ஞாயிறு, 14 மே, 2023

நான் பயணம் செய்த இடங்கள் :: குருவாயூர் யானை கொட்டாரம் :: நெல்லைத்தமிழன்

 

நான் பயணம் செய்த இடங்கள்

நெல்லைத்தமிழன் 

(மார்ச்-2023) குருவாயூர் யானை கொட்டாரம் – பகுதி 2 / 3 

குருவாயூரிலிருக்கும் யானைக் கொட்டாரத்தில் இருக்கும் யானைகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அதன் தொடர்ச்சி இந்த வாரத்தில் 

யானைகள் பற்றிய டாகுமெண்டரி, திரைப்படங்களை நான் விரும்பிப் பார்ப்பேன். சமீபத்தில்கூட, யானைக்கூட்டத்தின் நகர்வை அதன் கூடவே பயணித்து எடுத்த டாகுமெண்டரியைப் பார்த்தேன்.

ஒரு காலத்தில் பல மில்லியன் யானைகள் ஆப்பிரிக்க கண்ட த்தில் வாழ்ந்துவந்தன. இப்போது அரை மில்லியன் யானைகளே அங்கு உள்ளன (அதைப் போன்றே அரை மில்லியன் அளவு இருந்த சிங்கங்கள், வெறும் 25,000 ஆகக் குறைந்துவிட்டனவாம்) யானைக்கூட்ட த்தின் தலைவி ஒரு வயது முதிர்ந்த பெண் யானை என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த த் தலைவிக்கு உதவி செய்ய சீனியர் யானைகள் உண்டு. பேச்சலர் ஆண் யானைக் கூட்டம் சிறிது ஒழுங்கீனமாக இருக்கும். பெண் யானைக்கூட்டம், அதிலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பமான யானைகளுடன் உடைய கூட்டம் ரொம்பவே ஒழுங்கைக் கடைபிடிக்கும். எப்போதும் யானைக்குட்டிகளை கூட்டத்தின் யானைகள் பார்த்துக்கொண்டிருக்கும். குட்டி யானைகளை நடுவில் வைத்து அவற்றைச் சுற்றி பாதுகாப்பு வளையம்போலவே மற்ற யானைகள் செல்லும். மனிதர்கள் அல்லது மற்றவர்களால் ஆபத்து என்று தோன்றும்போது யானை பிளிரி அல்லது சிறிது முன்னோக்கி வந்து, எங்கிட்ட மோதாதே என்று பயமுறுத்துமாம்.  யானையைக் கவனிப்பதற்காக (observors) செல்லும் ஆராய்ச்சியாளர்கள், இந்த மாதிரி சிறிய சிக்னல்களை அவதானித்து அந்த இட த்தைவிட்டு அகலுவார்கள் அல்லது பின்வாங்குவார்கள். அப்படி பின்வாங்கும்போதும் அவர்கள் கவனம் அந்த யானையினிட த்திலேயே இருக்கும். யானையின் வேகம் அளவிடற்கரியது. அதனால் சட் என்று அது இவர்கள் அருகில் வந்துவிடும். யானைக் கூட்டமும் காடுகளில், இயற்கையோடு ஒன்றியிருக்கும். சட் என்று யானை இருப்பதைக் கண்டுபிடிக்க இயலாது. கிளைகள், மரங்களின் அசைவுகள், இலைகளைப் பறிக்கும் சப்தம் இவற்றை வைத்துத்தான் முதலில் யானை இருப்பதைப் பார்க்கிறார்கள்.  தரையைச் சிறிது ஷூவினால் கிளறி, வெளிப்படும் மண் புழுதி எந்தப் பக்கம் பரவுகிறது என்பதை வைத்து, காற்றின் திசையைக் கணித்து, அதற்கு எதிர்ப்புறத்தில்தான் இவர்கள் செல்கிறார்கள். யானையின் கண் பார்வை சுமார். ஆனால் அது மனிதர்களைவிட நான்கு மடங்கு நுகர்வு சக்தி உள்ளது.

யானைக்குத் தினமும் 100 கிலோக்களுக்கு மேல் தீனி தேவை. அதைத் தவிர 40-60 லிட்டர் தண்ணீர். சென்ற வாரத்தில் திருவில்லிபுத்தூர் கோவிலுக்குச் சென்றிருந்தபோது நுழைவாயில் அருகில் யானையைக் கட்டிவைத்திருந்தார்கள். அது ஒன் பாத்ரூம் போக ஆரம்பித்தது. ஏதோ பெரிய குழாயைத் திறந்துவிட்டதுபோல, நின்ற பாடில்லை. 50 லிட்டர் தண்ணீர் குடித்தால் சும்மாவா?

யானைகளின் மஸ்த் எனப்படும் பருவ காலத்தையும், அந்தச் சமயத்தில் அவற்றின் aggressive nature மற்றும் அதன் பேறுகாலம் போன்றவற்றையும் படிக்கப் படிக்க வெகு இண்டெரெஸ்டிங் ஆக இருந்தது. (படம் இணையத்திலிருந்து). யானைக் கொட்டாரத்திலும், இந்த யானை மஸ்த்காலத்தில் இருக்கிறது, அருகில் செல்லவேண்டாம் என்று எழுதிய பலகையைப் பார்த்தேன். (ஆனால் அருகில் யானையைத்தான் காணோம்)









யானையைப் பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போனதே தெரியாது. நானும் நிறைய படங்களை எடுத்தேன்குட்டிகளோடு கூடிய யானையை நான் பார்க்கவில்லை. ஒருவேளை அவை பார்வையாளர்கள் அணுக முடியாத இடத்தில் இருந்திருக்கலாம்.

ஒரே உணவை எவ்வளவுதான் சாப்பிடும் இந்த யானைகள்? போரடித்துவிடாதோ? ஒரு வாழைத்தார் குறைந்தபட்சம் 150 ரூபாய் இருக்கும். எவ்வளவுதான் வாங்கிப்போடுவார்கள்?

லத்திகள் குவிந்திருந்தாலும் அந்த அந்த இடங்கள் சுத்தமாகத்தான் இருந்தன. சில யானைகள் அளவுக்கு மீறி குண்டாக இருந்ததுபோலத் தோன்றியது. பெரிய யானையின் முதுகில் ஏறி சவாரி செய்ய பயமாக இருக்காதோ? கொஞ்சம் அசைந்தாலும் பொத்தென்று விழுந்துவிடுவோம் என்று தோன்றாதோ?



நின்றிருந்த யானையை, மாவுத்தர்கள், ஏதோ சொல்லி, படுக்கச் சொல்கிறார்கள். அந்த யானையும் அதைக் கேட்டுப் படுத்தது. அந்தப் படங்களைத்தான் கீழே பார்க்கிறீர்கள். படுத்த பிறகு அதன் மீதிருந்த தூசி, புழுதியைச் சுத்தம் செய்தனர். பிறகு எழுந்துகொள் என்று சொன்னதும், மெதுவாகக் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் எழுந்தது.



யானையின் கூடவே இருப்பதால் மாவுத்தர்களுக்கு யானையின் mood பற்றித் தெரிந்திருக்கும். அதனால்தான் தைரியமாக அதன் அருகில் இருக்கின்றனர். அவர்களது அன்புடன் கூடிய பராமரிப்பு யானைக்கும் புரிந்திருக்கும் அல்லவா?

உங்களுக்குத் தெரியுமா? யானையின் தும்பிக்கை மிகவும் வலுவானது. ஏதோ ஐந்து ரூபாய் கொடுத்து ஆசீர்வாதம் என்று கோவில் யானையிடம் வாங்கிக்கொள்கிறோம். வழுக்கைத் தலையரிடமோ இல்லை குழந்தைகளிடமோ அது வலுவான ஆசீர்வாதம் வைத்தால் மண்டை பிளந்துவிடும். இது மிகவும் ஆபத்தானது


ஒரு யானைக்கு பைப் வழியாக தண்ணீரை தும்பிக்கையில் மாவுத்தன் பாய்ச்சினார். தும்பிக்கை நிறைந்ததும், அது தன் வாயில் விட்டுத் தண்ணீரைக் குடித்தது. ஐந்து லிட்டருக்கு மேல் தண்ணீரை ஒரு நேரத்தில் யானை தும்பிக்கையில் உறிஞ்சிக் குடிக்குமாம். அந்தக் காணொளிகள்லாம் எடுத்தேன்

பார்க்க பக்கத்துல இருந்து எடுத்த மாதிரிதான் இருக்கிறது. ஆனாலும் நல்ல இடைவெளி உண்டு. அதுவும்தவிர யானையைப் பக்கத்தில் இருக்கும் தூணில் இரும்புச் சங்கிலியால் பிணைத்திருந்தனர். சுத்தம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த யானையின் அருகில்போய், தொட்டுப் பார்த்தேன், படங்கள் எடுத்துக்கொண்டேன்.  (மவனேபடுத்திருக்கும்போது என்னைத் தொட்டுப் பார்க்கிறயே. எழுந்து வந்தால்என்று மனதுக்குள் பேசியிருக்குமோ?). பொதுவாக பாகன்களைத் தவிர, பிறர், தன்னைத் தொடுவதை யானைகள் விரும்புவதில்லை என்று படித்திருக்கிறேன்.

புன்னத்தூர் - யானைக் கொட்டாரம் - காணொளி : 

 

அன்று நிறைய யானைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்துகொண்டிருந்தனர். சுத்தம் செய்வது என்றால், உடலை மாத்திரமல்ல, தந்தம், பாதங்கள் அதைச் சுற்றியுள்ள நகங்கள் போன்ற பகுதி என்று எல்லாவற்றையும்தான். மறுநாள் மாலை நடக்கப்போகும் யானையோட்டத்துக்காக. அதை அடுத்த வாரம் சுருக்கமாகப் பார்க்கலாம்.

= = = = =


44 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்து குழந்தைகள் இருக்கும் வீட்டில், ஒவ்வொரு குழந்தையின் உடல் நலம், உணவை ஏற்கும் தன்மைக்கேற்றபடி தாய் உணவளிப்பதுபோலத்தான் இறைவனும் செய்கிறார். ஆனால் பார்க்கும் நமக்குத்தான் தாய் ஒவ்வொரு குழந்தையிடமும் வித்தியாசமாக நடந்துகொள்வதாகத் தோன்றுகிறது.

      நீக்கு
    2. என்னதான் தன் குழந்தைகளின் உடல் நலத்திற்கேற்ப தாய் உணவளித்து பராமரித்தாலும், ஒரு தாய்க்கு தன் குழந்தைகளிடமிருக்கும் பாசம், அன்பெனப்படுவது ஒரே வகையை சார்ந்ததுதான். அப்படியும் அவரவர் பூர்வஜென்ம வினைகளின்படி அந்த குழந்தைகளின் வாழ்வு சிறப்பதும், சிறப்பில்லாமல் போவதையும் அந்த தாய் உணர்வாள். (ஏனெனில் அவள் இவ்வுலக மாந்தருக்கெல்லாம் ஒரே தாய்.) அப்படி துன்புறும் வேளையில் குழந்தைகளுக்கு அந்த தாயின் அன்பான அடைக்கலம் தேவையாக உள்ளது என்பதையும் அவள் புரிந்து கொள்வாள். அந்த இடத்தில் இறைவனும் ஒரு தாயாகிறான்.
      அவன். தாயுமானவன்
      தந்தையுமானவன்.

      இன்று அன்னையர் தினத்தில் இறைவனை ஒரு அன்பு தாயாக்கி தாங்கள் சொன்ன உவமானத்திற்கு நன்றி.

      நீக்கு
    3. ஒவ்வொரு குழந்தையின் வாழ்வும் ஒவ்வொரு மாதிரி, அவரவர் கர்மவினைக்கேற்றமாதிரி இருக்கும் என்றாலும், நம் குழந்தைகளின் இந்த ஏற்ற இரக்கங்கள் பெற்றோருக்கு வருத்தமளிக்கும். நியாயம் என்று பார்த்தால், எல்லோருக்கும் ஒரே மாதிரி உதவி செய்யணும். தர்மம் என்று பார்த்தால் தாழ்ந்திருப்பவனுக்கு/வளுக்கு அதிக உதவி செய்யணும். மனது எத்தனையோ நினைவுகளைக் கொண்டுவருகிறது, இதை எழுதும் நேரத்தில்

      நீக்கு
    4. /நியாயம் என்று பார்த்தால், எல்லோருக்கும் ஒரே மாதிரி உதவி செய்யணும். தர்மம் என்று பார்த்தால் தாழ்ந்திருப்பவனுக்கு/வளுக்கு அதிக உதவி செய்யணும். மனது எத்தனையோ நினைவுகளைக் கொண்டுவருகிறது, இதை எழுதும் நேரத்தில்./

      உண்மை.. ஆனால், எழுதி (தலையெழுத்து) வைத்து விட்டு நிச்சலனமாக இருப்பவனை துவேஷம் செய்வதாலோ , நிந்தனைகள் செய்வதாலோ என்ன பயன்.?

      "நான் எல்லோரையும் சமமாகத்தான் பாவிக்கிறேன். எனக்கு, சகல சம்பத்துகளும் இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடு கிடையாது. உன்னுள் என்னை வைத்து உபாசித்தால், என்னுள்ளும், நீ இருப்பதை உணரலாம் என்கிறானே...!
      வேறு வழி.? இப்படி நிச்சலனமாக இருப்பவனிடம் சலனத்துடன் நாம் தினமும் செய்யும் யுத்தம் ஜெயிக்குமா? இல்லை தோற்றுத்தான் போகுமா? வேண்டுதல்களின் பலன்கள் என்றுமே தானாகத்தான் (நன்மை, தீமை என்ற உருவங்களுடன்) நடைபெறும் இயல்பை கொண்டவை. அவைகளை என்றுமே மாற்ற இயலாது... அதுபோல் வருத்தமளிக்கும் அனுபவங்களின் வலிகளும் என்றும் நிரந்தரமானவை. நன்றி.

      நீக்கு
    5. நாம் அவனிடம், என் தவறுகளை மன்னித்துவிடு என்று மாத்திரம்தான் வேண்டமுடியும். அதன் மூலம் என் கர்மவினையைக் குறைப்பாய், வரும் சோதனைகளைத் தாங்கும் மனமும் தருவாய் என்றே வேண்டலாம். வேறு என்ன செய்ய?

      நீக்கு
  2. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய யானை கொட்டாரம் பதிவு நன்றாக உள்ளது. யானைகளின் படங்களை பார்த்து ரசித்தேன். யானையை பற்றிய விபரங்களும் படித்து தெரிந்து கொண்டேன்.

    கோவில்களில் நான் எப்போதும் யானையை வணங்கும் போது விநாயகப் பெருமானை வணங்குவது போல் மனத்துள் நினைத்துதான் வணங்குவேன்.அதுவும் அதை ஆமோதிப்பது போல தலையாட்டுவதாக எனக்குத் தோன்றும்.

    யானைகளின் பலம், உணவு பழக்க வழக்கங்கள் அனைத்துமே ஆச்சரியபட வைப்பவைதான். அதன் தும்பிக்கையின் பலமே அதன் மொத்த பலத்தை நிர்ணயித்துக் காட்டும்.

    நீங்கள் சொல்வது போல் அதை எவ்வளவு நேரமானாலும் பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றினாலும், அதன் மிக அருகில் செல்ல ஒரு மரியாதை கலந்த பயம் நம்முள் வந்து விடுவது இயற்கை. காரணம் அதன் பிரமாண்ட உருவம், அதன் பலம், அதைப்பற்றி நாம் அறிந்த தகவல்கள் போன்றவை நம்முள் அதை தோற்றுவித்து விடும். இருப்பினும் எப்படியோ அதன் அருகில் (ஒரளவு தூரத்தில்) நின்று படமெடுத்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    யானையின் லத்திகள் கால்களில் வரும் காலாணிகளுக்கு மிகச் சிறந்த மருந்து. அதன் மீது ஏறி (யானை மீது ஏறத்தான் நமக்கு பயம். :)) ) கால்களை நீண்ட நேரம் வைத்திருந்தால் குணமாகும் என்பார்கள்.

    யானை அசைந்து தின்னும். வீடு அசையாமல் தின்னும். என்ற பழமொழி கூட உண்டே.. அவ்வளவு தீனிகளை அவை சாப்பிடுவதால்தான் அது உரமாக நல்ல பலத்துடன் உள்ளதோ ?

    அந்த காலத்தில் ஒரு மனிதன் நன்றாக சாப்பிட்டால்" யானை மாதிரி சாப்பிடுகிறான்" என்று சொல்வார்கள். ஆனால் அதன் பலம் மனிதனுக்கு வருமா? இப்போது அதிகமாக சாப்பிடுவது என்ற வழக்கே ஒழிந்து விட்டது. (அளவாக சாப்பிட்டால்தான் ஆயுள் என்றபடிக்கு ஏகப்பட்ட நோய்கள் வந்து விட்டன.) .

    நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். யானை நிறையச் சாப்பிடும் எங்கும் நிற்காது நடக்கும். ஆனா மனுசங்க யானை மாதிரிச் சாப்பிட்டுட்டு வெத்தலை பாக்கு போட்டவுடன், தலையணையைப் போட்டு இரண்டு மணி நேரம் படுத்துடுவானே.

      சாப்பிட்ட உடன், பதினைந்து நிமிடங்கள் நடந்தால் ஒரு பிரச்சனையும் வராது (சொல்லுவதைப் போல எளிதானது எதுவுமே இல்லை ஹா ஹா)

      நீக்கு
    3. யானை லத்தி, நம் கால்களுக்கு மட்டுமல்ல, காட்டுக்கே அதுதான் உரம், அதில் ஜீரணமாகாத விதைகள் இருப்பதால் மரங்கள் பெருகவும் அதுதான் காரணம்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்று எ. பி வாசக அன்னையர்கள் அனைவருக்கும், உலகத்தில் இருக்கும் அனைத்து அன்னையர்களுக்கும். அன்பான அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

    அன்னையர்கள் உடனிருந்து அவர்களின் அன்பு சேவைகளுக்கு வழிகாட்டியாக துணையிருக்கும் தந்தையர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னையின் அன்பே அலாதி. அவள் எப்போதுமே குழந்தைக்கு எது நல்லது அவனுக்கு என்ன பண்ணணும் என்றே நினைக்கிறாள். ஒரு தந்தையாக நான் அதைத் தினமும் பார்க்கிறேன். என் அப்பா, இனிப்புகள் வாங்கிவந்தால், அவற்றை ஐந்து பங்காகப் பிரித்து, மூணு பசங்க, தனக்கு, மனைவிக்கு எனக் கொடுப்பார். கூடவே, உன் பங்கை நீ சாப்பிடு, மத்தவங்களுக்குக் கொடுக்காதே என்றும் என் அம்மாவிடம் சொல்லுவார்.

      என் வசம் கிச்சன் வரும்போது, நேரப்படிதான் நான் பண்ணுவேன். இரவு 9 மணிக்கு கிச்சன் லைட்டை அணைத்துவிடுவேன். சாப்பாட்டை நேரத்துக்குத் தயார் செய்து மேசையில் வைத்துவிடுவேன். தாமதமாக வந்தால் கடுப்படிப்பேன். எதுக்கு வம்பு என்று பசங்க ஓரளவு சரியா இருப்பாங்க. இரவு உணவு ஙேண்டாம், பசிக்கலைனு யாரேனும் சொன்னால் அரை மணிக்கு ஒரு தடவை, இப்போ பசிக்குதா என்றெல்லாம் கேட்கமாட்டேன். சரிதான் என்று கிச்சன் வேலையை முடித்துக்கொள்வேன். அடுப்பை அலம்பித் துடைத்துவிட்டால், அதன் பிறகு கிச்சனில் யாரும் நுழைவதை விரும்பமாட்டேன். (மறுநாள் அடுப்பின்மேல் தோசைக்கல் இருந்தால் பிடிக்காது). இது மாதிரி எத்தனையோ. ஆனால் இவை எதையும் திணிக்காமல் பசங்களுக்காக ரொம்ப ஃப்ளெக்சிபிளா மனைவி இருப்பா. அப்புறம் ஏன் கயாவுல, அப்பனுக்கு ஒரு பிண்டம்தான், அம்மாவுக்கு ஒவ்வொரு நிலையையும் விவரித்து பதினாறு பிண்டங்கள் வைக்கச்சொல்ல மாட்டார்கள்?

      நீக்கு
    2. /அப்புறம் ஏன் கயாவுல, அப்பனுக்கு ஒரு பிண்டம்தான், அம்மாவுக்கு ஒவ்வொரு நிலையையும் விவரித்து பதினாறு பிண்டங்கள் வைக்கச்சொல்ல மாட்டார்கள்?/

      தங்கள் கருத்துக்கு நன்றி. ஒவ்வொரு தந்தையும் தம் மக்களை பிறந்ததிலிருந்து தோளிலும், மார்பிலும் சுமந்து, தன்னுயிர் நீங்கும் வரை மனதிலும் சுமப்பவர் என்றாலும், தாய் தன் வயிற்றில் சுமக்கும் அந்த பத்து மாதங்களுக்கு மட்டும் எதை விலையாக கொடுப்பது ?

      இதிலும் தாயின் அன்பை நிலை நிறுத்திய பதிலாக அமைத்து விட்டமைக்கும் தங்களுக்கு நன்றி.

      நீக்கு
    3. என் பசங்க, இயல்பா அவர்களது natural குணங்களோடு இருப்பது தாயிடம் மட்டும்தான். ரெண்டு பேரும் சண்டை போட்டுப்பாங்க... ஆனால் நீரடித்து நீர் விலகாததுபோல உடனே ஒண்ணாயிடுவாங்க. எங்கிட்ட விவாதத்துக்கு வரவே கொஞ்சம் யோசிப்பாங்க. ஹா ஹா

      //வயிற்றில் சுமப்பது// - இதைப்பற்றி எனக்குப் பெரிய அபிப்ராயம் இல்லை (அனுபவம் இல்லையல்லவா?). ஆனால் மனைவி, கடிதங்களில், கஷ்டப்பட்டு குனிந்து உங்களுக்கு பதில் கடிதம் எழுதறேன் என்றெல்லாம் சில பல வரிகளில் அவளின் கஷ்டத்தை உணர்த்தியிருக்காள் (ஆனால் அவையெல்லாம் அப்போது புரிவதில்லை)

      நீக்கு
    4. உண்மை. அனுபவங்களின் சுமை, அது தரும் வேதனைகள் என்றுமே கடினமானது. ஆனால் ஒரு தாயானவள் இதையெல்லாம் பொருட்படுத்தமாட்டாள். பொருட்படுத்தவும் தோன்றாது. அதுதான் தாயின் ஒரு தனிப்பட்ட சிறப்பு. நன்றி.

      நீக்கு
    5. உண்மை கமலா ஹரிஹரன் மேடம். நல்லா எழுதறீங்க.

      நீக்கு
    6. நன்றி சகோதரரே. எல்லாம் உங்களைப் போன்ற நன்கு கற்றவர்களிடமிருந்து, நானும் ஏதோ நாலு வார்த்தைகள் கற்றுக் கொள்ள முயற்சித்ததின் விளைவாக எழுந்த எண்ணங்கள். நன்றி.

      நீக்கு
  4. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. மிகச் சிறப்பான பதிவு.. ஆனக் கொட்டாரத்தில் நடந்த உணர்வு.. நேற்று கூட ஒரு காணொளி கண்டேன் -

    கேரளத்து திருவிழா ஒன்றில் யானைக்கு மதம் பிடித்து கூட்டத்தில் புகுந்து துவம்சம் செய்த்தை..

    அதை முன்னதாக உணர்ந்து கொண்டு அந்த யானைக்கு வேண்டிய தனிமையைக் கொடுக்க இயலாதா என்று தோன்றியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அதிக சப்தம் இருந்தால் தலைவலிப்பது மட்டுமல்ல ப்ரெஷர் எகிறிவிடும், கோபம் வந்துவிடும்.

      யானைகள் மாத்திரம் விதிவிலக்காக இருத்தல் இயலுமா? அதிக சப்தம், கூட்டம், கசகச வென வெயில் இவைகள் இருந்தால், யானைகளையும் கட்டுப்படுத்துவது கடினமல்லவா?

      நீக்கு
    2. சப்தம், கூட்டம் இல்லாமல் திருவிழாவா?..

      பாரிஸ்டர் ரஜனிகாந்த் பாணியில்.. நெவர்!..

      சிவப்பு ரோஜாக்கள் பாணியில் .. நத்திங்!..

      நீக்கு
    3. குருவாயூர் பயணத்தின்போது, திருமூழிக்களத்திற்குச் செல்வதற்காக வேனில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது முஸ்லீம்கள் ஏதோ கொண்டாட்டத்திற்காக யானை ஊர்வலம் நடத்திக்கொண்டிருந்தார்கள். 20 அடி ரோடு. யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக (100 மீட்டர் இடைவெளியில்) நல்ல அலங்காரத்துடன் சென்றுகொண்டிருந்தன. ஆங்காங்கே பஞ்சவாத்தியங்கள் முழங்கிக்கொண்டிருந்தன, வெடிகள் சப்தமும். யானை மிரண்டு ஓடினால் மனித உயிர்கள் பலியாகும் நிலைமை. முடிந்தால் படங்கள் பகிர்கிறேன்.

      நீக்கு
  6. யானை நமது கலாச்சாரத்தின் மங்கல சகுனங்களில் ஒன்று..

    நமது சோழர்கள் யானைகளை தமது படையில் வழி நடத்தினாலும் கோயில்களில் யானைச் சிற்பங்களை அமைப்பதையும் மறந்தார்களில்லை!..

    வேத புராண வரலாற்றிலும் யானையின் இடம் சிறப்பிடமே..

    நூற்றுக்கணக்கான உதாரணங்கள் சொல்லலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானை என்பது நம் மரபில் புனிதமானது. பட்டத்து யானை என்பது உண்டே.

      கோவில்களில் யானை, சிங்கம், யாளி, குதிரை மற்றும் குரங்குச் சிற்பங்கள் இல்லாமல் இருக்காது.

      நீக்கு
  7. அதிக விவரங்களுடன் கருத்து இடுவதில்லை.. என்ற விரதம்!..

    இருந்தாலும்
    நல்ல பதிவுகளைக் கண்ட போதில் உறுதிப்பாடு உடைந்து போகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும்போது, முடியும்போது கருத்திடலாம் துரை செல்வராஜு சார்.. அதிக விவரங்கள் அதிக யோசனைக்கு வழிவகுக்கும்

      நீக்கு
  8. வெள்ளை யானையைக் கனவில் கண்டதில் இருந்து கபில வாஸ்துவின் அரசி மாயாதேவிக்கு மகிழ்ச்சி தனக்கு மகன் பிறந்து விடுவான் என்று!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கபிலவஸ்துவின் இளவரசனாகப் பிறந்த கௌதம புத்தரைப் பெற்றதனால் மாயா/கௌதமிக்குப் பெருமையா? இல்லை அவருடைய மனைவி யசோதரைக்குப் பெருமையா? இல்லை அவரது குழந்தை ராகுலுக்குப் பெருமையா?

      இத்தகைய யுக புருஷர்கள் தனக்குக் குழந்தையாகப் பிறக்கவேண்டும், கணவனாக ஆகவேண்டும் என்று எத்தனை மகளிர் விரும்புவார்கள்?

      நீக்கு
    2. புத்தரால் புத்தருக்கே நிம்மதியில்லை..

      தன்னையே தெய்வமாக்கி விடுவார்கள் என்று எதிர்பார்த்திருக மாட்டார்..

      நீக்கு
    3. இல்லறத்தில் இருந்து துறவறம் சென்றோர் எல்லாருக்கும் இதுவே தான் பிரச்னை!..

      நீக்கு
    4. யார், கடவுள் என்று ஒருவர் இல்லை, ஒவ்வொருவர் உள்ளத்திலும் உறைந்திருக்கிறார், அஹம் ப்ரம்மாஸ்மி என்று சொல்கிறார்களோ உடனே அவர்களையே கடவுளாக்கிவிடும் உலகம் இது.

      நீக்கு
  9. ஆயிரம் யானைகளுடன் மணம் பேச வந்த நாரணன் நம்பி என்று அகமகிழ்ந்த கோதை நாச்சியார்!..

    மனம் மாறி சைவத்திற்கே சென்று விட்டார் என்ற கோப வெறியுடன் திருநாவுக்கரசரை மிதித்து அழிப்பபதற்காக யானையை ஏவிய மகேந்திர பல்லவன்..

    வீர நாராயண ஏரி (வீராணம்) வெட்டுவித்து விட்டு தக்கோலப் போரில் யானை மேல் துஞ்சிய இராஜாதித்ய சோழன்..

    மலைகளை உடைத்து யானைகளால் கட்டி இழுத்து வந்த பொன்னியின் செல்வன்..

    யானைகளைக் கப்பலில் ஏற்றி கடாரத்தை வெற்றி கொண்ட பொன்னியின் செல்வனின் புத்திரன்..

    திருத்தொண்டர் புராணம் இயற்றியதற்காக சேக்கிழாரை யானை மேல் ஏற்றி கௌரவித்த அநபாய சோழன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று பெருமிதப்பட்டாள் அந்த ஆண்டாள்.

      திருநாவுக்கரசரின் வரலாற்றினைப் படித்தவர்கள், 'கடவுள் இருக்கிறானா' என்ற கேள்வியை மறந்தும் கேட்கமாட்டார்கள்.

      சோழ அரசர்களின் வீர வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும். அதிலும் யானைமேல் துஞ்சிய தேவர் (பராந்தகனின் மகன்) இராஜாதித்தனின் வீரம்... ...

      நீக்கு
  10. சமீப காலங்களில்
    யானைகளை சுட்டுக் கொன்று தந்ததங்களைப் பிடுங்கி எடுத்து விற்று ஒருவேளைக் கஞ்சி என்று வயிற்றுப் பாட்டைக் கவனித்துக் கொண்ட வனக் கொள்ளையர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நூற்றாண்டு காலமாக யானைகளைச் சுட்டு தந்தங்களைப் பிடுங்கி எடுப்பது நடந்துகொண்டுவருகிறது. ஒரு வருடத்துக்கு 50-100 என்று இப்போதும் ஆப்பிரிக்காவில் யானைகளைக் கொல்வது நடக்கிறதாம். இவர்களைப் பிடிப்பது மற்றும் தடுப்பது அசாத்தியமாக இருக்கிறதாம். ஒரு ஆப்பிரிக்க நாடு, மிக எரிச்சல் அடைந்து, கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றிய பெரும் தந்தக் குவியலை எரித்துவிட்டது.

      யானைத் தந்தம், காண்டாமிருகக் கொம்பு என்று பலவற்றிர்க்காக விலங்குகளை வேட்டையாடும் விலங்குகளை என்ன சொல்வது?

      நீக்கு
  11. குருவாயூர் யானை கொட்டாரம் பற்றிய தகவல்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  12. யானைகள் எப்போதும் பார்க்க ஆனந்தம் தான். உங்கள் பதிவு வழி பகிர்ந்த படங்களும் காணொளியும் மிகவும் ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட் நாகராஜ். ஹரித்வார் பயணம் நான் இன்னும் நெடியதாக எழுத நினைத்திருக்கிறேன். வருட இறுதியில் வரும். (பத்ரி யாத்திரைத் தொடராக).

      நீக்கு
  13. யானையை பற்றிய விவரங்கள், படங்கள், மற்றும் காணொளி நன்றாக இருக்கிறது.குருவாயூர் யானை கொட்டாரம் பார்க்கும் ஆவலை தூண்டும் பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். கேதம் சம்பந்தமான நிகழ்வுகள் முடிந்துவிட்டதா?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!