திங்கள், 2 நவம்பர், 2020

கடப்பா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி


 கடப்பா 

ஜாக்கிரதையாக பெயரை படியுங்கள். கட்டப்பா இல்லை, கடப்பா! நான் கூட பெயரை கேள்விப்பட்டு ஏதோ ஆந்திரா சமாசாரம் என்று நினைத்தேன். ஆனால் கும்பகோணம் வெங்கடா  லாட்ஜ்  ஸ்பெஷலாமே? எனிவே செய்முறையை தெரிந்து கொள்வோமா?

தேவையான பொருள்கள்: 

உருளைக் கிழங்கு (மீடியம் சைஸ்)  - 3
வெங்காயம் பெரிதாக இருந்தால்     -  1
மீடியம் சைஸ் என்றால்                      - 2 
பூண்டு                                                       - 4 அல்லது 5 பல் 
தக்காளி(optional)                                     - 1
பயத்தம் பருப்பு                                       - 1 குழிக்கரண்டி அரைக்க: 
பொட்டுக் கடலை                                 - 3 டேபிள் ஸ்பூன் 
கசகசா                                                     - 1 டேபிள் ஸ்பூன் 
பட்டை                                                     -  ஒரு சிறு துண்டு 
தேங்காய் துருவல்                                -  3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்                                     -  4 
சோம்பு                                                      - 2 டீ ஸ்பூன்    

தாளிக்க :
எண்ணெய்                                                -  2 டீ ஸ்பூன் 
கடுகு                                                          - 1 டீ  ஸ்பூன் 
பிரிஞ்சி இலை                                         - 2 
உப்பு                                                            - 2 டீ  ஸ்பூன் 

செய்முறை:

முதலில் பயத்தம் பருப்பு, உருளை கிழங்கு இரண்டையும் வேக வைத்து, உருளைக் கிழங்கு ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். 

அரைக்க வேண்டியவைகளில் கசகசா,பட்டை,  சோம்பு இவைகளை ஒரு சிறிய கடாயில் லேசாக வறுத்துக் கொண்டு அதோடு தேங்காய், பொட்டுக்கடலை இவைகளையும் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 


ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் கொஞ்சம் கடுகு, கொஞ்சம் சோம்பு, போட்டு வெடித்ததும், பிரிஞ்சி இல்லை மற்றும் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். தக்காளி சேர்ப்பதாக இருந்தால் இப்போதே சேர்த்து, அதோடு பூண்டையும் சேர்த்து விடலாம். பின்னர் வேக வைத்துக் கொண்ட உருளைக் கிழங்கு, பயத்தம் பருப்பு போன்றவைகளை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கிளறவும். 
பிறகு அரைத்த விழுதை அதோடு சேர்த்து உப்பும் போட்டு இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கி விடலாம்.  மேலே கொத்துமல்லி தழை தூவி அலங்கரிக்கலாம். இது தோசை, இட்லி, பூரி போன்றவற்றிற்கு நல்ல ஜோடி. ஆனால் ஏன் கடப்பா என்று பெயர் வைத்தார்கள் என்றுதான் தெரியவில்லை. 

==== 


====

47 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  அருமையான கடப்பா ரெசிப்பிக்கு பானுமாவுக்கு முதல் நன்றி.

  எல்லாமே வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளும் பொருட்கள் தான்.
  நாங்கள் வெங்காயம் என்ற வஸ்துவைப் பார்த்தே
  6 மாதங்கள் ஆச்சு. தடுக்கப்பட்ட ஒரு பொருள்.
  சந்தையிலும் கிடைக்காது.

  கசகசா, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு ,தேங்காய்காம்பினேஷன் நன்றாக
  இருக்கும்.
  முந்திரிப்பருப்பும்வறுத்துப் போடலாமோ.:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா..   காலை வணக்கம்.  


   என்ன?  வெங்காயம் பார்த்து ஆறு மாதத்துக்குமேல் ஆகிறதா?  அம்மா...டி!

   நீக்கு
  2. நன்றி வல்லி அக்கா. முந்திரி பருப்பு... போட்டால் என்ன குறைந்து விடப் போகிறது? போட்டு விடலாமே..

   நீக்கு
 2. எல்லோருடைய மன நிலை, உடல் நிலை
  எல்லாம் அமோகமாக இருக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. //4 அவளது 5 பல்// hehehehehehe vi.vi.si.vi.vi.si. vi.vi.si. whose teeth are they? :)))))))))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி...   உடனேயே சரிசெய்யப்பட்டு விட்டது!

   நீக்கு
  2. நன்றி ஸ்ரீராம்!
   @கீதா அக்கா: அடக் கடவுளே!

   நீக்கு
  3. ஹிஹிஹி, நம்ம கண்ணிலே இதெல்லாம் தான் படும்! விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்போமுல்ல! :)))))

   நீக்கு
  4. பானுமதி எங்கே! எங்கே! எங்கே! வெறுத்துப் போய்ட்டாங்களோ? :))))

   நீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் எல்லா நலமும் கிடைத்து மன மகிழ்வோடும் ஆரோக்கியமாகவும் வாழப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 5. பானுமதி தயவிலே காலங்கார்த்தாலே சிரிப்பாய்ச் சிரிச்சாச்சு. செய்முறையை அழகாய்ச் சொல்லிச் செய்தும் காட்டி இருக்கிறார். இதை ஒரு விதமான சாம்பார்னு சொல்பவர்களும் உண்டு. முன்னெல்லாம் வீடுகளில் அதிகம் செய்ய மாட்டார்கள். பெரும்பாலும் ஓட்டல்கள், கல்யாணங்களில் தான். கும்பகோணம் பக்கம் கல்யாணங்களில் கல்யாணத்தன்று காலை டிபனில் இட்லியோடு கடப்பா கட்டாயமாய் இருக்கும். சிதம்பரம் பக்கம் எனில் இட்லியோடு சிதம்பரம் கொத்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடப்பா என்றால் நாங்கள் வெங்காயம் தக்காளி வதக்கிக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் கடலைமாவு சேர்த்து மேலும் இரண்டு திருப்பு திருப்பி எடுப்போம்.  பானு அக்கா சொல்லி இருப்பதுபோல செய்து பார்க்கவேண்டும்.  ஆனால் கெட்டியாக வரும்போல...   தண்ணீர் ஊற்றி விளாவிக் கொள்ளவேண்டியதுதான்!

   நீக்கு
  2. @ஸ்ரீராம், நீங்கள் செய்வது பாம்பே சட்னியில் ஒரு வகை. ஆனால் இதான் ஆரம்பம். அப்புறமாத் தான் அதிலேயே உ.கி. காய்கள் போட்டுச் சேர்ப்பது எல்லாம் வர ஆரம்பித்தது. கடப்பா முற்றிலும் வேறு.

   நீக்கு
  3. கடப்பா பெரும்பாலும் கும்பகோணம் ஓட்டல்களில் வாரம் ஒரு நாள் போட்டுடுவாங்க. அன்னிக்கு ஓட்டலுக்கே போக மாட்டோம். கடப்பா போடாத ஓட்டலாய்த் தேடிப் போகணும். இது நிறையத்தரம் கடப்பானு தெரியாத
   காலத்திலேயே அம்மா பூண்டு சேர்க்காமல் சப்பாத்திக்குத் தொட்டுக்கப் பண்ணி இருக்கார். அப்போவே பிடிக்காது. கல்யாணத்துக்கு அப்புறமா நம்ம ரங்க்ஸும்துணைக்கு வந்துட்டார். ஆகவே கடப்பா போடாத ஓட்டலாகத் தேடிப்
   பிடிப்போம். பானுமதி மன்னிக்கவும். காலையிலேயே இதைப் போட நினைச்சுப் போடாமல் சேமிச்சுட்டுப் போயிட்டேன். இப்போவும் போடலாமானு யோசனை தான். ஆனால் முன் வைத்த காலைப் பின் வாங்க மாட்டோமுல்ல! போட்டுட்டேன். ஓடியே போயிடறேன். விடு ஜூட்!

   நீக்கு
  4. ஆனால் ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். பானுமதி பூண்டு மிக மிகக் குறைவாய்ப் போட்டிருக்கார். குறைந்தது 50 கிராம் பூண்டாவது போடுவாங்க நான்கு பேருக்கான கடப்பாவில். அந்த வாசனைக்கே ஓடுவேன். :))))))

   நீக்கு
  5. //கடப்பா முற்றிலும் வேறு.// தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். நான் எப்போதும் பூண்டு சற்று குறைவாகத்தான் போடுவேன். கருத்துகளுக்கு நன்றி அக்கா.

   நீக்கு
  6. நீங்க போட்டிருப்பது தான் கடப்பா பானுமதி. ஶ்ரீராம், தக்காளி, வெங்காயம் வதக்கிக் கடலைமாவுச் சட்னி பண்ணுவதைக் கடப்பானு சொன்னார். அதற்காகச் சொன்னேன். :)))))

   நீக்கு
 6. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

  நலமே வாழ்க..

  பதிலளிநீக்கு
 7. விவரம் தெரிந்த காலத்தில்
  தஞ்சாவூர் கடப்பா என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

  தெற்கு ராஜவீதியிலும் சிறு உணவகங்களிலும் இது பிரசித்தம் என்பார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா...     நான் மிஸ் செய்திருக்கிறேனா, விவரம் அறியாமலேயே சாப்பிட்டிருக்கிறேனா என்று நினைவில்லை.

   நீக்கு
 8. ஆற அமர ஒரு நாளைக்கு செய்ய வேண்டும் என்று அறேழு ஆண்டுகளுக்கு முன் கடப்பா செய்முறைக் குறிப்பினை நறுக்கி வைத்தேன்..

  அது அத்தோடு இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 9. கட்டப்பா இல்லை, கடப்பா! //

  ரசித்தேன்.

  நன்றாக இருக்கிறது கடப்பா.
  நானும் செய்வேன். உருளையை சின்னதாக வெட்டி வேக வைத்து கலந்து கொள்வேன்.
  (கத்திரிக்காயும் விதை இல்லாதது, வயல் காட்டு கத்திரிக்காய் என்று வரும் மாயவரத்தில் கட்டியாக இருக்கும் ஆனால் பிஞ்சாக இருக்கும் கடப்பாவில் போடுவார்கள் மாயவரத்தில்)நானும் கத்திரிக்காய் போட்டு கடப்பா செய்வேன்.

  படங்களுடன் செய்முறை விளக்கம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடப்பா தஞ்சை மாவட்ட சிறப்பு போலிருக்கிறது. நன்றி.

   நீக்கு
 10. பானுக்கா சூப்பர் கடப்பா!!! நல்லா வந்திருக்கு. சேம் சேம்!! படங்களும் நல்லாருக்கு

  நம் வீட்டில் சப்பாத்திக்கு அல்லது பூரிக்குச் செய்வதுண்டு. தோசை இட்லி என்றால் மிளகாய்ப்பொடிதான் முதலில் ஹா ஹா ஹா ஹா...அப்புறம் தான் சட்னி சாம்பார் எல்லாம் நம் வீட்டில்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேம் சேம் நு சொன்னது அதே அதே ரெசிப்பின்னு...வேறு அர்த்தம் வந்துவிடக் கூடாதேன்னு ஹிஹிஹி இதைச் சொல்லிட்டு ஓடுகிறேன்...

   கீதா

   நீக்கு
  2. எனக்கும் கூட இட்லி,தோசைக்கு மிளகாய்ப்பொடிதான் முதல் விருப்பம். நன்றி கீதா.

   நீக்கு
  3. //தோசை இட்லி என்றால் மிளகாய்ப்பொடிதான் முதலில் // - இதெல்லாம் சொல்றதுக்கு முன்னால நல்லா யோசனை பண்ணிட்டுச் சொல்லணும்.

   சில வாரங்களுக்கு முன்பு என்னவோ வாங்கினதுக்கு ஒரு இட்லி மிளகாய்ப்பொடி பாக்கெட் (அவன் பிராண்டு) இலவசமாய்க் கொடுத்திருந்தான். சில நாட்களுக்கு முன் நான் செய்த மிளகாய்ப்பொடி ஓரிரு ஸ்பூன்கள் மட்டுமே இருந்ததாலும், கிச்சன் வேலைகளை நாங்கள் செய்ய ஒரு வாரம் ஆகும் என்பதாலும், தோசைக்கு நான் அந்த மிளகாய்ப்பொடி தொட்டுக்கொண்டேன் (நான் செய்துவைத்திருந்தது பசங்க சாப்பிடட்டும் என்று). இட்லி மிளகாய்ப்பொடி திதிக்குமா? அது திதித்தது. ஏண்டா சாப்பிட்டோம்னு ஆயிடுச்சு. கர்னாடகாவுல இன்னும் சால்ட்ல மட்டும்தான் வெல்லம் சேர்க்கலை போலிருக்கு

   நீக்கு
  4. நெல்லையாரே, தோசை மிளகாய்ப் பொடி, புளிக்காய்ச்சல் போன்றவற்றிற்குக் கொஞ்சம் போல் வெல்லம் சேர்ப்பது உண்டு. தோசை மிளகாய்ப் பொடியில் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் வறுத்துப் பொடிக்கையிலேயே வெல்லத்தைச் சேர்த்துடணும். அவ்வளவா இனிப்புச் சுவை தெரியாது. புளிக்காய்ச்சலிலும் கொஞ்சம் போல் சேர்த்தால் அவ்வளவாய்த் தெரியாது. புளியைக் கெட்டியாய்க் கரைத்துக் கொள்வதால் அந்தப் புளிப்புச் சுவை அதிகம் தெரியாமலிருக்கக் கொஞ்சம் போல் வெல்லம் போடுவார்கள். எதுவுமே அளவுக்கு மீறினால் சுவை இருக்காது தான்.

   நீக்கு
 11. அடிக்கடி இந்த கடப்பா பெயர் அடிபடுது... ஒருநாளைக்கு செஞ்சு பார்க்கனும்

  பதிலளிநீக்கு
 12. சாப்பிட்ட பின் முதுகில் வாள் செருகினது போல் வலி வருமோ...? அதனால் கடப்பாவோ...?

  ஜெய் மகிழ்மதி...

  ஓ... ஜெய் அனுஷ்மதி...!

  பதிலளிநீக்கு
 13. ஹா ஹா! உருளைக் கிழங்கு, பயத்தம் பருப்பு இவையெல்லாம் இருப்பதால் வந்தாலும் வரலாம்.

  பதிலளிநீக்கு
 14. கடப்பா என்பது மசாலா சேர்த்த உருளைக்கிழங்கு கூட்டு என்று சிம்பிளாக சொல்லலாமோ? 

  பதிலளிநீக்கு
 15. எல்லோரும் கும்பகோணம் கடப்பா பற்றி ஆஹா ஓஹோ என்று சொன்னதால், கும்பகோணம் சென்றிருந்தபோது வாரத்தில் ஒரு நாள் ஸ்பெஷலாகப் போடும் கடப்பாவை வாங்கி (இட்லிக்கோ தோசைக்கோ நினைவில்லை) தொட்டுக்கொண்டேன். எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதை குருமான்னும் சொல்ல முடியாது. சாம்பாரின் ஒரு வடிவம்னும் சொல்லமுடியாது. ஆனால் நிச்சயமாக நல்லால்லை என் ரசனைக்கு, என்றுதான் சொல்லமுடியும் (எங்க வீட்டிலுள்ளவர்களுக்கும் பிடிக்காது, என் மகள் தவிர.. அவள்தான் எதையும் ஒரு முறையாவது சாப்பிட்டுப் பார்க்காமல் முன் முடிவு வைத்துக்கொள்ள மாட்டாள், எதையும் சாப்பிடவே முடியாது என்று எங்களைப்போல் தீர்மானிக்கவும் மாட்டாள், if that is the only thing available, why not என்பாள். ஹாஹா. நான்லாம் அந்த மாதிரி நினைக்க சான்சே இல்லை)

  பா.வெ. அவர்களின் செய்முறை நன்று.

  பதிலளிநீக்கு
 16. சென்ற வாரத்தில்தான், ஒரு தடவை கடப்பா செய்யட்டுமா என்றேன் (பசங்கள்ட..சும்மாத்தான்). அப்பா... கடப்பான்னா அது கல்தானே.. ஆந்திரத்தைச் சேர்ந்ததுதானே.. உணவுன்னு சும்மாச் சொல்றீங்களா என்று கேட்டார்கள். அது நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆந்திர மாநிலம் கடப்பா என்னும் ஊரில் வெட்டி எடுக்கப்படுவதால் அதற்குக் கடப்பைக் கல் என்று பெயர். முன்னெல்லாம் கல்யாணச் சீர் வரிசைகளில் இதற்குத் தனி இடம் உண்டு.

   நீக்கு
 17. அருமையான கடப்பா. அனைவரும் நலம்தானே ;)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!