செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

சிறுகதை : அன்னபூரணி - துரை செல்வராஜூ

அன்னபூரணி
துரை செல்வராஜூ 
---------------------------

" அம்மா.. தாயே.. அன்னபூரணி!.. "

எத்தனையோ மாதங்களுக்கு அப்புறம் வாசலில் குரல்...
 
" இதோ வர்றேன்!... "  - கையில் கிடைத்த எவர்சில்வர் பாத்திரத்தில் ஒரு வயிற்றுக்கான சோற்றை எடுத்துப் போட்டுக் கொண்ட சாரு - சாருலதா - சாம்பாரை ஒரு கிண்ணத்திலும் உருளைக் கிழங்கு வறுவலை ஒரு கிண்ணத்திலும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள்...

அறுபது வயதைக் கடந்த பெரியவர் ஒருவர் காவி வேட்டியுடன் ஒற்றைச் சுற்றாக நீல நிற ஈரிழைத் துண்டை தலையில் கட்டிக் கொண்டு நின்றிருந்தார்.. 

தாடையிலிருந்து இறங்கி வெளுத்த தாடியும் நெற்றியில் பட்டையாக விபூதியும் கையில் பழைமையான திருவோடும்... ஒரு பக்கத் தோளில் ஒரு பையும் மறு பக்கம் கயிற்றில் முடியப்பட்ட எவர்சில்வர் வாளியும் தொங்கிக் கொண்டிருந்தன...


அவரைப் பார்த்தால் சோற்றுக்காக காவி தரித்தவர் மாதிரி தெரியவில்லை...

" மகராசி நல்லாருக்கணும்!.. " - என்றபடி திருவோட்டினை நீட்டினார்...

" அந்த வாளியில வாங்கிக்கலாமே?.. "

" அதுல நாலு இட்லி இருக்குது ..ம்மா!.. ராப்பொழுதுக்கு ஆகும்!.. நீங்க இதுலயே போடுங்க!.. "

உணவுடன் நெருங்கினாள் சாருலதா.. பெரியவர் பூசியிருந்த திருநீறு பரிமள சுகந்தமாக இருந்தது...

' தாத்தா மேலயும் அப்பா மேலயும் இப்படித்தான் திருநீறு மணக்கும்!.. ' -  நினைத்துக் கொண்டே திருவோட்டில் உணவை இட்டாள்...

" நல்லாயிருக்கணும் தாயி!.. அண்ணா மலை.. அண்ணா மலை!... " - என்று உச்சரித்துக் கொண்டே பெரியவர் நகர்ந்தபோது -

" ஐயா.. ஒரு நிமிஷம் இருங்க!.. " - என்றபடி  வீட்டுக்குள் ஓடிய சாரு - பிளாஸ்டிக் டப்பாவில் சாம்பார் எடுத்துக் கொண்டு வந்தாள்...

" என்னம்மா.. இது?... "

" ராத்திரிக்கு இட்லி இருக்கு ...ன்னு சொன்னீங்களே... அதுக்குத் தான் இந்த சாம்பார்.. புளி கரைச்சு விட்டது... ராத்திரி சாப்பிட நல்லா இருக்கும்... "

" இதுல ஊற்றி விடம்மா!... "

" இந்த டப்பாவோட வைச்சுக்கங்களேன்!.. "

" இருக்குறதே பெரும் சுமையே... இதுல டப்பா வேறயா!.. "

சிரித்தபடி வாளியைத் திறந்தார்... 

கருங்கல் சிதறல் மாதிரி மங்கலான நிறத்தில் இறுகிய இட்டிலிகள் உள்ளே கிடந்தன...

" இந்த இட்லி ராத்திரிக்கு நல்லா இருக்காதே!.. "

" பரவாயில்ல..ம்மா!.. இந்த நாக்கு மரத்துப் போயிடுச்சி... அதுக்கு ருசியை மறுபடியும் ஞாபகப்படுத்தக் கூடாது.. மக்க மனுசரோட தீர்க்க சுமங்கலியா தீர்க்காயுசா இருக்கணும் தாயே!.. " மனதார வாழ்த்தியபடி நடந்தார்...

பெரிய நகரத்தின் புறநகர் பகுதியில் மூன்றாவது குறுக்குத் தெரு..

எல்லாம் நவீன மயம்..

வழிநடை, வாசல், திண்ணை, மாட விளக்கு, நிலைப்படி, தோரணப்பட்டி என்றெல்லாம் இல்லாமல் அட்டைப் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு அடைத்த மாதிரியான வீடுகள்...

நிழல் தரும் மரங்களை எல்லாம் அழித்துப் போட்டு விட்டு - ஜன்னல்களில் குருவி அமரக் கூட இடம் கொடுக்காமல் அறைக்குள் மட்டும் குளுகுளுப்பாக இருக்கும்படி இயந்திரங்கள் அமைக்கப்பட்டு - அடைக்கப்பட்டு இருந்தன வீடுகள்...

சாருலதாவும் மோகனும் இங்கு வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன..

வங்கி ஒன்றில் உயர் அலுவலர்.. காலையில் சாப்பிட்டு விட்டுச் சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவது.. பதினொன்றரை ஆகும்போது மதியச் சாப்பாடு எடுத்துப் போக காவேரி வருவாள்... அவள் வருவதற்கு முன்னும் பின்னும் கதவுகள் அடைக்கப்பட்டு தான் இருக்க வேண்டும்... 

அந்த வட்டாரத்தில் இதுவரை அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை என்றாலும் மோகனின் கண்டிப்பான உத்தரவு... மேலும், நவீனமும்  நாகரிகமும் அளவுக்கு மீறி முற்றிக் கிடந்த அந்தத் தெருவில் தலைச் சுமையாகக் கூட காய்கறிகள்  வருவது இல்லை...

இப்படியான தெருவில் வெகு நாட்களுக்குப் பிறகு யாசகரின் குரல் கேட்டு அன்னமிட்டதால் மகிழ்ச்சி...

' இது தெரிந்தால் புருஷன் என்ன மாதிரி பொங்கி எழுவானோ!?.. ' - என்பதில் அச்சம்...

சாருலதா தத்தளித்திருக்க மாலைப் பொழுதும் வந்து சேர்ந்தது...

வங்கியிலிருந்து திரும்பிய மோகன் சிற்றுண்டி காஃபியை முடித்ததும் அவன் தோளில் சாய்ந்து கொண்டு நடந்தவற்றை மெல்ல விவரித்தாள்..

அவளது தலையைக் கோதியவாறு அமைதியாக இருந்த மோகன் -
" இருந்தாலும் - இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியலையே.. செல்லம்!.. " - என்றான்...

" பாவங்க... வயசானவரு...  வீட்ல விரட்டி விட்டாங்க போல இருக்கு... வயித்துக்கு இது போதும்..ன்னு அடுத்தடுத்த வீடுகள்..ல எதுவும் கேக்காம நேரா போய்ட்டாரு... பிச்சைப் பாத்திரத்தில கருங்கல்லு மாதிரி நாலு இட்டிலி வேற... எப்படியான ஜனங்க எல்லாம் இருக்காங்க!... "  - சாருவின் மனம் இளகியது..

" செல்லத்தோட  கைப்பக்குவத்துக்கு நாளைக்கும் வந்துடப் போறாரு!.. " சிரித்தபடியே கன்னத்தைக் கிள்ளினான்...

" வரட்டுமே... அதனால என்ன?.. நல்லதுதானே!.. மாமா தெவசத்தன்னைக்கு திருவையாத்துல தர்ப்பணம் செஞ்சுட்டு இந்தப் பெரியவருக்கு சாப்பாடு போட்டு வேட்டி துண்டு எடுத்துக் கொடுப்போம்.. ன்னு இருக்கேன்!...   நீங்க என்ன சொல்றீங்க?.. "

" சொல்றது என்ன!... செஞ்சுடுவோம்!.. "

தன் விருப்பத்தைக் கணவன் அங்கீகரித்த மகிழ்ச்சியில் சாருவின் மனம் துள்ளியது..

கணவனின் தோளில் சாய்ந்து கொண்டிருந்தவள் கையை மேலே உயர்த்தி - கணவனின் கன்னத்தை வருடிய வேளையில், வாசலில் இருந்த செம்பருத்திப் புதருக்குள் கூடு திரும்பிய குருவிகளின் குதுகலக் கூச்சல் இனிமையாகக் கேட்டது..

ஆனால் மறுநாள் அந்தப் பெரியவர் வரவில்லை..

' அவருக்கும் ஆகட்டும்.. ' - என்று கூடுதலாக ஆக்கியவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது... அதற்கு அடுத்தடுத்த நாட்களும் அப்படியே ஆயின...

அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை.. காலையிலேயே மாரியம்மன் கோயிலுக்குப் புறப்பட்டாயிற்று..

இந்தப் பக்கம் பச்சைப் பசேலென்று வயல் வெளி... ஊடாக ஆங்காங்கே வீடுகளும் ஏதேதோ கட்டடங்களும்... இந்தப் பக்கம் நீண்டு விரிந்த ஏரி..

இரைச்சல் அடங்காத நெடுஞ்சாலையில் புகையைக் கக்கியபடி வாகனங்கள் அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்தன..

கோயிலை நெருங்கியாயிற்று.. ஆனாலும் வாகனங்கள் கோயிலை நெருங்கி விடாதபடிக்கு தடுப்புகளை வைத்திருந்தது காவல்துறை...

இந்தப் பக்கமாகவே மாருதியை நிறுத்தி விட்டு நடந்தனர்..

சாலையின் ஓரமாக ஆதரவற்றோர் பத்துப் பதினைந்து பேர் கை நீட்டிக் கொண்டிருந்தனர்..

கைப் பையில் இருந்து பணத்தை எடுத்து வழங்கும் போது அவர்களுக்குள் அந்தப் பெரியவரைக் கண்டு கொண்டாள் சாரு...

ஆவலுடன் அருகில் சென்று நலம் கேட்டாள்...

" உடம்பு முடியாமப் போச்சு..ம்மா.. வயித்துக் கோளாறு!.. சரியில்லாத சாப்பாடு யாரோ கொடுத்துருக்காங்க!.. "

இறுகிக் கிடந்த அந்த இட்லி தான் என்பது சாருவுக்குப் புரிந்தது..

" என்னமோ நல்ல நேரம்... சம்சாரிக்கு ஒரு  பிணி பீடை... ன்னு வராம இந்த சந்நியாசி வயித்துல வலியை வைச்சதே அண்ணாமலை.. அதுவரைக்கும் நல்லது!.. "

வெள்ளந்தியாய் சிரித்தார் பெரியவர்..

" ஐயா.. இவங்கதான் என் வீட்டுக்காரர்!.. "

" மகராசன்... மண்ணும் மனையுமா பேரும் புகழுமா நோய் நொடியில்லாம நூறு வருசம் நல்லா இருக்கணும்!.. "

அருகிலிருந்த மூட்டையை அவிழ்த்து அதனுள்ளிருந்த விபூதியை எடுத்து,  " இது அண்ணாமலை சித்தர் சாமி கொடுத்தது!.. "  - என்றபடி பூசி விட்டவர் கண்களை மூடிக் கொண்டு -

" வேலை செய்ற எடத்துல நிம்மதி இல்லை..  தப்பு செஞ்சவன்  பழி போடக் காத்திருக்கிறான்.. துலா லக்னம்.. நேர்மையா வாழறதுக்குப் போராடித் தான் ஆகணும்... கூட இருக்குற ஆட்களாலயும் பிரச்னை.. இன்னும் பதினைஞ்சு நாள் தான்..  எல்லா கஷ்டமும் தீரும்.. நல்ல ஆத்மா ஒன்னு பெரிய ஆளு..ன்னு வருது.. கலங்காதே..ப்பா!.. வம்சம் தழைச்சிருக்கு.. அண்ணாமலை துணைக்கு வரும்!... " - என்றார்..

அலுவலக நடப்பையும் சாரு முழுகாமல் இருப்பதையும் பெரியவர் சொல்லக் கேட்டு - இருவரும் விக்கித்துப் போனார்கள்..

' யார் சொல்லி வைத்தது இவரிடம்!.. அப்படியே சொல்கிறாரே.. ' - என்று வியப்பு..

கண்கள் கலங்கிட அவரது பாதம் வணங்கியபடி - 

" அடுத்த புதன் கிழமை அப்பாவுக்கு திதி.. அன்னைக்கு வீட்டுக்கு வந்து சாப்பிடணும்.. "  - என்று கேட்டுக் கொண்டான் மோகன்..

அதன் பிறகு விறுவிறு என்று நாட்கள் நடக்க மூன்று மாதங்கள் ஆகி விட்டன..

அன்றைய உள்ளூர் தொலைக் காட்சி - மாரியம்மன் கோயில் வாசலில் பிச்சையெடுத்துக் கொண்டு இருந்தவர்களை அப்புறப்படுத்தி ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்தின் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றப்படுவதையும் காட்டிக் கொண்டிருந்தது... 

கூட்டத்துள் அந்தப் பெரியவரும் தென்பட்டார்...

பரபரப்பான சூழ்நிலையில் - பிச்சைக்காரர்களால் தொல்லை என்று கடைக்காரர்கள் கத்திக் கொண்டிருக்க - அந்த நிறுவனத்தின் மீது பற்பல குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள் பொது மக்கள்...

செய்தி கேட்டு திடுக்கிட்ட மோகன்  - காமாட்சி கருணை இல்லத்தின் நிர்வாகிகளுடன் பேசினான்...

கொஞ்சமும் தாமதிக்காமல் காவல் துறையில் உயர் அதிகாரியான தன் உறவினருடன் தொடர்பு கொண்டான்.. 

சிறப்பு அனுமதியுடன்  -  அந்தப் பெரியவரையும் மற்றவர்களையும் தொண்டு நிறுவனத்தில் இருந்து மீட்டு காமாட்சி இல்லத்தில் சேர்ப்பதற்கு  விரைந்தான்..

அருகில் சாருவும் இருந்தாள்..

" அந்தப் பெரியவரை நாம ஆதரிப்போமா!... "

" அவர் மத்தவங்க போல இல்லை.. சந்நியாசி.. ஊருக்கான விளக்கு.. ஒரு குடத்துக்குள்ளே அடைச்சு வைக்க வேணாம்!.. சித்தப்பா மூலமா காசிக்கு அனுப்பி வைச்சிடுவோம்!.. "

சாருவின் பார்வை சாலையில் பதிந்திருந்தது..
ஃஃஃ

64 கருத்துகள்:

  1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது ஆக்கத்தினை பதிவு செய்து ஊக்கம் அளித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அன்பின் KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்..

      பொங்கும் புதுப் புனலாய்
      மங்கலம் எங்கும் பெருகட்டும்...

      நீக்கு
    2. ஆடி பதினெட்டு வாழ்த்துகள்.  நன்றி துரை செல்வராஜூ ஸார்.  சிறப்பான கதைகளைக் கொடுத்து வருகிறீர்கள்.

      நீக்கு
  5. நீல நிறத் துண்டுடன் - அந்தப் பெரியவர்..

    திரு.KGG அவர்களுக்கு மீண்டும் நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.கௌதமன் சார் பெரியவரை நேரில் கொண்டு வந்துட்டார். கண்களின் தீக்ஷண்யம் படத்தில் தெரிகிறது.

      நீக்கு
  6. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆடி செவ்வாய்க் கிழமையும் வரும் அத்தனை நாட்களும்
    சமயபுரத்து அன்னையின் அருள் என்றும் நிறைந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் துரை செல்வராஜுவின் கதை, திரு கௌதமன் ஜியின்
    சித்திரம் மனதுக்கு நிறை மகிழ்வு,.

    பதிலளிநீக்கு
  8. அன்னமிடுதலை எத்தனை ஆதுரத்தோடு செய்கிறாள்
    இந்தப் பெண்.

    கதையில் வரும் பெரியவரின் கம்பீரக் கருணை
    கண் வழியே நம்மை அடைகிறது.

    உலகமே இவர்களைப் போன்ற மனிதர்களால்
    நிறைந்தால் நம் வாழ்வு எத்தனையோ மேம்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. " அவர் மத்தவங்க போல இல்லை.. சந்நியாசி.. ஊருக்கான விளக்கு.. ஒரு குடத்துக்குள்ளே அடைச்சு வைக்க வேணாம்!.. சித்தப்பா மூலமா காசிக்கு அனுப்பி வைச்சிடுவோம்!.. "

    நல்லதொரு பாதையில் பெரியவர் நடக்க அவரது ஆசியின் பெருமையில் தம்பதிகளின் வாழ்வு செழிக்கிறது.

    தர்ம வழி என்றும் நம்மைக் காக்கிறது.
    அதிக நகாசு வேலை இல்லாமல்
    எளிமையான கதை, சுகமாக நடந்து
    ஆனந்த அனுபவமாக பூரணம் அடைகிறது.

    நம் துரையின் எழுத்தை எவ்வளவு பாராட்டினாலும்
    போதாது.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஆமாம். சொல்லவும் வேண்டுமோ...

      நீக்கு
    2. தத்மம் நம்மைக் காக்கும்.. அதில் சந்தேகமே இல்லை...

      தங்களது அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  11. //மாமா தெவசத்தன்னைக்கு திருவையாத்துல தர்ப்பணம் செஞ்சுட்டு இந்தப் பெரியவருக்கு சாப்பாடு போட்டு வேட்டி துண்டு எடுத்துக் கொடுப்போம்//

    ஒப்பீடு செய்து பார்த்தேன். விரக்திதான் வந்தது இதுவும் விதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனிந்த மனம் வருவதற்கு காலம் ஒத்துழைக்க வேண்டும் கில்லர்ஜி.. நம் வித்துகள் நம் போலத்தான் வரும். பொறுத்திருங்கள். காலம் கனியும்

      நீக்கு
    2. அன்பின் ஜி..

      தங்களது மனம் எதனாலோ பாதிக்கப் பட்டிருக்கின்ற் மாதிரி தெரிகிறது..

      கவலை வேண்டாம்..
      காலம் எல்லாவற்றையும் சரி செய்யும்...

      தங்களது வருகையும் கருத்துரையும் நன்றி..

      நீக்கு
  12. ஊருக்கான விளக்கை ஒரு குடத்தில் அடைக்க வேண்டாம் - மனதை நெகிழ்த்திய வரி

    மனித நேயம் மிக்க கதை.. படிப்பவர்களுக்கு ஏதோ ஒரு நல்ல செய்தியைச் சொல்வது

    காலையில் இத்தகைய கதை மனதுக்குப் புத்துணர்ச்சி தருகிறது
    பாராட்டுகள் துரை செல்வராஜு சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்களது வருகையும் அன்பான கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    அழகான கதை. மனித நேயங்களின் வெளிப்பாட்டை உணர்த்தியது. அன்னபூரணி என்ற சொல்லுக்கு பொருத்தமாய் மனம் நிறைய அன்பை மட்டும் வைத்துக் கொண்டு தர்மம் செய்யும் சாருலதா மனதுக்கு நிறைவை தருகிறாள்.

    வேறுபட்ட மனித நேயத்துடன் யாரோ தந்திருக்கும் இறுகிய இட்லியை கண்டதும் பதறிய அந்த நல்ல மனதிற்கு ஏற்ப, தொடர்ந்து யாசகம் பெற வராதிருக்கும் அந்தப் பெரியவரின் உடல்நிலை பாதிப்புக்கு அந்த உணவையே காரணமாக்கி தாங்கள் அமைத்ததை (அது கதையாக இருந்தாலும்) காணும் போது நம் மனமும் பதறுகிறது.

    இறுதி முடிவு சுபமாக அமைந்தது மகிழ்வாக உள்ளது. ஒரு பிளாஸ்டிக் டப்பாவையே சுமையாக கருதும் அந்தப் பெரியவரை தங்கள் பாசமெனும் வலைச்சுமையில் தம்பதிகள் இறுகி கட்டாமல், அவர் விருப்பம் போல் தனித்திருக்கச் செய்த அந்த அண்ணாமலையாரின் கருணையை எண்ணி மெய்சிலிர்கிறேன்.

    சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற கருத்துக்கேற்றபடி கதையின் முடிவை சுபமாக்கி தந்த தங்களின் நல்ல எழுத்து திறமைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். மனதிற்கு பக்தியுடன் நிறைவை தந்த கதை. பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      தங்கள் அனைவரது கருத்துகளும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கின்றன..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. வணக்கம் கெளதமன் சகோதரரே

    கதைக்கேற்றபடி தாங்கள் வரைந்திருக்கும் அந்த பெரியவரின் ஓவியம் மிகப் பொருத்தமாக உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துகள். நல்வரவு, பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் இன்பம் மேலோங்கித் துன்பங்கள் அடியோடு அழிந்து விடப் பிரார்த்திக்கிறோம். காவிரியின் புது வெள்ளம் போல அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மேலோங்கிக்கொண்டே செல்லவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புது வெள்ளம் போல நலமும் வளமும் எங்கும் பெருகட்டும்...

      நீக்கு
  16. அருமையான கதை. அன்னபூரணியான சாருலதா தன் அன்பினால் அனைவரையும் கட்டிப் போடுகிறாள், முதலில் அவள் கணவன் என்ன சொல்வானோ என நினைத்ததைப் படித்துக் கலக்கமாக இருந்தாலும் கணவனும் ஒத்துப் போனவனாகவே இருந்ததும் மகிழ்ச்சி. கடைசியில் அந்தப் பெரியவரின் குணத்தையும் அவரின் துறவையும் புரிந்து கொண்டு அவரைச் சாருலதாவின் அன்பெனும் கோட்டைக்குள் கட்டிப்போடாமல் அவருக்குக் காசி செல்ல வழி வகுத்துத் தந்த மோகன் அந்தப் பெரியவரின் குணத்தை முற்றிலும் புரிந்து கொண்டு செயல்பட்டிருக்கிறான். பார்க்க வெகு சாதாரணமான நிகழ்வைக் கதையாக்கினாலும் அதன் உள்ளார்ந்த தாத்பரியம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. தொடர்ந்து கதைகளில் கலக்குங்கள் துரை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி..

      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம்...

    இன்றைய கதையைக் குறித்த கருத்துகள் எல்லாம் மனதை நெகிழ்த்துகின்றன..

    வேலைக்குச் செல்ல வேண்டும்..
    மதியப் பொழுதில் ச்ந்திப்போம்..

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்.

    ஆடிப்பெருக்கு அன்று புது வெள்ளம் கரை புரண்டு ஓடி வருவது போல அன்பு வெள்ளம் பெருகி ஓடும் கதை.

    பெரியவருக்கு அன்னம் படைத்த அன்னபூரணி சாருலதா,

    பெரியவரையும் மற்றவர்களையும் தொண்டு நிறுவனத்தில் இருந்து மீட்டு காமாட்சி இல்லத்தில் சேர்த்த உதவும் மனபான்மை கொண்ட மோகன் இருவர் குணத்தையும் பாராட்ட்ட வேண்டும்.

    கதை அருமை. பெரியவருக்கு காசி விஸ்வநாதனை, அன்னபூரணியை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி..

      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  20. //அவர் மத்தவங்க போல இல்லை.. சந்நியாசி.. ஊருக்கான விளக்கு.. ஒரு குடத்துக்குள்ளே அடைச்சு வைக்க வேணாம்!.. சித்தப்பா மூலமா காசிக்கு அனுப்பி வைச்சிடுவோம்!..//

    ஆமாம் அதுதான் நல்லது. அனைவருக்கு நல் வார்த்தைகள், நல் ஆசிகள் கொடுத்து கொண்டு இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் நல்வார்த்தைகளும்
      நல்லாசிகளும் என்றும் கிடைக்கட்டும்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. கெளதமன் சார் வரைந்த கதைக்கு ஏற்ற ஓவியம் அருமை.

    பதிலளிநீக்கு
  22. நல்ல கருத்துக்களை சொன்ன நல்ல கதைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நல்ல கருத்துக்களை சொன்ன நல்ல கதைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சகோ..//

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  23. // இந்த நாக்கு மரத்துப் போயிடுச்சி... அதுக்கு ருசியை மறுபடியும் ஞாபகப்படுத்தக் கூடாது.. //

    வரிகள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. தொடங்கிய விறுவிறுப்பு முடிவில் சப்பென்று ஆகிவிட்டது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  25. பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  26. அனைவருமக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! ஆடிப்பெருக்கன்று அன்னபூரணி கதை படித்த மகிழ்ச்சி! எல்லோர்க்கும் எல்லா வளமும் பெருகி, பொங்கி வரும் புது வெள்ளமாய் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி தங்கிட இறைவனை பிரார்த்திக்கிறேன். நல்லதொரு கதைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      அன்பான பிரார்த்தனைக்கு நன்றி..

      நீக்கு
  27. அருமையான கதை.அன்னபூரணி அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      அன்னபூரணி அனைவரையும் காக்கட்டும்..

      நீக்கு
  28. ஒரு சிந்தனை இனம் காணவும் ஒரு தகுதி தேவை. சாரு அன்னபூரணியாக விளங்குவதால் தான் இது சாத்தியமாகியிருக்கிறது. நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      தாங்கள் குறித்திருக்கும் -
      // ஒரு சிந்தனை இனம் காணவும்.. // என்பது -

      // ஒரு சித்தனை இனம் காணவும்.. // என்று வந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  29. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!