செவ்வாய், 2 மே, 2023

பாத்திரம் அறிந்து பிச்சை இடு….. (சிறுகதை) :: சியாமளா வெங்கட்ராமன்


உழவன் எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கு இன்னும் 15 நிமிடங்கள் இருந்தன! 

அப்போது அவசர அவசரமாக ஒரு வயதான தம்பதியர் அந்த கம்பார்ட்மெண்டில் ஏறினார்கள். அவர்கள் பிள்ளை போன்றவர் சாமான்களை ஏற்றிவிட்டு கீழே சென்று ஜன்னல் அருகில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார்

அப்பா இரவு நேரம் ஜாக்கிரதையாக ரெஸ்ட் ரூமுக்கு போங்கள் அம்மாவை கூட்டிக்கொண்டு போங்கள் தனியாக போகாதீர்கள் என்று குழந்தைக்கு சொல்வது போல் கூறினார்

அந்த வயதானவர் நான் என்ன குழந்தையா எனக்கு இப்படி புத்தி சொல்கிறாய் என பொய்க் கோபத்துடன் கூற….

ஆமாம் நீங்கள் என்னதான் உங்கள் சர்வீஸில் அனைத்து குழந்தைகளையும் ஆட்டி படைத்தாலும் இப்போது நீங்கள் குழந்தைதான் என சிரித்துக் கொண்டே மகன் கூற, அவரும் கலகலவென்று சிரித்துக் கொண்டே என்னை எப்படியோ மடக்கி விடுகிறாய் என தன் பிள்ளையின் பேச்சுத் திறமையை கண்டு மகிழ்வுடன் கூறினார்.

ரயில் கிளம்பியதும்  இவர் கையை ஆட்டி விடை கொடுத்தார். அவர் வந்து தன் சீட்டில் உட்கார்ந்து எதிர் சீட்டில் இருந்த வித்யாவையும் அவள் கணவரையும் பார்த்து சினேகமாக சிரித்தார். வித்யாவும் பதிலுக்கு சிரித்தாள். உடனே அந்த பெரியவர் நீங்கள் வித்யா டீச்சர்தானே என்று கேட்க ஆமாம் நீங்கள்?………. என்று கேட்க என்னை தெரியவில்லையா ?நான் தான் P S high school, பிரின்ஸ்பல் நரசிம்மன் என்றார்..

அதைக் கேட்டதும் வித்யா சாரி சார். அடையாளம் தெரியவில்லை மன்னித்துக் கொள்ளுங்கள் உங்களை பார்த்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆயிற்று என்று இழுத்தாள்1

ஆமாம் நான் ரிடையர் ஆகி 25 வருடங்களுக்கு மேல் ஆயிற்று என்று கூறி பழைய பள்ளி வாழ்க்கை பற்றி பேசிக் கொண்டு இருக்கையில்  “ஆமாம் உங்கள் வளர்ப்பு மகன் எப்படி இருக்கிறான் அவனை என் பள்ளியில் சேர்க்க வந்ததால் நமக்குள் நட்பு ஏற்பட்டது இல்லையா? என கேட்டார் அதை அவர் கேட்டதும் வித்யாவின் முகம் மாறியது.1

அதைப் பார்த்த நரசிம்மன் நான் ஏதாவது தவறாக கேட்டு விட்டேனா ?என்றார். இல்லை இல்லை என்று அவசரமாக மறுத்தாள் வித்யா.

அதற்கு வித்யாவின் கணவன் ராமன், *பாத்திரம் அறிந்து  பிச்சையிடு என்பார்கள் அது போல்தான் யாருக்கு உதவ வேண்டும்  என்பதும் என்று பேச ஆரம்பித்தான்.

அந்தப் பையன் படிப்பறிவு இல்லாத குடும்பத்தை சேர்ந்தவன். அப்பா ஒரு கைநாட்டு. அவன் அப்பா அந்தப்  பையனை அழைத்து வந்து, ஆங்கிலப்  பிரிவில் பிள்ளையை சேர்க்க வேண்டும்; அதற்கு டியூஷன் சொல்லித்தரும்படி கேட்க, என் மனைவியும் ஒத்துக் கொண்டாள். என் மனைவியிடம் வரும்போது அந்தப் பையனுக்கு 10 வயது. எங்கள் வீட்டில் அவன் படிக்க வரும் பொழுது என் பிள்ளைகளை பார்த்து அவர்களைப் போல நடந்து கொள்ள ஆரம்பித்தான் என் மனைவியும் என் பிள்ளைகளோடு உட்கார வைத்து அவனுக்கு பாடம் எடுப்பாள் நாளாக நாளாக எங்கள் குடும்பத்தில் ஒருவன் போல் அவன் ஆகிவிட்டான். அவன் எங்கள் குலத்தை சார்ந்தவன் இல்லாவிட்டாலும் எங்கள் பிராமண குல வழக்கங்களை கடைப்பிடிக்க ஆரம்பித்தான். அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினான். எங்களைப் போலவே பூஜை புனஸ்காரங்களை செய்ய பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் எங்கள் வீட்டிலேயே வளர ஆரம்பித்தான். இரவு நேரங்களில் எங்கள் வீட்டிலேயே உட்கார்ந்து படிப்பான் சாப்பிடவும் தூங்கவும் மட்டும்தான் அவன் வீட்டுக்கு செல்வான். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றான். அவன் தன்னையும் என் பிள்ளை படிக்கும் உங்கள் பள்ளியில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டான். அவன்தான் என் மனைவியின் வளர்ப்புப் பிள்ளை ஆயிற்றே! என் மனைவியும் தன் கைக்  காசு போட்டு உங்களிடம் வந்து அவனை உங்கள் பள்ளியில் சேர்க்க அனுமதி பெற்று சேர்த்தாள். சும்மா சொல்ல கூடாது அவனும் நன்றாக படித்தான். பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெற்று கோயம்புத்தூர் இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தான். அங்கும் நல்ல மதிப்பெண் பெற்றான் நல்ல வேலை கிடைத்தது.. நாங்கள் அடிக்கடி யூ எஸ் போக வேண்டியதால் வீடு மாறினோம். ஆனால் அவன் எங்களை வந்து பார்ப்பான். அவனுக்கு திருமணம் ஆயிற்று அப்போது நாங்கள் யூ எஸ் இல் இருந்ததால் திருமணத்திற்கு போகவில்லை. அந்த திருமணம் இருவருக்கும் ஒத்து வராததால் கோர்ட்டு கேஸ் என்று பத்து வருடம் ஓடியது. கடைசியாக இவன் பக்கம் தீர்ப்பாயிற்று. உடனே அவன் பேப்பர் மூலம் மறுமணத்திற்கு விளம்பரம் செய்தான். விவாகரத்தான ஒரு பெண் அதற்கு சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாள். அவர்கள் இவனைப் பற்றி விசாரிக்க இவன் என் மனைவியின் பெயரைச் சொல்லி தன்னைப் பற்றி விசாரிக்கும்படி கூறினான். பெண் வீட்டார் என் மனைவியை பையனைப் பற்றி விசாரித்தார்கள். அவன் தான் என் மனைவியின் வளர்ப்பு மகனாயிற்றே!!!!! இவளும் அவனைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாள். அவர்களும் அதை நம்பி திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்

இதற்கிடையில் முதல் மனைவி மேல் கோர்ட்டுக்கு அப்பீல் செய்ததில் கேஸ் பதிவாயிற்றுஅது தெரிந்தவுடன் அவன் அவசர அவசரமாக பிள்ளையார்பட்டி கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான் திருமணத்தை கோவிலில் பதிவு செய்யாமல் பிரகாரத்தில் அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான். அந்த திருமணத்திற்கும் எங்களால் போக முடியவில்லை ஏனென்றால் நாங்கள் யுஎஸ் இல் இருந்தோம்.. திருமணம் ஆகி ஒரு மாதம் கழித்து இவன் இரண்டாவது மனைவியுடன் கடைத்தெருவுக்கு சென்றான். அப்போது முதல் மனைவி இவருடைய இரண்டாவது மனைவியை தாறுமாறாகப் பேசி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இது போலீஸ் கேஸ் ஆக மாறியது.

இருவரும் இவன்தான் என் கணவன் என்று வாதாட போலீஸ் என்ன செய்வது என்று தெரியவில்லை அப்போது இரண்டாவது மனைவி என் மனைவி வித்யாவிற்கு போன் செய்து நிலைமையைக்  கூறினாள். உடனே என் மனைவி அந்தப் பையனுக்கு ஃபோன் போட்டாள். அவன் அதை எடுக்கவில்லை சரி வீட்டிற்கு போடுவோம் என்று அவன் அப்பாவிற்கு ஃபோன் செய்தால் அவர் போனை கட் பண்ணினார். என் மனைவி, அந்தப் பையன் இரண்டாவது திருமணம் செய்தது தனக்கு தெரியும் என்று போலீஸிடம் கூறினாள்.  ஆனால் அந்தப் பையனின் பெற்றோரும் அவனும் இரண்டாவது மனைவியை அவன்  திருமணம் செய்து கொள்ளவில்லை; அவள் என்னுடைய உறவுக்காரி எங்கள் வீட்டில் தங்கி இருக்கிறாள் என்று வாய் கூசாமல் பொய் சொல்லி விட்டார்கள். அதேபோல் அவர்கள் கேசை முடித்து விட்டார்கள். இரண்டாவது மனைவி அவள் அம்மா வீட்டிற்கு வர நேர்ந்தது. 

இந்தச் சம்பவம் என் மனைவிக்கு பேறிடியாய் வந்தது. அதனால் அவள் மனம் ஒடிந்து படுக்கையில் விழுந்தாள் இரண்டு மாதம் சிகிச்சைக்கு பிறகு தேறினாள். இனி எந்தகாரணம் கொண்டும் அந்தப் பையன் விவகாரத்தில் ஈடுபடக் கூடாது என்று என் குடும்பத்தார் வித்யாவை எச்சரிக்கவும் அதற்குப்  பிறகு அந்தப்  பையனை பற்றி எந்த விவகாரமும் தெரியவில்லை நாங்களும் வெளிநாடு சென்று விட்டோம்

சரி சார் இப்போது சொல்லுங்கள் அந்தப் பையன் எத்தனை பெண்களுக்கு துரோகம் செய்தான்?"  என்று கேட்க,  நரசிம்மன் 3 பெண்களுக்கு உங்கள் மனைவி உட்பட எனக் கூறினார். மேலும் நீங்கள் கூறியது போல் *பாத்திர மறிந்து பிச்சை இட வேண்டும்* என்பது போல் ஒருவர் குணம் தெரிந்து உதவ வேண்டும். உங்கள் மனைவியின்  இரக்க குணத்தை  பயன்படுத்தி உங்கள் மனைவியையும் ஏமாற்றி இரண்டு அபலைப் பெண்கள் வாழ்க்கையையும் ஏமாற்றி ஊரையும் ஏமாற்றி இரண்டு திருமணங்கள் செய்த பெற்றோரையும் நினைக்கும் போது இந்த உலகில் யாரை நம்புவது என்றே தெரியவில்லை என்று நரசிம்மன் வேதனையோடு கூறி முடித்தார்.

= = = = = 

10 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

  பாத்திரம் அறிந்து பிச்சை இடு...... நல்ல கதை.

  பதிலளிநீக்கு
 2. கதைக்கு பொருந்திய தலைப்பு.

  பதிலளிநீக்கு
 3. பாத்திரம் அறிந்து பிச்சையிடு - தலைப்பு பொருந்தவில்லை.

  விவாகரத்து ஆனபின் மேல்முறையீடு உண்டா என்ன? தன்னுடன் வளர்ந்தவன் திருமணத்துக்குப் போகவில்லை, பிறகு அவர்களைச் சந்தித்தார்களா? பின்னணி தெரியாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்பவனுக்கு நல்லவன் என்று பெண் வீட்டாரிடம் சொன்னாள்?

  இருந்தாலும் உலகில் அபூர்வமாக நடக்கும் சம்பவத்தைக் கதையாக்கியது நன்று

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  நோக்க நோக்க
  நொடியில் நோக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவனை
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 6. பாத்திரம் அறிந்து பிச்சையிடு - தலைப்பு பொருந்தவில்லை..

  அன்பின் நெல்லை அவர்களது கருத்து..

  நரசிம்மனின் வேதனை..
  இப்படியும் நடக்கின்றது..

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  இன்றைய கதை நன்றாக உள்ளது. இப்படியெல்லாம் உலகில் நடப்பதுதானே. ..! வளர்த்த கடா மார்பில் பாயும் என்று பழமொழி உண்டு. அதன்படி எத்தனை நல்லெண்ணங்களோடு வளர்ந்தாலும், சமயத்தில் புத்தி மாறுவதைதான் நாம் விதி என்கிறோம். கதையில் வித்யா அவர்கள் ஒரு தாய் பாசத்துடன் இருந்ததினால் அவருக்கு அந்த வளர்ப்பு மகனின் செயல் மிக வருத்தத்தை தரும். புவியில் நடப்பதை நாம் இப்படி கதையாக படிக்கிறோம். இதை எழுதிய கதாசிரியர் திருமதி சியாமளா வெங்கட்ராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. இப்படியும் இருக்கிறார்கள் .

  மூன்று பெண்களின் மனதையும் நோக அடித்திருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!