சனி, 21 நவம்பர், 2020

இந்த வார நேர்மறை செய்திகள்

 ராஞ்சி: மருத்துவ குணம் வாய்ந்த கருங்கோழி பண்ணை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் தோனி.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. ஓய்வுக்கு பின் ராஞ்சியில் உள்ள 43 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம், பால், கோழி, வாத்து பண்ணைகள் அமைத்து பயனுள்ள முறையில் நேரத்தை செலவிடுகிறார். அடுத்து, கருங்கோழி பண்ணை அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக மத்திய பிரதேசத்தின் ஜபாவ் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி வினோத் மெஹ்தாவிடம் இருந்து 2,000 கருங்கோழி குஞ்சுகளை வாங்க உள்ளார்.

வினோத் கூறுகையில்,‘‘தோனியின் பண்ணையை சேர்ந்த நிர்வாகிகள் என்னை தொடர்பு கொண்டு ‘ஆர்டர்’ கொடுத்தனர். முன்பணமும் செலுத்தி விட்டனர். டிச.15க்குள் ராஞ்சிக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரின் பண்ணைக்கு 2,000 கருங்கோழி குஞ்சுகளை வழங்குவதில் பெருமை அடைகிறேன்,’’என்றார்.

மருத்துவ குணம் கொண்ட கருங்கோழி அரிய வகையை சேர்ந்தது. குறைவான கொழுப்பு, அதிக புரதச்சத்து கொண்டது. மற்ற கோழிகளுடன் ஒப்பிடுகையில் கூடுதல் ருசியாக இருக்கும். ரத்தம், இறைச்சி என எல்லாமே கருப்பாக இருக்கும். மத்தியப்பிரதேசத்தில் உள்ள மலை வாழ் மக்கள் இவ்வகை கோழிகளை அதிகம் வளர்க்கின்றனர். ஒரு கிலோ கருங்கோழி கறி 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கருங்கோழி முட்டை 20–40 ரூபாயாக உள்ளது. இந்தியா முழுவதும் கருங்கோழியின் தேவை அதிகமாக உள்ளது. இதனை உணர்ந்து தான் சாமர்த்தியமாக கருங்கோழி பண்ணை அமைக்கிறார் தோனி.
===== 

புத்தகம் தயாரித்து நுாலகம் நடத்தும் முதியவர்


எரியோடு : கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல், 74 வயதிலும் பொதுச்சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தானே தயாரித்த புத்தகங்களுக்காக ஒரு முதியவர் திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் நுாலகத்தை நடத்தி வருகிறார்.

வாழ்கிற காலத்தில் தனக்காக அன்றி மற்றவர்களுக்காக, வசிக்கும் ஊருக்காக, நாட்டுக்காக முடிந்ததை செய்ய நினைப்பவர் பலருண்டு. அவர்களுள் சிலரே நினைப்புக்கு செயலாக்கம் தந்து நடைமுறை படுத்துவர். இவர்களுள் ஒருவரே எரியோடு கே.ராமசாமி 74. நல்ல தகவல்களை பலரும் தெரிந்து கொள்ளவும், கிராமத்தினரிடம் படிப்பு பழக்கம் உருவாக்க வேண்டும் எனவும் களப்பணியில் இறங்கியுள்ளார்.பதினாறு வயது முதல் காய்கறி கடை நடத்தி வந்தார். 10 ஆண்டுகளாக பழக்கடையாக மாற்றினார்.

வயதானதால் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் வகையில் கடை நிர்வாகத்தை தனது மகனுக்கு மாற்றிவிட்டு, இந்தச் சேவையில் இறங்கிவிட்டார். சில ஆண்டுகளாக ஓய்வு வாழ்க்கையை மேற்கொண்ட இவர், தனது வாழ்க்கை காலத்தை அர்த்தமுள்ளதாக செலவிட தீர்மானித்தார். தினசரி செலவுக்கு மகன் தரும் 110 ரூபாயில் பல நாளிதழ்களை வாங்கி படிக்கிறார். நல்ல விஷயங்கள், கருத்துகள் என கருதும் செய்திகளை வெட்டி எடுத்து சேகரிக்கிறார்.

அதனை நகல் எடுத்து 100 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வடிவமைக்கிறார். அதற்கு தலைவர்களின் பெயர்களை எழுதி அடையாளமிடுகிறார். இவ்வாறு 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை கடந்த வாரம் வரை தயார் செய்துள்ளார். இவற்றை மக்கள் படித்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் எரியோடு பயணியர் நிழற்கூடத்தில் நுாலகம் போல அமைத்துள்ளார். சுழற்சி முறையில் மக்கள் எடுத்து செல்ல வசதியாக பதிவேடும் பராமரிக்கிறார். மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்டவரும் இவர் தயாரித்த புத்தகங்களை படிக்க துவங்கியுள்ளனர். இவரை பாராட்ட: 95669 53452.


===== 

வாஷிங்டன்:அமெரிக்காவின் மடர்னா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் பயன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மடர்னா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.


latest tamil news


இந்நிலையில், மடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் பயனுடையது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடுப்பூசி 94.5 சதவீதம் கொரோனா வைரசை கடுப்படுத்தி உள்ளது.
கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களிடமும் இந்த மடர்னா தடுப்பூசி நல்ல செயல்திறனை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாக்கிறது என ஆய்வு முடிவில் தெரியவந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில், மற்றொரு தடுப்பூசி வந்துள்ளது நம்பிக்கையூட்டுகிறது.

====  

பலே (பால்) பாண்டியா ! 


====  

மாயமான 76 குழந்தைகளை 3 மாதங்களில் மீட்ட பெண் போலீஸ்


புதுடில்லி: டில்லியில் காணாமல் போன 76 குழந்தைகளை, 3 மாதங்களுக்குள் கண்டுபிடித்த சீமா டாக்கா என்ற பெண் போலீசுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது.

டில்லியில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் போலீசாருக்கு புதிய ஊக்க திட்டம் ஒன்றை, கடந்த ஆக., மாதம் டில்லி காவல்துறை அறிவித்தது. இத்திட்டத்தில், 12 மாதங்களுக்குள், 50 குழந்தைகளுக்கு மேல் கண்டுபிடிக்கும் போலீசாருக்கு, பதவி உயர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தலைமைக் காவலர் சீமா தாகா என்பவர், கடந்த 3 மாதங்களுக்குள், காணாமல் போன, 76 குழந்தைகளை கண்டுபிடித்து அசத்தி உள்ளார். இதில் 50 குழந்தைகள் 14 வயதுக்கும் குறைவானவர்கள். டில்லி தவிர, பஞ்சாப், மேற்குவங்க மாநில குழந்தைகளும் இதில் அடக்கம். குழந்தைகளை கண்டுபிடிக்க கடந்த 3 மாதங்களாக அவர், பல்வேறு இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டு குழந்தைகளை மீட்டுள்ளார்.

சீமாவுக்கு வாழ்த்து தெரிவித்த டில்லி போலீஸ் கமிஷனர், அவருக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவித்தார். புதிய ஊக்கத் திட்டத்தின்கீழ், டில்லியில் முதல் பதவி உயர்வு பெறுபவர் சீமா என்பது குறிப்பிடத்தக்கது.

===== 

வாட்ஸ் அப் மூலம் வந்த தகவல் கட்டுரை : ( நன்றி : ஜீவன் தாஸ் -  நண்பர், முன்னாள் அசோக் லேலண்ட் என்ஜின் பிரிவு அதிகாரி  ) 

மார்வாடிகளின் வணிக ரகசியம்!

பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது எனச் சொல்லலாம்.

மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள். இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம் அது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள் மார்வாடிகள்.

நம் இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் கொடூர வில்லன்கள் அல்லது காமெடியன்களாகத் தான் சேட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் இவர்களை “நம்பள் நாளே வரான். பைசா கேக்கறான். நிம்பள் கொடுக்கிறான்” என்று பேசுவதாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைக்காமல் ஏழைகளிடம் வட்டிக்காசு வசூலித்து, அவர்கள் ரத்தத்தை உறிஞ்சி வாழ்பவர்கள் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் மிகுந்த வறியவனாய், வந்தேறியாய் வரும் ஒரு மார்வாடி எப்படி செல்வந்தனாகிறான் என்பது யாரும் அறியாத கதை.

அதை விரிவாக அறியும் வாய்ப்பு வந்தது- The Marwaris- from Jagat Seth to the Birlas என்ற நூல் மூலமாக, மார்வாரிகள் பற்றி 50 ஆண்டுகளாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர் தாமஸ் டிம்பெர்க்.

குரு சரண்தாஸ் எழுதிய முன்னுரையே முப்பது பக்கங்கள் என்றாலும் அது ஒரு பிரமாதமான ட்ரெயிலர் என்று சொல்லலாம். 1971-ல் மார்வாடிகளின் வணிக எழுச்சி பற்றி பிஹெச்.டி. ஆய்வாளரான டிம்பெர்க்கை சந்திக்கிறார் குரு சரண்தாஸ். இந்தியாவின் உள் நாட்டு வணிகம் முழுவதையும் மார்வாடிகள் எப்படி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என்று அறிகிறார்.

ஒரு புதிய பொருளை மிக விரைவில் அது பற்றி தெரிந்து கொண்டு அதை வாங்கி, விற்று வணிகம் நடத்தும் இவர்களுக்கு ரிஸ்க் எடுப்பது நிஜமாகவே ரஸ்க் தின்பது போலதான் எனத் தோன்றுகிறது. தந்தி வராத காலத்தில் புறாக்களை வைத்தும், தந்திகளை முதலில் பயன்படுத்தியும், திருட்டுத்தனமாக ரேடியோ கருவிகளை வைத்துக் கொண்டும், லண்டன் பங்குச் சந்தை விலை முதல் உள்ளூர் விலை வரை எல்லாவற்றையும் எப்படி வேகமாக அறியத் துடித்தார்கள் என்று படித்தபோது வியப்பாக இருந்தது.

சேத்தின் வியாபார நிர்வாக வழிமுறைகள் அலாதியானவை. ‘கடி’ என்ற பஞ்சு மெத்தைதான் சேத்தின் அலுவலகம். முனிம் என்கிற கணக்கர்தான் கணக்குகள் எழுதுவார். உள் அறையில் சரக்குகள் இருக்கும். பின் கட்டில் பிராமணர்கள் சமைப்பார்கள்.

புதிதாக வரும் மார்வாடி இளைஞர்களுக்கு அங்கேயே தங்கி, வேலை செய்யும் வசதி செய்து தரப்படுகிறது. முதலில் ஹுண்டி எனும் கணக்கியல் பயிற்சி. பின் சரக்கு பரிமாற்றம். பிறகு ஏதாவது ஒரு கிளையில் வேலை. தனியாக தொழில் செய்ய நினைத்தால் நிதிதாரராக அல்லது பங்குதாரராக சேத்தே உதவி செய்வார்.

முதலாளியின் உள்ளுணர்வு எல்லா முடிவுகளுக்கும் காரணி. நம்பிக்கைதான் வியாபார மந்திரம். கூடி வாழ்தல்தான் பிழைக்கும் வழி என எத்தகைய போட்டி என்றாலும் கூடியே வாழ்தல். எல்லா கணக்கும் அன்றன்றே பைசல் செய்தல். போட்டியாளர், பகையாளி என யாராக இருந்தாலும் கடன் கொடுத்தும் வாங்கியும் தொழில் நடத்துதல் என பிரம்மிக்க வைக்கும் வழிமுறைகள்.

இவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கும் கடன் வழங்கியிருக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்துக்கும் நிதி வழங்கி யிருக்கிறார்கள். தொழிலில் வரிகள் நெருக்கடி, வெள்ளையரின் சூழ்ச்சி என வரும்போதெல்லாம் பணத்தை நிலத்தில் போட்டு நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். எந்த புதிய தொழில் வந்தாலும் ஒரு கை பார்த்தார்கள். பிட்ஸ் பிலானி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் என அமைத்து கல்வி அமைப்பிலும் கால் பதித்தார்கள்.

அதிக அளவில் ஜெயின் வம்சம் என்றாலும் இந்து மதத்தின் நீரோட்டத்தில் கலந்தார்கள். மார்வாரி மொழியைக் காட்டிலும் இந்தியை வளர்த்தார்கள். இந்தி-இந்து-இந்தியா என்ற கட்டமைப்பில் மார்வாடிகளின் வணிக நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. பிற்காலத்தில் கலப்பு மணம் புரிந்தாலும் கவனமாய் செல்வம் காத்தார்கள். பெண்கள் மெல்ல படிக்க ஆரம்பித்தார்கள்.

கீதா பிரமல் போன்றவர்கள் பிஸினஸ் குடும்பத்தில் பிறந்து பிஹெச்.டி. செய்தார்கள். ராம் மனோஹர் லோஹியா, கமல்நாத் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். லாலு பிரசாத் யாதவின் உலகப் பிரசித்தி பெற்ற ரயில்வே துறை பட்ஜெட்டை தயாரிக்க உதவிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கூட மார்வாடிதான் என்று அறிகையில் அந்த சமூகத்தின் வீச்சு புரிகிறது. புத்தகம் நிறைய எல்லா சேட்டுகளின் பெயர்களும் சொந்தங்களும் அவர்களின் தொழில்களின் வரலாறுகளும் திகட்டத் திகட்டக் கொடுக்கப்படுகின்றன.

உலகமயமாக்கலை தடுக்கும் ராகுல் பஜாஜ் முயற்சிகளும், உலக மயமாக்கத்துக்குப் பிறகு நிர்வாக முறைகளை மாற்றிய குமாரமங்கலம் பிர்லாவின் முயற்சிகளும் அந்த சமூகத்தின் வளைந்து கொடுக்கும் தன்மையை எடுத்துக் காட்டுகிறது.

தற்போது போர்பஸ் பத்திரிகை வெளியிடும் இந்திய பில்லியனர்களில் நான்கில் ஒரு பங்கு மார்வாடிகள் இருக்கிறார்கள். இவர்கள் இல்லாத தொழில்கள் இல்லை எனச் சொல்லலாம். ஏழாவது தலைமுறை காணும் பிர்லாவை அமெரிக்காவின் போர்ட் அல்லது ராக்பெல்லருடன் ஒப்பிடலாம் என்கிறார் ஆசிரியர்.

மார்வாடியைப் போல பணக்கார வியாபாரியாக என்ன வழி என்று கேட்கையில் ஒரு மார்வாடியே இதை நகைச்சுவையாய் சொல்கிறார்: “ஒரு மார்வாடியின் மகளை கட்டிக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களை பணக்கார வியாபாரியாக மாற்றிக் காட்டுவார்கள்”.

=====  


40 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா தடுப்பூசிகள் வெற்றி பெறப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 2. இன்னிக்கு நான் தான் முதல் போணியா? இல்லைனா யாரானும் ஒளிஞ்சுட்டு இருக்காங்களா? எல்லாச் செய்திகளும் புத்தம்புதுசு. மார்வாரிகள் பற்றிய செய்திகளும், தோனி பற்றிய செய்திகளும் கறுப்புக் கோழிகள் பற்றிய செய்திகளும் இது வரை அறியாதவை.

  பதிலளிநீக்கு
 3. தடுப்பூசி ஆயிரம் ரூபாயாம். மூன்று மாதங்களுக்குள் பயனுக்கு வந்துவிடும். ஆனாலும் முக்க் கவசம் அவசியம் எனப் படித்தேன். நல்ல செய்திகள்தாம்.

  கட்டுப்படுத்தும், கடுப்படிக்கும். கிட்டத்தட்ட ஒரே அர்த்தம்தான்.

  மார்வாரி செய்திகள் நன்று.

  பதிலளிநீக்கு
 4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  என்றென்றும் நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் நோயில்லாமல் ஆரோக்கிய வாழ்வு பெற
  இறையிடம் பிரார்த்தனைகள்.

  எல்லாமே புதிய செய்திகள்.
  குழந்தைகளைக் காப்பாற்றி மீட்ட பெண் போலீசுக்கு
  மனம் நிறை பாராட்டுகள்.
  இன்னும் சம்பாதித்துக் கொடை வழங்கிவரும்
  மதுரை நல்ல யாசகருக்கு நன்றிகள்.
  திண்டுக்கல் திரு,. ராமசாமியின் உழைப்பு மிக மிக வியக்க வைக்கிறது.

  தடுப்பூசி எல்லோரையும் சென்றடைய வேண்டும். இன்றுதான்
  Pfiser கம்பெனி FDA கிட்டே பர்மிஷன் கேட்டிருக்கிறது.

  தடை செய்யாமல் நிறைவேற வேண்டும்.
  Bill Gates கணிப்புப்படி ஜூலை ,ஆகஸ்ட் 2021இல்
  நாம் இந்த நோயின் பிடியிலிருந்து
  விடுபட்டுவிடுவோம் என்ற நற்செய்தி வருகிறது.

  நல்லதே நடக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 6. நல்லதொரு தொகுப்பு...
  ஆர அமர் படிக்க வேண்டும்...
  பிறகு வருகிறேன்..

  பதிலளிநீக்கு
 7. 43 ஏக்கரில் பண்ணை அமைத்தது கஷ்டப்பட்டு கிரிக்கெட்டில் உழைத்த பணம் மட்டுமல்ல...

  அறியாமடந்தை மக்களால் வெகு சுலபமாக விளம்பரத்தில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாரித்து வாங்கியதும்கூட...

  அவனது சந்ததி இனி ராஜவாழ்க்கை... ஏமாளி மக்களுக்கு இறுதிவரை பீடையே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கையில் பேட், காலடியில் கருங்கோழி வாகனம் என தமிழ்நாட்டில் டோனிசாமிக்கு சிலை தயாராகிக்கொண்டிருக்கிறதோ என்னவோ !

   நீக்கு
 8. திண்டுக்கல் ராமசாமி..
  சினிமா தேவ, தேவதைகளின் சிலிர்ப்புக் காலத்தில், இளைஞர்களையும் மற்றவர்களையும் வாசிப்பின் பக்கம் திருப்பிவிட ஆசைப்படும் சாமி. வாழ்த்துதலுக்கு உரிய ஆசாமி!

  பதிலளிநீக்கு
 9. இந்தத் தொற்றிற்கு விரைவில் தடுப்பூசி வந்து உலகம் நலம் பெற்றிட வேண்டும்.

  எரியோடு கே.ராமசாமி அவர்கள் வாழ்க பல்லாண்டு அருமையான சேவை!

  கீதா

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 11. எரியோடு கே.ராமசாமி அவர்கள் சேவை பாராட்டபட வேண்டிய விஷயம் . பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  தடுப்பூசி பயன்பாட்டுக்கு விரைவில் வரட்டும் அதுதான் இப்போதைய உடனடி தேவை.
  எல்லோரும் நலம் பெற வேண்டும்.

  மார்வாடிகளின் வணிக ரகசியம் பற்றிய கட்டுரை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. பல நல்ல செய்திகள் அறிந்து கொண்டோம்.
  கொரோனா தடுப்பூசி வரவேற்போம்.

  மார்வாடிகள் பற்றி நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போதே அம்மா கூறி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 13. இன்றைய தீதும் நன்றும்பிறர்டர வாரா என்னு தளத்தில் பலநேர்மறை செய்திகள் பகிரப்பட்டு இருக்கின்ற்ன

  பதிலளிநீக்கு
 14. தேடி எழுதிய தலைப்பிற்கு நன்றிகள் பல...

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. நிறைய புதிதான செய்திகளை அறிந்து கொண்டேன். மார்வாடிகள் பற்றிய கட்டுரை படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது. அவர்களின் வணிக முன்னேற்றங்களின் அசாத்திய திறமைகள் வியப்பை தருகிறது. கொரானா தடுப்பூசி விரைவில் வந்தால் நலம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!