செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை. சங்கிலி -- ஜீவி

  சங்கிலி   
                                                                         -                                   
                                                                       --  ஜீவி

றிவுடைநம்பி ரொம்பவும் சுவாரஸ்யமான மனுஷன். எங்கள் தெருக்கோடியில் 'ஆட்டோமொபைல் வொர்க் ஷாப்' வைத்திருக்கிறான். என்னிடம் ஒரு 'இரண்டாம் கைமொபெட் இருக்கிறது. அதற்கு அடிக்கடி வரும் 'நோவு'க்கெல்லாம் கைகண்ட மருந்து தரும் வைத்தியன் அறிவுடைநம்பி தான்.

முதல்முறை என் வண்டியை அவனிடம் ரிப்பேருக்குக் கொண்டு போனபோது, "ஸ்டார்ட் ஆகலேப்பா.." என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி வைத்தேன்.

"ஸ்பார்க் ப்ளக் க்ளீன் பண்ணீங்களா?.." என்று கேட்டுவிட்டுக் கீழே குனிந்தான்.

"எல்லாம் பண்ணியாச்சு.. எதுக்கும் நீயே பாரேன்.." என்று சொல்லி வைத்தேன்.

அதற்குள் அறிவுடைநம்பி, வண்டியைத் தனது 'கேர் ஆஃப்'பில் எடுத்துக்கொண்டு விட்டான். இரண்டே ஆயுதங்கள்.. ப்ளக்கைக் கழற்றி உள்ளே பார்த்தான். "என்ன சார், நீங்க... க்ளீன் ப்ண்ணினதா சொன்னீங்க.. எப்படி கரி அடைச்சிருக்கு பாத்தீங்களா?.." என்று அந்த இரும்பு சமாச்சாரத்தை, என் மூக்குக்கு நேரே நீட்டினான்.

நான் பதிலே பேசவில்லை.

நம்பி செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.   உப்புக்காகிதத்தை எடுத்து, பிளக்குக்குள் 'மறமற'வென்று தேய்ப்பு. கறுமை துடைத்த பளபளப்பு தெரிந்ததும், ப்ளக்கைப்
பழைய இடத்தில் பொருத்தி, ஒரே ஒரு மிதியில் ஸ்டார்ட் பண்ணி விட்டான்.

என் முகத்தில் பரம திருப்தி. பாவி.. எத்தனை உதை உதைத்திருப்பேன்?.. கிளம்புவேனா என்று சத்தியாகிரகம் பண்ணியதே?..

பர்ஸை வெளியே எடுத்து, "எவ்வளவு தரட்டும்?.." என்றேன், நன்றியோடு.

"வாணாம் சார்..." என்று மறுத்துவிட்டான் நம்பி. "இதெல்லாம் சிம்பிள் வொர்க் சார்.. நீங்களே செஞ்சிருக்கலாம்.." என்று 'அட்வைஸ்' செய்தவன்,"பெரிய வொர்க்கா கொடுங்க,சார்! சந்தோஷத்தோடு க்ளீனா செஞ்சு தந்து,துட்டு வாங்கிக்கறேன்.." என்று பெரிய மனுஷத்தனமாகச் சொன்னான்.

----

ரே மாதத்தில் அவன் 'யாசித்த' அந்தப் பெரிய வொர்க்--வியாதி--வண்டிக்கு வந்துவிட்டது. சாலை மேட்டுப்பகுதிகளைக் கண்டால், ஜட்கா வண்டி மாதிரி மக்கர் செய்தது. அங்குலம் அங்குலமாக அதை அவ்வப்போது மேடு ஏற்றுவதற்குள் உன்பாடு என்பாடு என்றாகி விட, அறிவுடைநம்பியிடம் தஞ்சம் புகுந்தேன்.

பக்கத்தில் கிடந்த முக்காலியில் என்னை உட்காரச்சொல்லி விட்டு, மளமளவென்று வேலையைத் தொடங்கினான் நம்பி, நடுநடுவே என்னோடு பேச்சுக் கொடுத்தபடி.

"வண்டி வாங்கி எவ்வளவு காலம் சார் இருக்கும்?" என்று கேட்டான்.

"எங்கிட்டே வந்து ரெண்டு வருஷமாச்சு.. என்கிட்டே வித்தவங்ககிட்டே ஒன்னரை வருஷமோ, ரெண்டு வருஷமோ ஓடினதா சொன்ன ஞாபகம்..."

"அதானே பார்த்தேன்.." என்று யோசனையுடன் இழுத்தான் நம்பி. "வண்டி இன்ஜின் பின் அடிவாங்கியிருக்கு..  உள்ளே பார்ட்ஸ் எல்லாம் நொறுங்கிடுச்சு..இப்போ செலவு செய்யலேன்னா, இன்னும் மோசமா இன்ஜின் அடிவாங்கிடும்.."

இன்ஜின் வாங்குமோ வாங்காதோ, நான் பட்ட அடி மிகப்பெரிசு! ஆயிரம் ரூபாய்க்கு மேல், ஸ்பேர்பார்ட்ஸே ஆகிவிட்டது! இதுக்கு மேலே நம்பிக்கு லேபர் சார்ஜ். நூற்று எண்பது கேட்டான்."அது என்ன   நூற்றெண்பது?...  இருநூறாகவே வாங்கிக்கோ!" என்று நம்பிக்கு இருபது போட்டுக் கொடுத்தேன்.

"ரொம்ப தாங்க்ஸ் சார்.."என்று சந்தோஷத்துடன் வாங்கிக்கொண்ட நம்பி,"எது ஒண்ணுன்னாலும் சொல்லுங்க சார்.. பிரமாதமா சரி பண்ணிக் கொடுத்திடறேன்.."என்றான்.  கூடவே, "இது மாதிரி வண்டிங்களே இப்படித்தான் சார்! செலவு வெச்சுக்கிட்டே இருக்கும்.. ஆமா.." என்று தன் தொழில் ஞானத்தையும் வெளியிட்டான்.

என்னிடம் துட்டு வாங்கிய ராசியோ என்னவோ, ரெண்டு நாட்களாக நம்பி கடையைத் திறக்கவில்லை.

மூன்றாம் நாள், தூரத்தில் என்னைப் பார்த்ததுமே கடைவாசலில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்தான்.

வண்டியை நிறுத்தி,"என்னப்பா,ரெண்டு நாளா கடை தொறக்கலையா?..மூடிக் கெடந்ததே?.." என்றேன்.

"ஆமா சார்.. ஒடம்புக்கு சொகமில்லே..."என்று துக்கத்துடன் சொன்னான். ஆளும் அரை ஆளாக மாறியிருந்தான். அவனைப் பார்க்கவே எனக்குப் பாவமாக இருந்தது.

"என்ன ஜூரமா...?" என்றேன்.

"இல்லே சார்! உங்க வண்டியைச் சரிபண்ணிக் கொடுத்திட்டு அன்னிக்கு வீட்டுக்குப் போனேனுங்களா.. இடுப்புப் பக்கம் ஏதோ வலிக்கற மாதிரி இருந்தது.  கவுந்து படுத்துக்கிட்டு, சம்சாரத்தை மிதிக்கச் சொன்னேன்.. ரெண்டு மிதி மிதிச்சிருக்க மாட்டா.. அவ்வளாவுதான் சார்.. அப்போலேர்ந்து இடுப்பிலே பயங்கர வலி சார்.. விட்டுவிட்டு வருது.. உயிரே போகிற மாதிரி.." என்றான்..

"டாக்டர் கிட்டே காட்டினியா..?"

"காட்டினேன் சார்..."என்று அவன் கடைக்குப் பக்கத்திலிருக்கும் க்ளினிக்கைக் காட்டினான். மாலை நேரத்தில் மட்டுமே விஜயம் செய்யும் அரசு மருத்துவர்.

"என்ன சொன்னார்..?"

"ஊசி போட்டார் சார்..    மாத்திரை எழுதிக் கொடுத்தார்.. மருந்தே ஐநூறுக்கு மேலாயிடுச்சி.. "

"வலி வாங்கிடுச்சா?.."

"இல்லையே.. ஸ்கேன் பாத்துட்டு வரச்சொன்னார்.."

"ஸ்கேன் எடுத்துக்கிட்டியா?.."

"இந்த டாக்டரோட தம்பி தான் அண்ணா அரங்கம் பக்கத்திலே லேப் வெச்சிருக்காராம்... அங்கேயே போய் எடுத்திட்டு வரச்சொல்லி சீட்டு கொடுத்தாரு.. எடுத்திட்டேன்.. அதுக்கு அறுநூறு ஆச்சு! ஏதோ வயத்துலே உப்புக்கட்டி இருக்குதுங்களாம்... கரைக்கணுமாம்.. அதுக்கும் மருந்து கொடுத்திருக்கார்.. தினமும் ஊசி வேறே.. டெய்லி டாக்டருக்கு  நூறு  ரூபா சார்.. வலி குறையற மாதிரி காட்டிட்டு, திருப்பியும் கபால்னு வந்துடுது!..."

"டாக்டர் கொடுத்த மருந்து சீட்டு இருக்கா?.." என்று கேட்டேன்.

அவன் தந்த பிரிஸ்கிரிப்ஷனை வாங்கிப் பார்த்ததும் எனக்கு 'ஐயோ' வென்றிருந்தது.. நான் டாக்டருக்குப் படிக்கவில்லையே தவிர, அநாவசியமான பல மருந்துகளை மளிகைக்கடை லிஸ்ட் மாதிரி டாக்டர் எழுதிக் கொடுத்திருக்கிறார் என்பது மட்டும் 'பளிச்'சென்று புரிந்தது.

"சரியான டாக்டரைப் பிடிச்சேப்பா.." என்று அலுத்துக் கொண்டு,'அதெல்லாம் போகட்டும்.. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இந்த டாக்டரோட டூவீலரை, நீ ரிப்பேர் பார்த்தே இல்லியா?.." என்று சந்தேகத்தோடு கேட்டேன்.

"ஆமா சார்.. படுபேஜாரான வேலை சார், அது!... ஸ்பீடாமீட்டர்லேந்து சைலன்ஸர் வரை மாத்திக் கொடுத்தேன்.. டாக்டரே அசந்திட்டார். பிரமாதம்ப்பா...வண்டி இப்போ அருமையா போறது'னு என் தொழில் திறமையைப் பாராட்டினார் சார்!" என்றான் நம்பி.

"டாக்டருக்கு அவரோட வண்டி ரொம்ப செலவு வெச்சிடுச்சோ?.."

"பின்னே.. ஏழாயிரத்துக்கு மேலே எகிறிடிச்சே.."

"ஒகோ.. அதான் விஷயம்.. ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கிப்போட்டது போக ஒன்னோட லேபர் சார்ஜ் வேறே.." என்று இழுத்தேன்..

"எனக்கு ஆயிரம்.." என்று கூசாமல் சொன்னான் நம்பி.

"சரிதான்.." என்றேன்.

தனது தொழில் திறமையைக் காட்டி டாக்டரிடம் நம்பி பணம் பிடுங்க, டாக்டர் தனது தொழில் திறமையை நம்பியிடம் காட்டிவிட்டார்.

நமது அநியாயமான இழப்புகளுக்கும் அல்லது வரவுகளுக்கும் ஏதோ சங்கிலித் தொடர்பு இருக்கிறதோ?...

'நான் யாரிடம் அநியாயமாகப் பெற்றேன், நம்பியிடம் இழக்க...'என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

============================

42 கருத்துகள்:

  1. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. ஒன்றும் புரியவில்லை...
    உழைத்ததற்கான ஊதியம் கூட
    உடலில் ஒட்டாதோ...

    இந்தக் கூலி அதிகம்.. இது குறைவு என்று தீர்மானிப்பது எது? யார்?..

    உண்மையில் அறிவுடை நம்பி
    அறிவிலா நம்பியா!..
    அதிர்ஷ்டமிலா நம்பியா?..

    பதிலளிநீக்கு
  3. அன்பு துரை, அன்பு ஸ்ரீராம் மற்றும் வரப்போகும் அனைவருக்கும் இனிய ஆடி செவ்வாய்
    வாழ்த்துகளும் வணக்கங்களூம்,.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்று ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி. கிச்சாப்பயலின் பிறந்த நாளில் அனைவருக்கும் நன்மை பிறக்கட்டும். உலகத்தோர் அனைவரும் துன்பங்களில் இருந்து விடுபடட்டும். கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு செப்டம்பர் 9ம் தேதி (முனித்ரய. மடம் செப் 9ஆ அல்லது 10ஆன்னு பார்க்கணும்)

      நீக்கு
  5. காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததுபோல் ஆயிற்று. டாக்டரையும், மெக்கானிக்கரையும் முடிச்சு போட்டது.

    பதிலளிநீக்கு
  6. சங்கிலி மாதிரி ஒன்றோடொன்று தொடர்பு கொண்டதாக நினைக்கத் தோன்றினாலும் மனது அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அறிவுடை நம்பிக்கு மட்டும் இப்படின்னா மற்றத் தொழிலாளர்கள்? வண்டிகளை ரிப்பேர் பார்க்கும் அநேகத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் தேவைக்கு மேல் கூடப் பணம் வைத்து வாங்குகிறவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கும் இதே அனுபவங்கள் கிட்டுமா? அதே போல் பல மருத்துவர்களும் இப்படித் தான் எக்கச்சக்கமாக மருந்துகளை எழுதித் தருகின்றனர். அன்றும் இன்றும் என்றும். ஒண்ணும் புரியலை. இதை ஓர் அறிவுரையாக ஏற்றால் மற்றவை பற்றிக் கேள்விகள் எழுகின்றன. இம்மாதிரி எல்லோருக்கும் நடைபெற வேண்டுமே! உலகிலேயே அறிவுடை நம்பி மட்டும் தான் இப்படி ஏமாற்றிப் பணம் பிடுங்கிவிட்டு அதை மருந்துகளாகவும், மாத்திரைகளாகவும், மருத்துவருக்குக் கொடுக்க வேண்டிய பணமாகவும் செலவு செய்கிறானா? கடவுள் பாடம் கற்பிக்க அறிவுடை நம்பியை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கார் போலும்!

    பதிலளிநீக்கு
  7. ஜீவி சார்,

    கதை உழைப்பாளி, வண்டிக்குரியவர்
    லெவலில் இருக்கிறது.
    நான் நம்பி பக்கம்தான் பேசுவேன்.

    பெரிய வேலையைக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
    வண்டியும் வெளினாட்டு வண்டியாக இருக்கும்.

    அதற்கான ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாமே
    தேடி வாங்கவேண்டும். பம்பாயிலிருந்து வரவழைக்க வேண்டும்.

    இதேபோல நமக்கு நஷ்டத்தில் முடியும்.

    மருத்துவருக்கு நஷ்டம் என்று தோன்றினால்
    முன்பே விளக்கி இருக்க வேண்டும்.
    இந்த நம்பியை இழுத்தடித்து செலவு வைத்து விட்டாரே,

    இப்படித்தான் நடக்கிறது போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. உலகில் அடாவடி வைத்தியர்களும் உண்டு.
    அடாவடி தொழிலாளர்களும் உண்டு.
    நம்பி முதலில் கதை நாயகனின் வண்டிக்கு
    சார்ஜ் செய்யவில்லையே.
    மருத்துவரை முதலில் பார்ப்பதற்கே
    பணம் கேட்பார்.

    பதிலளிநீக்கு
  10. கதை, சொல்லவந்த கருத்தை, தவறான கதாபாத்திரங்களை வைத்துச் சொல்லிச் செல்கிறது.

    பாதிக்கதை வரை படிப்பவர்கள் அறிவுடை நம்பி, வறுமையில் செழுமை என்றுதான் நினைப்பார்கள். இவரிடம் அப்படி இருந்தவர் டாக்டரிடமும் அப்படித்தான் நடத்துகொண்டிருப்பார்.


    ஒரு உயர் நிலையில் இருப்பவர்கள், அனேகமா எல்லோரும் எளியவர்களிடம் பண விஷயத்தில் இதமாகத்தான் நடந்துகொள்வார்கள். இங்க, டாக்டர் அளவுக்கு அதிகமா மருந்துகள் எழுதிக் கொடுத்து பணம் பிடிங்கியதுபோல கதைப் போக்கு.

    டாக்டர் தவறு செய்துவிட்டார் என போற வரவனெல்லாம் நினைக்க ஆரம்பிப்பதே (அதாவது இன்னொரு மருத்துவர் அல்லாதவர்) ஒரு மனோ வியாதிதான்.

    எடுத்துக்கொண்ட கருத்தை (அழக்கொண்ட எல்லாம் அழப்போம்) தவறாகச் சொல்லிய கதை.

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. கதையில், "யாசித்த" "கூசாமல்" என்று நினைத்த தொழில்திறமை அறியாத டாக்டருக்குப் படிக்காத பிச்சைக்காரன், ஒருவேளை மருத்துவர் ஆகியிருந்தால், இதைவிட பெரிய லிஸ்ட் கொடுத்திருப்பான்...!

    மருத்துவம் எல்லாம் சேவை கிடையாது... பணம் உள்ளவன் மருத்துவம் படிக்கலாம்... உயிரைக் காக்கும் கடவுளாகி பணம் பறிக்கலாம்...! மற்றவர்கள் அறிவுடைநம்பி ஆகலாம்... ஓ... இனி குலக்கல்வி அல்லவா...?

    கதை பிடித்திருக்கிறது... புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ற ஒரு சங்கிலித் தொடர்பு...!

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் காலை வணக்கம். ஜீ. வி.சார், நேர்த்தியான அதே சமயம் சிந்திக்க வைக்கும் ஓர் கதை. நம் வாழ்க்கையே ஒரு ச௩்கிலிதானே சார். உறவுகளும், எதிரிகளும், தோழமையுடன், போட்டியும் பொறாமையும் ச௩்கிலி என பிண்ணி பிணைந்திருக்கின்றன.
    நாம் யாவரும் இறைவனுக்கு என்ன அநியாயம் செய்தும் இப்படி அவர் நம்மை நம் வீட்டிற்குள்ளேயே அடங்கும் வைத்து விட்டார். சிந்திப்போம். சரியாக செயல் பட முயல்வோம்.

    பதிலளிநீக்கு
  15. //உப்புக்காகிதத்தை எடுத்து, பிளக்குக்குள் 'மறமற'வென்று தேய்ப்பு. கறுமை துடைத்த பளபளப்பு தெரிந்ததும், ப்ளக்கைப்
    பழைய இடத்தில் பொருத்தி, ஒரே ஒரு மிதியில் ஸ்டார்ட் பண்ணி விட்டான். //

    சுத்தம் செய்து விட்டு காசு பெற்றுக் கொள்ளவில்லை.
    தொழில் தெரிந்தவர் என்று தானே அவரிடம் மீண்டும் போகிறோம் ?

    மருத்துவர் நம் வண்டியை ரிப்பேர் செய்து தந்தவன் அவசர ஆபத்துக்கு உதவும் மனிதர் என்று நியமாய் குறைந்த கட்டணம் தானே வாங்க வேண்டும் .

    //'நான் யாரிடம் அநியாயமாகப் பெற்றேன், நம்பியிடம் இழக்க...'என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்.//

    யாரையும் ஏமாற்றாமல் யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருக்கும் போதும் துன்பங்கள் வருதே! யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

    பதிலளிநீக்கு
  16. ஓஹோ..கணக்கு அவ்வாறு சரிசெய்யப்பட்டதோ?

    பதிலளிநீக்கு
  17. அநாவசியமான பல மருந்துகளை மளிகைக்கடை லிஸ்ட் மாதிரி டாக்டர் எழுதிக் கொடுத்திருக்கிறார் என்பது மட்டும் 'பளிச்'சென்று புரிந்தது.இது அறிவுடை நம்பிக்குஆறுதல் தருமா நமக்கு தெரியாத விஷயம்

    பதிலளிநீக்கு
  18. கதையில் சொல்லாடல் மிக சரளம்.
    "வலி வாங்கிடிச்சா" ஆஹா இது போல கேட்டு ரொம்ப நாளாகிவிட்டது.
    வைத்தியருக்கும் மெக்கானிக்குக்கும் சங்கிலி சரி. கதையில் வருபவருக்கும்
    நம்பிக்கும் நஷ்ட லாபம் எப்படி வேலை செய்கிறது.?

    பதிலளிநீக்கு
  19. வாழ்க்கையே கணக்குத்தான் யார் அறிவார். 'இப்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ' என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  20. வாழ்க்கை நாம் நினைக்கிற மாதிரி இல்லை.

    'இப்படித்தான் வாழ வேண்டும்' என்று தீர்மானம் கொண்ட முடிவுகளோடு வாழ்கிற மாதிரி இல்லை. நமது அன்றாட நடவடிக்கைகளை சில வெளிசக்திகள் தீர்மானிக்கிற அவலங்கள் வேறு. 'உ னக்குப் பிடிக்கலேனா ஒதுங்கிப் போயிடு' என்று நம்மை விலக்கி விடுகிற மாதிரியான வாழ்க்கையாக ஆக்கப்பட்டிருக்கு. அந்த அளவுக்கு பொருள் ஈட்டுவதற்கான நிர்பந்தங்களும் பல்கிப் பெருகியிருக்கின்றன.

    இத்தனை இடைஞ்சல்களுக்கு இடையே தான் தீப்பந்தங்களுக்கு நடுவே இருக்கும் கொளுத்தப்படாத கற்பூரம் போல இருக்க வேண்டுமெனில் அது பெரிய காரியம்.
    இந்தக் கதையை இன்னும் கொஞ்சம் நீட்டி அந்த டாக்டர் தண்டிக்கப்படுவதாகக் காட்டியிருந்தால் இந்த சங்கிலியின் கடைசிக் கண்ணியும் பூர்த்தியாகி விட்டதாக வாசகர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.

    ஆனால் சிறுகதைகளில் ஒரே விஷயம் நீண்டு கொண்டே போகக்கூடாது. நம்பிக்கே இந்த சோதனை என்றால் டாக்டருக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது நம் யூகத்திற்கு விடப்பட்ட ஒன்று. இருபது வருடங்களுக்கு முன்னால் ஆனந்த விகடனில் பிரசுரமான
    இந்த சிறுகதைக்கு விகடன் படத்தோடு நான்கு பக்கங்கள் ஒதுக்கியதே பெரிய விஷயம். அந்த நேரத்தில் ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக எஸ்.பாலசுப்பிரமணியனும் நிர்வாக ஆசிரியராக வீயெஸ்வி அவர்களும் இருந்தார்கள். இந்தக் கதையை பிரசுரிக்கவிருப்பதாக வீயெஸ்வி தான் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். கடிதத்தில் கதையின் கடைசி வரி தமக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  21. இந்தக் கதையின் கடைசி வரிக்கும் இந்திய ஆன்மீக கருத்தாக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நமது புராண இதிகாசங்களின் அறிவுறுத்தலை எண்ணை நகைப்பவர்கள் இருக்கும் காலமும் இது தான். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் கூட, இறைவனிடம் பக்தி கொண்டால் போதும், நமக்கு எல்லாமே நன்றாகவே நடந்து விடும் என்று எண்ணம் கொண்டிருப்பதும் இக்காலம் தான். பெரும்பாலான இறை நம்பிக்கையாளர்கள் 'பக்தி' லெவவோடு நின்று விட்டவர்கள் தான். அவர்களில் சிலருக்கு இறை பக்தி என்பது கூட குறிப்பிட்ட ஒரு தெய்வத்தின் மீதான பக்தி மட்டுமே என்றளவில் சுருங்கிப் போயிருக்கிறது. ஒரு காலத்தில் இறைபக்தி கொண்டவர்கள்
    இப்படியெல்லாம் குணநலன்களோடு இருப்பார்கள் என்று அனுமானிக்க முடிவதாக
    இருந்தது. வளர்ந்து வரும் காலகட்டத்தில் அந்த அனுமானிப்புகள் எல்லாம் பொய்த்துப் போய் பக்தியாளர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளுக்கும் அவர்கள் கொண்டிருக்கும்
    இறைபக்திக்கும் பெருத்த இடைவெளியை ஏற்படுத்தியும் இருக்கிறது. இறைபக்தியின் நோக்கமான ஞான மார்க்கம் என்பது காலப்போக்கில் மருகிப் போனது தான் இதற்குக் காரணமும் ஆனது. அந்த ஞானத்தைப் பெறுவதற்காகத் தான் இறைவழிபாடே என்பதும் மறக்கப்பட்டு போயிற்று.

    இறை ஞானம் என்பது பல நெறிமுறைகளைக் கொண்டது. வாழ்க்கைப் போக்கின் தனி நபர் செயல்பாடுகளில் நேர்மை, ஒழுக்கம், சத்தியம், உண்மை, பிற உயிர்க்கு தீங்கு விளைவிக்காமை என்று என்பது போல வாழ்க்கையை நெறிப்படுத்தும் பல செயல்பாடுகள். இறை பக்தியின் அடுத்த கட்டமான இறைபக்தி விளைவிக்கும் ஞான்ம் தேவையில்லை என்று தீர்மானித்த போது, இந்த நெறிமுறைகளும் பக்தியாளர்கள் மத்தியில் விடைபெற்றுக் கொண்டன.

    பதிலளிநீக்கு
  22. அரிச்சந்திரன் என்ன தப்பு செய்தான்?.. ஏன் அவனுக்கு அப்படி ஒரு தண்டனை?..

    "சத்தியமா?.. எப்படிப்பா இந்தக் காலத்தில் அதெல்லாம் சாத்தியப்படும்?"

    "ஏன் சாத்தியப்படாது?"

    "அப்புறம் அரிச்சந்திரன் கதை தான். ஆளை விடு.." என்று நழுவுபவர்கள் தான் பெரும்பாலும்.

    கண்ணதாசனின் ஒரு பாடல் வரி உண்டு. "யாருக்கு நான் தீங்கு செய்தேன், இறைவா?' என்று. நமக்கு ஒரு துன்பம் நேரும் பொழுது, சடாரென்று 'யாருக்கு நான் என்ன தீங்கு செய்தேன்? எனக்கேன் இப்படி?' என்று தான் சிந்தனை போக வேண்டும்.
    அப்படி அலமந்து போகும் இறைவனிடம் சரணாகதி அடையும் நிலையில் தான் பனிப்படலம் போல மூடிய துன்பம் விலகிப் போகும்,

    'நான் யாரிடம் அநியாயமாகப் பெற்றேன்?..' என்று இந்தச் சிறுகதையின் கடைசி வரியை உணர்வில் உணர்ந்து தனது பின்னூட்டத்தில் அதை தெரிவித்த கோமதிம்மாவுக்கு நன்றி. கதையின் போக்கை கணித்துச் சொன்ன ராமாஸ்ரீ அவர்களூக்கு நன்றி. தங்களது பல வேலைகளுக்கும் இடையே வாசித்து தாங்கள் உணர்ந்த கருத்துக்களை மறைக்காமல் சொன்ன நண்பர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. நல்ல நல்ல விளக்கங்களை வழங்கி இருக்கின்றீர்கள் ஜீவி அண்ணா...

    எத்தனை எத்தனையோ கஷ்டங்களின்
    ஊடாக இது எதனால் ஏற்பட்டது என்று உணர்ந்து கொள்ளும் தன்மையை எனக்கு இறைவன் தந்திருப்பதாக உணர்கிறேன்...

    அதையும் மீறி சில சந்தர்ப்பங்களில் பனித் திரை...
    எனக்கு ஏன் இப்படிப்பட்ட துன்பம்?.. - என்று மனுநீதிச் சோழன் சொல்லிக் கலங்குவதாக வள்ளலார் ஸ்வாமிகள் திருவருட்பாவில் குறிப்பிட்டிருப்பார்கள்..

    அது நினைவுக்கு வரும்போது
    நாமெல்லாம் எம்மாத்திரம் என்று தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுது கதையின் சாராம்சம் புரிந்தது குறித்து மகிழ்ச்சி.

      தம்பிக்கு இன்னொரு பயிற்சியை அளிக்க விரும்புகிறேன். ஆர அமர இந்தக் கதைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை வாசிக்க வேண்டுகிறேன். நீங்கள் தான் இந்தக் கதையை எழுதியிருப்பது போலவான கற்பனையில் அதற்கெல்லாம் என்ன பதில் அளிப்பீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். அது மேலும் உங்கள் கற்பனா வளத்தைக் கூட்டும். சோதித்துத் தான் பாருங்களேன்.



      நீக்கு
  24. எலுமிச்சம் பழம் களவாடியவனுக்கு
    அவன் திருடிய பழத்தை அவன் வாயில் திணித்து தண்டனை கொடுத்தானாம் ஒரு அரசன்...

    நமக்கே இந்தத் தண்டனை என்றால்
    நம்முடன் வந்து - அன்னாசிப் பழம் திருடியவனும் பலாப்பழம் திருடியவனும் என்ன கதி ஆவார்கள்?.. - என்று நினைத்துக் கொண்டானாம் எலுமிச்சை திருடன்...

    ஏதோ நாவல் பழம் இலந்தைப் பழம் இந்த மட்டோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தால் மூக்குத் துளையை நினைத்து பயமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேடிக்கை தான். அப்புறம் தண்டனைகளின் கடுமைக்கு ஏற்ற மாதிரி குற்றங்கள் பெருக ஆரம்பிக்கும்.
      மக்களை நல்வழிப்படுத்தவே கடவுள் வழிப்பாட்டின் தாத்பரியங்கள் அமைந்ததாகத் தெரிகிறது.

      நீக்கு
  25. இட்டார்க்கு இட்ட பலன் என்பதை நவீனமாக சொல்லியிருக்கும் கதை. உரையாடல்கள் வெகு யதார்த்தம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவீனமா?.. 26-9-99 விகடன் காலத்திய கதை இது, பா.வெ.
      இதற்கெல்லாம் பயப்படாத காலம் இது. அதாவது இதனால் இது விளையும் என்று அறியாத காலம் இது.
      அடுத்து அப்படி எது விளைந்தாலும் கவலையில்லை, நான் செய்கிறதை செய்து கொண்டே இருப்பேன் என்கிற காலமும் இது தான்.

      நீக்கு
  26. நாம் செய்யும் ஒவ்வொன்றிற்கும் கணக்கு வைக்கப்பட்டு அதற்கு எதிர் வினையாகக் கணக்கு தீர்க்கப்படும் என்பதைச் சொல்லும் கதை. நன்றாக இருக்கு சார்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் முன்னோர்கள் கில்லாடிகள். அப்படி கணக்கு வைத்து வினாடிக்கு வினாடி அதை அப்டேட் பண்ணவும் சித்திரகுப்தன் என்ற நபரை நியமித்து இருக்கிறார்கள் பாருங்கள்.
      நல்ல சிந்தனையில் மக்களை நேர்வழிப்படுத்தவே எல்லா நாட்டு கடவுள் புராணங்களும் பாடுபட்டிருக்கின்றன என்பதும் புரிகிறது.
      'அதெற்கெல்லாம் பயந்தால் ஆகுமா?' என்பது தான் காலத்தின் கோலம், துளசிஜி. (ஸ்ரீராம் அறிமுகப்படுத்தி

      நீக்கு
  27. நேற்று காலையிலேயே கதை வாசித்துவிட்டேன் கருத்துதான் போட இயலவில்லை

    சங்கிலித்தொடர் போன்ற வினைகள் நடப்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதாவது நாம் செய்வதற்கு வேறு ஏதேனும் ரூபத்தில் எதிர் வினை நடக்கும் ஆனால் நாம் அறியாமலேயே நடப்பதுதான் அது. நாம் என்ன செய்தோம் நமக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கொஞ்சம் யோசித்து மனதைச் சமாதானப்படுத்தும் வகையில் எதிர்வினை அமைந்திருந்தால் ஓகே. இல்லை என்றால்? இது ஒன்று.

    மற்றொன்று அப்படி எல்லாருக்கும் நடப்பது போலத்தெரியவில்லை. ஆனால் எனக்கு இதில் அனுபவம் நிறைய உண்டு.

    ஆனால் கதையில் சொல்லப்பட்டது அப்படியான எதிர்வினைச் சங்கிலி போல இல்லையே ஜீவி அண்ணா? இது டிட் ஃபார் டாட் என்பது போல் தெரிகிறது. பக்கத்தில் இருக்கும் மருத்துவர். இங்கு மற்றொன்று எல்லா மருத்துவரும் பெரிய லிஸ்ட் எழுதுவது இல்லை. அதுவும் பக்கத்து மெக்கானிக் எனும் போது?

    அப்படி ஒரு வேளை மருத்துவர் செய்திருந்தால் அது டிட் ஃபார் டாட் (tit for tat) இல்லையோ? நீ வாங்கினல்ல நானும் தீட்டறேன் பாருன்னு? அதுவும் மருத்துவர்?

    பழிக்குப் பழி சங்கிலிகளும் இருக்குத்தான். அதுவும் தலைமுறை தலைமுறையாகக் கூடத் தொடருவது....இது வேறு

    நாம் அறியாமல் நமக்கு எப்படி இது நடக்கிறது என்று அறியாமல் நடப்பதுதானே நாம் செய்யும் தப்பிற்கு வேறு விதத்தில் நடக்கும் என்பது இல்லையா?

    ஸோ கதையில் பக்கத்து மருத்துவர் என்ற உரையாடலைத் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரு கேரக்டர் அந்த மெக்கானிக் அறியாத ஒரு கேரக்டர் மூலம் அவனுக்கு இழப்பு வருகிறது என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்குமோ?

    இது பழிக்குப் பழி சங்கிலி என்பது போல் கொஞ்சம் தெரிகிறது. அந்த உரையாடல்

    //காட்டினேன் சார்..."என்று அவன் கடைக்குப் பக்கத்திலிருக்கும் க்ளினிக்கைக் காட்டினான். மாலை நேரத்தில் மட்டுமே விஜயம் செய்யும் அரசு மருத்துவர்.//

    இதற்குப் பிறகான உரையாடல்கள் என்னை அப்படி யோசிக்க வைத்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த வினைக்கும் பதில் வினை உண்டு என்பது தானே விஞ்ஞானம்?
      அது பற்றி எந்த ஐயமும் இல்லை.

      கதையில் நடப்பதே வேறு, சகோ. சாதாரண நிகழ்வு மாதிரி தானே நீங்கள் குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி கதை போய்க் கொண்டிருக்கிறது?

      அந்த கடைசி வரி வந்ததும் தானே 'ஓகோ. இப்படி நடப்பதில் கூட ஏதோ நியமம் இருக்கிறது போலும்..' என்று உங்களுக்குத் தோன்றுகிறது?..

      நடந்த விஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்து 'இதனால் தானா இது?' என்று முடிவுக்கு வருவது நான். நான் என்றால் நானில்லை; கதையில் வருகிற நான் பாத்திரம்.

      நம்பிக்கோ, டாக்டருக்கோ இந்த மாதிரி ஒரு கருத்துருவே இல்லை. அவர்கள் இரண்டு பேரும் வழக்கமான அவர்கள் வழியில் அவர்கள்.

      மூன்றாவதான அந்த 'நான்', தான் அமைத்துக் கொண்ட வாழ்க்கை முறைகளின் அடிப்படையில் நடந்த விஷயங்களுக்கு தான் பெற்ற அனுபவ ஞான அடிப்படையில் அப்படி நினைத்துப் பார்க்கிறான்.

      பார்த்தால், அந்த நானுக்கு நடந்தது வெகு சாதாரண விஷயம். நாலு வருட உபயோகத் தேய்மானம் என்று கூட அவன் எண்ணவில்லை. தனக்கு அந்தச் செலவு ஏற்படக் காரணம், தான் யாரிடமோ அநியாயமாக நடந்து கொண்டது தானோ என்று யோசிக்கிறான். அந்த அளவுக்கு அந்த 'நான்', தனது நேர்மையான செயல்பாடுகளில் கவனம் கொண்டிருக்கிறான் என்றே கொள்ள வேண்டும். இந்த சிந்தனை வாசிப்பவர்களுக்கும் ஒரு பாடமாக அமையலாம்
      என்ற அடிப்படையிலேயே ஒரு கதை ரூபமும் கொண்டிருக்கிறது. விகடனின் தேர்வுக்கும் இதான் காரணம்.

      நீக்கு
    2. //மற்றொன்று அப்படி எல்லாருக்கும் நடப்பது போலத்தெரியவில்லை. ஆனால் எனக்கு இதில் அனுபவம் நிறைய உண்டு.// மிக மிக உண்மை தி/கீதா, நான் என்னோட முதல் மும்பைப் பயணத்தின்போது பட்ட கஷ்டங்களில் இதைச் சொல்லி இருப்பேன். அந்தப் பயணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னர் தான் கோபத்தில் சாப்பாடைக் கொட்டினேன். இரண்டே நாட்களுக்குள் சாப்பாடு கிடைக்காமல் பயணிக்க வேண்டி வந்தது. அதே போல் பிறர் தானமாகக் கொடுப்பதும் எல்லாமும் எனக்குப் பயனாவதில்லை. பல சமயங்களில் அதைத் தூக்கிக் கொடுக்கும்படி ஆகும். ஆனால் பின்னால் அந்த இடத்தை அதே மாதிரிப் பொருள் இட்டு நிரப்பும். நான் கண்டு வியந்த இம்மாதிரிச் சம்பவங்கள் நிறைய. கடவுள் எதைக் கொடுக்க நினைத்தாலும் யாராலும் தடுக்க முடியாது என்பதைப் பூரணமாக உணர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
  28. முதலில் வண்டி பற்றி சொன்னது ரொம்ப யதார்த்தம். ஏனென்றால் என் வண்டி இப்படித்தான் இருந்தது. ஒவ்வொரு முறை மெக்கானிக்கிடம் போகும் போது இப்படித்தான். ஸ்பார்க் ப்ளக், எஞ்சின் என்று. டிவிஎஸ் எக்செல். ஆனால் அது உழைத்தது போல் எந்த வண்டியும் உழைத்திருக்காது!! ஹா ஹா ஹா ஹா

    இப்பகுதியை எனது பழைய நினைவுகளுடன் ரசித்தேன். இதைப் பற்றி ஒரு பதிவும் கூட போட்ட நினைவு...கதையாகவா அல்லது அனுபவப் பதிவாகவா என்று நினைவில்லை. அதன் பெயர் மயில்!

    (ஸ்ரீராம் இந்த வண்டி தெரியுமே உங்களுக்கு!! ஹா ஹா ஹா)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...  ஆமாம்...    புகழ்பெற்ற வண்டி! 

      நீக்கு
    2. எந்தத் தொழிலானாலுமே தொழில் தர்மம் உண்டு.மெக்கானிக்... வண்டிகளுக்கான டாக்டர். டாக்டர்... மனிதர்களுக்கான மெக்கானிக். இருவருமே வரையறை மீறாதிருந்தால் பிரச்னை இல்லை. பிரச்னை வந்தால்...?? ஏதோ தவறு இருக்கிறது. திறமையான மெக்கானிக்குகளுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளுடன் தொடர்பிருக்கும். நீ என் பொருட்களை விற்றுக்கொடு... நான் உன்னை கவனிக்கிறேன் என்று... திறமையுள்ள மெக்கானிக் ஒரு குறிப்பிட்ட கடையைச்சொல்லி அங்கு வாங்கினால் தரமான பொருளை, நியாயமான விலைக்கு கிடைக்கும். மற்றவர்கள் டூப்ளிகேட் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கிறார்கள்.. என்பார். அவரையே வாங்கச் சொன்னாலும் அந்தக்கடையில்தான் வாங்குவார். ஆக, உங்களிடம் நல்ல பெயர், கடைக்காரரிடம் கமிஷன்..ஆச்சா...
      இந்தப்பக்கம் டாக்டர்களுக்கும் மருந்துக்கடை, x-ரே, ஸ்கேன் செண்டர்கள் கவனிப்புகள் செய்து தங்கள் பிடியில் வைத்திருப்பார்கள். டாக்டர் தரும் ப்ரிஸ்க்ரிப்ஷனிலுள்ள கடைக்கோ,தான் போகவேண்டுமென சொல்வார். ஆக இங்கும் அப்படியே. இது ஒரு கட்டுக்குள் இருக்கும்வரை பிரச்னையில்லை. மீறும்போது இந்தக் கதைதான்...

      நீக்கு
    3. சகோ! நானும் என் மொபெட் அனுபவங்களிலேயே இந்தக் கதையை எழுதினேன். கிட்டத் தட்ட நடந்த சில நிகழ்வுகள் தான் கதையாகியிருக்கிறது.

      நாம் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகப் பார்த்தால் எதையும் கதை பண்ணலாம்.

      சமீபத்தில் நடந்த ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், கேளுங்கள்.

      வீட்டு பால்காரருக்கு மாத ஆரம்பித்திலேயே முன் கூட்டியே அந்த மாதத்திற்கு பால் தொகையைக் கொடுத்து விடுவது வழக்கம். என்ன தொகை என்று வாட்ஸாப்பில் அனுப்புவார்.

      இந்த மாதத்திற்கு ரூ.1500/- என்று செய்தி அனுப்பியிருந்தார். இந்தக் கணக்கை எல்லாம் வைத்திருப்பது என் மனைவி பாடு. அதனால் இந்தத் தொகையை குறிப்பிட்டிருக்கிறார் என்று மனைவியிடம் சொன்னேன்.

      "தப்பா சொல்லியிருக்கார்.30 நாட்களுக்கு கணக்கு போட்டிருக்கிறார். இந்த மாதம் 31 நாட்கள். அதனால் ஐம்பது ரூபாயைச் சேர்த்து எடுத்து வையுங்கள்.."

      "அவன் கேட்டதைக் கொடுப்போம். நாமா எதற்கு 50 ரூபாயை சேர்த்துக் கொடுக்க வேண்டும்?" -- நான்.

      "சே!சே! சேர்த்தே கொடுத்து விடுங்கள். இந்த ஐம்பது ரூபாயைப் பார்த்தால் நமக்கு ஐநூரு ரூபாய்க்கு ஏதாவது தண்டம் வந்து சேரும்.." என்று சட்டென்று மனைவி சொன்னதும் அசந்து போனேன். இது தான் தனி நபர்கள் ஒரு விஷயத்தில் கொள்ளும் கணிப்பு என்பது.

      மீதிக் கதையைக் கேளுங்கள்:

      பணம் கொடுப்பது நானாகையால் அந்த மாதிரியே பால்காரர் மதியம் கலெக்ஷனுக்கு வந்ததும் விஷயத்தைச் சொல்லி சேர்த்துக் கொடுத்தேன்.
      அவர் எந்த சலனுமும் இல்லாமல் வாங்கிக் கொண்டு சென்றார்.

      கடந்த இரண்டு நாட்களாக அப்பார்ட்மெண்ட்டில் எல்லா வீட்டிற்கும் ஒழுங்காக அதிகாலையிலேயே பால் பாக்கெட் போடப் பட்டிருக்கு. எங்களுக்கு மட்டும் டிலே. போன் பண்ணி 'போடவில்லையே?' என்று சொல்லி அதற்கு ஏதோ சாக்கு போக்கு சொல்லி பிறகு எட்டு மணிக்கு மேல் போடப்பட்டிருக்கு.

      இப்படி அனுதினமும் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் எக்கச்சக்கம். இதைத்
      நாம் கொள்ளும் நியாயங்களின்படி நடக்கும் விஷயங்களைக் கூட்டிக் குறைத்து கதையாக்குகிறோம் என்பது என் அனுபவ அறிவு.

      நீக்கு
    4. அன்புள்ள பாரதி,
      உங்களது உயிரோட்டமான பின்னூட்டம். அப்படியே என்ன நடக்கிறதோ அப்பட்டமாக சொல்லியிருக்கிறீர்கள். டாக்டர் கிளினிக்கில் தோல் பையும் கையுமாக டை கட்டிய மெடிக்கல் representative-கள் உட்கார்ந்திருந்திருப்பது மனக்கண்ணில் தெரிகிறது.
      டாக்டருக்கும் டிரக் ஹவுசுக்குமான கூட்டு இங்கு தான் ஆரம்பிக்கறது.
      உங்களது திருப்தியான இந்தக் கதையை வாசித்த தின் வெளிப்பாடாய் விளைந்த பின்னூட்டம். மிக்க நன்றி.

      நீக்கு
  29. இன்றைய வாழ்வியல் இப்படித்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  30. மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள், கரந்தையாரே!

    நியாய அநியாய சீர்தூக்குதல்கள் செல்லாக் காசாகி விட்டன. அவரவர்கள் எப்படி நடக்கிறார்களோ, அதுவே அவரவர்களுக்கான நீதியாகி விட்டன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!