செவ்வாய், 16 மே, 2023

சிறுகதை : சத்தங்கள் 2/2 - துரை செல்வராஜூ

 சத்தங்கள் 2/2

துரை செல்வராஜூ

*** *** ***
முந்தைய பாகம் படிக்க..

குடியிருப்புக்குள் குட்டி யானை நுழையும் சத்தம்..

' என்ன!.. ஏது?.. ' - என்று தெரிந்து கொள்வதற்காக ஆவலுடன் வந்த சாரதாவிற்கு  அதிர்ச்சி.. பேரதிர்ச்சி..

சிவப்பு நிற நிஸானில் இருந்து இறங்கினர் - கணவனும் மனைவியும்.. வீட்டுக்கு புதிதாக குடி வந்திருப்பவர்கள் என்று புரிந்தது.. 

பின்னால் வந்த குட்டி யானையில் நான்கு பசங்களுடன் மேஜை நாற்காலி இன்னும் ஏதேதோ சாமான்கள்...

' அவர் தான் காய்கறி மண்டியில் வெங்காயம் நிறுப்பவர்.. அவரை முன்பே தெரியும்..  இவர் அங்கேயே கணக்கு வழக்கும் பார்க்கிறாரா?.. ஓ .. இந்த அம்மா தான் ஹெட் மாஸ்டரா?.. கேட்டுடுவோம்.. கழுத்துல ரெண்டு சங்கிலி.. காதுல ஜிமிக்கி..  கையில நாலு வளையல்!.. சின்னதா வாட்ச்.. பரவாயில்லை.. மா நிறம்.. ன்னு சொன்னார்... நல்ல சிவப்பா தான்  இருக்காங்க!.. அது சரி..  இந்தப் பசங்கள்?... லோடு இறக்க வந்திருக்காங்க போல.. அப்போ இவங்களோட பசங்கள்?... குடோன்.. ல வேலையா இருப்பானுங்க.. ஆகா.. புது நிஸான்!.. அழகோ அழகு.. வாடகை வண்டியா
இருக்குமோ.. இருக்கும் இருக்கும்!.. '

இப்படி நினைத்துக் கொண்ட சாரதாவிற்கு -

" என்னங்க... கதவத் திறந்து விடுங்க... டேபிள் நாற்காலி ஜமக்காளம், LCD   எல்லாத்தையும் வண்டியில இருந்து இறக்கி ஹால்ல வைக்கச் சொல்லுங்க.. வீட்டை ஒரு தடவை பெருக்கி விடணும்... வீட்டுக்கார அண்ணனைப் பார்த்து சொல்லிட்டு இதோ வர்றேன்!.. "

- என்றபடி அந்த ஆயாம்மா தனது வீட்டை நோக்கி வருவதைக் கண்டதும் ஒரே மகிழ்ச்சி..

" வாங்க.. வாங்க... "

" நல்லா இருக்கீங்களா அத்தாச்சி.. அண்ணன் இருக்காங்களா வீட்ல!.. "

' என்னது அத்தாச்சியா!.. ' மனதிற்குள் ரகளை.. உறவு முறை எல்லாம் நல்லா இருக்கே..

" வாங்க... அவங்க இப்பதான் சாப்பிடறாங்க!.. "  

" சரி..  நான் பிறகு வாரேன்!.. "
எதிர் தரப்பில் யோசனை.. தயக்கம்..

" சும்மா.. வாங்க... நம்ம வீடு தானே!.. " - அன்பின் அழைப்பு.. 

யோசனையுடன் அந்த அம்மா வந்தார்கள்..

அவசரமாக வீட்டுக்குள் சென்ற சாரதா - சாம்பார் சட்னி என்று, தனது உத்தரவை தானே மீறியவளாக கணவனுக்கு  எடுத்து வைத்தாள்.. 

வேறு இரண்டு இலைகளைப் போட்டு -  நாலைந்து இட்லிகளை வைத்தபடி -

" வீட்டுக்கு முதல் தடவையா வந்திருக்கீங்க.. இருந்து ஒரு வாய் சாப்பிடணும்!.. " - என்றாள் இயல்பான பிரியத்துடன்..

" அடடா... உங்களுக்கு ஏன் வீண் சிரமம்.. நான் காலை டிபன் கேரியர்ல கொண்டாந்து இருக்கேன்!.. "

" அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே சாப்பிட்டால் தான் எங்களுக்கு சந்தோஷம்!... அவங்களையும் வரச் சொல்லுங்க!.."

வேறு வழியின்றி வெளியே சென்று கணவரையும் அழைத்து வந்தாள் அந்தப் பெண்..

" வாங்க.. வாங்க.. " அழகப்பனும் சேர்ந்து கொண்டார்..

" நேத்திக்கு வீடு பார்க்க வந்தப்போ நீங்க இல்லாதது பெரிய குறை.. " - வந்தவர்கள் சாரதாவிடம் பேச்சைத் தொடர்ந்தனர்..

" அதனால என்னங்க?. எல்லாம் நல்லபடியா நடந்ததே!.. அதுசரி.. உங்க பேர் என்ன?.. கேக்கலையே!.. "

" எம் பேரு கனகவல்லி.. அவங்க பேர் ரத்னவேல்.. இன்னைக்கு முகூர்த்த நாள்.. நல்ல காரியமும் சேர்ந்து நடக்கப்போகுது.. மாப்பிள்ளை வீடு பார்க்க வரப் போறாங்க.. எல்லாம் உங்க வீட்டோட ராசி தான்.. "

" எனக்கு ஒன்னும் புரியலையே!.. " - சாரதா தடுமாறினாள்..

" எங்களுக்கு ரெண்டு பசங்க.. மூத்தவன் ஹரி.. கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் படிச்சிருக்கான்.. அண்ணாச்சி அவங்களுக்கு தமிழ்நாட்ல  ஏழு குடோன்.. அதுங்களுக்காக தனி சாப்ட் வேர் போட்டு வரவு செலவு -  ஹெச் ஆர்.. ன்னு
எல்லாத்தையும் இவன் தான்  நிர்வாகம் பண்றான்.. "

சாரதாவிற்கு அதிர்ச்சி..  மனதிற்குள் கட்டி வைத்திருந்த பிம்பங்களில் கலீரென்று கீறல் விழுந்த சப்தம் அவளுக்கே கேட்டது..

" இளையவன் பிரசாத்.. எம்பிஏ படிச்சிருக்கான்.. அண்ணாச்சி அவங்களோட ஏழு குடோன்..லயும் ஒட்டு மொத்த லோக்கல் பிசினஸ் கணக்கு எல்லாத்தையும் பார்த்துக்கறான்.. "

சடசட.. என, கண்ணாடிப் பிம்பங்கள் பிளவு படும் சத்தம்..

" நீங்க ஸ்கூல்ல?... "

" நான் எட்டாங்கிளாஸ் வரைக்கும் தான் முதல்ல பாடம் எடுத்துக்கிட்டு இருந்தேன்.. எல்லாம் இவங்க கொடுத்த உற்சாகம்!.."  -  கனகவல்லியின் கண்கள் கணவர் மீது படர்ந்தன...

" மேல மேல படிச்சு எக்ஸாம் எல்லாம் எழுதி இன்னைக்கு அதே ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர்.. "

' டமால் ' - என்ற பெரும் சத்தம் மாயப் பிம்பங்கள் முழுதுமாக விழுந்து சிதறின..

" நான் என்னமோ நினைச்சுக்கிட்டு இருந்துட்டேன்... "  சாரதா தன்னைத் தானே மன்னித்துக் கொண்டாள்.. மீண்டும் ஒரு கேள்வி பிறந்தது..

" ஏதோ நல்ல காரியம்.. ன்னு சொன்னீங்களே... "

" அதுவா.. ஹரி காலேஜ்.. ல படிக்கிறப்ப அந்தப் பொண்ணு கூட சிநேகமாம்.. ரெண்டு வருசம் கழிச்சு இப்ப தான் தெரிஞ்சது.. சரி.. கல்யாணத்தை நடத்திடுவோம்..  ன்னு  போன வாரம் நாங்க போய் பொண்ணு வீடு பார்த்துட்டு வந்தோம்.. அவங்க  மாப்பிள்ளை வீடு பார்க்க இன்னைக்கு வர்றாங்க.. ஹரியோட ஜாதகத்துல ஏதோ தோஷமாம்... மூனாவது மனை.. ல வச்சு தான் நிச்சயம் செய்யனும்.. ன்னு குல தெய்வம் உத்தரவு.. "

" குலதெய்வம் அதெல்லாம் சொல்லுமா!.. " - சாரதாவிற்கு ஆச்சர்யம்..

காதுகளுக்குள் மேளச் சத்தம் கேட்டது..

" கருக்கு வேல் ஐயனார் திருவுளம் கேக்காம நாங்க எதுவும் செய்றதே இல்லை!.. " - கனக வல்லியின் முகத்தில் பரவசம்..

" எங்களுக்கு காடு காத்த பத்ர காளி!.. " -  என்று சொன்ன, சாரதா ஒருவருக்கொருவர் சம்பந்தி முறை தான் என்று நினைத்துக் கொண்டாள்..

காதுகளுக்குள் கேட்ட மேளச் சத்தத்துடன் நாயனமும் சேர்ந்து கொண்டது..

" நாங்க இப்போ இருக்கிறதும் வாடகை வீடு தான்... மெடிகல் காலேஜ்க்குப் பக்கமா புது வீடு கட்டிக்கிட்டு இருக்கோம்..  இன்னும் வேலை முடியலே.. இப்போ இது தான் மூணாவது மனை..  ஆனியில முகூர்த்தம் வைக்கலாம்.. ன்னு யோசனை.. பொண்ணு வீட்ல வச்சு கல்யாணம்.. நிறை விளக்கு வைக்கிறது!.. "

" நிறை விளக்கா!.. அப்டீன்னா?.. "

கனகவல்லி முகத்தில் வெட்கம்..

" அதாங்க!.. "

" ஓ!.. அதுக்குப் பேர் இது தானா!.. "

" மூணு அழைப்பு முடிஞ்சதும் இங்க தான் தனிக் குடித்தனம் .. "

" உங்க வசதிக்கு வேற பெரிய வீடா பார்த்திருக்கலாமே.. "

" வெளியில விசாரிச்சப்போ உங்களப் பத்தி நல்ல விதமா  கேள்விப்பட்டோம்... சின்னஞ் சிறுசுங்க இந்த மாதிரி வீட்ல குடித்தனம் பழகி அப்புறம் பெரிய வீட்டுக்கு வந்து பெருகி வாழட்டுமே.. என்ன சொல்றீங்க!... ஆறேழு மாசத்துக்கு உங்க வீடு தான் தாய் வீடு!.. "

இதைக் கேட்டதும் சாரதாவின்  கண்களில் நீர்.. சிலிர்த்து எழுந்தது உடம்பு..

அப்படியே கனகவல்லியைக் கட்டிக் கொண்டாள்..

" நல்லபடியா எல்லாம் நடக்கும்..  கவலையே வேண்டாம்.. வளைகாப்பும் இங்கேயே செஞ்சிடலாம்..  கையோட கையா சின்னவருக்கும் பொண்ணு பார்த்துடுங்க!... "

" அப்படியா!.. நல்ல இடமா சொல்லுங்க.. நடத்திடுவோம்!.  பையன் மிதுன ராசி புனர்பூச நட்சத்திரம்.. சுவாதி வேணும்!..  நெத்திக் குங்குமத்தோட வந்தால் போதும்!..  "

சாரதாவுக்கு பால் பாயசம் குடித்தது போல இருந்தது..  தன் மகள் சுவாதிக்கு மாலை வந்து விட்டது என்று..

காதுகளுக்குள் கேட்ட மங்கலச் சத்தத்துடன் கல்யாண மந்திர ஒலியும் சேர்ந்து கொண்டது..

கனகவல்லி புன்னகைத்த போது - தேரிக்காட்டின் தெய்வம் கருக்கு வேல் ஐயனாரும் சேர்ந்து கொண்டு புன்னகைத்தார்!..

***

[நிறைவு ]

35 கருத்துகள்:

  1. அத்தாச்சி என்றவுடன் இது சம்பந்தத்தில் முடியும் என்று நினைத்தேன்.

    நல்லதே நிகழட்டும்.

    கும்பாபிஷேக பணி ஆகவே வலையுலக வரவு குறைவு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பாபிஷேக பணி சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

      நீக்கு
    2. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
    3. இறைவன், அந்த நல் வாய்ப்பை உங்களுக்கு நல்கியிருக்கான். நல்லாப் பண்ணுங்க.

      நீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாருக்கும் இறைவன்
      நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

      நீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

    இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  4. கதை நிறைவாக இருந்தது. நல்ல மனிதர்கள், கதைக்களம், நல்ல நிகழ்வுகளைப் படிக்க உற்சாகம்தான். பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை.

      ./// நல்ல நிகழ்வுகளைப் படிக்க உற்சாகம்தான். பாராட்டுகள்..///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார்.

      அதுவே என்றும் வேண்டும்..

      பிரார்த்திப்போம்..

      நீக்கு
  6. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    நல்ல அருமையான கதை. படிக்கும் போதே நல்ல மனிதர்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய கதை. இறுதியில் அந்த வீட்டுக்கு வாடகைக்கென வந்தவர்களுக்கு அந்த வீடே விரைவில் சொந்தமாகப் போகிறது. நல்ல உள்ளம் படைத்த கனகவல்லி, ரத்னவேல் தம்பதியரின் மகன்களில் நிச்சயிக்கப்பட்ட பெரியவனின் திருமணத்துடன் இளையவனின் இனிய இல்லத் திருமணமும் நல்லபடியாக நடை பெறட்டும்.

    ஒரு கதை என்று பாராமல் நம் சொந்தகாரர்களை நேரிலேயே பார்ப்பது போன்ற உணர்வை தருவது உங்கள் கதை பாணி. சுருக்கமாக கூறி நல்ல நடையில் ஒரு அருமையான கதையை தந்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மரியாதைக்குரிய நன்றியும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// ஒரு கதை என்று பாராமல் நம் சொந்தக் காரர்களை நேரிலேயே பார்ப்பது போன்ற உணர்வை தருவது உங்கள் கதை பாணி. ///

      தங்களது கருத்து மனதிற்கு இதமாக இருக்கின்றது..

      அன்பும் மகிழ்ச்சியும் தான் ஆயுள் ஆரோக்கியம் என்பார்கள்.. அப்படியே ஆகடும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
      நலம் வாழ்க..

      நீக்கு
  7. நம்ம பக்கத்து வீட்டுக்காரங்க வீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட மாதிரியான உணர்வு. அருமையான கதை. இப்படி எதிர்பார்க்கலை என்பதே நிஜம். ஆட்கள் குடிபுக வந்து உறவு கொண்டாடிக்கொண்டு வந்ததுமே மனதில் நிறைவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நம்ம பக்கத்து வீட்டுக் காரங்க வீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட மாதிரியான உணர்வு. அருமையான கதை. இப்படி எதிர்பார்க்கலை என்பதே நிஜம்.//

      இதைத்தான் எதிர்பார்த்தேன்..
      என் மனதும் மிக மகிழ்ச்சியுடன் இருக்கின்றது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
      நலம் வாழ்க.

      நீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்! நீண்ட நாட்களுக்கு பின் எங்கள் Blogகிற்கு வந்திருக்கின்றேன். கடுமையான இந்த கோடைக்காலத்தில், துரை அண்ணாவின் கதை இளநீர் குடித்தது போல குளுமையாக உணர்ந்தேன்! நல்லதொரு கதைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. // நீண்ட நாட்களுக்கு பின் எங்கள் Blogகிற்கு வந்திருக்கின்றேன்.//

    ஆமாம்.. நீண்ட நாள் ஆயிற்று..

    // கடுமையான இந்த கோடைக் காலத்தில், துரை அண்ணாவின் கதை இளநீர் குடித்தது போல குளுமையாக உணர்ந்தேன்!..//

    அன்பின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

    நலம் வாழ்க.

    பதிலளிநீக்கு
  10. துரை அண்ணா கதையின் முதல் பகுதியும் வாசித்துவிட்டேன்.

    இயல்பான ஓட்டம். சாரதாவின் மன ஓட்டங்களை வைத்தே முடிவு ஊகிக்க முடிந்தது! சம்பந்தத்தில் முடியும் என்ற எண்ணம் வந்தது, அது போலவே. ஐயனாரும் புன்சிரித்துவிட்டார்! அப்புறம் என்ன?! பந்தல் போட்டுவிட வேண்டியதுதான்.

    அருமையா எழுதியிருக்கீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நல்வரவு..

      வருக.. வருக..

      வெகுநாள் கழித்து தங்களது வருகை..
      நலம் தானே..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. //ஐயனாரும் புன்னகை செய்து விட்டார்! அப்புறம் என்ன?! .. பந்தல் போட்டுவிட வேண்டியதுதான்.//

      அன்பின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  11. துரை அண்ணா நீங்கள் சொல்லியிருக்கும் இரு சாஸ்களையும் செய்முறையைப் பார்த்துவிட்டேன். அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் செய்து பாருங்கள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  12. இந்தக் கதைக்கு சித்திரச் செல்வர் தனது கை வண்ணத்தைக் காட்டவில்லை..

    ஏனென்று தெரியவில்லை..

    நன்றி கௌதம் ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்க வேண்டுகிறேன். நேரம் கிடைக்கவில்லை. 'மின்நிலா புத்தகங்கள்' வாட்ஸ் அப் ( https://chat.whatsapp.com/BmH70yzWRzTEuXW0Xeh1wh) குழுவிலும், மின்நிலா facebook ( https://www.facebook.com/groups/3069843546440715) குழுவிலும், கடந்த இருபத்தெட்டு நாட்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சிறிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். நடுவே வீட்டு வேலைகள், ஆன்லைன் டிரேடிங் வேலைகள்.

      நீக்கு
    2. அதனால் குறை ஒன்றும் இல்லை..

      விரிவான பதிலுக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. கதை மிகவும் அருமை.
    "அன்பு சூழ் உலகு"
    அன்பு நெஞ்சங்கள் நிறைந்த உலகு.
    நல்லது முதல் பகுதியும் படித்தேன்.முதல் பகுதியில் சாரதாவின் பயம்,
    நிறைவு பகுதியில் சாரதாவின் மகிழ்ச்சி .
    தாய்மனத்தை புரிந்து கொள்ள முடிகிறது.நல்ல கதைக்கு
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // "அன்பு சூழ் உலகு"
      அன்பு நெஞ்சங்கள் நிறைந்த உலகு..//

      அருமையான கருத்து..

      அன்பின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  15. நிறைய புது சொற்கள், வழக்குகள் (எனக்கு). இயல்பான உரையாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் இன்றும் இந்தப் பக்கம் பேச்சு வழ்க்கில் உள்ளவை..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  16. கதைக் களம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!