திங்கள், 17 ஜூலை, 2017

"திங்க" க்கிழமை 170717 : பேபி உருளைக்கிழங்கு பனீர் மசாலா






வாங்கி வைத்த பனீரும் வீணாகலாமோ!  சனிக்கிழமை மாலை சும்மா கிடந்த பனீரை உபயோகப்படுத்துவது என்கிற தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்தபோது பேபி பொட்டேட்டோ கண்ணில் பட்டது.

சென்ற வாரம் செய்தித்தாளில் பார்த்த ஒரு சமையல் குறிப்பும் நினைவுக்கு வந்தது.  அவர்கள் அதில் பனீர் சேர்க்கச் சொல்லவில்லை.  நான் சேர்த்திருக்கிறேன்.  

ரொம்ப நாளாச்சே.. ஏதாவது செய்தால் என்ன?  பாஸுடன் பேச்சு வார்த்தைத் தொடங்கியது.

"நைட் என்னம்மா டிஃபன்?"

"ரவா உப்புமா... இல்லாட்டி சேமியா உப்புமா..."

"சரி..  நான் ஒரு ஸைட் டிஷ் செய்யறேன்.  சப்பாத்தியோ, பூரியோ செய்யறியா?  பூரி காமாட்சி அம்மா பதிவுல வந்த மாதிரி இருக்கணும்..."

"வேண்டாம்...  அப்படி வராது.  நீங்க இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்பீங்க...  நான் சப்பாத்தியே செய்து விடுகிறேன்..." -  பாஸ்.

ஓகே.  கைகளைத் தேய்த்துக் கொண்டு களம் புகுந்தோம்.  அவரவர்  அவரவர்களுக்கு!
 

சற்றே நிறம் மாறியிருந்த உருளைகளை ஒதுக்கி, நல்லதாகத் தெரிந்த பேபி உருளைளைக்கிழங்கை சேகரம் செய்து வேகவைத்துத் தோலுரித்து வைத்துக்கொண்டோம்.

நான்கு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொண்டோம்.  பெங்களூரு தக்காளி மூன்று எடுத்து வெந்நீரில் போட்டு தோலுரித்து மிக்சியில் இட்டு அரைத்துத் தனியாக வைத்துக் கொண்டோம்.



வெங்காயத்தை வாணலியில் போட்டு, ஒரு ஸ்பூன் பூண்டு பேஸ்ட் போட்டு, பத்து முந்திரிப்பருப்பும் போட்டு வதக்கி, எடுத்து அதையும் மிக்சியில் இட்டு அரைத்து தனியாக வைத்துக் கொண்டோம்.
பனீரை ரெடி செய்து கொண்டோம்.

தோலுரித்த உருளைக்கிழங்கை அப்படியே எண்ணெயில் இட்டு பொரித்துக்கொண்டோம்.

வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்து வைத்த வெங்காயக் கலவையைப் போட்டு நான்கு திருப்பு திருப்பி, தக்காளிக் கலவையையும் அதில் சேர்த்து இரண்டு புரட்டு!  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பும் காரப்பொடியும் சேர்த்தோம்.   ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்தோம்.  கொதிக்க வைத்தோம்.





பச்சை வாசனை போகக் கொதித்ததும் தயிர் ஒரு கப் சேர்த்தோம்.  இரண்டு அல்லது மூன்று நிமிடம் அடுப்பிலேயே வைத்திருந்த பிறகு பொரித்த உருளைக்கிழங்கையும், பனீரையும் அதில் போட்டுக் கலந்தோம்.  ஒரு ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு இறக்கி கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து...







இதை நான் தயார் செய்து கொண்டிருந்தபோதே பாஸ் சப்பாத்தி ரெடி செய்து விட்டார்.





சப்பாத்திக்குத் தொட்டுக்கொண்டு லபக்கி விட்டோம்.  மகன்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.  நன்றி - சொல்லிக்கொடுத்த ப்ரதிமா அவர்களுக்கு!  அவர் இதற்கு 'உருளைக்கிழங்கு பால்கறி' என்று பெயரிட்டிருந்தார்!

தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு தொட்டு வாக்களிக்கலாம்!

46 கருத்துகள்:

  1. பேபி உருளை பனீர் மசாலா நல்லா வந்திருக்கும். எழுதின கமென்ட் காணாமல் போயிடுச்சு. த ம +1. பனீர் ரெண்டு கலர்ல வந்திருக்கு. உருளையை எண்ணெய்ல பொரிக்கணும், அதான் யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமை நண்பரே
    சாப்பிட மனம் ஆவலாய் காத்திருக்கிறது
    தம+1

    பதிலளிநீக்கு
  3. ஆசையை தூண்டி விட்டது ஸ்ரீராம் ஜி

    பதிலளிநீக்கு
  4. எண்ணெயில் உருளைக் கிழங்கைப் பொரிக்காமல் சற்றே அவித்து எடுத்துக் கொண்டு செய்வேன் - குவைத்தில் இருக்கும் போது..

    இங்கே அருகாமையில் அமுல் பனீர் கிடைக்க வில்லை..
    இருந்தாலும் கிடைத்த வேறொன்றைக் கொண்டு சென்ற வாரம் மேற்படி பனீர் ஆலு மசாலா செய்யப்பட்டதென்பதை அறியத் தருகின்றேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  5. நெட் படுத்தியதால் சற்று தாமதித்துவிட்டது திங்க வருவதற்கு!

    ஓ அப்ப பனீர் மட்டர் இல்லையா!! பனீர் + குழந்தை உருளை!!! சூப்பர்! குறிப்புகள் சுவையாக வந்திருப்பதை அறிவிக்கிறதே!!! யும்மி என்று நாவில் நீர் ஊற ...கமெண்டியாச்சு இங்கு!! தம போடாமல் இருப்போமா இப்படியான சுவையான குறிப்பிற்கு...போட்டாச்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராம் காமாட்சியம்மா பதிவில் பூரியைப் பார்த்தேன்.

    பூரி உப்பி வருமே ஸ்ரீராம்....எப்போதாவதுதான் எனக்குச் சப்பையாக வரும். உப்பித்தான் வரும். அம்மா அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலேதான்..நானும். என்ன மாவை நான் ஊற வைக்க மாட்டேன். இறுக்கமாக நன்றாகப் பிசைந்து விடுவேன். மாவு இறுக்கமாக இருந்தால் அதிகம் எண்ணை குடிக்காது. இது நான் என் அம்மாவின் அம்மா/பாட்டியிடம் கற்றுக் கொண்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பேபி உருளைக்கிழங்கு பனீர் மசாலா என்ற தலைப்பை பார்த்ததும் பதிவுலகத்திற்கு புதிதாக ஏதோ ஒரு பேபி வந்திருக்கிறது போல என்று நினைத்து அவங்க எழுதிய சமையல் குறிப்பு என்று நினைத்துவிட்டேன் படித்த பின் தான் புரிந்தது இது எங்கள் ப்ளாக்கில் உள்ள பேபி என்று ஹும்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ வாங்க மதுரை....உங்க கண்ணுக்கு அப்படித்தான் தோணும்..
      தேடியிருப்பீங்களே.ஹிஹிஹி...

      கீதா

      நீக்கு
  8. @கீதா ரங்கன் - பாவம் ஶ்ரீராம்தான் சொல்லியிருக்கிறாரே மெயின் ஐட்டம் பாஸோட வேலைனு. அவருக்கு ஏன் பூரி மாவு ரெடிபண்ணற வேலையைக் கொடுக்கறீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஹஹஹஹ...நெல்லை...ஸ்ரீராம் நளன் ஆச்சே...அதான்....பாருங்க இதுக்காகவே அவரே பூரி செஞ்சு ...ஒரு திங்க ல இதுதான் பூரி பாத்துக்கங்கன்னு போடுறாரா இல்லையான்னு...ஹிஹிஹி...ஹப்பா ஸ்ரீராமை மாட்டி விட்டாச்சு...

      கீதா

      நீக்கு
  9. இன்னொன்றும் பூரி தேய்க்கும் போது நடுவில் அதிகம் தேய்த்து ஓரம் கனமாக இருந்தாலும் உப்பி வராது என்று பாட்டி சொல்லுவதுண்டு. தேய்க்கும் போது பூரி மாவில் சிறிய ஓட்டையோ, கீறலோ ஏற்பட்டாலும் உப்பாது. மாவு வட்டத்தில் நெருடலாக ஏதேனும் மாட்டிக் கொண்டாலும் பூரி உப்பாது - கோதுமை வாங்கி மெஷினில் அரைப்பதாக இருந்தால் சில சமயம் அரைபடாத கோதுமை ரவை துண்டுகள் இடர்பட்டால்-..

    நானும் மாவு தேய்த்து இடுவதில்லை. எண்ணைய் தொட்டே தேய்ப்பது வழக்கம். பொரிக்கும் எண்ணை மாவு கலங்கி பொறிந்து கசடு ஏற்படாமல் இருக்கும் என்பதால். இவை எல்லாம் ட்ரையல் அண்ட் எரரில் கற்றுக் கொண்டது ஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மணி இப்போ 15:00. இப்போது தான் மதிய சாப்பாடு முடிந்தது. இருப்பினும் படிக்கும் போது பசிக்கிறது

    பதிலளிநீக்கு
  11. //அவரவர் அவரவர்களுக்கு!// அவரவர் "களம்" அவரவர்களுக்குனு வந்திருக்கணுமோ? :)) ஹிஹிஹி, நக்கீரியாக்கும் நாங்க.

    இதைத் தயிர் சேர்க்காமல் செய்தால் ஆலு தம் என்போம். ஆனால் இதே போல் தயிர் சேர்த்துப் பனீர் இல்லாமல் வெங்கடேஷ் பட் "சமையல், சமையல்" நிகழ்ச்சியில் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாட்கள் முன்னர் செய்து காட்டினார். சின்ன உ.கி. வாங்கினால் பனீர் இல்லாட்டியும் பூண்டு சேர்க்காமல் சப்பாத்திக்கு அடிக்கடி இது மாதிரிச் செய்வது உண்டு. பனீர் ரங்க்ஸுக்குப் பிடிக்கிறதில்லை! எனக்கு ரொம்பப் பிடிக்கும்! :)

    பதிலளிநீக்கு
  12. பூரி பொரித்தெடுத்தடுத்தவுடன் ஊதி பெரிதாகத்தான் வருகின்றது. ஆனால் சிறிது நேரம் வைத்தால் அப்படியே புஷஷென போய் விடுகின்றதே? பனீரும் உருளைக்கிழங்கும் சூப்பர்.

    இந்த பேபி உருளைக்கிழங்கை தோலோடு சேர்த்து அவித்து சுமாவே சாப்பிடலாம், அதன் முழுமையான சத்தும் கிடைக்கும், அதே போல் அவித்த கிழங்கை தோலோடு அல்லது தோல் இல்லாமல் சின்ன துண்டுகளாக்கி தட்டில் வைத்து அதன் மேல் சீஸ், சிறியதாய் அரிந்த வெங்காயம் தூவி மிக்ரோவலில் வைத்து சீஸ் உருகி வந்ததும் அப்படியே சாப்பிடலாம்.

    சுவிஸ் ஸ்பெஷல் உண்வு சீஸும் உருளைக்கிழங்கும் தான்.

    பதிலளிநீக்கு
  13. இங்கே நாட்டின் வடபாகத்தில் (தற்போது டெல்லியில் இருப்பு) - பொதுவாக பன்னீர் ஸப்ஜி என்றால் அவை இவை: மட்டர்-பன்னீர், பாலக்-பன்னீர், ஷாஹி பன்னீர் மற்றும் கடாய் பன்னீர்(Kadai Paneer) அல்லது பன்னீர் புர்ஜி (Paneer Bhurji). சின்ன உருளையில் தம்-ஆலூ (Dum Aloo)-தான் செய்வது வழக்கம் (’ஆலூ தம்’ அல்ல!).

    நீங்கள் என்னடாவென்றால் சின்ன உருளைக்கும் பன்னீருக்கும் சிண்டு முடிந்திருக்கிறீர்கள். முடிவு சுபம் என்றால் சரி !

    பதிலளிநீக்கு
  14. படிக்கும் போதை நா இனிக்கிறது

    பதிலளிநீக்கு
  15. //பேபி உருளைக்கிழங்கு பனீர் மசாலா என்ற தலைப்பை பார்த்ததும் பதிவுலகத்திற்கு புதிதாக ஏதோ ஒரு பேபி வந்திருக்கிறது போல

    hahahahahahaha

    பதிலளிநீக்கு
  16. வாங்க நெல்லை. நல்லா வந்திருந்தது. உடனே காலி ஆகிவிட்டது!! நீங்களும் ஹேமாவும் எப்பவும் பத்தியச் சமையல். நான் அவபத்தியக்காரன்!!

    பதிலளிநீக்கு
  17. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி கில்லர்ஜி. அந்த மாலை நீங்கள் அலைபேசியில் பேசியபோது இந்த வேலையில்தான் இருந்தேன்!

    பதிலளிநீக்கு
  19. வாங்க துரை செல்வராஜூ ஸார். பனீர், பிராண்ட் அமுல்தான் என்றில்லாமல் எது கிடைக்கிறதோ வாங்கி விடுகிறேன். ப்ரெஷ் க்ரீம் இருந்தது. அதைச் சேர்க்காமல் விட்டு விட்டோமே என்று அப்புறம் மனது தவித்தது!!!!

    பதிலளிநீக்கு
  20. வாங்க கீதா... நன்றி பாராட்டுக்கு. தமவுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. கீதா.. எங்களுக்கு எப்போதாவதுதான் அந்த மாதிரி நல்ல ஷேப்பில் பூரி வரும்! எண்ணெய் தேய்த்து அப்பளம் இட்டதில்லை. மாவு தேய்த்துதான் இடுவோம். அடுத்த முறைஅப்படி முயற்சிக்கலாம்!

    பதிலளிநீக்கு
  22. வாங்க மதுரைத்தமிழன்.. லீவுல இந்தியா வந்து போனீங்க போல... ஆளையே காணோம்!

    //இது எங்கள் ப்ளாக்கில் உள்ள பேபி//

    ஙே....

    பதிலளிநீக்கு
  23. வாங்க நெல்லை. பூரி / சப்பாத்தி மாவு பிசைய வேலை நாம் ஒன்றும் செய்யாத வேலையில்லையே!!

    பதிலளிநீக்கு
  24. @கீதா... குறிப்புகள் நோட்டட்!

    பதிலளிநீக்கு
  25. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  26. வாங்க கீதாக்கா... ஆமாம்... அவரவர் களம் அவரவர்களுக்கு என்றுதான் இருக்கவேண்டும்! கணினியும் கூகிளும் சேர்ந்து செய்த சதி! அதை ஆலு தம் என்று சொல்லக் கூடாதாம். கீழே ஏகாந்தன் ஸார் திருத்தம் கொடுத்திருக்கார் பாருங்க...

    பதிலளிநீக்கு
  27. வாங்க நிஷா. உங்கள் குறிப்புகளை பார்த்த்ட்டுக் கொண்டேன். அவித்த உருளைக்கிழங்கை மிளகு சீரகப்பொடியில் தோய்த்துச் சாப்பிடுவோம். சீஸ் எல்லாம் போட்டு என்பது புதுசு. மேலும் எங்கள் 'அவன்' அடுத்தடுத்து மக்கர் செய்ததும் வேறு வாங்கவில்லை.

    பதிலளிநீக்கு
  28. வாங்க ஏகாந்தன் ஸார். எப்பவுமே சமையலில் எதையாவது மாற்றிப்போட்டு முயற்சித்துப் பார்ப்பது பொழுதுபோக்கு! இது ஜோடி சேராது என்று தெரியாது! செய்து பார்த்தால் சுவையோ சுவை!

    பதிலளிநீக்கு
  29. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  30. உருளையும், பன்னீரும் பிடித்தவை... அதுல ஒரு கிரேவியா?! ட்ரை திஸ்

    பதிலளிநீக்கு
  31. வாங்க ராஜி.. முயற்சித்துச் சுவையுங்கள்!

    பதிலளிநீக்கு
  32. தயிர் சேர்த்து இருக்கிறீர்கள். அடுக்கடுக்காய் செய்தமுறை அழகாக எழுதினதுடன் வந்திருக்கிறது. என்ன ஒரு இஞ்சிதான் போடவில்லை. முந்திரிமுதல் வடஇந்திய மஸாலா. கரம் மஸாலா இல்லை.இன்னும் கிரீம் போடவில்லையா.
    நிறைய ஸத்துள்ள பொருள்கள். பொரித்த உருளைக்கிழங்கு. என்ன அழகான மெல்லிய ரொட்டிகள். அது போதுமே! பூரியைப் பொரித்து அது வேறு எண்ணெய். இதுதான்ஸரி. பாஸிடம் அவா,இவா பேர்சொல்லி எதையும் சொல்லாதீர்கள். எல்லோரும் செய்வதுதான் எதுவும். ஒரு லைட் ரொட்டியும், ஸத்துக்களடங்கிய தஹி,பனீர்,ஆலுவும் அதன் படங்களும் அசத்தல். நன்றி பார்க்க,சுவைக்க ஆவலைத்தூண்டும் திங்கள்ப் பதிவு. அன்புடன். குறை சொல்ல ஒன்றுமில்லை.

    பதிலளிநீக்கு
  33. சுவையான ரெசிபி! அழகிய புகைப்படங்கள் அமர்க்களமாக இருக்கின்றன!

    பதிலளிநீக்கு
  34. திங்கத்தான் நினைக்கிறேன் வாயிருந்தும் செய்வதற்கு நேரமின்றி தவிக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  35. Dum Aloo என்று அழைக்கப்பட்டாலும் பேச்சு வழக்கில் "ஆலூ தம்" என்றும் சொல்லுவார்கள். சொல்லுவதும் உண்டு. :)

    பதிலளிநீக்கு
  36. பொதுவாய்ப் பஞ்சாபிகள் அதிகமாக இதைச் செய்வார்கள். காஷ்மீரி ஆலு தம் கூட பிரபலமான ஒன்று.

    பதிலளிநீக்கு
  37. காஷ்மீரி ஆலு தம் செய்கையில் தயிர் புளிப்பு இல்லாமல் சேர்ப்பார்கள். க்ரீமும் உண்டு. லக்னோ போன்ற வட இந்திய மாநிலங்களில் செய்வது காரம் அதிகம் காணப்படும், எல்லாவற்றிலும் பனீர் சேர்த்தாலும் அதைத் துருவிப் போடுவார்கள். பனீர் தெரியும்படிச் சேர்ப்பதில்லை. காரமா வேணும்னாக் கடைசியில் கொஞ்சம் தயிரோ அல்லது க்ரீமோ மட்டும் சேர்த்துச் செய்வதும் உண்டு.

    பதிலளிநீக்கு
  38. பார்க்கவே அழகு.
    சுவையும் அருமையாக இருந்து இருக்கும்.
    செய்முறை படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  39. உங்கள் பாஸ் என்ன சொன்னார்கள் என்று சொல்லவில்லையே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!