திங்கள், 22 ஆகஸ்ட், 2022

'திங்க'க்கிழமை பதிவு - கேரட் அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 இந்த வருடத்தில் இதுதான் முதல் தி. பதிவு என்னிடமிருந்து. நிறைய எழுதாததற்கு மன்னிக்கவும். சோம்பேறித்தனம் மற்றும் ஆர்வமின்மைதான் காரணம். இந்த வருடமே என் priority மாறிவிட்டதால், சமையலறைப் பக்கம் ஒதுங்குவதில்லை. முன்பெல்லாம் இணையத்தைப் பார்த்து ஏதாவது செய்ய முயல்வேன். நான் எழுதிவைத்திருக்கும் செய்முறைகளையே இன்னும் செய்துபார்க்கவில்லை (தேன்மிட்டாய், கம்மர்கட்.....)

அன்புடன்

நெல்லைத்தமிழன்

 

சில நாட்களுக்கு முன்பு, என் பெண்ணின் நண்பர்கள் மைசூர் பக்கம் சுற்றுலா சென்றுவிட்டு, மறுநாள் காலையில்தான் சென்னைக்கு பஸ் என்பதால் வீட்டிற்கு வந்து தங்கினார்கள். காலையில் 6 1/2 மணிக்கே ஏதேனும் சாப்பிட்டுவிட்டுச் செல்லவேண்டும் என்பதால், மனைவி அவங்களுக்கு வெண்பொங்கல் செய்தார். முதல் முறையா அவங்க வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்பதால், நான் காலையில் எழுந்து அவங்களுக்கு சர்க்கரைப் பொங்கல் செய்தேன். இதற்கு நான், லால்பாக் பூக்கண்காட்சியில் வாங்கிய பாகு வெல்லத்தை உபயோகித்தேன். அது ஆர்கானிக் மற்றும் சுத்தமானது என்பதால் வடிகட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மிக நன்றாக வந்திருந்தது.  மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு முன்னால், மாமியாருக்கு எடுத்துவைத்திருந்தேன். அவர் பிறகு சாப்பிட்டுவிட்டு, சாதம் இன்னும் கொஞ்சம் வெந்திருக்கலாம் (குழைய இருந்திருக்கலாம்) என்று அபிப்ராயப்பட்டார்.  நான் படங்கள் எடுக்கவில்லை. அதனால் அதனை எ.பிக்கு அனுப்ப முடியவில்லை. (செய்திருந்தால், சுதந்திர தினத்துக்கு ஒரு இனிப்பு பதிவு வந்திருக்கும், வாங்கி பாத்துக்குப் பதிலாக.


சரி, அவருக்கு இன்னொரு இனிப்பு செய்துதரலாம் என்று நினைத்து கேரட் வாங்கினேன். இன்று அதனை உபயோகித்து கேரட் அல்வா செய்தேன்.  


பாதி செய்துகொண்டிருக்கும்போது பையன் வந்தான். என்ன... பாலைக் காணோமே என்றான். போடா போடா..இதுதான் ஒரிஜினல் கேரட் அல்வா செய்யும் முறை. உன் அம்மா செய்தது வட இந்திய முறை என்று சொன்னேன். அவனோ... வட இந்தியாவோ தென் இந்தியாவோ.... எனக்கு கேரட் அல்வா பால் போட்டுச் செய்து அல்வாவில் திரட்டுப்பால் மாதிரி திரி திரியாக இருந்தால்தான் பிடிக்கும் என்றான்.


கிருஷ்ண ஜெயந்திக்கு கேரட் அல்வாவையே கண்டருளப்பண்ணிவிட்டேன்.  வேற எதுவும் பண்ணவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். 5 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறோம், அதில் பெரும்பாலும் விருந்துச் சாப்பாடுதான் - நிச்சயதார்த்தம், திருமணம், கோவில் திருவிழா. அதனால் இன்று பட்சணங்கள் செய்யவேண்டாம் என்பது என் எண்ணம்.


சரி...இப்போது கேரட் அல்வா எப்படிச் செய்தேன் என்று பார்ப்போம்.


தேவையானவை

 

துருவின கேரட்

கால்/அரை லிட்டர் பால்

ஜீனி

முந்திரி - 2 மேசைக்கரண்டி

ஏலக்காய் பொடி

நெய் 3 மேசைக்கரண்டி (அல்லது4)


துருவின கேரட் எவ்வளவு இருக்கோ அதற்குப் பாதி அளவு ஜீனி வேண்டும். அளக்கும்போது கேரட் துருவலை அடைத்து அளக்கணும்.


செய்முறை


1. கேரட்டை தோல் சீவிவிட்டு, நன்கு துருவிக்கொள்ளவும்.  மாமியாருக்காகச் செய்வதால், அரைத்துவிடவா என்று கேட்டேன். மனைவி, அது அவசியமில்லை என்று சொல்லிவிட்டாள். குக்கரில் வைக்கும்போதே நன்கு வெந்துவிடும் என்றாள்.


2. எவ்வளவு இருக்கிறது என்று அளந்து, அதில் பாதி அளவு ஜீனியை எடுத்துவைத்துக்கொள்ளவும்.


3. நெய்யில் முந்திரியை வறுத்துவைத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடிசெய்துகொள்ளவும்.


4.  துருவின கேரட் மற்றும் பாலைச் சேர்த்து குக்கரில் வைத்து நன்கு வேகவைக்கவும்.


5. தயாரான பிறகு வெந்த கேரட் துருவலை (பால் சேர்ந்து இருக்கும்), கடாயில் சேர்க்கவும். அதனுடன் ஜீனி சேர்த்துக் கொதிக்கவிடவும்.


6. நன்கு கலந்து தண்ணீரெல்லாம் ஆவியாகி ஜீனியும் கேரட்டும் நன்கு சேர்ந்துகொள்ளும். அவ்வப்போது கொஞ்சம் நெய் சேர்த்துக் கிளறவும்.


7. தண்ணீர்ச்சத்து போய் கொஞ்சம் கெட்டிப்படும். நெய் வெளிப்படும். அப்போது  ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்துக் கிளறி உடனே அடுப்பை அணைத்துவிடவும்..


8. பச்சைக் கற்பூரம் சேர்த்தால், கோவில் பிரசாத வாசனை வரும் என்பதால்,  நான் எப்போதும் சிறிது சேர்ப்பேன். விருப்பமிருந்தால் சேர்க்கலாம். ( இது செய்த அன்று சேர்த்தேன்). அட்டஹாசமாக வந்தது என்று நினைக்கிறேன்.









பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணிவிட்டு, மனைவியிடம்,  மாமியாருக்கு ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்துக் கொடுக்கச் சொன்னேன்.  மனைவி சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, மெதுவாகத்தான் எப்படி இருந்தது என்று சொல்லுவாள். இதுவரை சொல்லலை.


இதுக்கு பாகிஸ்தானி கேரட் (தில்லி கேரட் என்று சொல்வார்கள் என்பது எனக்குப் பிறகுதான் தெரியும். பஹ்ரைனில் இருந்தபோது அந்த கேரட் பாகிஸ்தானிலிருந்துதான் வரும்) மிக நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள். நாம்தான் ஜீனியைப் போட்டுக் கிளறுவதால், வித்தியாசம் எதுவும் தெரியாது, நிற வித்தியாசம் தவிர, என்று எனக்குத் தோன்றும். பால் அதிகமாகச் சேர்த்துக் கிளறி, திரி திரியாக இருப்பது எனக்குப் பிடிப்பதில்லை. வட இந்தியக் கடைகளில் அப்படித்தான் கிடைக்கும்.  சமையல் வல்லுநர்கள் மீனாட்சி சாம்பசிவம், கீதா ரங்கன், நெல்லை கமலா ஹரிஹரன் மேடம், எங்க ஊர் கோமதி அரசு மேடம் போன்றவர்கள் வேறு விதங்களில் செய்யலாம்.


நீங்களும் செய்துபாருங்கள்.


அன்புடன் 


நெல்லைத்தமிழன்

48 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா அக்கா.. வாங்க. பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    கேரட் அல்வா படங்கள் ஈர்க்கிறது. தங்களின் செய்முறை இன்னமும் நிறுத்தி நிதானமாக படிக்கவில்லை. சமையல் அனைத்தையுமே எப்போதும் அழகாகவும், பக்குவங்களை நேர்த்தியாகவும் செய்யும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    குழந்தைகளுக்கு ஏழு மணிக்கு பள்ளிச் செல்ல வேண்டும். அதனால் கொஞ்சம் வேலைகள். பிறகு மதியத்தில் வருகிறேன். உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அல்வாவிற்கு கேரட்டை விட பீட்ரூட் உகந்தது என்பது என் அபிப்ராயம்.
    அப்போ கேரட்?.. கோசுமல்லிக்காகவே விளைந்தது அல்லவா, அது?..
    சொல்ல மறந்து போனேனே?.. இன்று எங்கள் அகத்தில் கூஷ்மாண்ட அல்வா. பிரமாதமாக அமைந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசி அல்வா நேற்று இன்று காலை.. இரு நாளும் நிறையச் சாப்பிட்டேன். என் ஃபேவரைட்

      கேரட் பீட்ரூட் அல்வாக்களும் சுவைதான்

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  5. காரட் அல்வா நன்றாக இருக்கிறது நெல்லைத்தமிழன்.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    நானும் இப்படித்தான் செய்வேன். பச்சைகற்பூரம் மட்டும் போடமாட்டேன். பையன் ஏலக்காய் கூட வேண்டாம் என்பான். "முந்திரி மட்டும் நிறைய போடுங்கள் அம்மா" என்பான்.

    கேரட் அல்வா செய்து கொண்டு இருந்தேன்.
    பிள்ளைகள் பீட் ரூட் சாப்பிட மாட்டேன் என்கிறார்கள் என்று இரண்டும் கலந்து அல்வா செய்து கொடுத்தேன். கொஞ்சம் வளர்ந்தபின் காரட், பீட்ரூட் தோசை சாப்பிட பழகியதும் காரட் அல்வா மட்டும் செய்து கொடுக்க ஆரம்பித்து விட்டேன்.

    விருந்தினர் வந்தால் கை கொடுப்பது காரட் அல்வா தான்.
    எளிதில் செய்து விடலாம்.
    டெல்லியில் கொஞ்சம் சிவப்பாக காரட் கிடைக்கும் அந்த சீஸனில் யார் வீட்டுக்கு போனாலும் அந்த காரட் அல்வா தான் கிடைக்கும்.
    அதுவும் இரண்டு ஸ்பூன் மாதிரி எல்லாம் சாப்பிட மாட்டார்கள்.
    நீங்கள் பெருமாள் முன் வைத்து இருக்கும் அளவு பெரிய கிண்ணங்களில் கொண்டு வந்து வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. அவ்வளவு அல்வா தருவார்களா? யம்மி.. கேடரர்கள்ட இன்னும் இன்னும்னு கேட்டு வாங்கி காசி அல்வா, கேரட் அல்வா இங்கு சாப்பிட்டேன்

      நீக்கு
    2. ச.பொங்கல், கேரட் போன்ற அல்வாக்களில் ப கற்பூரம் சேர்த்தால் எனக்குப் பிடிக்கும்

      நீக்கு
  6. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது தின்று பார்க்க கொஞ்சம் அனுப்பி வைத்தால் ? மார்க் போடலாம் ‌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி.. கொஞ்சமா கூரியர்ல அனுப்பினா சுண்டக்கா கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் ஆயிடுமேன்னு யோசிக்கறேன்

      நீக்கு
  7. தித்திக்கும் திங்களில் அன்பின் வணக்கங்களுடன்,

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  8. கேரட்  அல்வா எத்தனை கேரட்டுங்கோ? 24 ஆ, 22 ஆ, 18 ஆ. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....ஜெசி அண்ணா, சுத்தமான நெய், சுத்தமான சர்க்கரை, சுத்தமான காரெட் என்றுதான் நெல்லை செய்திருப்பார் என்பதால் கசடற்ற கேரட்னு சொல்லிக்கலாம்...!!!!

      கீதா

      நீக்கு
  9. அழகான படங்கள்.. நேர்த்தியான செய்முறை..

    கேரட் அல்வா சாப்பிட்டு சில வருடங்கள் ஆகி விட்டன..

    ஜீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையில் இருந்து விலகி விட்டபடியால் அவற்றை கனவிலும் நினைப்பதில்லை..

    மூன்று மாதங்கள் ஆகி விட்டன.. டீ காஃபி இவற்றை நிறுத்தி விட்டேன்..

    பாரம்பரிய சர்க்கரை தான் கொஞ்சமாக!..

    பதிலளிநீக்கு
  10. நெல்லை சூடான கேரட் அல்வாவை ஐஸ்கிரீமுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் செமையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெனில்லா ஐஸ்க்ரீம் உடன் மம்மி. ஜாமூனும். நல்ல ரசனை உங்களுக்கு மதுரைத்தமிழன்

      நீக்கு
  11. ஆஹா நெல்லை அசத்திட்டீங்க! சூப்பரா வந்திருக்கு.

    நானும் ஒரிஜினலில்தான் செய்வேன் பால் சேர்க்காமல். ஆனால் உங்க மகன் போலவே என் மகனுக்கும் முன்பெல்லாம் பால் சேர்த்தால்தான் பிடிக்கும் என்பதால் இப்படிச் செய்வேன். ஒரிஜினலில் செய்தால் கேரட்டின் சுவை நன்றாகத் தெரியும். எனவே என் ஒட்டு அதற்கே.

    இருந்தாலும் இப்போது எந்தவகை இனிப்போ, உப்புப் பண்டங்களோ (கொறிப்பவை) செய்வதில்லை ரொம்ப அரிதாகிவிட்டது.
    நான் வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்துவதில்லை. ஆர்கானிக் வெல்லத்தில், நாட்டுச் சர்க்கரையில் செய்தால் செமையா இருக்கும். செய்து பாருங்க. ஆனால் கொஞ்சம் காரமலைஸ் பண்ணி செய்ங்க அதன் சுவையே தனி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் கேரமலைஸ் செய்தால் சூப்பரா இருக்கும். பொறுமை வேணும்

      நீக்கு
  12. நல்லா வந்துருக்கு படங்களும்....பராராட்டுகள். வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இதில் நான் பச்சைக் கற்பூரம் ஏலக்காய் சேர்ப்பது வெகு அபூர்வம். எங்களுக்கு என்றால் (மகனுக்கும் இந்த ஃப்ளேவர் காரட்டின் சுவையை அமுக்கிவிடுகிறது என்பதால்) இதெல்லாம் சேர்க்காமல் செய்வேன். காரட்டின் மணம் சுவை வேண்டும் என்று.

    சில சமயம் முந்திரியை அரைத்துச் சேர்த்துச் செய்வேன் அது ஒரு வகை ரிச் சுவையைக் கொடுக்கும். அது போல பாதாமும் அரைச்சு...இப்படி வேரியேஷன்ஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப.க-உண்மை. டாமினேட் செய்யும். பாதாம் முந்திரி அரைத்து...ஆசைதான்

      நீக்கு
  14. கரட் அல்வாவும் படங்களும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  15. படத்தைப் பார்த்தால் நாக்கில் நீர் ஊறுகிறது.மனம் தில்லிக்குப் போன புதிதில் அம்மா செய்த கேரட் ஹல்வாவை நினைக்கிறது .அரைத்துதான் செய்தார்கள்.முதல் முயற்சியே சூப்பர்..மாத்ரு தேவோ பவ.

    பதிலளிநீக்கு
  16. மெதுவாக பதில் எழுதறேன். சென்னையில் இப்போது. இரவு மயிலாடுதுறை நோக்கி

    பதிலளிநீக்கு
  17. பானுமதி வெங்கடேஸ்வரன்22 ஆகஸ்ட், 2022 அன்று PM 12:17

    முன்பே ஒரு முறை கேரட் அல்வா செய்து பகிர்ந்திருக்கிறீர்களோ? எப்படியோ சுவை!

    பதிலளிநீக்கு
  18. மிகவும் அருமையாக செய்தஇருக்கிறீர்கள் படங்கள் எல்லாம் சூப்பர் ருசிக்கு சொல்லவே வேண்டாம் எப்போதுமே காரியங்கள் உங்களுக்கு மிகவும் அழகாக செய்ய வருகிறது எவ்வளவு பாராட்டினாலும் தகும் அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி காமாட்சி அம்மா. இன்னும் கிளறியிருக்கணுமாம் நான் முறுகிடும் என் நினைத்தேன்.

      நீக்கு
  19. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    காரட் அல்வா செய்முறைகளுடன் படங்கள் மிக அருமையாக வந்துள்ளது. உங்கள் செய்முறை சூப்பராக இருக்கிறது. நான் பச்சை கற்பூரம் தவிர்த்து ஏலக்காய் சேர்ப்பேன். ஏலக்காய் எப்போதேனும் வீட்டில் இல்லாமல் போனால், வெல்லம் சேர்ந்த பாயாசத்திற்கு அவசரத்திற்கு இரண்டு கிராம்பு பொடி செய்து சேர்ப்பேன். பச்சைக் கற்பூரம் முன்பெல்லாம் அனைத்திலும் போட்டுக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு வரும் சில உறவுகளுக்கு அந்த வாசனை பிடிக்காமல் போகவே அதை நிறுத்தி விட்டேன்.( இப்போது இனிப்பையே நிறுத்துமளவிற்கு போய் விட்டது.)

    தாங்கள் பொறுமையாக பலவித இனிப்புகளை அசராமல் பக்குவமாக செய்கிறீர்கள். எங்கள் அண்ணாவும் இப்படித்தான். எந்த இனிப்பையும் மற்ற எல்லாவித சமையல்களையும் அவரே தனியாக செய்து விடுவார். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. அதில் சகோதரி கீதா சாம்பசிவம் என குறிப்பிடுவதற்கு பதில் மீனாட்சி சாம்பசிவம் என குறிப்பிட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். (இல்லை இது வேறு தெரிந்தவர்களா? அதுவும் அறியேன்..) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. ஹாஹாஹா.. ஒரிஜினல் பெயர் மீனாட்சி என் நினைக்கிறேன். அவரை மறக்க இயலுமா?

      நீக்கு
    2. //மீனாட்சி சாம்பசிவம், // யாரு இந்த மீனாக்ஷி சாம்பசிவம்? எங்க பெண்ணின் பெயர் தான் மீனாக்ஷி. உங்க கிட்டே சொன்ன நினைவே இல்லையே? வேறே யாரானுமா? என்னோட ஒரிஜினல் பெயர் என்ன என்பதைப் பத்தி என்னோட கல்யாணம் பற்றிய மின்னூலிலும், ஆரம்ப காலத்தில் ஒரு தொடர் பதிவாகவும் எழுதி இருக்கேன். தேடிக் கண்டு பிடிச்சுப் படிச்சுக்குங்க.

      நீக்கு
  20. மொபைல். நிறைய எழுத முடியவில்லை. அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!