இருப்பதால் இப்படிப் பல பெண்கள் தங்கள் பிறந்த வீட்டிற்கு வந்து கொஞ்சம் இளைப்பாறி மீண்டும் செல்வது நடக்கிறது. பிரபலங்களின் மனைவியாக இருப்பதும் ஒருவித தியாகம்தான். ஆனால் அவளுக்கு ஒரு வேலை இருக்கிறது. ஆறுதலுக்கு மனிதர்கள் இருக்கிறார்கள். அவளும் தன்னை சீதையாகவே கற்பனை செய்து கொண்டு, ஸ்யாமை ராமனாகவே நினைத்து சேவை செய்வதாகவும் நினைத்துக் கொள்வதாகச் சொல்லப்பட்டதால் ஒரு வேளை அவளது மன்னிப்பு அழுத்தமாகப் பதியவில்லையோ என்று தோன்றுகிறது. தாட்சாயினிக்காவது அவ்வப்போது இளைப்பாற மனதை ஆறுதல் படுத்திக் கொள்ள பிறந்த வீடு உள்ளது. ஆனால் எத்தனையோ பெண்களுக்கு இப்படியான ஆதரவும் இல்லாமல் எல்லாமே தானாகவே, தனக்குள்ளேயே போட்டு மருகிச் சமாளிக்க வேண்டிய இன்னும் கஷ்டமான சூழல்களில் அடிமைகள் போன்று நடத்தப்படும் சூழல்களில் இருக்கிறார்கள்.

    இருந்தாலும் தாட்சாயிணியின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவள் தன்னையே சீதையாக நினைத்த பின்???

    கதாசிரியர் ஹேமா அவர்களுக்குக் கதை சொல்லும் திறன், அழகிய நடைக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இப்படி பிறந்த வீட்டிற்கு வந்து இளைப்பாறிச் செல்வதற்கு ஸ்யாமும் எந்தத் தடையும் போட்டதாகவும் தெரியவில்லையே..அவள் வேலைக்குச் செல்வது பற்றியும் ஸ்யாம் எந்தத் தடையும் சொல்லவில்லை...தாட்சாயிணிக்குச் சில சுதந்திங்கள் இருப்பதாகவே தெரிகிறது....தாட்சாயிணியிடம் குடும்பப் பொறுப்பு முழுவதையும் கொடுத்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது...அதைச் சந்தேகப்படுவதாகவும் இல்லை.. .அல்லது மாமியார் மாமனார் இவளைப் புரிந்து கொள்ளாமல், ஸ்யாமும் அதற்கு உடந்தையாக என்று....ஸோ இது ஒரு ஸர்வ ஸகஜமாக இருப்பதாகத்தான் தெரிகிறது. ஸோ வீட்டுப் பெரியவர்கள் மற்றும் தியாகு, ஸ்யாமுடன் நல்ல முறையில் இருப்பதாகத் தெரிவதால் முன்பு பேசி சமாதானப்படுத்தியது போல இப்பவும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பேசலாமோ என்றும் தோன்றியய்து...

    "ஏதோ இருக்கேன்" என்று சகுந்தலா சொல்லுவதும் ஏதோ நினைக்கத் தோன்றுகிறது. அப்போ சகுந்தலாவுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கத் தோன்றுகிறது..ஒரு வேளை தாட்சாயிணி அங்கு வருவது பிடிக்கவில்லையோ....இருக்கலாம்...

    தாட்சாயிணியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாமோ...

    எழுதிய விதம், மற்றும் பல வரிகள் வர்ணனைகள் ரசிக்கும்படியாக இருந்தது.

    ////நன்றாய் இருக்கும் தமிழை இன்னமும் ஏன் வளர்க்க வேண்டும் என்று தாட்சாயணிக்குப் புரியவே இல்லை.// இது ஒர் உதாரணம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. மிக விறுவிறுப்பான கதையாக இருந்தது...

    தாட்சாயிணி தன்னையே சீதையாக நினைத்து ..வாழ்ந்து பார்த்த கற்பனைகள் ...அருமை..

    வாழ்த்துகள் ...ஹேமா

    பதிலளிநீக்கு
  13. தாட்சாயணிக்குக் கிடைத்திருக்கும் பரிபூரண சுதந்திரம் அவள் உணராத ஒன்றாகவே நினைக்கிறேன். ஆனால் அவள் அண்ணி சகுந்தலாவுக்கு அந்த சுதந்திரம் இல்லையோ என்று அவள் பதில் சொல்வதிலிருந்து ஊகிக்க முடிகிறது. கதை அண்ணியைச் சுற்றிச் செல்லுமோ என நினைக்கையில் தாட்சாயணியைச் சுற்றிச் செல்கிறது. தன்னை ஒரு வித்தியாசமான மனைவியாக தாட்சாயணி நினைத்துக் கொள்வதாகவும் தோன்றுகிறது. கொஞ்சம் விலகிப் பார்த்தால் உண்மை புரியலாமோ என்னமோ! ஒரு சிலர் இப்படித் தான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள மனைவி இருப்பதால் கவலைப்படவே மாட்டார்கள். பின்னால் உணரும் நேரம் வரும். ஸ்யாமுக்கும் அப்படி ஓர் நேரம் வரலாம். தன் மகன் ஒதுக்கப்படுகிறான் என்னும் உணர்வே தாட்சாயணியை இந்த முடிவு எடுக்கச் செய்கிறது. ஆனால் அவள் மகன் ஒதுக்கப்படவில்லை. அவனுக்கும் தாட்சாயணியின் அண்ணன் முக்கியத்துவம் கொடுக்கத் தான் செய்தார். பிஞ்சு மனதில் ஏற்படும் இந்தச் சின்ன நெருடலைப் போக்குவதே தாட்சாயணி செய்திருக்க வேண்டியது. விட்டுக் கொடுத்தலைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அடுத்து சொல்ல வந்ததை கீதாக்கா சொல்லிட்டாங்க....வழி மொழிகிறேன்...எப்படியோ...தாட்சாயினி எங்கள்/என் மனதில் புகுந்துவிட்டாள் என்றே தோன்றுகிறது....ஸோ கதாசிரியருக்கு இதுவும் ஒரு வெற்றிதான்.....ஒரு கதை மீண்டும் மீண்டும் பேசப்படுமானால்.....

      கீதா

      நீக்கு
  14. கதையின் நடை நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  15. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  16. குழந்தைக்காக ராமனை மன்னித்து விட்டாள் சீதை.
    இப்படித்தான் நிறைய சீதைகள் வாழ்கிறார்கள்.
    அருமை.

    பதிலளிநீக்கு
  17. லவனுக்காக ராமனை மன்னிப்பது சிறிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. தனது ஒரு படத்தில் விசு சொல்வார், "நீங்கள் எல்லாம் தாலிக்கொடி உறவுக்கு தரும் முக்கியத்துவத்தை விட, தொப்புள்கொடி உறவுக்குத்தாண்டி முக்கியத்துவம் தரீங்க" என்பார் மனைவியிடம்.

    ஓரளவுக்கு இது உண்மைதான். ஆயுசு பரியந்தம் (சிவசங்கரியின் வார்த்தைகளைக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறேன்!) கூட வரும் பந்தம் கணவன் - மனைவி உறவு என்றாலும் குழந்தை வளரும்வரை அதன் வளர்ச்சி, தேவைகளுக்கு முக்கியத்துவம் தருபவள் தாய். தாய் சிறந்தவளா, மனைவி சிறந்தவளா என்று பட்டி மன்றம் வைத்தால் யார் ஜெயிப்பார்கள்?

    இது போன்ற உறவு வீடுகளில் முகம் / மனம் சிணுங்கும் குழந்தைகளை நானும் பார்த்திருக்கிறேன். அந்நிலையில் ஒரு தாயாய் இப்படித்தான் முடிவெடுக்க முடியும்! ஒருவேளை தாட்சாயணி மனதில் இன்னமும் ஷ்யாம் இருப்பதால்தான் அவனை உதறி தனிவாழ்க்கை மேற்கொள்ளாமல் சேர்ந்து வாழத் தலைப்படுகிறாள் போலும்.

    பதிலளிநீக்கு
  18. "தாய் சிறந்தவளா, மனைவி சிறந்தவளா என்று பட்டி மன்றம் வைத்தால் யார் ஜெயிப்பார்கள்?" - மனைவிதான். அதுல என்ன சந்தேகம்? அவதானே 'தாய்' பாத்திரத்தையும் சுமந்து, கணவனுக்கு, 'குடும்பம்' ஒழுங்காகச் செல்ல உதவுகிறாள். அவள், 'தாலிக்கொடிக்கு' முக்கியத்துவம் தந்தால் பாதிக்கப்படுவது குடும்பம், கணவன் தானே. அடலசன்ட் குழந்தைகளை அவளால்தான் சமாளிக்கமுடியும். 'தாய்' என்பவள் அன்புமயமானவள். அவளால் மட்டும் குழந்தை, சமூகத்தில் வாழும் விதத்தைக் கற்றுக்கொள்ள இயலாது.

    'ஷ்யாம்' மனதில் இருக்கிறானோ இல்லையோ, அவள் குழந்தைக்காகவாவது அவள் அப்படித்தான் முடிவெடுக்க வேண்டும். அதனால்தான் அவள் 'மன்னிக்கத்'தலைப்படுகிறாள்.

    பதிலளிநீக்கு
  19. இந்தக் கதையமைப்பைப் பொறுத்தவரை 'தாட்சு'வுக்கு ( ! ) கல்லூரிக்கு காலத்திலிருந்தே தோழிகள் ஏற்றி விடுவதன் காரணமாகவும், ராமன் என்னும் பிம்பத்தின் மீது இருக்கும் ப்ரேமையினாலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்திருக்கின்றன. எதிர்பார்ப்பு எங்கிருக்கிறதோ, அங்கு ஏமாற்றம் சகஜம்! அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாத ஷ்யாம் மேல் அவளுக்கு கோபம் வருகிறதே தவிர, வெறுப்பு வரவில்லை.

    சமீபத்தில் சுஜாதா மறைந்த உடன், அவர் மனைவி அளித்த பேட்டி யாருக்காவது நினைவுக்கு வந்ததா? தினகரன் வசந்தத்தில் ஒருமுறை, அப்புறம் குமுதம் லைஃப் இதழில் ஒருமுறை!

    பதிலளிநீக்கு
  20. கதாசிரோயருக்கு முதலில் வாழ்த்துக்கள், பாராட்டுகள். அடுத்தது என்ன, ஸ்யாம் தாட்சாயினியை என்ன சொன்னான், என்ன கொடுமை செய்தான் இவள் இப்படி பிறந்த வீடு வருவதற்கு என்று கேட்க வைக்கும் கதை. அப்படி சரளமான நடை. வித்தியாசமான கோணத்தில் எண்ணும் சிந்திக்கும் கதாபாத்திரம். இக்கதை தாட்சாயினியின் இடத்திலிருந்து பார்க்கப்பட்டு அந்த உணர்வுகளைப் பற்றி மட்டுமே பேசியிருப்பதால் ஒரு மனைவி, தாய் எனும் கோணத்தில் சிந்திக்கப்பட்டு சொல்லப்பட்டிருக்கிறது...ஒரு வேளை சியாமும், தாட்சாயினியும் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி ஆர்க்கியுமெண்ட் செய்வது போல், கருத்து வேறுபாடு வருவது போல் இடையில் கொண்டு வந்திருந்தால் மன்னித்தலின் அழுத்தம் கூடியிருக்குமோ....ஏனென்றால் தாட்சாயினியின் எதிர்பார்ப்புகளும், அவை நியாயமாக இருந்தாலும், சியாமின் மன நிலையும் வேறாக இருப்பதால்....ஷியாம் எழுத்தாளராகப் புகழ் பெறுவதால் ஒரு வேளை அவள் அப்பா, அண்ணன் சியாமிடம் தனியாகப் பேசிப் புரிய வைக்கலாமோ, அவனும் புரிந்து கொள்வானோ என்றும் தோன்றியது....

    கீதா: துளசியின் கருத்துடன்...இதுவும்.... பெண்களுக்கு இப்படி உணர்வுகள் எரிமலையாய் மனதின் ஆழத்தில் கனன்று கொண்டிருக்கும்.....அது ஒரு வயதை அடையும் போது எரிமலையாய் வெடிக்கவும் கூடும் என்பதும் இக்கதையில் அறிய முடிகிறது. உளவியல் ரீதியில் சிந்திக்கும் போது..இப்படி பல எண்ணங்களை எழுப்புகிறது....அருமை ஹேமா....

    பதிலளிநீக்கு
  21. தாட்சாயணியைச் சொல்லிக் குற்றமில்லை. நம் இதிகாசங்கள் சீதையை ஒரு பொறுமையின் பூஷணமாகக் கற்பிக்கிறது அந்தப் பாத்திரத்தையே ஆதர்சமாக எடுத்துக் கொள்ளு ம்பெண்கள் எதற்கு மன்னிப்பு எது அசல் வாழ்க்கை என்று புரியாமல் போகிறார்கள் கதையை விமர்சனம் செய்ய மாட்டே ன் அது கதாசிரியையின் கற்பனை ஆனால் கற்பனை அலசப்படலாம் அல்லவா. வாழ்க்கையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஆதர்ச நிலையைப் போற்றுவதே கதையைக் கொண்டு செல்கிறது இன்னும் எத்தனை சீதைகளின் மன்னிப்புகளோ

    பதிலளிநீக்கு
  22. வெகு அழகான இலக்கிய தரமிக்க நடை.விளக்கின் அடியில் இருக்கும் கருமையை போன்றது பிரலங்களுக்கு வாழ்க்கை துணையாக இருப்பது. கதை முழுக்க அது பேசப்பட்டாலும் உணர்த்தப்பட்டது என்னவோ துருவனின் சோகம்தான்.

    பதிலளிநீக்கு
  23. ஸ்ரீராம் ஆம் சுஜாதா மறைந்த பிறகு அவரது மனைவி அளித்த பேட்டி நினைவுக்கு வருகிறது...அதுதான் ஸ்ரீராம் அவர்கள் மனதுக்குள் கனன்று கொண்டிருக்கும் இந்த உணர்வுகள் என்றேனும் ஒருநாள் எரிமலை போல வெடித்துவிடவும் வாய்ப்புண்டு...அதற்குள் தாட்சாயினி காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தோன்றுகிறது...எனன்வோ இந்த தாட்சு (நன்றி ஸ்ரீராம்!!) என் மனதில் ரொம்பவே புகுந்து நிறைய யோசிக்க வைக்கிறாள்!!!! மீண்டும் மீண்டும் இன்று நிறைய யோசித்தேன் ஸ்ரீராம்....ஹேமாவுக்கு குடோஸ்..இப்படிப் பேச வைத்ததற்காக!! அருமை...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. என் கதையைப் பற்றி கருத்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள் கோடி! என் எழுத்தின் நிறைகுறைகளைப் பற்றி அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்கு வாய்ப்பளித்த ஸ்ரீ ராமுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  25. லவனும் நுழைந்துவிட்ட வித்தியாசமான கதை!

    திருமதி. சுஜாதா தன் எழுத்தாளர்-கணவர்பற்றி விரிவாகப் நேர்காணல்களில் கூறியிருந்தது நினைவில் இருக்கிறது. Celebrity or no celebrity - சம்பந்தப்பட்ட மனைவியரிடம் ஒரு ஆற்றாமை எங்கோ தட்டத்தான் செய்கிறது. மனித இயல்பு.

    பதிலளிநீக்கு
  26. பக்குவப் படாத வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் சிறியப் பிரச்சினையினை பூதக் கண்ணாடி போட்டு பார்க்க வேண்டியதில்லையே:)

    பதிலளிநீக்கு
  27. தன்னை ஏற்றிக்கொண்டு போகவில்லையே என்ற கோபமே தவிர கிரணுக்கு வேறொன்றுமில்லை. ஆனால் கற்பனையில் தாக்ஷா சீதை ஆயிற்றே. அவள் திரும்பிப் போவதுதான் ஸரி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  28. கதை நன்றாக இருக்கிறது. நாயகி டிபிக்கல் இந்தியப்பெண்ணோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி வரியை முன்பே கொடுத்து விட்டதால் புரட்சிப் பெண்ணாக்க முடியவில்லை 😊

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!