செவ்வாய், 28 ஏப்ரல், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : இந்தக் கதை அவளுடன் பேசட்டும்!  - ஜீவி   2/3            



இந்தக் கதை அவளுடன் பேசட்டும்!

ஜீவி   
-2-


வினாசி ரோட்.    வழவழப்பான சாலை.  ஆட்டோக்களின்  'டபடப'.  எல்லாவற்றையும் தாண்டி வ.உ.சி. பூங்காவை நெருங்கும் போது,  இமானுவேல் சர்ச் பக்கமிருந்து விநாயகம் என்னைக் குறிவைத்து வருவதைக் கண்டு கொண்டு விட்டேன்.

எனக்கு மிக அருகில் வந்து விட்ட விநாயகம், "எங்கே வராமல் எமாற்றி விடுவீர்களோ என்று நினைத்தேன்.." என்றார்.

விடை:  ஒரு  மெல்லிய புன்முறுவல்.

தொண்டையைக் கனைத்துக் கொண்ட விநாயகம், "எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.." என்றார்.

"எங்கேயாவது ஆரம்பியுங்கள்.."

"முதலிலே உங்களிடத்தில் ஒன்று சொல்ல வேண்டும்.   நான் வலிய உங்களுக்குக் கடிதம் எழுதி உங்களை வரவழைத்துப் பேச ஆரம்பிப்பதை வித்தியாசமாக நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.."

"இல்லை.."

"நான் பழகும் அத்தனை பேர்களிடமும் இல்லாத ஏதோ ஒரு மதிப்பு உங்கள் மேல் எனக்கு ஏற்படுகிறது..  எனக்குக் கொஞ்சம் மூத்த நீங்கள் அக்கா போலவும்,  நான்  உங்கள் தம்பி போலவும்....  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?.. ஒரே தாயின் வயிற்றில் பிறந்தால் தான் உடன் பிறந்த பாசம் ஏற்படுமா?"

நான் என்ன சொல்வது?...  சிக்மண்ட் பிராய்டு  தான் நினைவுக்கு வந்தார்.

பார்க்கினுள் நுழைந்து  விட்டோம்.

"அப்படி அந்த மூலையில் போய் பெஞ்சில் உட்கார்ந்து கொள்ளலாமா?" என்றார் விநாயகம்.

"தட்ஸ் பெட்டர்.." என்ற சொன்னதோடு நான் நிறுத்திக் கொண்டேன்.

இருவரும் அமர்ந்தோம்.  இத்தனை நேரம் பெஞ்சுக்கடியில் பதுங்கியிருந்த ஒரு  அணில்  குடுகுடுவென்று ஓடி பக்கத்திலிருந்த மரத்தில் ஏறிக் கொண்டது.

"உங்களோடு இனிமேல் மனம் விட்டு நான் பேசப் போகிறேன். இந்த விஷயத்தில் உங்களைத் தான் நான் மலை போல நம்பியிருக்கிறேன்.. தயவுசெய்து..."

"சொல்லுங்கள், விநாயகம்.  நீங்கள் சொல்லப் போவதைக் கேட்கத் தானே நான் வந்திருக்கிறேன்.."

"ஏன்னை நீ என்றே நீங்கள் கூப்பிடுவதை நான் விரும்புகிறேன்.  நான் உங்களை விடச் சின்னவன்.."

".............................................."

"எனக்கு உங்களைப் போலவே ஒரு தமக்கை இருந்தாள். ஹிஸ்டீரியா அட்டாக்.  நீங்கள் என்னிதயத்தில் அவளிடத்தில் இருக்கிறீர்கள்.  ஆகவே, என் ஆத்ம திருப்திக்காகவேனும் நீங்கள் என்னை நீ என்றே..."

"சரி... நீ..."

"எனக்கு இப்போது எவ்வளவு  சந்தோஷமாக இருக்கிறது, தெரியுமா?.. அதுவும் தவிர நீங்கள்..."

"இவ்வளவு தூரம் வந்து விட்ட பிறகு நீங்கள் மட்டும், ஸாரி..  நீ மட்டும்.. 'நீங்கள்.. நீங்கள்..' என்று...  என் பேர் சீதா என்று  உனக்குத் தெரியாது?"

"ஓ.. சீதா!.." என்று விநாயகம் உதடைக் குவித்துச் சொன்ன போது இரண்டு பேருமே சிரித்து விட்டோம்.

கொஞ்ச தூரத்தில் போன ஒரு கிழவர் ஒரு மாதிரியாக எங்களைப் பார்த்து விட்டுப் போனார்.

"சீதா,   பிரேமாவைப் பற்றி நீ என்ன நினைக்கறே?" என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டான் விநாயகம்.

'பிரேமா!  அடேடே,  அந்தக் குதிரைவால் கொண்டைக்காரியா?..  சரியான ஆளைத் தான் பிடித்திருக்கிறான் இந்த விநாயகம்'!

என் மனம் குதி போட்டது.  வெளிக்கு அதை மறைத்துக் கொண்டு, "ஏன், நல்ல பெண் தான்;  ஆனால் கொஞ்சம் 'ஸ்டைல்' ஜாஸ்தி.." என்றேன்.

"அக்கா,  நீங்க எப்போ கல்யாணச் சாப்பாடு,  கல்யாணச் சாப்பாடு என்று துளைப்பீர்களே, நீங்கள் மனம் வைத்தால் அதைச்  செய்யலாம், அக்கா"

எனக்கு பெருமை பிடிபடவில்லை.  "அப்புறம்?" என்றேன் புன்முறுவலுடன்.

விநாயகத்திற்கு வெட்கமாகப்  போய் விட்டது.  கட்டை விரலால் மண்ணில் கோடு போட்டான்.  "நீங்கள் தான் என் மனசை அவளிடம் சொல்லி..."

"ஓக்கே.." என்று எழுந்து விட்டேன்.

விநாயகத்தின் விழிகளில் நன்றியுணர்ச்சி நீராக  ஜ்வலித்தது.

நாங்கள் பார்க்கை விட்டு வெளியே வரும் போது,  டிரில் மாஸ்ட்டர் வரதராஜன் எதிர்ப்பட்டார்.  "ஹலோ.. டீச்சர்,   எங்கே இந்தப் பக்கம்,  தனியாகவா?" என்று உற்சகத்துடன் அட்டகாசமாக ஆரம்பித்தவர்,  அப்பொழுது தான் விநாயகத்தைக் கவனித்தவர் போல,  "ஓ,  விநாயகமும்  வந்திருக்கிறாரா?" என்று நமுட்டுச் சிரிப்புடன் இழுத்து விட்டு நகரந்தார்.    மடையன்!

அதற்குப் பிறகு விநாயகமும் நானும் இரண்டு மூன்று முறை பொது இடங்களில் தனியாகவே சந்தித்தோம்.   எங்கள் லிஸ்டில் சத்தியஜித்ரேயின் படம் ஒன்று கூட உண்டு.  பக்கத்து  பக்கத்து ஸீட்டில் அமர்ந்து கொண்டு தான் படம் பார்த்தோம்.  எனக்கு மனசில் ஒன்றுமில்லாததால் விநாயகம் ஓர் அன்னிய ஆடவன் போலவும் இதற்காக ஒரு கூச்சமோ ஏற்படவில்லை.

பிரேமாவை சந்தித்து அவளிடம் விளக்கமாகப் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்று காத்திருந்தேன்.  அவள் தொடர்ந்து ஒரு வாரம் லீவில் இருந்ததும் நான் உடனே அவளிடம் அணுகாததற்கு ஒரு காரணம்.

இதற்குள் நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு  விட்டது.

என்னையும் விநாயகத்தையும் இணைத்து பள்ளியில் லேசான கசமுசா.   கழிப்பறைச் சுவரில் கூட இதைப் பற்றி எந்தக் காலியோ   கிறுக்கியிருந்தது என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது.  

எல்லாவற்றிற்கும்  காரணம் அந்த வரதராஜனாகத் தான் இருக்க வேண்டும்!  விவஸ்தையற்ற ஜென்மங்கள்!

அன்று  சாயந்தரம் கடைசி பீரியட் எனக்கு ஓய்வு.   கட்டுரை நோட்டுகளைத் திருத்திக் கொண்டு ஆசிரியர்கள் அறையில் தான் உட்கார்ந்திருந்தேன்.

திடீரென்று கதவைத்  தள்ளிக் கொண்டு உள்ளே வந்த விநாயகத்தைக் கண்டு  திடுக்கிட்டு விட்டேன்.  பரட்டைத் தலையும், கசங்கிய சட்டையுமாய் பேயறைந்தாற்போல இருந்தான்.

பரபரவென்று எனக்கு எதிரேயிருந்த ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தவன்,  திடுமென்று,  "தற்கொலையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்,  அக்கா?...." என்றான்.

[ அடுத்த செவ்வாயில் நிறைவு பெறும் ]

51 கருத்துகள்:

  1. செய்யாமல் செய்த உதவிக்கு
    வையகமும் வானகமும் ஆற்றல் அரிது..

    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் அனைவருக்கும்.

      இன்றைய குறள், ஊரடங்கின் போதும் பேரிடர்களின்போதும் தாமே முன்வந்து ஏழைகளுக்கு உதவி செய்பவர்களை நினைவுபடுத்துகிறது. இந்தக் குறளின் அர்த்தம் இன்னொரு குறளை ஒட்டி இருக்கிறது.

      காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
      ஞாலத்தின் மாணப் பெரிது.

      நீக்கு
  2. இதென்ன குடும்பக் கதையா?..
    திகில் கதையா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைங்கறது தான் பொதுவாப் பேர். நாம தான் நம் அப்பப்போ உணர்வுகளுக்கு ஏற்ப பிரிச்சிக்கறோம்.

      நீக்கு
  3. எல்லா பள்ளிக்கூடங்களிலும் இப்படித் தானோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! எல்லா பள்ளிக்களிலும் இப்படித் தானோ என்று சகஜமாயிடுத்தே? அப்ப, திகில் விட்டுப்போச்சு. இல்லையா?..

      நீக்கு
  4. இந்த டிரில் மாஸ்டரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைக்கு இன்னும் கிட்ட நெருங்கி வந்திட்டீங்களே!.. ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி வேறே தட்டுப்படறது.

      இந்தக் கதைலே டிரில் மாஸ்டர். இன்னொருத்தர் கதைலே சர்க்கஸ் ரிங் மாஸ்டரா இருக்கலாம்.

      சில குணங்களைத் தான் நாம் மனுஷ ரூபத்திலே வகைப்படுத்தறோம், போலிருக்கு.

      நீக்கு
  5. விநாயகத்தின் கோலத்தை அலங்கோலம் ஆக்கிய டி.மா!(?)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

      அதுதானே கதை, திரும்பணுமே.
      அடப்பாவமே பள்ளிகளின் வழக்க வம்பில்
      மாட்டிக் கொண்டார்களா.
      வினாயகம் வேறு இந்தக் கோலத்தில்.

      என்ன தான் நடந்திருக்கும். பிரேமா, இவர்களைப் பற்றி அவனிடம் கேட்டிருப்பாளோ.
      அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டியதுதான். ஜீவீ சார்,
      ஒவ்வொரு வார்த்தையும் கட்டுக் கோப்பாகப் பாடம் சொல்கிறது.
      நன்றி சார்.

      நீக்கு
    2. @ துரை செல்வராஜூ

      //விநாயகத்தின் கோலத்தை அலங்கோலம் ஆக்கிய டி.மா!(?).//

      காலி இடத்தைப் பூர்த்தி செய்யணுனா, டிரில் மாஸ்டர்ன்னு நிரப்பலாம். டிராமா என்றும் நிரப்ப வாய்ப்பிருக்கு. பூவுலக நடவடிக்கைகளே டிராமா போலத் தான் இருக்கு. அடுத்த அத்தியாயம் எப்படிப் போறதுன்னு பாக்கலாம்...

      நீக்கு
    3. @ வல்லி சிம்ஹன்

      வம்பு, வழக்கு எல்லாமே ஒரு விஷயம் நடந்து முடிவதற்காக இட்டுச் செல்லும் வழித்தடங்கள் தானே வல்லிம்மா?

      'கட்டுக்கோப்பான பாடம்'-- நன்றி, வல்லிம்மா.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள். கொரோனாவை விரட்டும் அரசுடன் ஒத்துழைத்துக் கூடிய விரைவில் கொரோனாவை ஒழித்துக் கட்டுவோம். விரைவில் இந்த ஊரடங்கிலிருந்தும் விடுதலை பெறுவோம்.

    பதிலளிநீக்கு
  8. கதை நினைத்த திக்கில் செல்கிறது. ஆனால் ஒரு சந்தேகம். இப்படி ஓர் வேற்றுப் பெண்ணிடம் தன் மனதைத் திறந்தவருக்குத் தன் காதலியிடமே நேரில் சொல்லும் துணிவு இல்லாமல் போனது ஓர் குறையாகத் தெரிகிறது, எனக்குத் தெரிந்து பெரும்பாலும் தூது போகும் காதலில் கஷ்டங்கள் அதிகமோ என்றும் தோன்றுகிறது. ஆனால் இந்த விநாயகம் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலர்களுக்கு இடையில் தூது போகலாம், ஒருத்தர் மிக நல்லவராக இருந்தால். ஆனால் bond establish பண்ண தூது அனுப்புவதா? ஹா ஹா ஹா. வாய்ப்பே கிடையாது. (கைகூட)

      நீக்கு
    2. @ கீதா சாம்பசிவம்

      //நேரில் சொல்லும் துணிவு இல்லாது போனது ஒரு குறையாகத் தெரிகிறது..??

      நேரில் சொல்வது என்பது துணிவு வகைப்படுமா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அது தன் மனம் நினைக்கிற வாக்கில் எதிர் தரப்பினரின் நிலையைக் கருத்தில் கொள்ளாது செயல்படுவதாக அமையலாம். அதுவும் அது பெண்ணாக இருக்கும் பட்சத்தில்
      அவர் நுண்ணிய உணர்வுகள் படைத்தவராய் இருப்பின் அவரை டிஸ்டர்ப் (அமைதி இழக்கச்) செய்வதில் முடியலாம். அதனால் தான் நிரம்ப யோசனையுடன் நேரடி அப்ரோச்சை கூடிய மட்டும் தவிர்த்து எதிர்தரப்பினருக்குத் தெரிந்தவர், அணுக்கமானவர் நமக்கும் வேண்டப்பட்டவராய் அவர் இருப்பது -- என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. பச்சை விளக்கு தட்டுப்படும் பட்சத்தில் தான் நுண்ணிய காதல்கள் வேகமெடுக்கும். இல்லாத பட்சத்தில் தன்னுள்ளேயே குமுறும். தாடி வளர்க்கும். கவிதை எழுதும். இன்னும் என்னவெல்லாமோ.

      காதல் வெற்றினாலும் கவிதை கொப்பளிக்கும். இல்லைனாலும் இழந்த சொர்க்க கவிதை தான்.
      (Paradise lost) தான்.

      நீக்கு
    3. விநாயகத்திற்கு வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் மனசுக்குப் பிடித்தால் வாழ்த்தத் தவறியதில்லை, நீங்கள்.
      அடுத்த பகுதியையும் வாசித்து உங்கள் மனசில் படுவதைச் சொல்லி விடுங்கள், கீதாம்மா.

      நீக்கு
  9. வணக்கம் ஜீவி சகோதரரே

    கதை நன்றாக நகர்கிறது. தன்னை விநாயகம் அக்கா என்றழைப்பதின் காரணத்தை தெரிந்து கொண்ட அடுத்த நொடி விநாயகத்தின் காதல் கோரிக்கையா? சுவாரஸ்யமான திருப்பம்.

    நம் மக்கள் வம்பு பேச தயங்குவதில்லை. அதிலும் கண் மூக்கு வைத்து வம்பை திரித்து வளர்த்து விடாமல் அவர்களால் இருக்கவே முடியாது என்பதற்கு டிரில் மாஸ்டர் ஒரு உதாரணம்.

    அடுத்தடுத்த நிகழ்வுகள் தீடிரென ஏற்படுவது போன்று கடைசி கேள்வியுடன் கதை திரும்புவது நன்றாகவும், கூடவே சற்றே பயமாகவும் உள்ளது. அதற்கான காரணத்தை அறிய நாங்களும் அடுத்த செவ்வாய் வரை காத்திருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கோரிக்கை வைக்கத் தான், செயல்படுத்தத்தான் விநாயகம் ஒரு தகுந்த அக்காவைத் தேடியிருக்கிறான் போலிருக்கிறது. அவன் அதிர்ஷ்டம் அதுவும் அமைந்து விட, வெளி உலகம் பார்த்த பார்வை தான் சரியில்லாது போய் விட்டது. எது சரிப்படாத போதும், அதை சரிப்படுத்த வேண்டிய வேலை அடுத்த கட்ட நடவடிக்கை ஆகிப் போகிறது.

      'சமூகம் என்பது நான்கு பேர்' என்ற ஜெயகாந்தனின் நாவல் பிரசித்திப் பெற்றது. தனது எழுத்து சரியாகப் புரிந்து கொள்ளப்படாத போதும் சோர்ந்து விடாமல் 'அக்னி பிரவேசத்தைத் தொடர்ந்து 'சில நேரங்களில் சில மனிதர்கள்' எழுதினார் அவர். தான் படைத்த கங்காவிற்கு தகுந்த நீதி கிடைக்கும் வரை அவர் ஓயவில்லை.

      வாசித்து கருத்து சொன்னமைக்கு நன்றி, சகோ.

      நீக்கு
  10. கதை நன்றாகச் சென்றாலும், விநாயகம் மற்றும் சீதா நடந்துகொள்ளும் முறை தகுந்ததாக இல்லை.

    மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இருவரும் அக்கா தம்பி போர்வையில் சினிமா பீச் என்று சுற்றித் திரிவது எப்படி ஏற்புடையதாக இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, நெல்லை. உங்கள் மனவெளிப்பாடு எனக்குப் புரிகிறது. இந்த மாதிரியான மனசில் படுவதை ஒளிக்கத் தெரியாத, கதையேயாயினும் பாத்திரங்களோடு ஒன்றரக் கலந்து தானடையும் உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்காத நல்ல வாசகர்கள் தான் எழுதுவோரின் அணுக்கத் தோழர்கள். இந்த மாதிரியான வாசகர்கள் இல்லையெனில் எப்படி எதை எழுதினாலும் சவசவத்துப் போய் விடும். எழுதுவோரின் எழுத்து உயிர்ப்புடன் அமைய இந்த மாதிரியான 'பார்வை'கள் தாம் உந்து சக்தியாக அமைகின்றன.
      நன்றி.

      எந்த ஒரு கதையின் நகர்வையும் கதாசிரியர் படைத்த கதை அம்சங்களும் காட்சி நகர்வுகளும் தாம் நகர்த்திச் செல்கின்றன.
      ஆக கதாபாத்திரங்களுக்கு அமையூம் சந்தர்ப்ப சூழ்நிலைகள், எழுதுவோன் அவர்களை கையாளும் விதம் இவைகளே
      கதையை நகர்த்திச் செல்கின்றன. அதனால் வாசகர் தன்னை மாதிரியே பாத்திரப்படைப்புகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் நற்குணங்கள் நல்ல பழக்க வழங்கங்கள் கொண்ட ஒரு வாசகன், ஒரு கதையை வாசிக்கும் பொழுது தனக்குத் தோதான குணங்களே பாத்திரங்களுக்கு அமைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கதா பாத்திரங்களின் செயல்பாடுகளை கதாசிரியர் எப்படி கதையைக் கொண்டு போக வேண்டும் என்று விரும்புகிறாரோ அதற்கேற்ற மாதிரி அமைக்கிறார். அவ்வளவு தான். ரொம்ப சிம்பிள். சரியா?..

      அடுத்த படியாக உங்கள் வாசிப்பைப் பற்றி. ஒரு நீண்ட கதையை வாசிக்க நேர்ந்தால் இரண்டு மூன்று அத்தியாயங்கள் வாசித்தவுடன் டக்கென்று அந்தத் தொடரின் முடிவுப் பகுதியைப் பார்ப்பது எனது வழக்கம் என்று நீங்கள் சொல்லியிருப்பது இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது.

      இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி. இந்தக் கதை எப்படிப் போனாலும் அந்த முடிவில் தான் அமையப் போகிறது என்று முன்னாலேயே தெரிந்து கொள்வதில் ஏற்படும் ஆர்வமா இது?.. அல்லது கதை போக்கு எப்படி இருந்தாலும் அந்த முடிவுக்கு ஏற்ற மாதிரி உங்கள் வாசிக்கும் மன நிலையை அமைத்துக் கொள்வீர்களா?

      இந்தக் கதையையே எடுத்துக் கொள்ளுங்க்கள். விநாயகம் தன் காதலில் தோல்வியடைகிறான், அல்லது தன்னை மாய்த்துக் கொள்கிறான என்று கதையின் போக்கு இருக்கும் என்று கொண்டால், 'எனக்கு அப்பவே தெரியும்.. இவங்க இப்படி சினிமா பீச் என்று அலையும் போதே எனக்குத் தெரியும் இப்படித்தான் நடக்கும் என்று. காதலின் பெயரைக் கெடுக்கவே, இவங்கள்லாம் காதல் செய்ய வந்து விட்டார்கள், பாருங்கள்' என்று நினைத்துக் கொள்வீர்களா?..

      நீக்கு
    2. இப்பொழுது சீதாவும் விநாயகமும் சேர்ந்து சினிமா பார்த்த விஷயத்திற்கு வருவோம்.

      முதல் பகுதியில் விநாயகம் சீதாவிடம் ஒரு கடித்ததைக் கொடுக்கும் பொழுது, கொதித்துப் போனாள் இல்லையா, சீதா?

      அது அந்த நேரத்தில் அவள் மனசின் வெளிப்பாடு, வார்த்தைகளாக வெளிவருகிறது.. போகட்டும்.

      அடுத்தப் பகுதியில் அவளுக்கே விநாயகத்தோடு சேர்ந்து சினிமாத் தியேட்டர் இருட்டில் அதுவும் பக்கத்துப் பக்க சீட்டில் படம் பார்க்கும் பொழுதும் (அது கோபத்தில் வெளிப்படும் வார்த்தைகள் என்றால், இது நிஜ நடவடிக்கை) வேறு மாதிரியான எந்த உணர்வும் அவளை ஆட்கொள்ளவில்லை என்று தெரியப்படுத்தத் தான் அந்த சினிமா காட்சி. அதுவும் சத்யஜித்ரேயின் படம்
      என்று சொல்லி அவளின் கலையுணர்வு வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

      சாதாரணமாக ஒரு சிறுகதையை எழுதும் பொழுது இப்படியெல்லாம் கூர்ந்துப் பார்த்து எழுதும் வழக்கம் இல்லை என்றாலும்
      சீதாவின் பாத்திரம் உங்கள் மனசில் களங்கப்பட்டு விட்டதால் இதைச் சொல்ல வேண்டியதாகிறது.

      நீக்கு
  11. இருவர் பழகும்போது சமூகத்தையும் மனதில் கொள்ளணும் இல்லையா? நான் மனதில் தங்கைபோல நினைத்தேன் என்று ப்ப்ளிக்கில் பெண்ணின் கையைப் பிடித்துப் பேசிக்கொண்டிருக்கலாமா?

    70களிலிருந்து பள்ளிச் சூழலுக்கு நெருக்கமாக இருந்த எனக்கு கதை போகும் பாதை தெரிகிறது. விநாயகம் அசடாகத் தெரிகிறார். சீதா மேலும் எனக்கு மதிப்பில்லை. இப்படிப்பட்ட உணர்வைத்தான் இன்றைய பகுதி எனக்குத் தருகிறது

    பதிலளிநீக்கு
  12. காதலைச் சொல்ல தூதா? நல்ல வேடிக்கை.

    பதிலளிநீக்கு
  13. முதல் பகுதியைவிட இந்தப் பகுதி என்னை நெருக்கமாக ஈர்த்துவிட்டது. உறவு முறை அல்லது நட்பு முறை என்ற எந்த நிலையில் இருந்தாலும் நம்மைவிட வயதான பெண்மணி நம்மிடம் காட்டும் பரிவு, நம் வாழ்வின் குறைகளை இலகுவாக்கிவிடும் என்பதை முற்றிலும் உணர்கிறேன். உடன் பிறவா சகோதரியாக, தாய் போல, எந்த வகையிலும் பொருத்த முடியாத பெண்மணியாக நான் பழகிய மதித்த பெண்மணிகள் பலர் நான் வாழ்வில் முன்னுக்கு வர உதவியாக இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஜம்புலிங்கம் ஐயா, உங்கள் உள்மன உணர்வை தகுந்த நேரத்தில் பகிர்ந்து கொண்ட அன்புக்கு மிகவும் நன்றி.
      அதை வாசித்ததும் மிகவும் நெகிழ்ந்து போனேன். இதை இந்த இடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்களே, அது தான் பெரிய விஷயம். என் வாழ்க்கையிலும் இப்படியெல்லாம் நிறைய நடந்துள்ளான.
      ஒரு கொடி தாவித் தாவிப் படரக் கூட கொழுகொம்பு தேவையாக இருக்கிறது.
      வாழ்க்கையில் வளர்ச்சி என்றால் அது லேசு பட்ட காரியமும் இல்லை. நன்றி, ஐயா.

      நீக்கு
  14. இனிய காலை வணக்கம்.

    அடடா... தற்கொலை எண்ணங்கள் தவறாயிற்றே! என்ன நடக்கப் போகிறதோ? அடுத்த செவ்வாய் வரை காத்திருக்க வேண்டுமா? காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீரான வேகத்தில், தெளிவான நடையில் செல்கிறது கதை. விநாயகத்தின் நிலைக்கு காரணமாக நான் நினைப்பது கதாசிரியரின் கற்பனையோடு ஒத்துப் போகிறதா என்று தெரிந்து கொள்ள அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டும் இல்லையா? 

      நீக்கு
    2. @ வெம்கட் நாலராக்

      தற்கொலை எண்ணம் தவறு தான். அந்த நிலைக்கு விநாயகமும் தள்ளப்பட்டிருக்கக் கூடாது தான்.

      @ பா.வெ.

      என் கற்பனையோடு ஒத்துப் போகவில்லை என்றாலும் அடுத்த செவ்வாய் வாசித்து விட்டுச் சொல்லுங்கள்.
      ஏன் சொல்ல வேண்டும்?.. வேறொரு கதை எழுதும் பொழுது உதவலாம் என்பதினால். நன்றி, பா.வெ.




      நீக்கு
  15. பதில்கள்
    1. வாங்க, டி.டி. அடுத்த பகுதியையும் வாசித்து விட்டு விவரமாகச் சொல்லுங்கள்.
      உங்களுக்கு அந்த நேரத்தில் ஒரு குறளும் கிடைக்கும். அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

      நீக்கு
  16. கதை போக்கில் சந்தேக மேகங்கள் சூழ்ந்து விட்டதே!
    சந்தேகம் வந்து விட்டதோ மற்றவர்களை போல் பிரேமாவிற்கும்.
    அதுதான் விநாயகத்தின் தற்கொலை கேள்வியோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேக மேகங்கள் என்றால் அதற்கென்றே வாய்த்த இயல்பு லேசில் கலையாது.
      கருமேகங்கள் என்றாலும் கொட்டித் தீர்க்கும்.
      உங்கள் மன்சில் படுவதைச் சொல்லியிருக்கிறீர்கள். பார்க்கலாம், கோமதிம்மா.

      நீக்கு
  17. பின்னூட்டங்கள்கதையை நகர்த்திசெல்ல உதவலாம் அதுவும் ஆசிரியரின் எண்ணமாகவும் இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, ஜிஎம்பீ ஐயா.
      எங்கள் பிளாக்கின் செவ்வாய்க் கிழமை கதைகள் முன் கூட்டியே மொத்தக் கதையையும் எழுதி அனுப்புவது.
      அதுவும் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே எழுதிக் கொடுத்தது என்று நினைக்கிறேன். அதனால் பின்னூட்டங்களின் அடிப்படையில் கதையை வளர்த்துவதற்கு வழியில்லை.
      நீங்களும் இந்தப் பகுதிக்கு ஒரு சிறுகதையைக் கொடுக்கலாமே?..

      நீக்கு
  18. விநாயகத்தின் செயல் நாயகன் போலில்லையே... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாயகன் என்பதற்கு உங்கள் மனசில் உருவாக்கி வைத்திருக்கும் உருவகம் புரிகிறது. சினிமாக் கதாநாயகர்களுக்கு வேண்டுமால் அது சரிப்பட்டு வரலாம்.

      ஆனால் இரக்கம். நெகிழ்ச்சி, சட்டென்று குழைந்து போதல் -- இதெல்லாம் காதல் விஷயங்களில் எதிர்பாலாரை மிகவும் வசப்படுத்தும் உணர்வுகள். பெண்பாலார் மிகவும் நேசிக்கும் குணங்கள். இவர்களிடமிருந்து தான் எந்த சமயத்திலும் அன்பு சுரந்து கொண்டே இருக்கும் என்று பெண்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

      ஆகவே மென்மையான குணம் படைத்தவர்கள் காதலில் மிகச் சுலபமாக வெற்றி பெறுகிறார்கள். ஆகவே தான் அவர்களே இயல்பான வாழ்க்கைக்கான கதைகளின் நாயகர்கள் ஆகிறார்கள்.

      நீக்கு
  19. விநாயகத்தின் தற்கொலை எண்ணத்திற்குக் காரணம் அந்த வம்புப் பேச்சு தான் காரணமா? வேறா அறிய தொடர்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதிக் கதையிலேயே இப்படி ஒரு நேரடியான ஒரு கேள்வியைப் போட்டால் எப்படி, சகோ?..

      நீக்கு
  20. முதல் பகுதியும் வாசித்துவிட்டேன். கதை நன்றாகச் செல்கிறது. முடிவு என்னவாக இருக்கும் என்று ஒரு யூகம் எழுதிறது. தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம துளசிதரனா?.. வாங்க, வாங்க..

      உங்கள் யூகம் அனேகமாக சரியாக இருக்கலாம். அடுத்த பகுதியில் ஏன் அப்படி யூகம் கொண்டீர்கள் என்பதையும் நிச்சயம் பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

      நீக்கு
  21. தனித்தனியாகப் பின்னூட்டங்களுக்கு பதிலளித்தால் அது கோர்வையாக அமையாது போய்விடும் என்ற ஆபத்து இருப்பதால் பொதுவான ஒரு கருத்துப் பரிமாற்றமாகவேனும் சிலவற்றைச் சொல்ல ஆசைப்பட்டேன்.

    என்னை நெகிழ வைத்த பெரியவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு நமஸ்காரத்தைத் தெரிவித்துக் கொண்டு ஆரம்பிக்கிறேன்.

    சமூகத்தையே ஆண் - பெண்ணாக இரண்டே கூறுகளாகப் பகுத்துப் பிரித்துப் பார்ப்பதும் ஆண் என்றால் இப்படி, பெண் என்றால் இப்படி என்று அவர்கள் நடவடிக்கைகளை சதா சர்வ காலமும் கண்காணிக்கும் தோரணையில் விமரிசனங்களுக்கு உள்ளாக்குவதும் ரொம்ப பழந்தலைமுறைகளுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம்.

    குறைந்த பட்சம் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் நெருங்கிப் பழகவே கூடாது என்ற கட்டுப்பாடுகளைத் தாண்டி வந்து விட்டோம். பழக்கம் என்று வந்த பிறகு ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்வது, ஒருவர் பிரச்னையை இன்னொருத்தர் காது கொடுத்துக் கேட்பது, தீர்த்து வைப்பது, ஆலோசனை சொல்வது, நண்பராக இருப்பது, ஒருவர் வளர்ச்சியில் இன்னொருவர் பங்கு கொள்வது போன்ற நடைமுறை சாத்தியப்பாடுகளை என்றோ அடைந்து விட்டோம்.

    ஆணுக்குப் பெண் தோழியாக இருக்கக் கூடாதா? யார் சொன்ன
    து? சோழ மன்னன் இராஜேந்திரனுக்கே ஒரு பெண் தோழியாக இருந்து அவனை வழி நடத்தியிருக்கிறாள். பரவை நாச்சியார் என்று அவளுக்குப் பெயர். அந்தக் காலத்தில் இந்த மாதிரி அரசன் தோழிகளுக்கு அனுக்கி என்று பெயர். பெரிய பெரிய மரியாதைகளெல்லாம் அவர்களுக்கு உண்டு.

    இந்தக் காலத்து திருமணங்களில் பார்க்கலாம். ஆண்களுக்கு அலுவலக பெண் தோழிகள் அதிகம். ரிஷப்ஷன் வரவேற்பில் ஆணுக்கு பெண் தோழிகள் பரிசளிக்கிறார்கள். தன் வருங்கால மனைவிக்கு ஆண் அவர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறான். "சினிமான்னா நாங்க ஒண்ணாப் போய் கொட்டமடிப்பது தான் வழக்கம்.." என்கிறான். அவர்களில் தன்னை விட அழகான ஒருத்தியையும் தன் வருங்கால கணவனையும் இணைத்துப் பார்த்து அந்த மணமகள் முகம் சுருங்கினால் அது எத்தனைப் பைத்தியக்காரத்தனம்? அதே மாதிரி தான் மனைவியின் ஆண் நண்பர்களைப் பார்த்தும். vice versa.

    ஒரு திருமணத்திற்கு போயிருந்தேன். மணமகனும் மணமகளும் மேடையில். மேடைக்கு கொஞ்சம் தள்ளி பைஜாமா - ஜிப்பாவோடு ஒரு வாலிபன் வாட்ட சாட்டமாக நின்று கொண்டு அடிக்கடி கர்ச்சீப்பால் கண் கலங்கலைத் துடைத்துக் கொண்டே இருந்தான்.

    என் பக்கத்தில் இரு பெரியவர்கள். ஒருத்தொருக்கொருத்தர் பேசிக் கொண்டார்கள்..

    "அந்தப் பையனைப் பார்த்தையா?.. கண்ணைக் கண்ணைத் தொடச்சிக்கிறான், பாரு.."

    "நானும் அதைத் தான் யோசிச்சிண்டு இருக்கேன். ஒருகால் கல்யாணப் பெண்ணுக்கும் இவனுக்கும் காதல் - கீதல் ஏதாவது இருக்குமோ? எந்தப் புத்தில் எந்தப் பாம்போ?.. யார் கண்டார்கள்?.."

    கொஞ்ச நேரத்தில் ஜூஸ் கோப்பைகளை வழங்கிக் கொண்டே ஒருவர் வந்தார். அந்தப் பெரியவர்களில் ஒருவர் பொறுக்க மாட்டாமல் கேட்டே விட்டார்.. அந்தப் பையனைக் காட்டி, 'யார் இது, தெரியலையே"ன்னு.

    "அவனைத் தெரியாது?.. நம்ப நாணா. ஜெயஸ்ரீக்கு தம்பி.." என்று சொல்லிக் கொண்டே போனார். மணமகளின் பெயர் ஜெயஸ்ரீ.
    தம்பி நாராயணுக்கு அக்கா மேல் அவ்வளவு பாசம். அக்கா இன்னொரு வீட்டுக்குப் போய் விடுவாளே, என்று வருத்தம்.

    பெண் - அப்பாவுக்குக் கூட ஒரு டிஸ்டன்ஸை மெயிண்டைன் பண்னுகிற சில குடும்பங்களையும் பார்த்திருக்கிறேன். வயசுக்கு வந்த பெண்ணை அப்பா தொட்டுப் பேச மாட்டார். கொஞ்சல், கிண்டல் எல்லாம் இருக்காது. பெண்ணின் இரகசியங்கள் எல்லாம் அவள் அம்மாவுக்குள்ளேயே அடக்கம்.

    இந்த மாதிரி விலக்கல்களின் தீவிரம் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கும் பொழுது கூட அப்பா மடியில் உட்காரும் சடங்கு கூட நாளா வட்டத்தில் சட்டு புட்டுனு அல்லது இல்லாமலேயே பண்ணி விடுவார்கள் போலிருக்கு.

    பாவம், அப்பாக்கள். அப்பாவை யாரு ஆணாகப் பிறக்கச் சொன்னது என்று கேட்கிறீர்களா, நியாயம் தான். :))

    பதிலளிநீக்கு
  22. காளிதாசன் மேகத்தையே தூது விட்டிருக்கிறான்.
    தமயந்தியைக் கேட்டால் நான் அன்னத்தை என்பாள்.
    கிளியைத் தூது விட்டிருக்கிறார்கள்.
    சமாதானத்திற்கே சின்னம் புறா. புறா விடு தூது பிரச்சித்தமானது.
    விறலி விடு தூது. கூளப்ப நாயக்கனின் அட்டகாசமான நூல்.
    தென்றலைத் தூது விட்டிருக்கிறார்கள்.
    தூது விடுதல் என்றே சிற்றிலக்கியத்தில் ஒரு பகுதி உண்டு. தூது விடுவதற்கு எதெல்லாம் இலாயக்கானவை என்றே வகுத்திருக்கிறார்கள். அதற்கான தொல்காப்பிய சூத்திரத்தில் முதலில் வருவது தோழி.

    'தூது செல்ல ஒரு தோழி இல்லையென்று
    துயர் கொண்டாயோ தலைவி?'.. - என்றே திரைப்படப் பாடல் உண்டு.

    தலைவிக்கு தூது செல்ல தோழி சரி. இந்தக் கதையில் தலைவனுக்கு அல்லவோ தோழி -- என்ற கேள்வி எழுமானால் அங்கே தான் வருகிறது ஆண் - பெண் உறவில் நாம் கொள்ளும் பேதங்கள்.

    பதிலளிநீக்கு
  23. அழகாக நகர்கிறது..இம்முறையும் நல்லதொரு திருப்பத்துடன்....

    தொடரும் போட்டு விட்டீங்கள்:)...

    பதிலளிநீக்கு
  24. இன்னொரு அத்தியாயம் இருக்கிறது அல்லவா?.. அதனால் தான் நல்ல இடத்தில் தொடரும் வந்தது, அதிரா!

    நீங்கள் வாசித்து விட்டதில் சந்தோஷம், சகோ.

    பதிலளிநீக்கு
  25. "தற்கொலையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அக்கா?...." ... இது என்னா அசட்டுத்தனமான கேள்வி ... நீ அந்த பிரேமாவை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவின் மற்றொரு பெயர்தான் தற்கொலை... அது இருக்கட்டும் இப்போ நீ வந்ததற்கான காரணத்தை சொல்லு தம்பி ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!