சனி, 3 செப்டம்பர், 2022

விண்வெளியில் அரிசி சாகுபடி. + நான் படிச்ச கதை

 

விண்வெளியில் அரிசி சாகுபடி சீன விஞ்ஞானிகள் சாதனை


பீஜிங் : விண்வெளி நிலைய ஆய்வகத்தில் நெற்பயிரை வளர்த்து, சீனா சாதனை படைத்துள்ளது. விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது.

இந்நிலையில், சீன விண்வெளி நிலையத்தின், ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். கடந்த ஜூலையில் தொடங்கிய இதற்கான பணிகளில், இரு வகை நெற்பயிர் விதைகளை அவர்கள் பயன்படுத்தினர்.


latest tamil news


இதில், நெற்பயிர் 30 செ.மீ., உயரத்திற்கு வளர்ந்து விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய செய்துள்ளது. விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிக அளவில் இருக்கும். இந்த சூழலில், தாவரங்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என அறிவதற்காக, சீன விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

அதிக கதிரியக்கங்கள், புவியீர்ப்பு விசையற்ற நிலை போன்ற சுற்றுச்சூழலில், விண்வெளியில் சீன விஞ்ஞானிகள் அரிசியை உற்பத்தி செய்து இருப்பது, விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த நிலையாக கருதப்படுகிறது.

= = = = =  =======    ======= 

பள்ளி போகாமலே படிக்கலாம்; 'விர்ச்சுவல் ஸ்கூல்' துவக்கம்

புதுடில்லி :   பள்ளிகளுக்கு செல்லாமலேயே, விர்ச்சுவல் முறையில் படிக்கும் பள்ளியை முதல்வர் கெஜ்ரிவால் நேற்று துவக்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் படித்தனர். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த பள்ளி துவக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள், இந்த விர்ச்சுவல் பள்ளியில் சேரலாம்.நாட்டின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவரும் இதில் படிக்க முடியும்.


latest tamil news


இந்தப் பள்ளியில், 9 - பிளஸ் 2 வகுப்பு வரை நடத்தப்படும். நாட்டிலேயே முதல் விர்ச்சுவல் பள்ளியை துவக்கியுள்ளோம். மாநில கல்வி வாரியத்தின் வாயிலாக தேர்வுகள் நடத்தப்படும்.இதில் சேரும் மாணவர்களுக்கு, 'நீட், க்யூட், ஜே.இ.இ.,' உள்ளிட்ட உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

  =========================================================================================================================================


தையல் இயந்திரம் வாங்கி கொடுத்தவரைப் பார்த்து மிரண்டு போனேன்.!
----------------------------------------
சென்னை சோழிங்கநல்லூர், காந்தி நகர், எரிக்கரை பகுதியில் வசித்து வரும் சூரிய கலா என்ற பெண் என்னிடம் உதவி கேட்டிருந்தார்.கணவர் பிரிந்து சென்று விட்டதாகவும் இரண்டு குழந்தைகளுடன் 1200 ரூபாய் வாடகை வீட்டில் இருக்கிறேன், வீட்டு வேலை செய்து வந்தேன், இப்போது வேலை இல்லை.
ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். ஜாக்கெட் தைக்க நன்கு தெரியும் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்த பெண்மணியின் பெற்றோரை அறிவேன். சிந்தாதிரிப்பேட்டையில் வசித்தவர்கள்.மிக மிக ஏழ்மையான குடும்பம்.
ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் கண்டிப்பாக இக் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்று முடிவு செய்து என் நண்பர்கள் மற்றும் தொண்டு உள்ளங்கள் நிறைந்த வாட்ஸ்அப் குழுக்களுக்கு இந்த தகவலை பகிர்ந்தேன்.
நான் பகிர்ந்தவுடன் மதுரையில் வசிக்கும் ஒரு அன்பரிடம் இருந்து போன் வந்தது .நீங்கள் குறிப்பிட்ட குடும்பம் உதவுவதற்கான தகுதி படைத்தவர்களா ?என்று அந்த தொலைபேசியில் பேசியவர் கேட்டார்.
உடனே நான் 100% தகுதியான குடும்பம் என்றதும் ,தையல் மிஷின் எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்க சொன்னார்.
நான் சம்பந்தப்பட்ட கடையில் விசாரித்து பதினெட்டாயிரம் என்று தெரிவித்தேன். உடனடியாக, என்னுடைய வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப சொன்னார்.
நான் சொன்னேன், நீங்கள் அந்த தையல் மிஷினை விற்பனை செய்யும் கடைக்கே அனுப்பி விடுங்கள் என்று அந்த விவரத்தை கொடுத்தேன்.
அந்த கடைக்கு தொகையை அனுப்பியிருந்தார்.
நான் ஒரு குட்டி யானையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 45 நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருள்களுடன் அந்த தையல் மிஷினுக்கு உடனடியாக தேவைப்படும் நூல்கள், பட்டன்கள், கொக்கிகளையும் வாங்கிக் கொண்டு சோளிங்கநல்லூர் சென்றேன்.
இவ்வளவு விரைவான உதவியை அவர்கள் எதிர்பார்க்க இல்லை. உடனடியாக அந்த மிஷினில் அப்பெண்மணியை உட்காரச் சொல்லி தைக்கச் சொல்லிவிட்டு, மதுரையிலுள்ள அந்த நண்பருக்கு வீடியோ காலில் தொடர்பு கொண்டு காண்பிக்க முற்பட்டேன்.
வீடியோ காலில் அவரைப் பார்த்ததும் மிரண்டு போனேன். ஒரு நடுத்தர வயது கொண்ட அதிகாரியாக அல்லது தொழிலதிபராக இருப்பார் என்று நினைத்தேன்.


ஆனால் அந்தப் பையனுக்கு சுமார் 25 வயதுதான் இருக்கும். டீ கேனுடன் கூடிய சைக்கிளுடன் நின்றிருந்தான். தெருத்தெருவாக சென்று டீ விற்கும் இளைஞன்.
அவனுக்கு பின்னால் துளாவி பார்த்தேன். அவனுடைய எஜமானர் யாரும் இருக்கிறார்களா! என்று தேடினேன்.
உதவி செய்தது ...யார்? என்றேன். நான் தான் என்றான். எனக்கு தூக்கி வாரிப்போட்டது அதன் பிறகுதான் அவனுடைய முழு விவரம் தெரிய வந்தது.
அவன் பெயர் தமிழரசன், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன். வேலை தேடி சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு, பசியின் கொடுமையை அறிந்து மீண்டும் மதுரைக்குச் சென்று சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருவதும், தினந்தோறும் தன் வருமானத்தில் 20, 30 ஏழை மக்களுக்கு உணவுவாங்கிக் கொடுத்து பசிப்பிணி ஆற்றி மகத்தான சேவை புரிந்து வருவதையும் அறிந்தேன்.
அவன் செயல்பாட்டை பாராட்டும் வகையில் சமீபகாலமாக நிறைய பேர் அவனுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வந்ததுள்ளதாகவும் அந்த உதவிகளையும் இப்படி திருப்பிவிட்டு ஏழை எளிய மக்களுக்கு மேலும் நன்மைகள் செய்து வருவதையும் அறிந்து மெய்சிலிர்த்துப் போனேன்.!
பகிர்வு... - நன்றி பாரதி

========================================================================================================================================================

நான் படிச்ச கதை (JC) 

***************

இடலாக்குடி ராசா - நாஞ்சில் நாடன்

மண் திணி ஞாலத்து

உண்டி கொடுத்தோர்

உயிர் கொடுத்தோரே

(மணிமேகலை - காதை வரி)


முன்னுரை 

பசி என்று வருபவருக்கு இல்லை என்னாது புசி என்று, இருப்பதை ஈன்ற தமிழ் பழக்கம் தற்போது குறைந்து வருகின்றது என்றாலும் ஆங்காங்கே கிராமங்களில் சிறு நகரங்களில் இன்றும் இருப்பதைக் காணலாம். அதேபோல் பிச்சை என்று சொல்லாமல் உறவு முறை கூறி அன்புடன், கிடைப்பதை உண்டு பசியாற்றும் யாசகர்களும் இருந்தனர். அத்தகைய யாசகன் ஒருவனின் கதைதான் இது.

இந்த இடலாக்குடி ராசாதன்மானம், சுயகவுரவம் பெரிதும் உடையவன். நினைத்தால் எங்கேயாவது செல்வது. அதேபோல் திடீரென்று வெளியேறுவது என்பது வழக்கம்.( கோணங்கி போல).

இடலாக்குடி ராசா - நாஞ்சில் நாடன்.

இடலாக்குடி ராசாஎன்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல. வாயால்புர்ர்ர்..’ என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய துணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளின் சதைந்த செம்புண் பின்காலில் ஒவ்வொரு முறை இடம் பெயர்கையிலும் முன்னங்கால்களைத் தூக்கித் தூக்கித் தத்தித் தாண்டும் பெட்டைக் கழுதையைக் கண்ட பரிதாபம்.

ராசாவின் தோற்றம் வாட்டசாட்டமாக, தாள் தொடு தடக்கையொடு ராஜா போல்தான் இருக்கும்.  ஐந்தே முக்காலடி உயரம். காலில் செருப்பு இல்லாமல் கருமருதுப் பலகை போல் விரிந்த மார்பும் முதுகும். ‘இன்று போல் இருத்திஎன்று எந்தச் சீதை வாழ்த்தினாளோ? என்றைக்குப் பார்த்தாலும் நாற்பது சொல்லும் உடல். ஆனால் கண்கள்? வெண்டிலேஷனுக்குப் போடும் நிறமில்லாத ஒளி ஊடுருவாத கண்ணாடி போல் ஒரு மங்கல். அல்லது வெளிறல். கண்களையே பேசும் மனம். பேச்சில் ஒரு வெடுக்கு.

பெயரில் இடலாக்குடி இருந்தாலும் அங்குதான் தங்குகிறானா? வீடுகளுண்டா? பெண்டு பிள்ளைகள் உற்றார் உறவு உண்டா? யாரும் கண்டுபிடிக்க முனைந்ததில்லை.

எப்போதாவது திடீரென அவன் பிரசன்னமாவான். அரையில் கிழிசல் இல்லாத பட்டைக் கரை ஒற்றை வேட்டி.  தோளில் சுட்டிப்போட்ட ஈரிழை துவர்த்து. இடது கையில் நரைத்துப்போன காசிக்கயிறு. குளித்து கோயிலுக்குப் போன அடையாளமாக காதில் பொன்னரளி அல்லது செவ்வரளி. அல்லது திருநீற்றுப் பட்டை அல்லது மஞ்சள் காப்புக் கீற்று. எப்போது பார்த்தாலும் களைந்து போன ஒரு சாமானை எடுக்கப் போவதுபோல்விறீர்என்று ஒரு நடை.

முற்பகல் பதினோரு மணிக்கு, பிற்பகல் மூன்று மணிக்கு, இரவு எட்டுமணிக்கு என்று அட்டவணைப்படியும் இல்லாமல் கிழமையில் இரண்டு மூன்று முறை அந்த ஊருக்கு வருவான். மனதில் தோன்றிய - அப்படி ஏதாவது தோன்றுமோ என்னவோ - யாரு வீட்டுத் தெருப்படிப் புரையிலாவது ஏறி வட்டச்சம்மணம் போட்டு உட்காருவான். துண்டால் முகத்தை ஒரு முறை துடைத்துக் கொள்வான். ஒரு வளையத்தின் நெளிவு இல்லாமல், நேர்க்கோட்டுக் கோணங்களில் வெடுக்வெடுக்கென்று காக்கையைப்போல் தலையைத் திருப்பிச் சுற்றும் முற்றும் பார்ப்பான்.

யார் கவனத்திலாவது பட்டால் சரி. படாவிட்டால்எக்கா... எக்கா... ராசா வந்திருக்கேன்என்று இரண்டு விளி. அல்லதுபெரீம்மா. பெரீம்மோவ்... என்னா அனக்கத்தைக் காணேம். பெரீம்மா...” என்றொரு கூப்பாடு. இன்னாருக்கு இன்ன முறைதான் என்று ஒரு வரைமுறை கிடையாது. எல்லோரும் தன்னைவிட வயதில் பெரியவர்கள் என்ற அனுமான முறைகள். ஆனால் எந்த வீட்டிலும் ஆண்களைக் கூப்பிடுவது இல்லை.

சத்தம் கேட்டு வீட்டினுள்ளிருந்துஅக்காவோ’ ‘பெரியம்மாவோ எட்டிப் பார்ப்பார்கள். “என்னா ராசா? இந்த வேனா வெயில்லே எங்கயாக்கும் போய்ட்டு வாறே?”

யாரு? ராசாவையே கேக்கே? காலம்பற நாவக்காடு... நம்ம அத்தானுக்க எளைய குட்டியைக் கெட்டிக் குடுத்திருக்கில்லா.. ஆவுடையம்மை. எட்டிப்பார்த்து ரெம்ப நாளாச்சு... பிள்ளை என்ன நெனைச்சுக்கிடும்? நம்மளைத் தேடாதா? ஒரு நடை.... இன்னா இரி காப்பி குடிச்சுக்கிட்டுப் போலாம்ணா.... ராசாக்கு கொறைச்சலுல்லா... கொண்டாங் கொடுத்தான் வீட்லயா காப்பிக்குடி... கொள்ளாமே! அவ அடுக்களைக்குப் போனா. வண்டியை விட்டுட்டேன். அக்காளைப் பாத்து நாளாச்சுல்லா....”

ஆகாங்...”

என்ன ஆகாங்... பேசிக்கிட்டே நிக்கே? விடிஞ்சாப்பிலே இருந்து ஒண்ணும் குடிக்காம அலைஞ்சு வந்திருக்கேன்.... பசிக்காதா!”

அட காலறுவான்.... இன்னா இரி... எல்லாம் ஒன் அதியாரந்தான்....”

மஞ்சளாகப் பழுத்த ஒரு வாழையிலைத் துண்டு. அதன் சுருளை நீக்கி ராசா விரித்துப் பிடிக்க, அந்தஅக்காகற்சட்டியில் பிழிந்து கொண்டு வந்திருந்த பழைய சோற்றைக் கையால் அள்ளியள்ளி வைப்பாள். ஒரு முழு வேலைக்காரன் திருப்தியாகச் சாப்பிடும் அளவுக்கு. அதன்மேல் கொடியடுப்பில், மண்பானையில், எப்போதும் அனந்து நுரைத்துக் கொண்டிருக்கும் பழங்கறியில் இரண்டு மூன்று சிரட்டை அகப்பை. ‘பழஞ்சித் தண்ணியும் கொண்டு வைப்பாள்.

எதையோ நினைத்துக்கொண்டுஎக்கா.... எக்கா....?’

என்னா? ஏன் போட்டு தொண்டையைத் தீட்டுகே?”

ரெண்டு உப்புப் பரல் தரப்பிடாதா? வீட்டிலே எளவு உப்புக்கும் பஞ்சமா?”

கரி முடிஞ்சு போவான்.... மறந்து போச்சுப்பா... மொளகா வேணுமா?”

கொண்டா.”

விரல்களை விரித்து, முழு உருண்டையாக உருட்டி ராசா பழையது சாப்பிடுவதைப் பார்த்தால் இரண்டு கவளம் நமக்கும் தரமாட்டானா என்று இருக்கும். ‘நறுக்நறுக்கென்று பச்சை மிளகாயைக் கடிக்கையில் நாவூறும். வள்ளிசாக ஒரு பருக்கை மீதமில்லாமல் சாப்பிட்டு முடிப்பான்.

என்னா போருமா?”

போரும்.. ராசாவுக்கு வயறு நெறஞ்சாச்சு...” தண்ணீர் விட்டுக் கையைக் கழுவுவான். சாப்பிட்ட இடத்தைத் துடைப்பான்.  அப்பம் ராசா வரட்டா?”

என்னா அதுக்குள்ளே பொறப்பிட்டாச்சா?”

அப்பம் ராசா வண்டியை விட்டிரட்டா. எக்கா, ராசா வண்டியை விட்டிருக்கேன்.... பிள்ளைகளையெல்லாம் பாத்துக்கோ என்னா? வண்டியை விட்டிருகேன்....” விறீர் என்று நடை தொடரும். எங்கே வந்தான்? எங்கே போகிறான்? யாருக்குத் தெரியும்?

அந்த ஊரில் தெருப்படிப்புரை உள்ள எல்லா வீடுகளிலும் இந்த அதிகாரம்தான். அந்த வீட்டில் பழையது இல்லாவிட்டால் அடுத்த வீட்டுக்காரியோ எதிர்த்த வீட்டுக்காரியோ அவன் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு கொண்டுவந்து அமுது படைப்பாள்.

பெரும்பாலும் ராசா சாப்பிடவரும் நேரங்களில் ஆண்கள் வீட்டில் இருப்பதில்லை. இருந்தாலும் அவன் அதிகாரங்களைக் கண்டுகொள்வதில்லை. ஒரு அலட்சியம் அல்லது இளப்பம். குறுஞ்சிரிப்போடு விட்டு விடுவார்கள். சிலருக்கும் மட்டும் அவனுடன் விளையாடத் தோன்றும். “என்ன ராசா! அதியாரம் தூள் பறக்கு? இஞ்ச என்னா அறுத்தடிச்சுக் கொண்டு போட்டிருக்கையா?”

யாரு சித்தப்பாவா? ராசாக்கு பசிக்கில்லா?”

பசிச்சா...? அது கொள்ளாண்டே...!”

அப்பம் ராசாக்கு சாப்பாடு இல்லையா? ராசா வண்டியை விட்டிரட்டா... வண்டியை விட்டிருகேன்....” வேறு நிறங்கள் ஏதும் இல்லாத அந்தக் குரலில் ஒலிக்கும் ஒரு ஏமாற்றம் குடலைச் சுண்டி இழுக்கும். தொண்டையில் ஏதோ அடைக்கும்.

அட இருப்பா.... சொரணையிலே கூடுனவன்தான், ஏவுள்ளா.. ராசாவுக்கு என்னமாங் குடு....”

ஆமா உங்களுக்கு அவன்கிட்ட என்ன பரியாசம். சவம் இப்படி ஒரு பொறவி.. கடவுளு படைச்சு விட்டுட்டான்...” சொல்லும்போதே அந்தசித்திக்குக் கண்ணீர் முட்டும்.

ராசாவின் வரத்தும் போக்கும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நிகழும். தொடர்ந்தாற்போல் சில வாரம் கண் மறைவாகப் போய் விடுவான். “ராசாவை எங்க கொஞ்ச நாளாக் காணவே இல்லைஎன்று சில தாய் வயிறுகள் முனகும். நாள் கிழமைகளில் அவன் நினைவு வரும். “மூதி வரச்சிலே எல்லாம் புளிச்ச பழையது குடிச்சிட்டு போகு... ஒரு விசேச நாளுண்ணு வரப்பிடாது? சவம்  எங்கின சுத்தீட்டுத் திரியோ?” என்று அங்கலாய்க்கும். இதெல்லாம் அவனுக்கு எட்டுமோ எட்டாதோ? இரண்டு மூன்று நாட்களில் திடீரென காட்சி கிடைக்கும்.

ராசா ஒரு கிறுக்கன் அல்ல. எந்த வயதில் அவன் மன வளர்ச்சி நின்று போனதோ தெரியாது. யாருக்கும் எந்த விதத்திலும் இம்சை செய்ததாகத் தகவல் கிடையாது. எதையும் யாரையும் கவனிக்காத ஒரு நிமிர்ந்த நடை. எதுவும் குறுக்கிட முடியாத வேகம். குறுக்கிட்டாலும் அவன் பொருட்படுத்துவதில்லை. சில சமயங்களில் அவன் சாப்பிடும்போது சிறு குழந்தைகள் தள்ளிநின்று வேடிக்கை பார்க்கும். ஒன்றை மற்றது அவன் முன்னால் தள்ளிவிடும். மற்றதுகேஎன்று கத்தும். அவன் நடக்கையில் பின்னாலிருந்து இடலாக்குடி ராசாஎன்று கூச்சலிட்டுப் பின் தொடரும். யாராவது வயதானவர்கள் அதட்டினால்தான் உண்டு. ராசாவின் கண்கள் இதனைக் காணவே செய்யும். ஆனால் உதடுகள் பிரிவதில்லை.

*****

வடக்குத் தெரு, மூலைவீட்டு வன்னியப்பெருமாள் வீட்டில் அன்று திருமணம். மூத்த மகளுக்கு. மாப்பிள்ளை செண்பகராமன்புதூர். திருமணம் முடிந்து பந்தி நடந்துகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமையாதலின் அவ்வூர் இளம் பிராயப் பிள்ளைகள் அனைவரும் நின்று விளம்பிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பகல் பன்னிரண்டு மணி சாய்ந்தது. காலை எட்டரை மணி முகூர்த்தம். முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டாயிற்று. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள், கல்யாணத்துக்கு வந்திருந்த பெண் வீட்டு வெளியூர்க்காரர்கள், உள்ளூர் ஆண்கள், பெண்கள், அடியந்தரக்காரர்கள் அனைவரும் சாப்பிட்டாயிற்று. கடைசியாக விளம்பிக் கொடுத்துவிட்டு நின்ற பையன்களுக்கான தனிப்பந்தி. ஏற்கனவே சாப்பிட்டு விட்டிருந்த ஐந்து பையன்கள் மட்டும் விளம்புவதற்காக நின்றனர்.

எப்போதுமே இந்தப் பந்தி ஏகக் கூச்சலும் கும்மாளியுமாக இருக்கும். உடல் வருத்தம் பாராமல் முன்தின இரவுதொட்டு வேலை செய்தவர்கள், சீமான் வீட்டுச் சீராளன் முதல் கூரை வீட்டுக் குமரன் வரை. படித்துக் கொண்டிருக்கும் அல்லது படிப்பை நிறுத்திய பையன்கள். வேறுபாடுகளற்றுப் புரண்டு மறியும் வயது. எனவே இந்தப் பந்தியில் என்ன நடந்தாலும் கல்யாண அடியந்திரக்காரர்கள் கண்டு முகம் சுளிப்பதில்லை. மாறாக ஒரு மன நிறைவுடன் பார்த்துச் சிரித்துவிட்டுப் போவார்கள்.

இடலாக்குடி ராசா எங்கோ போய்விட்டுவிறீர்என்று சப்பாத்துக்கலுங்கைத் தாண்டி வடக்குத் தெரு மூலையில் ஏறினான். இனிமேல் யாராவது சாப்பிட பாக்கி இருக்கிறார்களா என்று பார்க்க பந்தலைவிட்டு தெருவுக்கு வந்த பெண்ணின் தம்பி பார்வையில் பட்டான்.

கையோடு கொண்டுபோய், ஆக்குப் புரையில் நிறுத்தினான். கை கழுவி சாப்பிட உட்காரப்போகும் இளைஞர் கூட்டம் ராசாவை உற்சாகமாக வரவேற்றது.

பந்திப்பாய் விரித்து, எதிர் எதிராக இரண்டு வரிசையில் உட்கார்ந்தனர். தென் வடலான அந்தப் பந்தலில், கிழக்கு வரிசையில், தென்னை ஓலை நிரை ஒட்டிய வரிசையின் நடுவில் இடலாக்குடி ராசா. அவன் முகத்தில் பரவசக் கொந்தளம்.

நீள நீளமான தலைவாழை இலைகள். ஏந்திய கைகளில் எவர் சில்வர் மூக்கனில் இருந்து தண்ணீர். தண்ணீர் தெளித்து, இலையைத் துடைத்து - விளம்ப நின்ற பையன்களின் முகத்தில் குறும்பின் தெறிப்பு. உப்புப் பரல் வந்தது. துவட்டல் வந்தது. தயிர்க் கிச்சடி வந்தது. அவியல் வந்தது. எரிசேரி வந்தது. வந்தவன் எல்லாம் ராசாவின் இலையை மட்டும் விட்டுவிட்டு விளம்பிச் சென்றான். பரப்பிரம்மாக ராசா இடமும் வலமும் பார்த்தான்.

நடப்பதைக் கவனித்த யாவரின் முகத்திலும் பிதுங்கி நின்ற சிரிப்பு எப்போது வெடிக்குமோ என்ற தெறிப்பு. கறி வகைகள் வைத்து முடித்து பப்படம் போட்டு, ஏத்தங்காய் உப்பேரி வைத்து...

காது வைத்த செம்பு நிலவாயில் சாதம் எடுத்து, பித்தளைக் கோருவையால் பறித்து, இலையிலையாக வைத்துக்கொண்டு  போனான் ஒருவன். தன் இலை தாண்டிப் போனதும் இடலாக்குடி ராசா விளித்தான். “எண்ணேன்... எண்ணேன்... ராசாக்குப் போடாமப் போறியே...”

சிரிப்பை அடக்கிக்கொண்டு பருப்பு ஊற்றுபவன் வந்தான்.

எண்ணேன்... ராசாக்கு வயிறு பசிக்கில்லா...”

பருப்புக்கு பின்னால் நெய் வந்தது.

ராசாவின் முகத்தில் ஒரு பதைப்பு அடர்ந்தது. “எண்ணேன்... எனக்கில்லையா? அப்பம் நான் வண்டியை விட்டிரட்டா....”

இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல - ‘சோவென்று ஒரு சிரிப்பு. ஒரே சமயத்தில் பொட்டித் தெறித்த அலைகள். பந்தலின் கூரையைக் கிளப்பும் எக்காள ஓசை.

ராசாவின் கண்களில்....

அவன் இலைக்கு ஒருவன் சாதநிலவாயை எடுத்து வரு முன்னால்-

அப்பம் நான் வண்டியை விட்டிருகேன்...” சொற்கள் நனைந்து வந்தன.

திடீரென்று சிரிப்பு நின்றது..

விறீர்என்று எழுந்து நடந்தான் ராசா.

யாருக்குமே சாப்பிடப் பிடிக்கவில்லை.

பின்னுரை.

இக்கதை ஒரு கேரக்டர் அறிமுகம் என்று சொல்லலாம். சம்பவங்கள் அரிது. சில பாடங்களையும் நமக்கு கற்றுத்தருகிறது. சிலவற்றைப் பார்ப்போம்.

1. பெண்கள்,  குழந்தைகளையும் குழந்தை மனம் உள்ளவர்களையும் இரக்கத்தோடு அனுசரிப்பர்.

2.   கை என்றால்  பெண்கள் மனம் மிகவும் இளகும்.            இல்லார்க்கு ஈவதில் இன்பம் காண்பர்.

3.     பெண்களுக்கு ஊர்வம்பு பேசப் பிடிக்கும்.  பேசக்              கிடைக்கும் ஆட்களையும் பிடிக்கும்.

4.     இளைஞர்களுக்கு விபரீதம் அறியாமல் மற்றவர்களை        வெறியேற்றப் பிடிக்கும்.

5.     செயலைச் செய்தபின்பே, செயலின் விபரீதத்தைக்            கண்டபின்பே, செய்தது தவறு என்பது உரைக்கும்.           “எண்ணித் துணிக கருமம்என்ற சிந்தனை இல்லாதவர். 

இதே போன்று ஒரு கதைகுண்டு ரமணிசுஜாதாஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில் எழுதியுள்ளார். ராசா மனவளர்ச்சி இல்லாதவன் என்றால் குண்டு ரமணி குழந்தை இறந்த சோகத்தில் சித்தப்பிரமை பிடித்தவள். அவளும் கிடைத்த வீட்டில் உண்டு உறங்குபவள் தான். குண்டு ரமணி கதையின் சுட்டி.குண்டு ரமணி.pdf

கதையின் முடிவு நெஞ்சில் முள்ளாய்  தைக்கிறது.

ஆசிரியர் அறிமுகம்.


நாஞ்சில் நாடன் [பிறப்பு: திசம்பர் 31, 1947] (கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீர நாராயணமங்கலம் எனும் ஊரில் பிறந்தவர்.

ஜி.சுப்பிரமணியம் என்பது இயற்பெயர். பம்பாய் தமிழ் சங்கம் வெளியிட்டு வந்தஏடுஇதழில் தன் இலக்கியப்பணியைத் தொடங்கினார். 1975-ம் ஆண்டு வெளிவந்தவிரதம்சிறுகதையில் தொடங்கி, முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறார்.

சிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை விருது (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், ‘சூடிய பூ சூடற்கசிறுகதைத் தொகுப்புக்காக 2010-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார்.

இவரது நாவல்களும், சிறுகதைகளும் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லியிலுள்ள பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

இவரதுதலைகீழ் விகிதங்கள்’, ‘எட்டுத் திக்கும் மதயானைநாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. தவிர, இயக்குநர் பாலாவின்பரதேசிதிரைப்படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார்.

71 கருத்துகள்:

  1. தமிழரசனின் செயல் மகத்தானது. காலம் அவருக்கு, மேலும் பலருக்கு உதவும் நிலையைத் தரட்டும். நெல்லை

    பதிலளிநீக்கு
  2. சில திருத்தங்கள். //குழந்தைகளயும்// குழந்தைகளையும்
    //2.   கை என்றால் // ஈகை என்றால்

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    நேற்றைய பதிவிலேயே உங்கள் அண்ணா பேரனுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருந்தேன். இன்றும் முதலில் தங்களை தாத்தாவாக்கிய தங்கள் குட்டிப் பேரனுக்கும், தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துககள் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
    தன் வருமானத்திலும் அனைவருக்கும் உதவி செய்யும் மனம் படைத்த தமிழரசனின் செயல் பாராட்டத்தக்கது.

    புது தில்லி கல்வி முறை பற்றி தெரிந்து கொண்டேன்.

    சீன நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியும் பிரமிக்க வைக்கிறது. இனியாவது அரிசியை வெறுக்காமல் நம் மக்கள் இருப்பார்களா என்ற எண்ணம் வருகிறது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதைப்பகிர்வும் நன்றாக உள்ளது. இந்தக்கதை எப்போதோ படித்த நினைவும் உள்ளது. இன்றும் மனது சங்கடத்தோடு படித்தேன். முடிவு ஏதோ ஒரு வருத்தத்தை தருகிறது. இலை முன்னே ஆவலுடன் சாப்பிட அமர்ந்தவரை இறுதி வரை அலைக்கழித்து பார்க்கும் விளையாட்டு மனம் கொண்ட கூட்டம். விளையாட்டு என்றுமே வீபரீதமாகத்தான் போகும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

    இறைவனின் படைப்பில் இப்படி எத்தனையோ மனிதர்கள். அவர்களுக்குள் எத்தனை மன விகாரங்கள். கதையில் அதை புலப்படும் வண்ணம் எழுதிய கதாசிரியரின் திறமை வியக்கத்தக்கது. இவரின் கதைகளை நானும் முன்பு நிறைய படித்துள்ளேன். குறிப்பிடத் தெரியவில்லை .

    இப்போது பழைய நினைவுகளை புதுப்பிக்கும் விதமாய் வாரந்தோறும் இவ்விதமான சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை பகிர்ந்து நினைவுபடுத்தும் சகோதரர் ஜெயகுமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. பகிர்வுக்கு உங்களுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் இனிய வணக்கங்களுட்ன்

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  8. இந்த மாதிரியான கதைகளை எழுதுவதைப் பற்றி என்ன சொல்வது?...

    வேதனையில் புரண்டு வேதனையில் வாழும் வாழ்க்கையில் இப்படியான கதைகளும் ஒரு வேதனை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் ஒரு உணர்வுதான்! விளையாட்டை யாரிடம் விளையாடுவது என்று புரியாமல் போன விடலைகள்..

      நீக்கு
  9. செய்தி நாளிதழில் வந்தபோதே ஆச்சரியம்..

    விண்வெளியில் அரிசி சாகுபடியா!.. என்று..

    செய்கின்றவன் சரியாகச் செய்து இருந்தாலும் சொல்பவனுக்கு அதை ஒழுங்காகச் சொல்லத் தெரிவதில்லை..

    ஊடகங்களில் தமிழ் மொழி அறிந்தவர்கள் குறைவது ஊரறிந்த விஷயம்.. அதன் விளைவுதான் இப்படியான தலைப்புகள்..

    பதிலளிநீக்கு
  10. நம்மவர்களின் மொழி ஆர்வத்தைக் கண்டு அதிர்ந்து போன சீன விஞ்ஞானிகள் அடுத்ததாக நெற்பயிரில் இருந்து சோறு வருவது போல ஏதாவது செய்து வைக்கப் போகின்றார்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கெனவே சீனாவில் தமிழ் மொழி கன்னாபின்னாவென்று பரவிக்கொண்டிருக்கிறது!

      நீக்கு
  11. // விஞ்ஞானிகள் அரிசியை உற்பத்தி செய்து இருப்பது, விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த நிலையாக கருதப்படுகிறது...//

    இது என்னென்ன கோளாறுகளை உண்டாக்கி வைக்கப் போகின்றதோ!...

    அதைப் பற்றி நமக்கென்ன கவலை?..

    பதிலளிநீக்கு
  12. தையல் இயந்திரம் வாங்கி கொடுத்த தமிழரசனைப் பற்றிய இந்தக் கட்டுரை ஏற்கனவே Fb ல் வந்திருக்கின்றது..

    நாட்டில் மழை பெய்வதற்குக் காரணமான நல்லவர்களுள் இவரும் ஒருவர்..

    பதிலளிநீக்கு
  13. @ஸ்ரீராம் பருத்தி புடவையாய் காய்ச்சது என்று சொல்வது போல் இருக்கிறது விண்வெளியில் அரிசி சாகுபடி. நெல் சாகுபடி என்று மாற்றி விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. இன்றைய (3/9) தினமலர் நாளிதழில் இருந்து எடுக்கப்பட்ட செய்தி..

    தேசிய ஊட்டச்சத்து மாத விழா, செப்.,1 முதல் 30 வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில், பேரணி நடத்தப்பட்டது.

    பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர், 'உண்ணக்கூடியவை' மற்றும் 'உண்ணக்கூடாதவை' என்ற பெயர் எழுதிய தட்டிகளுடன் விழிப்புணர்வு கோஷம் எழுப்பியபடி சென்றனர்.

    உண்ணக்கூடியவை என்ற பட்டியலில் காய்கறி, சிறு தானியங்கள் இருந்தன..

    //உண்ணக் கூடாதவை பட்டியலில், புகையிலை பொருட்கள், குட்கா, பான் மசாலா போன்றவை இருந்தன.//

    புகையிலை, குட்கா, பான் மசாலா போன்றவை உணவுப் பொருட்களா?..

    எப்படியான செய்தித் தொகுப்பு இது!..

    பதிலளிநீக்கு
  15. @ கமலாஹரிஹரன்

    //இனியாவது அரிசியை வெறுக்காமல் நம் மக்கள் இருப்பார்களா என்ற எண்ணம் வருகிறது..//

    அரிசியை யாரும் வெறுப்பதில்லை..

    இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அரிசியை வெறுக்கும் படிக்குச் செய்தது
    நவீன மருத்துவம்..

    ஊடகங்களும் இதற்கு உறுதுணை..

    நமது பாரதத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் வருவதற்கும் அரிசி.. போய்ச் சேர்வதற்கும் அரிசி..

    இடையில் - வாழ்வதற்கும் அரிசி..

    வழிபடுவதற்கும் அரிசி..

    பதிலளிநீக்கு
  16. இன்றைய விமர்சனக் கதையில் கூட வருகின்றது - விருந்து உச்சரிப்பு பற்றி..

    சோறும் பருப்பும் நெய்யும் சேரும் போது அமிர்தத்துக்குச் சமம்..

    நெய் இல்லா உண்டி பாழ்.. - என்பது ஔவையாரின் வாக்கு..

    ஒருகாலத்தில்
    தமிழகத்துக் குழந்தைகள் வளர்ந்ததே நெய்யோடும் பருப்போடும் தான்..

    இன்றைய நவீன மருத்துவம் சோற்றையும் நெய்யையும் விட்டு விடச் சொல்கின்றது..

    இன்று அங்காடிகளில் கிடைக்கும் நெய் நெய் அல்லவே..

    எங்கள் வீட்டின் நெய்த் தேவைக்கு வெண்ணெயை வாங்கி உருக்கிக் கொள்கின்றோம்..

    பதிலளிநீக்கு
  17. இன்றைய விமர்சனக் கதையில் கூட வருகின்றது - விருந்து உச்சரிப்பு பற்றி..

    சோறும் பருப்பும் நெய்யும் சேரும் போது அமிர்தத்துக்குச் சமம்..

    நெய் இல்லா உண்டி பாழ்.. - என்பது ஔவையாரின் வாக்கு..

    ஒருகாலத்தில்
    தமிழகத்துக் குழந்தைகள் வளர்ந்ததே நெய்யோடும் பருப்போடும் தான்..

    இன்றைய நவீன மருத்துவம் சோற்றையும் நெய்யையும் விட்டு விடச் சொல்கின்றது..

    இன்று அங்காடிகளில் கிடைக்கும் நெய் நெய் அல்லவே..

    எங்கள் வீட்டின் நெய்த் தேவைக்கு வெண்ணெயை வாங்கி உருக்கிக் கொள்கின்றோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க வீட்டிலேயே வெண்ணெய் எடுத்துத் தான் நெய் காய்ச்சுவது. இன்னிக்குத் தான் கடந்த பத்து நாட்களுக்கான பாலாடை(பாலேடு?)களைப் போட்டு வெண்ணெய் எடுத்துக் காய்ச்சினேன். அநேகமாக மாதம் இரு முறை வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சுவேன். எங்க தேவைகளுக்கு போதும். யாரானும் வந்தால் வெண்ணெய் வாங்கிக் காய்ச்சி வைப்பேன். அதன் ருசி மாறுபட்டே தெரியும்.

      நீக்கு
    2. எங்கள் வீட்டிலும் எப்போதுமே வெண்ணெய் காய்ச்சிதான் நெய்.  அதுவும் ஊத்துக்குளி வெண்ணெய்!

      நீக்கு


  18. இன்றைய தினமலர் இணைய நாளிதழில் இருந்து எடுக்கப்பட்ட செய்தி இது:

    கோவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில், பேரணி நடத்தப்பட்டது.

    பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர், 'உண்ணக் கூடியவை' மற்றும் 'உண்ணக் கூடாதவை' என்ற பெயர் எழுதிய தட்டிகளுடன் விழிப்புணர்வு கோஷம் எழுப்பியபடி சென்றனர்.

    உண்ணக் கூடியவை என்ற பட்டியலில் காய்கறி, சிறு தானியங்கள் இருந்தன..

    // உண்ணக் கூடாதவை பட்டியலில், புகையிலை பொருட்கள், குட்கா, பான் மசாலா போன்றவை இருந்தன.. //

    புகையிலை, குட்கா, பான் மசாலா போன்றவை உணவுப் பொருட்களா?..

    உணவுப் பொருட்களுக்கும் பயன்பாட்டுப் பொருட்களுக்கும் வேறுபாடு புரியாமல் -

    என்ன மாதிரியான செய்தித் தொகுப்பு இது!..

    பதிலளிநீக்கு
  19. // சீன நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி..//

    முழு உலகிற்கும் ஆபத்தானவன் சீனன்!..

    பதிலளிநீக்கு
  20. தமிழரசன் பற்றி முன்னரே படிச்ச நினைவு. நேற்றோ/ முந்தாநாளோ முகநூலிலும் பார்த்தேன். பாராட்டத்தக்க பையர். நீடூழி வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  21. நாஞ்சில் நாடனின் இந்தக் கதையை ஏற்கெனவே படிச்சுட்டு மனசு வேதனைப் பட்டிருக்கேன். அவருடைய தலைகீழ் விகிதங்கள் கதைத் தொகுப்பு என்னிடம் உள்ளது. தேடிப் பார்த்துப் படிக்கணும். இந்தக் கதை கூட அதிலே இருக்கோ? நினைவில் இல்லை. விளையாட்டு வினையாகும் என்பது உண்மை. எனக்கும் ஒரு முறை ஓர் உறவினர் வீட்டில் சாப்பிட உட்கார்ந்தப்போ இப்படி நடந்து நானும் கோவித்துக் கொண்டு போய்த் திட்டு வாங்கினேன். விளையாட்டை ஏன் அப்படியே எடுத்துக்கறே? பின்னாட்களில் கஷ்டப்படுவே என்றனர். ஆனால் எனக்கென்னமோ இன்னி வரைக்கும் அது தப்பு/நான் செய்தது தான் சரினு தோணும். வீட்டுக்கு வந்து ரசம் சாதம் சாப்பிட்டேன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நான் படிக்கும் முதல் நாஞ்சில் நாடன் படைப்பு இது!

      நீக்கு
    2. தலைகீழ் விகிதங்கள் நாஞ்சில் நாடனின் நாவல். சிறுகதைத் தொகுப்பு அல்ல. அதனால் இந்தச் சிறுகதை அதில் கிடைக்காது.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  22. அரிசி சாகுபடி பரவலாகி நன்கு விளைச்சல் காணப் பிரார்த்திப்போம். ஆனாலும் சாப்பாடு கிடைக்காமல் ஏழைகள் தவிப்பது தொடரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பாடு கிடைக்காமல் ஏழைகள் தவிப்பது... இலவச அரிசி எல்லாம் மக்களுக்கு வழங்கப்படும் காலத்திலா?

      நீக்கு
    2. விண்வெளியில்னு ஏன் எடுத்துக்கணும்? அரிசி நன்கு விளையணும் என்பதே பொதுவான கருத்து! (சமாளிப்ஸ் சரியா?) :))))))))

      நீக்கு
  23. // அரிசி சாகுபடி பரவலாகி.. //

    அக்கா!.. நீங்களுமா இப்படி?..

    பதிலளிநீக்கு
  24. உள்ளூர்ல ஓணான் பிடிக்க முடியாமல் உளுந்தூர்பேட்டையில் ஒட்டகம் பிடிக்கப் போனவனைப்போல இங்க நிலத்தில் வீடுகட்டி விண்வெளில நெல்சாகுபடியாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோ வொரிஸ் விண்வெளியிலும் சீக்கிரமே பிளாட் போட்டு விடலாம்!

      நீக்கு
  25. தமிழரசன் பற்றி படித்தவுடன் மனம் நெகிழ்ந்து விட்டது.
    தமிழரசன் நல்ல மனம் வாழ்க! வாழ்க வளமுடன். இறைவன் அந்த பையனுக்கு பலருக்கும் உதவும் செல்வ வளத்தை வழங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துவோம்.  பணமிருப்பவர்கள் உதவுவதில் ஆச்சர்யமில்லை.  இப்படி நல்ல மனமிருப்பவர் உதவுவதுதான் அற்புதம்.

      நீக்கு
  26. கதை பகிர்வு அருமை.

    //“ராசாவை எங்க கொஞ்ச நாளாக் காணவே இல்லை” என்று சில தாய் வயிறுகள் முனகும். //

    உண்மை. தாய்மையின் சிறப்பு அது.

    ராசாவின் முகத்தில் ஒரு பதைப்பு அடர்ந்தது. “எண்ணேன்... எனக்கில்லையா? அப்பம் நான் வண்டியை விட்டிரட்டா....”//

    இந்த வரிகளை படிக்கும் போது நம் மனமும் பதைக்கிறது.
    பசியோடு போய் இருப்பானே ராஜா என்று.

    கதைபகிர்வுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராசா அதற்காக பெரிதாக விரோதம் பாராட்ட மாட்டான் என்பதும் திண்ணம்!

      நீக்கு
  27. இருப்பதை ஈன்ற -- இருப்பதை ஈந்த
    திருத்தி விடலாமோ?

    பதிலளிநீக்கு
  28. தி. கீதா ஏனோ வரவில்லை. வந்திருந்தால் வாசித்த கதைப்பகுதிக்கு நாலைந்து பின்னூட்டமாவது எகிறியிருக்கும். நாஞ்சில் நாட்டார் கதை அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா நேற்று என்னால் வர முடியவில்லை...இன்று வந்துவிட்டேன்

      கீதா

      நீக்கு
  29. பின்னுரையில் 3-வது கருத்து. நெல்லையின் பார்வையிலிருந்து எப்படி தப்பித்தது என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  30. 'வடக்குத் தெரு மூலை வீட்டு வன்னியப் பெருமாள் வீட்டில்' -- ஒரே வரியில் இரண்டு தடவைகள் வீடு என்ற வார்த்தை. இந்தத் தவறு இல்லாமல் எழுத்துப் பயிற்சி பெற்ற யாராவது இந்த வரியைத் திருத்தி எழுத முடியுமா?

    பதிலளிநீக்கு
  31. தமிழரசன் நலமுடன் வாழ்க! நெகிழ்ந்து போனேன், உங்கள் துரித உதவியால்!
    கதையைப் படித்துவிட்டு முடிவு - ஐயோ பசியோடு போகிறானே, எதெதில் விளையாடுவது என்றில்லையா என்று தோன்றியது..

    பதிலளிநீக்கு
  32. விண்வெளியில் நெல் சாகுபடி!!!!! நல்ல விஷயம்தான் ஆனால் ஏனோ ஈர்க்கவில்லை.

    வெச்சுவல் கல்வி - இதற்கு பிஎஸ் என் எல் தான் இணையம் வழங்குகிறது. இதில் இன்னும் அம்சங்கள் இருக்கின்றன. இதுவும் நல்ல விஷயம்தான். இப்போதுதானே ஆரம்பம்...வெற்றி பெறுகிறதா என்றும், இதனால் வரும் வேறு சில பிரச்சனைகளுக்கும் என்ன தீர்வு காண்பார்கள் நம்மவர்கள் என்று யோசிக்க வைக்கிறது.

    தமிழரசன் வாவ்! இதை ஏற்கனவே வாசித்த நினைவு இருக்கிறது. அதனால் என்ன பாசிட்டிவ் விஷயங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம்தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  தமிழரசன் செய்தி ஆகஸ்ட் 29 2020 ல் இங்கே வெளியாகி இருக்கிறது.  அதன் சுட்டியும், சம்பந்தபப்ட்ட செய்தியின் செய்தித்ஹால் பக்கத்துக்கான சுட்டியும் இணைத்திருக்கிறேன்.

      https://engalblog.blogspot.com/2020/08/blog-post_80.html

      https://www.dinamalar.com/news_detail.asp?id=2600330

      நீக்கு
  33. நாஞ்சில் நாடன் அவர்களின் இக்கதை மனதைப் பிழிந்த கதை. ராசாவுக்குப் பசிக்கும் போது சாப்பாடு கிடைக்கவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை. வண்டி விட்டுருவார். வண்டி சென்று கொண்டேதான் இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  34. இடலாக்குடி ராசா - முடிவு பட்டென்று மனதை வேதனை செய்ய வைக்கும் ஒன்று. வாசித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். எங்கள் ஊர்க்காரர் என்ற கூடுதல் பெருமை...மகிழ்ச்சி

    கீதா

    பதிலளிநீக்கு
  35. பையன்மார் அந்த வயதில் இப்படித்தான் குறும்பு என்று மற்றவர் மனம் அறியாமல் விளையாட்டு என்று செய்வது வினையாவது. கேலி பேசுவது என்று....செய்து விட்டு அதன் பின் வருந்துவது.

    அது ராசாவைப் பாதித்திருக்காது. இவர்களைத்தான் பாதித்திருக்கிறது. ராசா எதிர்வினை ஆற்றியிருந்தால் இதன் தாக்கம் இருந்திருக்காது. ராசா அப்படிப்பட்டவனும் இல்லையே

    கீதா

    பதிலளிநீக்கு
  36. ஆசிரியர் சொன்ன விதம் ராசாவின் கதாபாத்திரத்தைத் துல்லியமாகச் சொல்லும் இயல்பான ஓட்டம். கடைசியில் நறுக்.

    எங்கள் ஊரில் இருந்தான். மனோகரன் என்று பெயர். அவனைப் பற்றி நான் எழுதி வைத்திருக்கிறேன். அவனுக்கும் இதே போலத்தான் மனநிலை சரியில்லாதவன். ராசாவை விட இன்னும் கொஞ்சம் சில படிகள் கீழேயான மனநிலை.

    எங்கள் ஊர் மனோகரனும் விதிவிலக்கல்ல.....மனோகரன் இப்போது இல்லை.....நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் அளவு எங்கள் ஊரில் மக்கள் மனோகரனுக்கு உதவியர்கள் இல்லை....பேசியவர்களும் இல்லை. அவனால் பேசக் கூட முடியாது சைகை மற்றும் பே பா பாஷை....ஆட்டிசம் ப்ளஸ், மூளை வளர்ச்சியும் கொஞ்சம் கம்மி...

    நான் எழுதியிருப்பதில் இன்னும் கொஞ்சம் இருக்கிறது வேலைகள். வலைப்பக்கம் தொடங்கிய சில மாதங்களில் எழுதியது...இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  37. இப்படி பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறார்கள் சிலருக்குக் கவ்னிப்பு கிடைக்கிறது சிலருக்கு இல்லை...இக்கதையை வாசித்து என் மனம் மீள சற்று நாட்கள் ஆகியது எங்கள் ஊர் மனோகரன் நினைவு வந்ததால்...அவனின் தோற்றம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  38. தமிழரசன் நல்லுள்ளம் நீண்ட காலம் வாழ்ந்து பலருக்கும் கொடுக்கட்டும்..

    நாஞ்சில் கதைகள் எப்பொழுதும் நன்றாக இருக்கும் . இது மனதை தொட்ட கதை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!