ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 17 : நெல்லைத்தமிழன்

 

அஹமதாபாத்திலிருந்து முந்தின இரவு 10 ½ மணிக்குப் புறப்பட்ட நாங்கள், காலை 6 மணி வாக்கில் நாத்துவாரகாவை அடைந்தோம். நேரே சுவாமி நாராயணர் கோவில் வளாகத்தை அடைந்தோம். இங்கு அறை வசதிகளும், குளிப்பதற்கு பொது இடங்களும் இருக்கின்றன. 10 ரூபாய் கொடுத்தால் ஒரு பக்கெட் வெந்நீரும் கொடுக்கிறார்கள். அறை தேவைப்பட்டவர்களுக்கு அறைகளை ஒதுக்கிய பிறகு, உடனே குளித்துவிட்டு காபிக்கு வந்துவிடும்படியும், பிறகு கோவிலுக்குச் செல்லவேண்டும் என்றும் சொன்னார்கள். குளித்துத் தயாரான பிறகு, எல்லோரையும் ஷேர் ஆட்டோவில், நாத் துவாரகா கோவிலுக்குச் செல்லும்படியும், தரிசனம் முடிந்த பிறகு 10 ½ மணிக்கு உணவுக்கு வந்துவிடும்படியும் சொன்னார்கள். அங்கிருந்து ஐந்து நிமிட தூரம் கூட இல்லை கோவில் அமைந்திருந்த பகுதி

இறங்கி கடைவீதி வழியாக நடந்து கோவில் நுழைவாயிலை அடைந்தோம். கோவில் திறக்க சிறிது நேரம் எடுத்த தால் (இது ஒரு தடவை. இன்னொரு தடவை நாங்கள் 9 மணிக்கு நாத் துவாரகா கோவிலை அடைந்தபோது நேராகவே தரிசனத்திற்குச் சென்றுவிட்டோம்).

நாத் துவாரகையை அடைவதற்கு முன்பு நான் பார்த்த பெரிய சிவன் சிலை. ஊரை அடைந்ததும் கண்ட அழகிய நுழைவாயில்.

நாங்கள் தங்கியிருந்த ஸ்வாமி நாராயணர் கோவிலில் இருந்த சன்னிதி.

பஞ்ச துவாரகையில் நாத் துவாரகாவும் மிகவும் முக்கியமானது.

இந்தக் கோவிலின் மூலவர், விருந்தாவனத்தில் இருந்தவராம். சுயம்புவாகத் தோன்றியவர். இந்துக் கோவில்களை அழிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்த ஔரங்கசீப்பிடமிருந்து ஸ்ரீநாத்ஜி விக்ரஹத்தைக் காப்பாற்ற, 1670களில் ராணா ராஜ் சிங், இந்த விக்ரஹத்தை விருந்தாவனத்திலிருந்து, வண்டியில் ஏற்றிக் கொண்டுவந்தபோது, இந்த இடத்தில் சகதியில் வண்டியின் சக்கரங்கள் அழுந்தி நகரவில்லையாம். இதனால், இறைவனே இங்கு இருக்க விருப்பப்படுகிறார் என்று புரிந்துகொண்டு, இந்தக் கோவிலை எழுப்பி, ஸ்ரீநாத்ஜியை பிரதிஷ்டை செய்தாராம்இதுவே ஸ்ரீநாத் த்வாரகா கோவில் வந்த விதம்.

ஸ்ரீநாத் துவாரகா கோவில் இருக்கும் கடைவீதி ஜேஜே என்று காலையில் இருந்தது. இருபக்கமும் வெவ்வேறு வகையான கடைகள் இருந்தாலும் (துணி, பைகள், வளையல், படங்கள் என்று), நிறைய அருமையான தேநீர் கடைகளும், உணவுக் கடைகளும் (டோக்ளா, அவல் உப்புமா, சமோசா என்று வித விதமாக) நிறைந்திருந்தன.

காலையில் புத்தம் புதிய அவல் உப்புமா, டோக்ளா, விதவித இனிப்புகள்.. கடைகளில்சாப்பிட ஆசைஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் உணவு வேளை வந்துவிடுமேஅப்போது சாப்பிடாவிட்டால், குழுத் தலைவர் கோபமாகப் பார்ப்பார். என்ன செய்யஎல்லாமே ஓரளவு சுத்தமாகவே இருந்தன.

அதிகாலையில் அடைக்கப்பட்டிருக்கும் நுழைவாயில் (இரும்புக் கிராதிகள் கொண்ட நுழைவாயில்)

இந்தக் கோவிலின் மூல கோபுரத்தின் மேலே 7 கொடிகள் சுதர்சன சக்கரத்தின் மீது பறக்கின்றன. மூலவர் தரிசனம் முடிந்த பிறகு, மாடிக்குச் செல்லும் வழிபோன்ற அமைப்பில் ஏறி இதனைக் காணமுடியும். அந்தப் பகுதியில் நமக்கு சிறிய நறுமணம் தொட்ட பஞ்சை பிரசாதமாகத் தருகிறார்கள்.

இந்தக் கோவிலின் மூலவர், பிருந்தாவனத்தில் தானாகத் தோன்றிய சிற்பம் என்கிறார்கள். இங்கு ஸ்ரீகிருஷ்ணர், சிறு வயது பாலகனாக வழிபடப்படுகிறார். இதனைக் கோவில் என்பதைவிட, ஸ்ரீகிருஷ்ணனது இல்லமாகத்தான் கருதி வழிபாடு செய்யப்படுகிறது. அதாவது ஒரு இல்லத்தில் என்ன என்ன இருக்குமோ அவையெல்லாம் இங்கு இருக்கின்றன. ஸ்ரீகிருஷ்ணர் ஊர்வலம் வர ஒரு வண்டி (அவருடைய உருவத்தைக் கொண்டுவந்த அதே வண்டி என்கிறார்கள்), பாலுக்காக ஒரு அறை, வெற்றிலை போன்றவற்றிர்க்காக ஒரு அறை, இனிப்புகள் வைத்திருக்கும் அறை, பூக்களுக்கான அறை, தினமும் பிரசாதங்கள் சமைக்கப்படும் சமையலறை, நகைக்கான அறை, தங்கம் மற்றும் வெள்ளியிலான அரவை இயந்திரம் (உரல், திருகை) போன்றவை இங்கு இருக்கின்றன. ஸ்ரீகிருஷ்ண தரிசனத்திற்குப் பிறகு இவற்றையெல்லாம் நாங்கள் பார்த்தோம். பிறகு சமையலறை பக்கம் சென்றபோது அங்கு எங்களுக்கு அப்போது கண்டருளப்பட்ட பிரசாதம் கொடுத்தார்கள். மனதிற்கு மிகுந்த நிறைவைத் தந்தது அதுஅரவை இயந்திரங்களை, பக்த மீரா உபயோகித்தவை என்கிறார்கள்.

இரும்பு முற்கள் உடைய மிகப் பெரிய கதவு. இதைத் தாண்டித்தான் கோவிலைச் சென்றடைய முடியும்பழங்காலத்தில் கோவில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருக்கிறது இந்த நுழைவாயில்.

கோவிலின் நுழைவுப் பகுதி. கூட்டத்தைப் பொறுத்து, நிறைய தடுப்புகளும் கியூ வரிசைகளும் இருக்கும். ஒரு தடவை, நாங்கள் திருப்பதி போல, பல வரிசைகளுடன் கூடிய பக்கத்து இடத்திலிருந்து நகர்ந்து இந்த நுழைவாயிலுக்கு வருவதற்கே ஒரு மணி நேரமானது.


கோவிலிலிருந்து பிரசாதம் வருகிறது (இரண்டு கைகளினால் வாங்கவேண்டிய பெரிய லட்டு)

கோவில் வெளிப்புற நுழைவாயில் பார்ப்பதற்கு நவீன கட்டிடம் போன்று இருந்தாலும் உள்ளே பழமை நன்கு தெரியும்.

மூலவர் ஸ்ரீநாத்ஜியின் தோற்றம்

மூலவர் இருக்கும் கர்பக்ரஹத்தின் முன்பு பெரிய மண்டபம் இருக்கிறது. வரிசையான தடுப்புகளோடு கூடிய மண்டபம். ஒவ்வொரு வரிசையிலும் 50 பேர்கள் (அதாவது அந்த இட த்தில் நெருக்கமாக) நின்றுகொண்டு தரிசனம் செய்யலாம். ஒவ்வொரு வரிசையும்  அதற்குப் பின் வரிசையைவிட தாழ்ந்த இடத்தில் இருப்பதால், முழு மண்டபத்தில் இருப்பவர்களும் மூலவரை தரிசனம் செய்ய இயலும்மூன்றாம் பாலினத்தவர்கள் நிறையபேர் தரிசனத்திற்கு வண்ண வண்ணப் பொடிகளோடு வந்து ஆடுகிறார்கள். எல்லோரின் பக்தி வியக்கவைக்கிறது. (எனக்குத்தான், அந்த வண்ணப் பொடிகள் பட்டு உடை பாழாகிவிடப் போகிறதே என்ற கவலை)

மூலவர் ஸ்ரீநாத்ஜி

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வரையப்பட்ட ஓவியம். நாத்வாரா ஸ்ரீ கிருஷ்ணன், அன்னகூட உற்சவத்தின்போது.

பெரிய அளவிலான பிரசாதங்கள். இவை கோவிலில் கண்டருளப்பட்டவையா இல்லை வெளியிலே தயாரிக்கப்பட்டு விற்கப்படுபவையா என்ற சந்தேகம் எனக்கு வந்தது

எல்லாமே சீர் பட்சணங்களைப் போல பெரிய அளவு. செங்கல்லா இல்லை மைசூர்பாக்கா, பம்பிளிமாஸா இல்லை லட்டுவா என்று சந்தேகப்படும்படியான அளவு. பார்த்தாலே வயிறு நிறைந்துவிடுகிறது அல்லவா?

கோவிலை விட்டு வெளியில் வந்தால் கோவில் மடப்பள்ளியில் செய்யப்பட்ட பிரசாதங்களை, பண்டா என்று அழைக்கப்படும் கோவிலைச் சேர்ந்த பூசாரி குடும்பங்கள் வெளியே விற்கின்றனர். அதாவது அவ்வப்போது பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு இவர்களால் வெளியே கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பூசாரிகளுக்கு இதன் மூலமாகத்தான் வருமானமாம். பிரசாதங்களும் குறைந்த விலையில், 10 ரூ, 20 ரூ என்று விற்கப்படுகின்றன. பலவிதமான பிரசாதங்கள். அவைகளை நீங்களே பாருங்களேன்.

வாங்கிக் கொள்ளுங்கள் ருசியுங்கள் என்று நம்மை அழைக்கும் பிரசாதங்கள்


இந்தப் பிரசாத வகைகள் ஸ்ரீநாத் துவாரகையின் சிறப்பு என்று நினைக்கிறேன். இப்படி வித வித பிரசாதங்களை, மற்ற துவாரகைகளில் நான் பார்க்கவில்லை.
(அதாவது பக்தர்களுக்குக் கிடைத்துப் பார்க்கவில்லை. கோமத் துவாரகாவில், இறைவன் முன்பு ஏகப்பட்ட இனிப்பு வகைகளைப் பரப்பி வைத்திருந்தார்கள். ஒருவேளை அங்கிருந்த பிரசாத  இட த்திற்குச் சென்றிருந்தால் கிடைத்திருக்கலாம். இறைவனுக்கு இப்படி வித விதமாகப் படைக்கப்படுவதை ராஜ் bபோக் என்கிறார்கள். அவர் சக்ரவர்த்தி அல்லவா?)

கடைவீதியில் கைவினைப் பொருட்கள், இரும்பினாலான பொருட்கள் எனப் பலவகைகளும் விற்பனையில் இருந்தன.

வளையல், விலைகுறைந்த வண்ணக் கற்கள் எனப் பலவித விற்பனைகள்

தரிசனம் முடிந்ததும், மீண்டும் ஷேர் ஆட்டோவில் ஏறி, தங்கியிருந்த இடத்திற்குச் சென்றோம். கோஸ் கறி, அவரைக்காய் கூட்டு, மிளகு குழம்பு, போண்டா, ஜவ்வரிசி பாயசம் என்று மதிய உணவு (அதாவது 10 ½ க்கு). பிறகு எல்லோரும் மதியத்துக்கு மேல்தான் கிளம்பப்போவதால்  மீண்டும் தரிசனம் செய்யச் சென்றுவரலாம் என்று சொன்னார்கள். கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்து பிரசாதம்லாம் சாப்பிட்டு, கடைவீதிகளில் பர்ச்சேஸ் செய்து என்று நேரம் கடத்தினோம்.

பிறகு திரும்பவும் தங்குமிடத்திற்கு வந்து (நாத் துவாரகா, சுவாமி நாராயணன் கோவில்) எங்கள் பைகளை எடுத்துக்கொண்டோம். மதியம் 3 மணிக்கு காபியும் போர்ன்விட்ட கேக், காராசேவு கொடுத்தார்கள்.  3 ½ க்கு எங்கள் லக்கேஜ்களை பேருந்தில் வைத்தோம்

ஸ்ரீநாத் துவாரகையில் நெடுஞ்சாலையில் பார்த்த தனித்துவமான நுழைவாயில்.

4 மணிக்கு நாத் துவாரகையை விட்டு கங்க்ரோலி துவாரகையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். அங்கு என்ன என்ன பார்த்தோம் என்பதை அடுத்த வாரம் காணலாம்.

(தொடரும்) 

33 கருத்துகள்:

  1. செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லருள் புரிவாராகுக. இதை எழுதும்போது தஞ்சை பெரியகோவிலைத் தாண்டி பெங்களூர் நோக்கிப் பயணிக்கிறோம்

      நீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..

    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. கண்ணுறு நலங்களுக்
    குரியவா போற்றி..
    காணும் காட்சிக்
    கரியவா போற்றி..

    பதிலளிநீக்கு
  5. துபாயிலும் ஸ்ரீநாத் ஜி திருக்கோயில் அமைந்துள்ளது..

    பதிலளிநீக்கு
  6. நான் ஒருமுறை சென்றிருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  7. இனிப்பு வகைகள்..

    பார்த்தாலே பசி தீரும் என்ற அளவுக்கு ஆகி விட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று ஒப்பிலியப்பன் மற்றும் வடுவூர் தரிசனம் மற்றும் பிரசாதம்.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீநாத் த்வாரகா கோவில் வந்த விவரம் அருமை.
    படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
    பிரசாதங்கள் எல்லாம் வாங்கி இறைவனுக்கு படைக்க வாங்கி போவார்களா பக்தர்கள்.
    மதியம் உணவு விவரம் அருமை.
    கடைவீதியில் கைவினைப் பொருட்கள் படங்கள் நன்றாக இருக்கிறது.

    மூலவர் ஸ்ரீநாத்ஜியை தரிசனம் செய்து கொண்டேன்.
    கிருஷ்ணஜெயந்திக்கு நேரலை ஒலி பரப்பில் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன், அபிஷேகம், அலங்காரம் காட்டுவார்கள்.
    உங்கள் பகிர்வு மூலம் நேரில் பார்த்த உணர்வை பெற்றேன், நன்றி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரசாதம் கோவில் மடப்பள்ளிலேர்ந்து வெளியில் வரும் அந்தப் பிரசாதம் பக்தர்கள் சாப்பிடுவதற்காக

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ போங்க கமலா ஹரிஹரன் மேடம். இன்னறைய வெயில் போல இதற்கு முன் மூன்று தடவைகள்தாம் சென்ற தொண்ணூறு ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறது

      நீக்கு
    2. உண்மைதான் சகோதரரே. வெயில் கொடுமை தாங்க இயலவில்லை. அதை விட மழை சிறிதேனும் இல்லாத வெயில் கொடுமை பயங்கரமாக உள்ளது. நல்ல மழைகள் வந்து வீடுகளுக்கு முன்னர் போல முறைப்படி தண்ணீர் வசதிகள் வந்து.. எப்போதோ என ஏங்க வைக்கிறது. எல்லாம் இறைவனின் சித்தந்தான் நடக்க, நடக்க நாராயணன் செயல்.

      நீக்கு
    3. வெயில் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது கமலா ஹரிஹரன் மேடம். நான் பெரும்பாலும் ஏசி உபயோகிக்கிறேன். வெளியில் நடக்கச் செல்வதும் அதிகாலையில்தான். வெயில் வந்துவிட்டால் கஷ்டம்தான். இன்னும் மூன்று வாரங்கள்தாம். பிறகு மழை வந்துவிடும்.

      நீக்கு
  11. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய ஞாயிறு கோவில் தரிசன பதிவும், அழகான படங்களுடனும், அருமையான விவரிப்புடனும் நன்றாக உள்ளது. மூலவர் ஸ்ரீ நாத் கிருஷ்ணரை தரிசித்துக் கொண்டேன்.

    ஸ்ரீ நாத் கோவில் உருவான வரலாற்றை தெரிந்து கொண்டேன். எல்லாமே "அவன்" நடத்தும் லீலைகள்தானே.! நுழைவு வாயிலுடன் கோவிலின் படங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. இங்கெல்லாம் நேரில் சென்று தரிசிக்க இயலுமோ என்னவோ தெரியாது. ஆனால், உங்கள் பதிவு வாயிலாக படித்து, இக்கோவில்களின் அமைப்பு, இறைவனை பற்றிய விபரங்கள் என அத்தனையையும் காணும் வாய்ப்பு வந்தமைக்கு உங்களுக்கு பல நன்றிகளை கூறிக் கொள்கிறேன்.

    பிரசாதங்கள், அங்கு விற்பனை செய்யும் உணவு வகைகள், மற்றும் அலங்கார கைவினைப் பொருட்கள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன்.

    நுழைவு வாயில் பார்க்கவே வித்தியாசமாக நன்றாக உள்ளது.
    கோவிலில் இரும்பு முற்கள் பதித்த கதவும் ஒரு வித்தியாசமாக இருக்கிறது. அன்னிய படையெடுப்பை சமாளிக்க அப்போதே உருவானவையா?

    தங்கள் குழுவின் மதிய சாப்பாட்டின் அட்டவணையும் பிரமாதம். ஒரு விதத்தில் அது முற்பகலிலேயே முடிந்து விடுவதால், அங்கிருந்து வேறு இடத்திற்கு கிளம்பும் முன்னர் மீண்டும் இறைவனை தரிசிக்க ஒரு வாய்ப்பு உங்கள் அனைவருக்கும் வந்ததும் மகிழ்ச்சி.

    படங்களும், பதிவும் கண்களுக்கும், மனதிற்கும் நிறைவாக உள்ளன. அடுத்து தாங்கள் சென்ற இடங்களுக்கும் தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுமையான நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.

      நுழைவாயில் அந்நியப் படையெடுப்புக்கு மாத்திரமில்லை, உள்ளூர் ஹிந்து மன்னர்கள் படையெடுப்பைத் தடுக்கவும்தான்.

      ஞாயிறு படங்கள் உலாவாக இருந்ததை, யாத்திரையில் எடுத்த படங்களின் உலா என மாற்றியது மனதிற்கு நிறைவு தருகிறது.

      நீக்கு
  12. // நறுமணம் தொட்ட பஞ்சைப் பிரசாதமாகத் தருகிறார்கள். //

    பிரசாதம்?.. இதற்கு ஏதாவது விசேஷ காரணம் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். நறுமணமுள்ள பூவிற்குப் பதிலாக இருக்குமோ?

      நீக்கு
  13. கோயில் என்றாலே இறைவன் வாழும் இல்லம் என்று தம்ழில் பொருள். அதை நிதர்சனமாய் காட்சிப் படுத்திய ஸ்ரீநாத் துவாரகா கோயில் ஆயிரத்தில் ஒரு இந்துக் கோயிலாக மனத்தில் பதிந்தது.

    பதிலளிநீக்கு
  14. ஒரு சிறு விஷதத்தைக் கூட விட்டு விடாமல் படங்களில் காட்சிப் படுத்தியமைக்கு நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தவரை விளக்கமாக எழுத முயல்கிறேன் ஜீவி சார்

      நீக்கு
  15. விவரணங்கள் சொல்லிய விதம் அருமை.

    பிரசாதம் படங்கள் ஆசையை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!