புதன், 3 மே, 2023

சமீபத்தில் உங்களைக் கலங்க அடித்த சம்பவம் எது?

 

நெல்லைத்தமிழன் :

1.  முதியோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என்று சொல்றாங்களே தவிர, தாங்கள்தாம் அதற்குக் காரணம் என்று நினைத்துப்பார்க்கிறார்களா இந்த முதியோர்? கூட்டுக் குடும்பத்தில், அந்த அந்த ஜெனெரேஷனில் உள்ளவர்கள் பேசிக்கொள்ளும்படியாக அவரவர் வயதுக்கேற்றவர்கள் வீட்டில் நிறைய இருந்தார்கள். மாமனார்/மாமியாரிடம் கழன்றுகொண்டுவிட்டு, இப்போ முதியோர் இல்லம், தனியா இருக்கோம்னு சொல்றதெல்லாம் சரியா?     

# முதியோர் இல்லத்தில் ஒருவர் / ஒரு தம்பதி இருப்பது சில சமயம் இரு தரப்பும் விரும்பி ஏற்றுக் கொண்டதாக இருக்கும்.  மற்றபடி பெரியவர்கள் பிடிவாதம், பிள்ளைகள் உதாசீனம், இப்படியும் இருக்கும்தான். அதை ஒரே வகையாகப் பார்ப்பது சரியாக இருக்காது.  ஒவ்வொன்றும் தனிக் கேஸ். 

2.  அசைவ ஹோட்டல் சைவ ஹோட்டல் இருப்பதுபோல,  மதுவிருந்து உள்ள திருமண மண்டபம், மதுவிருந்துக்கு அனுமதி இல்லாத மண்டபம் என்று வரும் காலத்தில் இருக்குமோ?

# வரும் நாட்களில் மெல்லிசை போல மதுபானமும் திருமணக் கொண்டாட்டத்தின் ஓரங்கமாகி விட வாய்ப்புக்கள் அதிகம்.

நாம் அவுத்துவிட்ட கழுதைகளா பொறுப்பில்லாமல் இருந்தோம், இப்போ பொறுப்பும் கவலைகளும் அழுத்துகின்றன என்பதைத் தவிர, அந்தக்காலம் பொற்காலம், இப்போ அப்படி இல்லை என்று சொல்வதற்கு ஏதேனும் முகாந்திரங்கள் உண்டா?

$ எப்போதுமே எங்கள் காலத்தில்.. என்று ஆரம்பித்து இதெல்லாம் கிடையாது என்று சொல்லப்படுபவை அனைத்துமே இன்று அழுத்தத்துக்கு காரணமாகின்றன.

# மாற்றம் காலத்தின் கட்டாயம். ஆனால், நாம் பொறுப்பின்றி இருந்ததாக நினைவில்லை.  வசதிகள் பெருகி இருக்கின்றன.  சற்று பண விஷயத்தில் அலட்சியம்  (ஊதாரித்தனம்?) வந்திருக்கிறது. மற்றபடி பெரிய  இறங்குமுகம் எதுவும் வரவில்லை.

(நெல்லைத்தமிழன் செவ்வாய் மாலையில் அனுப்பிய கேள்விக்கு அடுத்த வாரம் பதில் சொல்ல முயற்சி செய்கிறோம்) 

கீதா சாம்பசிவம் : 

சமீபத்தில் உங்களைக் கலங்க அடித்த சம்பவம் எது? காரணம் என்ன?

& சென்ற மாத ஆரம்பத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் என் பேரனை அவனுடைய வகுப்புப் பையன் ஒருவன் ஏதோ அற்ப காரணத்துக்காக பிடித்துத் தள்ளியதில், பேரனின் பின் மண்டை ஒரு ஸ்டீல் ராக் மீது இடித்து, காயம் ஏற்பட்டு காயத்திலிருந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்ததாம். பள்ளிக்கூட ஆசிரியைகள் பேரனை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்று, தலைக் காயத்திற்கு தையல் போட்டு, மகன் மற்றும் மருமகளுக்கு தகவல் தந்தார்கள். நான்கைந்து நாட்கள் ஆஸ்பத்திரிக்கு தினமும் சென்று காயத்திற்கு மருந்து போட்டு வந்தார்கள். நல்ல வேளையாக காயம் இரண்டு வாரங்களுக்குள் முற்றிலும் ஆறிவிட்டது. இதுதான் சமீபத்தில் என்னைக் கலங்க அடித்த சம்பவம். 

$ கலங்க வைத்த நிகழ்வு:

சென்ற ஞாயிறு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தோம்.

என் குடும்பத்தினருக்கு நான் படித்த பள்ளிகள், வாழ்ந்த வீடுகள், விளையாடிய தெருக்கள், கோவில் பிரகாரங்கள் எல்லாம் காட்டிக் கொண்டிருந்தபோது,

"இங்கே படி ஏறிப் போகும்போது இரண்டு பக்கமும் யாளிகள் இருக்கும். அவற்றின் வாயில் சற்றே பெரிய கோலி மாதிரி உருளும்" என்று சொல்லிக் கொண்டே இப்போது ஒரு பித்தளைப் பிரபை (arch) இருக்கும் இடத்துக்குப் போனால் ....அந்த யாளிகள் அங்கில்லை.  காணோம் !

கலங்க அடித்த என்கிற பதம் பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான கோடிகள் ஊழலாக சுருட்டப்படுகிறது என்கிற செய்தி மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. 

சின்னக் குழந்தைகளிடம் செல்ஃபோனைக் கொடுப்பதால் வரும் தீமைகளை ஏன் யாரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை?

& ஒருவேளை அதனால் வரும் தீமைகளை விட அப்போதைக்கு வரும் நன்மை (செல்போனை கொடுப்பவர்களுக்கு ) கிடைக்கிறதோ ? குழந்தை அழாமல் இருக்கும், சந்தோஷமாக சிரிக்கும், சரியாக உணவு உண்ணும், முக்கியமாக நம்மைத் தொந்தரவு செய்யாது + + +  (நானும் என் பேரன்கள் சின்னக் குழந்தைகளாக இருந்த சமயத்தில், - நான்கு / ஐந்து வயது அவர்களுக்கு ஆன சமயம், அவர்களுக்கு சாதம் கொடுக்கும்பொழுது செல்போனில் tom & jerry போட்டு காட்டியபடி அவர்களுக்கு சாதம் ஊட்டிவிட்டது உண்டு) 

தாம் செல் போனுக்கு "அடிமை" ஆகி விட்ட பின் அதை  ஒரு சிறந்த பொழுது போக்கு சாதனமாகப் பார்க்கிறார்கள் போலும். 

திருமண பந்தத்தின் உண்மையான/ஆழமான அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பின்னரே இப்போதைய திருமணங்கள் நடைபெறுகின்றனவா?

& சமீபத்தில் திருமணம் செய்துகொண்டவர்கள் / செய்து வைத்தவர்கள்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும். 

உண்மையான அர்த்தம் என்பது திருமணத்தில் மட்டும் இல்லை எல்லாவற்றிலும் "காண்பது அரிது" வகைப் பட்டது. 

இது வரையிலும் நீங்கள் எதிர்கொண்ட கேள்விகளிலேயே பதில் சொல்ல முடியாத கஷ்டமான கேள்வி எது?

& அந்தக் காலத்தில் ஏஞ்சல் கேட்ட உலக நடப்புகள் பற்றிய சில கேள்விகள், இந்தக் காலத்தில் பா வெ மற்றும் நெல்லை கேட்கும் சில கேள்விகள் ஆகியவை எனக்கு பதில்  சொல்ல கஷ்டமாக இருந்தன. ஆனாலும் பதில் சொல்ல முடியாதவை என்று எதுவும் இல்லை. 

சமையல் & சமயம் குறித்த கேள்விகள்.  பதிலில் அதைத் தெளிவு படுத்தி இருப்பேன்.

= = = = = =

KGG பக்கம் :

இரண்டாம் வகுப்பு படித்த சமயம், எனக்கு டைஃபாய்ட் ஜுரம் வந்து, பள்ளிக்கூடத்திற்கு பல நாட்கள் செல்ல இயலவில்லை. என்னுடைய துரதிர்ஷ்டம் அந்த நேரத்தில்தான் பள்ளியில் மனக் கணக்கு, கூட்டல், கழித்தல் போன்ற முக்கியமான கணித பாடங்கள் சொல்லிக் கொடுத்தனர். 

உடல்நிலை சரியானதும் வகுப்புக்குச் செல்ல ஆரம்பித்த எனக்கு கணக்கு வகுப்பு என்றாலே படா பேஜாராக இருந்தது. 

மனக் கணக்கு என்று வகுப்பு ஆசிரியை சொன்னதும், எல்லோரும் சிலேட் பலகையை கீழே வைத்துவிட்டு எழுந்து நிற்கவேண்டும். ஆசிரியை " ஐந்தும் மூன்றும் எத்தனை ? " என்று கேட்டதும் எல்லோரும் முணுமுணுவென்று கை விரல்களைத் தொட்டுத் தொட்டு ஏதோ எண்ணுவார்கள். நான் அவர்கள் எல்லோரும் விரல்களைத் தொட்டுத் தொட்டு என்ன செய்கிறார்கள் என்று ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருப்பேன். 

சிலர், (முக்கியமாக வகுப்புப் பெண்கள்) கணக்கு கேட்டு முடிக்கப்பட்டதும், " ஸ் .. ஸ் .. ஸ் .. ஸ் " என்று வேறு ஒலி எழுப்புவார்கள் ( அந்தக் கணக்கு அவர்களுக்கு அவ்வளவு ஈஸியாம் !! பிசாசுகள்! ) 

ஆசிரியை "சிலேட்டை எடு" என்றதும் எல்லோரும் கீழே உள்ள சிலேட்டை எடுப்பார்கள். 

ஆசிரியை " எழுது" என்று கட்டளை இட்டதும் எல்லோரும் எழுதுவார்கள். 

எனக்கு என்ன எழுதுவது என்று தெரியாது. அதனால் ஆசிரியை சொன்ன இரண்டு எண்களில் ஏதாவது ஒன்றை சிலேட்டில் எழுதுவேன். 

" சிலேட்டை கீழே வை " 

அவ்வளவுதான். சிலேட்டுகள் எல்லாம் படபடவென கீழே கவிழ்த்து வைக்கப்படும். 

ஒவ்வொரு மனக்கணக்கு வகுப்பிலும் எனக்கு பத்து முட்டைகள் கிடைக்கும் " வீட்டுக்குக் கொண்டுபோய் பொரிச்சு சாப்பிடு " என்ற ஆசீர்வாதமும் சேர்ந்து கிடைக்கும். 

இரண்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வில், எனக்கு முன்பு நின்றிருந்த பாலச்சந்திரன் என்ற பையனை (அவனுடைய சிலேட்டை ) பார்த்து காப்பி அடித்து மனக்கணக்கு பரிட்சையில் பாஸ் செய்தேன். 

அப்புறம், இரண்டாம் வகுப்பு முடிந்த விடுமுறை நாட்களில்தான் அண்ணன், அக்கா ஆகியோரிடமிருந்து மனக்கணக்கு விடை காணும் வித்தையை தெரிந்துகொண்டேன். 

= = = = = =

$ பக்கம் : 

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து... என்று .. ஆரம்பித்த உடனேயே, கூட இருப்பவர்களுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நினைவு வந்து சொல்லியோ சொல்லாமலோ நகர்ந்து விடுவார்கள் . இருந்தாலும் ஆரம்பிக்கப் போகிறேன் எழுத.. எது பற்றி ?

பிறந்தது அறந்தாங்கி. தஞ்சையின் தண்ணீரில்லா விளிம்பு.

நடந்தது மதுரை

மூன்று வயதில் குடி பெயர்ந்தது முத்துப்பேட்டைக்கு.

நினைவுகளின் ஆரம்பம் இங்கு தான். வீட்டுக் கூடத்தில் நின்றால் மரங்களின் உச்சி தான் தெரியும் எனக்கு. பின்னே, 2 அடி  உயர  குழந்தைக்கு தெருவெல்லாம் தெரியுமா என்ன ?

ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து ...

பிரித்து என்றால், கிணறு கூட இரண்டு பகுதிக்கும் பாதிப் பாதி . எங்கள் பகுதியில் அப்பாவின் பெரியம்மா, எங்கள் பெற்றோர், 4 குழந்தைகள்.

வீட்டுக்கார அம்மா வீட்டில் இரு பாட்டிகள் (பாட்டி என்பது அந்தக் காலத்தில் கணவனை இழந்தவரைக் குறிக்கும் வழக்குச் சொல்)

ஒரு பாட்டி, பெயர் வேண்டாம் என்று நினைக்கிறேன் கீழே ஒரு பாய் விரித்து எப்போதும் படுத்திருப்பார்கள். மற்றவர் நாள் முழுவதும் எதோ வேலை செய்து கொண்டே இருப்பார்.

இந்த வீட்டில் என் நினைவுகளில் மீதி இருப்பது மிகச் சில காட்சிகளே.

படுத்திருக்கும் பாட்டி "நான் மோசம் போனேன்டி ராஜம்" என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இளைய பாட்டி தினம் பூஜை, நைவேத்தியம் முடிந்தவுடன் "சுப்ரமண்யா வந்து நமஸ்காரம் பண்ணு"  என்றவுடன் அவர்கள் பகுதிக்குப் போய் விழுந்து நமஸ்காரம் செய்தவுடன் கல்கண்டு, திராட்சை, ஒரொரு நாள் பாயாசம் எல்லாம் தருவார்கள்.

காலையில் குடுகுடுப்பைக்காரர் வந்து 'குடு..குடு' சப்தத்துடன் 'நல்ல சேதி வர்குது' என்பார். குரல் மட்டுமே கேட்கும். அவர் நம் வாசல் விட்டு அகன்ற பின் கொஞ்சம் நிம்மதி ஆக இருக்கும். படுத்திருக்கும் பாட்டி கூட கொஞ்ச நேரம் அமைதி ஆகி விடுவாள்.

வீடு மாற்றினோம்.

அங்கும் இரண்டு பகுதி.

நினைவில் இருப்பது கஸ்தூரி, சரோஜா என்று என்னை விட சற்றே பெரிய குழந்தைகளுடன் ஒரு குடும்பம் வீட்டுக்காரர்கள்.

நாங்கள் "சரோஜா குட்டி

கோதுமை ரொட்டி

கொன்டுவாடி குட்டி" என்று கேலி  செய்தது இன்னும் நினைவில்.

வீட்டுக்குள் போக என்னை மாதிரி குட்டிப் பையனுக்கே தலையில் இடிக்குமோ என்ற பயம் வரும்.

மேலே வேய்ந்த கீற்றுக் கூரை.

மழை நாளில் காற்றடிக்கும் போது சற்று ஆகாயம் தெரியும் போது பயம் தலை காட்டும்.

அண்ணா, அக்காக்கள் பள்ளிக்குப் போகும் முன் ஒரு கை நீரெடுத்து சமையலறை சுவற்றில் தெளித்து ஒரு விரலால் தேய்த்து நெற்றியில் சாந்து போல் இட்டுக் கொள்வார்கள்.

= = = = = =

# பக்கம் : 

எல்லாரிடமும் ஒரு கதை - ஒன்று மட்டுமாவது - இருக்கிறது என்பது ஒரு "பொன் மொழி".  வேறு கற்பனைக் கதையாக இல்லாவிட்டாலும்  அவரவர் பழைய நினைவுகளில் ஆங்காங்கே ஒரு பொன்மணி, வைரக்கல் - அட, குறைந்த பட்சம் ஒரு ஐம்பொன் பொம்மை இருந்தே ஆக வேண்டும் என்பதே எதி்பார்ப்பு. 

"இன்றைக்கு நாற்பது வருஷங்களுக்கு முன்பாக " என்று ஆரம்பித்து 1960 களில் சொல்லப் பட்ட வெறும் விலைவாசி விவரம் எங்களை வாய் பிளந்து வியப்பு மேலிட கேட்க வைத்ததுண்டு.  அப்படி நான் கேட்ட, மறக்க இயலாத ஒரு தகவல் இதோ :

(சொல்பவர் கோவை மாவட்டத்துக்காரர்.)

"எங்க ஊர்ல தேங்கா எண்ணெய் டின் ஒண்ணரை ரூபாய்.  பத்து மைல் தொலைவில் பாலக்காட்டுல விலை நாலணா கம்மி.  இதுக்காக அஞ்சாறு பேரா சேர்ந்து மாட்டு வண்டில பாலக்காடு போய் எல்லாருக்குமா சேர்த்து ஏழெட்டு டின் வாங்கிட்டு வருவோம் ". 

இது பேசப்பட்டபோது,  தே எ கிலோ 5 ரூ. என்று நினைவு.  1961. 

இப்போது யாராவது "தே எ கிலோ எட்டு ரூபாய்க்கு வாங்கி இருக்கிறேன் " என்று சொன்னால் வாய் பிளந்து கே..  கேட்பதென்ன மயக்கமே வந்து விடும் இல்லையா ? 

நல்லது.  இதோ சில ஆச்சரியங்கள். 

இரண்டு இட்லி ஒரு வடை, காபி சுமார் 23 பைசா கொடுத்து ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறேன் 1953.

என் அக்கா கல்யாணம் 1951 ல் சுமார் ஆயிரம் ரூபாய் செலவில் நடந்தது. 

1954 ல் பவுன் "சவரன் ஒன்றுக்கு ₹ 78 " என்று போர்டு பார்த்திருக்கிறேன்.

முடி வெட்ட கால் ரூபாய்.  ஷேவிங் இரண்டணா. ரூபாய்க்கு பதினாறு அணா.

இந்த ரசனைக்கு ஒரு எல்லை ஒரு நிபந்தனை  இருக்கிறது. என்ன அது ? படிப்பவர் 1980 க்குப் பின் பிறந்தவராக இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் "ஆமா, அதுக்கென்ன இப்போ " என்று கேட்பார்கள் !

= = = = =

அப்பாதுரை பக்கம் : 

வள்ளல் ஆர்?

இந்த வருட பத்ம விருதுகள் பற்றி சமீப இந்தியப் பயணத்தில் படித்தேன். வாணி ஜெயராம் பெயர் கண்ணில் பட்டதால் படித்தேன், இல்லையெனில் நான் ஏன் படிக்கிறேன்? :-)

விருது பெற்றவர்களில் அனேகர் முகம் விவரம் தெரியாதவர்கள். 

பிரமிக்க வைத்தவர் பாலம் கல்யாணசுந்தரம். திருநெல்வேலி தமிழராம். 

தான் வேலை பார்த்த அத்தனை வருடங்களும் மொத்த சம்பளத்தை மாதம் தவறாமல் எளியவர்களுக்கு (குழந்தைகள் நலன்) தானம்  செய்திருக்கிறார். அதற்காகக் கிடைத்த பரிசுத் தொகையும் (கோடிகள்) தானம் செய்து விட்டார்.

நம்ப முடியவில்லை.  எப்படி சிலருக்கு இது போல் வாழத் தோன்றுகிறது? தானம் செய்துவிட்டு தெருவில் பிச்சை எடுத்து சில நாள் பிழைத்தாராம். இது இயற்கையான நடத்தையா? லூசுத்தனமா? 

எத்தனையோ சம்பாதித்திருக்கிறேன். சம்பாதித்ததில் மாதம் 1% கூட தானத்துக்கென்று ஒதுக்கியதில்லை. இது இயற்கையா? லூசுத்தனமா?

பாலம் ஐயா போல வாழ மிகப் பெரிய மனது வேண்டும் என்பது மட்டும் புரிகிறது. கண்ணதாசன் கர்ணன் பற்றிய பாட்டில் "உள்ளங்கை பார்த்தறியாதவன்" என்பார். பொழுதும் கொடுத்துப் பழகியதால் தன் உள்ளங்கையை கர்ணன் சரியாகப் பார்த்தது கிடையாதாம். 

பாலம் மகானைப் பற்றிப் படித்ததும் இன்னும் இரண்டு முக்கிய கேள்விகள் மனதில் எழுந்தன.

1. எட்டு வயதிலிருந்து கிடைத்ததை முழுதுமாகவோ பாதிக்கு மேலோ தானம் செய்து எண்பது வயதிலும் அப்படி வாழ்வோரை பத்ம விருது முறையாகக் கௌரவிக்க முடியுமா? 

2. பத்ம பூஷன் விருது வைரமுத்துவுக்கு கொடுத்த போது லன்டனிலும் சிகாகோவிலும் கிடா வெட்டி வெடி வைத்துக் கொண்டாடினார்களே? ஏன் பாலம் ஐயாவுக்கு சென்னையில் கூட ஒரு விழா எடுக்கவில்லை? (ஒரு வேளை எடுத்தார்களோ? என்னைக் கூப்பிடவில்லையோ?)

-பத்ம விருதுகள், இந்தியக் குடியரசு தினம் ஜனவரி '23 செய்தி.

வால்:

இந்த வாரம் குளுகுளுனு முதிர்ந்த வாசகருக்கான சமாசாரம் எழுதி வச்சிருந்தேன். ஆனா பாருங்க, வக்கிரம் பத்தி இரண்டு நாளா 'எபி வாட்சப்'புல அப்பிட்டதால 'நல்ல பிள்ளையா' அடுத்த வாரத்துக்கு மாத்திட்டேன். ஒருத்தராவது எதிர்பார்ப்புடன் காத்திருக்க மாட்டாரானுதான் :-)

== = = = =

98 கருத்துகள்:

  1. தானம் செய்வது, பிறருக்குக் கொடுக்கும் மனது, இயற்கையிலேயே அமையவேண்டும் (பிறப்பு குணம்) அல்லது அந்த மாதிரி பெரியவர்கள் இருக்கும் சூழலில் வளர வேண்டும். ஏன், ஒருவருக்கு மனதாற, பேரம் பேசாமல் கொடுப்பதற்கும் ஒரு மனது வேண்டும். இல்லாதவர்கள் கவலையடைய வேண்டாம். இன்னொரு ஜென்மம் உண்டு

    பதிலளிநீக்கு
  2. திருமண பந்தத்தின் ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொண்டபின்பே - இந்தக் கேள்வியை யாரு கேட்டிருக்காங்க? பத்துப் பன்னிரண்டு வயசிலேயே திருமணம் செய்துகொடுத்த காலத்தைச் சேர்ந்தவங்களா? இல்லை, எதிலும் கலந்து ஆலோசிக்கப்படாமல், புதுப் புடவையைக் கட்டு, தாலியை வாங்கிக்கோ, ஆத்துக்கார்ருக்கு நமஸ்காரம் பண்ணு என்று பக்கத்தில் உள்ள வீட்டுப் பெரியவர்கள் சொன்னதை அப்படியே செய்த பொம்மைக் காலத்தைச் சேர்ந்தவங்களா? (இதுக்குத்தான் கல்யாணமே வைபோகமேன்னுல்லாம் நடந்ததை முன்பே பிறருக்குச் சொல்லிடப்படாது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ ! கீ சா மேடம் - தக்க பதில் கொடுக்கவும்!

      நீக்கு
    2. நெல்லை சார். உங்கள் கேள்விக்கு பதில் ஒரு புத்தகமே உண்டு. கீதா கல்யாணமே வைபோகமே என்று கீசாக்கா எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.

      Jayakumar

      நீக்கு
    3. கீதா கல்யாணமே வைபோகமே கிட்டத்தட்ட என்னோட சுயசரிதையில் சில அத்தியாயங்கள். சமீபத்தில் வெளியாகி இருக்கும் "என்ன கல்யாணமடி கல்யாணம்?" மின்னூலில் தான் திருமண பந்தம் பற்றி விரிவாக எழுதி இருக்கேன்.

      நீக்கு
  3. கடலூர் பாடலீஸ்வர்ர் கோவில் சம்பவம் எனக்குமே அதிர்ச்சியாத்தான் இருக்கு. சுருட்டுனாங்களா இல்லை அலட்சியமா எங்கேனும் போட்டுவிட்டார்களா இல்லை பேரீட்சம்பழமா தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிநாட்டுக்கு விற்றிருப்பார்கள் அரசியல்வாதிகள்!

      நீக்கு
    2. பொதுவாக யாளி சிலைகள் தூணில் இருப்பவை. அவற்றைப் பெயர்ப்பது கடினம். ஒரு வேலை சிலைகள் மறைக்கப்பட்டு அறைகளாக்கப் பட்டிருக்கலாம்.

      கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு தடவை ஒரு நண்பனுடன் பாடலீஸ்வரர் கோயிலுக்கு சென்றபோது அவன் ஒரு தூணின் முன்பு நின்றான். "இரு ஒரு அதிசயம் காட்டுகிறேன்" என்றான். தூணில் பாவாடை அணிந்த ஒரு பெண்ணின் சிலை. என்னுடைய ஆள்க்காட்டி விரலைப் பிடித்து பாவாடையின் கீழ் வழியாக நுழைத்தான். ஆச்சர்யம் அங்கெ!!!!!

      நீக்கு
    3. பிரகாரத்தில் செப்புத தகடுகளால் மூடப்பட்ட பாதிரி மரம் தற்போது இருக்கிறதா?

      நீக்கு
    4. அன்பில் செப்பேடுகள் (பொன்னியின் செல்வன் நாவலுக்குக் கிட்டத்தட்ட அதான் அஸ்திவாரம்) இப்போது இருக்கா இல்லையானே தெரியலை! அது பற்றி உங்களில் யாரேனும் அறிவீர்களா?

      நீக்கு
  4. //பொறுப்பின்றி இருந்ததாக நினைவில்லை// டுபாக்கூர் பதில். சின்னப் பசங்களுக்கு என்னையா பொறுப்பு? வீட்டுக் கவலை, பணம் சம்பாதிப்பது, வீட்டு ரிப்பேர், வீடு மாத்தணுமே என்ற கவலை, அம்மாக்கு எந்த டாக்டர்ட காண்பிப்பது? எப்படி சிலேட்டு வாங்கிக் கொடுப்பது? மாசக் கடைசியாச்சேனு ஒரு பொறுப்பும் கிடையாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கெல்லாம் குச்சி தீர்ந்து போச்சே, நாளைக்குப் பாடம் எழுத வேணுமேனு கவலைப்படும் அளவுக்குக் கவலைகள் இருக்கும். :)))))

      நீக்கு
    2. அது மட்டுமா? கணக்குத் தேர்வில் ஆசிரியர் போட்ட மார்க்கை அப்பா/அம்மாவிடம் காண்பித்து கையெழுத்து வாங்கணுமே, அந்தப் பெண்ணிடம் இளித்துக்கொண்டு இருந்ததை ஆசிரியர் பார்த்துவிட்டாரே, அப்பாவிடம் சொல்லிவிடுவாரோ?, வகுப்பில் வம்பு செய்ததனால் பெஞ்சு மீது ஏறி நின்னதைப் பார்த்தவர்கள் வீட்டில் சொல்லிவிடுவார்களோ என்று பெரிய லிஸ்ட் கவலைகள் உண்டே...

      நீக்கு
    3. நான் உயர்நிலைக்கல்வி படிக்கையில் ஜியோமிதிப் பெட்டி இல்லையே, காம்பஸ் யாரானும் கடன் தருவாங்களா? கிராஃப் நோட்டுக்கு என்ன செய்யறதுனு மன உளைச்சலில் இருப்பேன். பக்கத்துப் பெண்ணிடம் கிராஃப் பேப்பர் கடன் வாங்கிக் கொண்டு வரைவதும் உண்டு.

      நீக்கு
    4. கவலைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

      நீக்கு
    5. பள்ளி காலத்தில் எனக்கு ஒத்து வராத பாடம் தமிழ் தான். நிறைய அவமானப் பட்டிருக்கிறேன். 'பன் மொழிப்புலவர் பேரை வச்சுக்கிட்டு இப்படி தாய் மொழி கூட வராத ஆளாயிருக்கியே' என்பார்கள். நானா பேரு வச்சேன்? வேணும்னா ரகுனு சுருக்கமா கூப்பிட்டு போங்க சார் என்பேன். (ஸ்ரீராம்: அன்றைக்கு உதித்த பெயர் ரகு :-)

      நீக்கு
  5. பாலம் கல்யாணசுந்தரம் பற்றி செய்தித்தாள்களில் அடிக்கடி வந்திருக்கிறது.  நம் பாசிட்டிவ் செய்திகளில் கூட ஒரு முறை வெளியிட்டிருந்த நினைவு.

    பதிலளிநீக்கு
  6. பத்தாம் பதினோராம் வகுப்பிலும் கூட கணக்கு எனக்கு பிணக்குதான்!  "உன்னை பாஸ் பண்ண வைக்கக்கூடிய அளவில்தான் தேத்த முடியும்..  பார்க்கிறேன்" என்று நான் டியூஷனுக்கு போன எங்கள் R J Earnest  வெறுத்துச் சொன்னபோது சொன்னபோது மகிழ்ந்து போனேன்..  'அட, நாம பாஸ் பண்ணிடலாம்!'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு எப்போவுமே கணக்கோடு பிணக்குத் தான். நானும் இரண்டாம் வகுப்புப் படிக்கையில் சின்னம்மை போட்டுப் படுத்திருந்ததால் கணக்கோடு உள்ள பிணக்கு அதிகம் ஆகி விட்டது. உயர்நிலைப்பள்ளிப் படிப்பில் கணக்கு ஆசிரியைக்கும் எனக்கும் ஏழாம்பொருத்தம். என்னைக் கண்டாலே அவங்களுக்கு ஆகாது! பல நாட்கள் கணக்குப்பாடம் நடத்துகையில் வகுப்பில் வெளியே போய் நிற்கச் சொல்லிடுவாங்க. மத்தப்பாடமெல்லாம் இவள் படிப்பாளா? எப்படிப் படிப்பாள் என்றும் கேட்பாங்க. மற்ற வகுப்புக்களில் நான் மிகுந்த ஆர்வத்தோடும் சுறுசுறுப்புடனும் கேட்ட கேள்விகளுக்கு முந்திக்கொண்டு பதில் சொல்வேன் என சக மாணவிகள் சொல்லுவதை அவரால் ஏற்க முடியாது. ஒவ்வொரு மாதமும் என்னுடைய ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்துட்டு முதல் 3 இடத்துக்குள் நான் இருப்பதைப் பார்த்து அவருக்கு ஆச்சரியமாக இருக்கும். கணக்குத் தவிர மற்றவற்றில் 80 மதிப்பெண்களுக்கு மேல் இருப்பதையும் அதனால் தான் முதலிடம் தவறுகிறது என்பதையும் புரிந்து கொண்டிருப்பார். எப்படியோ எஸ் எஸ் எல்சியில் 75%த்துக்கு மேல் கணக்கில் மதிப்பெண்கள் கிடைத்தன.

      நீக்கு
    2. ஆச்சரியம்தான். (கணக்கு பரிட்சையில் காப்பி அடித்தீர்களா?)

      நீக்கு
    3. grrrrrrrrrrrrrrrrrr ஒரு பெரிய கூடத்தில் ஒரு வரிசைக்கு நீள வாக்கில் நான்கு மாணவிகளாக நாங்கள் மொத்தம் பனிரண்டு பேரே இருந்தோம். என்னோடது முதல் வரிசையில் கடைசி இருக்கை. எனக்கு முன்னால் பத்தடி தள்ளி ஒரு மாணவி. பின்னார் யாருமே இல்லை. பக்கத்திலும் அதே போல் பத்தடி தள்ளி ஒரு மாணவி.

      நீக்கு
    4. கணக்குப் பிடிக்காது/வராது என்பதால் ஒற்றை எண்ணில் எல்லாம் மதிப்பெண் எடுத்ததில்லை. குறைந்த பட்சமாக நான் வாங்கிய மதிப்பெண் கணக்கில் ஒரு முறை 56.. அப்பா ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டைத் திருப்பி அனுப்பிட்டார் பள்ளிக்குக் கையெழுத்துப் போட மறுத்து விட்டார். ஒரே அமர்க்களம்.

      நீக்கு
    5. ஆ ! 56 மார்க். எங்க ஆரம்பப்பள்ளியில் நான் இரண்டு பரிட்சைகளில் சேர்த்து மொத்தமாக எடுத்த மார்க்!

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

      நீக்கு
  8. ..சம்பாதித்ததில் மாதம் 1% கூட தானத்துக்கென்று ....//

    இப்படித் தோன்றுகிறது:

    தானம் தருவதென்பது (’தருவது’, ‘கொடுப்பது’ என்கிற வார்த்தைகளும் அவ்வளவு சரியில்லைதான் இங்கே) ஒரு அபூர்வ மனநிலை. நிகழவேண்டும் அதுவாக, சிறுவயதின் காதலைப்போல.

    1%, 2% என்று எப்போது ஒரு கணக்கு மனதில் வந்துவிட்டதோ, அப்போது அங்கே தானம் ’ நிகழ’ வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக வேறொன்று நடக்கிறது. அதற்கு charity, philanthropy என வார்த்தை அலங்காரம் செய்து, சொல்லிக்கொண்டு, நம்மைக் குளிர்வித்துக்கொள்கிறோம். அப்படியே கொஞ்சம் வரிவிலக்கும் இதன்மூலம் கிடைத்துவிட்டால்.. என்று மனம் வேறொரு பாதையில் அழைத்துச்செல்லும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி சொல்ல முடியாது.  எங்கள் உறவுகளில் ஒரு தம்பதி..  இருவருக்கும் ஓய்வூதியம் வருகிறது.  அவர்களின் தேவைக்கும் மீறி அது இருப்பதனால் அவர்கள் அவ்வப்போது கோவில்களுக்கும் வேறு சில நல்ல விஷயங்களுக்கும் பணம் தருகிறார்கள்.  ஒரு இடைவெளியில் கையிருப்பில் அளவை கவனிக்கும்போது எவ்வளவு செய்திருக்கிறோம் என்கிற குத்து மதிப்பான அளவு மனதில் தெரிகிறது.  அதைக் கூட ஓர் சதவிகிதம், இரண்டு சதவிகிதம் என்று குறிப்பிடலாம்.

      நீக்கு
    2. சனாதன தர்மத்தைப் பொறுத்தவரையில் பிராமணர்கள் சொத்து வைத்திருக்கக்கூடாது. இஸ்லாமியர்கள் ரமலான் மாத்த்தில் தங்கள் சொத்தில் பத்து சதம் தானம் செய்யணும். அரபு தேசத்தில் பலர் செய்கிறார்கள். இந்திய முஸ்லீம்களிலும் சிலர் செய்கிறார்கள். என் பாஸ் இம்தியாஸ் சொல்லுவார், அவர் அப்பா எல்லாவற்றையும் கணக்கிட்டு, ஒவ்வொருவரும் இவ்வளவு தானம் செய்யவேண்டும் என்று சொல்லி பணத்தை அனுப்பச் சொல்லுவாராம். அது முஸ்லீம் அனாதை சாரிட்டிக்கு அனுப்பிவிடுவாராம் அப்பா. தானம் என்பதை கடமையாக ஓரளவுக்கு செய்பவர்கள் இஸ்லாமியர்கள்தாம் எனச் சொல்ல முடியும்.

      நீக்கு
    3. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பது கணக்கு பார்ப்பது தானே?
      எனினும், நீங்கள் சொல்வது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. கணக்கு பார்த்தால் தானம் ஆகாதா?

      நீக்கு
    4. ஒரு புறம் இருப்பதையெல்லாம் கொடுக்கும் மனம், இன்னொரு புறம் இருப்பதில் எதையும் கொடுக்கும் எண்ணம் கூடத் தோன்றாத மனம்.. இந்த விசித்திர முரண் பற்றிச் சொல்ல வந்தேன்.

      நீக்கு
    5. எங்களால் முடிந்த அளவுக்கு தானங்கள் செய்கிறோம். என் கணவரின் ஊரான பரவாக்கரையில் மாரியம்மன் கோயில் பூசாரியின் குழந்தைகளுக்கான படிப்புச் செலவு, மற்றும் பெருமாள் கோயில் பட்டாசாரியாருக்கு மாதா மாதம் சம்பளம் ஆகியவை கொடுத்து வருகிறோம். முடியாதவங்க கேட்டால் கொடுப்பது வழக்கம் தான்.

      நீக்கு
    6. //தானம் என்பதை கடமையாக ஓரளவுக்கு செய்பவர்கள் இஸ்லாமியர்கள்தாம் எனச் சொல்ல முடியும்.// நெல்லை உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம் நாட்டில் அதிகம் சாரிடிகளுக்கு வழங்குகிறவர்கள் பார்சிகள்தான். அவரிகளின் மத நம்பிக்கையின்படி சம்பாத்தியத்தில் ஐந்தில் ஒரு பங்கை கண்டிப்பாக தர்மம் செய்ய வேண்டும்.

      நீக்கு
  9. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. பாலம் கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி நானும் ஒரு பதிவு வைத்திருந்தேன்.. அது போயிற்று..

    கிடைப்பது எல்லாவற்றையும் இந்த சமுதாயத்துக்கே கொடுத்து விடுவது அவருடைய சுதர்மம்...

    மஹாபாரதத்தின் பாதிப் பொன் உடலுடன் கீரி ஒன்று ஓடி வந்து தானம் கொடுத்த் இடத்தில் உருண்டு புரண்டு பார்த்து விட்டு கதை ஒன்றைச் சொல்லும்..

    அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவியரசர் சொல்லியிருப்பார் சுதர்மம் பற்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு உறவினருக்கு அனுப்பவதற்காக இரண்டு நாட்கள் முன் அமேஸானிலிருந்து வரவழைத்தேன் அ இ ம-வை. கொஞ்சம் புரட்டிக்கொண்டிருக்கிறேன்..

      நீக்கு
    2. அர்த்தமுள்ள இந்து மதம்!..

      நீக்கு
    3. அடடா, எழுதுங்க சார். சுவாரசியம் சேருங்க.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்விகளும், அதற்கேற்ற பதில்களும் அருமை. அவரவர் பக்கங்களும் நகைச்சுவையோடு நன்றாக உள்ளன. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. தானம் செய்ய என்ன மனநிலை வேண்டும்? நடப்பது எதுவும் நம் கையில் இல்லை, எல்லாம் அவன் செயல் என திட நம்பிக்கையும், நம்மிடம் இருப்பதை இல்லாதவருக்கும் கொடுக்கணும் என்ற நற்குணமும்தான். நாளைக்கு என்ன பண்ணுவோம், இப்படியாச்சுனா பணம் வேண்டாமா? உடம்பு சரியில்லைனா என்ன பண்ணறது என நம்மைப் பற்றியே யோசித்தால், பாசிடிவ் செய்திகளைப் பார்த்து மகிழ்ந்து பாராட்டு தெரிவிக்கலாம், சிறு அளவில் தர்மம் பண்ணலாம். அவ்ளோதான். பாலம் ஐயா மனநிலை மிக ஆச்சர்யப்படத் தக்கது

    பதிலளிநீக்கு
  13. புதன் கேள்வி - பாட்டு எழுதறவன், நடிப்பவன் பாடறவனுக்கெல்லாம் பத்மவிபூஷன் கொடுப்பதைவிட சமூகச் சிந்தனையாளர்களுக்கு மட்டுமே பத்ம விருதுகள் கொடுக்கணும்னு நினைக்கிறேன். உங்க அபிப்ராயம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ப பாட்டு எழுதுறவன் நடிப்பவன் பாடுறவன் எல்லாம் சமூக சிந்தனையாளன்னு சொல்லிக்குவான். பாட்டு எழுதுறவன் சமூக சிந்தனையாளன் தானே?
      ஆமா.. இப்படியெல்லாம் நினைச்சா கமல்ஹாசனுக்கு யாரு அவார்டு கொடுக்குறது? ( கொடுத்தாச்சா?)

      நீக்கு
    2. முன் காலத்தில் பத்மஸ்ரீ கொடுத்தார்கள்.

      நீக்கு

  14. ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கும் நெறி

    வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
    குறிஎதிர்ப்பை நீரது உடைத்து

    பதிலளிநீக்கு
  15. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
    தானம்செய் வாரின் தலை

    பதிலளிநீக்கு
  16. முதியோர் இல்லம் பற்றிய கருத்துக்கள் சரியான புரிதலில் உருவாகவில்லையோ ? முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டால் பாசம் இல்லை நன்றி இல்லை என்றாகி விடுமா?

    பதிலளிநீக்கு
  17. திருமண பந்தத்தின் உண்மையான அர்த்தம் தெரிந்து அந்தக் காலத்திலேயே திருமணம் நடந்ததா என்று நினைத்ததுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னர் வந்த காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும் திருமணபந்தத்தின் அர்த்தம் தெரிந்தே திருமணம் நடந்திருக்கிறது.

      நீக்கு
    2. மத்யமரில் பிரபலமான ஒரு முதியவர், நம் பக்கமும் அவ்வப்பொழுது எட்டிப் பார்ப்பார். அவருடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 21 வயது வித்தியாஸமாம். சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று திருமணம் செய்து வைத்தார்களாம். திருமணத்தின் பொழுது அவர் அம்மாவுக்கு 11 வயதாம், அப்பாவுக்கு 32 வயதாம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கம்பாடபிலிடி சுத்தமாக கிடையாது(ஆனால் 10 குழந்தைகள் பிறந்து விட்டன) அப்பாவின் மரணதிற்கு பிறகுதான் அம்மா சந்தோஷமாக இருந்தாள் என்றார். இதை திருமணத்தின் அர்த்தத்தை ஆழ்மாக புரிந்து கொண்ட திருமணம் என்ரு இதை கூற முடியுமா? அந்தக் காலத்தில் பெரும்பான்மையான திருமணங்கள் இப்படிதான். 52 வயதுகாரனுக்கு 16 வயது பெண்களை திருமணம் செய்து வைத்தார்களே..? அதில் என்ன உண்மையான அர்த்தத்தை கண்டு விட்டார்கள்?

      நீக்கு
    3. :(( அந்தக் காலத்தின் கோலங்கள். நல்ல வேளை - இப்போ இவைகள் மிக மிக குறைவு. அல்லது 0 .

      நீக்கு
  18. அன்பின் நெல்லை அவர்களுக்கு..

    நீங்கள் வெளிப்படையாகச் சொன்னதனால் நானும் சொல்கின்றேன்..
    இஸ்லாமியர்களுக்கு அது சட்டம்.. பொருள் இருப்பவர்களுக்குத் தான் அது..

    சனாதனத்தவருக்கு தர்மம்.. தர்மம் தான் வழி..

    சட்டம் வேறு.. தர்மம் வேறு..

    அறம் செய விரும்பு என்று ஔவையார் சொன்னது தர்மம்.. எலும்பைப் பிறருக்குத் தருவதைப் பற்றி திருக்குறள் பேசுகின்றது..

    இருந்தும் கொடுக்க மறுப்பவர்களுக்கு கடு நரகங்கள் காத்திருக்கின்றன என்றவர் அப்பர் ஸ்வாமிகள்..

    அரபு நாட்டில் கண் தானம் கேள்விப்பட்டதுண்டா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜு சார். தர்மம் என்ற பெயரில் எல்லாவற்றையும் ஒவ்வொருத்தனோட discretion ல் விடுகிறது சநாதனம். 7 வயசாகி ஐந்து வேளை தொழுகைக்கு வரலைனா கால்லயே அடிச்சு வெளுக்கணும்கறாங்க. ஞாயிறு சர்ச் ப்ரேயருக்கு எல்லாரும் ஒழுங்கா போறாங்க.‌Discretion நல்லதா கட்டளை நல்லதா?

      நீக்கு
    2. ...ஞாயிறு சர்ச் ப்ரேயருக்கு எல்லாரும் ஒழுங்கா போறாங்க..//

      எங்கே? ஓ.. ஒங்க நாட்டு நடப்ப சொல்றீங்களா....

      நீக்கு
  19. கேள்விகளுக்கான பதில்கள் எல்லாமே நன்றாக இருந்தன. அதோடு மூன்று ஆசிரியர்களின் நினைவலைகளும். எனக்கெல்லாம் இரண்டு வயதெல்லாம் நினைவில் இல்லை. நினைவுகள் ஆரம்பிப்பது தம்பி பிறந்ததில் இருந்து. அப்போ நான்கு வயது நடப்பு. அதுக்கப்புறமாப் பள்ளியில் சேர்ந்தது எல்லாமும் நன்றாக நினைவில் இருக்கின்றன. முந்தாநாள் என்ன சமையல் என்பதும் நாளை செய்ய வேண்டிய முக்கியமான வேலையும் தான் மறந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    பள்ளியில் நடந்த கலங்க அடித்த சம்பவம் என் மனதையும் கலஙக வைத்தது. அப்போது எங்கள் பெரிய மகன் பள்ளி முடிந்து திரும்பும் போது (மாடியில் அவன் வகுப்பு ஆதலால்) மாடியிலிருந்து படிகளில் உருண்டு விழுந்து தெற்றியில் ஒரு பெரிய பந்து அளவுக்கு காயத்தோடு திரும்பியது நினைவுக்கு வருகிறது. கருரத்தம் கட்டிக் கொண்டு அவன் வலியுடன் வந்ததை கண்டு துடித்துப் போய் விட்டேன். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைத்து விட்டு தினமும் இந்த மாதிரி தவிக்கும் நிலை ஏன் ஏற்படுகிறது என சிந்திக்கிறேன். தங்கள் பேரன் முற்றிலும் நலமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. யாளிகளைக் காணோம் என்றதும் என் நினைவில் வந்தது மதுரையில் மேலமாசி வீதி/தெற்கு மாசி வீதி சந்திப்பில் இருக்கும் மதனகோபால சுவாமி கோயிலின் பதினாறு கால் மண்டபத்தைப் பெயர்த்தெடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பியதைப் பற்றிப் படித்த நினைவு வருகிறது. இதைப் பற்றி விரிவாக முன்னால் (பதினைந்து வருஷங்கள் முன்னார்)இருந்த டெஸ்ட் டாப்பில் எழுதி வைச்சிருந்தேன். இப்போது பென் ட்ரைவில் இருக்கும் அதைத் தேடணும். :(

    பதிலளிநீக்கு
  22. நான் கல்யாணம் ஆகி வந்தப்போக் கடலை எண்ணெய் கிலோ 3 ரூபாயும் நல்லெண்ணெய் கிலோ ஐந்து ரூபாயும் தேங்காய் எண்ணெய் கிலோ 7 ரூபாயிலிருந்து பத்து ரூபாய்க்குள்ளும் விற்றது. கடலை எண்ணெய் விலை கம்மினு நம்ம ரங்க்ஸ் அதான் வாங்குவார். கறி வதக்க, தோசை வார்க்க, பொரிக்க எனப் பயன்படுத்துவேன். ஆனாலும் பல வருஷங்களுக்கு எனக்கு அந்த வாசனையே பிடிக்காமல் இருந்தது. விலைக்கு வாங்கினாலும் பிறந்த வீட்டில் தே.எண்ணெயும், நல்லெண்ணெயும் மட்டுமே. பஜ்ஜி பொரிக்க, வடை தட்ட அம்மா நல்லெண்ணெயே பயன்படுத்துவார். மற்றதெல்லாம் தே. எண்ணெய். பின்னர் பழகி விட்டது. ஆனால் ரீஃபைன்ட் எண்ணெய் மட்டும் வாங்கவே மாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணெய் அப்படி விலை குறைவாக இருந்த காலங்களில் கூட அதை வாங்க எங்கள் வீட்டில் காசு இல்லாத நிலை இருந்தது.

      நீக்கு
    2. உண்மை தான்... அப்படியும் இருந்தது அப்போது!..

      நீக்கு
    3. கேஜிஜி சார்...அப்போ யாரிடம் காசு இருந்தது? எல்லாருமே, சிக்கனமாகத்தான் இருந்தார்கள். எங்க வீட்ல (பெரியப்பா வீட்ல) வடி எண்ணெய் எனப்படும் எண்ணெய்தான் வாங்கப்படும்

      நீக்கு
    4. கடந்த கால காயங்கள், ஏக்கங்கள்.

      நீக்கு
  23. எங்க பையர் 2 அல்லது 3 ஆம் வகுப்புப் படிக்கையில் பள்ளியில் வகுப்பறையைச் சுத்தம் செய்யும் நாள் வந்திருக்கிறது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது அவருக்குச் சொல்ல மறந்து விட்டது. மத்தியானம் சாப்பாடு நேரத்தில் அக்காவிடம் சொல்லிக்கலாம்னு இருந்திருக்கார். அக்காவைப் பார்க்கமுடியலை. மாலை மூன்றே முக்காலுக்கு பட்டாபிராம் சைடிங்கிலிருந்து கிளம்பும் வண்டியில் இருவரும் அம்பத்தூர் வருவாங்க. அப்புறமா வீட்டுக்குக் கிட்டக்கப் பட்ரவாக்கம் ரயில் நிலையமும் வந்தாச்சு. அன்னிக்குப் பெண் மட்டும் வந்தாள். நான் பால் வாங்கக் கிளம்பிட்டிருந்தேன். உள்ளே நுழையும்போதே, தம்பி வந்துட்டானா எனக் கேட்க நான் இல்லையே, பின்னால் வரான் போலிருக்குனு சொல்ல, அவள் ஓவென்று கத்திக் கொண்டு அவன் தூங்கிப் போயிட்டான் போல. ரயிலிலே போயிட்டிருக்கான்னு சொல்ல எனக்கு ஒரே பதட்டம். கையிலிருந்த பால் தூக்கை அங்கேயே போட்டுட்டுச் செருப்புக் கூடப் போடாமல் பட்ரவாக்கம் ரயில் நிலையத்துக்கு ஓடினேன்.

    தொடரும்.

    பதிலளிநீக்கு
  24. //https://sivamgss.blogspot.com/2023/05/blog-post.html// (நெல்லைத்தமிழன் செவ்வாய் மாலையில் அனுப்பிய கேள்விக்கு அடுத்த வாரம் பதில் சொல்ல முயற்சி செய்கிறோம்)

    பதிலளிநீக்கு
  25. சுவாரஸ்யமான கேள்வி பதில்கள் இரசித்தேன்

    பதிலளிநீக்கு
  26. //திருமண பந்தத்தின் உண்மையான/ஆழமான அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பின்னரே இப்போதைய திருமணங்கள் நடைபெறுகின்றனவா?// அந்தக் காலத்தில் மட்டும் திருமணத்தின் உண்மையான,ஆழமான அர்த்தத்தை புரிந்து கொண்டா திருமணங்கள் நடந்தன? திருமணம் செய்து கொண்டு,தங்கள் தியாகத்தினால் (பெரும்பாலும்) பெண்கள் அதை அர்த்தமுள்ளதாக்கினார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒன்றும் சொல்லமாட்டேன்பா!!

      நீக்கு
    2. அர்த்தமுள்ள பந்தமாக்கியவர்களில் நிறைய பெண்கள், சில ஆண்களும்.

      திருமண பந்தம் உண்மை ஆழம் அர்த்தம் எல்லாமே புருடாவோ?

      நீக்கு
  27. புதன் கேள்விகள், பதில்கள் எல்லாம் அருமை.
    ஆசிரியர்களின் நினைவுகள் அருமை.
    கெளதமன் சார், அப்பாதுரை சார் பக்கம் நன்றாக இருந்தது.
    அன்பர்களின் பின்னூட்ட கலந்துரையாடலும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!