திங்கள், 23 நவம்பர், 2020

'திங்க'க்கிழமை  :  ஜிலேபி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி 

 

ஜிலேபி :

என் பெண், படிச்சிக்கிட்டிருப்பான்னு நினைத்துக்கொண்டிருப்பேன். திடுமெனெ கிச்சனுக்குள் நுழைவாள். என்னவோ செய்து, இதுதான் புது ஸ்வீட் என்பாள். (மனசுக்குள்ள, படிப்பாள்னு நினைச்சால் கிச்சன்ல புகுந்து ஸ்வீட்டைப்போய் செய்துக்கிட்டிருக்காளேன்னு தோணும்.). சில நாட்களாக அவள்தான் சமையலறை இன்சார்ஜ்.  ஒரு நாள் அவள் ஜிலேபி செய்தாள்.  அவள் பண்ணிக்கொண்டிருக்கும்போது ஒன்று சாப்பிட்டுப் பார்த்தேன். ரொம்ப நல்லா வந்திருந்தது. படங்கள்லாம் எடுத்தயா என்று கேட்டதற்கு, எப்படி வரும்னு தெரியாது, அதனால படங்கள் எடுக்கலைன்னா.  அப்புறம் முடிந்த அளவு படங்கள் எடுத்து எனக்கு அனுப்பினா. அதைத்தான் ரொம்ப நாள் கழித்து திங்கள் கிழமை பதிவுக்கு அனுப்புகிறேன்.  


என் பெண் எதைச் செய்தாலும் அவளுடைய baking experienceனால இவ்வளவு கிராம் என்றுதான் அளவு சொல்லுவா (ஆனா நான் கப் அளவுதான் சொல்லுவேன்).  அதுனால நீங்களும் எடை மிஷின் 700 ரூபாய் கொடுத்து வாங்கிவச்சுக்க வேண்டியதுதான். அவள் சொல்லும் ரெசிப்பிதான் நான் நிறைய எழுதுவேன் போலிருக்கு.


தேவையானவை


மைதா மாவு 65 கிராம்.  உளுத்தம்பருப்பை மிக்ஸியில் அரைத்துச் சலித்துக்கொண்ட உளுத்த மாவு 20 கிராம். ஈனோ சால்ட் 3/4 தேக்கரண்டி. நெய் 10 கிராம்.  பொரிக்கத் தேவையான எண்ணெய்.


ஜீனி 250 கிராம், ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி, குங்குமப்பூ, ஆரஞ்சு நிறமி


செய்முறை


மைதா மாவு, உளுத்தம் மாவு, ஈனோ, நெய் சேர்த்து கையால நன்கு கலந்துக்கணும். பிறகு தண்ணீர் 1/2 கப்புக்கும் குறைவாக, கொஞ்சம் கொஞ்சமாக விட்டு தோசை மாவைவிட கெட்டியான பதம் வரும்வரை கலந்துக்கணும்.  தண்ணீர் விடும்போது கையால் நன்கு கலந்துக்கணும்.


இன்னொரு பர்னரில், ஜீனியுடன் 1 கப் தண்ணீரைச் சேர்த்து பாகு வைக்கணும். கொஞ்சம் கொதித்தவுடன் ஏலக்காய் தூள் சேர்க்கணும். ஆரஞ்சு நிறமி கொஞ்சம் அதிகமா சேர்க்கணும். அதாவது ரொம்ப லைட் கலரா இருக்கக்கூடாது. கொஞ்சம் அதிகமான பிசுபிசுப்புத் தன்மை வந்த உடன் அடுப்பை அணைத்து பாகு பாத்திரத்தை தனியாக எடுத்து வைக்கவும். பாகு பாத்திரம் குறுக்களவு கொஞ்சம் சின்னதாகவும் பாகு நல்லா உயரமா இருக்கும்படி இருக்கணும். அப்போதுதான் ஜிலேபி ஊறுவதும் திருப்பிப் போடுவதும் சுலபமாக இருக்கும்.


ஜிலேபி மாவை அதற்குரிய பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டுவைக்கணும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சூடான பிறகு, ஜிலேபி இட வேண்டியதுதான். எண்ணெய் ரொம்ப சூடா இருந்தால், ஜிலேபி வரைவதற்குள், பிரிய ஆரம்பித்துவிடும். வட்டமான டிசைன் வரைவது கஷ்டமாகிவிடும்.


ஜிலேபி பொரிந்ததும், அதனை பாகில் 1/2 நிமிடத்திற்குப் போட்டு பிறகு திருப்பி விடணும். இன்னொரு 1/2 நிமிடம் ஆனபிறகு தட்டில் எடுத்து அடுக்கவேண்டியதுதான். 
இந்த ஜிலேபி, கடைகள்ல வாங்காம நாமே செய்தால் அதனுடைய தரமே தனி ரகம்தான். சில தெய்வங்களுக்கு உளுந்து சேர்த்துச் செய்யும் பண்டங்களை கண்டருளப் பண்ணுவார்கள். அப்போ, எப்போதும் செய்யும் வடைகளைச் செய்யாமல் இந்த ஜிலேபி செய்துபாருங்கள். ரொம்ப அருமையாக இருக்கும்.   


அன்புடன்


நெல்லைத்தமிழன்.


=======   


>>>>>>>  மின்நிலா  027  சுட்டி 


=======

159 கருத்துகள்:

 1. இன்னிக்கும் நான் தான் போணியா? அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரும் ஜிலேபி சாப்பிட்டு மன சந்தோஷத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கப் பிரார்த்தனைகள். மறையும் தொற்று முற்றிலும் மறையவும் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். ஜிலேபி சாப்பிட்டால் மன சந்தோஷமும் உடல் ஆரோக்கியமும் வரும் என்று நீங்கதான் முதன் முதல்ல சொல்லியிருக்கீங்க.

   நீக்கு
  2. ஹிஹிஹி, எனக்கு ஜிலேபியைப் பார்த்தாலே சந்தோஷம் வரும். சந்தோஷம் வந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும் தானே!

   நீக்கு
  3. எனக்கு சாப்பிட்டால் சந்தோஷம் வரும். நீங்களும் சந்தோஷமா இருக்கணும், நானும் சந்தோஷமா இருக்கணும். எப்போ ஜிலேபி தயார் பண்ணறீங்க? நடைப் பயணமாவே உங்க ஊருக்கு வந்துடலாம்னு இருக்கேன்.

   நீக்கு
  4. நடைப்பயணம்? நீங்க? இஃகி,இஃகி,இஃகி!

   நீக்கு
 2. இன்னைக்கு தி/கீதாவோடதா இருக்குமோனு நினைச்சேன். நெ.த.வின் பெண் அருமையாக, ஆர்வத்துடன், முழு ஈடுபாட்டுடன் அனைத்தும் செய்கிறார். ஜிலேபி நன்றாக வந்திருக்கு. எனக்கு இதைச் சூடாகச் சாப்பிட ரொம்பப் பிடிக்கும். வடக்கே இருக்கையில் அநேகமாக தினம் இதை வாங்கிச் சாப்பிட்டிருக்கோம். வீட்டிலும் பண்ணி இருக்கோம். நான் தேன்குழல் சொப்பிலே ஒரே ஒரு இழை இருக்கும் தட்டைப் போட்டுப் பண்ணுவேன். உளுந்து ஜாங்கிரியும் நிறையப் பண்ணி இருக்கேன். அதை ஹிந்தியில் "இமர்த்தி" என்பார்கள். அது சுற்ற எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடைசியா 2008 அல்லது 2009 இல் பண்ணினது தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா நான் இங்கு தி பதிவு அனுப்பி ரொம்ப நாளாகிவிட்டது. நேரம் இடிக்கிறது. ஏற்கனவே நான் எழுதுவதற்குத் தாமதமாகும். இப்போது வேலைகள் வேறு இருப்பதால் எழுதுவதற்கான அந்த மனநிலை வர ரொம்பவே நேரம் எடுக்கிறது.

   கீதா

   நீக்கு
  2. கருத்துரைகளுக்கு நன்றி.

   நீக்கு
  3. சூடான ஜிலேபி - நெய்யில் பொரித்தது - என் பையனுக்கு ரொம்பவே பிடிக்கும். எனக்கும்தான். நான் பஹ்ரைனில் இருந்தபோது அங்கிருந்த உ.பிரதேச இனிப்பு கடையில் வேலை செய்பவர்கள் என்னிடம் ரொம்ப அன்பா இருப்பாங்க. அதுல ஒரு மாஸ்டர், என்னிடம் ஜிலேபி துணியைக் கொடுத்து பிழிந்து கத்துக்கோங்க என்றார். நான், சரியா செய்யாமல் அவங்களுக்கு கஷ்டம் கொடுப்பானேன் என்று நினைத்து மாட்டேன் என்று சொல்லிட்டேன். அந்தக் கடைல எல்லாம் செய்யும் இடங்கள் வரை செல்லுவேன். புதிதாக என்ன செய்கிறார்களோ அதை எடுத்து டேஸ்ட் பார்ப்பேன். எனக்கு ஜிலேபி பிழியும் துணி ப்ரெசெண்ட் பண்ணினார். அது எங்க போச்சுன்னு தெரியலை. நிச்சயம் தூரப்போட்டிருக்க மாட்டேன்.

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் எல்லாருக்கும்.

  கீதாக்கா வந்துவிட்டேன் நானும்

  நெல்லை உங்க பெண்ணுக்கு வாழ்த்துகள் பல!!! என்னைப் போலவே பல ஆர்வங்கள் அவருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா ரங்கன். அவளுக்கு நிறையச் செய்து பார்க்க ஆசை, ஆனால் ஒன்றை, ஒரு தடவைக்கு மேல் செய்துபார்க்க மாட்டாள் (ஒரு சில விதிவிலக்குகள் இருந்திருக்கு). என்னிடம் சென்ற முறை மனோகரம் பருப்புத் தேங்காய் வடிவத்தில் செய்தபோது, அதையே எத்தனை தடவை செய்வீங்க, இனிமே யாருக்கேனும் கொடுக்கறதுனா, வேற ஸ்வீட்தான் செய்யணும் என்று சொல்லிட்டா.

   உங்களைப்போல் ஆர்வம் உடையவங்க, உழைப்பவங்க - ரொம்பவே அபூர்வம் கீதா ரங்கன்.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்தனகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. இனிப்பா ஜிலேபி செய்முறை போட்டப்பறமும், இந்த நாள் இனிமை நிறந்த நாளாக அமையுமா என்ற சந்தேகம் வரலாமா கமலா ஹரிஹரன் மேடம்?

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  இரண்டு கீதா சகோதரிகளுக்கும் என்னுடைய வணக்கங்கள். நெல்லைத் தமிழரின் மகள் செய்திருக்கும் ஜிலேபி மிக அருமையாக உள்ளது. சமையலில் அவரைப் போலவே ஆர்வம் காட்டும் அவர் மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
  பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
 6. நெல்லை அருமையா செஞ்சுருக்காங்க உங்க பெண்.

  நான் ஜாங்கிரி ஜிலேபி இரண்டும் செய்ததுண்டு. ஜிலேபி மிகவும் பிடிக்கும். அதில் புளிப்புத் தன்மை, க்ரிஸ்பினெஸ் என்பதால்.

  நான் ஜிலேபி கற்றது ஒரு வட இந்திய பையனிடம். எங்கள் வீட்டில் சில (10 வருஷ்ம மேல இருக்கும்) வருடங்களுக்கு முன் நெருங்கிய உறவினர் கல்யாணத்திற்கு வீட்டில் மெஹந்தி பார்ட்டி வைச்சிருந்தப்ப மாலை நேர ஸ்னாக்ஸ் க்கு ஜிலேபி போட ஒரு பையன் வந்திருந்தார் அவரிடம் கற்றது. அவர் மாவிலேயே கேசர் பௌடர் சேர்த்தார் நிறத்திற்கு.

  நானும் கிராம் கணக்குத்தான் இப்படியான விஷயங்கள் பேக்கிங்க் எல்லாவற்றிற்கும்... பெரும்பாலும். ஆனால் இங்கு திங்க பதிவிற்காக அதைக் கப்பில் அல்லது ஸ்பூனில் அளந்து சொல்லுகிறேன் ஏனென்றால் எல்லாரிடமும் கிராம் அளக்க எடை மெஷின் இருக்காது இல்லையா? அதனால் எல்லாருக்கும் உதவும் வகையில் நான் அளந்து சொல்லுவதுண்டு. என் தங்கைகள் எல்லாம் ஏய் சும்மா கிராம் கிராம்னு சொல்லாத அதுக்கு எங்க போறது. கப் ஸ்பூன் அளவு சொல்லு என்பார்கள். மகனோ கரெக்ட்டா அளவு சொல்லும்மா கிராம் சொல்லு இல்லேனா அளவு கப் அளவு ஸ்பூன் வைச்சு சொல்லும்மா என்பான் எனவே இப்போது டாக்குமென்ட் செய்யறப்ப இரண்டு அளவும் கொடுத்துப் போட முயற்சி செய்கிறேன். கஷ்டமாகத்தான் இருக்கு..ஹா ஹா ஹாஹ்ஹா..அதாவது எழுதுவது!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமையல் குறிப்புகளில் அளவு என்பது குறிப்பிட்டுச் சொல்வது கடினம்தான்.

   நீக்கு
  2. ஜாங்கிரி, ஜிலேபி - இரண்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா வட இந்தியாவில் இமர்த்தி என்று சொல்லும் மெட்ராஸ் ஜிலேபி எனக்குப் பிடிப்பதில்லை. அது ஊறினப்பறம் சாஃப்டா ஒரு வாசனையோட இருக்கணும். பஹ்ரைன்ல கெளரிகிருஷ்ணா ஹோட்டல் உண்டு. அங்க ரொம்ப ரொம்ப அருமையா மெட்ராஸ் ஜிலேபி செய்வாங்க (அதான் ஜாங்கிரி). இரவு 10 1/2 மணிக்குத்தான் ரெடியாகும். சில சமயம், அவரே போன் பண்ணிச் சொல்லுவார், நான் போய் வாங்கி வருவேன். சில சமயம் அவர்ட்ட, அது ஊறினப்பறம் நாளை வாங்கிக்கறேன் என்று சொல்லிடுவேன்.

   வட இந்திய ஜிலேபியில் எனக்கு மஞ்சள் கலர் போட்டிருந்தால் பிடிக்கும். சிவப்பா செய்வது அவ்வளவு பிடிப்பதில்லை. ஜிலேபில அந்த புளிப்பு டேஸ்ட்தான் அருமையா இருக்கும்.

   நீக்கு
  3. அளவு பற்றி எழுதினவுடன் எனக்கு விகடனில் படித்தது நினைவுக்கு வந்தது. கோவா அல்லது பாம்பேயில் தாஜில் தங்கியிருந்த தம்பதி, தங்களுக்கு தயிர் சாதம் வேணும் என்று கேட்டார்களாம். சொல்லி ரொம்ப நேரம் ஆகியும் வரவில்லை என்பதால் கிச்சன்ல கேட்டதற்கு, இன்னும் தாஜ் சென்னைலேர்ந்து ரெசிப்பி ஃபேக்ஸ் பண்ணலை. பண்ணின உடன் செய்து தருகிறோம் என்றார்களாம். பரவாயில்லை, வெறும் சாதத்தில் தயிர் கலந்து உப்பு போட்டு (அல்லது கடுகு தாளித்து) கொடுத்தால் போதும், ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடுவோம் என்றதற்கு, இல்லை, ரெசிப்பி இல்லாமல் தாஜ் கிச்சனில் எதுவும் செய்ய மாட்டோம் என்று சொல்லிட்டாங்களாம். இதை எழுதினவர், தாஜ் செஃப்.

   நீக்கு
  4. ஹா ஹா ஹா ஹா ஹா..அட கொக்கமங்கா..என்ன ஸ்டார் ஹோட்டலோ... ! ஹூம் நம்ம வீட்டுல எல்லாம் சும்மா இந்தா இம்புட்டு இம்புட்டுனு கையலேயே அளந்து போட்டு என்னமா சமைப்பாங்க!!

   ஆனா நம்ம செஃப் வெங்கடேஷ் பட் நேர்எதிர்!!! கை அளவுதான். நம்ம வீட்டைப் போல அவரும் பார்வையாளர்களுக்காக அளந்து அளந்து சொல்கிறார். அவரே சொல்கிறார் நீங்க கிராம் கணக்கெல்லாம் கேக்கறீங்க. எனக்குச் சொல்லத் தெரியாது. நான் எல்லாம் கையாலே கண்ணாலே பார்த்துச் செய்யறவன் ஆனாலும் உங்களுக்காக கூடியவரை அளந்து சொல்கிறேன் நான் போடறப்ப நீங்க கவனமா பாத்துக்கோங்க அதான் அளவு என்று.!!!!!

   ஆஹா நம்ம மாதிரின்னு நினைச்சுக்கிட்டேன்! ஹிஹிஹிஹி நைஸா சைக்கிள் காப்ல!!!

   கீதா

   நீக்கு
  5. கீதா ரங்கன்... அடுத்த முறை சந்திக்கும்போது நீங்க பண்ணின ஸ்வீட் கொண்டுவாங்க. நானும் உங்களுக்காக ஒரு ஸ்வீட் பண்ணி வைக்கிறேன் (நீங்க கண்ணால பார்த்துக்கோங்க, உங்க வீட்டுக்காரருக்குக் கொடுத்திடுங்க).

   நீக்கு
 7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  எல்லோரும் நோய் பயம் இல்லாமல்
  மன நிம்மதியுடன் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. ஆமாம் எண்ணை ரொம்ப சூடாகிடுச்சுன்னா ஷேப் வராது. எனக்கும் முதல் முறை தப்பியது. அப்புறம் சரியாக வர ஆரம்பித்துவிட்டது. நான் செய்து எடுத்த படங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். சென்னையில் இருந்தப்ப நான் செய்யும் போது நெருங்கிய உறவினர் படம் எடுத்தார். எதில் இருக்கிறது என்று தெரியவில்லை. இதே ப்ளாஸ்டிக் பாட்டில் தான் நான் பயன்படுத்துவதும்!!

  மீண்டும் மகளுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்! பன்முகத் திறமை!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா ரங்கன். ஆனா பாருங்க, அவ ஒரு தடவை செய்தாலோ அல்லது சில தடவைகள் செய்துட்டோம் என்று தோன்றிவிட்டாலோ, மீண்டும் கேட்டால் செய்து தருவது கடினம் (எனக்கு இண்டெரெஸ்ட் இருந்தால்தான் பண்ணுவேன் என்பாள்). இன்னும் பெரிய லோஃப் பண்ணிக்கொடு என்று ஒரு மாதத்துக்கு மேல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

   நீக்கு
  2. நெல்லை சேம் பிஞ்ச் டு உங்க மகள். நானும் அடுத்து புதுசா என்ன செய்யலாம்னுதான் பெரும்பாலும் யோசிப்பேன். ஆனா சிலர் கேக்கறப்ப முடியாதுன்னு சொல்ல முடியாதே!!! அப்பா அம்மா என்றால் ஈசியா சொல்லிடலாம் ஹாஹாஹாஹா!! நான் என் அப்பாகிட்ட அப்படிச் சொல்லுவதுண்டு. இப்ப நிறைய நினைத்துக் கொள்கிறேன். அவர் என் கூட இருந்தப்ப ஆசையா கேட்ட மிளகு பிஸ்கட், இஞ்சி பிஸ்கட் செஞ்சு கொடுக்கலையேன்னு. இதில் நான் கற்ற பாடம் யார் கேட்டாலும் உடனே செய்து கொடுத்துவிட வேண்டும் என்று.

   கீதா

   நீக்கு
  3. சமீபத்தில் என் மாமனார், அல்வா செய்துதரச் சொன்னார். நானோ, அதற்கு கிண்டுவதற்கு 1 1/2 மணி நேரம் ஆகுமே என்று யோசித்து, அன்னாவரம் பிரசாதம் (எபிக்கு எழுதி அனுப்பணும்) செய்துகொடுத்தேன். எனக்கும் மனதில் யார் கேட்டாலும் உடனே செய்துடணும் என்று தோன்றும். இல்லைனா, கேட்டாங்க, அப்போவே செய்திருக்கலாம் என்ற எண்ணம் மனசில் இருந்துகொண்டே இருக்கும். இன்று கேட்டேன், அல்வா செய்துதரவா என்று... அவர் வேண்டாம்... பிறகு சொல்கிறேன் என்று சொல்லிட்டார்.

   இதை எழுதும்போதே எனக்கு புதன் கேள்வி ஒன்று மனதில் தோன்றுகிறது.

   நீக்கு
  4. இப்போ திடீர் அல்வானு கோதுமை மாவிலேயே பண்ணிடறாங்க. அடுப்பில் நெய்யைக் காய வைத்து கோதுமை மாவைப் போட்டுக் கிளறணும். நல்ல பந்து போல் மாவு சுருளணும். பின்னர் வெந்நீரைக் கொதிக்க இன்னொரு அடுப்பில் வைத்து எடுத்துக் கொண்டு அதை கோதுமை மாவில் விட்டுக் கிளறணும். ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் அல்வா நிறம் தேவை எனில் அதைச் சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்கணும். தேவையான சர்க்கரையை நேரடியாகச் சேர்த்து மேலும் கிளற வேண்டும். அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த் தூள், முந்திரிப்பருப்பு சேர்த்துத் தட்டில் கொட்டித் துண்டங்கள் போடணும்.

   நீக்கு
  5. கீசா மேடம் கொஞ்சம் பொறுத்திருக்க மாட்டாங்களே... நான் செய்து செய்முறை அனுப்பிய பிறகு வேரியேஷன்ஸ் சொல்லக்கூடாதா? ஹாஹா

   கோதுமை மாவில் தண்ணீர் விட்டு 1/2 மணி ஊறவைத்து, பாலெடுத்து, மீண்டும் தண்ணீர் விட்டு 1 மணி கழித்து பாலெடுத்து என்று இரண்டு மூன்று முறை பாலை எடுத்த பிறகு, அதை கடாயில் கஞ்சிப்பதம் வரச்செய்து...பக்கத்தில் ஜீனியை கேரமலைஸ் செய்து, அதையும் அதில் சேர்த்து கலந்து கிளறி, கிளறி...... 1 1/2 மணி நேரம் அப்போ அப்போ நெய்யால் அபிஷேகம் செய்து இடையில் பச்சை முந்திரிப் பருப்புகளை அதிகமாகச் சேர்த்து, கிளறி, கடைசியில் 'உன் நெய்யும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்' என்று அல்வா, நெய்யைக் கக்கும்போது, நிறுத்தி அடுப்பிலிருந்து இறக்கவேண்டியதுதான். கிளறி கை வலி அதிகமாயிருக்கும், கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து சாப்பிடுவோம் என்று நினைத்து வந்தால், மிஞ்சி இருந்தால் இருக்கும் இல்லைனா இல்லை.

   அல்வாக்கு ஏலக்காய் தூளா? முந்திரி மாத்திரம் போதாதோ? அதுவும் பாதி கிளறும் சமயத்தில், கொஞ்சம் அதிகமாகவே முந்திரி சேர்க்கணும் (ஏன்னா... எப்போ ஸ்ரீராம் பிரேமா விலாஸ் முந்திரி அல்வா எனக்குத் தந்து, நான் எப்போ சாப்பிட்டு.... அதெல்லாம் தெரியாதில்லையா? ஹிஹி)

   நீக்கு
  6. அல்வாக்கு புளிப்புச் சுவை வருவதற்கு ஒரு மெதட் இருக்கு இதில். அதை எழுதலை.

   நீக்கு
  7. நீங்க சொல்லுகிறபடி பால் எல்லாம் எடுத்து இதைச் செய்ய வேண்டாம், மாவு மட்டும் போதும். நாங்கல்லாம் கோதுமையில் பால் எடுக்கும்போது முதல்நாளே எடுத்து வைத்துப் புளிக்க வைப்போம். அன்றே பால் எடுத்து அன்றே செய்தால் அப்போ எலுமிச்சம்பழம் பிழிவது உண்டு.

   நீக்கு
 9. நான் வைத்திருக்கும் எடை பார்க்கும் கருவி குறைந்தபட்சம் 5 கிராம் அதிகபட்சம் 1 கி. பவர் மெஷின் இல்லை. சாதாரணமான ஒன்றுதான். ரூ 250.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் வைத்திருக்கும் எந்திரம் 10 கிராம் முதல் 10 kg வரை நிறுக்கக் கூடியது.

   நீக்கு
  2. என் பெண்ணுக்கு, அவளுடைய நண்பர்கள் ஒரு கிச்சன் எடை பார்க்கும் மெஷின் கொடுத்திருக்காங்க. அதில் அளந்துதான் எல்லாம் செய்வாள். பொதுவா பேக்கிங் ஆர்வம் உண்டு என்பதால், அளக்காமல் எதையும் போட மாட்டாள். கையளவு, கண்ணளவுலாம் அவள்ட வேலைக்காகாது.

   நீக்கு
  3. நான் எல்லாமே கண்ணளவு தான்! அளவு கேட்டால் சொல்லத் தெரியாது.

   நீக்கு
  4. நெல்லை நம்ம சாப்பாடுனா காபி கப், ட்டி கப், குழம்பு கரண்டி, அல்லது கண்ணளவு கையளவு எல்லாம் ஓகே. ஆனால் நெல்லை, பேக்கிங்க் அல்லது சில ஸ்வீட் வகைகள் எல்லாம் கண்டிப்பாக அளந்துதான் போட வேண்டும். இல்லை என்றால் ஒழுங்கா வராது அட்ஜஸ்ட்டும் செய்ய முடியாது. எனவே உங்க பெண் செய்யறது சரியே.

   கீதா

   நீக்கு
  5. //அளவு கேட்டால் சொல்லத் தெரியாது.// - இவங்களை நம்பி, இவங்க எழுதின ரெசிப்பிலாம் சேகரித்து வைத்திருக்கிறேன். பண்ணும்பொழுதோ அதற்குப் பிறகோதான் பிரச்சனை வரும் போலிருக்கு.

   கீதா ரங்கன் - குழம்பு கரண்டி - குழம்பு கரண்டி என்று வித வித சைஸுல என்னிடம் இருக்கிறது. மனம் போன போக்கில் அவற்றை குழம்புக்கு, கூட்டுக்கு, தோசை வார்க்க என்று உபயோகிப்பேன். இனி இவங்க அளவுலயும் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் போலிருக்கு

   நீக்கு
 10. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
  நலம் வாழ்க என்றென்றும்...

  பதிலளிநீக்கு
 11. அன்பு முரளியின் மகளுக்கு மனம் நிறை ஆசிகள். மிக அழகாக
  ஜிலேபி செய்திருக்கிறார்.

  வண்ணமும் , கம்பி இழையோடும் ஜிலேபியும்
  மிக அருமை.
  உளுந்து அரைத்து செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
  மிக லாவகமாகச் செய்வார்கள்.

  இந்த வயதில் இவ்வளவு பொறுமையாக
  ஜிலேபி செய்வது மிக மிக மகிழ்ச்சிக்குரிய செய்தி.
  நன்றாக வந்திருக்கிறது.
  அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

   எனக்கும் வித விதமாகச் செய்ய ஆசைதான். ஆனா வீட்டுல (என்னுடைய கிச்சன் டர்ன் இல்லாதபோது) சரியா வரலைனா, கட் அண்ட் ரைட்டாக சரியா இல்லை, எதுக்கு அம்மா ரெசிப்பி மாத்தறீங்க என்றெல்லாம் சொல்லிடுவாங்க. நான் இனிப்பு செய்தால் அதுக்கு என் மனைவியைத் தவிர கஸ்டமர்கள், வீட்டில் கிடையாது.

   நீக்கு
 12. நேற்று தான் ஸ்ரீராம் அவர்களுடன் அன்பின் நெல்லை அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்...

  இன்று அவர் ஜிலேபி கொடுத்திருக்கின்றார்.

  எங்கும் நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 13. ஸ்ரீ வராஹி அம்மனுக்கு ஜிலேபி நிவேதனம் செய்வித்தால் - விரைவில் கடன்கள் தீரும்... அவளருள் கூடி நிற்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நினைக்கிறேன், உளுந்து போட்டுச் செய்யும் இனிப்பு வராஹி அம்மனுக்கு உகந்தது, உளுந்து போட்டுச் செய்யும் வடை ஹனுமனுக்கு உகந்தது என்று.

   நீக்கு
  2. கடன்கள் தீர்வது இருக்கட்டும். வரவேண்டிய பணம் வருவதற்கு யாரை வழிபடணும் (எந்தக் கோவில்), என்ன பரிகாரம் என்று நிறைய பேரிடம் கேட்டுவிட்டேன். சரியான வழிகாட்டுதல்தான் கிடைக்கலை. அதுக்குமே நேரம் வரணும் போலிருக்கு

   நீக்கு
  3. ஜிலேபியா, ஜாங்கிரியா? இரண்டுக்கும் வித்தியாசம் உண்டே! வடக்கே ஜாங்கிரி மாலை அனுமனுக்குப் போடுவதுண்டு, நாம் உளுந்து வடைமாலை சாற்றுவது போல!

   நீக்கு
  4. கீசா மேடம்... நீங்கதான் ஜாங்கிரி மாலை அனுமனுக்குப் போடுவாங்க என்று சொல்றீங்க. அங்க எந்த அனுமன் கோவிலுக்குச் சென்றாலும் ஜீனி உருண்டை இல்லைனா, பால்ல பண்ணும் ஸ்வீட்டை பிள்ளையார் பிடித்து வைத்ததுபோலச் செய்து அதைத் தந்துடறாங்க. இல்லைனா, அந்தச் செந்தூரத்தைக் கொஞ்சம் நெற்றியில் தீத்திவிட்டுடறாங்க.

   ஒருவேளை ராஜஸ்தான் ஹனுமான் கோவில்களில் இமர்த்தி மாலை உண்டோ? இருக்கும் இருக்கும்.

   நீக்கு
  5. அனுமனுக்கு ஜாங்கிரி மாலை சாற்றுவது குறித்து "தெய்வத்தின் குரல்" எந்த பாகம்னு நினைவில் இல்லை. ஆனால் வந்திருக்கு. விரைவில் தேடிப் பார்த்துப் போடுகிறேன்.

   நீக்கு
  6. நான் படித்திருக்கிறேன் கீசா மேடம். பரமாச்சார்யார் இதைப் பற்றிக் கேள்வி கேட்டு அதற்குப் பதில் சொன்னாராம் (ஏன் இங்கு வடைமாலை, வடக்கில் ஜாங்கிரி என்பதுபோல)

   நீக்கு
 14. ஜிலேபி என்றவுடன் பள்ளிக்காலத்தில்

  சிவாஜி
  வாயிலே
  ஜிலேபி

  என்று எழுதி வேடிக்கை காட்டியது உண்டு. ஜிலேபிக்கும் ஜாங்கிரிக்கும் உள்ள வித்தியாசங்களையும் சொல்லியிருந்தீர்கல் ஆனால் இன்னும் இனிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜிலேபி மைதா மாவினால் செய்யப்படுவது அது கொஞ்சம் மொரு மொரு என்று இருக்கும் இது நார்த் இண்டியன்ஸால் அதிகம் விரும்பி சாப்பிடப்படுவது ஜாங்கிரி உளுந்தினால் தயாரிக்கப்படுவது சாஃப்ட்டாக இருக்கும் தமிழக மற்றும் கேரளா மக்களால் விரும்பி சப்பிடப்படும் ஒரு ஸ்வீட் இந்த இரண்டும் ஆரஞ்சு கலரில் இருக்கும் அதாவது காவி கலரில் ஆனால் இதற்கும் பாகஜவிற்கும் எந்த சம்பந்தமும் இது வரை இல்லை ஒருவேளை வருங்காலங்களில் இது அவர்களின் அதிகாரப் பூர்வமான ஸ்வீட்டாக மாறினாலும் மாறலாம்

   நீக்கு
  2. வாங்க ஜெயக்குமார் சார்... மதுரைத் தமிழன் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லிவிட்டார்.

   ஜிலேபியில் சிறிது புளிப்புச் சுவை இருக்கும். தமிழகத்தில், ஜிலேபி என்று சொல்லப்படுவது ஜாங்கிரி. அது உளுந்தில் செய்வார்கள்.

   வட இந்திய கடைகளில் (பஹ்ரைன் அனுபவத்தை வைத்துச் சொல்றேன்), ஜாங்கிரியை இமர்த்தி என்பார்கள். அவர்கள் கூடை மட்டும், அதாவது ஜீனிப் பாகில் போடாமல், ஜாங்கிரி சுத்தி பொரித்து ஆறவைத்து, மூடை மூடையாக அடுக்கி பரணில் வைத்துவிடுவார்கள். ஒவ்வொரு நாளும் ஓரிரு கிலோக்கள் எடுத்து, புதிதாக ஜீனிப் பாகு தயார் செய்து அதில் போட்டு எடுத்துவிடுவார்கள். இந்த மாதிரி, பின்னணிச் செய்திகளை அவதானிப்பதால், நான் பெரும்பாலும், அப்போது தயார் செய்யும் இனிப்புகளைத் தவிர மற்றவற்றைத் தவிர்த்துவிடுவேன். தீபாவளிக்கும், ஒரு வாரம் முன்பே செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். செய்த உடன் நான் போய் எனக்கு வாங்கி வந்து சாப்பிடுவேன், தீபாவளி வரை காத்திருக்க மாட்டேன்.

   நீக்கு
  3. வாங்க மதுரைத் தமிழன் துரை. இந்தக் காவிக் காய்ச்சல் எப்போதான் போகுமோ.

   ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் எல்லா இனிப்புகளும் (மோத்திசோர் லட்டு உட்பட), இந்தியாவில் அறிமுகப்படுத்தியதே பாஜக கட்சிதான் என்று பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டில் படித்தேன்.

   நீக்கு
  4. எனக்கு மோதி லட்டு பிடிக்காது... லட்டுன்னா நீயூஜெர்ஸியில் உள்ள பாலாஜி கோவிலில் பிரசாதமாக விற்கப்படும் லட்டுதான் எனக்கு பிடிக்கும்

   நீக்கு
  5. //ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் எல்லா இனிப்புகளும் (மோத்திசோர் லட்டு உட்பட), இந்தியாவில் அறிமுகப்படுத்தியதே பாஜக கட்சிதான் என்று பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டில் படித்தேன்.///

   ஐ லைக் இட் படித்ததும் சிரித்தேன்

   நீக்கு
  6. இனிப்பு ரசனை பற்றி நான் எழுத ஆரம்பித்தால் நீண்டுகொண்டே போகும். கடவுள் மட்டும், 'நிறைய இனிப்பு சாப்பிடு, ஒரு பக்க விளைவும் உனக்கு ஏற்படாது நான் கேரண்டி' என்று சொன்னால், எத்தனை விதமான இனிப்புகளை ருசிக்கலாம். எனக்கு எதைச் சாப்பிட்டாலும் நிறைய சாப்பிட்டால்தான் திருப்தி (இனிப்பு).

   பஹ்ரைனில் என் boss சொல்லுவார்.. ஒரு இனிப்பில் பாதியை ரசித்துச் சாப்பிட்டாலே போதும். அதற்கு மேல் சாப்பிடுவது எல்லாம் ருசிக்காக இல்லை மனத்துக்காக என்பார். அந்த மெண்டாலிட்டி எனக்கு வருவதில்லை.

   திருப்பதி லட்டு, கீழ்த்திருப்பதி லட்டு, நெல்லை சாந்தி விலாஸ் அல்வா, மிக்சர், பாளையங்கோட்டை ஸ்ரீராம் லாலாவின் மனோஹரம், கல்லிடைக்குறிச்சி ஆஞ்சநேயா ஸ்வீட்ஸின் அதிரசம் என்று பெரிய லிஸ்டே இருக்கிறது. ஸ்ரீராம் வேறு எனக்கு 'பிரேமா விலாஸ் முந்திரி அல்வா' தரவேண்டியிருக்கு.ஹாஹா.

   நீக்கு
  7. மோதிசோர் லட்டு இல்லை, மோதிசூர் லட்டு!

   நீக்கு
  8. தலைவர் பெயருக்கு பங்கம் ஏற்படக் கூடாது என்று எவ்வளவு உஷாரா இருக்காங்க இவங்க. ஹாஹா

   நீக்கு
  9. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவர் தலைவர் ஆகும் முன்னர் இருந்தே இந்த லட்டு நான் சாப்பிட்டிருக்கேன். இதோடு கூட மாவாவும் சேர்த்து உருட்டுவாங்க. அந்தச் சுவையே தனிதான்.

   நீக்கு
  10. ஜிலேபி ஜாங்கிரி கன்ஃப்யூஸாவது உண்டு பிழிவது எது கஷ்டம்

   நீக்கு
  11. வாங்க ஜி.எம்.பி சார்.... ஜாங்கிரி பிழிவதற்கு திறமை வேணும். காரணம், முதல்ல இரண்டு வட்டம் போட்டு அதில் வளையம் வளையமா சுத்தணும், முதல் வட்டம் நகண்டு ஓடுவதற்குள் மாவு பிழிந்து சுற்றணும் (கையால). அதனால எண்ணெயும் ரொம்ப சூடா இருக்கக்கூடாது, நாமும் வேகமாச் சுற்றணும்.

   ஜிலேபிக்கு அப்படி இல்லை. வட்ட வட்டமாவோ, தொடர்ந்து வட்டமாவோ சுற்றுவது சுலபம் (ஓரளவுக்கு)

   நீக்கு
 15. ஜிலேபி நன்றாக வந்திருக்கிறது. ஜிலேபியை சூடாக சாப்பிட பிடிக்கும். சென்னை நெசப்பாக்கத்தில் ஶ்ரீராம் ஸ்வீட்ஸ் என்னும் சிறிய கடையில் ஜிலேபி நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.

   நீங்க சொல்வது ஜிலேபியா ஜாங்கிரியா? ஜாங்கிரி என்றால் நான் நெசப்பாக்கம் எங்க இருக்கு என்று தேடணும். ஜிலேபினா, நானே செய்துகொள்வேன்.

   பெரிய பிராண்டட் கடைகளில் ஜாங்கிரி சுமாராகத்தான் இருக்கு என்பது என் அபிப்ராயம்.

   நீக்கு
  2. சென்னை தி.நகரில் பேருந்து நிலையத்துக்கு எதிரே கிருஷ்ணவேணித் திரையரங்கு வளாகத்தில் ஓர் வட இந்தியக் கடை உள்ளது. உத்திரப்பிரதேசத்து (பிராமணர்களின் கடை) பிரிஜ்பாசி கடை உள்ளது. அங்கே சமோசா, ஜிலேபி (ஜாங்கிரி அல்ல) இரண்டும் மத்தியானம் பனிரண்டு மணியிலிருந்து சுடச்சுடப் போட்டு விற்பார்கள். நான் பார்த்துப் பத்து வருஷங்கள் ஆகிவிட்டன. இப்போ இருக்கா என்னனு தெரியாது. நெய்யில் பொரித்த ஜிலேபி!

   நீக்கு
  3. //நான் பார்த்துப் பத்து வருஷங்கள் ஆகிவிட்டன. இப்போ இருக்கா என்னனு தெரியாது// - அதெல்லாம் அன்னன்னைக்கு விற்றுத் தீர்ந்துடாது? ஹிஹி.

   பொதுவா ப்ரிஜ்வாஸி கடைகள், for that matter any north indian sweet shops அவங்க பகுதி ஸ்வீட்ஸ் ரொம்ப நல்லாவே தயார்பண்ணுவாங்க. அங்கல்லாம் லஸ்ஸி, சப்பாத்தி போன்றவையும் ரொம்பவே நல்லா இருக்கும். இங்கயும் அந்த மாதிரி கடைகள் இருக்கு. எப்போ சூடா போடறாங்கன்னு பார்த்துட்டுப் போகணும்.

   நீக்கு
  4. பாலைச் சுண்டக் காய்ச்சி ஏடுகளோடு இருக்கையில் இந்த ஜிலேபியை அதில் சூடாகப் போட்டுக் கொடுப்பாங்க! சாப்பிட்டிருக்கீங்களா?

   நீக்கு
  5. ஜிலேபிக்கு ரப்டியும் நல்லா இருக்கும், புளிக்காத கெட்டித் தயிரும் நல்லா இருக்கும், வெனிலா ஐஸ்க்ரீமும் நல்லா இருக்கும்.(னு அந்த இனிப்பு கடை ஓனர் சொன்னார்). ஆனால் எனக்கு ஒரு இனிப்பே போதுமே. எதுக்கு இன்னொன்றைச் சேர்க்கணும்?

   நீக்கு
 16. சமையலில் ஆர்வம் உள்ள"நெல்லை தமிழனின் மகளுக்கு வாழ்த்துகள்! நான் ஒரே ஒரு முறை செய்தேன். நன்றாக வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. நானும் செய்யணும் என்று ஆசை (முன்பு பஹ்ரைனில் செய்திருக்கிறேன்). இங்கு இனித்தான் செய்யணும்.

   என் பெண்ணுக்குத் தோன்றினால் மட்டும்தான் செய்வாள். சும்மா, எனக்கு இதைப் பண்ணித்தா என்றாள் செய்யமாட்டாள். ஹாஹா. நாங்க அவளை விட்டுவிட்டு திருநெல்வேலி 2018ல் போயிருந்தபோது, நாங்க திரும்பி வரும்போது மேசையில் அவளே செய்த திருநெல்வேலி ஹல்வாவை வைத்திருந்தாள்.

   நீக்கு
 17. ஜிலேபி பார்க்க நன்றாக வந்திருக்கிறது.. குட் எனக்கும் மற்றும் எங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு ஜிலேபியை விட ஜாங்கிரிதான் அதிகம் பிடிக்கும் ஆனால் இங்குள்ள க்டைகளில் ஜிலேபிகள்தான் கிடைக்கும் அதனால் நீயூயார்க்கில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்றால் கொயிலில் உள்ள ரெஸ்டராண்டில் ஜாங்கிரி கிடைக்கும் அதை நாங்கள் அள்ளி போட்டுக் கொண்டு வருவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மதுரைத் தமிழன். அங்க எவ்வளவு சார்ஜ் பண்றாங்க ஜாங்கிரிக்கு என்றும் எழுதியிருக்கலாம். பஹ்ரைனில், கிலோ 350 ரூபாய்தான் சார்ஜ் பண்ணுவாங்க. அது அங்குள்ள பணத்திற்கு சல்லிசு. (இப்போ கொஞ்சம் அதிகமாயிருக்கலாம்)

   நீக்கு
  2. கிடைக்காத ஒன்றின் மீது வரும் ஆசைதான் காரணம்!    ஜாங்கிரியே கிடைத்துக் கொண்டிருந்தால் ஜிலேபிக்கு ஆசை வந்திருக்கும்!

   நீக்கு
  3. எனக்கு உளுந்தினால் செய்யப்படும் எதுவும் அதிகம் பிடிக்கும் உதாரணத்திற்கு ஜாங்கிரி உளுந்தவடை, உளுந்து சாதம்., நெல்லைஜிலேபி, உளுந்தம் குழம்பு, உளுந்து துவையல்

   நீக்கு
  4. @நெல்லைத் தமிழன் https://canteen.nyganeshtemple.org/snacks/ இங்கே சென்று பாருங்கள் எவ்வளவு சார்ஜ் பண்ணுறாங்க என்ற விலைப்பட்டியல் இங்கே இருக்கு

   நீக்கு
  5. கேண்டீன் விலைப்பட்டியலைப் பார்த்தேன். மிக்க நன்றி. நிச்சயம் கொஞ்சம் எஃபர்ட் போட்டால், வீட்டில் நெய்யிலேயே செய்துவிடலாம். அட்டஹாசமாக இருக்கும் (மிக்சர் போன்றவை கடைகளில் வாங்குவதுதான் சுலபம். நாம எல்லாவற்றையும் செய்வது கஷ்டம் என்பது என் நினைப்பு)

   நான் லண்டனில் சரவண பவன் மதிய உணவு சாப்பிட்டபோது (8-10 பவுண்ட்ஸ் என்று நினைவு), விலை அதிகமில்லையா, பஹ்ரைன்ல 2-3 பவுண்ட்ஸ் கூட இல்லையே என்றேன். அதுக்கு அவங்க, இங்க குவாலிட்டில ரொம்பவே கடுமையா இருக்கணும், கொஞ்சம் எசகு பிசகாக இருந்தாலும் ஹெவி ஃபைன் போடறாங்க, அதையெல்லாம் மனசுல வச்சுத்தால் விலையும் இருக்கு என்றார்.

   நீக்கு
 18. இப்படி இன்ஸ்டன்டாக செய்ததுண்டு. எப்பவும் உளுந்து மாவு வீட்டில் இருக்கும்!. ஆனால் நான் கற்ற முறை கொஞ்சம் வித்தியாசமானது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது என்ன என்று எனக்காச்சும் சொல்லுங்க கீதா ரங்கன்.

   எனக்கு ரொம்ப ஆசை, ஒருவரிடம் நன்றாக சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று (professionalட).

   சமையல் செய்வதைப்போல் திருப்தி அளிக்கும் விஷயம் கிடையாது. சொதப்பினால் மனதுக்கு கஷ்டமாயிடும்.

   ஆனா தொடர்ந்து 365 நாளும் குறைந்தது இரண்டு வேளைகளாவது சமைக்கும் பெண்கள், உண்மையிலேயே போற்றப்பட வேண்டியவர்கள்.

   நீக்கு
  2. அப்ப என்னை போல சமைக்கும் ஆண்களை கோவில் கட்டி கும்பிடுவீங்களா நெல்லைத்தமிழன்

   நீக்கு
  3. 'சம்பாதிக்கிறோம்' என்ற எண்ணத்தால், சமைத்ததில் பாதியை கேரேஜ் குப்பைக் கூடைக்கு அனுப்புபவர்களை எப்படிப் பாராட்டுவது?

   அதுவும் தவிர, ஒரு தமிழனிடம் இப்படி கேள்வி கேட்கறீங்களே. தமிழர்கள் பெண்களுக்கு மட்டும்தான் கோவில் கட்டுவாங்க, வீட்டுல ஆனா அடக்குமுறையைப் பிரயோகிப்பாங்க. ஹாஹா.

   நீக்கு
  4. ஜிலேபிக்கு நான் உளுந்து மாவெல்லாம் சேர்த்ததில்லை. மைதாமாவிலேயே புளிப்பான தயிர் விட்டுப் பிசைந்து தான் பண்ணி இருக்கேன். நன்றாகவே வரும். ஈனோவெல்லாம் அப்போத் தெரியாது. போட்டதில்லை. பின்னாட்களில் அவன் பேகிங் செய்யும்போது ஈனோ பற்றி எல்லாம் தெரிந்து கொண்டேன். கல்யாணம் ஆன புதுசிலே எல்லாம் பாரம்பரிய முறைப்படித்தான்.

   நீக்கு
 19. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 20. ஜிலேபி செய்முறை படங்கள், குறிப்புகள் எல்லாம் அருமை.
  நன்றாக வந்து இருக்கிறது ஜிலேபி.
  நெல்லைத் தமிழன், உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
  சூடாய் சாப்பிட்டால் நன்றாக இருக்கும், வீட்டில் சூடாய் செய்து சாப்பிடலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அரசு மேடம்... பாராட்டுகளை அவளிடம் சொல்லிடறேன் (அவள் எக்ஸாமுக்குப் படித்துக்கொண்டிருக்கிறாள். இன்று சி.ஏ. ஃபைனல் தேர்வில் ஒரு பேப்பர் உள்ளது)

   இது ஆறினாலும் ரொம்ப நல்லா இருக்கும். நன்றி

   நீக்கு
  2. சி.ஏ. ஃபைனல் தேர்வில் ஒரு பேப்பர் உள்ளது//

   வாழ்த்துக்கள் !

   நீக்கு
  3. விரைவில் உங்கள் பெண் சி.ஏ.வில் நல்லமுறையில் தேர்ச்சி பெற்று அவளுக்குப் பிடித்த வேலைக்குப் போக வாழ்த்துகள்.

   நீக்கு
  4. இப்போதான் எழுதுகிறாள். ஆனால் முதல் பேப்பர் எழுதும்போது, அருகில் இருந்த பையன் மாஸ்கை எடுத்துவிட்டு இருமிக்கொண்டே இருந்தானாம். எக்ஸாமினரும் அவ்வப்போது இருமினாராம். அடுத்த பேப்பர் எழுதப் போக பயப்படுகிறாள். ஜனவரில எழுதிக்கொள்ளலாம் என்றிருக்கிறாளாம். நான் சொன்னேன், கோவிட் பிரச்சனை இன்னும் ஒரு வருடம் ஆனாலும் தீராது என்று. பார்ப்போம்.

   நீக்கு
 21. மைதாவிற்கு பதிலாக சிறிது அரிசி கலந்து உளுந்துடன் அரைத்து செய்யலாம்.
  கொஞ்சம் மொறு மொறு என்று இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ நம்ம ஜாங்கிரியை சின்ன சைஸில் செய்ததுபோல ஆகிடாதா?

   நீக்கு
  2. கோமதி அரசு, நெல்லையாரின் பெண் செய்திருப்பது ஜிலேபி. நீங்க சொல்லுவது ஜாங்கிரி. ஜாங்கிரிக்குத் தான் உளுந்துடன் அரிசியை அரைத்துச் செய்வார்கள். ஜிலேபிப் பருப்பு என்றே கடைகளில் விற்பார்கள். இது வேறே! இதில் சுற்றெல்லாம் வராது. இது தான் உளுந்து அரைத்துச் செய்வதை விட அதிகம் மொறுமொறுப்பாக வரும். கையால் பிய்க்கும்போதே உள்ளே குழலோடிக் கொண்டு வரும். இது அதிகம் தமிழகத்தில்/தென்னாட்டில் பார்க்க முடியலை. வட இந்தியக் கடைகளில் செய்யறாங்க.

   நீக்கு
  3. வட நாட்டில் சாப்பிட்டு இருக்கிறேன், அங்கு கடுகு எண்ணெயில் செய்வார்கள் . சில இடங்களில் மட்டும் நெய்யில் செய்கிறார்கள். பார்த்து வாங்கி சாப்பிட வேண்டும். ரயில் நிலையங்களில் பெரும்பாலும் கடுகு எண்ணெய்தான்.
   மதுரையில் "லட்சுமி பவன்" ஓட்டலில் இந்த ஜிலேபி கிடைக்கும்.

   நீக்கு
  4. //அப்போ நம்ம ஜாங்கிரியை சின்ன சைஸில் செய்ததுபோல ஆகிடாதா?//

   ஆகாது நெல்லை, ஜாங்கிரிக்கு பொங்க பொங்க உளுந்து அரைத்து கீதா சொல்வது போல் அரைத்து கொண்டு இருக்கும் போதே மாவை எடுத்து செய்வார்கள் அரிசி மாவு ஒரு ஸ்பூன் சேர்ப்பார்கள் வேண்டும் என்றால்தான்.
   திருநெல்வேலி ஜிலேபி வெள்ளை கலரில் கிடைக்கும். வண்ணம் சேர்க்க மாட்டார்கள். இலையில் கட்டி கொடுப்பார்கள் முன்பு. என் மாமனாருக்கு அது மிகவும் பிடிக்கும் என்பதால் திருநெல்வேலியிலிருந்து வருபவர்கள் வாங்கி வருவார்கள் மாமாவுக்கு.

   நீக்கு
  5. எங்கேர்ந்து என்ன என்ன வாங்குவார்கள், நல்லா இருக்கும் என்று எழுதினால் நிச்சயம் நான் குறித்துவைத்துக்கொள்வேன். தேடிப்போய் வாங்குவேன். அடுத்த முறை நிச்சயம் நெல்லையில் ஜிலேபியைத் தேடுவேன். நன்றி கோமதி அரசு மேடம்.

   நீக்கு
  6. கோமதி, நீங்க எங்கே சாப்பிட்டீங்கனு தெரியலை. பொதுவாக வடமாநிலங்களில் கடுகு எண்ணெய் பயன்பாடு உண்டு என்றாலும் இம்மாதிரிப் பண்டங்கள் நெய்யில் தான் செய்வாங்க. பிஹார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கடுகு எண்ணெயின் பயன்பாடு அதிகம் இருக்கும். உ.பி.ராஜஸ்தான், தில்லி, குஜராத், மஹாராஷ்ட்ராவில் பார்க்க முடியாது. அங்கெல்லாம் கடலை எண்ணெய் தான். நெய் இனிப்புக்கு. தேஷிகீ என்பார்கள். கடைகளில் பெரிய அளவில் அறிவிப்பே இருக்கும். இங்கே கடலை எண்ணெயும் (முங்ஃபலி கா தேல்) தேஷிகீயும் (வெண்ணெய் காய்ச்சி எடுத்த நெய்)(டால்டாவை அங்கே "நெய்" என்பார்கள்.) பயன்படுத்திச் செய்யும் தின்பண்டங்கள் என்று காணப்படும். பஞ்சாப், ஹரியானாவில் கொஞ்சம் கொஞ்சம் கடுகு எண்ணெய் பயன்பாடு உண்டு என்றாலும் பெரும்பாலும் ஊறுகாய்க்குச் சேர்ப்பார்கள். அதிலும் வெஜிடபுள் ஊறுகாய், மஞ்சள் ஊறுகாய் போன்றவற்றிற்குக் கட்டாயமாய் கடுகு எண்ணெய் தான்.

   நீக்கு
 22. ஈனோ சால்ட் 3/4 தேக்கரண்டி.//
  லேசான புளிப்பு சுவைக்கு ஈனோவா?
  அரைத்து கொஞ்சம் புளிக்க வைத்து செய்வார்கள், புளிப்பு சுவை வேண்டாம் என்றால் உடனே அரைத்தவுடன் செய்யலாம்.
  திருநெல்வேலி பக்கம் "மிட்டாசி" என்று செய்வது இப்படி புளிப்பு லேசான புளிப்பு சுவையுடன் இருக்கும். கருப்பட்டி மிட்டாசியும் விற்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதி அரசு மேடம்... நான் முன்பு செய்தபோது மாவைத் தயார் செய்து கொஞ்சம் புளிக்க வைத்தேன் (மறுநாள்தான் செய்தேன் என்று நினைவு).

   நீங்க மிட்டாசி என்று சொல்வது சீரணிமிட்டாயைச் சொல்றீங்களா?

   எனக்கு செய்த உடனே அங்கு சீரணி மிட்டா வாங்கிச் சாப்பிடணும்னு ஆசை. நெல்லை பக்கம் போய் மூன்று நாட்களாவது இருந்துட்டு வரணும்னு எண்ணம். நம்ம ஊரு, நம்ம ஊருதான்.

   நீக்கு
  2. நான் மைதாமாவு, தயிர் கலந்தே செய்திருக்கேன். ஜாங்கிரிக்கு எனில் அரைக்கையிலேயே மாவை அப்படியே எடுத்துப் பிழிவார்கள். எங்க வீட்டில் நான் அரைத்தால் அம்மா பண்ணுவார். பின்னாட்களில் உதவிக்கு யாரும் இல்லை என்பதால் நான் நன்கு அரைத்து வைத்துக் கொள்வேன். பின்னர் பிழிவேன்.

   நீக்கு
  3. திருவிழா கடைகள், பெரிய பெரிய பலகார கடைகளில் உயரமாக வட்டமாய் முறுக்கு சுற்றியது போல் அடுக்கி வைத்து இருப்பார்கள், வெள்ளையாக ஒன்றும், கருப்பட்டி சேர்த்து இருப்பதால் கருப்பாகவும் இருக்கும். உடைத்து போட்டு நிறுத்து தருவார்கள். முட்டாசி என்று தான் நம் ஊர் பக்கம் சொல்வார்கள்.
   சங்கரன் கோவில் பதிவில் இந்த மிட்டாசி படம் போட்டு இருந்தேன் தேடி தருகிறேன் சுட்டியை.

   நீக்கு
  4. ஆமாம் கோமதி அம்மா. அதை சீரணி மிட்டாய்னு சொல்வாங்க. கருப்பட்டிலயும் செய்வாங்க. நான் நெல்லை ஜங்ஷனில் வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தேன். நினைத்த மாதிரி இல்லை. பார்க்க அழகா இருக்கும். முன்பெல்லாம் ஜீனி, கருப்பட்டில மட்டும் பண்ணுவாங்க, வெள்ளை, கருப்பு நிறத்துல இருக்கும். இப்போல்லாம் கலர் சேர்த்து சிவப்பு நிறத்துலயும் செய்யறாங்க.

   நீக்கு
 23. எங்கள் ஊருக்கு வருபவர்களுக்கு வாங்கித் தருபவை :

  1) ஜிலேபி
  2) சிறுமலை வாழைப்பழம்
  3) பூட்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா. வாங்க திண்டுக்கல் தனபாலன். எங்க அப்பா அந்நாட்களில் திண்டுக்கல்லில் வேலைபார்த்தார் (ஆசிரியப்பணி). என் அம்மாவும் நிறையச் சொல்லியிருக்காங்க, சிறுமலை வாழைப்பழம் பற்றி. எங்க அப்பா எப்போதுமே திண்டுக்கல் பூட்டுதான் வாங்கிவச்சிருப்பாங்க. நவ்தாலுக்கு அவர் மாறவே இல்லை, அந்தப் பூட்டு மாதிரி வராதுடாம்பார்.

   நீக்கு
  2. நெல்லை, எங்க வீடுகளில் சம்பந்தி வீட்டிற்குச் செல்கையில் சிறுமலைப்பழமே வாங்கிச் செல்லணும். பூவன் பழம் என்றால் கொடுக்கவே கூடாது. கொடுத்தாலும் மட்டமாகப் பேசுவார்கள். ரஸ்தாளியை லட்சியமே செய்ய மாட்டார்கள். மலைப்பழம் திருச்சியில் கிடைக்கும் பெரியது அல்லது சிறுமலைப்பழம் இவை தான்

   நீக்கு
  3. பூவன் பழம் என்று சொல்றதுதான் கதலியோ? அது கொஞ்சம் சுமாரான பழம். இங்கல்லாம் கற்பூரம், செவ்வாழை, நேர்ந்திரன் கிடைக்குது. ரஸ்தாளின்னு நீங்க சொல்றதுதானே கோழிக்கோடு பழம்னு நாங்க சொல்றது? செவ்வாழை மாதிரி ஆனா மஞ்சளா இருக்கும், பழம் ஸ்மூத்தா இருக்கும். அதுவும் நல்லா இருக்கும்.

   நீக்கு
  4. இருக்கலாம். எனக்குப் பூவன் பழமே ஒத்துக்காது. ஒருதரம் சாப்பிட்டுவிட்டு அவதிப்பட்டேன். இங்கேயும் கற்பூர ரஸ்தாளி, செவ்வாழை, நேந்திரன் எல்லாமும் கிடைக்கும். சின்னச் சின்னதாக ஏலக்கியும் கிடைக்கும். ரஸ்தாளி எனக்குப் பிடிக்காது. உள்ளே கட்டை கட்டையாகப்பழம் கனியாமல் பாதிக் காயாட்டமா இருக்கும். ஸ்மூத்தா எல்லாம் இருக்காது.

   நீக்கு
 24. ஆஆஆஆஆ கிச்சின் கைக்கு வந்த அடுத்த நாளே ரெசிப்பி அனுப்பிட்டாரே நெ தமிழன்:)....
  ஜிலேபி ஜிலேபி..... இத நாங்கள் தேன்குழல் என்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா. இதைச் செய்தது என் பெண். கிச்சன் என் கைக்கு வந்தபோது நானும் சிலவற்றைச் செய்துபார்ப்பேன். பாதிக்குப் பாதிதான் சக்சஸ் ஆகும்.

   நீக்கு
  2. வாங்க அல்லிராணி, இந்த வருஷம் சஷ்டி விரதம் இருக்கையில் உங்களைத் தான் நினைச்சுட்டு இருந்தேன். நான் சுமார் ஐந்தாறு வருஷம் கழிச்சு இந்த வருஷம் சஷ்டிக்கு விரதம் இருந்தேன். காலைக் காஃபி, பின்னர் ஒரு தம்பளர் பால், பின்னர் மதியம் ஒரு கரண்டி சத்துமாவு, நாட்டுச்சர்க்கரை சேர்த்து. மாலை ஒரு தரம் தேநீர். அவ்வளவு தான். மறு நாள் தான் பாரணை முடித்தேன்.

   நீக்கு
  3. ///ஜிலேபி ஜிலேபி..... இத நாங்கள் தேன்குழல் என்போம்.//

   ஹாஆஹா ஹய்யோஓஒ :) நான் ரிவர்ஸ் ஆர்டார்ல வந்தேனா இந்த வரி படிச்சதும் நீங்களாத்தான் இருக்கணும்னு நினைச்சேன் என் கணிப்பு சரியாகிடுச்சு :)
   தேனே இல்லாததை எப்படி தேன் குழல்னு சொல்லலாம் :)) சர்க்கரை குழல்நா ஓகே :)))

   நீக்கு
  4. எனக்கும் மனசுல, அப்போ நாங்க தேன்குழல்னு சொல்கிற முறுக்கை என்ன பேர் சொல்லி அழைப்பாங்கன்னு தோணுச்சு. பாவம்... ரொம்ப ரொம்ப வருடங்கள் கழித்து இணையத்துக்கு வந்திருக்காங்க. எதுக்கு இதெல்லாம் சொல்லிக்கிட்டு என்று விட்டுவிட்டேன்.

   //தேன்குழல்// - சமீபத்துல, ஒரு விசேஷத்துக்கு, பாக்கெட்ல போட்டுக்கொடுக்க ஜாங்கிரி செய்யறீங்களா என்று கேட்டபோது, அது வேண்டாம் சார்.. பாகுலாம் ஒழுகி பாக்கெட்லாம் சரியா இருக்காது. பேசாம சாப்பிடும்போது ஜாங்கிரியும், கைக்கு லட்டுவும் கொடுத்திடுவோம்னு சொன்னார்.

   நீக்கு
  5. ஹாஹா :) பணியாரத்தை குண்டு தோசைன்னு சொல்வாங்க ..சரி சரி விட்ருவோம் வேறொரு டைம் கலாய்ச்சுக்கலாம் 

   நீக்கு
  6. என்னா நடக்குது இங்கே? கர்ர்ர்ர்ர்ர்ர்ர் பூனை படுத்திட்டால் எலிக்குக் கொண்டாட்டமாமே:).... கீசாக்கா நீங்களும் விரதமோ அவ்வ்வ்வ்வ் முழங்கையை நீட்டுங்கோ முட்டிடுவோம்... கொரோனாக்கு கை குலுக்குவது பிடிக்காதாமே:)...
   நான் இம்முறை வேலை டெய்லி போனதால் பாலும் பழமும் ஈசியாகிட்டுது... வீட்டில் நின்றால்தான் படிக்குது கர்ர்ர்ர்ர்ர்:)

   நீக்கு
  7. ஏதோ உலகத்துல இல்லாத, 'பாலும் பழமும்' விரதமாமே... ஜி.எம். டயட்டுல ஒரு நாளைக்கு 4-5 வாழைப்பழமும் 250 எம்.எல். பாலும்தான். நாங்களும் டயட் இருப்போமுல்ல.

   நீக்கு
  8. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ தமிழன்:) ஜி எம் டயட்... காலை முதல் சாப்பிடலாமாக்கும்:) இது நைட் மட்டும்தானே.. அதிலயும் என்னைப்பொறுத்து பால் எல்லாம் குடிப்பதே இல்லை, ரீதான்... பழமெனில் எதுவும் சாப்பிடப்பிடிக்கவில்லை, உண்மையில் எதுவுமில்லாமல் வெறும் ரீயுடந்தான் முடிச்சேன் எனச் சொல்ல்லுவேன் நான்....

   நில்லுங்கோ.. வள்ளியிடம் சொல்லி அனுப்பி முருகனிடம் சொல்லச் சொல்லிவிடுகிறேன்ன்:)).. கனவில வந்து மிரட்டுவார்:))

   நீக்கு
  9. உண்மையைச் சொல்லப்போனால்.. இந்த ஜிலேபி(எ)தேன்குழலை நான் மணந்துகூடப் பார்ப்பதில்லை, எனக்கு இனிப்பு ஐட்டம் பிடிக்காது, அதனால செய்யவும் பிடிக்காது:)).. ஆனால் இனிப்பில நன்கு பிடிச்சது ஒரு ஐட்டம் இருக்குது இப்போ பெயர் வாயில வருகுதில்லை, பாலில் சீஸ் உருண்டைகள்போல செய்து, பாதாம் பாலுக்குள் போட்டிருப்பினமே.. அதுதான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும்.. ஆனாலும் ஒரு தடவை ஒன்றுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பேனாக்கும்:))

   நீக்கு
  10. //எனக்கு இனிப்பு ஐட்டம் பிடிக்காது, அதனால செய்யவும் பிடிக்காது:))// - அப்போ நீங்க இதுவரை செய்ததாகப் போட்டிருந்த இடுகைகள்லாம், வெறும் இடுகை போடுவதற்குத்தானா? பண்ணினப்பறம், கு.கூடை அல்லது மற்றவர்களுக்குத் தானமா? இதை நம்பி நான் நீங்க எழுதினதில் கேக் மாதிரி கட் பண்ணக்கூடிய கேசரி, அப்புறம் கொழுக்கட்டை போன்ற பலவற்றைச் செய்துபார்க்கணும்னு திட்டம் போட்டிருந்தேனே... கடவுளே.. காப்பாற்றினாய்

   நீக்கு
  11. இந்தத் தீபாவளிக்கு எங்க பில்டிங்ல ஒரு வட இந்தியர், ஏகப்பட்ட flatsக்கு ரசகுல்லா 1/2 கிலோ ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பியிருந்தார் (ஆர்டர் செய்து வாங்கினது). எங்க வீட்டுல நான் மட்டும் சாப்பிட்டேன், அட்டஹாசம் (மத்தவங்கள்லாம் கொரோனா காலத்துல வெளில ஒருத்தர் பண்ணினதைச் சாப்பிடணுமா என்று யோசித்துக்கொண்டே இருந்தார்கள்). என்னுடைய உறவினருக்கும் அது போச்சு. அவங்களும் இதே காரணத்துக்காகச் சாப்பிடலை.

   ரசமலாய், என் பெண் ஒரு தடவை செய்திருந்தாள். எனக்கு ரசமலாய் ரொம்பவே பிடிக்கும், ஆனா பாருங்க.... எனக்கெல்லாம் ஒரு 5-6வது சாப்பிட்டாத்தான் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். ரசமலாய்-ஒரு அட்டஹாசமான இனிப்பு.

   நீக்கு
  12. அதே அதே:)... ஆனா உண்மையைச் சொல்லட்டோ... ரசமலாய், ரசகுல்லா வித்தியாசம் தெரியாது:)... ஆனா நான் இதில ஒன்று மட்டும்தான் அதுவும் சமீபத்தில் தான் முதன்முதலா சாப்பிட்டேனாக்கும்:)... அது பாதாம்பாலில் இருந்தது என மட்டும் தெரியும்...

   நீக்கு
 25. மகள் அழகா அருமையாச் செய்திருக்கிறா... எங்கள் பிள்ளைகளுக்கு இது பிடிக்கும்.

  இப்போதாவது ஒத்துக் கொள்ளுங்கோ:).... பெண்கள் என்ன பண்னுகிறார்கள்:).. என்ன யோடிக்கினம் என உங்களால பிரடிக்ட் பண்ணவே முடியாதாக்கும்:)... ம்ஹூம்ம்ம்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலமா அதிரா?
   வாழ்க வளமுடன்
   சஷ்டி விரதங்கள் நல்லபடியாக நிறைவு செய்து இருப்பீர்கள்.

   நீக்கு
  2. நன்றி அதிரா. ஆமாம்... நீங்க செய்தமாதிரித் தெரியலையே (வெந்நீர் வைத்தாலே இடுகை போடறவங்க, ஜிலேபிலாம் செய்தால் இடுகை போட்டிருக்க மாட்டாங்களா?)

   இன்னும் பட்டப்பெயர் 'அல்லிராணி'லேயே இருப்பதால், அடுத்த இடுகை நீங்க போடும்வரை பெயரை மாத்திக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.

   நீக்கு
  3. கோமதி அக்கா நான் நலம் நன்றி... இப்போ ஆடு கோழி எல்லாம் என்னைப்பார்த்து ஓடுது நேர்ரிலிருந்து கர்ர்ர்ர்ர்:)... நான் ஒண்ணும் பண்ணலியே:)... சனிக்கிழமை பாரணை முடிச்சதிலிருந்து உங்கட, கீசாக்கா பக்கம் எல்லாம் வர வெளிக்கிட்டு தடையாகிப்போச்சு... வருவேன்...

   நீக்கு
  4. போஸ்ட்டுடன் பெயரும் மாத்தி விரைவில குதிக்க இருக்கிறேன் கொஞ்சம் தென்பானதும் நெ தமிழன்...

   நீக்கு
  5. புது போஸ்டைப் படித்த பிறகு நாங்களே, உங்களுக்குப் புதுப் பெயர் சஜஸ்ட் பண்ணலாம்னு இருந்தோம். ஹாஹா. குதிங்க...ஆனா மெதுவா குதிங்க. என் லேப்டாப் கீழ விழுந்துடப்போகுது.

   நீக்கு
  6. நான் குதிச்சால் கொம்பியூட்டர் தான் விழும் ஆனா அஞ்சு குதிச்சால்... அது ஏர்த் குவெக்:)... ஹா ஹா ஹா:)

   நீக்கு
 26. படங்கள் அழகாக வந்து இருக்கிறது நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி.

   படங்கள் மட்டுமா? ஜிலேபி சுவையா இல்லையா என்று கேட்டால், என்னை அனுப்பச் சொல்வீர்கள்.

   நீக்கு
 27. ஜிலேபி நல்லா வந்திருக்கு அழகா .. மகளுக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க .எங்கப்பாக்கு ரொம்ப பிடிக்கும் சென்னை சௌகார்பேட்ல ஒரு மார்வாரி கடைல தான் வாங்கி வருவார் பாரீஸ் கார்னர் போகுமோது ...நான் சாப்பிட்டதில்லை :) .அவங்க சமோசாவும் குண்டோ குண்டுன்னு இருக்கும் என்னென்னமோ வாசனை வரும் எனக்கு அப்போ நம்ம  வகை தான்  பிடிக்கும் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சலின். எனக்கும் வட இந்திய சமோசா எப்போதுமே பிடிக்காது (என்றே மனசில் நினைப்பு). சில வருடங்களுக்கு முன்புதான் அதனைச் சாப்பிட ஆரம்பித்தேன். ரொம்பவே நல்லா இருந்தது. ஓரிரண்டு சமோசா, ஒரு டீ போதும் போலிருக்கு ஒரு வேளைக்கு.

   மார்வாரி கடைகள்ல வட இந்திய இனிப்புகள், சமோசா போன்றவை நல்லா இருக்கக் கேட்கவா வேணும்?

   நீக்கு
  2. இங்கே எல்லா  வெளி நாட்டுக்காரங்களுக்கும்  சமோசா ரொம்ப பிடிக்கும் ..போன வாரம் ஒரு ஜமைக்கண் பெண்மணி வேலை செய்ற இடத்தில சமோசா செய்ய சொல்லி கேட்டார் :) இங்குள்ள சமோசாவில் அந்த பச்சை  மல்லி வாசம்  குஜராதாகியர் செய்யும் சமோசாவில் வரும் .இங்கேயும் ஸ்வீட்ஸ் ஷாப்ஸ் இருக்கு நிறைய ஆனா வெளிநாட்டினருக்கு இனிப்பில் அவ்ளோ ஆர்வமில்லை தீபாவளிக்கு  இந்தியர்கள் கியூ ரோடெல்லாம் நின்னுச்சி பிரெஷா சுட்டு தந்ததை வாங்க 

   நீக்கு
  3. ம்ஹூம்.. குங்குமம் மிஞ்சினால்.... எண்ட கதையாவெல்லோ இருக்குது இந்தக் கதை கர்ர்ர்ர்ர்ர்:)).. உங்களுக்கு திரும்புமிடமெல்லாம் சமோசா கிடைப்பதால, வட இந்தியாவே பிடிக்காது தென் இந்தியாதான் பிடிக்கும் என பேரம் பேசுறீங்க இருவரும்.. நாங்கள் ஒரு சமோசா சாப்பிடுவதெனில் ரிக்கெட் போட்டுக் கனடா போய்த்தான்.. அதனாலதான் அதிரா இப்போ தன் கையே தனக்குதவி என, வீட்டிலயே சமோசா, ரோல்ஸ், மிதிவெடி எல்லாம் செய்து செய்து.. சூப்பர் ஸ்ரார் ஆகிட்டேனாக்கும்... இப்போ ஸ்கூலில் என்னை விட்டுக் கலைக்கினம், நீ நன்றாகச் சமைக்கிறாய் எங்களுக்கும் செய்துதா என, அதனால இதுவரை சிக்கின் பிர்ர்ர்ர்ர்ராஅணி, கட்லட், முறுக்கு, கீரை வடை, பருப்பு வடை.. இவ்ளோவும் செய்து பக் பண்ணிப்போய்க் கொடுத்து அசத்திவிட்டேன்... இன்னும் தொடருது..

   அடுத்து இட்லி குடுக்கலாம் என ஒரு ஓசனை... நிஜமாத்தான்..

   நீக்கு
  4. ராஜஸ்தான், குஜராத்தில் இருக்கையில் சனி, ஞாயிறு காலை/மாலை வீட்டில் கூட்டமாக வந்து மாமாவின் கீழ் வேலைபார்ப்பவர்கள்/ராணுவ அதிகாரிகள் என இட்லி, மசால் தோசை, ஃபில்டர் காஃபி எனச் சாப்பிடுவார்கள். சாம்பாரைக் கிண்ணம் கிண்ணமாகக் குடிப்பார்கள்.

   நீக்கு
  5. //மிதிவெடி// - மிதியடியா மிதிவெடியா? என்னன்னே தெரியலையே. ஒருவேளை வாயில் போட்டுக்கொண்டால், கடிக்க முயன்றால் பல் உடைந்துவிடுமோ? அப்படி இருக்காதே... ஸ்கூல் பசங்க அதிரா மேல கேஸ் போட்டுடுவாங்களே.

   இட்லி கொடுங்க... உங்க கிளாஸ் பசங்களுக்குக் கொடுக்காதீங்க. சொல்லிட்டேன். அவங்க, 'மிஸ்' ஒட்டறதுக்கு புதுவித ஃப்ரெஷ் கோந்து கொடுத்திருக்காங்க என்று நினைச்சுடக்கூடாது.

   நீக்கு
  6. //இட்லி, மசால் தோசை, ஃபில்டர் காஃபி எனச் சாப்பிடுவார்கள். சாம்பாரைக் கிண்ணம் கிண்ணமாகக் குடிப்பார்கள்.// - அப்போ அவ்வளவு தெம்பு இருந்தது, இப்போ அந்த சக்தி குறைந்துவிட்டதே என்று எப்பவாவது நினைச்சுக்குவீங்களா கீசா மேடம்?

   எங்க அப்பா, வீட்டின் கார்டனில் மண்ணைக் கொத்திக்கொண்டிருக்கும்போது சொன்னார், அப்போல்லாம் நிறைய நடப்பேன், சிரசாசனம்லாம் பண்ணுவேன், எவ்வளவோ எக்சர்சைஸ், பொருட்களைத் தூக்கிக்கொண்டு நடப்பது என்றெல்லாம் செய்திருக்கேன், இப்போ கைல சக்தி போய்விட்ட ஃபீலிங் வருது என்றார்.

   நீக்கு
  7. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் இதான் யோசிப்பேன் நெ.த. முன்னெல்லாம்/ இங்கே ஶ்ரீரங்கம் வந்த புதுசிலே கூட இருந்த சுறுசுறுப்பு இப்போக் குறைஞ்சே போச்சு! காலை நாலு, நாலரைக்கே எழுந்து யோகாசனம், நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள்னு எல்லாம் நானே பண்ணி இருக்கேன். :(

   நீக்கு
  8. மிதிவெடி என் பக்கம் ரெசிப்பி போட்டிருக்கிறேனெல்லோ:)... பின்பு தேடி என்பக்கம் வரும்போது லிங் தாறேன்...
   பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு சமைச்ச உணவோ? அவ்வ்வ்வ் உங்களுக்குத் தெரியாது இங்குள்ள பேரன்ஸ் பற்றி:)... பொலீஸ் கேஸ் ஆகிடும்:)...
   இது ரீச்சர் ஆட்களுக்கு மட்டுமே...

   கீசாக்கா ... எனக்கு வயசு ஏற ஏறத் தான் சுறுசுறுப்பு அதிகமாவதுபோல பீலிங்ஸ்சா இருக்குதூஊ ஹா ஹா ஹா:)...

   நீக்கு
 28. அவ்வ்வ் .இந்த ஆரஞ்சு பாட்டில் ஜிலேபி பிழியவா ?? நானா இதை இங்கே ஒரு வடஇந்திய கடையில் பார்த்து குட்டி சைஸ்  வாட்டர் பாட்டில்னு நினைச்சிட்டேன் :))) என் கணவருக்கு மிகவும் பிடிச்சது பெரிய சைஸ் கலர் பூந்தி .இதே மாவு அளவில் அதை செய்யலாமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பஹ்ரைன்ல இருந்த போது, சிந்திக் கடையில் கிப்ஸ் ஜிலேபி மிக்ஸ் பாக்கெட்டோட இந்த மாதிரி ஒரு பாட்டில் கொடுத்தார்கள். நான் இரண்டு வாங்கினேன். ஊரைவிட்டுக் கிளம்பும்போது அதெல்லாம் எடுத்துட்டு வரலை. இது, மகள் பெங்களூரில் வாங்கினாள்.

   கலர் பூந்திக்கு மாவு விகிதம் வேறு. அதற்கு ஓட்டைகள் உள்ள பூந்திக் கரண்டிதான் சரிப்படும். மாவின் நெகிழ் தன்மையைப் பொறுத்து பூந்தி சைஸ் வரும். ஒரு காணொளில தேநீர் வடிகட்டல மாவை விட்டு மோத்திசூர் பூந்தி பண்ணிக் காண்பித்தார்கள்.

   எனக்கென்னவோ, மாவு தயார் செய்வது நீங்க, மீதி வேலைலாம் அவரோடதுன்னு தோணுது. அதுக்கு ஏத்த மாதிரி ஒரு லீவு நாள்லதான் இந்த வேலையை ஆரம்பிப்பீங்க. இப்படிக்கு ஜோசியர் நெல்லைத்தமிழன்

   நீக்கு
 29. வாவ்...பார்க்கவே சூப்பரா இருக்கு ...

  ஜிலேபி சாப்பிட ரொம்ப பிடிக்கும், ஆனா இது வரை செய்ய முயற்சி செஞ்சது இல்லை ...

  கண்டிப்பா செஞ்சு பார்க்கிறேன் ....

  அருமையான குறிப்பு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அனுராதா ப்ரேம்குமார். ரொம்பவே சுலபம்தான். செய்துபாருங்கள்.

   இப்போ இருக்கும் கிளைமேட்டுக்கு காரவகைகள்தான் சூப்பரா இருக்கும். விரைவில் ஒரு ஸ்பெஷல் வடை ரெசிப்பி வரும்.

   நீக்கு
 30. சூப்பர்.மகளுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!