செவ்வாய், 17 நவம்பர், 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை :  குறிமேடை - துரை செல்வராஜூ 

குறிமேடை
துரை செல்வராஜூ 
**************

மௌனம் கனத்திருந்தது பூஜை அறைக்குள்...

பதினாறு திருக்கரங்களையும் சிறகு போல விரித்துக் கொண்டு மண்டையோட்டு மாலையுடன் வடக்கு முகமாக ஸ்ரீபத்ரகாளியின் சித்திரம்...

கனல் தெறிக்கும் விழிகள்.. இரத்தக் களரியுடன் நீண்டிருக்கும் நாக்கும் கோரைப் பற்களும் பார்ப்பவர்க்கு அச்சத்தை ஊட்டிக் கொண்டிருந்தன..

காளியின் சித்திரத்துக்குக் கீழாக எலுமிச்சம் பழங்கள், தகடுகள், சிவப்பு நிற முடிகயிறுகள்...

அருகில் நாலடி உயரத்துக்கு பித்தளைச் சூலம்...

பேய் பிசாசுகள் அதைக் கண்டால் அலறியடித்துக் கொண்டு ஓடி விடும்...

குறிமேடை அபிஷேகம் என்றால் அந்த சூலாயுதத்துக்குத் தான்...

அதில் தான் ஜடாமுனி ஆவாகனம்...

நரைத்த மீசை தாடியுடன் அருள் வாக்கு சொல்லும் ஜடாமுனி பூசாரியார் -

என்ன வாக்கு சொல்லப் போகிறாரோ!..   - என்று தவித்திருந்தவர்கள் நால்வர்..

அவர்கள் கதிர்வேல், அவனுடைய அம்மா, அப்பா, மாமா...

கதிர்வேல் வளைகுடாவின் குவைத் நாட்டில் நல்லதொரு வேலையில் இருப்பவன்.. முப்பது வயதை நெருங்கியும் திருமணத்தை நெருங்க முடியவில்லை...

பத்துப் பொருத்தம் கூடி வந்தாலும் ஏதாவதொரு காரணம் தட்டி விட்டுவிடும்..

அங்கே இங்கே என்று கோயில் கோயிலாக அலைந்தாயிற்று...

புண்ணியங்கள் வரவானதே தவிர பூமாலைக்கு வழியைக் காணோம்...

யாரோ சொன்னதைக் கேட்டு காளியம்மன் குறிமேடைக்கு வந்திருக்கிறார்கள்..

பூசாரியார் தனக்கு முன்னிருந்த நவாம்ச சக்ர மண்டலத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்..

கோயில் மாதிரி இருந்த வீடு முழுதும் மின்  வசதி இருந்தும் இந்த பூஜை அறைக்குள் மட்டும் மின் விளக்குகள் இல்லை...

மூன்று நான்காக குத்து விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன...

சுத்தமான நல்லெண்ணெய்யின் வாசம்..  கூடவே ஜவ்வாது சம்பங்கி கதம்பம் ஊதுவத்தி சாம்பிராணி - என நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது...

திடீரென உடலைச் சிலிர்த்துக் கொண்ட பூசாரியார் அருகிலிருந்த கற்பூரக் கட்டியை ஏற்றி விபூதித் தட்டில் வைத்தார்..


கற்பூரத்தின் சுடர் அறை முழுதும் பரவியது..

சம்படத்தில் இருந்த சோழிகளைக் கையில் அள்ளித் தரையில் விசிறினார்...

மேல் நோக்கிப் பூத்திருந்தவற்றை எண்ணிக் கொண்டே - எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து கதிர்வேலின் உச்சந் தலையில் வைத்து உள்ளங்கையால் அழுத்திக் கொண்டார்..

அவனுக்கு முதுகுத் தண்டினுள் மின்சாரம் இறங்குவது போல் இருக்க - பூசாரியாரிடமிருந்து பாட்டு ஒன்று பிறந்தது..

" கேளப்பா பாலகனே.. ஏதிலியாய் நிற்பவனே..
பாரப்பா பழங் கொடுமை பஞ்சமா பாதகத்தை
நீயப்பா செய்ததுவும் நெடுமுள்ளாய் நிற்குதப்பா
வார்குழலாள் தனைக் கூடி வஞ்சனையும் செய்தனையே
கூறப்பா உன்மனதில் சூலி என்றும் பாராமல்
தீரப்பா இச்சென்மம்  என்றவளும் செயல் மாண்டு போயினளே..
தீர்பழியாய் என்று எரிந்து சிவலோகம் சென்றனளே..
நாளப்பா ஆண்டதுவும் ஐம்பதோடு மூவிரண்டு
நல்லதொரு பரிகாரம் நாள் பார்த்துச் செய்தக்கால்
குத்துவிளக்கு ஏற்றி வைக்க குலமகளும் வருவாள் தானே!.. "

உச்சந்தலையில் இருந்த எலுமிச்சையை எடுத்து தரையில் வைத்து நசுக்க -

நாலாபுறமும் அதன் சாறு பீறிட்டு அடித்தது...

கதிர்வேலின் அம்மா கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள்..

" இதோ..  இந்த ஜென்மத்தில உங்க மகனா இருக்கிற இந்த ஜீவனால முன்னூறு வருசத்துக்கு முன்னால அபலை பெண்ணொருத்தி கர்ப்பமாகி அநாதரவா மாண்டு போனாள்... அக்கினியில எரிஞ்ச அவளோட சாபம் தான் இன்னைக்கு பின்னால நிக்கிறது... இது நீங்க வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியத்துல கேட்ட சேதி தானே!.. "

பூசாரியார் பாட்டுக்கு விளக்கம் சொன்னதுடன் கேள்வியும் கேட்டு வைத்தார்...

" ஆமாங்க... சாமி... அங்கேயும் இதே தான் சொன்னாங்க... "

" அப்புறம் என்ன சந்தேகம்?... ஆழம் பார்க்க வந்தீங்களா?.. "

பூசாரியாரின் கண்களில் கொஞ்சமாக கோபம்...

" மன்னிக்க வேணும் சாமி!... காளியம்மா ஏதாவது நல்ல சேதி சொல்லாதா...ந்னு ஒரு ஆசைதாங்க!... "

" ம்!... " -  தீர்க்கமாகப் பார்த்தார் பூசாரியார்

" இந்த சாபம் தீர்றதுக்கு வழியே இல்லீங்களா!?.. "

" இருக்குது..ம்மா!.. " - என்ற, பூசாரியார்

காளியம்மன் சித்திரத்துக்குக் கீழ் இருந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து கதிர்வேலின் தந்தையிடம் கொடுத்தார்...

" இன்னும் மூணு மணி நேரத்துக்குள்ள வீட்டுக்குப் போய் சேர்ந்துடுங்க... வெளியாள் யார் கூடவும் அன்னம் தண்ணி தொடர்பு வச்சிக்காதீங்க.. யாரையும் வீட்டுக்கு உள்ளே விடாதீங்க.. விருப்பம் இருந்தா வெள்ளிக்கிழமை வாங்க.. மேற்கொண்டு பரிகாரம் பற்றி பேசலாம்.. இப்போ உடனே புறப்படுங்க!.. "

ஜடாமுனி பூசாரியாரின் வாக்கை தலைமேல் கொண்டாலும் கலக்கத்துடன் அவர்கள் புறப்பட்டார்கள்..

நாட்கள் விறுவிறு என்று நகர்ந்தன..

அடுத்து வந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டில் படையல் போட்டு சர்க்கரைப் பொங்கலுடன் ஒரு சீப்பு பூவன் பழத்தைப் பசுவுக்கு வைத்தார்கள்...

கூறைப் புடவை, ரவிக்கைத் துணி, ஒரு வயதுடைய குழந்தைக்கான இடுப்புத் துணி ஆகியவற்றுடன் நூறு ரூபாயும் வைத்து ஏழைப் பெண் ஒருத்திக்கு தானமாகக் கொடுத்தார்கள்..

காதோலை கருகமணி, மல்லிகை சம்பங்கி மருக்கொழுந்து இவற்றுடன் தாம்பூலம் வைத்து ஆற்று நீரில் விட்டார்கள்..

எலுமிச்சம் பழத்தை அறுத்து அரக்குக் குங்குமத்தில் தோய்த்து வீட்டு வாசலில் பிழிந்து விட்டார்கள்..

பூசாரியார் சொன்னபடிக்கு எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு பிள்ளையாருக்கு திருமுழுக்கு செய்து வஸ்திரம் சாத்தினார்கள்...

ஞாயிற்றுக்கிழமை சாயங்காலமாக மறுபடியும் குறிமேடைக்குச் சென்றபோது அவர்கள் கையில் ஒரு டஜன் கண்ணாடி வளையல்கள் இருந்தன...

அந்த வளையல்களை அங்கிருக்கும் வேப்ப மரத்தில் கட்டி விட்டார்கள்...

ஜடாமுனி பூசாரியார் புன்னகையுடன் உட்கார்ந்திருந்தார்...

" சாமி!.. நீங்க சொன்னது மாதிரியே எல்லாம் செஞ்சிட்டோம்... அந்த சாபம் தீர்ந்திருக்குமில்லே!.. "

குறிமேடைக்கு மீண்டும் வந்திருந்தனர் கதிர்வேலின் குடும்பத்தினர்..

" இது இவனுக்கு ஏழாவது ஜென்மம்.. அஞ்சாவது ஜென்மத்துலயே அந்தப் பொண்ணு சாந்தியடைஞ்சுட்டா.. ஆனா அந்த சாபத்தோட உக்கிரம் கிரகாதிபதிகள் கையில இருந்ததால வேகம் குறையலை... உதைச்சு விட்ட பந்து உருண்டு ஓடி ஒரு இடத்துல நிக்கிற மாதிரி இப்போ எல்லாம் சரியாப் போச்சு... "

பூசாரியார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு  ஆச்சர்யம் தாள முடியவில்லை...

பூசாரியார் மேலும் தொடர்ந்தார்...

" ஒவ்வொரு ஜென்மத்திலயும் நாம செய்யிற எல்லாத்துக்கும் புண்ணியம் பாவம் சேர்ந்துகிட்டே இருக்கு... அதனோட பலாபலன்களை நாம அனுபவிச்சுத்தான் தீரணும்.. லாபமோ நஷ்டமோ யாராலும் தடுக்க முடியாது... தப்பிக்க முடியாது!... "

" ஆயிரம் ஆயிரமா கையில பணம் இருக்கும்... அதை அள்ளிக் கொட்டி அது.. இதுன்னு செய்வான்... ஒரு பலனும் இருக்காது.. சோத்துக்கு வழியில்லாம இருக்குறப்போ அஞ்சு ரூபாய்க்கு விளக்கு ஏத்தி வைப்பான்.. இலவங்காய் மாதிரி பாவம் பட்டுன்னு வெடிச்சு சிதறிப் போகும்... ஏன்டா... இப்படி?... யாருக்கும் புரியாது!... "

" அப்படின்னா இப்போ செஞ்ச பரிகாரத்துக்கு அர்த்தம்!?.. "

கதிர்வேலின் அம்மாவுக்குக் குழப்பம்..

" அம்மா!.. பழைய பாவம் தீர்ந்த பிறகு தான் இந்த மாதிரி பரிகாரம் பூஜை புனஸ்காரம்.. ன்னு செய்ய முடியும்... அதுக்கு இடையில ஏதாவது செஞ்சிருந்தா அது உமிய வச்சி கோட்டை கட்டுன மாதிரி தான்... "

" ஏதோ நல்லபடியா எல்லாம் நடந்தா சரிங்க சாமி... "

" ஆகட்டும்... இப்போ உங்க மகன் கையில முடி கயிறு கட்டி விடுறேன்... இன்னையில இருந்து நாப்பத்தெட்டாம் நாள்  அவிழ்த்து விடுங்க... ஆனா கவனம்... முடி கயிறு கழற்றப்போ எலுமிச்சம் பழம் நறுக்கிப் போடணும்.. எல்லாரும் செஞ்சிட முடியாது.. "

" அதான் பரிகாரம் செஞ்சிட்டோமே!..  இன்னும் பிரச்னை இருக்குதுங்களா?.. "

கதிரின் அப்பா தயக்கத்துடன் கேட்டார்..

" தூற்றல் விட்டாலும் தூவானம் விடாது.. ன்னு சொல்லுவாங்க... இல்லையா!...  "

 பூசாரியார் புன்னகைத்தார்..

" சாமீ... ரெண்டு மாச லீவுல வந்தேன்.. இன்னும் ஒரு மாசத்துல திரும்பிப் போகணும்... அங்க யாரு இந்த மாதிரி செய்வாங்க?... "

கதிர்வேலிடமிருந்து கேள்வி...

பூசாரியாரிடமிருந்து வெடிச்சிரிப்புடன் பதில் வெளிப்பட்டது...

" பக்கத்துல தான் இருக்கிறானே... குங்குமப் பொட்டுக்காரன்!... "

******

ஊரிலிருந்து திரும்பி வந்த கதிர்வேல் சொல்லச் சொல்ல திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தேன்...

ஆயிற்று...

நாற்பத்தெட்டாம் நாளன்று கதிரும் நானும் கடற்கரைக்குச்  சென்றோம்.. 

எலுமிச்சம் பழத்தை அறுத்து வீசியதுடன் கதிர்வேலின் கையிலிருந்த  முடி கயிறையும் அவிழ்த்து கடல் நீரில் விட்டேன்...

அலைகள் இல்லாமல் ஆடிக் கொண்டிருந்தது கடல்...

கை கால்களைக் கழுவிக் கொண்டு அறைக்குத் திரும்பி காஃபி அருந்தினோம்..

பூசாரியார் குறிப்பிட்ட குங்குமப் பொட்டுக்காரன் - நான்தான் என்பது கதிர்வேலின் அசைக்க முடியாத நம்பிக்கை...

இது நடந்து ஒன்றரை மாதம் ஆவதற்குள் வீட்டிலிருந்து பெண்ணின் படத்துடன் கடிதம் வந்திருந்தது  -

" நிச்சயம் செய்து விட்டோம்!.. " - என்று...

" இதோ வந்து விட்டேன்!... " - என்று பதில் எழுதிப் போட்டதோடு மின்னல் வேகத்தில் பெட்டியைக் கட்ட ஆரம்பித்தான் கதிர்வேல்...

======  

77 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
    நலம் வாழ்க என்றென்றும்...

    பதிலளிநீக்கு
  3. இன்று எனது கதையைப் பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  4. குறிமேடைக்கு வருகை தரும் அனைவரையும் அன்புட்ன் வரவேற்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், கௌ அண்ணா மற்றும் எல்லாருக்கும். கமலாக்கா வணக்கம்..

    துரை அண்ணாவின் கதை தொடக்கமும் முடிவும் பார்த்துவிட்டேன் முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்..

    தொடக்கம் பார்த்ததும் சிறு வயதில் பள்ளிக் காலத்தில் எங்கள் ஊரில் இப்படியான நிகழ்வுகளைக் குறித்து நட்புகள் கதை கதையாச் சொல்லுவது நினைவுக்கு வந்தது. கூடவே எங்கள் ஊர் வழி ராஜாவூர் செல்லும் பேருந்தில் அமாவாசை பௌர்ணமி சமயங்களில் கூட்டம் அலைமோதும். அவர்கள் பேசிக் கொண்டதும் நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அடேங்கப்பா!... விபூதித் தட்டு...
    பார்க்கவே திகிலா இருக்கு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும்தான்!! அந்த ஜோதியில் தெரியும் உருவத்தை zoom செய்து பார்த்தால் ரொம்ப பயமா இருக்கு.

      நீக்கு
    2. எப்படியோ ஒரு திகிலான படமும் இயல்பாகப் பொருந்தி விட்டது...

      தங்களுக்கு நன்றி...

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் துன்பங்கள் அகலப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. இன்று துரையின் கதையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே வந்தேன். அருமையான ஆரம்பம். காளியைக் கண்ணெதிரே கொண்டு வந்து விட்டார். இம்மாதிரிக்குறி/ஜோசியம் பார்ப்பவர்களின் இயல்பான மனோநிலையை அற்புதமாகச் சித்திரித்துள்ளார்.

    பதிலளிநீக்கு
  9. குறி சொல்பவர் குறித்த வர்ணனையும் நேரில் பார்க்கிறாப்போல் உள்ளது. குறி கேட்பவர் மனோநிலையும் நம்மைப் போன்ற சாதாரணர்களைப் பிரதிபலிக்கிறது. கடைசியில் சுபமாக முடித்ததுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது கதைகளில் அந்த ஒன்றைத் தவிர மற்றெல்லாம் சுபம் தான்.. அதுவும் கூட தீமை அழிக்கப்பட்ட நிலையில் சுபம் தான்..

      அன்பின் கருத்துரையும் வாழ்த்துகளும் கண்டு மகிழ்ச்சி... நன்றியக்கா...

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இரண்டொரு நாட்களாக என்னால் வலைத்தளம் வர இயலவில்லை. இன்று முதலில் வந்து விட்டேன்.

    இன்றைய செவ்வாய் கதைப்பகுதியில், சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் மன ஓட்டத்தில் விளைந்த கதை நன்றாக இருக்கிறது. சரளமான எழுத்து நடை.. படிக்கும் நாமே குறி மேடைக்கு முன் அமர்ந்திருப்பதாக ஒரு உணர்வு...அடுத்து குறி சொல்பவர் என்ன சொல்வாரோ என்ற தவிப்பு.. கதையென்று நினைக்காமல், உண்மையாகவே நினைக்க வைத்த விதத்தில் எழுதிய சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள். முற்பிறவியின் பாப புண்ணியங்கள் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்வது உண்மைதான். அதனால்தான் துன்பங்கள் வரும் போது "போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ" என நினைத்து வருத்தமடைகிறோம்.

    கதை நன்றாக உள்ளது. ஒவ்வொரு வரிகளும் ஆழமாக மனதில் பதியும் வண்ணம் எழுதும் திறமை சகோதரர் இறைவனிடம் வாங்கி வந்த வரம். அவரின் அற்புதமான எழுத்துத் திறமைக்கு என் பணிவான வணக்கங்கள்.. வாழ்த்துக்கள்.

    ஒவ்வொருவருக்கும் சமயத்தில்,தெய்வம் மனித வடிவில் அருகிலிருந்து உதவி செய்கிறது. கடைசியில் கதை நிஜமான சூழலை கொண்டதாகவும் தோன்றுகிறது. உண்மை கதையோ? இறுதியில் முன்ஜென்ம பாவங்கள் முற்றிலுமாக அகன்று, நல்ல வேளை வந்ததும் மணக்கோலம் காண கதிர்வேல் கிளம்புவதாக முடித்திருப்பது மன நிறைவாக உள்ளது. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குங்குமப்பொட்டுக்காரர் வாழ்க!

      நீக்கு
    2. தங்களது அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி... வாசித்துக் கொண்டு வரும் போதே நிகழ்வை யூகித்து உணர்ந்த் தங்களுக்கு என் வணக்கம்...

      ஒரு நிகழ்வை கதையாகச் சொல்லும்படிக்கு நல்லருள் செய்த இறைவனுக்கு நன்றி...

      தங்களது கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. மிகவும் கவர்ந்த கதை. நேட்டிவிட்டியோடு கூடிய கதை.

    நடந்த சம்பவங்களைப் படிப்பது போல இருந்தது.

    பாவ புண்ணியம், பரிகாரங்கள் இவற்றைப் பற்றிய கருத்துகளும் இயற்கையாக அமைந்திருந்தது.

    நல்ல கதையை எழுதிய துரை செல்வராஜு சாருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் பாராட்டுகிறோம்.

      நீக்கு
    2. அன்பின் நெல்லை..
      தங்களது கருத்துரைக்கும் பாராட்டுகளுக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. மிக இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் சென்னை மழை பயத்திலிருந்து விடு படவேண்டும்.

    இறைவன். சோதிக்க மாட்டார் என்று நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயங்கள் தற்காலிகமானவை. எல்லாம் கடந்துபோகும்.

      நீக்கு
    2. சென்னை வாசிகளுக்கு மழை என்றாலும் பயம் வெயில் என்றாலும் பயம் என்றாகி விட்டது...

      எல்லாம் காலத்தின் கோலம்...

      வாழ்க நலம்...

      நீக்கு
  13. மாமரத்துக்கு என்னதான் உரம், தண்ணீர் விட்டாலும், அந்த அந்த காலம் வரும்போதுதான் காய்க்கும். பரிகாரங்கள் என்ன செய்தாலும் அந்த அந்தக் காலம் வரும்போதுதான் சூழ்ந்திருந்த கருமேகங்கள் விலகி பாதை தெரிய ஆரம்பிக்கும் என்பது நன்றாக வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்களது மீள்வருகைக்கு மகிழ்ச்சி..

      பருவத்தே அன்றிப் பழா.. - என்பது மனிதருக்கும் பொருந்தும்..

      நன்றி...

      நீக்கு
  14. அன்பு துரை செல்வராஜுவின் கதை சிலிர்ப்பூட்டுகிறது.
    இந்த மாதிரி குறி சொல்பவர்கள்
    இன்னும் இருக்கிறார்களா. என்ன ஒரு அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்காங்க வல்லி! எங்க மாமியாருக்கு இதிலெல்லாம் மிகவும் ஆர்வம், நம்பிக்கை உண்டு. ஆனால் எதிர்கொள்ளப் பயப்படுவாங்க. யோசிப்பாங்க!

      நீக்கு
    2. இம்மாதிரி குறி செல்பவர்கள் இருக்கின்றார்கள்...

      உறவினர்கள் சிலருக்கு சில விஷயங்களில்
      நானே சொல்லியிருக்கிறேன்..

      அதற்கெல்லாம் திருவருள் கூடி வர வேணும்.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. " ஆயிரம் ஆயிரமா கையில பணம் இருக்கும்... அதை அள்ளிக் கொட்டி அது.. இதுன்னு செய்வான்... ஒரு பலனும் இருக்காது.. சோத்துக்கு வழியில்லாம இருக்குறப்போ அஞ்சு ரூபாய்க்கு விளக்கு ஏத்தி வைப்பான்.. இலவங்காய் மாதிரி பாவம் பட்டுன்னு வெடிச்சு சிதறிப் போகும்... ஏன்டா... இப்படி?... யாருக்கும் புரியாது!... "
    எத்தனை உண்மை.!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு துரையின் கதையில் எப்பொழுதும் சத்து இருக்கும். இன்று சாமியும், காளியும்,
      குறி மேடையும் சேர்ந்து அமர்க்களம் தான்.
      இன்றுதான் , தங்கையிடம்,
      முன் ஜெமம், கர்ம வினை பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தேன்.
      அப்படியே நிதர்சனமாகக் கதை எழுதி இருக்கிறார்.
      எத்தனை பிறவி எடுத்தாலும் பதில் சொல்லித்தான்
      தீர வேண்டும் என்பதில் ஐயம் இல்லை.
      இத்தனை அழகாகக் குறி சொல்லும் அற்புத மனிதர்
      அதன் படியே நடந்த கதிர்வேல்,
      பெற்றோர் படும் பாடு.
      எல்லாம் கண்முன்னே.

      கதிர்வேலுக்குப் பக்கம் குங்குமப் பொட்டு துரை ராஜு இருக்கையில் கவலை ஏன்.
      எல்லாம் மங்களம் தான்.
      கதிர்வேலும் ,மனைவியும் என்றும் மங்களம் பொங்க
      நன்றாக இருக வேண்டும்.

      நல்ல நன்மை பொங்கும் கதை படைத்ததற்கு மிகவும் நன்றி மா.
      என்றும் வாழ்க வளமுடன்.
      அன்பு ஸ்ரீராமுக்கும் நன்றி.
      கற்பூரப் படம் வெகு ஜோர்.

      நீக்கு
    2. எத்தனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பண்னிய பாவத்துக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்...

      தங்களது அன்பான கருத்துரைகளுக்கு மகிழ்ச்சி... நன்றியம்மா...

      நீக்கு
  16. கதையென்று படித்தபோது நிகழ்வுகளில் தாங்களும் இணைந்தது அருமை ஜி

    கதிர்வேலுவுக்கு வாழ்த்துகள் சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  17. கதை நன்றாக இருக்கிறது துரை அண்ணா. முடிவு சுபம்.

    எங்கள் வீடுகளில் இப்படியானவற்றைப் பேசத் தடை உண்டு பிறந்த வீட்டிலும் சரி. புகுந்த வீட்டிலும் சரி. இப்படியானப் பேச்சுகள் வந்ததே இல்லை. நாங்கள் எங்கள் நட்புகள் சொல்லியதைக் கூடச் சொல்ல விட்டதில்லை.

    நான் சிறு வயதில் இப்படியான பூசாரி அவர் வீடு என்று நட்பு கூட்டிச் சென்று காட்டியதைப் பார்த்துப் பயந்து வீட்டிற்கு வந்து பல நாட்கள் உறக்கம் தொலைந்தது ஹா ஹா ஹா ஹா..அது போன்று கொடை கொடுக்கும் திருவிழா வள்ளியூரில் பார்த்துப் பயந்த நாட்கள். அதன்பின் வளர்ந்ததும் பயம் போய்விட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..

      இப்படியும் இருந்த காலங்கள்.. அருமை..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. இந்தக் கதையின் நாயகன் கதிர்வேலின் உண்மையான பெயர் கணேசமூர்த்தி.. இங்கு தான் இருக்கிறார்... நிஜமான சம்பவத்தை கதை போல வழங்கியிருக்கிறேன்...

    பூசாரியார் சொல்லிய ஜென்ம சாபத்துக்கான குறிப்பாட்டு இறைவன் வழங்கியது...

    பூசாரியார் குறிப்பிட்டுச் சொல்லிய குங்குமப் பொட்டுக் காரன் நான் தான்... இங்கே கடற்கரையில் எலுமிச்சம் பழம் நறுக்கி விட்டு முடி கயிறை அவிழ்த்த போது நடந்த சம்பவம் அற்புதமானது...

    நான்கு மாதங்களுக்கு முன் இரண்டாவது ஆண் குழந்தைக்குத் தந்தையாகியிருக்கிறார் திரு. கணேசமூர்த்தி...

    ஆத்மார்த்தமான ஆன்மீக அனுபவங்களுக்குத் தோழமை இவர்தான்...

    15 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு மாலையணிக்கப் பணித்தான் ஐயப்பன்...

    48 நாட்களில் நாடு திரும்பி இருமுடி கட்டி மலைக்குச் சென்று ஐயனைத் தரிசித்தது இனிய அனுபவம்...

    படிபூஜை தரிசனம் செய்தது அப்போது தான்.

    சாமியே சரணம் ஐயப்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      இறுதியில் உண்மைக்கதையென படித்து வரும் போதே அறிந்து கொண்டேன். நீங்களும் அதை ஊர்ஜிதம் செய்து விட்டீர்கள். கதையில் தம்பியானவன் நிஜ வாழ்வில் அண்ணனாகி இருக்கிறார். சந்தோஷம். இந்த இரு சகோதரருக்கும் சகோதரர்தானே ஐயப்பன். தங்களுக்கு சபரிமலை தரிசனம் கிடைத்தது பெரும் பாக்கியம். அற்புதமான சம்பவங்களை தங்கள் வாயிலாக அறியும் போது பக்தி அனுபவத்தில் மெய்சிலிர்க்கிறது. கதையின் உண்மை நாயகருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. உண்மைக்கதையாக இருக்குமோ என்னும் நினைப்புடனேயே படித்து வந்தேன். கடைசியில் உண்மைக் கதை தான் என்பதும் புரிந்து கொண்டேன். மிக அழகாகச் சிக்கனமான வார்த்தைகளால் நிகழ்வைக் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். சபரிமலை யாத்திரைக்கும், இரண்டாவது ஆண் குழந்தை பிறந்ததுக்கும் திரு கணேசமூர்த்திக்கு வாழ்த்துகள், பாராட்டுகள், ஆசிகள். இதை அதி அற்புதமாக எழுதியதற்கு உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள். குறிப்பாட்டைப் பற்றிக் கேட்க நினைத்தேன். நீங்களே சொல்லி விட்டீர்கள்.

      நீக்கு
    3. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் யூகித்து அறிவதில் வல்லமை பெற்றவர் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது...

      கீதாக்கா அவர்களது கருத்துரையும் புது உற்சாகத்தை அளிக்கிறது..

      இருவரது கருத்துரைகளுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. காளி அம்மனும் பூசாரியும் கிராமம் கண்முன்னே.... விரிந்து செல்கிறது.வாழ்த்துகள்.

    இவற்றில் நம்பிக்கை என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. எங்கள் குடும்பத்தில் கடவுள் நம்பிக்கை உண்டு. குறி சொல்லல் சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      ஆழ்ந்த பக்தி உணர்வானது நம்மை இப்படியான நல்லதொரு சூழ்நிலையில் சேர்த்து விடுவதும் உண்டு..

      மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  20. நம்பிக்கையும், பக்தியும் நம்மவர்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சங்கள்.
    கதையின் கரு, சைவ சித்தாந்தத்தில் வருகின்ற சஞ்சிதம், ஆகாமியம், பிராரப்தம் என்ற வினைகளை நினைவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா.
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..
      சைவ சித்தாந்த நுட்பத்தினை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி..

      நீக்கு
  21. //ஒவ்வொரு ஜென்மத்திலயும் நாம செய்யிற எல்லாத்துக்கும் புண்ணியம் பாவம் சேர்ந்துகிட்டே இருக்கு... அதனோட பலாபலன்களை நாம அனுபவிச்சுத்தான் தீரணும்.. லாபமோ நஷ்டமோ யாராலும் தடுக்க முடியாது... தப்பிக்க முடியாது!... //

    உண்மைதான்.


    //அம்மா!.. பழைய பாவம் தீர்ந்த பிறகு தான் இந்த மாதிரி பரிகாரம் பூஜை புனஸ்காரம்.. ன்னு செய்ய முடியும்... அதுக்கு இடையில ஏதாவது செஞ்சிருந்தா அது உமிய வச்சி கோட்டை கட்டுன மாதிரி தான்... "//

    இதை தான் நேரம் காலம் கூடி வந்தால் எல்லாம் நடக்கும் என்றார்க்ளோ . அந்த நேரம் வரும் போதுதான் பரிகாரமும் செய்ய முடிகிறது.
    அருமையாக கதையை சொல்லி இருக்கிறீர்கள்.


    //பூசாரியாரிடமிருந்து வெடிச்சிரிப்புடன் பதில் வெளிப்பட்டது...

    " பக்கத்துல தான் இருக்கிறானே... குங்குமப் பொட்டுக்காரன்!.//


    கதை உண்மை கதை போல் இருக்கிறது என்று நினைத்தேன்,
    தேவகோட்டை ஜி சொன்னது போல் குங்கும பொட்டுக்காரர் நீங்கள் தானோ என்று நினைத்தேன். கமலா அவர்களுக்கு சொன்ன பதில் மூலம் நீங்கள்தான் என்று தெரிந்து கொண்டேன்.

    குறிப்பாட்டும் உங்கள் பாட்டாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

    என் நினைப்புகள் எல்லாம் உண்மையாகி விட்டது.
    உங்கள் ஆன்மீக வழிகாட்டல் அவருக்கு கிடைத்தது அவர் செய்த பாக்கியமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. விரிவான கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  22. //எனக்கும்தான்!! அந்த ஜோதியில் தெரியும் உருவத்தை zoom செய்து பார்த்தால் ரொம்ப பயமா இருக்கு.//

    பயமாத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ அமானுஷ்யம் மாதிரி தெரிகிறது..

      கதைக்கேற்றபடி படத்தைச் சேர்ப்பதில்
      திரு கௌதம் அவர்கள் கைராசிக்காரர்...

      நீக்கு
  23. அனைவரது கருத்துரைகளையும் கண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறேன்...

    பொழுதுக்குள் மீண்டும் வருகிறேன்..நன்றி.

    பதிலளிநீக்கு
  24. எனக்கு சோட்டானிக்கரைபகவதி கோவில் நினைவு வந்தது அங்கு மனம் பிற்ழ்ந்தவர்களை கூட்டிவருவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...
      தாங்கள் சொல்வதை சோட்டாணிக் கரையில் நேரில் பார்த்திருக்கின்றேன்...

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  25. உக்ரம் காட்டிய கதை சக்கரம் போல் சரசரத்து ஓடி நின்றது நல்லது.

    பெண்ணுக்கு இழைக்கும் கொடுமை.. அவள் சாந்தியடைய ஐந்து ஜன்மம் வரை ஆகியிருக்கிறது. (வேறொரு பெண்ணாயிருந்தால் பத்து ஜென்மத்திற்கு பெண்டெடுத்திருக்கலாம்..ஆவேசத்திலும் ஒரு அப்பாவி போலிருக்கிறது இவள்) இவனுக்குப் பரிகாரம் செய்து NOC கிடைக்க, இன்னும் கூட இரண்டு ஜென்மங்கள்.

    ஏழைப்பெண்களையும், ஏமாளிகளையும் நெருங்கிப்பழகி, ஏமாற்றி, சிதைத்து, சீரழித்து, கொன்றும்போட்டுவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் போகிறதுகளே நாட்டில் சில பேய்கள், பிசாசுகள். இதற்கெல்லாம் என்னென்ன அவஸ்தைகளோ, எத்தனை எத்தனை ஜென்மங்கள் எடுத்து எங்கேபோய் முட்டி மோதவேண்டியிருக்குமோ யாரேயறிவார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன்...

      இப்படியான எண்ணங்கள் எனக்கும் வருவதுண்டு..என்ன பாவம் செய்தோமோ. இப்படிக் கஷ்டப்படுகின்றோம்.. என்று மனம் வருந்தும்...

      நீதி நெறியை உணர்ந்தோர் வழி தவறுவதில்லை என்பது ஆன்றோர் வாக்கு.

      தவறினால்
      அறம் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகின்றது..

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  26. அருமையான கதை. மண் மணக்க எழுதுவதில் துரை செல்வராஜீ சாரை மிஞ்ச இங்கு வேறொருவர் இல்லை. குறி மேடையையும்,குறி சொல்பவரையும், குறி கேட்பவர்களையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார். பரிகாரம் கூட நல்ல வேளை வந்தால்தான் செய்ய முடியும். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் பாராட்டுகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  27. எதிர்பார்த்தேன்... இந்தக் கதைக்கு பாராட்டுகளை எதிர்பார்த்தேன்..

    ஆனால் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை..

    வாசித்து மகிழ்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. மகிழ்ச்சி...

    அடுத்த மாதத்தில் இனிய சம்பவம் ஒன்றுடன் மீண்டும் சந்திப்போம்!....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!