செவ்வாய், 26 ஜனவரி, 2021

மறக்கவியலாத சிறுகதை - விரல் (அசோகமித்திரன் ) - அப்பாதுரை 

 

விரல்

     ராமசாமி. நிலையாக ஒரு வேலையில் இல்லாமல் அவ்வப்போது நிறைய குடித்து நண்பர்களைத் தொந்தரவு செய்பவன்.

      ரங்கநாதன். பொறுமையாக ராமசாமி தன்னை அண்டி வரும்பொழுதெல்லாம் ஏதாவது உதவி செய்பவன். ரங்கநாதன் குடும்பத்தில் அவனும், மனைவியும் இரண்டு குழந்தைகளும். ரங்கநாதன் மனைவிக்கு ராமசாமியைப் பிடிக்காது. குறிப்பாக ராமசாமி குடிகாரன் என்ற எண்ணமும் குடிகாரர்களை வீட்டில் வைத்து உறவு கொண்டாடக் கூடாது என்ற தீவிரமும் கொண்டவள். தன் குழந்தைகள் குடிகாரர்களைப் பார்த்தால் பயந்து விடுவர் என்ற அச்சமும் இருந்தது.

     மதுவிலக்கு அமலில் இருந்த காலம். ஒரு நாள் மாலை ராமசாமி ரங்கநாதன் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். ராமசாமி என்று தெரிந்ததும் ரங்கநாதன் மனைவி கதவைத் திறக்காமல் கணவன் வீட்டில் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடுகிறாள். உள்ளே இருந்த ரங்கநாதனுக்கு கதவு தட்டும் சப்தம் கேட்கவில்லை. அது தெரிந்த ரங்கநாதன் மனைவியும் கணவனிடம் ராமசாமி வந்த விவரம் சொல்லவில்லை.

     இரவு படுத்துறங்கும் பொழுது ராமசாமி மறுபடி பலமாகக் கதவைத் தட்டுகிறான். ஏறக்குறைய இடிப்பது போல். "யாரு ராமசாமியா?" என்று எழுந்திருக்க முனைந்த கணவனைத் தடுக்கிறாள் மனைவி. "கதவைத் திறக்காதிங்க.. குடிகாரன் வந்திருக்கான்.. சாயந்திரமே வந்தான்.. நீங்க இல்லைனு சொல்லியனுப்பிட்டேன்" என்ற மனைவியைக் கோபத்துடன் பார்க்கிறான் ரங்கநாதன். "எதுக்கு சொல்லணும்? குடிகாரனைப் பார்த்தாலே குழந்தைகளுக்கு பயமா போயிடறது. நண்பனா இருந்தாலும் குடிகாரனை வீட்ல வச்சு உறவு கொண்டாடணுமா?" என்று கணவனின் கோபத்தைப் பொருட்படுத்தாது சலிக்கிறாள் மனைவி. எழுந்து கதவைத் திறக்கிறான் ரங்கநாதன்.

     மனைவி சொன்னாற் போலவே சாராய நெடியுடன் நிற்க முடியாமல் தடுமாறிய ராமசாமியைக் கைத்தாங்கலாகப் பிடித்து உள்ளே உட்கார வைக்கிறான் ரங்கநாதன். ராமசாமி சட்டையெல்லாம் ரத்தக் கறை. கோபத்தில் ரங்கநாதன் மனைவி பிள்ளைகளுடன் சென்று உள் ரூமில் கதவை அடைத்துக் கொள்கிறாள்.

     "என்ன ஆச்சு?" என்று ரங்கநாதன் ஒரு ஈரத்துணியை எடுத்துவந்து ராமசாமியை சுத்தம் செய்கிறான். ராமசாமியின் வலது கையில் அடிபட்டிருப்பதைக் கவனித்தான். இன்னும் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஈரத்துணியால் சுற்றினான். ராமசாமியை மறுபடி கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் சென்று கிடைத்த ஒரு ஆட்டோவில் அருகிலிருந்த 24 மணி நேர க்ளினிக்கிற்கு செல்கிறான். "குடித்திருப்பதாலும் ரத்தகாயம் என்பதாலும் இது போலீஸ் கேஸ்.. மேலும் கை நிறைய அடிபட்டிருக்கிறது.. சிகிச்சை தர வசதியில்லை, ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லுங்கள்" எங்கிறார் நர்ஸ். கெஞ்சிக் கூத்தாடி அவசரமாக ஒரு கட்டு போடச் சொல்லி பத்து ரூபாய் செலவழிக்கிறான் ரங்கநாதன். அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறான். வலதுகை விரல்கள் நசுங்கி இருப்பது நன்றாகத் தெரிந்தது. ஆஸ்பத்திரியில் முதலில் மறுத்தாலும் பிறகு சிகிச்சை செய்கிறார்கள். ஒருவழியாக சுத்தம் செய்து கட்டு கட்டி ராமசாமியை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். மறு நாள் எக்ஸ்ரே எடுத்தால் விரல் விவரம் தெரியும் என்கிறார்கள்.

     "இனிமே எழுத முடியாது என்னால்" என்ற ராமசாமியைக் கடுப்புடன் பார்த்த ரங்கநாதன் "எந்த வேலையிலும் நிலைக்க மாட்டேங்குறே.. சென்னை வந்து ஒரு வாரத்துல எங்கெங்கே கள்ளச் சாராயம் விக்கிறாங்கறதை மட்டும் கண்டுபிடிச்சுட்டே.. ஏன் இப்படி இருக்கே?" என்கிறான் கோபத்துடன்.

     "நான் உனக்கு ரொம்பக் கஷ்டம் குடுக்குறேன் இல்லே?" என்ற ராமசாமியிடம் சற்றுக் கனிந்து "எங்க இப்படி அடிப்பட்டுக்கிட்டே?" என்று விவரம் கேட்கிறான் ரங்கநாதன். பதில் சொல்லாமல் "பசிக்குது" என்கிறான் ராமசாமி. ஏதோ ஒரு ஒட்டல் பெயரைச் சொல்லி அங்கே போய் சாப்பிடலாம் என்கிறான். கையில் இரண்டு ரூபாய் தான் இருக்கிறது, வீட்டில் சாப்பிட்டிருக்கலாம் என்கிறான் ரங்கநாதன். "உன் பெண்டாட்டி சாப்பாடு போட்டிருப்பாளா?" என்று கேட்ட ராமசாமிக்கு ரங்கநாதனால் பதில் சொல்ல முடியவில்லை.

     "இந்த அடி கூட இன்னொருத்தன் பெண்டாட்டி குடுத்தது தான்" என்று வலதுகையைக் காட்டுகிறான் ராமசாமி. அவனை ஏறிட்ட ரங்கநாதனிடம் "ராமப்பன் வீட்டுக்குப் போயிருந்தேன்" என்கிறான். "உன் வீட்டுக்கு முதலில் வந்தேன். நீ இல்லை என்று சொல்லிவிட்டாள் உன் மனைவி.. அதான் அங்கே போனேன். நான் என்று தெரிந்ததும் ராமப்பன் மனைவி சடாரென்று கதவை அடைத்தாள். கதவில் என் விரல்கள் சிக்கி நான் அலறினேன். அவள் பயந்து இன்னும் அழுத்திக் கதவைச் சாத்திவிட்டாள்" என்கிறான் ராமசாமி.

      "உன் வீட்டுக்கு வந்தா உன் பெண்டாட்டியை இப்படி என் கை நசுங்கும்படி கதவடைக்காம இருக்கணும்னு சொல்றியா?" என்ற நண்பன் கோரிக்கையில் நெகிழ்ந்து போன ரங்கநாதன் ஓட்டலை நோக்கி ராமசாமியை மெள்ள நடத்திச் செல்கிறான். "எல்லாம் எழுத முடியும் வா" என்கிறான்.

     "இல்லடா.. என்னால இனிமே எழுத முடியாது, எழுதவே முடியாது" என்கிறான் ராமசாமி.


***


     1980களின் தொடக்கத்தில் வெளிவந்த அசோகமித்திரனின் கதை. சில உரிமைகளை எடுத்துக் கொண்டு என் பாணியில் சொல்லியிருக்கிறேன். பிழையிருப்பின் அசோகமித்திரன் வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

     எந்த வித திருப்பமும் கனமான கருவும் இல்லாத சாதாரண இரண்டு நண்பர்களுக்கிடையிலான உரையாடல் கதை. இதை மறக்க முடியாத கதை என்று சொல்வதற்கு இரண்டு காரணங்கள். 

முதலாவது ராமசாமி கதாபாத்திரம். ராமசாமி ஒரு எழுத்தாளன் என்று மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் "இனிமே எழுத முடியாது" என்று அடிக்கடி வருகிற வரிகள் மட்டுமே சாத்திய எழுத்தாளனை அடையாளம் காட்டுகின்றன. 

 ஒரு எழுத்தாளனை அந்தக் கலைஞனின் சாதாரண 'கெட்ட' பழக்கங்களினூடான நட்பை ரங்கநாதன் romanticize செய்வதை ஆழமாக எழுதியிருக்கிறார். 

 ஆனால் குடிகாரன் குடிகாரன் தானே? ராமசாமி நண்பர்கள் வீட்டில் அவன் அழையா விருந்தாளி. அழையா விருந்தாளிகளை நாம் judge செய்து எதிர்கொள்ளும் விதம் ஒருவித ஒழுக்கச் சிக்கல். நம்முடைய வெறுப்பின் வெளிப்பாடு இன்னொருவருடைய வாழ்வாதாரத்தைப் பாதிக்கலாம் என்று எண்ணும் பொழுது திக்கென்கிறது. இங்கே குடிகார ராமசாமி மீதான வெறுப்பைக் கதவை அடைத்து வெளிப்படுத்திய விதத்தில் ராமசாமியின் கைகள் - அவன் எழுத்துக்குத் தேவையான மூலக்கருவி - சிதைந்து போனது கொஞ்சம் யோசித்தால் திடுக்கிட வைக்கிறது. 


 அசோகமித்திரன் கதையை இத்தோடு நிறுத்திக் கொள்கிறார். ராமசாமியின் எதிர்காலம், ராமப்பன் மனைவியின் குற்ற உணர்வு, ரங்கநாதனின் பெருந்தன்மை என்று இழுக்காமல் கச்சிதமாக முடித்த விதம் அருமை. இரண்டாவது காரணம் என் சொந்த அனுபவம். எழுத விரும்புவோருக்கு இரண்டு மூலதனங்கள். கற்பனை, கைவிரல். சில வருடங்களுக்கு முன் என் இரண்டு கையிலும் நடு விரல்கள் விளங்காமல் போயின. ஆர்த்ரைடிஸ் வகையில் ஒன்று என் கைகளைப் பதம் பார்த்தது. இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை எனினும் எழுத முடிவது எப்பேர்பட்ட வரம் என்று நான் எண்ணாத நாளில்லை. (எழுதுவதைப் படிக்க யாரேனும் கிடைத்தால் அது இன்னொரு பெருவரம்).

இதைத் தவிர ரங்கநாதனின் பாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதமும் கதையை நினைவில் தங்க வைக்கிறது என்பேன். அசூயை இல்லாத ரங்கநாதன்-ராமசாமி நட்புக்கான ஆணி வேர் சம்பவத்தை நான் தொடவேயில்லை. அசல் கதையில் அசோகமித்திரன் அதைக் கோடிட்டுச் சொல்லிப் போயிருக்கும் விதம் சுருக்கமாக அதே நேரம் பிடிப்பாக இருக்கும். நல்ல எழுத்தாளர்கள் வேர்ச் சம்பவங்களை விளக்கிக் கொண்டிருப்பதில்லை. வேர்ச் சம்பவங்களைச் சுற்றி எழுத்து வித்தைக் காட்டிவிட்டு வேர்ச் சம்பவங்களின் கனத்தை வாசகர்கள் மனத்தில் இறக்கி வைக்கிறார்கள். அசோகமித்திரன் இந்த விஷயத்தில் கில்லாடி என்று நினைக்கிறேன்.

கதை இணையத்தில் கிடைக்கிறது. நேரம் கிடைத்தால் படியுங்களேன்?

நான் படித்த மறக்கவியலாத சிறுகதை #2.

35 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. சித்தப்பாவின் இந்தக் கதை படித்த நினைவு இல்லை. அப்பாதுரை சொல்லி இருப்பது போல் தேடிப் பிடித்துப்படிக்கிறேன். நன்றாக விமரிசனம் செய்திருக்கார் அப்பாதுரை. அவருக்குத் தெரியாத கலையும் உண்டோ?

    பதிலளிநீக்கு
  3. இன்னிக்கும் நான் தான் போணியா? கதையின் ஜீவனை நன்றாக எடுத்துக் காட்டி இருக்கார் அப்பாதுரை. பின்னர் வருகிறேன். இங்கே தனியாவே எத்தனை நாழி உட்கார்ந்திருக்கிறது? இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எப்பொழுதும் இறைவன்

    நம்முடன் இருந்து காப்பாற்றப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. திரு அசோகமித்திரன் கதையின் சாயலில் நம் அப்பாதுரையின் கதையா.!!
    வெறுப்பு மிகவும் ஆபத்தானது.

    குடியை வெறுக்கலாம் குடிகாரனை வெறுக்கக் கூடாது
    என்னும் கருத்தை ஒரு மனிதனின்
    கதையில் சிவசங்கரி சொல்லி இருப்பார்.

    அனுபவத்தில் அது மிகக் கஷ்டம் தான்.
    ரங்க நாதனுக்குத் தன் தோழனுடன் இருக்கும் அபிமானம்
    அவர் மனைவிக்கு இருக்க சந்தர்ப்பம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசோகமித்திரன் கதை சாயல் இருக்குன்றிங்களா? ரொம்ப திருப்தி. அப்பாடி!

      நீக்கு
  7. மிக நன்றாக உணர்ந்து விமர்சனம் செய்திருக்கிறார் அப்பாதுரை.
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. இன்னைக்கு எல்லோரும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்காங்க போல! நான் பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
  9. வித,தியாசமான செவ்வாய் இடுகை. அப்பாதுரை சார், அசோகமித்திரனின் கதை ஒன்றிர்க்கு விமர்சனம் எழுதி கதை தனக்குப் பிடித்தமானது என்று சிலாகித்து, நீங்களும் படித்துப் பாருங்களேன் என்று சிபாரிசு செய்திருக்கிறார்.

    அவர் எழுதியது கதைச் சுருக்கம். அது கார்ட்டூன் மாதிரியான சித்திரத்தைக் கொண்டிருந்தது.

    கதையைத் தாடிப் படித்தேன்... நல்ல உணர்வுபூர்வமான கதை.

    1. நண்பர்களுக்கிடையில் ஒருவனுடைய பழக்கத்தால் வரும் அசூயைகளோ, ரகசியங்களோ கிடையாது. அது நட்பைப் பாதிப்பதில்லை.
    2. நல்ல நண்பனாக ஒருவனை வரித,துவிட்டால் முடிந்தவரை அவனுக்கு உதவ முயல்கின்றனர். அதற்கு சொந்தக் குடும்பம், சுயநலம் போன்றவை தடையாக இருப்பதில்லை. அங்கு பளிங்கு நீர் போன்ற நட்பு மட்டுமே மிஞ்சுகிறது.


    நண்பனைக் கொண்டுள்ள யாருமே கதையை ரசிக்கலாம். இந்தக் கதை நிறைய உணர்வுகளை என்னுள் தோற்றுவிக்கிறது. எனக்கு இருந்த ஒரே நண்பனை நினைவுபடுத்துகிறது. அவனுடைய பழக்கங்கள் எதுவுமே என் நட்பிற்குக் குறுக்காக என்னை எண்ணத் தோன்றியதில்லை.

    சிறந்த எழுத்தாளர்கள், அப்பாதுரை சார் சொன்னதுபோல, இடம் சுட்டி பொருள் விளக்குவது, ரொம்ப வள வளவென ஒவ்வொன்றையும்-தேவையில்லாதவற்றை எனச் செய்வதில்லை. வாசிப்பவர்களின் எண்ண ஓட்டம், அனுமானத்திற்கே விட்டுவிடுவர். இதில் நமக்கு போனஸ், காலத்தால் அழிக்கமுடியாத கதை, அந்தக் காலத்தைக் கண்முன் கொண்டுவருவதுதான்.

    முக்கியமானது, சிறந்த, உரையாடல்கள் சில நிகழ்வுகளின் மூலம் கொண்டு செல்லும் கதையைச் சுருக்கமாக எழுத முடியாது...அது ரசிக்கும்படி இருக்காது. அசோகமித்திரனுன் கதைக்கு 100% என்றால் அப்பாத்துரை சார் பாணியில் இங்கு எழுதியது 30% கூடத் தொடவில்லை என்பது என் அபிப்ராயம்.

    நல்ல சிறுகதையின் அறிமுகத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரசியமான பின்னூட்டம் நெல்லை.
      தமிழில் அன்றாட ஒழுக்கச் சிக்கல்களைக் கதையாக எழுதியவர்களில் பிரம்மாண்ட எழுத்தாளர் எனில் அசோகமித்திரன் உட்பட வெகுசிலரே (என்பது என் எண்ணம்). இவர்களின் கதைகளை படிப்பதும் (புரிந்து கொள்வதும் :-) ஒரு பயணம். விமரிசனம் செய்வது ஒரு தகுதி. (எனக்கு இல்லை என்பதால் இதை விமரிசனம் என்று எழுதவில்லை).

      இத்தகைய கதைகளைப் பற்றி எழுதும்பொழுது கவனம் தேவைப்படுகிறது. முதலில் கதையை அனேகம் பேர் படித்திருக்கலாம். அனேகம் பேர் படித்த கதை எனில் என்ன எழுதுவது அதைப்பற்றி? (நான் இந்தக் கதையை பலர் படித்திருக்க மாட்டார்கள் என்றே நினைத்தேன். நல்ல வேளையாய்ப் போனது - கீதா சாம்பசிவம் இந்தக் கதையைப் படித்த நினைவில்லை என்றது அப்பாடி! என்றானது :-).

      இரண்டாவது கதையின் மைய நிகழ்வுகளை என் பாணியில் சொல்வது என்பது மிக அதீத வாசக உரிமை இல்லையா? முகம் தெரியாத பிற மொழிக் கதைகளை தமிழாக்கம் செய்வது ஒன்று, நன்கு அறிந்திருக்கச் சாத்தியமான தமிழ்க் கதைகளை "தமிழாக்கம்" செய்வது முற்றிலும் வேறு (சில பேர் அடிக்க வந்துவிடுவார்கள்). அதனால் விரல் கதையை கவனமாகச் சுருக்கியிருக்கிறேன். கதையின் ஜீவன் சற்றேனும் வெளிப்பட்டிருந்தால் அது அசோகமித்திரனின் ஆசி.

      சாதாரண சம்பவத்தைக் கதைக்கருவாக்கி கனமாக நெஞ்சில் இறக்கிவிடுவது அசாதாரணக் கலை.

      (தமிழக் கதைகள் வேண்டாமே என்று செல்லமாகக் கேட்டுக் கொண்டார் ஸ்ரீராம். இந்தக் கதைக்கான பின்னூட்டங்களில் அவர் மனம் மாறுமா பார்ப்போம்.)

      நீக்கு
    2. எழுத்துப் பிழை ஐபேடில் மன வேகத்துக்கு ஏற்ப தட்டச்சு செய்யும்போது ஏற்படுகிறது. மடிக்கணிணியில் தட்டச்சு செய்தால் பிழை ஏற்படாது.

      நன்றி அப்பாதுரை சார்.. படிக்காத தமிழ்க் கதை அறிமுகம் நல்லதுதான். ஆனால் சிறுகதைகளைச் சுறுக்கி மினி கதை எழுதுவது ரசிக்கும்படி இருப்பதில்லை. உதாரணமா, பொன்னியின் செல்வன் கதையின் நிகழ்வுகளை (வரலாற்று நிகழ்வுகள்) 10 பக்கத்தில் முடித்துவிடலாம். அதி ஹிஸ்டரி. ஆனால் அந்த நிகழ்வுகள், உரையாடல்கள், திருப்பங்கள் இவைகள்தான் அந்த நெடுந்தொடரின் ஜீவன். அசோகமித்திரனின் கதையில் பெரும்பாலும் உரையாடல்கள், அதன் வழி நாம நிறைய guess பண்ணிக்கொள்கிறோம். எழுத்தே வேள்வியாகக் கொண்ட ஒருவன், அவனுக்கு எதன் காரணத்தினாலோ தொத்திக்கொண்ட மதுப்பழக்கம், அதையும் மீறி நண்பர்கள் அவன் நட்பை மதிப்பது, அவன் தனியாக நகரத்தில் இருப்பதற்கு என்ன என்னவோ காரணங்கள் இருக்கலாம் நாம் கற்பனை செய்யலாம், ஆனால் கதை அதைப்பற்றியதல்ல. நட்பைப் பற்றியது, அதே நட்பு, அந்த நட்பின் மீதான நல்லெண்ணம், அவர்களுடைய மனைவிக்கோ குழந்தைக்கோ இருக்கவேண்டும் என்று அவசியம் கிடையாது. அதுவும் இந்தக் கதையின் கருப்பொருளல்ல. ஆனாலும் நிறைவான கதை.

      எனக்கும் என் நண்பனுக்கும் இடையில் இருந்த நட்பையும் இதுபோல விளக்குவது கடினம். அதற்கு எங்களுடைய சாதியோ, பெற்றோர்களோ, குடும்பமோ, நிலையோ இடையில் குறுக்கீடாக வந்ததில்லை, அதை நாங்கள் பொருட்படுத்தியதும் இல்லை. எனக்கு எங்கள் நட்பின் இடையில் நடந்த சம்பவங்களை சுவாரசியமான கதைகளாக எழுத வரவில்லை.

      இந்த 'நட்பு' செய்த விபரீதங்களை (எனக்குத் தெரிந்தவர் வாழ்வில் நடந்தது)க் கேள்விப்பட்டு அதுவும் என்னைத் திடுக்கிட வைத்தது. ஒருவரின் குடும்ப வாழ்க்கையை அழிக்கவும் இந்த நட்புதான் காரணமாக அமைந்தது என்பதை விதி என்றுதான் சொல்லணும்.

      நீக்கு
  10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும்
    அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம் மற்றும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. திரு. அசோகமித்திரன் அவர்கள் கதை நன்றாக இருக்கிறது. அதற்கு அப்பாத்துரை சார் விமர்சனம் அருமை. படிக்க வேண்டும் கதையை.

    (எழுதுவதைப் படிக்க யாரேனும் கிடைத்தால் அது இன்னொரு பெருவரம்). உண்மை.

    பதிலளிநீக்கு
  16. அசோகமித்ரன் அவர்களது கதையை எம்மால் விமர்சிக்க இயலுமா ? சிறிய கதையில் அரிய பொக்கிஷம்.

    //எழுதுவதைப் படிக்க யாரேனும் கிடைத்தால் அது இன்னொரு பெருவரம்//

    அருமையான சிந்தனை உங்களுடையது.

    பதிலளிநீக்கு
  17. அசோகமித்திரன் அவர்கள் எழுதிய கதையைப் படித்ததில்லை. தேடிப் படிக்க வேண்டும். அவரது கதையை உங்கள் பாணியில் எழுதியது சிறப்பு.

    நட்பு குறித்த எண்ணங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  18. நட்பு ப்ற்றிய கதையில் ஏன்நட்பு என்று கேட்கக்கூடாதோ கதை என்றல் நிகழக் கூடியதாக இருக்கவேண்டாமோ

    பதிலளிநீக்கு
  19. அசோக மித்திரன் அவர்கள் கதையை அப்பாதுரை உபயத்தில் விழிகள் உதவிட வாசித்தாயிற்று.
    இப்போ அதே கதையை இன்னொருவர் சொல்ல காதால் கிரகித்துக் கொள்வோமா?..
    இதோ:

    https://anchor.fm/raja-vanam/episodes/ep-eet23v

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சார். பொக்கிஷமான தளம் போலிருக்குதே (முதல் கதையே ஜெமோ என்று பயமுறுத்தினாலும்) கேட்டுப் பார்க்கிறேன்.

      நீக்கு
  20. இப்போ அ.மி.யின் 'விரல்' கதையை நீங்களே நேரடியாக வாசித்து விடுங்கள்.

    https://books.readingbharat.com/book-f/ta/76b6b682ace711ea9c0d98460a97aede/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-by-unknown

    இப்பொழுது இரண்டு பேர்கள் வாசிப்பில் வெளிப்பட்ட கதையை நீங்களே வாசித்ததில்
    வித்தியாசம் ஏதாவது இருந்தால் தவறாமல் பதிந்தால் அதுவே தனிப்பட்ட பெரும் அனுபவமாக இருக்கும்.

    அசோக மித்திரன் 'இரண்டு விரல் தட்டச்சு' என்றும் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.
    இதை விட அருமையான கதை அது.

    எனக்கென்னவோ தீக்குள் விரலை வைத்தாலும் நந்தலாலாவை தீண்டும் இன்பம் கண்ட பாரதி தான் நினைவில் நின்றார்.

    பதிலளிநீக்கு
  21. கதையின் கடைசி வரிகள்
    நெஞ்சை அழுத்துகின்றன...

    பதிலளிநீக்கு
  22. அசோகமித்திரன் எனக்குப் பிடித்தமான சில தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவரின் கதைகள் சராசரி மனிதர்கள் சர்வசாதாரணமாகக் கடந்துபோய்விடும் விஷயங்களில், அன்றாட நிகழ்வுகள் சிலவற்றில் கூரொளி பாய்ச்சுபவை. மீள்கவனத்துக்கு அவற்றை உட்படுத்துபவை. அவருடைய கதைகளில் ஆழ, அமைதியான, உணர்வுபூர்வ மனம் தேவை. கூடவே சாந்தமான சூழலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகாகச் சொன்னீர்கள். சுப்ரமணிய ராஜூ என்பவர் அப்படி சில கதைகள் எழுதியிருக்கிறார்.

      நீக்கு
  23. புலிக்கலைஞன், எலி, அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அமி சிறுகதைகள் நினைவில்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!